அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் தென்காசி மாவட்டம்.
அருணகிரிநாதரால் பாடப்பெற்ற புகழுடையது இத்தலம்.
வழிபாடு: குழந்தை பாக்கியம் வேண்டுபவர்களும், திருமணத் தடை உள்ளவர்களும் இக்கோவிலை முக்கிய வழிபாட்டுத் தலமாக கருதுகின்றனர்.
தலபுராணம்
திரேதா யுகம் - ராமாயணக் காலம். சீதையைத் தேடிச் சென்ற அனுமன் தாகம் தீர்க்க தண்ணீர் தேடி அலைந்தார். அப்போது அவர் இருந்த பகுதியில் தண்ணீர் கிடைக்காமல் போக, தன் வால் நுனியின் கூர்மையால் பூமியை அகழ்ந்து சிற்றாறு ஒன்றை உருவாக்கித் தன் தாகத்தைத் தணித்துக் கொண்டார்.
பின்னாளில் இலங்கைக்குச் செல்லும் வழியில் ராமபிரானும் இந்த நதியில் தாகம் தணித்தாராம். இந்த நதிக்கு அனுமன் நதி என்றே பெயர். இதன் நீர், பிணிகளைத் தீர்க்கும் வல்லமை கொண்டது என்கிறார்கள் இப்பகுதி மக்கள். அற்புதமான இந்த அனுமன் நதிக் கரையில்தான் அழகுற கோயில்கொண்டிருக்கிறார் ஆய்க்குடி முருகன்.
பல நூறு ஆண்டுகளுக்கு முன் பொதிகை மலைச் சாரலில் இருந்த இன்னொரு மலைக்குன்றம் 'ஆய்' என்னும் அரசன் ஆண்ட மலைப் பகுதி என்பதால் ஆய்க்குடி.
இந்தப் பகுதியில் மல்லபுரம் என்றோரு கிராமம். அங்கே வசித்த மல்லர் என்ற சந்நியாசி சிறந்த முருகபக்தர். அவர் ஆய்க்குடியில் அனுமன் நதிக்கரையிலேயே ஜீவசமாதி அடைந்தார். அந்த இடத்தில் அரச மரம் ஒன்றை நட்டு, அவரின் குடும்பத்தாரும் அக்கம்பக்கத்தினரும் முறைப்படி வழிபட்டு வந்தார்களாம்.
இந்த நிலையில், மல்லபுரம் - நஞ்சைப்புரவு ஏரிக்கரையில் தூர்வாரும் போது நான்கு திருக்கரங்களுடன் கூடிய குழந்தை வடிவ முருகன் சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. முருகப்பெருமானின் விருப்பப்படி அந்தச் சிலை, ஆய்க்குடியில் உள்ள மல்ல சித்தரின் ஜீவசமாதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்கிறார்கள். தொடக்கத்தில் சிறு ஓலைக் குடிலாக இருந்த கோயிலை, 1931-ம் ஆண்டு திருவிதாங்கூர் சமஸ்தானத்து அரசக் குடும்பத்தினர் புனரமைத்துக் கற்றளிக் கோயிலாக எழுப்பி வழிபட்டார்களாம்.
ஆலய அமைப்பு
ஆய்க்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் அனுமன்நதிக்கரையில் அமைந்துள்ளது கிழக்குப் பார்த்த அமைப்பில் உள்ளது.
இங்கு மூலவராக பாலசுப்பிரமணியர் மற்றும் உற்சவராக முத்துக்குமாரர் வடிவில் இறைவன் காட்சி அளிக்கிறார்.
மூலவர் பாலசுப்பிரமணிய சுவாமி, பாலகனாக ஒரு முகத்துடனும் நான்கு கரங்களுடனும் பத்மபீடத்தில் தாமரைப் பூவின் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். இவர் அருகில் உள்ள மயிலின் முகம் இடப்புறம் பார்த்தபடி உள்ளது.
வேம்பு, கறிவேப்பிலை, அரச மரம், மாதுளை, மாவிலங்கு ஆகிய பஞ்ச விருட்சங்களின் கீழும் விநாயகர், சூரியன், மகாவிஷ்ணு, அம்பிகை, மகேஸ்வரர் ஆகிய பஞ்ச தெய்வங்கள் சூழவும் அருள்கிறார்
இது வேறெங்கும் காண்பதற்கரிய அமைப்பு என்கிறார்கள் பக்தர்கள்.
மூலவருக்கு ஹரிராம சுப்பிரமணியர் என்ற பெயரும் உண்டு.
மூலவரைப் போலவே அமைந்த உற்சவர் முத்துக்குமார சுவாமி மயில் வாகனத்தில் நின்ற கோலத்தில் உள்ளார்.
ஸ்தல விருட்சம்: சிவனும் சக்தியும் குடியிருக்கும் வகையில் அரசு, வேம்பு, மாதுளை, மா, கறிவேப்பிலை ஆகிய ஐந்து மரங்கள் இணைந்த பஞ்சவிருட்சம் உள்ளது.
கோவிலின் சிறப்பம்சங்கள்:
படிப்பாயசம் நிவேதனம்
இங்கு தினமும் 'படிப்பாயசம்' நைவேத்தியம் செய்யப்படுவது முக்கிய சிறப்பாகும்.
ஆய்க்குடி முருகன் கோயிலின் படிப்பாயசம் பிரசித்தி பெற்ற பிரசாதம் ஆகும். இத்தலத்தின் முருகன் குழந்தைப் பருவத்தினன். ஆகவே இதை அனுமன் நதிக்கரையின் படித்துறையில் அமர்ந்து அருந்தினால், குழந்தைப் பேறு வாய்க்கும் என்பது நம்பிக்கை.
குழந்தை பேறு வேண்டுவோர் இங்கு வந்து வழிபட்டால் விரைவில் மழலை பேறு கிட்டும். தங்கள் வேண்டுதல் நிறைவேறிய பிறகு, சுக்கு, சீரகம் மற்றும் வெல்லம் கலந்து செய்யப்படும் இந்தப்
பாயாசத்தை நிவேதனமாக படைத்து அதனை கோவிலுக்கு அருகில் ஓடும் அனுமன் நதிக்கரையில் உள்ள படியில் ஊற்றி சிறுவர்களை அருந்த சொல்கிறார்கள். இதனை படிப்பாயாச நிவேதனம் என்கிறார்கள். சிறுவர்கள் உருவில் முருகனே வந்து பாயாச நிவேதனத்தை ஏற்பதாக பக்தர்களின் நம்பிக்கை
‘குழந்தைப் பேறு இல்லாதவர்கள் இந்தக் கோயிலுக்கு வந்து தொட்டில் கட்டி, முருகனை தரிசித்து வழிபட்டு, படிப்பாயசம் பெற்றுச் சாப்பிட்டால், விரைவில் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும்’ என்று நம்பிக்கையுடன் சொல்கிறார்கள் பக்தர்கள். இந்தப் பாயசத்தைப் பக்தர்களுடன் இணைந்து முருகப்பெருமானும் அருந்துவதாக ஐதிகம்.
மதுரையில் வாழ்ந்த பட்டு வணிகர் ஒருவர் குழந்தை வரம் வேண்டிப் பல கோவில்களுக்குச் சென்று, இறுதியாக ஆய்க்குடிக் கோவிலுக்கு வந்து பாலசுப்பிரமணிய சுவாமியைத் தனக்குக் குழந்தை பிறந்தால் முருகனுக்கு வைரவேல் சாற்றுவதாக வேண்டிக் கொண்டார். அவருக்குக் குழந்தைப் பேறு கிடைத்தது. ஆனால் அவர் தனது வேண்டுதலை மறந்து போனார். முருகன் வணிகரின் மனைவியின் கனவில் தோன்றி வேண்டுதலை மறந்து போனதை நினைவுறுத்தினார். தன் மறதிக்கு வருந்தி கடவுளிடம் மன்னிப்புக் கோரிய வணிகர் தன் வேண்டுதலை நிறைவேற்றும் முகமாக, வைரவேலை முருகருக்குச் சாற்றி ஆண்டுதோறும் படிப்பாயசம் நிவேதனம் செய்தார்.
விழாக்கள்
கந்த சஷ்டி, தைப்பூசம், மாசி மகம், வைகாசி விசாகம் ஆகியவை அன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
திருச்செந்தூருக்கு அடுத்தபடியாக சூரசம்ஹார வைபவம் வெகு விமர்சையாக நடைபெறும் தலம் இது. தீபாவளிக்கு மறுநாள் கொடி ஏற்றப்பட்டு 7 நாள்கள் கந்தசஷ்டித் திருவிழா கோலாகலமாக நடை பெறும். விழாவின் 5-ம் நாளன்று பொட்டு குழைக்கும் வைபவம் நடக்கும். அப்போது முருகப்பெருமானின் வேலாயுதம் தலைகீழாக வைக்கப்பட்டு, சூரபத்மனுக்குத் தன் வீரத்தை வெளிப்படுத்தும் விதமாக `போரிட நான் தயார்’ என்று முருகன் அறிவிப்பதைக் குறிக்கும் வைபவம் இது என்கிறார்கள் பக்தர்கள்.
திருச்செந்தூரில் பன்னீர் இலை விபூதி விசேஷம். அதேபோன்று இங்கே தரப்படும் அரச இலை விபூதி மகத்துவமானது. இங்கே சூர சம்ஹார வைபவத்தின்போது மனிதர்களே சூரபத்மனைப் போன்று வேடமிட்டுக் களம் இறங்குகிறார்கள். இது இத்தலத்தின் தனிச் சிறப்பு.
ஆய்க்குடி முருகன் கோயில்
இங்கே புனித நதியை உருவாக்கிய ராம பக்தரான அனுமன் மீதும் பாலசுப்ரமணிய சுவாமி மீதும் கொண்ட பக்திமிகுதியால், இங்குள்ள மக்க ளில் பலரும் தங்கள் குழந்தைக்கு `ராம சுப்பிரமணியன்’ என்றே பெயர் சூட்டுகின்றன. நீங்களும் ஒருமுறை ஆய்க்குடி முருகனைத் தரிசித்து அருள் பெற்று வாருங்கள்.
கல்யாண வேண்டுதல், உத்தியோகத்தில் உயர்வு, தொழிலில் மேன்மை, பொருளாதார வளம், குடும்பச் செழிப்பு... என என்ன வேண்டுதலாக இருந்தாலும் ஆய்க்குடிக்கு வந்து முருகப்பெருமானை மனமுருக வழிபட்டுச் செல்கிறார்கள் பக்தர்கள். தங்கள் வேண்டுதல் பலித்ததும் மணி எடுத்து வைத்தும், அன்னதானம் வழங்கியும் நேர்த்திக்கடனை நிறைவேற்றுகிறார்கள்.
அமைவிடம்
தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தில், குற்றாலத்திலிருந்து சுமார் 12 கி.மீ தொலைவிலும், தென்காசியில் இருந்து 7 கி.மீ தொலைவிலும் ஆய்க்குடி என்னும் பேரூராட்சியில் தென்காசியிலிருந்து சுரண்டை செல்லும் சாலையில் 5 கிமீ தொலைவில் உள்ள நான்முனைச் சாலையின் வலப்புறத் திருப்பத்தில் இருந்து 6 கிமீ தூரத்தில் ஆய்க்குடி கிராமம் உள்ளது
செங்கோட்டையில் இருந்து கிழக்கில் சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் இந்த கோயில் அமைந்துள்ளது.
நன்றி🙏 18.7.2026சுப்ராம் மீள்தரிசனம்
#என்றும்_அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் #ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
No comments:
Post a Comment