Tuesday, July 21, 2020

எண்ணலங்காரம் : பகுதி: மூன்று

#எண்ணலங்காரம் :
பகுதி: மூன்று

தமிழ் எங்கள் உயிர். தமிழை பழித்தவனை தாய் தடுத்தாலும் விடேன். கொலை வாளினை எடடா கொடியோர் செயல் அறவே.  
என்றல்லாம் நம் தமிழ் மொழியின் மீது அளவில்லா பாசம் வைத்து அது முற்றி பழி பாவத்திற்கு அஞ்சா நிலை எய்தியவர் கூற்றுகளால் தமிழின்  உயர் நிலைச் சிறப்பை கூட்டிக் காட்டிடுவர் ஒருபுறம்.

இருப்பினும்

இறையருள் பெற்ற அருளாலர்கள், தெய்வத் தமிழில்உயர்ந்த கலைச் சொற்களையும், ஏராளமான சந்தங்களையும் வைத்து தந்த
அருமையான அருட்பாடல்களில்
 நம் தமிழ் மொழியின் நறுமணம் பாலிற்படு நெய்போல்  கலந்துள்ளது.

யாவருக்கும் மேலான இறைவனை உணர்த்த    இந்த அருளாலர்கள் 
 இனிய தேன் தமிழ்பாடல்களால் அருச்சித்து  பாடல் பெற்ற பாங்கு 
நம்மால் வணங்கி உணரத்தக்கதாய் விளங்குகிறது.

அவற்றில் ஒரு பாடல் பற்றி சிந்திப்போம்:

தெரிந்தோ தெரியாமலோ செய்த செயல்களின் தன்மைக்கு ஏற்ப வந்தடைவது பாவம்.

எதிர்பாராதவிதமாகப் பிறர் செய்யும் தீய செயலானது தொடர்பின்றித் தன் மேல் திணிக்கப் பெற்று வருவது பழி.

இந்த பாவம், பழி போக்க என்ன செய்வது
கவலை வேண்டா

இதோ  இறையருள் பெற்று ஞானப்பால் அருந்திய ஆளுடையபிள்ளையார் 
தமிழ் பா ஒன்று தருகிறார்.

இறைவனை ஒன்று இரண்டு என்று எண்ணம் வைத்து வரும் எண்ணலங்காரம் மிக்க அற்புத பாடல் இது.

🙏🙏🙏
இரண்டாம் திருமுறையில் திருவாஞ்சியம் என்னும் தலத்தில் வன்னி கொன்றை எனத் தொடங்கும்  பதிகத்தில் வரும் மூன்றாவது பாடல்:

மேவில் ஒன்றர் விரிவுற்ற
      இரண்டினர் மூன்றுமாய்

நாவில் நாலர் உடல் அஞ்சினர்
        ஆறர் ஏழோசையர்

தேவில் எட்டர் திரு வாஞ்சிய
            மேவிய  செல்வனார்

பாவந் தீர்ப்பர் பழி போக்குவர்
             தம்மடி யார் கட்கே.

- இரண்டாம் திருமுறை 
- தலம் (143) திருவாஞ்சியம்
- பாடல் 3.
🙏🙏🙏
விளக்கம்:

ஒன்று.
ஒப்பற்ற ஒருவனாய் ஈசன் விளங்குகின்றார்.

இரண்டு :
பரந்து விரிந்து சிவம், சக்தி என்று இரட்டித்த தன்மையுடையவனாக உள்ளார்.

மூன்று :
இச்சை, ஞானம், கிரியை என்ற மூன்றாகவும், மும்மூர்த்திகளாக மூன்று தொழில்களையும் செய்பவராகவும்,
ஒன்றாகவும் வேறாகவும், உடனாகவும்
விளங்குகின்ற தன்மையாகவும் உள்ளார்.

நான்கு :
பதி, பசு, பாசம் என்ற முப்பொருளையும் ஆய்ந்து உணர்த்த  இருக்கு, யஜூர், சாம, அதர்வணம்  என்னும் நான்கு வேதங்களாகவும் உள்ளார்.

ஐந்து :
பஞ்சபூதமாகிய நிலம், நீர் நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் உடலாக இருக்கும் தன்மையும்,
பரை, ஆதி, இச்சா, ஞானம், கிரியை என்னும்  சக்திகள் அடங்கிய ஆதிசக்தி, பராசக்தி, இச்சாசக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி என்ற ஐந்து வகை உடலுருவம் கொண்டும் உள்ளது உணரத்தக்கது.

ஆறு:
வேதத்தின்   ஒலி, சொல், பொருள், செயல்முறை, செய்யுள் இலக்கனம், சோதிடம் என்ற ஆறு அங்கங்களாய் விளங்குவது.
ஆறாகிய கங்கையைச் சூடியருளும் பாங்கு.

ஏழு :
ஏழிசையாகிய சஞ்சம், ரிஷபம், காந்தாரம், மத்யம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் (ச ரி க ம ப த நி ) எனத் திகழ்பவர்.

எட்டு :
எண்குணத்தவன் அவை: 
தன் வயத்தனாதல்,  
தூய உடம்பினனாதல்,  
இயற்கை உணர்வினனாதல்,  முற்றுணர்தல்,  
இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்குதல்.   
பேரருளுடைமை,   
முடிவில் ஆற்றலுடைமை,   
வரம்பில் இன்பமுடைமை 
என்னும் எட்டுக் குணங்களை உடையவர்.
என்பதும்
தெய்வத்தன்மையில் ஐம்பூதங்கள் மற்றும் சூரியன், சந்திரன் என்ற இரு சுடர்கள், மற்றும் ஆன்மா ஆகியவற்றால் எழும் தன்மையையும் உணர்தல் வேண்டும்.
🕉️🙏🛐🙏🕉️🙏🛐🙏🕉️🙏
இந்த எட்டு தன்மையும், குணங்களும் பொருந்திய இறைவனை உணர்ந்து தொழுபவர்களின் பாவம், பழியை போக்கி அருள் தருவார் ஈசன்.

என்று அருளுகிறார் திருஞானசம்பந்தப் பெருமான்.

இவ்வகையான எட்டு குணத்தையும் கொண்ட
யாவற்றிற்கும் மேலான இறைவனை உணர்த்தி
நம் தேன் தமிழில் பாடப் பெற்ற பாங்கு எண்ணிப் போற்றி வணங்குவோம்.
🙏🛐🙏🛐🙏🛐🙏🛐🙏
சிந்தனையும் பகிர்வும்:
என்றும் அன்புடன்
சுப்ராம் அருணாசலம்.
காரைக்கால்.
🙏 🛐🙏🛐🙏🛐🙏🛐🙏

No comments:

Post a Comment

பதிவு - 13 நாள் - 7 ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total 86 Kms. 9 - 10 hrs. நாள் - 7 - 01.06.24 - சனி

பதிவு - 13 நாள் - 7  மிக முக்கிய நாள் ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total  86 Kms...