#திருமுறைகளில்_தமிழமுதம்
#சம்பந்தர்அமுதம்
#மடக்கணி
பதிவு : இரண்டு. (பாடல் 2, 3)
🙏🛐🙇🙏🏻🙇♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼♀️🙏🙇
தேவாரப் பாடல்கள் ஓதுவார்கள் ஓதும் போது நமக்கு ஒரு மன அமைதியும் பக்தி உணர்வும் மேலோங்கி வரும்.
அந்த பாடல்களை இலக்கியங்களாக எண்ணி அதன் தனித்தமிழ் சுவையுடன் பருகும் போது அந்த அமுதத் தமிழின் இலக்கிய நயம் நம்மை ஈர்க்கும்.
பக்தியும் தமிழும் கலக்கும்போது அது நம் உயிரில் கலந்த உணர்வாகி விடுகிறது.
அந்த வகையில் மடக்கணி என்ற யாப்பு அமைப்பில் உள்ள தமிழ் ஞானசம்பந்தரின் பதிக பாடலை பற்றி தொடர்ந்து சிந்திப்போம்.
🙏🛐🙇🙏🏻🙇♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼♀️🙏🙇
மடக்கணி பாடல்கள்:
மடக்கு' என்பது வந்த சொல்லோ, சொற்றோடரோ மீண்டும் வந்து பொருள் வேறுபட்டு நிற்பதாகும். (யமகம் என்றாலும் மடக்கு என்றாலும் ஒரு பொருளையே குறிக்கும். யமகம் என்பது வடசொல்)
🙏🛐🙇🙏🏻🙇♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼♀️🙏🙇
தேவாரம். - மூன்றாம் திருமுறை
பாடல் 1213
பதிகம். 371 தலம் - திருக்கழுமலம்
பாடல் - 2.
🙏🛐🙇🙏🏻🙇♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼♀️🙏🙇
சதிமிக வந்த சலந்தரனே
தடிசிரம் நேர்கொள் சலந்தரனே
அதிர்ஒளி சேர்திகி ரிப்படையால்
அமர்ந்தனர் உம்பர்து திப்படையால்
மதிதவழ் வெற்பது கைச்சிலையே
மருவிடம் ஏற்பது கைச்சிலையே
விதியினில் இட்ட இரும்பரனே
வேணு புரத்தை விரும்பரனே.
🙏🛐🙇🙏🏻🙇♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼♀️🙏🙇
குறிப்பு:
இப்பதிகம் சீர்காழிப்பதியின் 12 பெயர்களும் வருமாறு அமைத்துள்ளார். இரண்டாவதாக வந்த இப்பாடலில் வேணுபுரம் என்றார்.
இறைவன் மூங்கில் வடிவில் தோன்றியதால் சீர்காழிக்கு வேணுபுரம் என்று ஒரு பெயர்
பொருள் விளக்கம்:
1. வஞ்சனை கொண்டுவந்தவன் சலந்தரன்.
அவனைத் தடிந்து அழித்தவர் கங்கையைத் தாங்கிய ஈசன்.
சதி - வஞ்சனை. சலந்தரன் - சலந்தரனை. தடிசிரம் - தலையைவெட்டுவதற்குரிய. சலந்தரனே - வஞ்சகத்தையுடையவனே. வஞ்சகமாவது காலால் சக்கரம்போல் கோடுகிழித்து அதை எடுக்கச் சொல்லியது
2. கண்டவர்கள் அதிரும்படியான வலிமை மிக்க சக்கரப்படையை (ஈசன் பாதத்தால் வட்டமிட்டுக் கோடு கிழிக்க, அது சக்கரம் படையாக மாறி சலந்தரனை அழித்தது).
வானவர்கள் கண்டு மகிழ்ந்து துதித்து ஏத்தினர் உன் படைத்திறன் கண்டு.
அதிர் - கண்டார் நடுங்கத் தக்க.
திகிரிப் படையால் - அச்சலந்தரனைக் கொன்ற சக்கராயுதத்தால். உம்பர் - தேவர்கள். துதிப்பு - துதித்தல். அமர்ந்தனர் - மகிழ்ச்சியுற்றனர்.
அடை - முதல் நிலைத் தொழிற்பெயர்.
3. சந்திரனைத் தொடும் உயர்ந்த மேரு மலையை ஈசன், கையில் வில்லாகக் கொண்டவர்.
அவர், விடத்தினை ஏற்று அருந்தியதில் எத்தகைய கைப்பும் கொள்ளவில்லை.
கைச்சிலை = 1. மேருமலை 2. வெறுப்பு இல்லை (கைப்பு + இல்லை).
மதிதவழ் வெற்பது கைச்சிலையே - சந்திர மண்டலத்தை அளாவிய மேரு மலை, கையிலேந்திய வில்லாம். மரு ( வு ) விடம் ஏற்பது கைச்சிலையே - பொருந்திய நஞ்சை உணவாக ஏற்பதில் வெறுத்திலீர்
4. ஆகமவிதியில் மிகவும் விருப்பத்துடன் விளங்கும் அவர்,
வேணுபுரத்தை விரும்பி வீற்றிருக்கும் அரனே.
விதியினில் - விதித்த முறையில் உலகர் ஒழுகுவதில். இட்ட ( ம் ) - விருப்பத்தை உடைய. இரும் - பெரிய. பரனே - மேலான கடவுளே ! இட்டம் + இரும்பரன் - மவ்வீறொற்றொழிந்து உயிரீறு ஒத்தது. ( நன்னூல் . 219.) இட்டு அவிரும் எனலே தகும். வேணுபுரத்தை விரும்பு அரனே - வேணு புரத்தை விரும்புகின்ற சிவபெருமானே.
🙏🛐🙇🙏🏻🙇♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼♀️🙏🙇🙏🏻
தேவாரம். - மூன்றாம் திருமுறை
பாடல் 1214
பதிகம். 371 தலம் - திருக்கழுமலம்
பாடல் - 3
🙏🛐🙇🙏🏻🙇♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼♀️🙏🙇
காதம ரத்திகழ் தோடினனே
கானவ னாய்க் கடிது ஓடினனே
பாதம தால்கூற்று உதைத்தனனே
பார்த்தன் உடலம் புதைத்தனை
தாதவிழ் கொன்றை தரித்தனனே
சார்ந்த வினையது அரித்தனனே
போதகம் அமரும் உரைப் பொருளே
புகலி அமர்ந்த பரம்பொருளே
🙏🛐🙇🙏🏻🙇♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼♀️🙏🙇
குறிப்பு: இதில் தலத்தினை புகலி என்றார். தேவர்களின் புகலிடமாய் விளங்கியது சீர்காழி தலம்
பாடல் பொருள் விளக்கம்:
1. ஈசன், காதில் தோடு அணிந்தவர்.
காட்டில் வேடுவராய்த் விரைந்து ஓடியவர்
காது அமரத்திகழ்தோடினனே - காதில் பொருந்த விளங்குகின்ற தோட்டையணிந்தவர்.
கானவன் ஆய் - வேடுவனாகி.
கடிது ஓடினனே - மிக விரைந்து சென்றவர்.
2. காலனை (யமனை)க் காலால் உதைத்தவர்.
அர்ச்சுனனது உடலைக் கவசமாக மூட அத்திரங்களை அருளியவர்.
( பாதம் அதால் ) கூற்று - யமனை உதைத்தனனே.
பார்த்தன் - அருச்சுனனது.
உடல் - உடம்பை. அம்பு தைத்தனனே - அம்பு தொடுத்து அதனால் கவசம்போல் மூடினவர்.
3.மகரந்தத்தோடு மலர்ந்த கொன்றையை அணிந்தவர்.
அன்பர்களின் தீவினைகளை அழித்தவர்.
தாது அவிழ் - மகரந்தத் தோடு மலர்ந்த. தன் அன்பர்களுக்கு
சார்ந்த - பொருந்திய. வினை ( அது ) அரித்தனனே - கொன்று அருளியவர்.
4. சிவஞானக் கருத்தடங்கிய உபதேச மொழியின் பொருளாயுள்ளவர்.
அவரே திருப்புகலி என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளும் பரம்பொருள்.
போதம் அமரும் உரைப்பொருளே - சிவஞானக் கருத்தடங்கிய உபதேச மொழியின் பொருளாயுள்ளவன்.
புகலியை அமர்ந்த - விரும்பி யுறைகின்ற பரம் பொருளே - கடவுளே.
🙏🛐🙇🙏🏻🙇♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼♀️🙏🙇
பத்தி இலக்கியத்தில் தமிழின் பெருமையை உலகறியச் செய்த
ஆளுடைய பிள்ளையாரின் அமுத பாடல்களின் ஒரு துளி பருகினோம்; இறையருளால்.
இதன் பெருமையை எண்ணிப் போற்றுவோம்.
வணக்கம்.
நன்றி
🙏🛐🙇🙏🏻🙇♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼♀️🙏🙇
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
🙏🛐🙇🙏🏻🙇♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼♀️🙏🙇
முதல் பதிவில் பாடல் 1. விளக்கம்
1.
https://m.facebook.com/story.php?story_fbid=5711134088961801&id=100001957991710
2.
https://m.facebook.com/story.php?story_fbid=3991943280880899&id=100001957991710
No comments:
Post a Comment