Friday, April 17, 2026

சின்ன ஆவுடையார் கோவில்(கொள்ளுக்காடு) ஆத்மநாதசுவாமி ஆலயம்மூலவர்: ஆத்மநாதசுவாமி, யோகாம்பாள் 12.04.26

சின்ன ஆவுடையார் கோவில்
(கொள்ளுக்காடு) ஆத்மநாதசுவாமி ஆலயம்
மூலவர்: ஆத்மநாதசுவாமி, யோகாம்பாள்.
அமைவிடம்⛳
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், அதிராமபட்டினம்-மணமேல்குடி கிழக்கு கடற்கரை சாலையில் (ECR) அமைந்துள்ளது சின்ன ஆவுடையார் கோவில் (கொள்ளுக்காடு) எனும் கிராமம்..

அதிராம்பட்டினத்தில் இருந்து 10 கிலோமீட்டர் தூரத்திலும்   பட்டுக்கோட்டையில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும் இத்தலம் அமைந்துள்ளது.

💥ஆலய சிறப்புகள்
திருப்பெருந்துறையில் யோகாம்பாள் உடனுறை ஆத்மநாதசுவாமி எனும் திரு நாமத்தில் அருள்பாலிக்கும்
சிவபெருமான் ஆலயம். திருப்பெருந்துறை போலவே  கொள்ளுக்காட்டில் உள்ளது
சிறப்பு மிகுந்த சின்ன ஆவுடையார் கோவில்
குறித்து தல ஆராய்ச்சி செய்த உ. வே. சா. அவர்கள் தனது நூலிலும் இந்த இடத்தைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாணிக்கவாசகரால் கட்டப்பட்ட ஆவுடையார்கோயிலின் (திருப்பெருந்துறை) ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க பழமையான சிவன் கோயிலாகும். 
மேலும் தம்பிக்கோட்டை அருகில் உள்ள பரக்கலாக்கோட்டை ஆவூடையர் கோவில் அடுத்து, ராசாமடம் அருகில் உள்ள இந்த சின்ன ஆவுடையார்  சிவத்தலம், பெரிய ஆவுடையார் கோயிலின் சார்புத் தலமாகக் கருதப்படுகிறது. 

இக்கோயில் பல ஆண்டுகளாகப் பராமரிப்பின்றி, சிதிலமடைந்த நிலையில் இருந்து, பின் 28 ஜனவரி 2026 ல் கும்பாபிஷேகப் பணிகள் நடைபெற்றுள்ளது 

தலவரலாறு
மதுரையை ஆண்ட அரிமர்த்தன பாண்டியனிடம் முதன்மை அமைச்சராக இருந்தவர் வாதவூரர். இவர் மன்னனின் ஆணைப்படி குதிரை வாங்குவதற்காக பொற்காசுகளுடன் புறப்பட்டார். அப்படிச் சென்ற அவரை, வழியில் குருந்த மரத்தின் கீழ் அமர்ந்து குரு வடிவிலான இறைவன் ஆட்கொண்டு மாணிக்கவாசகர் ஆக்கிய தலம் திருப்பெருந்துறை. இது புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது. இந்த ஆலயம் ஆவுடையார் கோவில் என்றும், இத்தல இறைவன் ஆத்மநாதசுவாமி என்றும் அழைக்கப்படுகிறார். தன்னிடம் இருந்த பொற்காசுகளைக் கொண்டு, மாணிக்கவாசகரே எழுப்பிய ஆலயம் இது.

குதிரை வாங்கச் சென்ற வாதவூரர் என்னும் மாணிக்கவாசகர், காலம் கடந்தும் மதுரை திரும்பாததால் ஆத்திரமடைந்த அரிமர்த்தன பாண்டியன், தனது தளபதியை அனுப்பி பார்த்து வரச் சொன்னான். மன்னன் ஆள் அனுப்பியதை அறிந்த மாணிக்கவாசகர், ‘குதிரை வாங்க கொடுத்த பணம் கோவில் கட்ட செலவாகி விட்டதே. இப்போது என்ன செய்வது’ என்று நினைத்தவர் இறைவனிடம் தன்னுடைய நிலையை சொல்லி இறைஞ்சினார்.

இதையடுத்து இறைவன் ஒரு ஆவணி மூல நட்சத்திர நாளில் நரிகள் அனைத்தையும் பரி (குதிரை)களாக்கினார். அந்த இடம் இன்றும் நரிக்குடி என்று வழங்கப்படுகிறது. நரிகளாக மாறிய பரிகளுக்கு மாணிக்கவாசகர் கொள்ளு வாங்கிக் கொடுத்த இடம் ‘கொள்ளுக்காடு’ என்று அழைக்கப்படுகிறது. இங்கு தான் திருப்பெருந்துறை பெரிய ஆவுடையார் கோவில் போன்று, சிறிய ஆவுடையார் கோவில் அமைந்திருக்கிறது.

ஆலய அமைப்பு🛕
திருப்பெருந்துறையைப் போலவே இத்தல இறைவனின் பெயரும் ஆத்மநாதர் தான். இறைவியின் திருநாமமும், யோகாம்பாள் என்பதே ஆகும். கொள்ளுக்காடு தலத்தில் ஆத்மநாதர் சுயம்புலிங்கமாக காட்சியளிக்கிறார்.
சுமார் 1000 ஆண்டுகள் பழமையான ஆலயம்
6ம் நூற்றாண்டில் சோழரும் 7ம் நூற்றாண்டில் பாண்டியரும் ஆலயம் பராமரிக்க உதவிய செய்திகள் கல்வெட்டுகளில் உள்ளன.

மணிவாசகர் அக்னி நதியின் தென்புறம் உள்ள இந்த ஆலயத்தை வழிபட்டார் என்று தகவல் குறிப்பு உள்ளது

இந்த பழமையான ஆலயம்  முற்றிலும் சிதைந்து போன நிலையில்   பெரும் முயற்சி செய்து தற்போது முழு ஆலயமும் புதியதாக எழுப்பி பொலிவுடன் உள்ளது. 28.1.2026ல் குடமுழுக்கு செய்யப்பெற்றுள்ளது

கிழக்கு நோக்கிய ஆலயம் முன்புறம் தென் பகுதியில் தனி வினாயகர் சன்னதி  உள்ளது.
அடுத்து, கிழக்கு நோக்கிய 3 நிலை ராஜகோபுரம் கடந்தால், பிரகாரத்தில்  நந்தி தனி மன்டபத்தில் சுவாமி நோக்கி உள்ளார். நீண்ட முன்மண்டபம் சுவாமி அம்பாள்  இரண்டு கருவரைகளையும் இணைத்துள்ளது.முன் மண்டபத்தில் வடதுபுறமாக தென்முகம் நோக்கி யோகாம்பாளுக்கு தனி கருவரை மற்றும் கிழக்கு நோக்கிய கருவரையில் சுவாமி உள்ளனர். ஆலயத்தில் கர்ப்பக்கிரகம், அர்த்த மண்டபம், முன் மண்டபம் ஆகியவற்றுடன் உள்ளன.
சுவாமி அம்பாள் கருவரை முன் துவார பாலகர்கள் உள்ளனர். சுவாமி கருவரை முன்பு இருபுறமும் சிறிய அனுங்கை விநாயகர் மற்றும் தண்டபாணி அமைத்துள்ளனர்.

ஆலய தென்புறம் கோஷ்ட்டத்தில் பெருமாள்  மற்றும் யோகதட்சினாமூர்த்தி முன் மன்டபத்துடன் உள்ளார்

பிரகாரத்தில்தென்மேற்கில் தனி  சன்னதியில் இரண்டு விநாயகர்கள் உள்ளனர்.
மற்றும் வட புறம் வள்ளி-தெய்வானையுடன் சுப்பிரமணியரும் அருள்பாலிக்கின்றனர். 
மேலும், கோஷ்ட்டத்தில் லிங்கோத்பவர்   பிரும்மா, துர்க்கை தனி சண்டிகேஸ்வரர் உள்ளனர்.

வடக்கு பிரகாரத்தில் கிழக்கு நோக்கிய தனி சன்னதியில் குருந்தமரமும், அதன் கீழே மாணிக்கவாசகர் உபதேசம் பெறும் காட்சியும் அற்புதமாக அமைக்கப்பட்டுள்ளது.

கிழக்குப்புறத்தில் பைரவர் சூரியன் மற்றும் மேற்கு நோக்கி தனி சனீஸ்வரர் அமைக்கப்பட்டுள்ளது.

ஆலயம் சமீபத்தில் புனரமைப்பு செய்துள்ளதால் மிகவும் பொலிவுடன் உள்ளது. திருக்கோவிலின் எதிர் புறம் தீர்த்தக்குளம் ஒன்றும் உள்ளது. 

இங்கு கார்த்திகை சோமவார விழா சிறப்பாக நடைபெறும்.

பயணஅனுபவக்குறிப்புகள் 🕊️

ECR சாலையில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் உள்ளது. ஆலய வளாக முன்புறம் வாகனங்கள் நிறுத்த வசதி உள்ளது.
அருகில் பெரிய கடைகள் ஏதும் இல்லை.
சிற்றூர் என்பதால் நெருக்கடிகள் இல்லை  அமைதியான இடமாக உள்ளது

12.04.2026 சுப்ராம்🔱🇮🇳
நன்றி🙏
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#TempleWorshipisTrulyVirtuous🙆🏼🔱
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#BharatisSpiritualZenith🕉️🏔️,
#ECRதலங்கள் - #பேராவூரணிஅருகில்

ஆத்தாளூர் ஸ்ரீ பிரகதாம்பாள் சமேத ஸ்ரீதிருக்காளநாதர் ஆலயம் 12.04.26

ஆத்தாளூர் ஸ்ரீ பிரகதாம்பாள் சமேத ஸ்ரீதிருக்காளநாதர் ஆலயம்

பேராவூரணி நகருக்கு கிழக்கில் சுமார் 2 கி.மி. தூரத்தில் உள்ள ஆத்தாளூர் என்ற ஊரில் உள்ள பிரபலமான காளியம்மன் ஆலயத்துடன் இணைந்த ஆலயம் 

ஆலய அமைப்பு🛕
கிழக்குப்பார்த்த ஆலய அமைப்பு இராஐகோபுரம் கிடையாது. சுற்றுச்சுவர் உள்ளது.
உள்ளே நந்தி மன்டபத்தில் ஆலயம் நோக்கியுள்ளார். முன்மண்டப முகவாசல் மேல் பகுதியில் காட்சி நாயனார் சுதை சிற்பம் உள்ளது. 
சுவாமி திருக்காளநாதர் கிழக்கு நோக்கி உள்ளார். கருவரை அர்த்த மண்டபம் உள் மண்டபம் முன் மண்டபத்துடன் உள்ளது.
தெற்கு நோக்கிய தனி கருவரையில் ஸ்ரீ பிரகன்நாயகி உள்ளார்

முன்மன்டபத்தின் தென்புறம் உள்ள வாசல் வழியாக ஆலய பிரகாரம் செல்லலாம் 
தென் பகுதி கோஷ்ட்டத்தில் சிறிய அழகிய நர்த்தன விநாயகர் சிற்பமாக உள்ளார்.
தட்சினாமூர்த்திக்கு முன் முகப்பு மாடம் அமைக்கப்பட்டுள்ளது.

தனிவிநாயகர் கன்னி மூலையில், மேற்கு கோஷ்ட்டத்தில் லிங்கோத்பவர், வடக்கில் பிரம்மர் துர்க்கை அமைக்கப்பட்டுள்ளது

வடமேற்கில் வள்ளி தெய்வாணையுடன் முருகர் தனி சன்னதி மற்றும் மகாலட்சுமி உள்ளனர்
கிழக்கில் பைரவர், மற்றும் நவகிரகங்கள் மண்டபத்துடன் அமைந்துள்ளது.
வரிசையாக சில நாகர்கள் ஆலயம் உள்ளே வைத்துள்ளனர்

பயணஅனுபவக்குறிப்புகள் 🕊️

ஆத்தாளூரில் உள்ள புகழ்பெற்ற காளியம்மன் ஆலயம் முன்புறம் ஒரு பெரிய குளம் உள்ளது. கிழக்குப்பகுதியில் இந்த சிவன் ஆலயம் உள்ளது. இரண்டுக்கும் ஒரே குருக்கள் ஆலயம் தூய்மையுடன் பராமரிப்பில் உள்ளது. 
வாகனங்கள் நிறுத்த வசதி உள்ளது.
அருகில் பெரிய கடைகள் ஏதும் இல்லை.
சிற்றூர் என்பதால் நெருக்கடிகள் இல்லை பெரியவளாகம் மரங்கள் உள்ளது. அமைதியான இடமாக உள்ளது

12.04.2026 சுப்ராம்🔱🇮🇳
நன்றி🙏
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#TempleWorshipisTrulyVirtuous🙆🏼🔱
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#BharatisSpiritualZenith🕉️🏔️,
#ECRதலங்கள் - #பேராவூரணிஅருகில்

பேராவூரணி - முடப்புளிக்காடு - ஏந்தல் நீலகண்டப் பிள்ளையார் கோயில் 12.04.26

பேராவூரணி - முடப்புளிக்காடு - ஏந்தல் நீலகண்டப் பிள்ளையார் கோயில் 

தஞ்சாவூர் மாவட்டத்தில் பேராவூரணி - முடப்புளிக்காடு - ஏந்தல் என்ற இடத்தில் உள்ளது புகழ் பெற்ற விநாயகர் கோயிலாகும்.

அமைவிடம்⛳
இக்கோயில் பேராவூரணி-அறந்தாங்கிசாலையில் முடப்புளிக்காடு ஏந்தல் என்னுமிடத்தில் உள்ளது. பேராவூரணியிலிருந்து 1/2 கி.மீ. தொலைவில் உள்ளது.

இறைவன்
இக்கோயிலின் மூலவர் நீலகண்டப் பிள்ளையார் ஆவார்.ஆனால் விழாக்கள் வள்ளி தெய்வானையுடன் உள்ள முருகனுக்கு நடத்தப்பெறுகின்றன.

தலவரலாறு📚
தஞ்சாவூரை ஆண்ட துளசி மகாராஜா தன் அமைச்சருடன் ஆவுடையார் கோயிலை நோக்கிச் சென்றார். நீரழிவு நோயினால் அவதிப்பட்டுக்கொண்டிருந்த அவருடைய அமைச்சருக்கு மருந்து காணச் சென்றார். அப்போது நீலகண்டப் பிள்ளையாரை பலர் வணங்குவதைக் கண்டார். அக்கோயிலின் திருநீற்றினை தரித்தவுடன் அமைச்சருக்கு நோய் நீங்கியது. மன்னர் மகிழ்ச்சியடைந்து கோயிலை விரிவாக்கம் செய்தார். பேராவூரணியை அடுத்துள்ள தென்னங்கொல்லையில் ஒரு வேலி நிலத்தையும் மன்னர் அளித்துள்ளார்.

விழாக்கள்
எந்த விநாயகர் கோயிலிலும் நடைபெறாத தீமிதித் திருவிழா இங்கு நடைபெறுகிறது. சித்திரை மாதத்தில் நடைபெறுகின்ற காவடித்திருவிழாவின்போது பால் குடம், பால் காவடி, கரும்பு கட்டுதல் போன்றவை நடைபெறுகின்றன. அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் மார்கழி மாதத்தில் தினமும் காலையில் நந்திக்கு தண்ணீர் எடுத்து ஊற்றி நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

பயணஅனுபக்குறிப்புகள் 🕊️

பேராவூரணி பிரதான சாலையில் அமைந்துள்ள ஆலயம் முன்புறம் பெரிய மண்டபம் அமைந்துள்ளது.
முன்மன்டபத்தில் கொடிமரம் அமைக்கப்பட்டுள்ளது.
அதை அடுத்து உயரமான கருவரை அர்த்த மண்டபத்துடன் அமைந்துள்ளது. கிழக்குநோக்கிய கருவரையில் அழகுடன் நீலகண்ட பிள்ளையார் அருள்தரும் கோலத்தில் உள்ளார் உள் சுற்றுப் பிரகரம் உள்ளது. 
வடக்குப்புறத்தில் பெரிய குளம் ஒன்று பாதுகாப்புடன் நீராட வசதியுடன் அமைந்துள்ளது. நல்ல பராமரிப்பில் உள்ளது
குளத்தின் மேல் கரையில் பொங்கல் வைத்து சமைக்க தகுந்த ஏற்பாடுகள் உள்ளன. ஏராளமான பக்தர்கள் பொங்கல் செய்து வழிபட்டு செல்கிறார்கள் குளம் சுற்றிலும் ஆலய நிர்வாகக்கட்டுப்பாடுடன் பராமரிக்கப்பட்டுவருகின்றன.

பிரதான சாலையிலேயே ஆலயம் உள்ளதால் வாகனங்கள் நிறுத்த தனி இடம் இல்லை பரபரப்பாக போக்குவரத்தும் உள்ளன.

ஆலயபிள்ளையார் மிகவும் சக்திவாய்ந்தவர் என்பதால், பக்தர்கள் பெருவெள்ளமாக வந்து தரிசித்து அருள்பெற்று செல்கிறார்கள்.

12.04.2026 சுப்ராம்🔱🇮🇳
நன்றி🙏
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#TempleWorshipisTrulyVirtuous🙆🏼🔱
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#BharatisSpiritualZenith🕉️🏔️,
#ECRதலங்கள் - #பேராவூரணிஅருகில்



எட்டியத்தளி அகிலாண்டேஸ்வரி சமேத அகஸ்தீஸ்வரர் கோயில் 12.04.26

எட்டியத்தளி அகிலாண்டேஸ்வரி சமேத அகஸ்தீஸ்வரர் கோயில்

அமைவிடம்⛳
 தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி நகரத்திலிருந்து பேராவூரணி சாலையில் சுமார் 8 கி.மீ தொலைவில் உள்ளது, டவுன் பஸ் எண் 21 எட்டியத்தளியில் நிற்கிறது.
எட்டியத்தலியில் உள்ள கோயில் எட்டியத்தலி மெயின் ரோடு பேருந்து நிறுத்தத்திலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ளது. 
அறந்தாங்கி பேருந்து நிலையத்திலிருந்து 8 கிமீ தொலைவிலும், பேராவூரணி பேருந்து நிலையத்திலிருந்து 18 கிமீ தொலைவிலும், ஆவுடையார்கோயிலில் இருந்து 22 கிமீ தொலைவிலும், காரைக்குடியிலிருந்து 41 கிமீ தொலைவிலும் எட்டியதலி உள்ளது.
அருகிலுள்ள ரயில் நிலையம் அரந்தாங்கி.

📚தலபுராணம்
புராணத்தின்படி, அகத்தியர் காசியில் சிவனை வழிபட்ட பிறகு, பொதிகை மலைக்குச் செல்லும் வழியில் சந்தியாவந்தனம் செய்வதற்காக இங்கு தங்கினார். அவர் எட்டியத்தாலியில் உள்ள இந்த சுயம்பு சிவலிங்கத்தை வழிபட்டு இரவில் தங்கினார். அஷ்டம சனியால் பாதிக்கப்பட்டிருந்த தொண்டை மண்டல மன்னன் கலிங்கராயன் இந்த இடத்தைக் கடந்து செல்கிறான். அஷ்டம சனி தோஷத்திலிருந்து விடுபடுவதற்கான வழியை மன்னன் அகத்தியரிடம் கேட்டபோது, ​​அகத்தியர் பதிலுக்கு சுயம்பு லிங்கத்திற்கு ஒரு கோயில் கட்டுமாறு மன்னனிடம் கூறினார். மேலும், சிவனிடமிருந்து அதிக சக்தியைப் பெறுவதற்காக நவகிரகங்களை ஈசான்ய திசையில் நிறுவுமாறும் மன்னனிடம் கூறினார். மேலும், நவகிரகங்கள் அகிலாண்டேஸ்வரி அம்பாளின் சன்னதிக்கு முன்னால் அமைந்துள்ளன, நவகிரக நாயகி என்றும் அழைக்கப்படும் அம்பாளிடமிருந்தும் அவர் அதிக சக்தியைப் பெறுகிறார். அவ்வாறு
இக்கோவில் தொண்டை நாட்டு மன்னன் காளிங்கராயனால் கட்டப்பட்டது. 

நவகிரகங்கள் குழுவில் ராகு மற்றும் கேது இருவரின் நிலைகளும் ஒன்றுக்கொன்று மாற்றப்படுகிறது. எனவே இது சனி, ராகு மற்றும் கேது தோஷ பரிகார ஸ்தலம். மேலும் இது களத்திர தோஷ நிவர்த்தி தலமாகும்.

💥தல சிறப்புகள்
சனி மற்றும் ராகு தோஷத்தை ஒரு சேர நீக்கும் தலம்

இத்திருத்தலத்தில் சனி பகவானின் சக்தி இங்கு அதிகம். பொதுவாக, கோயில்களில் சனீஸ்வரருக்கு இடது புறம் ராகுவும், வலது புறம் கேதுவும் இருப்பார்கள். ஆனால் இந்த ஆலயத்தில் சனி பகவானின் வலதுபுறம் ராகு பகவானும், இடதுபுறம் கேது பகவானும் உள்ளனர். அதனால் ராகுவின் பார்வை சனி பகவானின் மீது படுகிறது. எனவே, இங்கு வந்து வழிபட்டால், சனி தோஷமும், ராகு தோஷமும் நீங்குகிறதாம். மேலும் ஜாதகத்தில் களத்தரன், செவ்வாய் தோஷமுள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டால் குறைகள் நீங்கி திருமண பாக்கியம் கிட்டும்.

ஆலய அமைப்பு🛕
இந்தக் கோவிலின் சில முக்கிய அம்சங்கள்...
இக்கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது, இதன் நுழைவாயிலில் ராஜகோபுர அடித்தளம் மட்டுமே உள்ளது. நுழைவாயிலின் மேல் பகுதியில், ரிஷப ரூடராகக் காட்சியளிக்கும் சிவன் மற்றும் பார்வதியின் சுதைச் சிற்பங்கள் உள்ளன. முக மண்டபத்தில் பலிபீடமும் ரிஷபமும் உள்ளன. கருவறையின் நுழைவாயிலில் துவாரபாலகர்கள் உள்ளனர். மூலவர் சதுர ஆவுடையார் மீது எழுந்தருளியுள்ளார். கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா மற்றும் துர்கை ஆகியோர் உள்ளனர்.

மகா மண்டபத்தில் தெற்கு நோக்கிய தனி சன்னதியில் அம்பாள் எழுந்தருளியுள்ளார். இக்கோயிலில் இரண்டு அம்பாள் சன்னதிகள் உள்ளன. ஒரு அம்பாள் அகிலர என்றும், மற்றொரு அம்பாள் அகிலாண்டேஸ்வரி என்றும் அழைக்கப்படுகிறார். அர்த்த மண்டபத்தில் நால்வர் மற்றும் நடராஜர் சபை அமைந்துள்ளது. மகா மண்டபத்திற்கு முன்புள்ள மண்டபத்தில் நவகிரகங்கள் உள்ளன. ராகுவும் கேதுவும் இடம் மாறி காணப்படுகின்றன. வெளிப் பிரகாரத்தில் விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர், பைரவர், சந்திரன் (சூரியன் என்று தவறாக எழுதப்பட்டுள்ளது)

பெரிய தீர்த்தக் குளம் ஆலயத்தை ஒட்டி அமைந்துள்ளது

கட்டிடக்கலை
இக்கோயில் கருவறை, அந்தரளம், அர்த்த மண்டபம் மற்றும் ஒரு மகா மண்டபம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது . கருவறை வ்ருத குமுதத்துடன் கூடிய பாத பந்த அதிஷ்டானத்தில் உள்ளது. ஸ்தம்ப பஞ்சரங்கள் அந்தரளப் பகுதியில் உள்ளன. பிட்டி வேதிகையில் தொடங்குகிறது. சதுர அடித்தளம் மற்றும் நாக பந்தம், விஷ்ணு காந்த உடல், மாலை தொங்கல், கலசம், குடம், தாமரை இதழ்கள் மண்டி, பலகை, வீர காண்டம் மற்றும் பூ மொட்டு பொத்தியல் ஆகியவற்றுடன் பைலஸ்டர்கள் உள்ளன. பிரஸ்தாரம் தாமரை இதழ்கள் வலபி, வெற்று நாசி கூடுகளுடன் கூடிய கபோதம் மற்றும் சந்திர மண்டபம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. யாழி வரி கபோதம் மேல் உள்ளது. பூமிதேசத்தின் மீது இரண்டு அடுக்கு ஸ்டக்கோ வேசர விமானம் உள்ளது. தாளம் மற்றும் கிரீவ கோஷ்டங்களில் சிவன், தட்சிணாமூர்த்தி, மகா விஷ்ணு (நரசிம்மர்), பிரம்மா ஆகியோர் உள்ளனர். முதல் தளத்தின் மேற்குப் பக்கத்தில் லிங்கோத்பவர் சுதைச்சிற்பம் உள்ளது .

சண்டிகேசுவரர், விநாயகர் மற்றும் முருகன் சன்னதிகள் பகுதியளவு செங்கற்களால் கட்டப்பட்டுள்ளன.

வரலாறு மற்றும் கல்வெட்டுகள்
மூலக் கோயில் முற்பாண்டியர் காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம், பின்னர் மண்டபங்கள் சேர்க்கப்பட்டன. சுவரில் 14 முதல் 16 ஆம் நூற்றாண்டு வரையிலான கல்வெட்டுகள் காணப்படுகின்றன. கல்வெட்டுகளில் ஒன்று ஒரு அறக்கட்டளையையும், சிவனைத் திருவாகதீச்சுரமுடையராகவும் குறிப்பிடுகிறது . 

பூஜைகள் மற்றும் கொண்டாட்டங்கள்
வழக்கமான பூஜைகள் தவிர, பிரதோஷம், மகா சிவராத்திரி, சனிப்பெயர்ச்சி நாள் மற்றும் சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.

ஆலயத்தின் தனிச் சிறப்புகள்
இக்கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்தி, கல்யாண தட்சிணாமூர்த்தி என்று அழைக்கப்படுகிறார். திருமணம் தடைப்பட்டவர்கள் இவரை வழிபட்டால், விரைவில் திருமணம் கைகூடும் என்று கூறப்படுகிறது. இக்கோவில் நவக்கிரகத்தின் அருகில் ஜாதகத்தை வைத்து பூஜை செய்யும் வழக்கம் உள்ளது
மேலும், இக்கோயில் பற்றிய முக்கியத்துவம்:

 1) நவகிரகங்களில், சனி பகவான் அகஸ்தீஸ்வரருக்கும் தேவிக்கும் தெரியும் வகையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். இது எந்தவொரு கோயிலிலும் அரிதான நிகழ்வாகும். 
2)இங்கு அகிலாண்டேஸ்வரி மற்றும் அகிலா என இரண்டு தேவியர் உள்ளனர். 

 3)சனீஸ்வரரின் வலது பக்கத்தில் ராகுவும், இடது பக்கத்தில் கேதுவும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். பொதுவாக அனைத்து நவகிரகக் கோயில்களிலும் ராகு மற்றும் கேதுவின் நிலைகள் தலைகீழாக இருக்கும், அதாவது சனீஸ்வரர் பெருமானின் இடப்புறத்திலும் கேது வலப்புறத்திலும் அமைந்திருக்கும்

3) இக்கோயிலின் மற்றொரு தனித்துவம் என்னவென்றால், நவகிரக நாயகி என்றும் அழைக்கப்படும் அகிலா தேவி, நவகிரகங்களுக்கு அருகில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். இதன் காரணமாக, இங்குள்ள நவகிரகங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன .  

4) மற்ற கோயில்களைப் போலல்லாமல், இங்கு நடராஜர் கல்லால் ஆனவர். பொதுவாக நாம் நடராஜரை உலோகத்தால் ஆன உற்சவமூர்த்தியாகவே காண்கிறோம்.

 5) மூலக்கருவறையில் உள்ள ஆவுடை, நடுவில் செவ்வக வடிவில் சந்திர ஆவுடை என்று அழைக்கப்படுகிறது.

 6) பிரகாரத்தில் உள்ள பெருமாள் சிலை லிங்கோத்பவரை நோக்கியவாறு அமைந்துள்ளது.

 7) சண்டிகேஸ்வரர் பால ரூபத்தில் உள்ளார்.

8) இக்கோயிலின் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம் விநாயகர் ஆவார் – இவர் “பொல்லா பிள்ளையார்” என்றும் அழைக்கப்படுகிறார். பொல்ல பிள்ளையார் என்றால், இந்த சிலை செதுக்கப்படவில்லை, மாறாக சுயம்புவாகத் தானாகத் தோன்றியது என்று பொருள். திருநாரையூரில் இதுபோல ஒன்று மட்டுமே உள்ளது, அடுத்து இந்தக் கோயிலில் உள்ளது.

 9) வாகனத்தில் சனி மட்டுமே உள்ளார்.

 10) கலிங்கராயர் மன்னனின் மனைவியின் அஷ்டமத்து சனி இங்கு வழிபட்டதால் நீங்கியதாக நம்பப்படுகிறது. 

11) அஷ்டமத்து சனியின் தீய விளைவுகள், களத்ர தோஷம் ஆகியவற்றிலிருந்து விடுபடுவதற்கான பிரார்த்தனைகளுக்கு இந்த ஸ்தலம் பெயர் பெற்றது. 

மேலும், கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இது சிறந்ததாகக் கருதப்படுகிறது. 

12) இந்தக் கோயிலிலிருந்து சில அடி தூரத்தில், லட்சுமியை மடியில் வைத்தபடி ஒரு விநாயகர் இருப்பது அரிதான காட்சியாகும்.

கோவில் நேரங்கள்
கோயில் காலை 07.00 மணி முதல் 12.00 மணி வரையிலும், மாலை 17.00 மணி முதல் 20.00 மணி வரையிலும் திறந்திருக்கும்
குறிப்பிட்ட சில மணிநேரங்கள் மட்டுமே திறந்திருக்கும். வருகை தரும் முன் அர்ச்சகரை தொடர்புகொள்வது நல்லது.
🙏நன்றி வலைதளம்

பயணஅனுபவக்குறிப்புகள் 🕊️

ஆலயம் முழுதும் திருப்பணி வேலைகள் நடந்து வருகின்றன. இரண்டு பிரகாரங்கள் கொண்ட ஆலயம் முழுவதும் கற்றளியால் ஆன ஆலயம் இந்து அறநிலையத்துறையின்கீழ் உள்ளது.
ஆலயம் சிற்றூரில் உள்ளது. பெரிய வீடுகள், கடைகள் ஏதும் அருகில் இல்லை. ஆலயம் முன்புறம் வாகனங்கள் நிறுத்திக் கொள்கிறார்கள்.

பூசை விஷேச காலங்கள் அன்றி சாதாரண நாட்களில் முன் தகவல் தந்து செல்வது மிகவும் நல்லது 

புராதான பிரார்த்தணைத் தலமாக விளங்குகிறது.

பெரிய குளம் ஒன்று உள்ளது. அதையும் ஆலய திருப்பனிகளுடன் சீர் செய்து அழகு செய்தால், மிகவும் அழகாக அமைக்கலாம்.

அருகில் பெருமகளூர், விளங்குளம், மருங்கப்பள்ளம் பேராவூரணி சேதுபாவாசத்திரம் முதலிய சிறப்பு தலங்களும் உள்ளன.

12.04.2026 சுப்ராம்🔱🇮🇳
நன்றி🙏
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#TempleWorshipisTrulyVirtuous🙆🏼🔱
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#BharatisSpiritualZenith🕉️🏔️,
#ECRதலங்கள் - #பேராவூரணிஅருகில்

பெருமகளூர் சோமநாதசுவாமி கோயில்ஸ்ரீ சுந்தராம்பாள் சமேத ஸ்ரீ சுயம்பு லிங்க சோமநாத சுவாமி ஆலயம் 12.04.26

பெருமகளூர் சோமநாதசுவாமி கோயில்
ஸ்ரீ சுந்தராம்பாள் சமேத ஸ்ரீ சுயம்பு லிங்க சோமநாத சுவாமி ஆலயம்

அமைவிடம்⛳
இக்கோயில் ECR சாலையில் சேதுபாவா சத்திரம் அடுத்து கட்டுமாவடிக்கு முன்னதாக பிரதான சாலைக்கு மேற்கில் 2 கிமீ தூரத்தில் உள்ளது. புகழ்பெற்ற சிவஸ்தலம் விளாங்குளம் அருகில் உள்ளது.
(2) தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியிலிருந்து தென்கிழக்கே ரெட்டவயல் என்னுமிடத்தின் வழியாக வர வேண்டும் 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

⭐மூலவர் சிறப்பு
தாமரைத்தண்டு லிங்கம்
#பெருமகளூர் #ஸ்ரீசோமநாதர்
அதிபழமை வாய்ந்த மிகவும் அற்புத சக்திகள் வாய்ந்த ஸ்ரீ சோமநாதர் ஆலயம்.
இங்கு அருளாட்சி புரியும் ஸ்ரீசோமநாதரின் சிவலிங்கம் கல்லால் அமையப் பெறவில்லை. தாமரைத் தோண்டினால் ஆன சிவலிங்கம் இது. பாணலிங்கமே தாமரைத் ' தண்டினால் வடிக்கப்பெற்ற இத்தகைய அபூர்வமான சிவலிங்கத்தைப் போல் இப்புவியில் எங்கும் காண இயலாது.
இக்கோயிலில் மூலவர் விடங்க வடிவாக உள்ளார். ’விடங்கன்’ என்றால் சிற்பியால் உளி கொண்டு செதுக்கப்படாத வடிவமாகும். உளிபடாத மூர்த்தியை சுயம்புலிங்க மூர்த்தி என்றழைப்பர். இக்கோயிலில் மூலவராய் உள்ள சோமநாத சுவாமி தாமரைத்தண்டாக இருந்து இறைவனாக மாறியவர் என்பது தொன் நம்பிக்கை.
ஆலய அமைப்பு⛳
முன்பு இருந்த பழமையான ஆலயம் முற்றிலும் புதிய ஆலயமாக பொலிவுடன் தற்போது விளங்குகிறது.
கிழக்கு நோக்கிய ஆலயம் காட்சி கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.
உள்ளே பலி பீடம் அடுத்து சிறிய நந்தி தனி மன்டபத்தில் உள்ளார். 
சுவாமி கிழக்கு நோக்கிய கருவரையிலும் அம்பாள் தெற்கு நோக்கிய கருவரையிலும உள்ளனர். முன்புறம் பெரிய மண்டபம் ஆலயம் இணைக்கப்பட்டுள்ளது.
மண்டபத்தின் இரு பகுதிகளிலும் பழைய ஆலயத்தில் இருந்த சிறிய சுவாமிகளை அமைத்துள்ளனர். 
சுவாமி கருவரை வாசல் முன்பு சிறிய நந்தி மற்றும் இருபுறமும் விநாயகர் தண்டபாணி சிறிய உருவம் வைத்துள்ளனர்.

பிரகாரங்களின் இருபுறமும் Shed போடப்பட்டுள்ளது 
நால்வர் மற்றும் கிழக்குப் பார்த்த தனி விநாயகர் சன்னதியும் உள்ளது 
சுவாமி கருவரை கோஷ்ட்டத்தில் தட்சிணாமூர்த்தி லிங்க மூர்த்தி பிரும்மா, துர்க்கை மற்றும் தனி சன்னதி சண்டிகேஸ்வரர் அமைந்துள்ளனர்.
மேற்கு பிரகாரத்தில் தனி மண்டபத்தில் நந்தியுடன் பெரியலிங்கம் ஒன்றும், அம்பாள் ஒன்றும் உள்ளது. பழைய ஆலயத்தில் இருந்து எடுக்கப்பட்டு தற்போது இங்கு வைத்திருக்க வேண்டும்.
வடமேற்கில் முருகன் வள்ளி தெய்வானையுடன் தனி சன்னதியில் உள்ளார். 
வடக்குபிரகாரத்தில் சுவாமி உற்சவ வாகனங்கள் வைக்கப்பட்டுள்ளது
வைக்கப்பட்டு உள்ளன.
வடகிழக்கில் கிழக்கு நோக்கி தனி மகாலெட்சுமி சன்னதியும் முன்புறம் வன்னி மரமும் அமைக்கப்பட்டுள்ளது.
தெற்கு நோக்கி சிறிய சனீஸ்வரர் துணையுடன் தனி சன்னதி அமைத்துள்ளனர்.
நவகிரகங்கள் தனி மண்டபம் மற்றும் பைரவர், சூரியன் உள்ளனர்.
புராதான தலம் புனரமைக்கப்பட்டு விட்டது

கல்வெட்டு
இக்கோயிலில், தஞ்சாவூரை ஆட்சி செய்த மராட்டிய மன்னரான பிரதாபசிம்மன் காலத்தில் கொடை அளித்த செய்தியைக் கொண்ட மராத்திய மொழி மற்றும் மோடி எழுத்தில் அமைந்த கல்வெட்டு அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது.

மற்றொரு சிறப்பு
இக்கோயிலின் தென் பிரகாரத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தென்னங்கன்றை பயிரிட நட்டுவைத்தனர். கன்று வளரத்தொடங்கியது. பின்னர், சில மாதங்களில் அதே இடத்தில் இன்னொரு கன்று பூமிக்கு மேல் துளிர்த்து வளரத் தொடங்கியது. சில மாதங்கள் கடந்ததும் மேலும் ஒரு தென்னங்கன்று அதே இடத்தில் வளரத்தொடங்கியது. இவ்வாறாக அங்கு ஒரே இடத்தில் ஐந்து தென்னை மரங்கள் ஒரே இடத்தில் வளர்கின்றன.
கோயில் வளாகத்தின் பின்புறம் ஒரு விநாயகர் கோயிலும், பிடாரி கோயிலும் உள்ளன.

#பயணஅனுபக்குறிப்புகள் 🕊️
#சுப்ராம்🔱🇮🇳
ஆலயம் பராமரிப்பில் உள்ளது. எப்போதும் திறந்து இருக்கும் என்று கூறுகிறார்கள்

ஆலயம் முன்புறம் வாகனங்கள் நிறுத்தலாம். 
பெரிய குளம் ஒன்று உள்ளது.
மிகப்பழமையான புகழ்பெற்ற ஆலயம் புனரமைக்கப்பட்டு வழிபாட்டில் உள்ளது
பூசை காலங்களில் மட்டுமின்றி சாதாரன நாட்களில் எப்போதும் தரிசிக்கலாம்

மிகச்சிறிய சிற்றூர் அதிக கடைகள் வீடுகள் ஆலயம் அருகில் ஏதும் இல்லை.

12.04.2026 சுப்ராம்🔱🇮🇳
நன்றி🙏
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#TempleWorshipisTrulyVirtuous🙆🏼🔱
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#BharatisSpiritualZenith🕉️🏔️,
#ECRதலங்கள் - #பேராவூரணிஅருகில்

விளங்குளம் அட்சயபுரீசுவரர் கோயில் 12.04.26

விளங்குளம் அட்சயபுரீசுவரர் கோயில்

விளங்குளம் அட்சயபுரீசுவரர் கோயில் என்பது தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.

அமைவிடம் ⛳
இக்கோயில் ECR சாலையில் சேதுபாவா சத்திரம் அடுத்து கட்டுமாவடிக்குமுன்னதாக பிரதான சாலைக்கு மேற்கில் 2 கிமீ தூரத்தில் உள்ளது. 
பேராவூரணிக்கு தென் கிழக்கில் 12 கி. மீ. தொலைவில் உள்ளது. 

💥ஆலய சிறப்பு
விளா மரங்கள் அதிகம் காணப்பட்டதால் இவ்வூர் விளாங்குளம் என்றழைக்கப்படுகிறது.
இறைவன், இறைவி
திருவிளாமுடைய தம்பிரான் என்றும் அட்சயபுரீசுவரர் என்றும் இறைவன் அழைக்கப்படுகிறார். குறையாத செல்வத்தை அருளச் செய்கின்ற இறைவனோடு மென்மேலும் பெருக வைக்கின்ற அபிவிருத்திநாயகி என்ற பெயரில் இறைவி உள்ளார்

📚தல வரலாறு
சூரியனின் இரு மகன்களான சனீச்சுரனுக்கும், எமதருமனுக்கும் இடையே ஏற்பட்ட பகையின் காரணமாக சனீசுவரனை எமன் அடிக்கவே, எமனின் காலில் ஊனம் ஏற்பட்டது. இதனால் சனீசுவரன் மனித உருவெடுத்து பிச்சையெடுக்கும் நிலை ஏற்பட்டது. அப்போது இப்பகுதியைக் கடந்து சென்றார். ஒரு விளாமரத்தின் வேர் இடறியது. அப்போது ஒரு பள்ளத்தில் விழுந்தார். அவர் விழுந்த நாள் சித்திரை வளர்பிறை, பூசம் நட்சத்திரம், சனிக்கிழமை அனைத்தும் ஒன்று சேர்ந்த நாளாக அமைந்தது. சனீசுவரன் விழுந்த பள்ளம் பூசஞானவாவி என்னும் புனித தீர்த்தமானது. இறைவன் அருளால் கால் ஊனம் நீங்கியது.

ஆலய அமைப்பு:🛕
கிழக்கு நோக்கிய ஆலயம்
மூன்று நிலை ராஜகோபுரம் கடந்து உள்ளே நந்தி தனி மன்டபத்தில் ஆலயம் நோக்கியுள்ளார்.
சுவாமி அட்சயபுரீஸ்வரர், அர்த்தமண்டபம் உள்மன்டபம் மற்றும் கிழக்குநோக்கிய கருவரையில் அருள் பாலிக்கிறார்.
அம்பாள் அபிவிருத்தி நாயகி வெளி மண்டபத்தில் தனி கருவரையுடன் தெற்குப்பார்த்த சன்னதியில் உள்ளார்.
மிகவும் பழமையான கற்றளி அமைப்பில் ஆலயம் உள்ளது. 

ஏகப்பிரகாரம் கோஷ்ட்டத்தில் நர்த்தன விநாயகர் தட்சினாமூர்த்தி உள்ளனர்

கன்னிமூலையில் தனி விநாயகர் சிற்றாலயம் மேற்கு கோஷ்ட்டத்தில் லிங்கோத்பவர் 
வள்ளி தெய்வாணையுடன் முருகர் தனி சிற்றாலயம் வடமேற்கில் 
வடக்கு கோஷ்ட்டத்தில் பிரும்மா, துர்க்கை மற்றும் தனி சண்டிகேஸ்வரர் சன்னதியும் உள்ளன.

வடகிழக்கு மூலையில் பைரவர் ஸூரியன் சன்னதிகள் உள்ளன.

சனிபகவான் தனது துணைவியர் இருவருடனும் தெற்கு நோக்கிய அமைப்பில் தனி சிற்றாலயமாக உள்ளது இவ்வாலயத்தின் சிறப்பு  
மகாலெட்சுமி ஆலய முன் பகுதியில் வைத்து உள்ளனர்
வண்ணி மரம்தென்கிழக்கில் அமைந்துள்ளது.
தென் பிரகாரத்தின் அம்மன் நேர் எதிர் ஞானவாவி தீர்த்த குளம் செல்ல வாயில் உள்ளது.
தீர்த்தம் குளம் மிகவும் புனிதமானது சனி கீர்த்தி பெற்றதாக ஐதீகம். 
இக்குளம் ஆலயத்தின் தென்பகுதியில் உள்ளது.

திருவிழாக்கள்
அட்சய திருதியை இக்கோயிலில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பூச நட்சத்திர நாள்கள் சிறப்பு பெற்ற நாளாக இக்கோயிலில் அமைகின்றன.

#பயணஅனுபவக்குறிப்புகள் 🕊️
#சுப்ராம்🔱🇮🇳
ஆலயம் பராமரிப்பில் உள்ளது. சனிக்கிழமை மற்றும் விஷேச நாட்களில் பக்தர்கள் வருகை மிகவும் அதிகம் 
ஆலயம் முன்புறம் நிறைய இடம் உள்ளது வாகனங்கள் நிறுத்தலாம். 
குளமும் சுற்றி மரங்களும் உள்ளதால் குளுமையாக உள்ளது.
மிகப்பழமையான புகழ்பெற்ற ஆலயம் புனரமைக்கப்பட்டு வழிபாட்டில் உள்ளது
பூசை காலங்களில் அன்றி சாதாரன நாட்களில் முன் தகவல் கொடுத்து ஆலயம் தரிசிக்கலாம்.
கிராமத்தின் தனி பகுதியில் இருப்பதால் அருகில் வீடுகள், கடைகள் எதுவும் கிடையாது.

தென் தமிழகத்தின் சிறப்பு வாய்ந்த பூச நட்சத்திர பரிகார தலமாக மிகவும் பிரபலமாக விளங்குகிறது இவ்வாலயம் 

12.04.2026 சுப்ராம்🔱🇮🇳
நன்றி🙏
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#TempleWorshipisTrulyVirtuous🙆🏼🔱
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#BharatisSpiritualZenith🕉️🏔️,
#ECRதலங்கள் - #பேராவூரணிஅருகில்

மருங்கப்பள்ளம் மருந்தீசுவரர் கோவில்மருந்து கல்வம் மற்றும் குழவியே சிவலிங்கமாக இருக்கும் தலம் 12.04.26

மருங்கப்பள்ளம் மருந்தீசுவரர் கோவில்
மருந்து கல்வம் மற்றும் குழவியே சிவலிங்கமாக இருக்கும் தலம்

அமைவிடம்⛳
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது மருங்கப்பள்ளம். 
ECR சாலையில் சேதுபாவா சத்திரம் வந்து பேராவூரணி சாலையில் வர வேண்டும். குருவிக்கரம்பை என்ற ஊர் அருகில் இந்த தலம் உள்ளது.

🔱சிறப்பு
இத்தலத்து இறைவன் திருநாமம் மருந்தீசுவரர், ஔஷதபுரீசுவரர். இறைவியின் திருநாமம் மருத்துவ நாயகி , பெரியநாயகி. சகல நோய்களையும் இறைவன் குணப்படுத்துவதால் இந்த பெயர் ஏற்பட்டது. இக்கோவில் 1200 ஆண்டுகள் பழமையானது.

📚தல புராணம்
சூரியனுக்கும் உஷா தேவிக்கும் பிறந்த குழந்தைகள் நசத்யா மற்றும் தசரா. அஸ்வினி குமாரர்கள் என்றழைக்கப்படும் இவர்கள், பிரம்மாவின் ஆணைப்படி, தேவலோக மருத்துவர் பதவியை அடைவதற்காக சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்து, அந்த பதவியை அடைந்தார்கள். அவர்கள் முதலில் மூலிகைகளை அரைக்க பயன்படுத்திய, கல்வம் (கல்வம் என்பது கல்லினாலான ஆன முட்டை வடிவமான குழியுள்ள அம்மி) மற்றும் குழவியையே, உலக உயிர்கள் யாவும் ஆரோக்கியமாக வாழும் பொருட்டு சிவலிங்கமாக பிரதிஷ்டைசெய்து, "ஸ்ரீ மருந்தீசுவரர்" என்று திருநாமம் வைத்து வழிபட்டார்கள்.

 மருந்தீசுவரர் லிங்கத்தில், குழவியின் விளிம்பு இருப்பது, நாம் வேறு எந்த தலத்து சிவலிங்கத் திருமேனியிலும் காண முடியாது.
ஆஞ்சநேயப் பெருமான் சஞ்சீவி மலையைப் பெயர்த்து எடுத்து செல்லும்போது மருந்தீஸ்வரர் திருவருளால் அதிலிருந்து ஒர் பெரும் பாறை இவ்வூரில் விழுந்து சிதறியது. விழுந்ததினால் ஏற்பட்ட பள்ளம், மருந்து தீர்த்தம் என்று அழைக்கப்படும் இக்கோவிலின் திருக்குளமானது. பாறையிலிருந்து சிதறிய மூலிகைகள் இவ்வூரெங்கும் மருத்துவ தாவரங்கள் ஆகவும், முக்கிய மூலிகையான பாதிரி தல விருட்சமாகவும் ஆனது. இதனாலையே இவ்வூர் மருந்து + பள்ளம் = மருந்துப்பள்ளம் என பெயர்பெற்றது. இதுவே மருவி மருங்கப்பள்ளம் என் அழைக்கப்படுகிறது. மருந்துபுரி, ஒளஷதபுரி என்றும் இத்தலம் புராணங்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

சரபோஜி மன்ணனுக்கு நோய் தீர்த்த தலம் அதனால் இவ்வாலயம் அவரால் கட்டப்பட்டதாக ஆலயவரலாறு

💥ஆலய சிறப்புகள்:
சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்த, திருக்குளத்து நீரே( மருந்து தீர்த்தம்) தீராத நோய் தீர்க்கும் மஹாஔஷத பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகின்றது. 

திங்கட்கிழமைகளில் காலை 6.00 மணிக்கு பால் அபிஷேகம் தொடர்ந்து பூசை மிகவும் விஷேசம்
மருத்துவத் துறையைச் சார்ந்த அனைவரும் வழிபட வேண்டிய தலம் மருந்தீசுவரர், அனைத்து நோய்களையும் தீர்க்கும் மருத்துவராக விளங்குவதால், சகல துறை வைத்தியர்களும், அறுவை சிகிச்சை நிபுணர்களும், சித்த மருத்துவர்களும், நாட்டு வைத்தியர்களும், மருத்துவத் துறையில் படிப்பவர்களும், மருந்து தயாரிக்கும் நிறுவனங்களும், விற்பனையாளர்களும், செவிலியர்களும் வழிபட வேண்டிய தெய்வமாக திகழ்கிறார். மருத்துவர்கள் தங்களது மருத்துவ சாதனங்களை இறைவன் திருபாதத்தில் வைத்து பூஜை செய்து எடுத்துச்சென்றால் அவர்களது அனைத்து மருத்துவ சிகிச்சைகளும் வெற்றியடையும். உடல்நிலை பாதிக்கபெற்ற அன்பர்கள் தங்களது மருந்துப் பொருட்களை இறைவன் திருவடியில் வைத்து வணங்கி, மருந்துப் பொருட்களை இறைவன் திருபிரசாதமாக உண்ணும்பொழுது வியாதி உடனே நிவர்த்தியாகும்.

அசுவினி, ஆயில்யம் நட்சத்திரக்காரர்களுக்கு நற்பலன் தரும் தலம்
அசுவினி, ஆயில்யம் நட்சத்திரக்காரர்கள் மற்றும் ஞாயிறு, செவ்வாய்க் கிழமையில் பிறந்தவர்கள் வழிபடவண்டிய தலம் இது. பிறந்தநாள், திருமண நாள், ஜன்ம நட்சத்திர நாள், ஆகிய தினங்களில் இங்குள்ள மருந்து தீர்த்தத்தில் நீராடி ஆயுஷ்ய ஹோமம் செய்து கொண்டால் நீண்ட ஆயுளோடு வாழலாம் என்பது ஐதீகம். நோய்கள் நிவர்த்தியாகும்.

ஆலய அமைப்பு🛕
ஆலயம் கிழக்கு நோக்கிய அமைப்பில் உள்ளது. ஆலயம் அருகில் பெரிய தீர்த்தக்குளம் ஒன்றும் உள்ளது. பாதிரி மரம் உள்ளது.
கிழக்கு நோக்கிய 3 நிலை இராஜகோபுரம் கடந்தால் பலிபீடம் நந்தி மண்டபம் அதன் கீழ சுவாமி சன்னதி நோக்கி மன்னர் சிலை உள்ளது.

சுவாமி மருந்தீஸ்வரர் கிழக்கு நோக்கிய கருவரையும் அம்பாள் தெற்கு நோக்கிய கருவரையும் இணைத்து அழகிய முன் மன்டபம் கட்டப்பட்டுள்ளது. முன் மண்டபத்தில் சுவாமி அம்பாள் நடுவில் தென்முகமாக நடராஜர் சன்னதி உள்ளது.
மண்டபமேல் விதானத்தில் ஆலய தலவரலாறு வரையப்பட்ட ஓவியங்கள் 
ஒரு மூலையில் முன்பு இருந்த அம்மன் வைத்துள்ளனர் மண்டபத்தின் ஒரு பகுதி யாக பூசை செய்வதற்கான பகுதியாக அமைத்துள்ளனர்.
ஏகப்பிரகாரம் கோஷ்ட்டத்தில் தட்சினாமூர்த்தி முன் மண்டப அமைப்புடன் உள்ளார். மற்றும் நர்த்தன விநாயகர் உள்ளார்
மேற்கு பிரகாரத்தில் கிழக்கு நோக்கிய தனிசன்னதியில் விநாயகர் மற்றொரு புறம் வள்ளி தெய்வானையுடன் முருகர்
கோஷ்ட்டத்தில் லிங்கோத்பவர்
வடக்கில் பிரும்மா, துர்க்கை தனிசன்னதியுடன், மற்றும் சண்டிகேஸ்வரர் அமைந்துள்ளார்.
வடகிழக்கில் தனி சன்னதியில் 
மகாவிஷ்ணு, காலபைரவர், அனுகிரக சனிஸ்வரர், லெட்சுமி நாராயணர், சூரியன் உள்ளனர்.

ஆலயம் வெளியில் மதில்சுவரில் ஆலய தல வரலாறு சிற்பமாகவும் டிஜிட்டல் போர்டிலும் உள்ளது.

#பயண அனுபவக்குறிப்புகள் 🕊️
#சுப்ராம்🔱🇮🇳
ஆலயம் செல்ல நல்லசாலை வசதி உள்ளது.
ஆலயம் அருகில் வாகனங்கள் நிறுத்தலாம்
பெரியகுளம் ஆலயம் எதிரில் படித்துறையும் உள்ளது. ஆலய வெளிப்பிரகாரம் மிகவும் தூய்மையாக காணப்படுகிறது 
கும்பாபிஷேகம் நடந்து சில வருடங்கள் ஆகிறதால் ஆலயம் முழுவதும் மிகவும் சுத்தமாகவும் மிகவும் அழகாகவும் உள்ளது.

திங்கட்கிழமை விஷேச பூசை,விழா நாட்களில் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள்

ஆலய குருக்கள் மிகவும் அருமையான முறையில் தலவரலாறு, பரிகார பூசை, ஆலய நடைமுறை பூசை , பலன் பெறும் பக்தர்களின் அனுபவங்கள் முதலியவற்றை பொறுமையாகவும் பக்தி சிரத்தையுடனும் எடுத்து உரைத்தது மிகவும் சிறப்பு 

அவசியம் தரிசித்து பலன் பெற வேண்டிய ஆலயம்
12.04.2026 சுப்ராம்🔱🇮🇳
நன்றி🙏
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#TempleWorshipisTrulyVirtuous🙆🏼🔱
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#BharatisSpiritualZenith🕉️🏔️,
#ECRதலங்கள் - #பேராவூரணிஅருகில்


சேதுபாபாவாசத்திரம் ஶ்ரீ ஜெயவீர ஆஞ்சனேயர் ஆலயம் 12.4.2026

சேதுபாபாவாசத்திரம் ஶ்ரீ ஜெயவீர ஆஞ்சனேயர் ஆலயம்

சேதுபாவா சத்திரத்தில் உள்ள விசாலாட்சி சமேத ஸ்ரீகாசி விஸ்வநாதர் ஆலயம் அருகில் மிகப்பழமையான பெரிய வளாகத்துடன் உள்ள அன்ன சத்திரம் வேதணையான நிலையில் உள்ளது. கருவரையில் ஜெயவீர ஆஞ்சனேயருடன் ஆலயம் ஒன்றும் சிதைந்து சிர் செய்ய வேண்டிய நிலையில் காணப்படுகிறது.

இது பெரிய சத்திரமாக இருந்ததாகவும், இதன் காலத்தில் மிகச்சிறப்பாக பராமரிக்கப்பட்டு பத்தர்கள் தங்கி செல்ல வசதியாக அன்னதான சத்திரமாக இருந்ததாகவும் வரலாறு. 20 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் தானமாக பிரதாப் சிம்ம மகராஜா கொடுத்ததாகவும், அதைக் கொண்டு ஸ்ரீ சேதுபாவா சுவாமிகள் ராமேஸ்வரம் செல்லும் பக்தர்கள் தங்கி செல்ல நித்ய அன்னதானம் செய்து வந்த வரலாறும், உள்ளது. வருமாணம் கொண்டு, அன்னதானமும், ஆலய பராமரிப்பும், ஆலய விழாக்களும் நடைபெற்று வந்ததாகவும் குறிப்புகள் உள்ளன. 1739 ம் ஆண்டு முதல் 1949 வரை சுற்றிலும் உள்ள பல்வேறு கிராமங்களிலிருந்தும் பிற இடங்களில் இருந்தும் நெல் வருவாய் பெற்று சீரோடு விளங்கியதற்கு குறிப்புகள், இதற்கான ஆவனங்கள் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் இருக்கின்றன என்ற குறிப்புகள் ஆலயத்தில் காணப்பெறுகிறது.

பெரிய வளாகம் நான்கு புறமும் மண்டபம் நடுவில் சிறிய கருவரை கிழக்கு நோக்கியது அதில் வீர ஆஞ்சநேயர் உள்ளார்

ஆலயமுன்புறமும் மன்டபம் கலை நுட்பத்துடன் வாசல் அமைப்புடன் அமைந்த தூன்கள் சிதைவுற்று உள்ளது.

12.04.2026
நன்றி🙏
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#TempleWorshipisTrulyVirtuous🙆🏼🔱
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#BharatisSpiritualZenith🕉️🏔️,
ECR - தலங்கள் - பேராவூரணி அருகில்

சேதுபாவாசத்திரம் ஸ்ரீ விசாலாட்சியம்பாள் சமேத ஸ்ரீகாசி விஸ்வநாதர் சிவன்கோயில் 12.04.26

சேதுபாவாசத்திரம் 
ஸ்ரீ விசாலாட்சியம்பாள் சமேத ஸ்ரீகாசி விஸ்வநாதர் சிவன்கோயில் 

தஞ்சை மாவட்டம், பேராவூரணி வட்டம்

அமைவிடம்
நாகப்பட்டிணம் தூத்துக்குடி ECR பிரதான சாலையில் உள்ள ஊர்
பட்டுக்கோட்டையின் நேர் தெற்கில் 21 கிமி தொலைவில் கடற்கரையினை ஒட்டி இவ்வூர் உள்ளது. 
தல வரலாறு :
ராஜமன்னார்குடியில் அனந்தமௌனி சுவாமி என்றொரு மகான் இருந்தார், அவரது சீடர்களில் ஒருவரான மேரு சுவாமிகளுக்கு சியாமராசர், சேது சுவாமிகள் ஆகிய இரு சீடர்கள் இருந்தனர். இந்த சேது சுவாமிகள் தான் சேதுபாவா சுவாமிகள் என்றும் அழைக்கப்படுகின்றார். 
தஞ்சையை 1739 முதல் 1763 வரை ஆட்சி செய்த பிரதாப சிம்மன் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டு, தஞ்சையில் இருந்த பீமராஜ சுவாமிகளிடம் சென்று தனக்கு துறவறம் குறித்து அருளும்படி வேண்டியபோது அவர் உனக்கான குரு மன்னார்குடியில் இருக்கும் சேதுபாவா சுவாமிகள் தான் அவரிடம் சென்று ஆசி பெறக் கூறி அனுப்பி வைக்கிறார். . அதன்படி மன்னர் சேதுபாவா சுவாமிகளிடம் சென்று ஆசி பெறுகிறார். 
பிரதாபசிம்மன் தன் குருவிற்கு தஞ்சாவூர் கீழராஜவீதியில், தன் அரண்மனைக்கு எதிரில் ஒரு மடம் கட்டிக்கொடுத்து குரு காணிக்கையாக பொன்னும், பொருளும் கொடுத்து கௌரவித்தார். சுவாமிகளின் பெயரில் மன்னார்குடியில் ஓர் அன்ன சத்திரமும், அரித்ரா நதி என்னும் பெரிய குளமும் குளக்கரையில் கோயிலும் உருவாக்குகிறார். பட்டுக்கோட்டை கிழக்கில் கடற்கரை ஒட்டி சேதுபாவா சத்திரம் என்னும் ஊரையும் உருவாக்குகிறார். இது தான் சேதுபாவாசத்திரம் உருவான கதை. 

தல சிறப்புகள்:
த்ரேதா யுகத்தில் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி ராமேஸ்வரம் சென்ற போது இந்த ஊரில் தங்கி கடலில் நீராடி முன்னோர்களுக்கு வழிபாடு செய்ததால் இந்த ஊருக்கு ஸ்ரீ ராமசந்திரபுரம் என பெயர் விளங்கி வந்தது. 1676 ஆம் ஆண்டு மராட்டிய மன்னர் சிவாஜி மகராஜாவின் குரு ராமதாஸ சுவாமிகள் இங்கு தங்கி கடலில் நீராடி பின்னர் ராமேஸ்வரம் சென்றார். பிரதாப சிம்ம மகாராஜாவின் குருவாகிய சேதுபாவா சுவாமிகள் இந்த ஊரில் நித்ய அன்ன சத்திரமும் ஆஞ்சநேயருக்கு ஒரு ஆலயமும், காசியில் இருந்து கொணரப்பட்ட லிங்கத்தை வைத்து 1750ல் ஒரு சிவன்கோயில் கட்டி குடமுழுக்கு செய்தார். 
இக்கோயிலுக்கு பிரதாப சிம்மன் இருபதாயிரம் ஏக்கர் நிலங்கள் தானமாக கொடுத்து அதில் கிடைக்கும் வருவாயில் அன்னதானம் செய்ய வழிவகை செய்திருந்தார். சேதுபாவாசத்திரம், ஊமத்தநாடு, ஆண்டிக்காடு மருங்கப்பள்ளம், மன்னார்குடி, வேட்டைதிடல், கீழையூர் செட்டியமூலை கீழசாந்தான்மங்கலம் அன்னவாசல் ஆகிய கிராமங்களில் இந்த நிலங்கள் உள்ளன. 
இத்தல பெருமை உணர்ந்து காஞ்சி மகா பெரியவர் இங்கு தங்கி சென்றுள்ளார்.

இங்கு வந்து வழிபடுவதன் மூலம் பித்ருசாபம் பிரேதசாபம் குருசாபம் நீங்கி முன்னோர்கள் ஆசியினை பெற்று வாழலாம்.

ஆலய அமைப்பு
கிழக்கு நோக்கிய திருக்கோயில், கோயிலின் பின்புறம் நீளவாக்கில் உள்ள ஒரு பெரிய நன்னீர் குளம் உள்ளது. 
இறைவன் காசிவிஸ்வநாதர் இறைவி காசிவிசாலாட்சி 
இறைவன் நடுத்தர அளவில் லிங்கமூர்த்தியாக உள்ளார். அவரது கருவறை கருங்கல் கொண்டு கட்டப்பட்டு உயர்ந்த விமானம் கொண்டுள்ளது. அதன்முன்னர் இடைநாழி அர்த்தமண்டபம் முகப்பு மண்டபம் உள்ளது. அதில் தெற்கு நோக்கிய அம்பிகை சன்னதி இணைகிறது. முகமண்டபத்தின் வெளியில் நந்தி மண்டபம் அடுத்து உயர்ந்த கொடிமரம் உள்ளது. பிரகார சுற்றில் கோஷ்டங்களில் தக்ஷ்ணமூர்த்தி உள்ளார். முகப்பில் சிம்ம தாங்கு தூண்கள் கொண்டு ஒரு முகப்பு மண்டபம் உள்ளது. வடக்கில் துர்க்கை மட்டும் உள்ளார். பிரகார சிற்றாலயத்தில் விநாயகர் முருகன் உள்ளனர். வடகிழக்கில் நவகிரக மண்டபம் உள்ளது. ஐயப்பனுக்கு ஒரு சிற்றாலயம் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது. இது சமீபத்தியதாக இருக்கலாம், மதில் சுவரை ஒட்டி, தெற்கு நோக்கி மாடத்தில் இருப்பது யாரென விளங்கவில்லை மேற்கு நோக்கிய மாடங்களில் பைரவர் சூரியன் சந்திரன் உள்ளனர். 
தலம் தீர்த்தம் மூர்த்தி சிறப்பு என்பது மட்டுமன்றி, ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி தொடங்கி பல மகான்கள், மகாராஜாக்கள் லட்சக்கணக்கான ராமேஸ்வர யாத்ரிகர்கள் பாதம் பட்ட மண். இதில் நம் காலடி பதிவதும் சிவானுக்ரஹம் தான். 
நன்றி🙏 வலைதள பதிவுகளில் இருந்து ....

#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
#சுப்ராம்🔱🇮🇳
ஆலயம் நகரின் மத்தியில் புனருத்திரானம் செய்யப்பட்டு உள்ளது 
இவ்வாலயம் ஒட்டி மிகப்பழமையான பெரிய வளாகத்துடன் உள்ள அன்ன சத்திரம் வேதணையான நிலையில் உள்ளது. கருவரையில் ஜெயவீர ஆஞ்சனேயருடன் ஆலயம் ஒன்றும் சிதைந்து சிர் செய்ய வேண்டிய நிலையில் காணப்படுகிறது. 
இது பெரிய சத்திரமாக இருந்ததாகவும், இதன் காலத்தில் மிகச்சிறப்பாக பராமரிக்கப்பட்டு வபத்தர்கள் தங்கி செல்ல வசதியாக அன்னதான சத்திரமாக இருந்ததாகவும் வரலாறு. 20 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் தானமாக பிரதாப் சிம்ம மகராஜா கொடுத்ததாகவும், அதைக் கொண்டு ஸ்ரீ சேதுபாவா சுவாமிகள் ராமேஸ்வரம் செல்லும் பக்தர்கள் தங்கி செல்ல நித்ய அன்னதானம் செய்து வந்த வரலாறும், உள்ளது. வருமாணம் கொண்டு, அன்னதானமும், ஆலய பராமரிப்பும், ஆலய விழாக்களும் நடைபெற்று வந்ததாகவும் குறிப்புகள் உள்ளன. 1739 ம் ஆண்டு முதல் 1949 வரை சுற்றிலும் உள்ள பல்வேறு கிராமங்களிலிருந்தும் பிற இடங்களில் இருந்தும் நெல் வருவாய் பெற்று சீரோடு விளங்கியதற்கு குறிப்புகள், இதற்கான ஆவனங்கள் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் இருக்கின்றன என்ற குறிப்புகள் ஆலயத்தில் காணப்பெறுகிறது.

இந்த இடத்தில் இருந்து கொண்டு தான் அருகில் உள்ள ஸ்ரீ விசாலாட்சியம்பாள் சமே ஸ்ரீகாசி விஸ்வநாதர் சிவாலயம் எழுப்பப்பட்டிருக்கிறது என்று கூறுகிறார்கள்.

வாய்ப்பும் வசதியும் உள்ளவர்கள் பலன் வேண்டி அவசியம் தரிக்க வேண்டும்.

12.04.2026
நன்றி🙏
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#TempleWorshipisTrulyVirtuous🙆🏼🔱
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#BharatisSpiritualZenith🕉️🏔️,
ECR - தலங்கள் - பேராவூரணி அருகில்

அதிராம்பட்டினம், தஞ்சாவூர் மாவட்டம் அபயவரதீஸ்வரர் கோயில் 12.04.26

அதிராம்பட்டினம், தஞ்சாவூர் மாவட்டம் 
அபயவரதீஸ்வரர் கோயில்  

இந்த கோயிலில் மூலவராக அபயவரதீஸ்வரர் இருக்கிறார். தாயார் சுந்தர நாயகி.

அமைவிடம்
நாகப்பட்டணம் - தூத்துக்குடி ECR சாலையில் உள்ளது.
தஞ்சாவூரில் இருந்து 70 கி.மீ., தூரத்திலுள்ளபட்டுக்கோட்டை சென்று, அங்கிருந்து 12 கி.மீ. சென்றால் அதிராம்பட்டினத்தை அடையலாம்.

ஆலயம் அமைப்பு
ஆலயம் கிழக்குப் பார்த்த 3 நிலை ராஜகோபுரத்துடன் முன் திறந்த வெளி முற்றத்துடன் சிறப்பாக அமைந்துள்ளது.

முன் வெளி மண்டபத்தில், கொடிமரம் பலிபீடம், நந்தி அமைந்துள்ளது.

இதையடுத்து சுவாமி அபயவரதீஸ்வரர் கிழக்கு நோக்கிய கருவரை அமைப்பு. உள் மண்டபத்தில் சபாபதி மற்றும் தெற்கு நோக்கிய அமைப்பில் தனிக்கருவரையில் அம்மன். அம்மன் தெற்கே கடலை பார்த்து அருள்பாலிப்பதால் கடல் பார்த்த நாயகி என்றும் அழைக்கப்படுகிறாள்.

பிரகாரத்தில் தட்சிணா மூர்த்தி முன் கல்லால் ஆன விதான முகப்புடன் உள்ளார். கிழக்கு நோக்கிய தனிவிநாயகர் கன்னி மூலையில், கோஷ்ட்டத்தில் மேற்கில் லிங்கோத்பவர், தலவிருட்சம், தனிசன்னதியில் தெற்கு நோக்கி ஆதி சுந்தர நாயகி அம்மன், மேலும் கிழக்கு நோக்கிய தனி சன்னதியாக வள்ளி தெய்வானையுடன் முருகன்.
மற்றும் வடமேற்கு மூலையில் மகாலெட்சுமி

வடக்கு கோஷ்ட்டத்தில் பிரம்மா, துர்க்கை சண்டிகேஸ்வரர்
வட கிழக்கு மூலையில் பைரவர், அடுத்து நவகிரகங்கள் மற்றும் தனி சனீஸ்வரர், சூரியன் அமைந்துள்ளது.

ஆலயம் தனி சிறப்புகள்

ஒவ்வொரு திருவாதிரை நட்சத்திர நாளன்றும் சித்தர்கள் இங்கு அரூப வடிவில் வந்து வழிபாடு செய்வதாக கூறப்படுகிறது.
திருவாதிரை நட்சத்திக்காரர்கள், ராகு, தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் என்று அனைவரும் வழிபட வேண்டிய கோயில் தான் இந்த அபய வரதீஸ்வரர். 
இந்த கோயில் எம பயம் நீக்கும் தலமாக விளங்குகிறது. எம பயம் கொண்டவர்கள், தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்கள், நீண்ட ஆயுள் வேண்டுபவர்கள் இந்த கோயிலில் வழிபாடு செய்கிறார்கள். ஆயுஷ் மற்றும் மிருத்யுஞ்சய ஹோமம் இங்கு செய்யப்படுகிறது. திருவாதிரை நட்சத்திரத்தைச் சேர்ந்த பெண்களுக்கு எந்த தோஷத்தினால் பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும், இந்த கோயிலில் வந்து வழிபாடு செய்தால் பலன் கிடைக்கும்.

தல சிறப்பு:
இந்த நட்சத்திரத்தில் பிறந்த மன்னர் அதிவீரராமபாண்டியன் இத்தல இறைவனான அபய வரதீஸ்வரரை வழிபட்டு திருப்பணிகளை செய்துள்ளார். இதனால், இந்த ஊர் முதலில் திரு ஆதிரைப்படினமாக இருந்து அதிவீரராமன் பட்டினமாகி தற்போது அதிராம்பட்டினமாக மாறிவிட்டது.

ஒரு காலத்தில் தேவர்கள், முனிவர்கள் ஆகியோர் அசுரர்களிடமிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக திருவாதிரை நட்சத்திர மண்டபத்தில் தஞ்சம் அடைந்தனர். பிரதோஷ நாள் மற்றும் திருவாதிரை நட்சத்திர நாள் அன்றும் சிவபெருமான் உலா வரும் இடங்களில் திருவாதிரை நட்சத்திர மண்டலும் ஒன்று. இந்த மண்டபத்திற்குள் அசுரர்கள் யாராலேயும் உள்ளே வர முடியாது.
இந்த மண்டபத்திற்குள் வந்த தேவர்கள், முனிவர்களை அபயம் தந்து காப்பாற்றுவார். இதனால், சிவபெருமான் அபய வரதீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். திருவாதிரை நட்சத்திரத்தைச் சேர்ந்தவர்கள் இந்த கோயிலில் திருவாதிரை நட்சத்திர நாளில் வழிபாடு செய்தால் நன்மை உண்டாகும். பைரவ மகரிஷி மற்றும் ரைவத மகரிஷி ஆகியோர் இந்த தலத்தில் திருவாதிரை நட்சத்திர நாளில் அபயவரதீஸ்வரரை வழிபாடு செய்துள்ளனர். 
விழாக்கள்
பங்குனி உத்திரம் அன்று இந்தக் கோயிலில் விழா கொண்டாடப்படுகிறது.

#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
#சுப்ராம்🔱🇮🇳
அதிராம்பட்டிணம் ECR பிரதான சாலையின் கிழக்குப் பகுதியில் ஆலயம் அமைந்துள்ளது. பேருந்து நிலையத்திலிருந்து 500 மீட்டர் தூரம்தான்.
ஆலயம் முன்புறம் வாகன வசதிகள் நிறுத்த இடம் உள்ளது இருப்பிஉள்ளதால்னும் ஆலய பாதுகாப்பிற்காக முள்வேலி அமைத்துள்ளனர். 

ஆலயம் நகரின் மத்தியில் நல்ல பராமரிப்பில் உள்ளது

ஆலயம் 25.06.2026 வியாழன் அன்று குடமுழுக்கு செய்வதற்கான ஏற்பாடுகளில் திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.
 திருவாதிரை நட்சத்திரம் பெற்றவர்கள் மட்டுமின்றி வாய்ப்பும் வசதியும் உள்ளவர்கள் பலன் வேண்டி இந்த சிவலயத்தை அவசியம் தரிக்க வேண்டும்.

12.04.2026
நன்றி🙏
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#TempleWorshipisTrulyVirtuous🙆🏼🔱
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#BharatisSpiritualZenith🕉️🏔️,
ECR - தலங்கள் - பேராவூரணி அருகில்

சின்ன ஆவுடையார் கோவில்(கொள்ளுக்காடு) ஆத்மநாதசுவாமி ஆலயம்மூலவர்: ஆத்மநாதசுவாமி, யோகாம்பாள் 12.04.26

சின்ன ஆவுடையார் கோவில் (கொள்ளுக்காடு) ஆத்மநாதசுவாமி ஆலயம் மூலவர்: ஆத்மநாதசுவாமி, யோகாம்பாள். அமைவிடம்⛳ தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்...