Monday, March 30, 2026

முசிறி - அருள்மிகு சந்திரமௌலீஸ்வரர் திருக்கோயில்

முசிறி - அருள்மிகு சந்திரமௌலீஸ்வரர் திருக்கோயில்  

முசிறி தொட்டியம் நெடுஞ்சாலையில் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு பர்லாங் தொலைவில் காவிரி ஆற்றின் அருகே உள்ளது.

காவிரி வடகரையில் அமைந்துள்ள ஸ்ரீ கற்பூரவள்ளி சமேத ஸ்ரீ சந்திரமவுலீஸ்வரர் ஆலயம் சந்திரனுடைய சாபத்தினை நீக்கும் பொருட்டு சந்திரனால் பிரதிஷ்டை செய்து வழிபட்ட ஸ்தலம் ஆகும்

மிகவும் பழமையான கோவில் புணரமைப்பு செய்து மிகவும் அழகாக உள்ளது.

இறைவனின் திருநாமம் சந்திரமவுலீஸ்வரர்
இறைவியின் திருநாமம் கற்பூரவல்லி.

சிவபெருமானை சந்திரன் வந்து வழிபட்டமையால், மூலவரை சந்திரமௌலீசுவரர் என்று அழைக்கின்றனர்.

தலவரலாறு.
ஒருமுறை சந்திரன் விநாயகரிடம் சாபம் பெற்றார். சந்திரன் தனது சாபம் நீங்க முசிறியில் அருள்பாலிக்கும் சந்திரமவுலீஸ்வரரை ஆராதித்து, தனது சாபம் நீங்கப்பெற்றார். சந்திரனுக்கு சாபவிமோசனம் தந்ததால் இத்தல இறைவன் 'சந்திரமவுலீஸ்வரர் என அழைக்கப்படுகிறார். அத்துடன் மூன்றாம்பிறை சந்திரனை தனது தலையிலும் சூடியுள்ளார்.

🛕ஆலய அமைப்பு

ஆலயம் கீழ் திசை நோக்கி அமைந்துள்ளது.
கிழக்கு நோக்கிய 3 நிலை ராஜகோபுரம்,
 ராஜகோபுரம் கடந்ததும், உள்ளே நுழைந்ததும் நீண்ட நடைபாதை, அடுத்து வாத்திய மண்டபம், கொலுமண்டபம், உற்சவ மண்டபம் அடுத்து மகாமண்டபம் அமைந்துள்ளது. மகாமண்டபத்தில் ஒரு நீண்ட சுரங்க பாதை இருந்து, பின்னர் அதை அடைத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

முன் மண்டபம் தாண்டி, வீரபத்திரர் சிலை மகாமண்டபத்தில் அமைந்துள்ளது. 
கருவறைக்கு முன்னுள்ள மகாமண்டபத்தில் ஒரு அழகிய பெண் சிலை இறைவனை வணங்குவதைப் போல அமைந்துள்ளது. 

அடுத்துள்ள அர்த்த மண்டபம் நுழைவாயிலில்
இச்சிவாலயத்தில் உய்யக்கொண்டார் மற்றும் ஆட்கொண்டார் ஆகியோர்கள் துவாரபாலகர்களாக உள்ளார்கள். துவார பாலகர்களின் சுதை வடிவ திருமேனிகள் அலங்கரிக்க உள்ளே கருவறையில்
இறைவன் சிவலிங்கத்திருமேனியில் கீழ் திசை நோக்கி அருள்பாலிக்கிறார்.

ஆலய திருச்சுற்றில்நால்வர், விநாயகர், முருகன், வள்ளி , தெய்வானை விசுவநாதர் விசாலாட்சி ஆகியோர் திருமேனிகள் உள்ளன.
தேவக் கோட்டத்தில் பிள்ளையார், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்கை ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.
சுற்றுப் பிரகாரத்தில், நவக்கிரக சன்னதி, சனீசுவரன், பைரவர், நால்வர் சன்னதி, கன்னி விநாயகர், வள்ளி தெய்வானை உடனுறை ஆறுமுகப்பெருமான் மற்றும் காசிவிசுவநாதர் சன்னதிகள் உள்ளன.

வடக்குப்பிரகாரத்தில் கிழக்கு நோக்கி இறைவியின் ஆலயம் தனியாக உள்ளது. அன்னை கற்பூரவல்லி நான்கு கரங்களுடன் நின்றகோலத்தில் அருள்புரிகிறாள். அன்னை மேல் இரு கரங்களில்தாமரை மலரையும், கீழ் இருகரங்களில் அபயவரத ஹஸ்த முத்திரைகளுடன் கீழ் திசைநோக்கி காட்சி தருகிறாள்.

பூசைகள்
ரோகிணி அஸ்தம் திருவோணம் மற்றும் மிதுன ராசி மிதுன லக்ன காரர்கள் வழி விட வேண்டிய சிவ ஸ்தலம் 

மிருகசீரிஷ நட்சத்திரக்காரர்கள் வழிபடவேண்டிய ஆலயம் இது இந்தநட்சத்திரக்காரர்கள் பலன் பெறவும், பரிகாரம் பெறவும் அன்னையை வணங்க வேண்டிய முறை உள்ளது தாமரைப்பூவில் அகல் வைத்து தீபமேற்றி ஆலயத்தை மூன்று முறைவலம் வரவேண்டும். பின்.அந்த அகல் விளக்கை அன்னை சன்னிதியில் வைத்து வாசனை மலர்களால் அன்னையை அர்ச்சனை செய்து வணங்க, நல்லபரிகாரம் பெற முடியும் என்கின்றனர் பக்தர்கள்.

பூசைகள் / விழாக்கள்
பைரவர் சன்னதியில் அஷ்டமி தினத்தில் சிறப்பு பூசைகள் நடைபெறுகின்றன.
பைரவருக்கு பால், தயிர், தேன், இளநீர் மற்றும் வாசனைத் திரவியங்கள் ஆகியவற்றால் அபிசேகங்கள் செய்யப்பட்டு மிளகுசாதம், தயிர் சாதம் படைக்கப்படுகின்றன. வெண்பூசணி மற்றும் தேங்காய் மூடிகளில் வேப்ப எண்ணெய் வைத்து விளக்குகள் போட்டு பக்தர்கள் வழிபடுகின்றனர்.

 பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியில் விசேஷ அபிஷேக ஆராதனைகள்.நடைபெறுகின்றன.

 வைகாசி விசு, ஆனி திருமஞ்சனம், ஆடிபூரம், ஆவணி மூலம், சஷ்டி,கார்த்திகை தீபம் ஆருத்ரா, தை பூசம், மாசிமகம் போன்ற நாட்களில் இறைவன் வீதியுலா வருவதுண்டு.

2005 ல் ஒரு கும்பாபிஷேகம் நடந்துள்ளது. நகர்புறத்தில் ஆலயம் இருப்பதால், ஆலயம் எல்லா பூசைகளுடனும், பொலிவுடனும் உள்ளது.

அனைத்து நாட்களிலும் மிகவும் சௌகரியமாக தரிசனம் செய்யலாம்.

அண்ணாமலையார் ஆலயம். 
மகாமாரியம்மன் ஆலயம்.

பிரதான சாலையில் அண்ணாமலையார் ஆலயம்
சிறியது. பெரியலிங்கம் கிழக்குப் பார்த்து உள்ளது.
கருவரை மண்டபம் பெரியது. அகலமான முன்முண்டம் உள்ளது.  
அண்ணாமலையார் ஆலயம் மிக அருகில் மகாமாரியம்மன் ஆலயமும் உள்ளது. ராஜகோபுரம் மண்டபத்துடன் தனிக் கருவரையில் மகாமாரியம்மன் கிழக்கு நோக்கியுள்ளார்.

பூசைகள், விழாக்கள் உண்டு. அனைத்து ஆலயங்களும் நல்ல பராமரிப்பில் உள்ளன.

 பயணஅனுபவக்குறிப்புகள்🕊️

🌼வாகனங்கள் பிரதான சாலையில் நிறுத்தலாம். ஆலயம் அமைந்துள்ள தெரு குறுகிறது.

நல்ல பூசை வழிபாடுகள் சிறப்பாக நடைபெறும் ஆலயம். தூய்மையாகவும், பராமரிப்புடனும் உள்ளது. சமீபத்தில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளதால் பொலிவுடன் உள்ளது.

#Subbramசுப்ராம்🔱🇮🇳
நன்றி🙏15.02.2026
#சுப்ரம்அருணசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று🛕🛐
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்🇮🇳🔱
#சிவராத்திரியாத்ரா #லால்குடிவட்டம் 15.02.2026

No comments:

Post a Comment

எண்கண் சுப்ரமணிய சுவாமி ஆலயம், பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில்

7.எண்கண் சுப்ரமணிய சுவாமி ஆலயம், பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில் ⛳ இருப்பிடம் திருவாரூர் - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் திருவாரூரில் இருந்து...