அருள்மிகு காசி விசாலாட்சி அம்மன் உடனுறை காசி விசுவநாத சுவாமி திருக்கோயில்.
தாத்தையங்கார்பேட்டை, முசிறி வட்டம், திருச்சி மாவட்டம்.
திருச்சியிலிருந்து சுமார் 57 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத வகையில் சிம்ம வாகனத்தில் சம்ஹார மூர்த்தியாக பஞ்சமுக பைரவர் எழுந்தருளியிருப்பது போன்ற பல்வேறு சிறப்புகளைக் கொண்டு, எதிரிகளின் தொல்லை நீக்கும் பரிகாரத் தலமாகத் திகழ்கிறது திருச்சி மாவட்டம், தாத்தையங்கார்பேட்டையிலுள்ள அருள்மிகு காசி விசாலாட்சி அம்மன் உடனுறை காசி விசுவநாதர் திருக்கோயில்.
🛕கோயில் அமைப்பு
இக்கோயிலில் ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம் கிழக்குப் பகுதியின் உள் நுழைவு வாயிலாகவும் உள்ளது.
முன்மண்டபத்தில் சூரியன், சந்திரன் மேற்கு நோக்கியுள்ளார்கள். விநாயகர், கொடிமரம் பலிபீடம் அடுத்து நந்தி.
நந்தியெம்பெருமானின் சிறப்பு: இத்திருக்கோயிலில் கொடிமரத்துக்கு அருகில் அமைந்துள்ள நந்தியெம்பெருமான், சற்று வித்தியாசமான கோணத்தில் எழுந்தருளியுள்ளார்; அதாவது இறைவன் காசி விசுவநாதரையும், பஞ்சமுக பைரவரையும் ஒரே நேரத்தில் பார்த்தவாறு, திரும்பிய கோணத்தில் நந்தியெம்பெருமான் காட்சித் தருகிறார். இந்த நந்தியெம்பெருமானுக்கு பிரதோஷ காலத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. இவர் நன்மைகளைத் தரும் நந்தியெம்பெருமானாக பக்தர்களால் போற்றப்படுகிறார்.
அடுத்துள்ள உள்மன்டபத்திலிருந்து, கிழக்கு நோக்கிய இறைவர் சன்னதியும், தெற்கு நோக்கிய இறைவி சன்னதியும் ஒருங்கே தரிசிக்கலாம்.
இறைவன் காசி விசுவநாத சுவாமி: இத்திருக்கோயில் இறைவன் காசி விசுவநாத சுவாமி என்றழைக்கப்படுகிறார். மற்ற கோயில்களில் இல்லாத வகையில், இங்குள்ள இறைவன் கருவறை சன்னதி சற்று வித்தியாசமான முறையில் காணப்படுகிறது. இந்த சன்னதியைச் சுற்றி மூன்று புறங்களிலும் திறந்த நிலையைக் கொண்டு (ஜன்னல் போன்றது) காணப்படுகிறது.
குழந்தை வரம் வேண்டிய தம்பதியர், காசியிலிருந்து லிங்கத்தைக் கொண்டு வந்து இங்கு பிரதிஷ்டை செய்ததாக செவிவழிச் செய்திகள் கூறப்படுகின்றன. இதனாலேயே இத்திருக்கோயில் இறைவனுக்கு காசி விசுவநாதர் என்று
பெயர் வந்ததாகக் கூறுவர்.
கிழக்கு நோக்கிய திசையில் சன்னதியைக் கொண்டுள்ள இறைவன், பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றித் தரும் நாயகராகத் திகழ்கிறார்.
இறைவி காசி விசாலாட்சி: தெற்குத் திசை நோக்கிய நிலையில் காசி விசாலாட்சி அம்மன் சன்னதி அமைந்துள்ளது. நின்ற கோலத்தில் சாந்த சொரூபியாகக் காட்சியளிக்கும் காசி விசாலாட்சி அம்மன், தன்னை நாடி வரும் பக்தர்களின் குறைகளைத் தீர்த்து வருபவராகத் திகழ்கிறார்.
ஆறடி உயரத்தில் அனைத்துவித அம்சங்களையும் கொண்டு, பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி அருளுகிறார் காசி விசாலாட்சி அம்மன்.
கோஷ்ட்டத்தில், விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்னு, பிரும்மா, துர்க்கை, மற்றும் சண்டிகேஸ்வரர் தனி சன்னதிகளும் உள்ளன.
பிரகாரம்
தென்புற பிரகாரத்தில் 63 நாயன்மார்களும் உள்ளனர். காசிவிஸ்வநாதர், விசாலாட்சி சன்னதிகளும், உள்ளன.
ராஜ விநாயகர்:
இக்கோயிலில் ராஜ விநாயகர் என்ற பெயரில் சிறப்பு வாய்ந்தவராக எழுந்தருளியுள்ளார். இந்த விநாயகர் சிற்பத்தில் அவரது கை, கால்கள் நுணுக்கமாக தெரியும் வகையில் அமைந்துள்ளது. தன்னை நாடி வரும் பக்தர்களின் வினைகளைத் தீர்த்து வைக்கும் வல்வவராக இத்திருக்கோயில் ராஜ விநாயகர் திகழ்கிறார்.
வள்ளி-தெய்வசேனா சமேத . முருகப்பெருமான்: இக்கோயில் தனி சன்னதி கொண்டு வள்ளி-தெய்வசேனா சமேதராய் அருள்மிகு முருகப்பெருமான் காட்சியளிக்கிறார். இங்கு அமைந்துள்ள முருகப்பெருமான் தனது நெஞ்சில் திரிசூலம் ஏந்தியவாறு, மயில் வாகனத்தில் காட்சியளிப்பதும் மற்ற கோயில்களில் இல்லாத வகையில் அமைந்துள்ள தனிச் சிறப்புக்குரியதாகும்.
கல்யாண சுப்பிரமணியர் தனி சன்னதியில் உள்ளார். மேலும், ஐய்யப்பன் சன்னதி, சுவாமி சன்னதி, கஜலட்சுமி அம்மன் தனி சன்னதி, அருள்மிகு சரசுவதி அம்மன் வீணை ஏந்திய கோலத்திலும், காட்சியளிக்கின்றனர். நடராஜர் சன்னதியில் ஓவியமாக உள்ளார்.
பஞ்சமுக பைரவர்:
பொதுவாக சிவன் கோயில்களின் காவலராகக் கருதப்படுவர் பைரவர். ஒவ்வொரு கோயிலும் பைரவர் சன்னதி தனிச் சிறப்பைக் கொண்டிருக்கும். கால பைரவர், சொர்ண ஆகர்ஷண பைரவர், ஞான பைரவர் போன்ற பெயர்களைக் கொண்டிருப்பார்.
ஆனால், பஞ்சமுகங்களைக் கொண்டு சம்ஹார மூர்த்தியாக சிம்ம வாகனத்தில் பைரவர் காட்சியளிப்பது இந்தியாவிலேயே தமிழகத்தின் திருச்சி மாவட்டம், தாத்தையங்கார்பேட்டையில் அமைந்துள்ள காசி விசுவநாதசுவாமி திருக்கோயிலில்தான். இவரே எதிரிகளின் தொல்லை நீக்கும் மற்றும் திருமணத் தடை நீக்கும் பரிகார அதிபதியாகவும் திகழ்கிறார்.
பைரவரின் வாகனம் நாயாகும். ஆனால், இக்கோயில் தனிச் சிறப்புடன் சிம்ம வாகனத்தில் பஞ்சமுக பைரவர் காட்சியளிக்கிறார்.
பூசை/ பரிகாரங்கள்
வளர்பிறை, தேய்பிறை அஷ்டமி நாள்களில் பூசணிக்காய், தேங்காய், மிளகுத் தீபமேற்றி, பக்தர்கள் வழிபட்டு தங்களது பரிகாரப் பிரார்த்தனைகளை மேற்கொள்கின்றனர். தங்களது பிரார்த்தனைகள் நிறைவேறிய பின்னர், பைரவருக்கு சிறப்பு வழிபாடுகளையும் அவர்கள் மேற்கொள்கின்றனர்.
திருமணத் தடை நீக்குதல், தொழிலில் ஏற்படும் கண் திருஷ்டிகளைக் களைதல், ராகு திசை பாதிப்பிலிருந்து நீங்குதல், எதிரிகளின் தொல்லை நீங்குதல் போன்றவற்றின் பரிகார அதிபதியாக இத்திருக்கோயில் பஞ்சமுக பைரவர் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
தல விருட்சம்: இக்கோயிலின் தல விருட்சமாக வில்வமரம் அமைந்துள்ளது.
மேலும், வடகிழக்கு மூலைப் பகுதியில்,
நவக்கிரக நாயகர்களின் தனி சன்னதியும் உள்ளன.
பூசைகள் / திருவிழாக்கள்
இக்கோயிலில் காரணாகம முறைப்படி நான்கு காலப் பூசைகள் நடக்கின்றன. ஆடி மாதம் ஆடி கிருத்திகை, சங்கடஹரசதுர்த்தி, தைத் திருநாள் போன்றவை நடைபெறுகின்றன. பங்குனி மாதம் பங்குனி உத்திரம் திருவிழாவாக நடைபெறுகிறது.
மாதத்தில் வளர்பிறை, தேய்பிறை அஷ்டமி தினங்களில் பஞ்சமுக பைரவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் இக்கோயிலில் பள்ளியறை பூஜையும் தனி விசேஷமானது.
குடமுழுக்கு: 1994, ஜனவரி 26 ஆம் தேதி இக்கோயிலில் குடமுழுக்கு நடத்தப்பட்ட நிலையில், சுமார் 28 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.
இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது..
கோயில் நடைதிறப்பு: தாத்தையங்கார்பேட்டை அருள்மிகு காசி விசுவநாத சுவாமி திருக்கோயில் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரையிலும், மாலை 4.45 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
எப்படிச் செல்வது?
திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 57 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம், நெ.1.டோல்கேட், மண்ணச்சநல்லூர், துறையூர் வழியாக இக்கோயிலுக்கு வரலாம்.
பெரம்பலூர், துறையூர் வழியாகவும்,
தாத்தையங்கார்பேட்டைக்கு வந்து கோயிலை அடையலாம்.
குன்னம் வழியாக பெரம்பலூர், துறையூர் வழியாகவும்,
குளித்தலை, முசிறி வழியாகவும்,
வந்து, அங்கிருந்து தாத்தையங்கார் பேட்டைக்கு வந்து சேரலாம்.
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
ஆலயம் மிகவும் பழமையானது. சமீபத்திய கும்பாபிஷேகத்திற்குப் பிறகு பொலிவாக உள்ளது. நகரில் உள்ளதால், வழிபாடுகள் சிறப்பாக உள்ளது. ஆலயம் தெற்குப்பக்கமும் ஒரு வழி உள்ளது. கிழக்குப்புறம் வாகனங்கள் நிறுத்தலாம்.
பக்தர்கள் சபை உள்ளது. வழிபாடுகள் பூசைகள் நடைபெற்று வருகின்றன.
அமைதியும், ஆன்மீக உணர்வும் தரும் புராதான ஆலயம்.
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
வலைதள தகவல்களுடன் 💻📡📚
#Subbramசுப்ராம்🔱🇮🇳
நன்றி🙏 22.02.2026
#சுப்ரம்அருணசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று🛕🛐
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்🇮🇳🔱 22.02.2026
#கொல்லிமலை
No comments:
Post a Comment