Tuesday, July 21, 2020

எண்ணலங்காரம் பகுதி: நான்கு

#எண்ணலங்காரம்:
பகுதி : நான்கு

சினிமா வசனம் ஒன்று நினைவில் வந்தது..

'அறிந்தது, அறியாதது, 
தெரிந்தது, தெரியாதது, புரிந்தது, புரியாதது ... எல்லாம் எமக்குத் தெரியும்'
என்பார் ஈசர்
இதில் இறைவருக்கு எல்லாம் தெரியும் என்று புரிகிறது. அதை எப்படி நாம் உணரமுடியும்? அதை நம் திருநெறிய தமிழ் வல்லவர் திருஞானசம்பந்தர் தம் அருட்பாடல் கொண்டு விடை தருகிறார்.

🙏🛐🧘🙏🛐🧘🙏🛐🧘🙏
கருவிலே திரு அமையப் பெற்று, இறையருளால் ஞானப்பால் அருந்திய ஞானி, 'இவ்  வையம் வாழ யாம் வாழ'
ஏராளமான திருத்தலங்கள் சென்று தமிழ் பண்கள் அமைத்துப் பாடிய பதிகப் பாடல்கள் மிகப்பல. 

அவற்றில் நமக்குக் கிடைத்தவற்றை மூன்று திருமுறைகளாகத் தொகுத்து அமைத்துள்ளர்  நம் முன்னோர்.
முதலாம் திருமுறையில் 136, இரண்டாம் திருமுறையில் 122, மூன்றாம் திருமுறையில் 125 ம் மேலும் 3 திருப்பதிகங்களும் தொகுக்கப்பட்டுள்ளது. 
226 திருத்தலங்களில்  இவர் அருளிய  பதிகங்களின் எண்ணிக்கை மொத்தம் 386. இவற்றில் நமக்கு 4146 பாடல்கள் கிடைத்துள்ளன. 

இசைத் தமிழால் ஈசனை வழிபட 23 தமிழ்ப் பண்களில் இப்பாடல்கள் விளங்குகிறது.

இவர் அமைத்த 23 தமிழ் பண்கள்:

நட்டபாடை,  தக்க ராகம்,   
பழந்தக்க ராகம், தக்கேசி,  குறிஞ்சி,
வியாழக் குறிஞ்சி, மேகராகக் குறிஞ்சி, யாழ்மூரி, இந்தளம், சீகாமரம், காந்தாரம், பியந்தைக் காந்தாரம், நட்டராகம், செவ்வழி, காந்தார பஞ்சமம்,  கொல்லி,   கொல்லிக் கெளவாணம்,  கெளசிகம்,   பஞ்சமம்,   சாதாரி,  பழம்பஞ்சுரம், புறநீர்மை, அந்தாளிக் குறிஞ்சி ஆக 23 பண்கள்.

பாடல் வகையில்
வினாவுரை, திருவிராகம், திரு இயமகம், வெள்ளிப் பாட்டு, நாலடிமேல் வைப்பு, திருமுக்கால், திருப்பாசுரம், 
தனித்திருவிருக்குக்குறள், ஈரடிமேல்வைப்பு,  நாலடிமேல்வைப்பு, இன்னும் பிறவுமாம்.

🙏🛐🧘🙏🛐🧘🙏🛐🧘🙏
இப்படிப்பட்ட தனித்தமிழ் சிறப்பு வாய்ந்த இறையுணர் திருமுறைப் பாடல்களில்   மேலும் ஒரு மகுடமாக இறைவனை ஒன்று இரண்டு என்று வைத்துப் பாடும் எண்ணங்காரப் பாடல் வரிசையில்  
இதோ ஒன்று:

சுவாமிகள் அருளிய  மூன்றாம் திருமுறையில் 380 வது பதிகமாக திரு ஓமாம்புலியூர் என்ற திருத்தலம்.
 (கொள்ளிடம் வடகரையில் மயிலாடுதுறை - மனல்மேடு - திருப்பனந்தாள் சாலை வழியில், மனல்மேடு - முட்டம் (கொள்ளிடம் பாலம்) தாண்டி காட்டு மன்னார்குடி பாதையில் சுமார் 1 கி.மீ  தென்புறமாக உள்ள தலம்.
சுவாமி : பிரணவ வியக்ரபுரீஸ்வரர் , துயர்தீர்த்தநாதர், அம்பிகை: பூங்கொடி நாயகி).
🙏🛐🧘🙏🛐🧘🙏🛐🧘🙏
மணந்திகழ் திசைகள் எட்டும்ஏ ழிசையும்
     மலியும் ஆறு  அங்கம்ஐ  வேள்வி

இணைந்தநால் வேதம் மூன்றுஎரி இரண்டும்
     பிறப்பென  ஒருமையால்   உணரும்

குணங்களும்  அவற்றின்  கொள்பொருள் குற்றம்
      அற்றவை  யுற்றதும்  எல்லாம்

உணர்ந்தவர் வாழும்  ஓமமாம் புலியூர்
   உடையவர் வடதளி  யதுவே.

- தேவாரம் மூன்றம் திருமுறை
-  திருத்தலம் - திருஓமாம்புலியூர்
- பூங்கொடி மடவாள் என்று தொடங்கும்
- 380 வது பதிகம். 
-  6வது பாடல்.

🙏🛐🧘🙏🛐🧘🙏🛐🧘🙏
இந்தப் பாடல் எண்கள் இறங்குமுகமாகவும் சுவாமியின் பெருமை உயர்ந்தும் வைத்துள்ளது
கவணிக்க வேண்டும்.

எட்டு : 
எண் திசைகள்: கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, வடமேற்கு, தென்மேற்கு என்னும் எட்டுத் திசைகளாகவும் விளங்குகிறார்.

ஏழு:
இசையின் எழுவகை ஓசை : குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம். 
ஏழு சுரங்கள்: சட்சமம், ரிஷபம், காந்தாரம், மத்யம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் (ச ரி க ம ப த நி).

ஆறு:
ஆறு அங்கம் என்றது வேதங்களின்
சிஷை (எழுத்திலிலக்கணம்), வியாகரணம் (சொல்லிலக்கணம்),
நிருக்தம் (நிகண்டு),  
கல்பம் (கர்மாஷ்ட்டன முறை),
சந்தஸ் (பாவிலக்கணம்),
ஜ்யோதிஷம் (சோதிடம்) என்பதும்
    சோதிடத்தில் ஆறு அங்கம்
  ஜாதகம், கோள், நிமித்தம், பிரச்சனம்,     
  முகூர்த்தம், கணிதம்.
என எதிலும் வியாபித்துள்ளமை.

ஐந்து :
ஐந்து வேள்விகளாக நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற பஞ்ச பூதங்களாகவும், ஐந்து தன்மையான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்பவையாகவும் இருப்பவன்.

நான்கு:
வேதங்கள் : பதி, பசு, பாசம் என்ற மூன்று பொருளையும் ஆய்ந்துணரும்
இருக்கு, யஜூர், சாம, அதர்வனம் என்ற நான்கு மறைகளாக விளங்குபவர்.

மூன்று :
மூன்று வகை நெருப்புத் தன்மைகளான
 ஆகவனீயம், காருகபத்தியம், தட்சனாக்கினி  என்பது 
எரியும் தீ யின் சூட்டின் ஸ்பரிசம், ஒளியின் வண்ணம், எரியும் போது விளையும் ஓசை    இவையாகவும் உள்ளார்.

இரண்டு :
இரு பிறப்பு எனப்படுவது இம்மை மறுமையாகவும், சிவம், சக்தி என்னும் இரு வேறு உருவாகவும், முடிவும், முதலாகவும் இருப்பவர்.

ஒன்று :
ஒருமை மனத்தால் உணரும் எண்ணத்தில் ஒன்றாகவும்
எல்லா குணங்களும் அவற்றின் பொருளாகவும் குற்றமற்றவை, குற்றமுள்ளவை இவற்றை அனைத்தையும் உணர்ந்து வீற்றிருப்பவரே இறைவன்.

என இறைவர்  எல்லாம் அறிந்து, புரிந்து, தெரிந்து, இறைவன் எல்லாமாக விளங்குவதை உணர்ந்து போற்றி பரவுகிறார்.
🙏🛐🧘🙏🛐🧘🙏🛐🧘🙏
இப்படிப்பட்ட  பாடல்கள் தந்த தமிழ் ஞானசம்பந்தார் பாடல்கள் ஒத  எழில் பெற்று விளங்கலாம் என்பதை உணர இதோ ஒரு பாடல்:
🙏🛐🧘🙏🛐🧘🙏🛐🧘🙏
இசை அமர் கழுமல நகர் இறைதமிழ் விர
   கனதுஉரை  இயல்வள

இசைமலி தமிழ்ஒரு பதும்வல அவர்உல
   கினில் எழில் பெறுவரே 
என்பதும்
(பாடல் 238)
முதல் திருமுறை 22 பதிகம்)
திருமறைக்காடு சிலை தனை எனத் தொடங்கும் இப்பதிகத்தின் திருக்கடைக் காப்பு பாடலில் குறிப்பிட்டுள்ளமையும்
கவனித்துணரத்தக்கதாம்

இதன் பொருள் :
கழுமலர் நகர் இறை தமிழ் விரகன்- ஞான சம்பந்தர்.
இயல் வள இசை மலி தமிழ் - உறுதி பயக்கும் சொல்லாகவும் உள்ளத்தை நெகிழ வைக்கும் இனிமையான இசை உடையதாகவும் விளங்கும் சிறப்பான தமிழ் பதிகங்கள் ஓத எழில் பெற்று உயர்வார் என்பதாம்.
🙏🛐🧘🙏🛐🧘🙏🛐🧘🙏
சிந்தனையும் பகிர்வும்:
என்றும் அன்புடன்
சுப்ராம் அருணாசலம்
காரைக்கால்.
🙏🛐🧘🙏🛐🧘🙏🛐🧘🙏

No comments:

Post a Comment

பதிவு - 13 நாள் - 7 ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total 86 Kms. 9 - 10 hrs. நாள் - 7 - 01.06.24 - சனி

பதிவு - 13 நாள் - 7  மிக முக்கிய நாள் ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total  86 Kms...