*கேதார்நாத் சென்று தரிசித்த பலன் தரும் திருச்சி மாவட்டம் முசிறி அருகே இருக்கும் தின்னக்கோணம் பசுபதீஸ்வரர்* .....
இறைவர். :- சுயம்பு பசுபதீஸ்வரர் ;
இறைவியின் திருநாமம் கோவிந்தவல்லி.
தட்சிண கேதார்நாத் திருக்கோயில், திருமுறை வைப்புத்தலம், நான்கு வேதங்களும் கருவறையிலுள்ள நான்குத் தூண்களாகக் கருதப்படும் சிறப்பு, முன்னிரு கால்கள் மடிந்த நிலையிலுள்ள நந்தியெம்பெருமான், லிங்கோத்பவ வலம்புரி விநாயகர் சிறப்பு வாய்ந்த சொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதி, வசந்த நவராத்திரிப் பெருவிழா,மாத சிவராத்திரி மற்றும் நவராத்திரி விழாக்கள் சிறப்பாககொண்டாடப்படுகிறது. பல்வேறு சிறப்புகளை இக்கோயில் கொண்டிருக்கிறது.
💥தல சிறப்பு
முதல் பராந்தகச் சோழர் காலத்து கல்வெட்டுகளில் திருவிரற்குன்றம், திருநற்குன்றம் என்றும், சுவாமியின் பெயர் திருமாடத்து கூனனார், சடனாண்டார் என்றும் குறிக்கப்பட்டுள்ளதாக கல்வெட்டு அறிஞர்கள் கூறுவர். தற்போது இந்த ஊர் திருநெற்குன்றம், திண்ணக்கோணம் என்றழைக்கப்பட்டு வருகிறது.
🌼திருமுறை வைப்புத்தலம் திருநெற்குன்றம்:
"நெற்குன்றம் ஓத்தூர் நிறை நீர் மருகல், நெடுவாயில் குறும்பலாநீடு திரு
நற்குன்றம் வலம்புரம் நாகேச்சுரம், நளிர் சோலையும் சேனைமாகாளம் வாய்மூர்
கற்குன்றம் ஒன்றேந்தி மழை தடுத்த, கடல் வண்ணனும் மாமலரோனுங் காணாச்
சொற்கு என்றும் தொலைவிலாதான் உறையும், குடமூக்கு என்று சொல்லி குலாவுமினே'' (2-39-9)
என்று திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற வைப்புத்தலமான திருநெற்குன்றம் என்றழைக்கப்படுகிறது, திண்ணக்கோணம்.
🌼தட்சிண கேதார்நாத் : பசுவின் திருமேனி கொண்டு முகவாயைத் தரையில் வைத்து படுத்திருக்கும் நிலை போன்று சிவபெருமான் கேதார்நாத்தில்தான் காட்சியளிக்கிறார். எனவே கேதார்நாத் சிவாலாயத்துக்குச் செல்ல முடியாதவர்கள், திருநெற்குன்றம் கோயிலுக்கு வந்து இறைவனை வழிபட்டால், இமயமலை கேதார்நாத் தலத்தில் உள்ள கேதாரீஸ்வரரை சென்று வழிபட்ட பலன் கிடைக்கும் என்றும், இத்திருக்கோயிலை தட்சிண கேதார்நாத் என்றும், பக்தர்கள் கூறுகின்றனர்.
🌼நான்கு வேதங்களும் கோயில் கருவறையிலுள்ள நான்குத் தூண்களாகக் கருதப்படும் சிறப்பு,
தல வரலாறு
1 கோயிலின் புராண சிறப்பு
முன்பு ஒரு சமயத்தில் கைலாயத்தில் பரமேசுவரன் தன் தேவிக்கு வேதசிவாகமப் பொருளை உணர்த்திக் கொண்டிருந்தபோது, அம்பிகையின் கவனம் மாறும்படியாக காமதேனு அவ்வழியே செல்ல, தேவியின் கவனம் அந்த காமதேனு மீது மாறுவதை உணர்ந்து கோபமடைந்த ஈசன்,
அம்பிகையை நோக்கி "பூலோகத்தில் திருநெற்குன்றம் என்னும் திண்ணக்கோணம் அடைந்து பங்குனி மாத வளர்பிறையில் வரும் வசந்த நவராத்திரி என்னும் ஒன்பது ராத்திரி நாள்கள் நீ தவமிருக்கும்போது, நான் பசுவாக உனக்கு காட்சியளிப்பேன். அதன் பின் என்னை வந்து நீ அடைவாயாக" எனக் கூற, அதன்படி மானுட உருவம் கொண்டு இடையர் குலத்தில் அம்பிகை பிறந்து, ஈசனை நோக்கி தவமிருந்து பார்வதிதேவி அருள் பெற்ற வரலாறு கொண்ட திருக்கோயில்.
அந்த வகையில் நான்கு வேதங்களின் பெருமைகளையும் உணர்த்தும் வகையில், இக்கோவிலின் சுவாமி கருவறையில் அமைந்துள்ளத் தூண்கள் நான்கும், நான்கு வேதங்களை எடுத்துரைப்பதாகக் கூறப்படுகிறது.
2. வரலாற்றுச் சிறப்பு.
இந்த ஊரைச் சேர்ந்த இடையன், குன்றுப் பகுதிக்கு மேய்ச்சலுக்காக மாடுகளை ஓட்டிச் சென்று வரும்போது, ஒரு பசு மட்டும் பால் கறப்பதில்லை. அதற்கான காரணத்தை அறியும் போது, மேய்ச்சல் முடிந்து திரும்பி வரும் போது ஒரு குறிப்பிட்ட பசு குன்றின் மேல் பால் பொழிவதைக் கண்ட இடையன், அதைத் தடியால் அடிக்க அந்த பசு இறந்தது.
அன்றிரவு அந்த பகுதியை ஆண்ட பராந்தகச் சோழ மன்னர் கனவில் வந்த இறைவன், குறிப்பிட்ட அந்த இடத்தில் கோயில்கட்ட வேண்டும். கோயில் கட்டி லிங்கம் பிரதிஷ்டை செய்யும் நாளில் கருவறையில் சுயம்பு மூலவராய் நானே எழுந்தருள்வேன் என்றார்.
அவ்வாறே, லிங்கத் திருமேனியை நிருதி மூலையில் பிரதிஷ்டை செய்தான்; பராந்தகச் சோழ மன்னரால் கட்டப்பட்ட இத்திருக்கோயில், பல்வேறு சிறப்புகளைக் கொண்டிருக்கிறது. கருவறையில் முகவாயைத் தரையில் வைத்துப் படுத்திருக்கும் பசுவின் திருமேனி (பசுமாடு படுத்திருக்கும் தோற்றத்தில் கர்ப்பகிரஹத்தை) இக்கோயில்
கொண்டுள்ளது.
🛕 ஆலயஅமைப்பு
பழையக் காலக் கற்றளி.
நுழைவுவாசலுடன் கிழக்கு நோக்கியவாறு அமைந்துள்ளது. பலிபீடமும், நந்தியும் கருவறையை நோக்கி காணப்படுகிறது.
சுவாமி பசுபதீஸ்வரர்
சுவாமி கருவறை கஜப்பிரஷ்ட அமைப்புடையது;
இறைவன் சுயம்பு பசுபதீசுவரர்
பசு - பதி என்றால் உயிர்களுக்கெல்லாம் தலைவர் என்று பொருளாம்.
மற்ற திருக்கோயில்களில் லிங்கத் திருமேனியில் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
ஆனால், திண்ணக்கோணம் கோயிலில் இறைவன் சுயம்பு பசுபதீசுவரர், முகவாயைத் தரையில் வைத்துப் படுத்திருக்கும் பசுவின் திருமேனியாய் (அதாவது யானை படுத்திருக்கும் நிலையில் பின்பகுதியில் உள்ளது போன்று) எழுந்தருளி,
சுயம்பாக கிழக்கு மேற்காக 7.5 அடி நீளமும் 3 அடி உயரமும் கொண்டது. பசுவுக்கு நெற்றியில் திருநீற்றுப்பட்டை, நிறைய மாலைகள், ஆபரணங்கள், உடலை சுற்றி வஸ்திரங்கள் சாத்தி படுத்திருந்தால் எப்படி இருக்குமோ, அது போல் தான் பசுபதீஸ்வரர் சுயம்புவாக பசு உருவில் காட்சி தருகிறார். அருகில் லிங்க திருமேனியும் உள்ளது.
இறைவன் பசுபதீஸ்வரரின் வலது பக்கத்தில் நான்கு தூண்கள் ஒரே வரிசையில் அமைந்துள்ளன. இப்படி மூலவரின் பக்கத்தில் தூண்கள் அமைந்திருப்பதை வேறு எந்த தலத்திலும் காண முடியாத தனிச்சிறப்பாகும்.
கோவிந்தவல்லி அம்மன்
கோவிந்தவல்லி அம்மன் தனிச் சன்னிதியில் கிழக்கு நோக்கியவாறு அருள்பாலிக்கிறார். அன்னை சிவகாம சுந்தரி, கோவர்த்தனாம்பிகை போன்ற திருநாமங்களிலும் அழைக்கப்படுகிறார்
பிரகாரம்
கருவறை சுவரை சுற்றி தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், அர்த்தநாரீஸ்வரர் ஆகியோர் கோஷ்ட மூர்த்திகளாக காட்சி அளிக்கின்றனர்.
நந்தி:
முன்னிரு கால்களும் மடிந்த நிலையில், இறைவன் சன்னதிக்கு நேர் எதிரில் நந்தியெம்பெருமான் எழுந்தருளியிருக்கிறார். மேலும் அவரது வலது காதும் மடிந்து காணப்படுவதும் சிறப்புக்குரியதாகும்.
லிங்கோத்பவ வலம்புரி விநாயகர்
தன்னுடைய தந்தையின் உருவமான லிங்கத்தைக் கொண்டு, விநாயகர் இக்கோயிலில் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். அதனால்தான் இவர் லிங்கோத்பவ வலம்புரி விநாயகர் என அழைக்கப்படுகிறார். 4 அடி உயரத்தில் புடைப்புச் சிற்பத்தில் லிங்கோத்பவ வலம்புரி விநாயகர் காட்சியளிக்கிறார். இவைத் தவிர, கோயிலின் கோஷ்டத்தில் ஸ்ரீ நர்த்தன கணபதியும், சுவாமி சன்னதிக்கு அருகிலும் கணபதியும் எழுந்தருளியுள்ளனர்.
மேலும், சங்கரநாரயணர், லட்சுமி நாராயணர், சிவசக்தி வேலன், வள்ளி, தெய்வானை, சிறப்பு வாய்ந்த சொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதி , சூரியன், சண்டிகேஸ்வரர், நவக்கிரகங்கள் ஆகியோரது சன்னிதிகளும் உள்ளன.
இக்கோவிலின் தல விருட்சமாக வில்வ மரம் உள்ளது.
பிரார்த்தனை
பித்ருக்களால் ஏற்பட்ட சாபம், தோஷம், களத்ர தோஷம் போன்ற தோஷங்களை நீக்கும் பரிகாரத் தலமாக தின்னக்கோணம் சுயம்பு பசுபதீஸ்வரர் திருக்கோவில் விளங்குகிறது.
பசுவுக்கு ஏதாவது தீங்கு இழைத்து அதனால் சாபம் பெற்றவர்கள், இக்கோவிலுக்கு பசுவும், கன்றும் தானமாக வழங்குகிறார்கள். திருமணத் தடை நீங்க, குழந்தை பாக்கியம் கிடைக்க, மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க இங்கு வந்து வழிபட்டு செல்கின்றனர்.
பூசைகள் / விழாக்கள்
பரிகாரம் / பூசைகள்
மாதந்தோறும் அமாவாசை தினத்தில் இறைவன், இறைவிக்கு அபிஷேக, அர்ச்சனைகளும், மற்ற சன்னதிகளில் அர்ச்சனைகளும் செய்து, தங்களது பரிகாரத்தை நிவர்த்தி செய்து, பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அன்னதானம் வழங்குகின்றனர்.
கோவிந்தவல்லி அம்பாள் என்றால் உயிர்களுக்கெல்லாம் தலைவி என பொருள் உண்டாம். சிவபெருமானால் சாபம் விட்டு, மானுட வேடம் பூண்டு, பின்னர் தவமிருந்து தேவி அவரிடம் இணைந்த திருக்கோயில் என்பதால், பங்குனி மாத வளர்பிறையில் வசந்த நவராத்திரி உற்ஸவம் இறைவிக்கு நடத்தப்படுகிறது.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் கோவிந்தவல்லி அம்மன் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளிப்பார். வசந்த நவராத்திரி உற்ஸவம் இக்கோயிலில் தொடர்ந்து வெகுசிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.
ஸ்ரீஓமாம் சித்தர் அவதாரத் திருக்கோயில்
திண்ணக்கோணம், கன்னிகோணம், பரிதிகோணம் என்பவை சூரியபகவான் இந்த பூ மண்டலத்தில் வர்ஷிக்கும் மூன்று முக்கிய கோணச் சக்திகளாகும்.
கன்னிகோண சக்திகள் காலையில் சூரியன் உதிக்கும் போது பூமியைத் தழுவும். திண்ணக்கோணம் என்பது நண்பகலில் சூரியன் தலைக்கு நேராக செங்குத்தாக இருக்கும் போது தோன்றும் ஆதவ சக்திகளாகும். பரிதிகோணம் என்பது சூரியபகவான் பகல் பொழுதின் நிறைவாக மீளூம் கோண சக்திகளாகும். இதில் திண்ணக்கோண சக்திகள் பொங்கிப் பெருகும் நேரமே அபிஜித் முகூர்த்தம் எனப்படுகிறது. இத்தகைய மங்கள சக்திகள் நிறைந்த அபிஜித் முகூர்த்தத்தில் தோன்றியவர்தான் ஸ்ரீஓமாம்சித்தர். இந்த சித்தர் தோன்றிய அவதாரத் திருக்கோயில் திண்ணக்கோணம்
ஓமாம் சித்தர் திண்ணக்கோணம் அருகிலுள்ள ஆமூர் ஸ்ரீரவீசுவரர் திருக்கோயிலில் கன்னி மூலையில் சிவலிங்க மூர்த்தியில் ஐக்கியம் அடைந்தார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர்
ஒவ்வொரு கோயிலுக்கும் ஏற்றவாறு பைரவர் எழுந்தருளியிருப்பர். இங்கு ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமியன்று சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன
அகத்தியர் சன்னதி
இக்கோயிலில் பல ஆண்டுகள் அகத்தியர் தவமிருந்து, இறைவனை வழிபட்டிருக்கிறார். இறைவனும், இறைவியும் அவருக்கு காட்சியளித்திருக்கின்றனர். இக்கோயிலில் சிவசக்தி வேலவன் சன்னதிக்கு அருகில் அகத்தியர் சன்னதி அமைந்துள்ளது.
சிவசக்தி வேலவன்
தமிழ்க் கடவுளாம் முருகப்பெருமான், வள்ளி - தெய்வசேனா சமேதராய் சிவசக்தி வேலவன் என்ற திருநாமம் கொண்டு பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். பக்தர்கள் வேண்டும் வரங்களைத் தந்தருளும் வேலவனை ஏராளமான பக்தர்கள் தரிசித்துச் செல்கின்றனர்.
வீணா தட்சிணாமூர்த்தி
குருவுக்கு அதிபதியான தட்சிணாமூர்த்தி, கோயிலின் கோஷ்டத்தில் அமைந்துள்ளார். அவருக்கு வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
அதே நேரத்தில் கோயிலின் உள்பிரகார மண்டபப் பகுதியில் வீணையுடன் தட்சிணாமூர்த்தி எழுந்தருளியிருப்பதும் தனி சிறப்புக்குரியது. நின்ற கோலத்தில் வீணா தட்சிணாமூர்த்தி எழுந்தருளியிருக்கும் நிலையில், அவர் யோக குரு என அழைக்கப்படுகிறார்.
துர்க்கை அம்மன்
இக்கோயிலின் கோஷ்டத்தில் அமைந்துள்ள துர்க்கை அம்மன் சன்னதியில் வாரந்தோறும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ராகுகால பூஜை நடைபெறுகிறது. இதில் பக்தர்கள் பங்கேற்று, தங்களது வேண்டுதல்களை நிறைவேறக் கோரி வணங்கிச் செல்கின்றனர்.
லட்சுமியுடன் லட்சுமி நாராயணர்
கருவறை சன்னதியின் வலதுபுறத்தில் சங்கர நாராயணர், லட்சுமியுடன் லட்சுமி நாராயணர், சாஸ்தா, வீணா தட்சிணாமூர்த்தி ஆகியோர் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளித்து வருகின்றனர்.
சாமரக்கன்னிகா
சுயம்பு பசுபதீசுவரர் சன்னதி கருவறை முன்புள்ள கோபுரத்தின் இடதுபுறத்தில் சமயக் குரவர்கள் நால்வரும், ஆதிலிங்கேசுவரர், சாமரக் கன்னிகாவும் எழுந்தருளியுள்ளனர். ராஜாக்களுக்கு சாமரம் வீசும் பணிப்பெண்கள் போல, இறைவனுக்கு சாமரம் வீசும் கோலத்தில் இவர் எழுந்தருளியிருக்கிறார். இதனால் இவர் சாமரக்கன்னிகா என அழைக்கப்படுகிறார்.
கோயிலில் சப்தமாதாக்கள், நவக்கிரகங்கள் சன்னதி அமைந்துள்ளன. இவைத் தவிர சனிபகவான் தனி சன்னதி கொண்டும், சூரியன், சந்திரப் பகவான்கள் தனித்தனி சன்னதி கொண்டும் இக்கோயிலில் எழுந்தருளியிருப்பது தனிச் சிறப்புக்குரியது.
சனிக்கிழமைகளில் சனீசுவர பகவானுக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெறுகின்றன.
பிச்சாடன மூர்த்தி
வழக்கமாக சிவாலயங்களின் கோஷ்டத்தில் பிரம்மா எழுந்தருளுவதுதான் வழக்கம். ஆனால், திண்ணக்கோணம் கோயிலின் கோஷ்டத்தில் பிச்சாடன மூர்த்தி மட்டுமே எழுந்தருளியிருப்பதும் தனி விசேஷம். மேலும், இறைவன் சன்னதியின் பின்பகுதியில் அர்த்தநாரீசுவரரும் எழுந்தருளியுள்ளார்.
கோயிலின் தல விருட்சமாக வில்வம் அமைந்துள்ளது. அது மட்டுமல்லாது, 27 நட்சத்திரங்களுக்குரிய மரக்கன்றுகளும் திருக்கோயில் வளாகத்தில் அமைந்துள்ளன.
திருவிழாக்கள்
வசந்த நவராத்திரி உற்ஸவம் இக்கோயிலில் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதைத் தவிர அகத்தியர் பூஜை ஆயில்ய நட்சத்திரத்தில் நடத்தப்பட்டு வருகிறது. மாசி மகம், விஜயதசமி வழிபாடு, கார்த்திகைத் தீபத் திருவிழா போன்ற திருவிழாக்களும் சிறப்பாக நடைபெறுகின்றன.
மாதந்தோறும் பிரதோஷ, பௌர்ணமி வழிபாடு, தேய்பிறை அஷ்டமி வழிபாடு, சங்கடஹரசதுர்த்தி, கிருத்திகை, கிரிவலம் போன்ற வழிபாடுகள் மாதந்தோறும் நடைபெற்று வருகின்றன. இவைத் தவிர 108 கோ பூஜையும் நடத்தப்பட்டு வருகிறது.
நடை திறப்பு:
இக்கோயிலில் இரு கால பூஜைகள் நடைபெறுகின்றன. காலை 8 மணிக்குத் திறக்கப்படும் கோயிலின் நடை இரவு 7.30 மணிக்கு மூடப்படும்.
⛳அமைவிடம்
திருச்சி விமான நிலையத்திலிருந்து சுமார் 46 கி.மீ. தொலைவு.
1.திருச்சி மத்திய, சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 38 கி.மீ. தொலைவு.
திருவானைக்கா, நெ.1 டோல்கேட், நொச்சியம், சிறுகாம்பூர், வாய்த்தலை, குணசீலம், ஆமூர், ஏவூர் வழியாக திண்ணக்கோணம் அமைந்துள்ளது.
2. திருச்சி மாவட்டம் முசிறியில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது,
மேற்கு மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் முசிறி வந்து, அங்கிருந்து திண்ணக்கோணத்துக்கு வேளகாநத்தம், ஏவூர் வழியாக வரலாம்.
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
🌼வாகனங்கள் ஆலயம் அருகில் செல்லும்.
ஆலயம் சிற்றூரின் உள்ளே பிரதான சாலையில் உள்ளது. ஆலயத்தின் அருகில் வாகனங்கள் செல்லும்.
நல்ல பூசை வழிபாடுகள் சிறப்பாக நடைபெறும் ஆலயம். தூய்மையாகவும், பராமரிப்புடனும் உள்ளது.
சுவாமி கருவரை அமைப்பு, நந்தி,மிகவும் வித்யாசமானது. லிங்கோத்பவ வலம்புரி விநாயகர், முற்றிலும் வேறுபட்ட அமைப்பு. அம்பாள் தனி சன்னதி சிறப்பு. பெரும்பாலும், கற்றளியாக இருப்பதால், ஆலயம் பூரணத்துவத்துடன் நல்லவழிபாட்டில் உள்ளதால், சிறப்பாக உள்ளது.
சிற்றூர் என்பதால் பெரிய கடைகள், தங்குமிடங்கள் வசதிகள் கிடையாது.
#Subbramசுப்ராம்🔱🇮🇳
நன்றி🙏15.02.2026
#சுப்ரம்அருணசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று🛕🛐
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்🇮🇳🔱
#சிவராத்திரியாத்ரா #லால்குடிவட்டம் 15.02.2026
No comments:
Post a Comment