Showing posts with label சம்பந்தர் அமுதம் - எண்ணலங்காரம். Show all posts
Showing posts with label சம்பந்தர் அமுதம் - எண்ணலங்காரம். Show all posts

Tuesday, July 21, 2020

எண்ணலங்காரம் பகுதி: நான்கு

#எண்ணலங்காரம்:
பகுதி : நான்கு

சினிமா வசனம் ஒன்று நினைவில் வந்தது..

'அறிந்தது, அறியாதது, 
தெரிந்தது, தெரியாதது, புரிந்தது, புரியாதது ... எல்லாம் எமக்குத் தெரியும்'
என்பார் ஈசர்
இதில் இறைவருக்கு எல்லாம் தெரியும் என்று புரிகிறது. அதை எப்படி நாம் உணரமுடியும்? அதை நம் திருநெறிய தமிழ் வல்லவர் திருஞானசம்பந்தர் தம் அருட்பாடல் கொண்டு விடை தருகிறார்.

🙏🛐🧘🙏🛐🧘🙏🛐🧘🙏
கருவிலே திரு அமையப் பெற்று, இறையருளால் ஞானப்பால் அருந்திய ஞானி, 'இவ்  வையம் வாழ யாம் வாழ'
ஏராளமான திருத்தலங்கள் சென்று தமிழ் பண்கள் அமைத்துப் பாடிய பதிகப் பாடல்கள் மிகப்பல. 

அவற்றில் நமக்குக் கிடைத்தவற்றை மூன்று திருமுறைகளாகத் தொகுத்து அமைத்துள்ளர்  நம் முன்னோர்.
முதலாம் திருமுறையில் 136, இரண்டாம் திருமுறையில் 122, மூன்றாம் திருமுறையில் 125 ம் மேலும் 3 திருப்பதிகங்களும் தொகுக்கப்பட்டுள்ளது. 
226 திருத்தலங்களில்  இவர் அருளிய  பதிகங்களின் எண்ணிக்கை மொத்தம் 386. இவற்றில் நமக்கு 4146 பாடல்கள் கிடைத்துள்ளன. 

இசைத் தமிழால் ஈசனை வழிபட 23 தமிழ்ப் பண்களில் இப்பாடல்கள் விளங்குகிறது.

இவர் அமைத்த 23 தமிழ் பண்கள்:

நட்டபாடை,  தக்க ராகம்,   
பழந்தக்க ராகம், தக்கேசி,  குறிஞ்சி,
வியாழக் குறிஞ்சி, மேகராகக் குறிஞ்சி, யாழ்மூரி, இந்தளம், சீகாமரம், காந்தாரம், பியந்தைக் காந்தாரம், நட்டராகம், செவ்வழி, காந்தார பஞ்சமம்,  கொல்லி,   கொல்லிக் கெளவாணம்,  கெளசிகம்,   பஞ்சமம்,   சாதாரி,  பழம்பஞ்சுரம், புறநீர்மை, அந்தாளிக் குறிஞ்சி ஆக 23 பண்கள்.

பாடல் வகையில்
வினாவுரை, திருவிராகம், திரு இயமகம், வெள்ளிப் பாட்டு, நாலடிமேல் வைப்பு, திருமுக்கால், திருப்பாசுரம், 
தனித்திருவிருக்குக்குறள், ஈரடிமேல்வைப்பு,  நாலடிமேல்வைப்பு, இன்னும் பிறவுமாம்.

🙏🛐🧘🙏🛐🧘🙏🛐🧘🙏
இப்படிப்பட்ட தனித்தமிழ் சிறப்பு வாய்ந்த இறையுணர் திருமுறைப் பாடல்களில்   மேலும் ஒரு மகுடமாக இறைவனை ஒன்று இரண்டு என்று வைத்துப் பாடும் எண்ணங்காரப் பாடல் வரிசையில்  
இதோ ஒன்று:

சுவாமிகள் அருளிய  மூன்றாம் திருமுறையில் 380 வது பதிகமாக திரு ஓமாம்புலியூர் என்ற திருத்தலம்.
 (கொள்ளிடம் வடகரையில் மயிலாடுதுறை - மனல்மேடு - திருப்பனந்தாள் சாலை வழியில், மனல்மேடு - முட்டம் (கொள்ளிடம் பாலம்) தாண்டி காட்டு மன்னார்குடி பாதையில் சுமார் 1 கி.மீ  தென்புறமாக உள்ள தலம்.
சுவாமி : பிரணவ வியக்ரபுரீஸ்வரர் , துயர்தீர்த்தநாதர், அம்பிகை: பூங்கொடி நாயகி).
🙏🛐🧘🙏🛐🧘🙏🛐🧘🙏
மணந்திகழ் திசைகள் எட்டும்ஏ ழிசையும்
     மலியும் ஆறு  அங்கம்ஐ  வேள்வி

இணைந்தநால் வேதம் மூன்றுஎரி இரண்டும்
     பிறப்பென  ஒருமையால்   உணரும்

குணங்களும்  அவற்றின்  கொள்பொருள் குற்றம்
      அற்றவை  யுற்றதும்  எல்லாம்

உணர்ந்தவர் வாழும்  ஓமமாம் புலியூர்
   உடையவர் வடதளி  யதுவே.

- தேவாரம் மூன்றம் திருமுறை
-  திருத்தலம் - திருஓமாம்புலியூர்
- பூங்கொடி மடவாள் என்று தொடங்கும்
- 380 வது பதிகம். 
-  6வது பாடல்.

🙏🛐🧘🙏🛐🧘🙏🛐🧘🙏
இந்தப் பாடல் எண்கள் இறங்குமுகமாகவும் சுவாமியின் பெருமை உயர்ந்தும் வைத்துள்ளது
கவணிக்க வேண்டும்.

எட்டு : 
எண் திசைகள்: கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, வடமேற்கு, தென்மேற்கு என்னும் எட்டுத் திசைகளாகவும் விளங்குகிறார்.

ஏழு:
இசையின் எழுவகை ஓசை : குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம். 
ஏழு சுரங்கள்: சட்சமம், ரிஷபம், காந்தாரம், மத்யம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் (ச ரி க ம ப த நி).

ஆறு:
ஆறு அங்கம் என்றது வேதங்களின்
சிஷை (எழுத்திலிலக்கணம்), வியாகரணம் (சொல்லிலக்கணம்),
நிருக்தம் (நிகண்டு),  
கல்பம் (கர்மாஷ்ட்டன முறை),
சந்தஸ் (பாவிலக்கணம்),
ஜ்யோதிஷம் (சோதிடம்) என்பதும்
    சோதிடத்தில் ஆறு அங்கம்
  ஜாதகம், கோள், நிமித்தம், பிரச்சனம்,     
  முகூர்த்தம், கணிதம்.
என எதிலும் வியாபித்துள்ளமை.

ஐந்து :
ஐந்து வேள்விகளாக நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற பஞ்ச பூதங்களாகவும், ஐந்து தன்மையான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்பவையாகவும் இருப்பவன்.

நான்கு:
வேதங்கள் : பதி, பசு, பாசம் என்ற மூன்று பொருளையும் ஆய்ந்துணரும்
இருக்கு, யஜூர், சாம, அதர்வனம் என்ற நான்கு மறைகளாக விளங்குபவர்.

மூன்று :
மூன்று வகை நெருப்புத் தன்மைகளான
 ஆகவனீயம், காருகபத்தியம், தட்சனாக்கினி  என்பது 
எரியும் தீ யின் சூட்டின் ஸ்பரிசம், ஒளியின் வண்ணம், எரியும் போது விளையும் ஓசை    இவையாகவும் உள்ளார்.

இரண்டு :
இரு பிறப்பு எனப்படுவது இம்மை மறுமையாகவும், சிவம், சக்தி என்னும் இரு வேறு உருவாகவும், முடிவும், முதலாகவும் இருப்பவர்.

ஒன்று :
ஒருமை மனத்தால் உணரும் எண்ணத்தில் ஒன்றாகவும்
எல்லா குணங்களும் அவற்றின் பொருளாகவும் குற்றமற்றவை, குற்றமுள்ளவை இவற்றை அனைத்தையும் உணர்ந்து வீற்றிருப்பவரே இறைவன்.

என இறைவர்  எல்லாம் அறிந்து, புரிந்து, தெரிந்து, இறைவன் எல்லாமாக விளங்குவதை உணர்ந்து போற்றி பரவுகிறார்.
🙏🛐🧘🙏🛐🧘🙏🛐🧘🙏
இப்படிப்பட்ட  பாடல்கள் தந்த தமிழ் ஞானசம்பந்தார் பாடல்கள் ஒத  எழில் பெற்று விளங்கலாம் என்பதை உணர இதோ ஒரு பாடல்:
🙏🛐🧘🙏🛐🧘🙏🛐🧘🙏
இசை அமர் கழுமல நகர் இறைதமிழ் விர
   கனதுஉரை  இயல்வள

இசைமலி தமிழ்ஒரு பதும்வல அவர்உல
   கினில் எழில் பெறுவரே 
என்பதும்
(பாடல் 238)
முதல் திருமுறை 22 பதிகம்)
திருமறைக்காடு சிலை தனை எனத் தொடங்கும் இப்பதிகத்தின் திருக்கடைக் காப்பு பாடலில் குறிப்பிட்டுள்ளமையும்
கவனித்துணரத்தக்கதாம்

இதன் பொருள் :
கழுமலர் நகர் இறை தமிழ் விரகன்- ஞான சம்பந்தர்.
இயல் வள இசை மலி தமிழ் - உறுதி பயக்கும் சொல்லாகவும் உள்ளத்தை நெகிழ வைக்கும் இனிமையான இசை உடையதாகவும் விளங்கும் சிறப்பான தமிழ் பதிகங்கள் ஓத எழில் பெற்று உயர்வார் என்பதாம்.
🙏🛐🧘🙏🛐🧘🙏🛐🧘🙏
சிந்தனையும் பகிர்வும்:
என்றும் அன்புடன்
சுப்ராம் அருணாசலம்
காரைக்கால்.
🙏🛐🧘🙏🛐🧘🙏🛐🧘🙏

எண்ணலங்காரம் : பகுதி: மூன்று

#எண்ணலங்காரம் :
பகுதி: மூன்று

தமிழ் எங்கள் உயிர். தமிழை பழித்தவனை தாய் தடுத்தாலும் விடேன். கொலை வாளினை எடடா கொடியோர் செயல் அறவே.  
என்றல்லாம் நம் தமிழ் மொழியின் மீது அளவில்லா பாசம் வைத்து அது முற்றி பழி பாவத்திற்கு அஞ்சா நிலை எய்தியவர் கூற்றுகளால் தமிழின்  உயர் நிலைச் சிறப்பை கூட்டிக் காட்டிடுவர் ஒருபுறம்.

இருப்பினும்

இறையருள் பெற்ற அருளாலர்கள், தெய்வத் தமிழில்உயர்ந்த கலைச் சொற்களையும், ஏராளமான சந்தங்களையும் வைத்து தந்த
அருமையான அருட்பாடல்களில்
 நம் தமிழ் மொழியின் நறுமணம் பாலிற்படு நெய்போல்  கலந்துள்ளது.

யாவருக்கும் மேலான இறைவனை உணர்த்த    இந்த அருளாலர்கள் 
 இனிய தேன் தமிழ்பாடல்களால் அருச்சித்து  பாடல் பெற்ற பாங்கு 
நம்மால் வணங்கி உணரத்தக்கதாய் விளங்குகிறது.

அவற்றில் ஒரு பாடல் பற்றி சிந்திப்போம்:

தெரிந்தோ தெரியாமலோ செய்த செயல்களின் தன்மைக்கு ஏற்ப வந்தடைவது பாவம்.

எதிர்பாராதவிதமாகப் பிறர் செய்யும் தீய செயலானது தொடர்பின்றித் தன் மேல் திணிக்கப் பெற்று வருவது பழி.

இந்த பாவம், பழி போக்க என்ன செய்வது
கவலை வேண்டா

இதோ  இறையருள் பெற்று ஞானப்பால் அருந்திய ஆளுடையபிள்ளையார் 
தமிழ் பா ஒன்று தருகிறார்.

இறைவனை ஒன்று இரண்டு என்று எண்ணம் வைத்து வரும் எண்ணலங்காரம் மிக்க அற்புத பாடல் இது.

🙏🙏🙏
இரண்டாம் திருமுறையில் திருவாஞ்சியம் என்னும் தலத்தில் வன்னி கொன்றை எனத் தொடங்கும்  பதிகத்தில் வரும் மூன்றாவது பாடல்:

மேவில் ஒன்றர் விரிவுற்ற
      இரண்டினர் மூன்றுமாய்

நாவில் நாலர் உடல் அஞ்சினர்
        ஆறர் ஏழோசையர்

தேவில் எட்டர் திரு வாஞ்சிய
            மேவிய  செல்வனார்

பாவந் தீர்ப்பர் பழி போக்குவர்
             தம்மடி யார் கட்கே.

- இரண்டாம் திருமுறை 
- தலம் (143) திருவாஞ்சியம்
- பாடல் 3.
🙏🙏🙏
விளக்கம்:

ஒன்று.
ஒப்பற்ற ஒருவனாய் ஈசன் விளங்குகின்றார்.

இரண்டு :
பரந்து விரிந்து சிவம், சக்தி என்று இரட்டித்த தன்மையுடையவனாக உள்ளார்.

மூன்று :
இச்சை, ஞானம், கிரியை என்ற மூன்றாகவும், மும்மூர்த்திகளாக மூன்று தொழில்களையும் செய்பவராகவும்,
ஒன்றாகவும் வேறாகவும், உடனாகவும்
விளங்குகின்ற தன்மையாகவும் உள்ளார்.

நான்கு :
பதி, பசு, பாசம் என்ற முப்பொருளையும் ஆய்ந்து உணர்த்த  இருக்கு, யஜூர், சாம, அதர்வணம்  என்னும் நான்கு வேதங்களாகவும் உள்ளார்.

ஐந்து :
பஞ்சபூதமாகிய நிலம், நீர் நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் உடலாக இருக்கும் தன்மையும்,
பரை, ஆதி, இச்சா, ஞானம், கிரியை என்னும்  சக்திகள் அடங்கிய ஆதிசக்தி, பராசக்தி, இச்சாசக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி என்ற ஐந்து வகை உடலுருவம் கொண்டும் உள்ளது உணரத்தக்கது.

ஆறு:
வேதத்தின்   ஒலி, சொல், பொருள், செயல்முறை, செய்யுள் இலக்கனம், சோதிடம் என்ற ஆறு அங்கங்களாய் விளங்குவது.
ஆறாகிய கங்கையைச் சூடியருளும் பாங்கு.

ஏழு :
ஏழிசையாகிய சஞ்சம், ரிஷபம், காந்தாரம், மத்யம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் (ச ரி க ம ப த நி ) எனத் திகழ்பவர்.

எட்டு :
எண்குணத்தவன் அவை: 
தன் வயத்தனாதல்,  
தூய உடம்பினனாதல்,  
இயற்கை உணர்வினனாதல்,  முற்றுணர்தல்,  
இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்குதல்.   
பேரருளுடைமை,   
முடிவில் ஆற்றலுடைமை,   
வரம்பில் இன்பமுடைமை 
என்னும் எட்டுக் குணங்களை உடையவர்.
என்பதும்
தெய்வத்தன்மையில் ஐம்பூதங்கள் மற்றும் சூரியன், சந்திரன் என்ற இரு சுடர்கள், மற்றும் ஆன்மா ஆகியவற்றால் எழும் தன்மையையும் உணர்தல் வேண்டும்.
🕉️🙏🛐🙏🕉️🙏🛐🙏🕉️🙏
இந்த எட்டு தன்மையும், குணங்களும் பொருந்திய இறைவனை உணர்ந்து தொழுபவர்களின் பாவம், பழியை போக்கி அருள் தருவார் ஈசன்.

என்று அருளுகிறார் திருஞானசம்பந்தப் பெருமான்.

இவ்வகையான எட்டு குணத்தையும் கொண்ட
யாவற்றிற்கும் மேலான இறைவனை உணர்த்தி
நம் தேன் தமிழில் பாடப் பெற்ற பாங்கு எண்ணிப் போற்றி வணங்குவோம்.
🙏🛐🙏🛐🙏🛐🙏🛐🙏
சிந்தனையும் பகிர்வும்:
என்றும் அன்புடன்
சுப்ராம் அருணாசலம்.
காரைக்கால்.
🙏 🛐🙏🛐🙏🛐🙏🛐🙏

எண்ணலங்காரம் பகுதி : இரண்டு

#எண்ணலங்காரம் :
பகுதி: இரண்டு

தமிழருக்கு என்று மிகவும் பிரசித்த குணம் ஒன்று உண்டு, அது தன் மொழி சிறப்பு உலகில் எம்மொழிக்கும் இல்லை என்ற இறுமாப்பு.

இதை நிறுபிக்கும் விதமாக நமது திரு நூல்களில் அமைந்துள்ள பாடல்கள், கவிதைகளில் நிறைந்திருக்கும் சந்த அமைப்புகள் எம்மொழியிலும் இல்லாததே.

அருட்பாடல்களை பாடிய நம் அருளாலர்களால் இயற்றப்பட்ட பதிகங்களில் இதைக் காணலாம்.

துன்பத்திற்கு விணதான் காரணம் அதனை விலக்கும் எளிய வழியிதுவே.

' ஒரு நெறிய மனம் வைத்துணர் ஞானசம்பந்தன் உரை செய்த திருநெறிய தமிழ் வல்லவர் தொல்வினைதீர்தல் எளிதாமே' 
என்னும் கூற்றுக்கிங்க

இங்கு அவர் தம் எண்ணலங்காரப் பாடல்களை உய்த்து உணருவோம்.

முதலாம் திருமுறையில்
(79) திருக்கழுமலம் (சீர்காழி) தலத்தில் அருளப்பட்ட 
அயில் உறு படையினர் எனத் தொடங்கும் பதிகத்தில் வரும்
 3வது பாடல் பற்றிய பதிவு :

எண்ணிடை ஒன்றினர் இரண்டினர் உருவம்
எரியிடை மூன்றினர்  நான் மறையாளர்

மண்ணிடை ஐந்தினர்  ஆறினர்  அங்கம்
வகுத்தனர்  ஏழிசை எட்டிருங் கலைசேர்

பண்ணிடை ஒன்பதும் உணர்ந்தவர் பத்தர் 
பாடிநின்று  அடிதொழ மதனனை வெகுண்ட

கண்ணிடைக் கனலினர் கருதிய கோயில் கழுமல நினையநம்
வினைகரிசு அறுமே.

- தேவாரம் - முதல் திருமுறை
- பதிகம் 79 - திருக்கழுமலம் (சீர்காழி)
- பாடல் 3.

இத்திருப்பாடலில் இறைவனை ஒன்று இரண்டு மூன்று என்று எண்ணலங்காரத்தில் விளக்கி நிற்கும் சிறப்பு:
ஒன்று:
ஈசனார், எண்ணத்தில் ஒன்றாக இருப்பவர்

இரண்டு :
சிவம், சக்தியாக இரு உருவம் கொண்டவர்

மூன்று :
தீ யாக இருப்பவர். தீயின் மூன்று தன்மைகள் ஸ்பரிசம், ஒளியின் வண்ணம், எரியும் போது விளையும் ஓசை.

நான்கு :
நான்கு மறைகளை அருளியவர்
இருக்கு, யஜூர், சாம, அதர்வண வேதங்கள்

ஐந்து:
மண்ணிடையில்  சத்தம், ஸ்பரிசம்,ரூபம், ரசம், கந்தம் என்று ஐந்து தன்மாத்திரைகளாக விளங்குபவர்.

ஆறு:
வேதத்தின் 
எழுத்திலக்கணம், சொல்லிலக்கணம், நிகண்டு (பொருள்) இலக்கணம், செயல்முறை உறைப்பது (கல்பம் என்ற கர்மாஷ்டை முறை), பாவிலக்கணம், சோதிடம் (கோள் நிலைகளை வைத்துக் காலநிலையறிந்து ஆராய்வது)
என்ற இவ்வாறு ஆறு அங்கங்களை வகுத்தவர்

ஏழு:
ஏழிசையாகிய சஞ்சமம், ரிஷபம், காந்தாரம், மத்யம், பஞ்சமம், தைவதம், நிஷாரம் (ச ரி க ம ப த நி)  
இதன் தன்மையான
குரல், கைக்கிளை, துத்தம், இழை, இளி, விளரி, தாரம் எனவும் வகுத்தவர்.

எட்டு :
அட்டமூர்த்தியாக (அஷ்டாவதானம்) விளங்குபவர்

ஒன்பது :
ஒன்பான் பண்கள் கொண்ட இசையாய்
இருப்பவர்.

இவ்வாரான ஒன்பது தன்மைகளைக் கொண்ட ஈசனை உணர்ந்து பக்தர் தொழுதால் வினையானது அழிந்தொழியும் என்று அற்புதமாக
உரைத்தார் நம்
திருநெறிய தமிழ் வல்ல திருஞானசம்பந்தப் பெருமான்.

சிந்தனையும் பகிர்வும்:
என்றும் அன்புடன் 
சுப்ராம். அருணாசலம்
காரைக்கால்.

எண்ணலங்காரம் பகுதி : ஒன்று

#எண்ணலங்காரம் : 
பகுதி : ஒன்று

திருவிளையாடல் படத்தில் சிவனை அவ்வையார் ஒன்று, இரண்டு... என்று ஏற்றிப் பாடுவார். 

ஒன்றானவன் உருவில் இரண்டானவன்...

இதுதான் எண்ணலங்காரப் பாடல்.

எண்ணலங்கராம் தமிழ் இலக்கனத்தில்
ஆகுபெயர் வகையைச் சார்ந்தது:

ஓர் எண்ணால் அளவையின் பெயர் அந்த எண்ணிக்கையில் உள்ள பொருளுக்கு ஆகி வருவது:
ஒன்று பெற்றால் ஒளிமயம்
இதில் ஒன்று என்பது குழந்தைக்கு ஆகி வருவது
 
நமது தமிழ் மொழியின் சிறப்புகளில் ஒன்று. 

இது குறித்த சிந்தனைப் பதிவு:

பலருக்கும் இந்த எண்ணலங்கார பாடல்கள் குறித்து தெரிந்து முன்பே சுவைத்திருந்தாலும்.
நாம் இங்கு பக்தி சுவையில்
இந்த பாடல் வகை பற்றி பார்க்கலாம்.

தமிழ் சுவையுடன் பக்தியைப் போற்றியவர் நம் திருஞானசம்பந்தர்.
முதலாம் திருமுறையில்
திருவீழிமிழலை தலத்தில் வரும் சடையார்புனல் என்று தொடங்கும் பதிகத்தில்
 
ஈராய் முதல் ஒன்றாய்இரு
பெண் ஆண் குணம் மூன்றாய்
மாமறை நான்காய் வரு
பூதம் அவை ஐந்தாய்
ஆறார் சுவை ஏழோசையோடு
எட்டுத்திசை தானாய்
வேறாய் உடன் ஆனான்இடம்
வீழிம்மிழ லையே.

(1.11.2)  (109)
- தேவாரம்  - முதலாம் திருமுறை
- 11. திருவீழிமிழலை பதிகம்
- பாடல் 2.
விளக்கம்:

ஒன்று :
உயிர்களைத் தோன்றச் செய்வதும் ஒடுங்கும் காலத்தில்தானே ஏற்பதும்
இறைவன்.

இரண்டு உருவங்கள்
ஆண் பெண் உருவில் இரண்டாகத் தோன்றுகிறார்.

மூன்று குணங்கள்
சத்துவம், ரஜோ, தாமசம் 

நான்கு    மறைகள்
இருக்கு, யஜூர், சாமம், அதர்வனம்

ஐந்து    பூதங்கள்
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்

ஆறு   சுவைவகைகள்
உவர்ப்பு, துவர்ப்பு, கார்ப்பு, கைப்பு (கசப்பு) 
புளிப்பு, இனிப்பு

ஏழு  (ஒலி ஓசை)இசை
குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம்
எழு சுரங்கள்
சட்சம் (சஞ்சமம், ரிஷபம், காந்தாரம், மத்யமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம்
(ச ரி க ம ப த நி )

எட்டு  
எட்டு திசைக் கோணங்கள்
கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு,
வடகிழக்கு, தென்கிழக்கு, வடமேற்கு, தென்மேற்கு

இப்பாடலில் ஈசன் யாவுமாய் என்பது முத்தும், மணியும் கலந்தும் என்றும்,
பாலும், சர்க்கரையும் பொருந்திக் கலந்தது போல உடனாகவும் 
என்று உணர வேண்டும்.

- சிந்தனைப் பகிர்வு:
என்றும் அன்புடன்
சுப்ராம் அருணாசலம்
காரைக்கால்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் 19.7.26

மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்   மதுரையின் நடுவே அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இச்சிவன் கோயிலின் மூலவர் சுந்தரேசுவரர் மற்றும் அம்பிகை ம...