திருச்செந்துறை,ஸ்ரீ சந்திரசேகர சுவாமி கோவில்
திருச்சி அருகே அந்தநல்லூருக்கு அருகில் திருச்செந்துறை என்ற ஊரில் இப்போது “சந்திர சேகர ஸ்வாமி கோயில்“ என்று அழைக்கப்படும் இக்கோயிலானது திருஞான சம்பந்தரால் பாடல் பெற்றது. இக்கோயில் பல்லவர் காலத்தில் இருந்த போது மண் தளியாக இருந்திருக்கலாம். இதை கொடும்பாளூர் பூதி விக்கிரம கேசரியின் மகளும், அரிஞ்செயன் மனைவியாகிய ஆதிச்ச பிடாரியால் கற்றளியாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இக்கோயிலானது கல்வெட்டுகளில் ஆதித்தன் காலத்தில் திருச்செந்துறை பரமேஸ்வர் என்றும் முதலாம் பராந்தகன் காலத்தில் திருச்செந்துறை கற்றளி பரமேஸ்வர் , “திருச்செந்துறை கற்றளி பெருமானடிகள்“ ,திருச்செந்துறை மகாதேவர் என்றும் ராஜேந்திரன் காலத்தில் திருச்செந்துறை உடைய மஹாதேவன் என்றும், குலோத்துங்கன் காலத்தில் திருச்செந்துறை மஹாதேவர் என்றும் விக்ரம சோழன் காலத்தில் திருச்செந்துறை உடையார் என்றும், இரண்டாம் ராஜராஜன் காலத்தில் திருச்செந்துறை தேவர் என்றும் அழைக்கப்பட்டுள்ளது.
இக்கோயிலில் உள்ள இறைவன் சந்திரசேகரர் ஆவார். இறைவி “மானேந்தியவல்லி“ ஆவார். மானும் மழுவும் ஏந்தி இருப்பதால் இப்பெயர். மூலவர் சுயம்பு வடிவானவர்.
இக்கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள அல்லூர் வாய்க்கால் இன்றும் இருப்பது சிறப்புக்குரியதாகும். இக்கோயில் இருக்குமிடத்தை ‘உறையூர் கூற்றத்து பிரம்மதேயம் ஈசானமங்கலம்’ என்று ஒரு கல்வெட்டு கூறுகிறது.
இக்கோயிலின் சுவர்ப்பகுதியில் ஏராளமான கல்வெட்டுகள் பல வரலாற்றுச் செய்திகளை உள்ளடக்கியுள்ளன. அக்காலத்தில் நிலமளக்கப் பயன்படுத்தப்பட்ட அளவுகோல் ஒன்று கருவறையின் தென்சுவரில் செதுக்கப்பட்டு அதன் அருகிலேயே ‘நிலமளந்த கோல்‘ என்று கல்வெட்டாகவும் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த அளவுகோல் பற்றி இவ்வூருக்கு அருகில் உள்ள அந்தநல்லூர் வட தீர்த்த நாதர் கோயில் கல்வெட்டில் ‘திருச்செந்துறை ஸ்ரீ் விமானத்து வெட்டிக்கிளடக்கும் பெருங்கோலால் நிலம் மூன்று மாவும்‘ என்று குறிப்பிடுவதால், இப்பகுதியில் நிலமளக்க இந்த அளவுகோலே பயன்பட்டது என்பதை உறுதி செய்ய முடிகிறது.
செம்பியன் இருங்கோவேளான் என்ற பூதி ஆதித்தன் பிடாரன் என்பவன் இக்கோயிலில்“பஞ்ச மகா சப்தம் “ என்ற இசை வழி பாட்டிற்குத் தானம் அளித்துள்ளான். கரடிகை, சங்கு, மத்தளம், காளம், வாய்ப்பாட்டு என்ற ஐந்தும் இக்கோயிலில் இசைக்கப்பட்டு உள்ளதை கல்வெட்டுகள் வெளிப்படுத்துகின்றன.
#கோயிலமைப்பு
கருவறை, பிரதி பந்த அதிட்டானத்துடன், சுவர்பகுதியில் தேவ கோட்டத்துடன் உள்ளது. இதில் பழமையான ரிஷபாந்திகர் சிற்பம் உள்ளது. தூண்கள் பிரம்ம காந்தமாகவும், வலபியில் பூத வரியும், கபோதத்தில் நேத்ர நாஸியும் உள்ளது.
இரு தள விமானமாக ஏறு சாலையும், விருத்தஸ்புடிதமும், கர்ண கூட்டின் நடுவேயும், அஹாரை, சாலையின் நடுவேயும், கிரீவம் மற்றும் கிரிவ கோட்டங்களில் சிற்பங்கள் மற்றும் நாட்டிய சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது.இவ்விமானம் நாகரமாக அமைந்துள்ளது.நான்கு புறமும் இடபங்கள் அமர்ந்த நிலையில் உள்ளது.
அர்த்த மண்டபம், மஹா மண்டபம், இறைவிக்கு சன்னதி என்றும், முன்னால் ராஜகோபுரமும் கொண்டு இக்கோயில் அழகுற அமைந்துள்ளது. இக்கோபுர சிற்பங்கள் அழகானவை.
#கல்வெட்டுகள்
முதலாம் ஆதித்தனின் நான்கு கல்வெட்டுகள்,அதில் மூன்றாம் ஆண்டில் பூதி ஆதிச்ச பிடரி ஐந்து கழஞ்சு பொன் கொடுத்து ஈசான மங்கலத்து சபையாரிடம் இடம் வாங்கி இசைக்கருவிகள் வாசிப்பவரின் நலனுக்காக தானமளித்துள்ளார். இதுவே காலத்தால் முந்தியது.
முதலாம் பராந்தகனின் இருபத்தியொரு கல்வெட்டுகள் உள்ளன. இவருடைய மூன்றாம் ஆட்சியாண்டில் பூதி ஆதிச்ச பிடாரியால் இக்கோயில் கற்றளியாக எடுப்பிக்க பட்ட செய்தி உள்ளது.
பூதி ஆதிச்ச பிடாரி, இக்கோயிலுக்கு அமுது படைக்கவும், நொந்தா விளக்கெரிக்கவும், திருவிழா மற்றும் சூரிய கிரகணத்தின் பொது திருவிழா நடத்தவும் நிலங்களும், பொன்னும் தானமாக அளித்துள்ளார்.
செம்பியன் இளங்கோ வேளார் 7 வேலி நிலமும் வரி நீக்கி கொடுத்துள்ளார்.
இந்நிலம் 4 நொந்தா விளக்கிற்கும், இவர் பிறந்த உத்திராடம் ஒவ்வொரு மாதத்திலும் இறைவனுக்கு நெய்யால் அபிஷேகம் செய்யவும் அப்போதேல்லாம் பயிற்று போனகம் படைக்கவும் , பஞ்ச மாசப்தம் செய்யவும் தந்துள்ளார். இவர் மனைவியும் 20 கழஞ்சு பொன்னை தானமளித்துள்ளார்.பூதி கலிச்சி தன கணவனின் நன்மைக்காக விளக்கெரிக்க தானமளித்துள்ளார் .
முதலாம் ராஜேந்திரனின் 21 ம் ஆட்சியாண்டு கல்வெட்டு ஒன்று இவ்வூரை சேர்ந்த வாச்சியன் கண்டனும் அவன் தாயும் சேர்ந்து நிலமளித்து அதில் வரும் வருமானத்தை கொண்டு வேதம் வல்ல பிராமணருக்கு உணவளிக்க வகை செய்யப்பட்டுள்ளது.
குலோத்துங்கனின் 16,46 ஆட்சியாண்டின் இரண்டும் கல்வெட்டும் உச்சிப்போதில் அமுதளிக்க சட்டி சோறு இரு நாழி அரிசியால் அளிக்கப்பட்டுள்ளது.
விக்ரம சோழனின் மூன்றாம் ஆட்சியாண்டு கல்வெட்டும், இரண்டாம் ராஜராஜனின் 6, 14 ஆட்சியாண்டு கல்வெட்டும் விளக்கெரிக்க பசு முப்பதும், எருமை பன்னிரெண்டு, வெள்ளாடு நூறும் கொடுக்கப்பட்டுள்ளது.
1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான சுயம்பு லிங்கம், சோழர் கால கோவில்.
மூலஸ்தான தெய்வம் சந்திரசேகர ஸ்வாமி என்றும், தாயார் மானேந்திய வல்லி/மிருகதாரம்பிகை என்றும் அழைக்கப்படுகிறார். இக்கோயில் தேவார வைப்புத் தலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. திருச்செந்துறை தற்போது ஜீயபுரம் என்று அழைக்கப்படுகிறது.
மூலவர்: சந்திரசேகரர்
அம்பாள்: மிருத்ராம்பிகை
கிழக்கு நோக்கிய ஆலயம் ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் உள்ளது.
சூரியன் மற்றும் பைரவர் சிலைகள் கருவறையை நோக்கி காணப்படுகின்றன. அவை ஆரம்ப காலத்தைச் சேர்ந்ததாகத் தெரிகிறது. தட்சிணாமூர்த்தியின் உபசன்னதி வ்ருஷபந்திகா மூர்த்திக்கு அருகில் அமைந்துள்ளது. இது ஒரு புதிய தேவையற்ற சேர்க்கையாகத் தோன்றுகிறது. ஸ்தல விருட்சம் என்பது பலா மரமாகும். இக்கோயிலுடன் தொடர்புடைய தீர்த்தம் காவிரி நதியாகும்.
இக்கோயில் சோழர் காலக் கோயில். இக்கோயிலில் சுமார் 50 கல்வெட்டுகள் காணப்படுகின்றன. கல்வெட்டுகள் பராந்தக சோழன், ராஜேந்திர சோழன், குலோத்துங்க சோழன் I, ராஜாதிராஜ சோழன், விக்ரம சோழன், இரண்டாம் ராஜராஜ சோழன், கோனேரி தேவராயா மற்றும் விஜயநகரத்தின் ஸ்ரீ ரங்க தேவ மகாராயா உள்ளிட்ட பல்வேறு மன்னர்களின் காலத்தைச் சேர்ந்தவை. 9ஆம் நூற்றாண்டில் முதலாம் ஆதித்த சோழனால் மோட்டார் அல்லது செங்கல்லைப் பயன்படுத்தி இந்தக் கோயில் கட்டப்பட்டிருக்க வேண்டும். இது பின்னர் 10 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் குந்தவையால் கற்கோயிலாக மீண்டும் கட்டப்பட்டது.
இக்கோயில் HR & CE தமிழ்நாடு அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படுகிறது.
கோவில் காலை 06:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரையிலும், மாலை 04:00 மணி முதல் இரவு 08:00 மணி வரையிலும் திறந்திருக்கும்.
மீள் தரிசனம் 5.7.26
நன்றி🙏
5.07.2026 #சுப்ராம்தரிசனம்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
No comments:
Post a Comment