Friday, May 29, 2026

நயினார் கோவில் அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயில் 17.05.2026 தரிசனம்

நயினார் கோவில் அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயில் 
அமைவிடம்
 பரமக்குடியிலிருந்து வடகிழக்கே வைகை ஆற்றைத் தாண்டி சுமார் 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது நயினார்கோயில். 
இங்குள்ள அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயில், நாக தோஷ நிவர்த்திக்கும், குழந்தை பாக்கியத்திற்கும் புகழ்பெற்ற ஒரு சக்திவாய்ந்த பரிகார ஸ்தலமாகும்.
கோயில் சிறப்பம்சங்கள்:
மூலவர்: நாகநாதசுவாமி 
அம்மன்: சௌந்தரநாயகி.
தல தீர்த்தம்: வாசுகி தீர்த்தம்.
சிறப்பு: ஆதிகாலத்தில், 'சேது நாட்டுத் திருமருதூர்’ என்று பெயர் பெற்றிருந்த இந்தத் தலத்தில், ஸ்ரீசௌந்தரநாயகி அம்பாளுடன் கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீநாகநாத ஸ்வாமி.

சர்வமத வழிபாட்டுத் தலமாக விளங்கும் இக்கோயிலில், நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்காக 'தவிடு' வைத்து வழிபடும் நேர்த்திக்கடன் முறை மிகவும் பிரசித்தம்.

விசுவாமித்திர முனிவரால் சாபம் பெற்ற ஆயிரம் முனிவர்களுக்கு விமோசனம் அருளிய அற்புதமான திருத்தலம் இது.

தல வரலாறு
1 முன்னொரு காலத்தில் சூரிய வம்சத்தைச் சேர்ந்த திரிசங்கு என்ற மன்னன், பூத உடலோடு சொர்க்கம் செல்ல விரும்பினான். இதைத் தன்னுடைய குலகுருவான வசிஷ்ட முனிவரிடம் தெரிவித்தான். அவர், ''ஒரு வருட காலம் சிறந்ததொரு வேள்வியை நடத்தினால், தேவர்களே நேரில் வந்து உன்னை சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்வார்கள்'' என்று அறிவுறுத்தினார்.
மன்னனோ, ''அவ்வளவு நாட்கள் என்னால் காத்திருக்க முடியாது. இப்போதே என்னை பூத உடலுடன் சொர்க்கத்துக்கு அனுப்பும் வல்லமை பெற்றவர்கள் உண்டு. அவர்களை அணுகி எனது விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்கிறேன்'' என்றான். இதனால் வசிஷ்டர் கோபம் கொண்டார். ''குருவை இழிவுபடுத்திய நீ சண்டாளன் ஆகக் கடவாய்!'' என்று மன்னனைச் சபித்தார். பின்னர், திரிசங்கு விசுவாமித்திர முனிவரைச் சந்தித்து, நடந்ததை விவரித்தான். அவன் மீது இரக்கம் கொண்ட விசுவாமித்திரர், ''வருந்தாதே! பஞ்சாட்சர மந்திரத்தால் உனது சாபத்தை நீக்கி, உனது விருப்பத்தையும் நிறைவேற்றுகிறேன்'' என்று வாக்களித்தார். பிறகு, தனது சீடர்களை அனுப்பி, வசிஷ்டரின் மைந்தர்கள் மற்றும் சீடர்கள் ஆயிரம் பேரை, தான் நடத்தவிருக்கும் வேள்விக்கு உதவி செய்ய வரும்படி அழைப்பு விடுத்தார். அவர்கள் மறுத்துவிட்டனர். இதனால் கோபம் கொண்ட விசுவாமித்திரர், அவர்கள் ஆயிரம் பேரையும் வேடர்களாகும்படி சபித்தார். அவர்கள் அனைவரும் விசுவாமித்திரரை நேரில் சந்தித்து வணங்கி, சாபத்தைத் தீர்த்தருளும்படி வேண்டினர்.

அவர்களிடம், ''என்னை அவமதித்த குற்றத்துக்காக உங்களுக்குச் சாபம் கிடைத்தது. நீங்கள் ஆயிரம் வருடங்கள் வனங்களில் வேடர்களாக அலைந்து திரிந்து, பிறகு மருதூர் சென்று நாக தடம் பதிந்து நற்பதவி பெறுவீர்கள்'' என்று வழிகாட்டினார். அதன்பிறகு, தன் மைந்தர்களோடு யாகம் செய்து, அவர் திரிசங்குவை சொர்க்கத்துக்கு அனுப்ப முயற்சித்ததும், தேவர்கள் எட்டி உதைக்க திரிசங்கு அந்தரத்தில் தவித்ததும், பிறகு அவனுக்காகத் தனியே விசுவாமித்திரர் 'திரிசங்கு சொர்க்கம்’ உருவாக்கி விட்டார் 

இங்கே, சாபம் பெற்ற ஆயிரம் முனிவர்களும் ஆயிரம் வருடங்கள் வேடர்களாக அலைந்து திரிந்த பிறகு, மருதூர் தலத்துக்கு வந்து ஸ்ரீநாகநாத ஸ்வாமியை வழிபட்டு நற்கதி அடைந்தனர்.

2. தென்னாட்டில் முகம்மதியர் ஆதிக்கம் உச்சத்தில் இருந்த காலம் அது. வடக்கே இருந்த முல்லா சாகிப் என்ற மன்னன் ஒருவன், அவரது மகளுக்கு பேச்சுவரவில்லை. இதனால் தெற்கே உள்ள ராமேஸ்வரம் சென்று ராமநாதரை வணங்கினால், இப்பிரச்னை தீரும் என சிலர் சொல்லவே வாய் பேச இயலாத தன் மகளுடன் இவ்வூர் வழியாக வருகை தந்தபோது, இங்குள்ள வாசுகி தீர்த்தத்தில் அவர்கள் நீராடினர். அப்போது, அந்தப் பெண் நயினார் என கத்தினாள். நயினார் என்றால் தலைவர். அவ்வூர் நாகநாதர் அருளாலேயே அவளுக்கு பேச்சு வந்ததாக முல்லாசாகிப் கருதினார். அன்று முதல் அவ்வூரின் பெயரும் நயினார்கோயில் என்றாயிற்று. 

அல்லா நயினார் ஆண்டவர்’ என்று வாய் திறந்து பேசினாளாம். இதனால் மகிழ்ந்த முல்லா சாகிப்பும், 'நீரே நயினார் நிஜம் தெரிந்தேன்!’ என்று ஸ்ரீநாகநாதரைப் போற்றி பூஜித்தாராம். அன்று முதல் இந்தக் கோயில், 'நயினார் கோவில்’ என வழங்கலாயிற்று என்கிறார்கள்.
தோஷ நிவாரணம் மற்றும் பிரார்த்தனைத் தலமாகத் திகழும் நயினார் கோவிலுக்கு
'மங்காத முல்லாவின் மகளான ஊமையை வாய் பேச வைத்த லிங்கம்’ என்று நாகாபரணம் என்ற நூலும், 'முல்லா மகளா மூங்கையள் முன்னாள் அல்லா நயினார் ஆண்டவர் என்ன நல்வாக்குரைத்திடு தன்மை உண்டாக்கியும்’ என்று ஸ்ரீநாகநாதர் சதகமும், 'தாய் பேசு பேசெனவே சாற்றினும் பேசாமூங்கை வாய் பேச வத்த மகா மந்திரமே...’ என சேதுபதி விறலிவிடு தூது எனும் நூலும் விவரிக்கின்றன. இன்றைக்கும் இஸ்லாமிய அன்பர்கள் பலரும் இந்தக் கோயிலுக்கு வந்து பிரார்த்தித்துச் செல்கிறார்கள்.
ஆலய அமைப்பு
மேற்குப்பார்த்த ஆலயம் முன்புறம் ராஜகோபுரம் பதிலாக சிவன் அருள் கொடுத்த காட்சி சுதையில் உள்ளது.
ஆலயம் எதிரில் புன்னிய தீர்த்தம் உள்ளது
கற்றளி ஆலயம். முன்புறம் ஒரு நாகர் சிலை உள்ளது அதில் உப்பு கொட்டி வழிபடுகிறார்கள். அடுத்து பலிபீடம் கொடிமரம், நந்தி உள்ளது. முன் மண்டபம் பெரிய அளவில் உள்ளது. அடுத்து மேற்கு நோக்கிய கருவறை உள் மண்டபம் அர்த்தமன்டபம் கருவரையுடன் உள்ளது மூன்று விநாயகர் 3 வாகனத்துடன் உள்ள சன்னதி கருவரை உள் நுழைவு இடது புறம் உள்ளது.
கருவறையில் லிங்கத் திருமேனியராக மேற்குமுகமாகக் காட்சி தருகிறார் ஸ்ரீநாகநாத ஸ்வாமி. ஸ்ரீநாமதேவரின் கீதம் கேட்க, ஸ்வாமி மேற்கு முகமாகத் திரும்பியதாக ஐதீகம். 'நாமதேவர் நல்லிசை கேட்டு போற்றுமவர்க்காய் மேற்றிசை திரும்பியும்...’ என்று நாகநாதர் சதகம் குறிப்பிடுகிறது.

கருவறை முன்புரம் சிறிய நந்தி உள்ளது. அம்பாள் தனி கருவரை தெற்கு நோக்கிய அமைப்பில் உள்ளார்.
கோஷ்ட்ட பிரகாரத்தில் தட்சினாமூர்த்தி லிங்கோத்பவர், பிர்மா, மகாலெட்சுமி வள்ளி தெய்வாணையுடன் முருகப்பெருமான் உள்ளார். மற்றும் சண்டிகேஸ்வரர் உள்ளார்.
இரண்டாம் பிரகாரம் வட பகுதியில் பல இடங்கள் முற்றிலும் சிதைந்துக் காணப்படுகிறது.
வட கிழக்கில் பைரவர், நவகிரகம் துர்க்கை சன்னதிகளும் உண்டு. மேலும்
தனி சன்னதியில் சனீஸ்வரர் மேற்கு பார்த்து உள்ளார். சூரியர் சந்திரன் கிழக்குப்பகுதியில் உள்ளார்கள்.
மேலும் ஏகதசலிங்கம் உள்ளது

இந்த ஆலயத்தில் மருதம், வில்வம் என இரண்டு விருட்சங்கள் உள்ளன. ஆலய உட்பிராகாரத்தில் மூலவர் சந்நிதிக்குப் பின்புறம் 'புற்றடி’ காணப் படுகிறது. மருத மரத்தடியில் ஒரு புற்று இருந்ததாகவும், அதில் நாக ரூபமாக ஸ்வாமி காட்சி தந்ததாகவும் கூறுவர்.

இப்புற்று மேடையில் நாகர் உள்ளார். அதனைச்சுற்றி குழந்தை கட்டில்கள் பிரார்த்தனையாகக் கட்டப்பட்டுள்ளது. இதன் அருகில் பால், முட்டை , அரிசி முதலியவற்றை வைத்து பிரார்த்தனை செலுத்துகிறார்கள்.

பக்தர்கள் இந்தப் புற்றடியில் திருமணத் தடை, புத்திர பாக்கியம் இல்லாமை, நோய், வேலை கிடைக்காமை ஆகிய தங்களின் மனக் குறைகள் நீங்க பிரார்த்தித்து மஞ்சள் கயிறு கட்டுகிறார்கள்; பிரார்த்திக்கிறார்கள். இதனால் பிரச்னைகள் யாவும் சூரியனைக் கண்ட பனியாக விலகி ஓடும் என்பது நம்பிக்கை. மேலும், இந்தப் புற்று மண்ணை எடுத்துச் சென்று நீரில் குழைத்து நோய் கண்ட இடங்களில் தடவ, பிணி தீர்வதாகவும் மக்கள் நம்புகிறார்கள்.

தெற்குப்பிரகாரத்தில் அறுபத்தி மூவர், சப்தமாதர்கள், வீரபத்திரர், ரிஷபாருடர் காசிலிங்கம் உள்ளார்கள்.
மேலும் சுந்தரராஜ பெருமாள், நவநீத கிருஷ்ணர், மகாலெட்சுமி தாயார் நந்தகோபாலன் சன்னதியும் இங்கு உள்ளது. முன்புறம் அனுமான் சிலையும் உண்டு
இங்குள்ள நாகநாதர் துலாக்கோல் போல் உள்ளவர் என்று கூறுகின்றனர்.
இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.

பரிகாரத்தலம்
இக்கோவிலில் மற்ற நாட்களை விட அமாவாசையன்று விரதம் இருந்து வரும் பக்தர்கள் அதிகம். அமாவாசை தினங்களில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர்.
நோய்வாய்ப்பட்ட சிறு குழந்தைகளை சுவாமி சன்னதி அருகே தவிடு கொடுத்து கோவிலில் ஒப்படைத்து மீண்டும் திரும்ப வாங்குகின்றனர். இதன் மூலம் சுவாமியின் பிள்ளையாகவே பாவித்து எந்த நோய் நொடியும் இல்லாமல் சுவாமி காப்பாற்றுவார் என்பது நம்பிக்கை.

இதற்கு மட்டுமல்லாமல் திடீரென்று முகத்தில் தோன்றும் மருக்கள், கட்டிகள், போன்றவை நீங்கவும், சரியான பேச்சு வராத குழந்தைகளுக்கு பேச்சு வரவும். கடும் நாகதோஷம் நீங்க ஒவ்வொரு அமாவாசையன்றும் பக்தர்கள் விரதம் இருந்து வருகின்றனர்.

இக்கோவிலில் ஒவ்வொரு அமாவாசையன்றும் தொடர்ந்து வழிபட்டு வந்தால் எதிர்பாராத நல்ல மாற்றங்கள் ஏற்படும் என்பது ஐதீகம்.
வீட்டிற்குள் பாம்பு வந்துவிட்டாலும் இக்கோவிலுக்கு விரதம் இருந்து நாகநாதரை வழிபட்டு வருவதை இப்பகுதி மக்கள் வழக்கமாகவைத்துள்ளனர்.
.அனுதினமும் இந்த ஆலயத்தில், முறைப்படி பணம் கட்டி பதிவு செய்து, ஏராளமான திருமணங்கள் நடைபெறுகின்றன. பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் காவடி எடுத்து வந்து வேண்டுதலை நிறைவேற்றுகிறார்கள். குழந்தைகளுக்கு முடியெடுப்பதும், காதுகுத்து வைபவமும் நிகழ்கின்றன.

திருவிழாக்கள்
தைப்பூசத்தன்று நயினார் கோயிலில் இருந்து ஸ்வாமியும் அம்மனும் தெற்கே 3 கி.மீ. தூரத்தில், வைகையின் வடகரையில் உள்ள ஸ்ரீகுணதீஸ்வரர் ஆலயத்துக்கு எழுந்தருள்வார்கள். அங்கே ஆற்றில் தீர்த்தவாரி உத்ஸவம் நடைபெறும். இது தவிர, கார்த்திகை மகாதீபமும், நவராத்திரி விழாவும் விமரிசையாக நடக்கும்.

இறைவிக்கு ஆடியில் 15 நாளும், இறைவனுக்கு வைகாசியில் 10 நாளும் பிரம்மோற்சவம் நடத்தப்பெறுகின்றன. இவை தவிர பிரதோஷம், சிவராத்திரி உள்ளிட்ட பல விழாக்கள் நடத்தப்படுகின்றன. இக்கோயிலில் காரணாகம முறைப்படி காலப் பூசை நடக்கின்றது.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை: 07:00 மணி முதல் 01:00 மணி வரைமாலை: 04:00 மணி முதல் இரவு 08:00 மணி வரை விஷேச நாட்கள் மாறும்.

நன்றி🙏
17.5.2026 சுப்புராம் தரிசனம்,,🙏🛕🇮🇳
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

No comments:

Post a Comment

நயினார் கோவில் அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயில் 17.05.2026 தரிசனம்

நயினார் கோவில் அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயில்  அமைவிடம்  பரமக்குடியிலிருந்து வடகிழக்கே வைகை ஆற்றைத் தாண்டி சுமார் 8 கி.மீ. தொலைவில் அம...