Showing posts with label மடக்கணி. Show all posts
Showing posts with label மடக்கணி. Show all posts

Sunday, June 13, 2021

மடக்கணி சம்பந்தர் அமுதம் - பதிவு - 6 பாடல்: 12

#திருமுறைகளில்_தமிழமுதம்
#சம்பந்தர்அமுதம்
#மடக்கணி
பதிவு : ஆறு. (பாடல் 12.)
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇🙏🏻
💠நம் பக்தி இலக்கியத்தில்
ஒப்பற்ற நம் தமிழ் மொழியின்
அற்புத யாப்பமைந்த சிறப்பான ஒரு பதிகப் பாடல் அமைப்புக் குறித்து 
ஒரு துளியேனும் நாம் சிந்திக்க முயலலாமே என்ற வகையில் பதிவிடப்படுகிறது.
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇🛐
❇️சீர்காழிப்பதியில் அவதரித்து, இறைவரால் அமுது ஊட்டப்பெற்ற 
   தமிழ் ஞானசம்பந்தர் தமிழுக்கு அணி     
   செய்தவர்.  
செந்தமிழினால் இறைவனை
   எண்ணித் துதி செய்தவர். பக்தி இசைப்     
    பாடல்கள் அருளிச் செய்தவர். 

✳️தமிழ் ஞானி திருஞானசம்பந்தர் என்னும் இந்த ஞான பிள்ளையாரின் பாடல்களில் 
நமக்கு தற்போதுவரை கிடைத்துள்ளவை;
226 தலங்களைப் பற்றிய, 386 பதிகங்களில் உள்ள 4146 பாடல்கள் மட்டுமே.
இவர் பாடல்களை முதல் மூன்றுத் திருமுறைகளாகத் தொகுத்துள்ளார்கள்.

🌟தமிழுக்கு புதிய புதிய யாப்பு வகைகளை இவரே முதன் முதலாகக் கையாண்டார் என்பது மிகச் சிறப்பு.
#சம்பந்தர்தூது  
#ஏகபாதம் 
என்ற தலைப்பின் கீழ் தூது பாடல்களும் ஏகபாதம் என்ற யாப்பு வகைப் பாடல்களை ப்பற்றி ஏற்கனவே சிந்தித்து வந்தோம்.
☀️தற்போது #மடக்கணி யாப்பு பற்றிய பதிவு.

 🙇🏻‍♀️மடக்கணி பாடல்கள்:

மடக்கு' என்பது வந்த சொல்லோ, சொற்றோடரோ மீண்டும் வந்து பொருள் வேறுபட்டு நிற்பதாகும்.
⚜️ யமகம் என்றாலும் மடக்கு என்றாலும் ஒரு பொருளையே குறிக்கும். 
யமகம் என்பது வடசொல் இதை இயமகம் என்பர்.

🎆தமிழ் ஞானசம்பந்தர் அருளிச் செய்த இந்த வகைப் பாடல்களைப் பற்றி தொடர்ந்து சிந்திப்போம்.

🏔️இந்த வகை யாப்பு அமைந்த பதிகங்கள்
தேவாரம் - மூன்றாம் திருமுறைகளில்
பதிகம் - 371 - திருக்கழுமலம்  
பதிகம் - 372 - திருக்கச்சியேகம்பம்
பதிகம் - 373 - திரு ஆலவாய்
பதிகம் - 374 - திருவீழிமிழலை
முதலிய பதிகங்களில் காணக் கிடைக்கிறது.
இதில் நாம் பதிகம் 371 - திருக்கழுமலம் தலத்தில் அருளிய 12 பாடல்களைப் பற்றி சிந்தித்து வருகிறோம்.

🔷இந்த பதிகத்தில் சீர்காழியின் 12 பெயர்களைப் பாடல்களில் குறிப்பிட்டு போற்றியுள்ளமை கருதத்தக்கது.

🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇🙏🏻

தேவாரம். - மூன்றாம் திருமுறை 
பாடல் 1223
பதிகம். 371 தலம் - திருக்கழுமலம்
பாடல் - 12
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇

பருமதில் மதுரைமன் னைவை எதிரே
      பதிகமது எழுதிலை அவைஎதிரே

வருநதி யிடை மிசை வருகரனே
      வசையொடும் அவர் கெட வருகரனே

கருதலில் இசைமுரல்தரும் அருளே
      கழுமலம் அமர்இறை தரும் அருளே

மருவிய தமிழ்விர கனமொழியே
      வல்லவர் தம்மிடர் திடமொழியே
      
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
பாடல் பொருள் விளக்கம்:
1. பெரிய மதில்களையுடைய மதுரை நகரின்கண் அரசனது அவைமுன்னர்த், திருப்பதிகத்தை ஓலையில் எழுதி
🔰
பருமதில் மதுரை மன் அவை எதிரே - பருத்த மதில்களை உடைய மதுரை அரசன் சபையின் முன்.
பதிகம் அது எழுது இலை அவை - பனை ஏடும் அதில் எழுதிய பாடலும் ஆகியவைகள். ( அவை - என்று பன்மையால் கூறினமையால் இங்ஙனம் கூறப்பட்டது.) 

 2.வைகை நதியின் மீது செலுத்த 
அதனை எதிர் நோக்கிச் செல்லுமாறு செய்த கரத்தையுடையவர் சிவபெருமான். 
🔰
வருநதி இடை - வரும் வைகையாற்றில்.
 மிசை - மேலே எதிரே 
வரு - எதிரேவரச் செய்த. 
கரன் - செய்கையை உடையவன்.
 வரு - என்பதில் பிற வினை விகுதி தொக்கு நின்றது. 
வசையொடும் அலர்கெட - சைவர்களுக்குவந்த பழியும், பழிதூற்றலும் கெடுமாறு. 
அருகு அரன் சமணர்களை அழித்தவன். 
அருகு - அருகர். 
அரன் - ஹரன் ; அழித்தவன்.

3. அவர் சைவர்கட்கு வந்த பழியும், பழிதூற்றலும் கெடுமாறு சமணர்களை அழித்தவர்.
நினைக்கவும் முடியாதபடி சைவர்களின் புகழ் உலகம் முழுவதும் ஒலிக்கும்படி செய்த வியப்பான செயல்.
🔰
கருதலில் - நினைக்கவும் முடியாதபடி.
இசை - சைவர் அடைந்த புகழ். 
முரல்தரும் - உலகம் முழுவதும் ஒலிக்கும்படி செய்த.
 மருள் - வியப்பு. 
கழுமலம் அமர் இறைதரும் அருளே - கமுமலத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமான் செய்த திருவருட் பெருக்கே யாகும்.
 4.திருக்கழுமலத்தில் வீற்றிருந்தருளும் இறைவனின் அருளே. 
அவ்வருளைப் பெற்ற முத்தமிழ் விரகரது பாடல்களை ஓதவல்லவர்கள் இடர் ஒழிதல் நிச்சயம்.
🔰
 மருவிய - அவ்வருளைப் பெற்ற.
 தமிழ் விரகன - முத்தமிழ் விரகரது.
 மொழி - இப்பாடல்களை. 
வல்லவர் - வல்லவர்களது.
 இடர் திடம் ஒழி - இடர் ஒழிதல் நிச்சயம். ஒழி - முதனிலைத் தொழிற் பெயர்.
⛰️தலம் குறிப்பு: கழுமலம் :
உரோமச முனிவர் பூசித்து ஞானோபதேசம் பெற்று, உலகில் உள்ள உயிர்களின் மலங்களைக் கழுவும் (நீக்கும்) வரம் பெற்றதால் இப்பெயர்.

🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
பத்தி இலக்கியத்தில் தமிழின் பெருமையை உலகறியச் செய்த 
ஆளுடைய பிள்ளையாரின் அமுத பாடல்களின் ஒரு துளி பருகினோம்; இறையருளால்.
இதன் பெருமையை எண்ணிப் போற்றுவோம். 

வணக்கம்.
நன்றி
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
முதல் பதிவில் பாடல் 1. விளக்கம்
1.
https://m.facebook.com/story.php?story_fbid=5711134088961801&id=100001957991710
2.
https://m.facebook.com/story.php?story_fbid=3991943280880899&id=100001957991710

பதிவு : இரண்டு பாடல். 2,3. விளக்கம்:
https://m.facebook.com/story.php?story_fbid=5716695178405692&id=100001957991710
2.
https://m.facebook.com/story.php?story_fbid=3995772097164684&id=100001957991710

பதிவு : மூன்று. பாடல் 4, 5 விளக்கம்:
https://m.facebook.com/story.php?story_fbid=5721422241266319&id=100001957991710
2.
https://m.facebook.com/story.php?story_fbid=4000232066718687&id=100001957991710

பதிவு : நான்கு : பாடல் 6,7, 8 விளக்கம்:
https://m.facebook.com/story.php?story_fbid=4004194352989125&id=100001957991710
2.
https://m.facebook.com/story.php?story_fbid=5725240914217785&id=100001957991710

பதிவு: ஐந்து: பாடல்கள் 9,10, 11 விளக்கம்:
https://m.facebook.com/story.php?story_fbid=4010118565730037&id=100001957991710
2.
https://m.facebook.com/story.php?story_fbid=5731450300263513&id=100001957991710
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇

மடக்கணி - சம்பந்தர் அமுதம் - பதிவு - 5. பாடல்:9, 10, 11

#திருமுறைகளில்_தமிழமுதம்
#சம்பந்தர்அமுதம்
#மடக்கணி
பதிவு : ஐந்து  (பாடல் 9, 10, 11)
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇🙏🏻

 🙇🏻‍♀️மடக்கணி பாடல்கள்:
மடக்கு' என்பது வந்த சொல்லோ, சொற்றோடரோ மீண்டும் வந்து பொருள் வேறுபட்டு நிற்பதாகும்.  தமிழ் ஞானசம்பந்தர் அருளிச் செய்த இந்த வகைப் பாடல்களைப் பற்றி தொடர்ந்து சிந்திப்போம்.

🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇🙏🏻

தேவாரம். - மூன்றாம் திருமுறை 
பாடல் 1220
பதிகம். 371 தலம் - திருக்கழுமலம்
பாடல் - 9
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
நின்மணி  வாயது  நீழலையே
     நேசம  தானவர்   நீழலையே

உன்னி   மனத்தெழு    சங்கமதே
       ஒளியத  னோடுரு  சங்கமதே

கன்னிய  ரைக்கவ   ருங்களனே
        கடல்விடம்   உண்டக   ருங்களனே

மன்னிவ   ரைப்பதி   சண்பையதே
        வாரி  வயல்மலி  சண்பையதே
      
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
பாடல் பொருள் விளக்கம்:

1. சிவபெருமானே! மணிகட்டிய உன் கோயில் வாசலின் நிழலையே அருளிடமாகக் கொண்ட நேசமுடைய அடியவர்களிடமிருந்து நீங்கமாட்டாய்.

நின்மணிவாயது - உமது ஆராய்ச்சி மணிகட்டிய, கோயிலின் திருவாயிலினுடைய. 
நீழலையே - நிழலையே. 
நேசமது ஆனவர் - விருப்பமாகக் கொண்டவர் ; என்றது திருக்கோயிலில் வழிபாடுசெய்து வாயிலில் காத்திருக்கும் அடியர் என்றபடி. `
வாய் - வாயில்.
 நீளலை ( அவ்வடியவரினின்றும் ) நீங்கமாட்டாய்

2.மனத்தில் தொழுகின்ற  அடியவர்கள் விளங்குகின்ற இடமே,  அடியவர்  திருக்கூட்டம் எனத் தக்கதாகும்.

உன்னி மனத்து - மனத்தில் உம்மை நினைத்து.
 எழு - எழுகின்ற.
 சங்க ( ம ) ம் - அடியார். 
ஒளியதனோடு - சைவ தேஜஸோடு. 
உறு - வருகின்ற. 
சங்கமது - கூட்டமாகும். 
சங்கம் ; சங்கமம் என்பதன் மரூஉ. கடவுள் வெளிப்படும் நிலைகளாகிய குரு, லிங்க, சங்கமங் களில் ஒன்று. 

3.தாருகாவனத்தில் மேவிய மகளிரின் உள்ளத்தைக் கவர்ந்த கள்வர்;
 கரிய விடத்தைக்  கண்டத்தில் திகழுமாறு செய்தவர்.  

கன்னியரை - முனிபத்தினியரை.
கவரும் - மனம் கவர்ந்த. 
களன் - கள்ளன். 
கடல் விடமுண்ட, கருங்களன் - கரிய கழுத்தை உடையவன்

4.அப்பெருமான் நிலையாக விரும்பி வீற்றிருந்தருளும் வரையறுத்தலை உடையபதி
 சண்பைப்புல்லாலே அழகாகச் சூழப் பட்டதாகிய. கடல்வளமும், வயல் வளமும் உடைய சண்பை நகராகும்.

🛐தல குறிப்பு:  சண்பை:
கபிலர் சாபத்தால் யாதவன் ஒருவன் வயிற்றில்  உதித்த  இருப்பு உலக்கையைப் பொடியாக்கிக் கொட்டினான்.  அத்தூள்கள்  சண்பைப் புற்களாய் முளைத்தன.  அப்புற்களைக் கொண்டு  யாதவர்கள்  சண்டையிட்டு  மாய்ந்தனர். இப்பழி நீங்கும் பொருட்டுக்  கண்ணனும்  கபில முனிவரும் இந்தத் தலத்தை வழிபட்டு உய்ந்தனர்.  இதனால் சீர்காழிக்கு சண்பை எனப் பெயர் வந்தது.

🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
தேவாரம். - மூன்றாம் திருமுறை 
பாடல் 1221
பதிகம். 371 தலம் - திருக்கழுமலம்
பாடல் - 10
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
இலங்கை  அரக்கர்  தமக்குஇறையே
       இடந்து கயிலை எடுக்க  இறையே

புலன்கள்  கெடஉடன்  பாடினனே
        பொறிகள்  கெடஉடன்  பாடினனே

இலங்கிய  மேனி  இராவணனே
         எய்து பெயரும்   இராவணனே

கலந்தருள் பெற்றது   மாவசியே
          காழி  அரனடி   மாவசியே
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇

பாடல் பொருள் விளக்கம்:
1. இலங்கையில் அரக்கர்களின் வேந்தனாகிய இராவணன்  
கயிலை  மலையை பெயர்த்தெடுக்க,  நொடிப் பொழுதில்  அவ்வரக்கனைஅடர்த்தவர், 

இலங்கை அரக்கர் தமக்கு, இறை - அரசனாகிய இராவணன்.

2.இறைவன் திருப்பாத விரலை ஊன்றக் கயிலையின் கீழ் நடுக்குண்டு, இந்திரியங்கள் மயங்கச் சோர்ந்து
 தான் பிழைக்கும் வண்ணம் இறையருளை வேண்டி உடனே பாடினன்.
பழைய செருக்கு நீங்கி, பொறிகள் பக்தி நிலையில் செல்ல அவனுடைய பாடலுக்கு இறைவன் உடன்பட்டு அருளினன்.

புலன்கள் கெட - இந்திரியங்கள் எல்லாம் மயங்கச் ( சோர்ந்து ).
 உடன் பாடினனே - ( தான் பிழைக்கும் வண்ணம் ) உடனே பாடினன். 
பொறிகள் - ஐம்பொறி முதலிய கரணங்கள். 
கெட - பழைய செருக்கு நிலைகெட்டு ( பத்தி நிலையில் செல்ல ).
 உடன்பாடினனே - அவனுடைய பாடலுக்கு இறைவர் உடன்பட்டவராகி.

3.இரவு போன்ற கரிய நிறத்தை உடைய அவன் கயிலைமலையின் கீழ்   நடுக்குண்டு அழுததனால் உண்டான பெயரே இராவணன் என்பதாம். 

இலங்கியமேனி இராவணன் - விளங்கின உடம்பையுடைய இராவணனுக்கு. 
எய்தும் பெயரும் இராவணனே - அதனால் உண்டான பெயரும் அழுதவன் என்பதாம்.

4. இறைவனின் அருளில் கலந்து அவன் பெற்றது சிறந்த கூர்மையான வாட்படையைப் பெற்றனன்.
பெருமான்  மேவி விளங்கும் இடம், காழி.
 ஆங்கு வீற்றிருக்கும் ஈசன்  திருவடியே வசீகரம்  உடையது.

கலந்து அருள்பெற்றதும் மாவசியே - அருளிற் கலந்து அவன் பெற்றதும் சிறந்த வாளாயுதமாம். 
( வசி - வாள் ) ` வசி கூர்மை வசியம் வாளே ` என்பது நிகண்டு. 
காழி அரன் அடி, மாவசி - சிறந்த வசீகரத்தை உடையதாகும். 
வசி - முத்திபக்ஷாரம் என செந்திநாதையர் உரைப்பர்

🛐தலக்குறிப்பு: காழி:
காளிதன் என்னும் பாம்பும், நடனத்தில் தோல்வியுற்ற காளியும் இத்தலத்துப் பெருமானாரை வழிபட்டதால் இப்பெயர்.

🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
தேவாரம். - மூன்றாம் திருமுறை 
பாடல் 1222
பதிகம். 371 தலம் - திருக்கழுமலம்
பாடல் - 11
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇

கண்ணிகழ்  புண்டரி  கத்தின னே
       கலந்து இரி  புண்டரி  கத்தினனே

மண்ணிக ழும்பரிசு  எனமதே
       வானகம்  ஏய்வகை  சேனமதே

நண்ணி அடிமுடி  எய்தலரே
        நளிர்மலி  சோலையில்  எய்தலரே

 பண்ணியல் கொச்சை  பசுபதியே
         பசுமிக   ஊர்வர்   பசுபதியே

🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
பாடல் பொருள் விளக்கம்:
1. தாமரை போன்ற கண்ணுடைய திருமாலும், 
தாமரை மலரின்மேல்  விளங்கும்  பிரமனும் 

கண் நிகழ் புண்டரிகத்தினனே - கண்ணானது பொருந்திய தாமரையாக உள்ளவன் ; தாமரைக் கண்ணனாகிய திருமாலும்.
 கலந்து - அவனோடு சேர்ந்து. 
இரி - திரிந்த. 
புண்டரீகத் தினன் - ( உந்திக்கமலத்தில் தோன்றியவனாகிய ) பிரமனும். 

2.பூமியைக் குடைந்து செல்லும் ஏனமாகவும் 
வானத்தில் பறந்து செல்லும் பருந்தாகவும்  முனைந்து சென்றும் 
ஈசனின் திருவடியும் முடியும் எய்த, இயலாதவராயினர்.  

மண் நிகழும் பரிசு - பூமியைத் தோண்டும் தன்மையை உடைய. 
ஏனம் அதே - பன்றியாகவும். 
வானகம் ஏய் - ஆகாயத்தில் பறக்கின்ற.
 சேனம் அது - கழுகாகவும். பிரமன் வானிற் பறக்க எடுத்த வடிவம் அன்னமாகவும் எமது ஆளுடையபிள்ளையார் வானிற் பறக்கும் கழுகாகவே அதனைக் கூறினர்.

3.குளிர்ச்சி மிக்க சோலைகளில் உள்ள மலர்கள் சிவபூசை பண்ணப் பயன்படத் திருக்கொச்சை வயம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார்,

 நண்ணி அடிமுடி எய்தலரே - சேர்ந்து அடி முடியையும் அடையாதவர் ஆயினர்.
 நளிர்மலி சோலையில் எய்து அலர் - குளிர்ச்சிமிக்க சோலையில் உள்ள மலர்கள். 

4. உயிர்கட்கெல்லாம் தலைவரான பசுபதி எனப்படும் சிவபெருமான். அவர் ஆனேற்றில் ஏறுவதால் பசுபதி என்னும் பெயர் படைத்தவரும் ஆவார்.

பண் இயல் - சிவபூசை பண்ணுதற்குப் பொருந்திய.
 கொச்சை - கொச்சைவயம் என்னும் தலத்திலுள்ள. 
பசுபதியே - ஆன்மவர்க்கங்களுக்குத் தலைவராய், அதனால் பசுபதி என்னும் பெயர் படைத்தவர். 
பசு - ஆனேற்றை. 
மிக - என்றும். 
ஊர்வர் - ஏறுவார் ; அதனால் பசு பதியே - பசுபதி என்னும் பெயர் படைத்தவரும் ஆவர்.
 பசுபதி - என்ற சொல் பசுக்களுக்கு ( ஆன்மாக்களுக்கு ) ப் பதியாம் தன்மையாலும்,
   பசு ஏறுதலாலும், எய்திய பெயர் என்பது    
    இங்குத் தெளிவிக்கப்பட்டது

⛰️தலம் குறிப்பு:   கொச்சைவயம் : பராசர முனிவர் தமது உடலின் துர்நாற்றமும், பழியும் போகும் பொருட்டுப் பூசித்துப் பேறு பெற்றதால் இப்பெயர்.
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
பத்தி இலக்கியத்தில் தமிழின் பெருமையை உலகறியச் செய்த 
ஆளுடைய பிள்ளையாரின் அமுத பாடல்களின் ஒரு துளி பருகினோம்; இறையருளால்.
இதன் பெருமையை எண்ணிப் போற்றுவோம். 

வணக்கம்.
நன்றி
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
முதல் பதிவில் பாடல் 1. விளக்கம்
1.
https://m.facebook.com/story.php?story_fbid=5711134088961801&id=100001957991710

2.
https://m.facebook.com/story.php?story_fbid=3991943280880899&id=100001957991710

பதிவு : இரண்டு பாடல். 2,3. விளக்கம்:
https://m.facebook.com/story.php?story_fbid=5716695178405692&id=100001957991710
2.
https://m.facebook.com/story.php?story_fbid=3995772097164684&id=100001957991710
பதிவு : மூன்று. பாடல் 4, 5 விளக்கம்:
https://m.facebook.com/story.php?story_fbid=5721422241266319&id=100001957991710

2.
https://m.facebook.com/story.php?story_fbid=4000232066718687&id=100001957991710

பதிவு : நான்கு : பாடல் 6,7, 8 விளக்கம்:
https://m.facebook.com/story.php?story_fbid=5725240914217785&id=100001957991710

Saturday, June 12, 2021

மடக்கணி - சம்பந்தர் அமுதம் பதிவு : நான்கு - பாடல் 6,7, 8

#திருமுறைகளில்_தமிழமுதம்
#சம்பந்தர்அமுதம்
#மடக்கணி
பதிவு : நான்கு (பாடல் 6, 7, 8)
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇🙏🏻

 🙇🏻‍♀️மடக்கணி பாடல்கள்:
மடக்கு' என்பது வந்த சொல்லோ, சொற்றோடரோ மீண்டும் வந்து பொருள் வேறுபட்டு நிற்பதாகும். தமிழ் ஞானசம்பந்தர் அருளிச் செய்த இந்த வகைப் பாடல்களைப் பற்றி தொடர்ந்து சிந்திப்போம்.

🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇🙏🏻

தேவாரம். - மூன்றாம் திருமுறை 
பாடல் 1217
பதிகம். 371 தலம் - திருக்கழுமலம்
பாடல் - 6
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
திகழ்கைய தும்புகை தங்குஅழலே
         தேவர் தொழுவதும் தங்கழலே

இகழ்பவர் தாம்ஒரு மானிடமே
         இருந்தனு வோடு எழில் மானிடமே

மிகவரு நீர் கொளும் அஞ்சடையே
        மின்னிகர் கின்றதும் அஞ்சடையே

தகவிர தம்கொள்வர் சுந்தரரே
         தக்க தாராய் உறை சுந்தரரே
      
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
பாடல் பொருள் விளக்கம்:

1. ஈசன், திகழ்கின்ற கையில் புகை கொண்டு எழும் நெருப்பினை உடையவர்.
தேவர்கள் தொழுது ஏத்தும் திருக்கழலை உடையவர்.

திகழ் - விளங்குகின்ற, 
அழலே - நெருப்பே, 
தம் கழலே - தமது திருவடியையேயாம்

2. தம்மை இகழ்ந்த தாருகவனத்து முனிவர்கள் ஏவிய மானை இடக்கரத்தில் ஏந்தியுள்ளார். 
பக்குவமான ஆன்மாக்களுக்கு ஞானோபதேசம் செய்ய அவர் காட்சி தந்தது மானிட உடம்பில். 

இகழ்பவர் - தம்மை அலட்சியம் செய்தவர்களாகிய. 
தாம் - தாருகவனத்துமுனிவர் ( ஏவிய ) ஒருமான், 
இடம் - இடக்கரத்தில் உள்ளது  
இருந்தனுவோடு - பக்குவ ஆன்மாக்களுக்கு ( உபதேசிக்கும் பொருட்டு ) அவர்தம் பெருமைபொருந்திய உடம்பிற்கு. 
எழில் - அழகிய. 
மானிடவடிவமே என்றது ` மானிடரை ஆட்கொள்ள மானிட வடிவங்கொண்டு வருவன் ` என்ற கருத்து.

3.பெருக்கெடுக்கும் கங்கையைத் தாங்கியது அழகிய சடையிலே.
மின்னலைப் போன்று ஒளிரும் அழகிய சடையை உடையவர். 

மிகவரும், நீர் கொளும் - தண்ணீரைத் தன்னகத்து அடக்கிய,
மஞ்சு - மேகங்கள். 
அடைவு - தம்மிடம் சேர்தலையுடையது. என்றது சிவபெருமான் சடாபாரத்தில் மேகங்கள் இருப்பதைக் குறித்தது. இதனைத் திரு விளையாடல் நான்மாடக்கூடலான படலத்தால் அறிக.
 மின் - மின்னலை. 
நிகர்கின்றதும் - ஒப்பதுவும். 
அம்சடையே - அழகிய சடையே.

4. தகுந்த விரதம் கொண்டு காத்தருளும் சுந்தர வடிவினர். 
அவர் எக்காலத்திலும் அழியாது நிலைத்து நிற்கும் பூந்தராய் என்னும் திருப்பதியில் வீற்றிருந்தருளும் அழகர்.

தக - தகுமாறு. 
விரதம் - மனத்தையடக்கல் முதலிய விரதங் காத்தலை. 
கொள்வர் - பாராட்டியேற்றுக் கொள்பவராகிய சுந்தரர். 
கொள்வர் - இவ்வுலகிற்குத் தலைவர். விரதமெல்லாம் மாண்ட மனத்தார் மனத்தான் கண்டாய் ` எனவும், ` விரதங் கொண்டாட வல்லானும் ` எனவும் வரும் அப்பர் திருவாக்கிலும் ஒலிக்கிறது. வசுந்தரர் எனற்பாலது சுந்தரர் என நின்றது முதற்குறை. உலகத்தை உடையவர் என்று பொருள். 
தக்க தராய் - பூந்தராய்.
உறை - வீற்றிருக்கும், சுந்தரர் அழகர்.

🛐தல குறிப்பு: பூந்தாராய்:
சங்கநிதி பதுமநிதி என்னும் இருநிதிகளின் அதிதேவதைகள் பூந்தாராய் இருந்து (தார் = மாலை) இத்தலத்தை வழிபட்டும் பேறு பெற்றதால் இப்பெயர்.

🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
தேவாரம். - மூன்றாம் திருமுறை 
பாடல் 1218
பதிகம். 371 தலம் - திருக்கழுமலம்
பாடல் - 7
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
ஓர்வரு கண்கள் இணைக்கயலே
      உமையவள் கண்கள் இணைக்கயலே

ஏர்மருவும் சுழல் நாகமதே
       எழில்கொள் உதாசனன் ஆகமதே

நீர்வரு கொந்தள கம்கையதே
       நெடுஞ்சடை மேவிய கங்கையதே

சேர்வரு யோகதியம் பகனே
        சிரபுர மேய தியம்பகனே
  
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇

பாடல் பொருள் விளக்கம்:
1.நெஞ்சே ஈசனையன்றிப் பிறவற்றைக் காணுமாறு கண்களைச் செலுத்தற்க.
அவ்வாறு செலுத்துதல் புறம்பானது என்க

உமாதேவியின் கண்கள் இணையாக மேவி, கயல்கள் போன்று தம் குஞ்சுகளைப் பார்வையால் கனிந்து நோக்கும் தன்மையில், மன்னுயிர்களைக் கனிவுடன் நோக்கி வாழவைக்கும் பாங்குடைய ஈசன்.

ஓர்வு அரு கண்கள் - மாலற நேயம் மலிந்தவர் வேடத்தை அரனென நினைக்காத கண்கள். 
இணைக்க - அன்பரொடு மருவுதற்கு. அயல் - புறம்பானவை. 
இணைக்கயல் - இரு மீன்களுக்கு ஒப்பாகும். 

2. அழகிய கழலில் நாகத்தைக் கட்டி இருப்பர்.
திருமேனி நெருப்பு வண்ணம் உடையது.

ஏர் மருவும் - அழகு பொருந்திய. 
கழல் - வீரக்கண்டையாக இருப்பது. 
நாகம் அது - பாம்பாம்.
எழில் கொள் - அழகிய. 
உதாசனன் - அக்கினி. 
ஆகம் அது - திருவுடம்பாக இருப்பது. 

3. நீர் மயமான ஈசனின் சடை முடி அலங்கரிக்கப்பட் ஒழுங்குடன் திகழ்வது.
நெடுஞ்சடையில் கங்கையைத் தரித்தவன்.

நீர்வரு - நீர்மயமான. 
கொந்தளம் - சடைமுடி
கொந்து அளகம் - கொத்தான கூந்தல். 
கையது - ஒப்பனைஒழுங்கு உள்ளது. 
கங்கையது - கங்கையாகிய மங்கைக்கு உரியது. 
ஒரு மங்கையே நீர்மயமாக இருப்பாளேயானால் அவளது சாங்கமும் நீர்மயமானதே என்று கொள்வதற்கு நீர்வரு கொந்தளகம் என்று கூறினார்.

4. சேர்தற்கரிய யோகநிலையைக் காட்டிய மூன்று கண்களையுடையவரே. நெருப்பாகிய அம்பைக் கையின் இடத்துக்கொண்டு சிரபுரம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்து அருளுகின்றார்.

சேர்வரு - சேர்தற்கரிய. 
யோகம் - யோகநிலையைக் காட்டிய. 
தியம்பகன் - மூன்று கண்களை உடையவன். 
தியம்பகன் - திரியம்பகன் என்பதன் மரூஉ. சிரபுரம், 
மேய - எழுந்தருளிய.
 தீ - நெருப்பாகிய. 
அம்பு - அம்பைக்கொண்ட. 
அகன் - கையினிடத்தை உடையவன்.
 தீ - குறுக்கல் விகாரமாய் தி என நின்றது. அகம் - இடம்.

🛐தலக்குறிப்பு: சிரபுரம் : சிலம்பன் என்னும் அசுரன் வேற்றுருவுடன் அமுதம் பெற வந்த போழுது, திருமால் அவனது தலையை வெட்டினார். அவனது தலை (சிரம்) இராகுவாக நின்று பூசித்ததால் இப்பெயர் பெற்றது சீர்காழி.
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
தேவாரம். - மூன்றாம் திருமுறை 
பாடல் 1219
பதிகம். 371 தலம் - திருக்கழுமலம்
பாடல் - 8
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
ஈண்டு துயிலமர் அப்பினனே
     இருங்கண் இடந்துஅடி அப்பினனே

தீண்டவரும் பரிசு அக்கரமே
       திகழ்ந்து ஒளி சேர்வது சக்கரமே

வேண்டி வருந்த நகைத் தலையே
       மிகைத்தவ ரோடு நகைத்தலையே

பூண்டன சேரலும் மாபதியே
         புறவம் அமர்ந்த உமாபதியே.

🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
பாடல் பொருள் விளக்கம்:

1.பாற்கடலில் துயில் கொள்ளும் திருமால், 
தமது பெரிய கண்ணைத் தோண்டிச் சிவபெருமானின் திருவடிகளில் அர்ச்சித்தனர். 

ஈண்டு - இங்கே ( திருவீழிமிழலையில் ). துயில் அமர் அப்பினன் - கடலில் தூங்கும் திருமால். 
அப்பு - தண்ணீர், கடலைக் குறித்தது தானியாகுபெயர். 
இரு - பெரிய. 
கண் - கண்ணை. 
இடந்து - தோண்டி. 
அடி - திருவடியின்கண். 
அப்பினன் - சேர்த்தான்

2. தீண்டுதற்கரிய தன்மையுடைய அந்தக் கரத்தில் 
ஒளியுடையதாய் விளங்குவது சக்கரமே.

தீண்டல் அரு - தீண்டுவதற்கு அரிய. 
பரிசு - தன்மையுடன்.
 அக்கரம் - அந்தக்கரத்தில். 
திகழ்ந்து - விளங்கி. 
ஒளிசேர்வது - ஒளி உடையதாய் இருப்பது. சக்கரம் - சக்கர ஆயுதமாம். 

3. தன்னை ஏளனம் செய்து கொல்ல வந்த தாருகாவனத்து முனிவர்களை நோக்கி, அவர்களை ஏளனம் செய்யுமாறு மண்டை ஓடுகளைக் கோர்த்து மாலையாகக் கொண்டவர்.

வேண்டி - ( தாருகாவனத்து முனிவர் ) விரும்பி. 
வருந்த - யாகம் செய்து சிரமப்பட ( தோன்றிய ).
 நகைத்தலை - நகுவெண்டலையானது. அவரோடு - அம்முனிவ ரோடு. 
மிகைத்து - மிக்க மாறுகொண்டு. நகைத்தலையே

4. அவர் சேர்வது எவற்றிலும் சிறந்த அடியார் உள்ளமாகிய இடமாம். 
புறவம் என்னும் திருத் தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுபவரும் அந்த உமாபதியே ஆவார்.

பூண்டனர் - நகைத்தலை உடையதாக
 பூண்டனர் - தலைக்கண் அணிந்தனர். சிவனைக் கொல்லவந்த நகுவெண்டலை சிரிப்பது, அம் முனிவரைப் பரிகசிப்பதைப் போலக் காணும்படி அதனை அணிந்தனர் என்பது கருத்து.
சேரலும் - சேர்வதும். 
மா - எவற்றிலும் சிறந்த ( அடியார் உள்ளமாகிய ). 
பதி - இடம்.

⛰️தலம் குறிப்பு: புறவம் :
சிபிச்சக்கரவர்த்தியிடம் இந்திரன் பருந்தாகவும், அக்கினி தேவன் புறாவாகவும் சென்று சோதித்தார்கள்.
சிபி புறாவின் எடைக்குத் தனது உடல் தசையை அறுத்து ஈடு செய்தான். இப் பாவம் நீங்கப் புறாவாகிய அக்கினி தேவன் இத்தலத்தை வழிபட்டதால் புறவம் எனப்பட்டது.
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
பத்தி இலக்கியத்தில் தமிழின் பெருமையை உலகறியச் செய்த 
ஆளுடைய பிள்ளையாரின் அமுத பாடல்களின் ஒரு துளி பருகினோம்; இறையருளால்.
இதன் பெருமையை எண்ணிப் போற்றுவோம். 
வணக்கம்.
நன்றி
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
முதல் பதிவில் பாடல் 1. விளக்கம்
1.
https://m.facebook.com/story.php?story_fbid=5711134088961801&id=100001957991710
2.
https://m.facebook.com/story.php?story_fbid=3991943280880899&id=100001957991710
பதிவு : இரண்டு பாடல். 2,3. விளக்கம்:
https://m.facebook.com/story.php?story_fbid=5716695178405692&id=100001957991710
2.
https://m.facebook.com/story.php?story_fbid=3995772097164684&id=100001957991710
பதிவு : மூன்று. பாடல் 4, 5 விளக்கம்:
https://m.facebook.com/story.php?story_fbid=5721422241266319&id=100001957991710
2.
https://m.facebook.com/story.php?story_fbid=4000232066718687&id=100001957991710

Friday, June 11, 2021

மடக்கணி - சம்பந்தர் அமுதம் - பதிவு 3. பாடல், 4, 5.

#திருமுறைகளில்_தமிழமுதம்
#சம்பந்தர்அமுதம்
#மடக்கணி
பதிவு : மூன்று (பாடல் 4, 5)
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇🙇🙏🏻🙇‍♀️

🛐 தேவார பதிகங்களில் உள்ள பாடல்களில் உள்ள தமிழமுத சுவைப் பாடங்களை சுவைத்து வருகிறோம் 
இப் பாடல்களின் திறன் வியந்தும் பக்தி உணர்வுடனும் சிந்தித்து வருகிறோம்.
இன்று மேலும் சில பாடல்களைப் பற்றி சிந்திப்போம்.

🙇🏻‍♀️அந்த வகையில் யாப்பு அமைப்பில் வந்த சொல்லோ, சொற்றோடரோ மீண்டும் வந்து பொருள் வேறுபட்டு நிற்கும் மடக்கணி என்ற இந்த வகைப் பாடல்களை தமிழ் ஞானசம்பந்தரின் பதிகப்பாடல்கள் பற்றி தொடர்ந்து சிந்திப்போம்.
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇

தேவாரம். - மூன்றாம் திருமுறை 
பாடல் 1215
பதிகம். 371 தலம் - திருக்கழுமலம்
பாடல் - 4
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
மைத்திகழ் நஞ்சுமிழ்  மாசுணமே
        மகிழ்ந்து அரை சேர்வது  மாசுணமே

மெய்த்துடல் பூசுவர்  மேல்மதியே
        வேதமது ஓதுவர்   மேல்மதியே

பொய்த்தலை  யோடுஉறு  மத்தமதே
        புரிசடை  வைத்தது  மத்தமதே

வித்தகர் ஆகிய  எங்குருவே
         விரும்பி  அமர்ந்தனர்  வெங்குருவே

🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇🙏🛐

பொருள் விளக்கம்:
1.  ஈசன், கரிய நஞ்சினை உமிழும் பாம்பை மகிழ்ந்து அறையில் சேர்த்துக் கட்டியவர்.
திருவெண்ணீற்றைத் திருமேனியில் சந்தணத்தை அரைத்துப் பூசியவர்
☀️மாசுணம் = 1. பாம்பு 
            2. மா+ சுண்ணம் - திருநீறு
மைத்திகழ் நஞ்சு உமிழ்மாசுணமே - கரிய நிறம் விளங்கும் நஞ்சைக் கக்கும் பாம்பே. 
மகிழ்ந்து அரை - இடுப்பில் சேர்வது அரை ஞாணாகவும் கோவணமாகவும் சேர்வது. மாசு ( ண் ) ணமே மெய்த்து உடல் பூசுவர் - சிறந்த திரு நீற்றையே உடம்பின்மேற் பூசுவதாகிய சந்தனமாகத் திருமேனியிற் பூசுவர். சுண்ணம், பொடி, திருநீறு.

2. சடை முடியின் மீது சந்திரனைத் தரித்தவர்.
மேன்மையான ஞானம் அருளும் வகையில் வேதப்பொருளை ஓதுபவர்.

🌟மெய்த்து - உடம்பிற் பூசுவதாகிய சந்தனத்தைக் குறித்தது, ` சாந்தமும் வெண்ணீறு ` என்ற திரு விசைப்பாவின் கருத்து. மேல் மதியே - ( தலை ) மேல் ( இருப்பதும் ) சந்திரனே. மேல் மதியே வேதமது ஓதுவர் - மேலான புத்தியைத் தரும் கருத்துக்களை வேதம் முதலிய நூல்களால் ஓதியருளியவர்

3.மண்டை ஓடு ஏந்தி மயானத்தில் விளங்குபவர்; 
சடை முடியின் மீது  ஊமத்த மலர் சூடியவர்

4. வித்தகர் ஆகிய அவர், எம் குருவானவர்;
அவர் விரும்பி அமர்ந்து இருப்பது வெங்குருவே.

🗻தல  குறிப்பு: வெங்குரு:
அசுர குருவாகிய சுக்கிரன் இத்தலத்தை வழிபட்டு பேறு பெற்ற தலம். இயமன் வழிபட்டு பழி நீக்கிக் கொண்டதாலும் இப்பெயர்
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇🙏🏻

தேவாரம். - மூன்றாம் திருமுறை 
பாடல் 1216
பதிகம். 371 தலம் - திருக்கழுமலம்
பாடல் - 5
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇

உடன்பயில்  கின்றனன்  மாதவனே
       உறுபொறி காய்ந்து இசை மாதவனே

திடம்பட மாமறை கண்டனனே
       திரிகுண மேவிய கண்டனே

படங்கொள் அரவு அரை செய்தனனே
     பகடுஉரி  கொண்டு அரை செய்தனனே

தொடர்ந்த துயர்க்குஒரு  நஞ்சுஇவனே
      தோணி புரத்துறை நம் சிவனே
      
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
பாடல் பொருள் விளக்கம்:

1 ஈசன், திருமாலைத் தம்முடன் இருக்கும்படி செய்பவர்
இந்திரியங்களை அடக்கிப் பெருமையுடன் மேவும் சிறந்த தவத்தை உடையவர்.
🔘மாதவன் = 1. திருமால்,
                          2. மா  தவத்தினர் 
🔘 உடன் பயில்கின்றனன் மாதவன் -                   தம்மோடு கூடவேயிருக்கும் பேறுடையவன் திருமால். ஏனெனில், 
உறு - தம் வழியிற் செல்லுகின்ற. 
பொறி - இந்திரியங்களை. 
காய்ந்து இசை - கோபித்து மடக்கிச் செலுத்திய. 
மாதவன் - பெருந்தவஞ்செய்தோனாதலினால் பொறிகளை யடக்குதல் அவற்கு ஆகும்
 என்க. ` சென்ற விடத்தாற் செலவிடா தீது ஒரீஇ நன்றின்பால் உய்ப்பது அறிவு ` என்னும் திருக்குறள் கொண்டு அறிக.

2. உறுதி பயக்கும் சிறந்த வேதங்களைக் கண்டவர்.
முக்குண வயத்ததாய் மேவிக் குற்றத்தைப் பெருக்கும் கொள்கைகளைக் கண்டனம் செய்பவர்.

☮️மாமறை கண்டனன் = வேதங்களைக் கண்டவர்.  
மேவிய கண்டனனே = கண்டனம் செய்பவர்.
திடம்பட - உறுதிப்பாடு அமைய. 
மாமறை - சிறந்த வேதங்களை. கண்டனன் - செய்தருளியவர். 
வேதத்தை யருளியவரும் சிவபெருமானேயென்பது 
இதனை ` உம்பரின் நாயகன் திருவாக்கிற் பிரணவம் உதித்தது, அதனிடை வேதம் பிறந்தன ` என்னும் திருவிளையாடற் புராணத்தால் அறிக. 
திரிகுணம் மேவிய - முக்குண வயப்பட்டுச் செய்தனவாகிய புறச்சமயக் கொள்கைகளை. 
கண்டனன் - கண்டனம் செய்வோன் 

3. படம் கொண்ட அரவத்தை அரையில் பொருத்திக் கட்டியவர்;
யானையின் தோலை உரித்துப் போர்வையாகத் தரித்துக் கொண்டவர்.

☸️பகடு - யானையின்.
 உரிகொண்டு - தோலையுரித்து. 
அரை செய்தனன் - அதை அழித்தவன். 

4. விணைப் பயனால் நேரும் துன்பங்களால் அடியவர்கள் நலியாதவாறு காப்பவர்.
இவர், தோணிபுரத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானே.

🔯தொடர்ந்த ) துயர்க்கு - துன்பங்களுக்கு ஒரு நஞ்சு இவனே - ஒருவிடம்போல் நின்று அழிப்பவன் இவனே.

🛐தல குறிப்பு: தோணிபுரம் = ஊழிக்காலத்தில் உலகமெல்லாம் நீரில் மூழ்கினாலும் இத்தலம் மட்டும் அழியாமல் பிரணவ உருவாகத் தோணி போல் மிதந்ததால் சீர்காழிக்கு இப்பெயர்.

🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
பத்தி இலக்கியத்தில் தமிழின் பெருமையை உலகறியச் செய்த 
ஆளுடைய பிள்ளையாரின் அமுத பாடல்களின் ஒரு துளி பருகினோம்; இறையருளால்.
இதன் பெருமையை எண்ணிப் போற்றுவோம். 

வணக்கம்.
நன்றி
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
முதல் பதிவில் பாடல் 1. விளக்கம்
1.
https://m.facebook.com/story.php?story_fbid=5711134088961801&id=100001957991710

2.
https://m.facebook.com/story.php?story_fbid=3991943280880899&id=100001957991710

பதிவு : இரண்டு பாடல். 2,3. விளக்கம்:
https://m.facebook.com/story.php?story_fbid=5716695178405692&id=100001957991710
2.
https://m.facebook.com/story.php?story_fbid=3995772097164684&id=100001957991710

Thursday, June 10, 2021

மடக்கணி - சம்பந்தம் அமுதம் - பதிவு - 2

#திருமுறைகளில்_தமிழமுதம்
#சம்பந்தர்அமுதம்
#மடக்கணி
பதிவு : இரண்டு. (பாடல் 2, 3)
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
தேவாரப் பாடல்கள் ஓதுவார்கள்  ஓதும் போது  நமக்கு ஒரு மன அமைதியும் பக்தி உணர்வும் மேலோங்கி வரும்.  

அந்த பாடல்களை இலக்கியங்களாக எண்ணி அதன் தனித்தமிழ் சுவையுடன் பருகும் போது அந்த அமுதத் தமிழின் இலக்கிய நயம் நம்மை ஈர்க்கும்.

பக்தியும் தமிழும் கலக்கும்போது அது நம் உயிரில் கலந்த  உணர்வாகி விடுகிறது. 

அந்த வகையில்  மடக்கணி என்ற யாப்பு அமைப்பில் உள்ள தமிழ் ஞானசம்பந்தரின் பதிக பாடலை பற்றி தொடர்ந்து சிந்திப்போம்.

🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
மடக்கணி பாடல்கள்:
மடக்கு' என்பது வந்த சொல்லோ, சொற்றோடரோ மீண்டும் வந்து பொருள் வேறுபட்டு நிற்பதாகும். (யமகம் என்றாலும் மடக்கு என்றாலும் ஒரு பொருளையே குறிக்கும். யமகம் என்பது வடசொல்)
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
தேவாரம். - மூன்றாம் திருமுறை 
பாடல் 1213
பதிகம். 371 தலம் - திருக்கழுமலம்
பாடல் - 2.
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇

சதிமிக வந்த சலந்தரனே
     தடிசிரம் நேர்கொள் சலந்தரனே

அதிர்ஒளி சேர்திகி ரிப்படையால்
     அமர்ந்தனர் உம்பர்து  திப்படையால்

மதிதவழ் வெற்பது  கைச்சிலையே
     மருவிடம் ஏற்பது  கைச்சிலையே

விதியினில் இட்ட  இரும்பரனே
     வேணு புரத்தை  விரும்பரனே.

🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
குறிப்பு:
இப்பதிகம் சீர்காழிப்பதியின் 12 பெயர்களும் வருமாறு அமைத்துள்ளார். இரண்டாவதாக வந்த இப்பாடலில் வேணுபுரம் என்றார்.
இறைவன் மூங்கில் வடிவில் தோன்றியதால் சீர்காழிக்கு வேணுபுரம் என்று ஒரு பெயர்

பொருள் விளக்கம்:
1. வஞ்சனை கொண்டுவந்தவன் சலந்தரன்.
அவனைத் தடிந்து அழித்தவர் கங்கையைத் தாங்கிய ஈசன்.

சதி - வஞ்சனை. சலந்தரன் - சலந்தரனை. தடிசிரம் - தலையைவெட்டுவதற்குரிய. சலந்தரனே - வஞ்சகத்தையுடையவனே. வஞ்சகமாவது காலால் சக்கரம்போல் கோடுகிழித்து அதை எடுக்கச் சொல்லியது

2. கண்டவர்கள் அதிரும்படியான வலிமை மிக்க சக்கரப்படையை (ஈசன் பாதத்தால் வட்டமிட்டுக் கோடு கிழிக்க, அது சக்கரம் படையாக மாறி சலந்தரனை அழித்தது).
வானவர்கள் கண்டு மகிழ்ந்து துதித்து ஏத்தினர் உன் படைத்திறன் கண்டு.

அதிர் - கண்டார் நடுங்கத் தக்க.
திகிரிப் படையால் - அச்சலந்தரனைக் கொன்ற சக்கராயுதத்தால். உம்பர் - தேவர்கள். துதிப்பு - துதித்தல். அமர்ந்தனர் - மகிழ்ச்சியுற்றனர். 
அடை - முதல் நிலைத் தொழிற்பெயர்.

3. சந்திரனைத் தொடும் உயர்ந்த மேரு மலையை ஈசன், கையில் வில்லாகக் கொண்டவர். 
அவர், விடத்தினை ஏற்று அருந்தியதில் எத்தகைய கைப்பும் கொள்ளவில்லை.
கைச்சிலை = 1. மேருமலை  2. வெறுப்பு இல்லை (கைப்பு + இல்லை).

மதிதவழ் வெற்பது கைச்சிலையே - சந்திர மண்டலத்தை அளாவிய மேரு மலை, கையிலேந்திய வில்லாம். மரு ( வு ) விடம் ஏற்பது கைச்சிலையே - பொருந்திய நஞ்சை உணவாக ஏற்பதில் வெறுத்திலீர்

4. ஆகமவிதியில் மிகவும் விருப்பத்துடன் விளங்கும் அவர், 
வேணுபுரத்தை விரும்பி வீற்றிருக்கும் அரனே.
விதியினில் - விதித்த முறையில் உலகர் ஒழுகுவதில். இட்ட ( ம் ) - விருப்பத்தை உடைய. இரும் - பெரிய. பரனே - மேலான கடவுளே ! இட்டம் + இரும்பரன் - மவ்வீறொற்றொழிந்து உயிரீறு ஒத்தது. ( நன்னூல் . 219.) இட்டு அவிரும் எனலே தகும். வேணுபுரத்தை விரும்பு அரனே - வேணு புரத்தை விரும்புகின்ற சிவபெருமானே.
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇🙏🏻

தேவாரம். - மூன்றாம் திருமுறை 
பாடல் 1214
பதிகம். 371 தலம் - திருக்கழுமலம்
பாடல் - 3
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
காதம  ரத்திகழ்  தோடினனே
     கானவ னாய்க் கடிது ஓடினனே

பாதம தால்கூற்று  உதைத்தனனே
      பார்த்தன்  உடலம்  புதைத்தனை

தாதவிழ் கொன்றை  தரித்தனனே
      சார்ந்த வினையது அரித்தனனே

போதகம் அமரும் உரைப் பொருளே
      புகலி அமர்ந்த  பரம்பொருளே

🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
குறிப்பு: இதில் தலத்தினை புகலி என்றார். தேவர்களின் புகலிடமாய் விளங்கியது சீர்காழி தலம்

பாடல் பொருள் விளக்கம்:

1. ஈசன், காதில் தோடு அணிந்தவர்.
காட்டில் வேடுவராய்த் விரைந்து ஓடியவர்

காது அமரத்திகழ்தோடினனே - காதில் பொருந்த விளங்குகின்ற தோட்டையணிந்தவர். 
கானவன் ஆய் - வேடுவனாகி.
கடிது ஓடினனே - மிக விரைந்து சென்றவர். 

2. காலனை (யமனை)க் காலால் உதைத்தவர். 
அர்ச்சுனனது உடலைக் கவசமாக மூட அத்திரங்களை அருளியவர்.

( பாதம் அதால் ) கூற்று - யமனை உதைத்தனனே. 
பார்த்தன் - அருச்சுனனது. 
உடல் - உடம்பை. அம்பு தைத்தனனே - அம்பு தொடுத்து அதனால் கவசம்போல் மூடினவர். 

3.மகரந்தத்தோடு மலர்ந்த கொன்றையை அணிந்தவர். 
அன்பர்களின் தீவினைகளை அழித்தவர்.

தாது அவிழ் - மகரந்தத் தோடு மலர்ந்த. தன் அன்பர்களுக்கு 
சார்ந்த - பொருந்திய. வினை ( அது ) அரித்தனனே - கொன்று அருளியவர். 

4. சிவஞானக் கருத்தடங்கிய உபதேச மொழியின் பொருளாயுள்ளவர். 
அவரே திருப்புகலி என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளும் பரம்பொருள்.

போதம் அமரும் உரைப்பொருளே - சிவஞானக் கருத்தடங்கிய உபதேச மொழியின் பொருளாயுள்ளவன்.
புகலியை அமர்ந்த - விரும்பி யுறைகின்ற பரம் பொருளே - கடவுளே. 

🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
பத்தி இலக்கியத்தில் தமிழின் பெருமையை உலகறியச் செய்த 
ஆளுடைய பிள்ளையாரின் அமுத பாடல்களின் ஒரு துளி பருகினோம்; இறையருளால்.
இதன் பெருமையை எண்ணிப் போற்றுவோம். 

வணக்கம்.
நன்றி
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
முதல் பதிவில் பாடல் 1. விளக்கம்
1.
https://m.facebook.com/story.php?story_fbid=5711134088961801&id=100001957991710

2.
https://m.facebook.com/story.php?story_fbid=3991943280880899&id=100001957991710

Wednesday, June 9, 2021

சம்பந்தர் அமுதம் - மடக்கணி பதிவு - 1 பாடல் 1.

#திருமுறைகளில்_தமிழமுதம்
#சம்பந்தர்அமுதம்
#மடக்கணி
பதிவு : ஒன்று
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
நம் தமிழ் மொழி உலக இலக்கியத்தில் ஒப்பற்றது என்று நாம் உண்மையில் தெரிந்து உணர வேண்டும். 

நம் பக்தி இலக்கியத்தில்
ஒப்பற்ற நம் தமிழ் மொழியின்
அற்புத யாப்பமைந்த சிறப்பான பதிகப் பாடல்களின் அமுதத்தின்
பொருள், அமைப்புக் குறித்து சிந்தித்து ஒரு துளியேனும் பருக வேண்டும் என்ற நோக்கத்தில் எடுத்த இந்த சிறு முயற்சியில் விளைந்ததே இந்தத் தொடர் பதிவு.

🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
மடக்கு' என்பது வந்த சொல்லோ, சொற்றோடரோ மீண்டும் வந்து பொருள் வேறுபட்டு நிற்பதாகும். யமகம் என்றாலும் மடக்கு என்றாலும் ஒரு பொருளையே குறிக்கும். யமகம் என்பது வடசொல்.
திருமுறையில் வரும் நம்
தமிழ் ஞானசம்பந்தர் பாடலைப் பற்றி சிந்திப்போம். வாருங்கள்:
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
தேவாரம். - மூன்றாம் திருமுறை 
பாடல் 1212
பதிகம். 371 தலம் - திருக்கழுமலம்
பாடல் - 1.

உற்றுமை சேர்வது மெய்யினையே
உணர்வது நின்னருள் மெய்யினையே

கற்றவர் காய்வது காமனையே
கனல்விழி காய்வது காமனையே

அற்ற மறைப்பதும் உன்பணியே
அமரர்கள் செய்வதும் உன்பணியே

பெற்றம் உகந்தது கந்தனையே
பிரம புரத்தை உகந்தனையே

🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇

முதல்வரியின் கடைசி வார்த்தையும்
இரண்டாவது வரியின் கடைசி வார்த்தையும் 
மெய்யினையே இதன் பொருள் :
1) திருமேனி 2) மெய்யருள்

இது போலவந்த சொல்லோ, சொற்றோடரோ மீண்டும் வந்து பொருள் வேறுபட்டு நிற்கும். இந்த அமைப்பு பாடல்களே மடக்கு அணி வகை என்பர் அறிஞர்.
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
பாடல் முழு பொருள் :
1.இறைவா, உமாதேவியர் உம்மைப் பிரியாது பொருந்தி இருப்பது உமது திருமேனியே
மெய்ஞானிகள் உணர்ந்து போற்றுவது உமது மெய்த்தன்மை உடைய பேரருளையே.

2. கற்றுணர்ந்த ஞானிகள் வெறுப்பது பந்தம் உடைய மனைவி மக்கள் முதலாக மேவும், குடும்ப வாழ்க்கையே
நீவிர் நெற்றிக் கண்ணால் சினந்தது மன்மதனையே 

காமனை -1.குடும்பம் 2. மன்மதன்

3. உமது திருமேனியின் எழிலை மறைத்து விளங்குவது, பாம்பே.
தேவர்கள் செய்வதும் உமக்கு பணிவிடையே.

பணி - 1. பாம்பு 2. பணிவிடை செய்தல்

4. நீவிர் பெற்று அழகுடன் முகிழ்த்தது முருகப் பெருமானையே.
பிரமாபுரத்தினையே உகந்தவரே.

(உ)கந்தனை - மகிழ்ந்து விளங்கினை

🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
பத்தி இலக்கியத்தில் தமிழின் பெருமையை உலகறியச் செய்த 
ஆளுடைய பிள்ளையாரின் அமுத பாடல்களின் ஒரு துளி பருகினோம்; இறையருளால்.
இதன் பெருமையை எண்ணிப் போற்றுவோம். 

வணக்கம்.
நன்றி
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் 19.7.26

மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்   மதுரையின் நடுவே அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இச்சிவன் கோயிலின் மூலவர் சுந்தரேசுவரர் மற்றும் அம்பிகை ம...