#எண்ணலங்காரம் :
பகுதி: இரண்டு
தமிழருக்கு என்று மிகவும் பிரசித்த குணம் ஒன்று உண்டு, அது தன் மொழி சிறப்பு உலகில் எம்மொழிக்கும் இல்லை என்ற இறுமாப்பு.
இதை நிறுபிக்கும் விதமாக நமது திரு நூல்களில் அமைந்துள்ள பாடல்கள், கவிதைகளில் நிறைந்திருக்கும் சந்த அமைப்புகள் எம்மொழியிலும் இல்லாததே.
அருட்பாடல்களை பாடிய நம் அருளாலர்களால் இயற்றப்பட்ட பதிகங்களில் இதைக் காணலாம்.
துன்பத்திற்கு விணதான் காரணம் அதனை விலக்கும் எளிய வழியிதுவே.
' ஒரு நெறிய மனம் வைத்துணர் ஞானசம்பந்தன் உரை செய்த திருநெறிய தமிழ் வல்லவர் தொல்வினைதீர்தல் எளிதாமே'
என்னும் கூற்றுக்கிங்க
இங்கு அவர் தம் எண்ணலங்காரப் பாடல்களை உய்த்து உணருவோம்.
முதலாம் திருமுறையில்
(79) திருக்கழுமலம் (சீர்காழி) தலத்தில் அருளப்பட்ட
அயில் உறு படையினர் எனத் தொடங்கும் பதிகத்தில் வரும்
3வது பாடல் பற்றிய பதிவு :
எண்ணிடை ஒன்றினர் இரண்டினர் உருவம்
எரியிடை மூன்றினர் நான் மறையாளர்
மண்ணிடை ஐந்தினர் ஆறினர் அங்கம்
வகுத்தனர் ஏழிசை எட்டிருங் கலைசேர்
பண்ணிடை ஒன்பதும் உணர்ந்தவர் பத்தர்
பாடிநின்று அடிதொழ மதனனை வெகுண்ட
கண்ணிடைக் கனலினர் கருதிய கோயில் கழுமல நினையநம்
வினைகரிசு அறுமே.
- தேவாரம் - முதல் திருமுறை
- பதிகம் 79 - திருக்கழுமலம் (சீர்காழி)
- பாடல் 3.
இத்திருப்பாடலில் இறைவனை ஒன்று இரண்டு மூன்று என்று எண்ணலங்காரத்தில் விளக்கி நிற்கும் சிறப்பு:
ஒன்று:
ஈசனார், எண்ணத்தில் ஒன்றாக இருப்பவர்
இரண்டு :
சிவம், சக்தியாக இரு உருவம் கொண்டவர்
மூன்று :
தீ யாக இருப்பவர். தீயின் மூன்று தன்மைகள் ஸ்பரிசம், ஒளியின் வண்ணம், எரியும் போது விளையும் ஓசை.
நான்கு :
நான்கு மறைகளை அருளியவர்
இருக்கு, யஜூர், சாம, அதர்வண வேதங்கள்
ஐந்து:
மண்ணிடையில் சத்தம், ஸ்பரிசம்,ரூபம், ரசம், கந்தம் என்று ஐந்து தன்மாத்திரைகளாக விளங்குபவர்.
ஆறு:
வேதத்தின்
எழுத்திலக்கணம், சொல்லிலக்கணம், நிகண்டு (பொருள்) இலக்கணம், செயல்முறை உறைப்பது (கல்பம் என்ற கர்மாஷ்டை முறை), பாவிலக்கணம், சோதிடம் (கோள் நிலைகளை வைத்துக் காலநிலையறிந்து ஆராய்வது)
என்ற இவ்வாறு ஆறு அங்கங்களை வகுத்தவர்
ஏழு:
ஏழிசையாகிய சஞ்சமம், ரிஷபம், காந்தாரம், மத்யம், பஞ்சமம், தைவதம், நிஷாரம் (ச ரி க ம ப த நி)
இதன் தன்மையான
குரல், கைக்கிளை, துத்தம், இழை, இளி, விளரி, தாரம் எனவும் வகுத்தவர்.
எட்டு :
அட்டமூர்த்தியாக (அஷ்டாவதானம்) விளங்குபவர்
ஒன்பது :
ஒன்பான் பண்கள் கொண்ட இசையாய்
இருப்பவர்.
இவ்வாரான ஒன்பது தன்மைகளைக் கொண்ட ஈசனை உணர்ந்து பக்தர் தொழுதால் வினையானது அழிந்தொழியும் என்று அற்புதமாக
உரைத்தார் நம்
திருநெறிய தமிழ் வல்ல திருஞானசம்பந்தப் பெருமான்.
சிந்தனையும் பகிர்வும்:
என்றும் அன்புடன்
சுப்ராம். அருணாசலம்
காரைக்கால்.
No comments:
Post a Comment