மதுரை ஐராவதநல்லூர் முக்தீஸ்வரர் கோயில்.
மதுரை நகரில் வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது.
மூலவர்: முக்தீஸ்வரர் ✨ மரகதவல்லி
இத்திருக்கோயில் 2000 ஆண்டுகள் பழைமையானது. சிவ பெருமானின் 64 திருவிளையாடல்களில், இரண்டாவது திருவிளையாடல் நடந்தது இங்கு தான்.
மதுரையில் உள்ள பஞ்ச பூதத் தலங்களில் வாயு தலமாகவும் உள்ளது.
மதுரையின் பஞ்சபூதத் தலங்களாக ஐந்து கோயில்களைக் குறிப்பிடுவது உண்டு. நீர்த் தலமாக செல்லூர் திருவாப்புடையார் திருக்கோயில், ஆகாயத் தலமாக சிம்மக்கல் பழைய சொக்கநாதர் கோயில், நில தலமாக இம்மையிலும் நன்மை தருவார் கோயில், நெருப்புத்தலமாக தெற்கு மாசிவீதி திருவாலவாயர் திருக்கோயில் மற்றும் காற்றுத்தலமாக தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயிலையும் குறிப்பிடுவதுண்டு.
ஆலய அமைப்பு
மதுரை திருமலை நாயக்க மன்னரின் அண்ணன் முத்து வீரப்பன் நாயக்கரால் கோவில் கட்டப்பட்டது.
கிழக்குப்பார்த்த ஆலயம். கருவறையில் உள்ள இறைவன் முக்தீஸ்வரர் ஆவார். விநாயகர், முருகன், சந்திரன், சூரியன் ஆகியோர் காணப்படுகின்றனர். அம்மன்மரகதவல்லியம்மன் சன்னதி தனியாக உள்ளது.
பழைமை வாய்ந்த இந்த ஆலயத்தில் ஈசனுக்கு 'ஶ்ரீமுக்தீஸ்வரர்' என்றும் அம்பாளுக்கு ஶ்ரீமரகதவல்லி என்றும் திருநாமங்கள். இந்த ஆலயத்தில் ஒரே இடத்தில் நின்று அம்பிகை, ஈசன் ஆகிய இருவரின் சந்நிதியையும் தரிசனம் செய்யலாம். எழில் கொஞ்சும் திருவடிவுடையாளாகத் திகழும் மரகதவல்லித் தாயாரை வேண்டிக்கொண்டால் செல்வ வளம் சிறக்கும் என்பது நம்பிக்கை.
பலி பீடம், ரிஷபக்கொட்டில், கொடி மரம் ஆகியவை கோயிலில் காணப்படுகின்றன. முன் மண்டபத்தைத் தொடர்ந்து உள் மண்டபம், கருவறை ஆகியவை காணப்படுகின்றன. கருவறைக் கோஷ்டத்தில் முறையே தட்சிணாமூர்த்தி, அடிமுடிகாணா அண்ணல், துர்க்காம்பிகை ஆகியோர் காணப்படுகின்றனர்.
இங்குள்ள தட்சிணாமூர்த்தி மிகவும் விசேஷமானவர். இவர் கைகளில் வீணையை ஏந்தியபடி காட்சியருள்வதால் வீணை தட்சிணாமூர்த்தி என்று அழைக்கப்படுகிறார். பொதுவாகவே தட்சிணாமூர்த்தியை 'ஞானத்தின் கடவுள்' என்று போற்றுவோம். அவரை வணங்கி வழிபட்டால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்களாம். இந்த தட்சிணாமூர்த்தி வீணை ஏந்தி இருப்பதால் இவரை வேண்டிக்கொண்டால் இசைக்கலையில் சிறந்து விளங்கலாம் என்பது நம்பிக்கை
மேலும் இந்தத் தலத்தில் நடராஜப் பெருமான், கிருஷ்ணர், ஆஞ்சநேயர், சுப்பிரமண்யர், துர்கை ஆகியோரும் சந்நிதி கொண்டருள்கிறார்கள். .
மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்திற்கு ஒரு தெப்பக்குளம் கட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட நிலம் முக்தீஸ்வரர் கோயிலுக்கு எதிரே இருந்ததால், கோயிலை மேலும் விரிவுபடுத்த முடியவில்லை. கோயிலுக்கு ராஜகோபுரம் (பிரதான கோபுரம்) இல்லாததால், குளத்தின் நடுவில் கட்டப்பட்ட கோபுரமானது, கோயிலின் உள்ளிருந்தோ அல்லது கிழக்கு திசையிலிருந்தோ பார்க்கும்போது முக்தீஸ்வரர் கோயிலுக்காகக் கட்டப்பட்ட கோபுரம் போலவே காட்சியளிக்கும்.
இக்கோயிலின் தூண்களில், ரிஷிகளின் தவக் காட்சிகளுடன், சிவபெருமானின் திருவிளையாடல்களும் (அற்புதச் செயல்கள்) மிக அழகாகச் செதுக்கப்பட்டுள்ளன. மேலும், பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகியோரின் வடிவங்களை ஒன்றிணைத்து, இரண்டே பாதங்களுடன் ஏகபாதமூர்த்தியின் சிலையும் இங்கு உள்ளது.
இவ்வாலயத்தில் சூரிய பகவான் தனது ஒளிக்கதிர்களால் மார்ச் 10 முதல் 21 வரை மற்றும் செப்டம்பர் 17 முதல் 20 வரையில், 24 நாட்கள் தொடரச்சியாக பூஜை செய்கிறார். இதனால், இங்கு நவக்கிரக சன்னதி கிடையாது.
ஓவியங்கள்
மதுரைத் திருவிளையாடல்கள் 64இல் இக்கோயில் அமையக் காரணமாக இருந்த ஐராவதம் சாபம் தீர்த்தது, இந்திரன் சாபம் தீர்த்தது உள்ளிட்ட திருவிளையாடல்கள் ஓவியங்களாகக் காணப்படுகின்றன
ஒரு சமயம் துர்வாச முனிவர், சிவ பூஜையை முடித்துவிட்டு பிரசாதமான மலர் மாலையை இந்திரனிடம் கொடுத்தார். இந்திரன் அந்த மலர் மாலையை தனது வாகனமான ஐராவதத்தின் (தேவலோகத்தின் வெள்ளை யானை) மீது வைத்தார். ஆனால், அந்த மாலையின் மகிமையை அறியாத ஐராவதம், தன்னுடைய தும்பிக்கையால் அந்த மலர் மாலையை கீழே வீசி காலால் மிதித்தது. இதனால் கோபம் கொண்ட துர்வாச முனிவர், தேவேந்திர பதவியை துறக்கும்படி இந்திரனுக்கும், தெய்வீகத் தன்மையை இழந்து காட்டு யானையாகத் திரியும்படி ஐராவத யானைக்கும் சாபம் கொடுத்தார். சாபம் பெற்ற ஐராவதம் பல நூற்றாண்டுகள் காட்டு யானையாக அலைந்து திரிந்தது. பின்பு வில்வ வனமாக இருந்த இவ்விடத்தில் சிவ பூஜை செய்து வழிபட்டது. இதனால் மனம் மகிழ்ந்த சிவபெருமான் நேரடியாக காட்சி தந்து ஐராவதத்திற்கு முக்தி அளித்தார் என்பது தலவரலாறு.
இவ்வாறு அநேக சிறப்பு பெற்ற இத்தலத்தில் எம்பெருமான் முக்தீஸ்வரரை வணங்கி மகிழலாம்.
நன்றி🙏 19.7.2026சுப்ராம்தரிசனம்
#என்றும்_அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
No comments:
Post a Comment