Monday, March 30, 2026

வெள்ளூர் -திருக்காமேஸ்வரர், சிவகாமசுந்தரி -மகாலட்சுமி சிவபெருமானிடம் ஐஸ்வர்ய மகுடம் பெற்ற தலம்

வெள்ளூர் -திருக்காமேஸ்வரர், சிவகாமசுந்தரி -
மகாலட்சுமி சிவபெருமானிடம் ஐஸ்வர்ய மகுடம் பெற்ற தலம்

⛳திருச்சியில் இருந்து முசிறி வழி நாமக்கல் செல்லும் வழியில், குணசீலம் கோவிலை அடுத்து, ஆனால் முசிறிக்கு 6 கி.மீ. முன்னால் உள்ள தலம் வெள்ளூர். முசிறி - 7, நாமக்கல் 50, திருச்சி 37 கி.மீ தூரம். இந்த கோயில் பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில் குணசீலம் அருகில் உள்ளது.

🌟இத்தலத்து இறைவன் திருநாமம் திருக்காமேஸ்வரர், சுயம்பு லிங்கம் இறைவியின் திருநாமம் சிவகாமசுந்தரி.
இவரை மன்மதனும், ரதியும், திருமகளும் வழிபட்டுள்ளனர்.

🌼மிகவும் பழமையான தொன்மையான கோயில். இச்சிவாலயத்தினை கி.பி ஆறாம் நூற்றாண்டில் முதலாம் விஜயாதித்த சோழன் புணரமைத்து குடமுழுக்கு செய்தாக. செய்தி கல்வெட்டில் உள்ளது.

🌟மகாலட்சுமிக்கு பிரத்தியேகமான திருச்சி அருகில் உள்ள கோயில் 

ஆலய அமைப்பு:
இக்கோயிலுக்கு தெற்கு ராஜகோபுர வாசல், கிழக்கில் 5 நிலை ராஜகோபுர வாசல் என இரு நுழைவுவாயில்கள் உள்ளன. கிழக்கு வாசல் வழியாக வந்தால் பலிபீடம், நந்தி மண்டபம் ஆகியவை உள்ளன. கோயிலின் பிரகாரம் திருமாளிகைப் பத்தியுடன் உள்ளது. சிவாலயத்தின் கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, விஷ்ணு துர்க்கை சன்னதிகள் அமைந்துள்ளன. தனி சண்டிகேஸ்வரர் உண்டு.

கோயிலின் பிரகாரத்தின் தென் மேற்கில் போஷகணபதி சன்னதி, மேற்கில் வள்ளி-தேவசேனா உடனுறை சண்முகர் சன்னதி, சண்டிகேசுவரர், நவக்கிரக நாயகர்களின் சன்னதி போன்றவை அமைந்துள்ளன.

வடமேற்கு மூலையில் உள்ள மண்டபத்தில் ரதியுடன் மன்மதன் ஈசனை வணங்கியவாறு உள்ளனர். இதன் அருகே கோயில் தல மரம் வில்வம் அமைந்துள்ளது. 

பக்தர்கள் வில்வ மரத்தினை திருமகளாக வழிபடுகின்றனர். ஆலயத்தின் வடக்கே திருமகள் சன்னதி உள்ளது.

வாளாசுரனை அழிக்க முற்பட்ட முசுகுந்தனுக்கு வெற்றியை அருளிய கால பைரவரையும், மன்மதனுக்கு அருளிய ஞான பைரவரையும் இக்கோயிலின் கிழக்கு நுழைவுவாயில் அருகில் தரிசிக்கலாம்.

சிறப்புகள்

இறைவன் : திருக்காமேசுவரர்

இத்திருக்கோயில் இறைவன் திருக்காமேசுவரர் என்றழைக்கப்படுகிறார். கிழக்கு நோக்கிக் காட்சியளிக்கிறார்.

இத்தல இறைவன் தன் மீது கோபம் கொண்ட மகாலட்சுமியைச் சாந்தப்படுத்தி, மகாவிஷ்ணுவுடன் சேர்த்து வைத்ததால் லட்சுமிபுரீசுவரர்

மன்மதனை மன்னித்து அரூப அழகுடலை அளித்ததால், சிவபிரான் திருக்காமேஸ்வரர்,  

மன்மதனுக்கு வைத்தியம் அருளியதால் வைத்தியநாதர் 

மகாலட்சுமிக்கு ஐஸ்வர்ய மகுடத்தை அளித்ததால் ஐஸ்வர்யேசுவரர்

முசுகுந்த சக்கரவர்த்திக்கு வாளாசுரனை வெல்லக்கூடிய ஆற்றலை அளித்தது.
வில்வாரண்யேசுவரர்

மேலும், ஸ்ரீவத்ஸ அனுக்ரஹர் என்ற திருநாமங்களும் உண்டு.

சிவபோக சக்கரம்:
சிவன் கருவரை உள்மன்டபத்தில் உள்ள சிவபோக சக்கரம்:
போகர் ஏழாயிரம் என்ற நூலில் திருக்காமேஸ்வரர் சன்னதியில் போகர் சிவபோக சக்கரத்தை பிரதிஷ்டை செய்தார். பிறகு, அதில் சரியான திதியும், நட்சத்திரமும், ஓரையும் கூடிய சுப நேரத்தில் அமர்ந்து தவம் செய்யத் துவங்கினார்;
அதன்விளைவாக போகர் சித்தர்பிரானுக்கு வெகு விரைவிலேயே அஷ்டமாசித்துக்கள் கைகூடின இதை அறிந்த பாம்பாட்டி சித்தர், புலிப்பாணி சித்தர் இன்னும் பல சித்தர்கள் இங்கே வருகை தந்து திருக்காமேஸ்வரரை முறைப்படி வழிபாடு செய்து அஷ்டமா சித்துக்களில் சித்தி பெற்றனர்; 

ஏராளமான தெய்வீக சாதகங்கள் நிகழ்ந்த இந்த ஆலயத்துக்கு எல்லோராலும் செல்ல முடியாது என்பதுதான் ஆச்சரியமான உண்மை!

போகர் உள்ளிட்ட பலகோடி சித்த மகான்களுக்கு அஷ்டமாசித்தி அளித்த திருக்கோயில் என்பதால், இன்றளவும் ஆண்கள் சட்டை, பனியன் போன்ற மேலாடைகளின்றி இறைவன் திருக்காமேசுவரைத் உள் மண்டபத்தில் சென்று தரிசனம் செய்வது தொன்று தொட்டுத் தொடரும் வழக்கமாக உள்ளது.

திருக்காமேசுவரப் பெருமானின் பார்வை நமது சரீரத்தில் பட வேண்டும். அவ்வாறு படும்போது எவ்வளவு மனக் கஷ்டங்கள், நமது முயற்சிக்கான தடைகள் இருந்தால் அவை அனைத்தும் விலகி, எண்ணங்கள் சரியாகி விரைவில் கைகூடும் என்பது அனுபவபூர்வமான நிகழ்வாகும்.

இறைவி : சிவகாமசுந்தரி

தன்னை நாடி வரும் பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றித் தரும் அம்மனாக சிவகாமசுந்தரி அம்மன் தெற்கு நோக்கிய எழுந்தருளி, காட்சியளித்து வருகிறார். தன் மீது விழுந்த காமபாணத்தால் சிவபெருமானுடன் கூடியதால், பார்வதி தேவிக்கு சிவகாமசுந்தரி எனப் பெயர் வந்தது இக்கோயிலில்தான்.

ஐஸ்வர்ய மகாலட்சுமி

வேறெங்கும் காண இயலாத வகையில், தட்சிண பாகம் என்று கூறப்படும் வடமேற்குப் பகுதியில் மகாலட்சுமி இருக்க வேண்டிய இடத்தில் வில்வமரத்தையும், அதன் நிழலில் ஐஸ்வர்ய மகுடம் தரித்த மகாலட்சுமியையும் இக்கோயிலில் தரிசிக்கலாம்.

கோவிலின் குபேர பாகத்தில் தவம் செய்யும் கோலத்தில், ஐஸ்வர்ய மகாலட்சுமி என்ற திருநாமத்தோடு சிவலிங்கத்துடன் கூடிய ஸ்ரீவத்ஸ முத்திரை பதித்த ஐஸ்வர்ய மகுடத்தை தலையில் சூட்டியவாறு, அமர்ந்த திருக்கோலத்தில், அபய, வரதம் கூடிய திருக்கரங்களோடு, மேலிரு கரங்கள் தாமரை மலர்கொண்டு காட்சியுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் - ஐஸ்வர்ய மகாலட்சுமி. 

இங்கு லட்சுமிக்கு அபிஷேகம் செய்வதற்கு முன் வில்வமரத்துக்கு முதலில் பூஜை செய்கின்றனர்.
மேலும் சிறப்பான சன்னதிகள்:

போகர் சன்னதி
🔱திருக்காமேசுவரர் திருக்கோயிலிலின் மகா மண்டபத்தில் போகர் பிரதிஷ்டை செய்த சிவபோகச் சக்கரத்தைத் தரிசனம் செய்யலாம். திருக்கோயிலின் ஈசான பாகத்தில் அமைந்துள்ள பாதாள சுரங்கத்தில் கம்பீரமாக போகர் காட்சி தருகிறார். அரூபமாக இன்னும் எண்ணற்ற பல சித்தர்கள் தவம் செய்வதாக அகஸ்தியர் நாடியிலும், வசிஷ்ட நாடியிலும், காகபுஜண்டர் நாடியிலும் காணப்படுவது சிறப்புக்குரியது.

இத்தலத்தின் பிற சிறப்புகள்

🌟குபேரன் தனாதிபதி ஆனதும் இத்தலத்தில்தான் என தலபுராணம் கூறுகிறது. 

🌟முப்பத்து முக்கொடி தேவர்களும் தினமும் ஆகாய மார்க்கமாக இங்கு வந்து ஈசனை வழிபடுவதாக ஓலைச்சுவடிகளில் காணப்படுகிறது. 

🌟இராவணன் சிவவழிபாடு செய்து ஈஸ்வரப் பட்டம் பெற்றதும் இத்தலத்தில்தான். 

🌟காமனை நெற்றிக் கண்ணால் சுட்டாலும் அவன் எய்த மன்மத பாணம் அம்பிகை மீதுபட, தேவி சிவகாம சுந்தரியாள் அவளே இங்கு சிவனுடன் உறையும் நாயகியாய் வீற்றிருக்கிறாள்.

ஞான பைரவர்
மன்மதன் திருக்காமேசுவரப் பெருமானிடம் காமபாணத்தைப் பெற்று, அதை உயிரினங்கள் மேல் எவ்வாறு செயல்படுத்துவது என்ற விகிதாசாரம் தெரியாமல் திகைத்தார். உடனடியாக பைரவரை தியானித்து, அவரது பாதங்களில் காமபாணத்தினால் மலர்மாரி பொழிந்து வழிபட்டார். பைரவர் மகிழ்ந்து ஆவுடையார் மேல் நின்று ஞான பைரவராகக் காட்சி தந்து, காமபாணத்தை எந்தெந்த உயிர்களுக்கு எந்தெந்த விகிதத்தில் செயல்படுத்த வேண்டுமென்ற ஞானத்தை மன்மதனுக்கு கொடுத்தார் அதனால் இத்திருக்கோயிலில் காணப்படும் பைரவர் ஞானபைரவாகக் காட்சியளித்து வருகிறார்

சுக்கிரன், ஈசனை வழிபட்டு யோகத்திற்கு அதிபதி ஆனது.

முசுகுந்தனுக்கு சக்கரவர்த்தி பதவியையும் வாளாசுரனை வெல்லக்கூடிய ஆயுதங்களையும் கொடுத்து, வெற்றியைக் கொடுத்தது இத்திருக்கோயில்தான். அதனால்தான் இவ்வூர் வெள்ளூர் எனப் பெயர் பெற்றது. மேலும் காலபைரவரை வழிபட்டு வாளாசுரனை வென்றதாக வரலாறு. 

தல விருட்சம் 
வெள்ளூர் திருக்காமேசுவரர் திருக்கோயிலின் தல விருட்சமாக வில்வமரம் அமைந்துள்ளது. அந்த வில்வமரத்தின் நிழலில் தவம் செய்யும் கோலத்தில் ஐஸ்வர்ய மகாலட்சுமி எழுந்தருளியிருப்பது அதிலும் சிறப்பானதாகும். மேலும் இக்கோயில் தீர்த்தத்துக்கு ஐஸ்வர்ய தீர்த்தம் என்றும் பெயர்.

தலபுராணத்தை எடுத்துரைக்கும் முகுந்தனின் சிவ வழிபாடு, ரதியும் மன்மதனும் இணைந்து ஈசனை வணங்கும் கோலம் கோயிலின் வடமேற்கு மூலையில் அமைந்துள்ளது.

கோயில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. கோயில் பிரகாரம் சுற்றிலும் கண்காணிப்பு கருவி பொருத்தப்பட்டுள்ளது.

பிரார்த்தனை:
🪷கல்வியில் சிறந்து விளங்க நினைக்கும் மாணவர்கள், ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 4.30 மணி முதல் மாலை 6 மணி வரை ராகுகால நேரத்தில் செவ்வரளி மாலை அணிவித்து 
ஞானபைரவரை வழிபட்டால் ஞான அபிவிருத்தி கிட்டும்.

🪷தாமரை மலர் சாற்றி அட்சய திரிதியை அன்று மகாலட்சுமியை வழிபட்டால் சகல செல்வங்களும் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

🪷தங்கம், வெள்ளி நகை செய்பவர்கள் தங்கள் தொழில் அபிவிருத்திக்காக இங்கு வருகிறார்கள். 
சுக்கிர தோஷம் உடையவர்கள், வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் (காலை 6 முதல் 7 மணி வரை), அருள்மிகு ஐஸ்வர்ய மகாலட்சுமிக்கு 16 வகை திருமுழுக்கு செய்து, 16 செந்தாமரை மலர்களால் அர்ச்சித்து, 16 நெய் தீபங்கள் ஏற்றி அம்பாளை 16 முறை வலம் வந்து வழிபாடு செய்தால், 16 வகைச் செல்வங்களும் கிடைக்கும். செல்வச் செழிப்புடன் திகழலாம்; கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம் 
🪷 சகல தோஷங்களும் நீங்கும், கடன் தொல்லைகள் அனைத்தும் நிவர்த்தியாகும். சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கப் பெறலாம் என்பது தொன்நம்பிக்கை.

🪷 இத்தல சிவனை வழிபட திங்கள் கிழமை, 7 முறை சுற்றி வந்து வழிபடுதல் வழக்கம்.

🪷 இத்தல அம்மனை (மகாலட்சுமி) வழிபட்ட வெள்ளிக்கிழமை, 16 முறை சுற்றி வந்து வழிபடுதல் வழக்கம்.

🪷திருக்காமேஸ்வரர் பெருமானை வணங்கினால் வெற்றி நிச்சயம் என்பதை உணர்த்தும் வகையிலேயே இந்த ஊருக்கு வெள்ளூர் என்ற பெயர் ஏற்பட்டது.
🪷கணவன்- மனைவி ஒற்றுமை, மாங்கல்ய பலம், ஐஸ்வர்ய யோகம் கிடைக்க இத்திருக்கோயில் இறைவனைப் பிரார்த்தனை செய்து, பலன் பெறலாம் என்கின்றனர் பக்தர்கள்.
🪷தம்பதி ஒற்றுமை, மாங்கல்ய பலம் அளிக்கும் பரிகாரத் தலத்தின் இறைவியாக சிவகாமசுந்தரி திகழ்வதால், பக்தர்கள் தங்களின் வேண்டுதல்களை இத்திருக்கோயில் இறைவி நிறைவேற்றித் தருவதாகக் கருதி, அவரை மனமுருக வழிபட்டுச் செல்கின்றனர். 
🪷குழந்தை பாக்கியத்துக்கும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள். மேலும், அமாவாசையன்று இறைவனுக்கு வில்வ அர்ச்சனை செய்து, இறைவன் திருக்காமேசுவரர், இறைவி சிவகாமசுந்தரி ஆகிய இருவரையும் வலம் வந்தால், பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வர் என்பது ஐதீகம்

நடை திறப்பு .
வெள்ளூர் திருக்காமேசுவரர் கோயில் காலை 6 மணி முதல் பிற்பகல் 12.00மணி வரையிலும், மாலை 4.00 - 7.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.

#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️

🌼வாகனங்கள் ஆலயம் அருகில் செல்லும். 
ஆலயம் சிற்றூரின் உள்ளே பிரதான சாலையில் உள்ளது. ஆலயத்தின் தென்புறம் வாகனங்கள் நிறுத்தலாம்.
நல்ல பூசை வழிபாடுகள் சிறப்பாக நடைபெறும் ஆலயம். தூய்மையாகவும், பராமரிப்புடனும் உள்ளது. சமீபத்தில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளதால் பொலிவுடன் உள்ளது.
சுவாமி அர்த்தமண்டபத்தில் தரையில் போகர் சக்கரம், மேல் விதானத்தில் உள்ள சக்கரம் உள்ளதால், மிகவும் சக்திவாய்ந்த இடமாக கருதப்படுகிறது. அங்கே சென்று வழிபட ஆண்கள் மேலாடை இன்றி உள் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். 

ஐஸ்வர்ய மகாலெட்சுமி தனி சன்னதி சிறப்பு.
போகர் ஈசான மூலையில் பாதாள அறையில் வீற்றிருக்கும் கோலம் சிறப்பான ஈர்ப்புடையது.

பெரும்பாலும், கற்றளியாக இருப்பதால், ஆலயம் பூரணத்துவத்துடன் நல்லவழிபாட்டில் உள்ளதால், சிறப்பாக உள்ளது.

சிற்றூர் என்பதால் பெரிய கடைகள், தங்குமிடங்கள் வசதிகள் கிடையாது.

#Subbramசுப்ராம்🔱🇮🇳
நன்றி🙏15.02.2026
#சுப்ரம்அருணசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று🛕🛐
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்🇮🇳🔱
#சிவராத்திரியாத்ரா #வெள்ளூர் -திருக்காமேஸ்வரர், சிவகாமசுந்தரி -
மகாலட்சுமி சிவபெருமானிடம் ஐஸ்வர்ய மகுடம் பெற்ற தலம் 15.02.2026

No comments:

Post a Comment

எண்கண் சுப்ரமணிய சுவாமி ஆலயம், பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில்

7.எண்கண் சுப்ரமணிய சுவாமி ஆலயம், பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில் ⛳ இருப்பிடம் திருவாரூர் - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் திருவாரூரில் இருந்து...