ஆறுமுகமங்கலம் ஆயிரத்தெண் விநாயகர் கோவில்
தமிழகத்தில் முதலில் எழுப்பப்பட்ட விநாயகர் கோவில் ஆயிரத்தெண் விநாயகர் ஆலயம்.
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
தூத்துக்குடி திருசெந்தூர் சாலையில் இருந்து பிரிந்து செல்லும் சாலையில் 21KM தொலைவில் இக்கோயில் உள்ளது. தூத்துக்குடியிலிருந்து நகரப் பேருந்துகள் உள்ளன.
தூத்துக்குடி, புதுக்கோட்டையில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது ஆறுமுகமங்கலம்
தூத்துக்குடி மாவட்டம் ஏரலிலிருந்து 7 கி.மீ. தூரத்தில் உள்ளது
இந்தக் கிராமத்தின் மத்தியில் அமைந்துள்ளது.
சுற்றிலும் கிராம தேவதைகளான தோப்பாச்சி அம்மன், இளைய நாயனார், சுடலை மாடன் ஆகிய கோயில்கள் வடக்கு, தெற்கு, மேற்கு திசைகளில் அமைந்துள்ளன.
தலவரலாறு
கி.மு. 2300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதென்று இந்த ஆலயத்தின் வரலாறு கூறுகிறது.
கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் கொற்கையைத் தலைநகராகக் கொண்டு பாண்டிய நாட்டை ஆண்டு வந்தான் சோமாற வல்லபன். ஆயிரம் யாகங்கள் செய்தவன் எனப் போற்றப்பட்டவன்.
நர்மதை நதிக்கரையில் இருந்து ஆயிரம் வேத பண்டிதர்களை அழைத்து இங்கு மிகப்பெரிய யாகம் ஒன்றை நடத்திட முடிவு செய்தான்.
ஆனால் அங்கு வந்தவர்களோ 999 பேர்தான் ஒரு பண்டிதர் குறைந்ததால் மன்னனின் மனதில் கவலை ஏற்பட்டது.
தன் இஷ்ட தெய்வமான பிள்ளையாரை மனமுருக வேண்டிக் கொண்டார்.
சற்று நேரத்தில் ஓர் அந்தணர் அங்கு வந்து சேர்ந்தார். யாகம் மிகச் சிறப்பாக நடந்தேறியது. நிறைவில் அந்தணர்கள் அனைவருக்கும் காணிக்கை சமர்ப்பித்து ஆசி பெற்றார் மன்னர். 1008-வது நபராக விநாயகரே பண்டிதராக புதிய அந்தணர் போல வடிவம் கொண்டு வந்து யாகத்தை நிறைவுசெய்தார். மன்னன் தொழுது வணங்க விநாயகப்பெருமான் காட்சி கொடுத்தார்.
யக்ஞம் முடிந்த உடன் ஆறுமுகமங்கலத்தையே கிராமதானமாக பெற்றுக்கொண்டு அங்கேயே தங்கிவிட்டதாக வரலாற்று ஏடு தெரிவிக்கிறது. விநாயகப்பெருமான் ஆசி வழங்கி, தான் அந்த ஊரிலேயே கோயில் கொண்டு எழுந்தருளத் திருவுளம் கொண்டதாகச் சொல்லி அருளினார்.
மன்னனும் மகிழ்ந்து யாகத்தைப் பூர்த்தி செய்த விநாயகருக்கு ஆலயம் எழுப்பி வழிபட்டான். அந்தணர்களும் தாமிரபரணியிலிருந்து நீர் வரத்து இருந்ததால் அங்கேயே விநாயகரை பிரதிஷ்டை செய்து வழிபடத் துவங்கினர்.
1008-வது அந்தணராக பிள்ளையார் வந்ததால், ஆயிரத்தெண் விநாயகர் என்று திருப்பெயர் ஏற்றார் இந்தப் பிள்ளையார்.
அவர்கள் குடியிருந்த பகுதி 'சதுர்வேதிமங்கலம்' என அழைக்கப்பட்டது. பிற்காலத்தில் இங்கு முருகன் வழிபாடு சிறப்பானதால் 'ஆறுமுகமங்கலம்' எனப் பெயர் மாற்றம் கண்டது.
ஆலய சிறப்பு💥
ஆதிசங்கரருக்கு வயிற்றுவலி ஏற்பட்டபோது, அவர் திருச்செந்தூர் சென்று சுப்ரமணிய புஜங்கம் பாடி, முருகனருளால் வயிற்றுவலி நீங்கப் பெற்றார் அல்லவா... அதற்கு முன்னதாக அவர் இந்தக் கோயிலுக்கு வந்து பிள்ளையாரை வழிபட்டு, கணேச பஞ்சரத்ன கீர்த்தனை பாடி வணங்கினார் என்கிறார்கள். இந்தப் பாடல்களின் ஓலைச்சுவடி, செப்புப்பட்டயத்தில் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
விநாயகருக்கென தமிழகத்தில் எழுப்பப்பட்டு தேர், கொடிமரம் அமைத்து திருவிழா காணும் கோயில்களில் இது ஒரு முக்கியமான கோயிலாகும்.
💥பிரதோஷ காலத்தில் வழிபாடுகள் சிவாலயங்களில் சிறப்பாக நடைபெறும். வைணவ ஆலயங்களில் நரசிம்ம மூர்த்திக்கு விசேஷ வழிபாடுகள் உண்டு. ஆனால்
விநாயகருக்குப் பிரதோஷ வழிபாடுகள் விசேஷமாக நடைபெறும் தலம்
108 அல்லது 1008 தேங்காய்கள் சாற்றி வழிபடுவது இவ்வாலயத்தின் சிறப்புக்களில் ஒன்றாகும்
ஆலய அமைப்பு🛕
மன்னர் காலத்திற்குப் பின் காளஹஸ்தீஸ்வரர், கல்யாணி அம்மனுக்கு தனிச்சன்னதிகள் அமைக்கப்பட்டு மண்டபம் கட்டப்பட்டது. பின் முருகன், வள்ளி, தெய்வானை சன்னதி கட்டப்பட்டது. பலரது உதவிகளால் விரிவாக்கப்பட்டு கோவில் இன்று ஐந்துநிலை ராஜகோபுரத்துடன் காட்சி தருகிறது. மண்டபத்தூணில் உள்ள ஆஞ்சநேயர் உருவம் சிறப்பு.
நுழைவாயிலைக் கடந்தால் கொடிமரம், மூஷிக வாகனம், மண்டபத்தில் சில படிகள் ஏறினால் கருவறைக்கு வடக்கில், தனிச் சந்நிதியில் நின்ற கோலத்தில் தெற்கு நோக்கி அருள்கிறார் பஞ்சமுக விநாயகர். அவரை வணங்கிப் பணிந்து மகா மண்டபத்துக்குள் நுழைந்தால், ஆயிரத்தெண் விநாயகர் தரிசனம்.
மூலவர் சந்நிதியின் வலப்புறம் நடராஜரும் இடப்புறம் முருகனும் அருள்கிறார்கள். அதேபோல், காள ஹஸ்தீஸ்வரர், கல்யாண சுந்தரி அம்பிகை ஆகியோரும் தனித்தனிச் சந்நிதிகளில் அருள்கிறார்கள்.
பஞ்சமுக நர்த்தன விநாயகரின் தோற்றம் அற்புதம். கேதுவின் அதிதேவதை விநாயகர் என்பதால் இது கேது பரிகார ஸ்தலமாகவும், காளஹஸ்தீஸ்வரர் கல்யாணி அம்மையுடன் காட்சி தருவதால் இது காலசர்ப்ப தோஷ பரிகார ஸ்தலமாகவும் விளங்குகிறது.
திருவாவடுதுறை மடத்தினர், நாயக்க மன்னர்கள், அவர்கள் வழி வந்தவர்கள், பொதுமக்கள், உபயதாரர்கள் எனப் பலர் இந்த ஆலய வளர்ச்சிக்கு உதவி வருகின்றனர்
ஆலயத்தின் அருகே ஆடுதுறை மடத்தினரின் ஈசான மடம் அமைந்துள்ளது. அவர்களால் திருவிழாக்கள் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றன.
ஆலயத்தில் உள்ள பஞ்சலோகத்தாலான நடராஜர் சிலை கிரீடம், திருவாச்சியுடன் வெகு அழகாக விளங்குகிறது. ஆலயம் ஹிந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
பிரார்த்தணை🛐
வாகன விபத்து, பயண பிரச்சினை, வழக்கு இழுபறி ஆகியவை சுமூகமாக முடிய இந்த விநாயகரை வேண்டினால் நடந்துவிடும் என்று நம்பும் பக்தர்கள் அப்படி நடந்த பிறகு 1008,108 தேங்காய்களை உடைத்து 108 தீபங்களும் ஏற்றி வழிபடுகிறார்கள்.
பக்தர்கள் வேண்டிக்கொண்டு வேண்டுதல் நிறைவேறியதும் சன்னதியில் மணி கொண்டுவந்து கட்டுகின்றனர். 108 அல்லது 1008 தேங்காய் மாலை அணிவித்தும், தீபமேற்றியும் பிரார்த்தனை செய்து கொள்கிறார்கள். சிறப்பு ஹோமங்களும் செய்யப்படுகின்றன. தொழில் சிறக்க, குடும்ப வாழ்வு மேம்பட, திருமணத் தடை நீங்க, வீடு கட்ட, குழந்தை பிறக்க எனப் பல வேண்டுதல்களுடன் மக்கள் வந்து செல்கின்றனர், விநாயகர் மிகுந்த வரப்ரசாதி என்பதால் பக்தர்களின் பிரார்த்தனைகள் நிறைவேற அருள் புரிகிறார்.
பலன்கள்⭐:
அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டாலும், திருமணத்தில் தடை இருந்தாலும், படிப்பில் குறைபாடு இருந்தாலும், வழக்குகளில் இழுபறி இருந்தாலும் மோட்டார் வாகனங்களில் அடிக்கடி விபத்து ஏற்பட்டாலும், பணப்பிரச்னை தீரவும் இங்கு வந்து விநாயகரை வழிபட்டால் வேண்டிய காரியங்கள் சிறப்பாக முடியும் என்பது நம்பிக்கை.
திருவிழா⭐
சித்திரை மாதத்தில் 10 நாட்கள் பிரம்மோற்சவம் சிறப்பாக நடக்கிறது. அமாவாசையன்று தீப வழிபாடு அற்புதக் காட்சி
சித்திரைத் திருவிழாவிழாவின் போது விநாயகருக்குப் பட்டாபிஷேகப் பெருவிழா இங்கே விசேஷமாக நடக்கும். அப்போது ‘கணேச
பஞ்ச ரத்ன கீர்த்தனை’ கொண்ட ஓலைச்சுவடி, செப்புப் பட்டயம் ஆகியவை வைக்கப்பட்டு விசேஷ வழிபாடுகள் நடைபெறும். அன்று மட்டும் ஓலைச்சுவடி - செப்புப் பட்டயத்தை பக்தர்களும் தரிசிக்கலாம்.
சித்திரை 7-ம் திருநாளன்று ஸ்ரீநடராஜ மூர்த்தியுடன் பஞ்சமுக கணபதி திரு வீதி உலா வருவார். 7-ம் நாளன்று விநாயகர் உருக்கு சட்ட சேவை, மாலையில் சிவப்பு சாத்தி நடராஜ பெருமானுக்கு எதிர்சேவை காட்சி வைபவம் நிகழும். 8-ம் நாளன்று காலையில் `வெள்ளை சாத்தி’ அலங்காரம், மாலையில் `பச்சை சாத்தி’ அலங்காரத்தில் அருள்வார். 10-ம் நாளன்று திருத்தேர் உலா நடைபெறும்.
கோயில் திறந்திருக்கும் நேரம்:💥
காலை 6.00 மணி முதல் மதியம் 11.00 மணி வரை
மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை
கோயில் முகவரி:
அருள்மிகு ஆயிரத்தெண் விநாயகர், திருக்கோயில், ஆறுமுகமங்கலம், தூத்துக்குடி மாவட்டம் – 628 802.
🔱🇮🇳
நன்றி
26.04.26 சுப்ராம் தரிசனம்🔱🇮🇳
நன்றி🙏
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#TempleWorshipisTrulyVirtuous🙆🏼🔱
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#BharatisSpiritualZenith🕉️🏔️
#ஏரல் அருகில்
🔱🇮🇳