Tuesday, July 21, 2020

சம்பந்தர் தூது பகுதி : நான்கு

#திருமுறைசிந்தனைகள்:
#சம்பந்தர்தூது
பகுதி: நான்கு
🙏🛐🙏🙏🛐🙏🙏🛐🙏🙏🛐🙏
'இந்த மன்றத்தில் ஓடிவரும் இளந்தென்றலைக் கேட்கிறேன்
நீ சென்றிடும் வழியினிலே என் தெய்வத்தைக் காண்பாயோ'... ...

இங்கு பிரிந்த தலைவனை எண்ணித் தலைவி, தென்றலைத் தலைவனுக்கு தூது  விட்டு தான் தனிமையில் வாடும் நிலையை உணர்த்த முயற்சி செய்கிறாள். இது தமிழரின் ஒரு கவித்துவ முறை.
🙏🛐🙏🙏🛐🙏🙏🛐🙏🙏🛐🙏

செந்தமிழ்நாடு செய்த தவக்கொழுந்து போல்வார், ஞான வள்ளலாராகிய திருஞானசம்பந்தர் தந்த அருட்கொடையான தேவாரம் என்னும் பக்தி இலக்கியத்தில் அவர்,

தம்மைத் தலைவியாகவும், தாம் வணங்கும் இறைவரை தலைவனாகவும் எண்ணி வடித்தத் திருப்பதிகப் பாடல்களை சிந்தித்து வருகிறோம்.

முதலாம் திருமுறையில் வரும் 
60-வது பதிகம். தலம்: திருத்தோணிபுரம். (சீர்காழி பதியின் 12 பெயர்களில் ஒன்று)
வண் தரங்கப் புனற்கமல ... எனத் தொடங்கும் பதிகத்தில் வரும் தூது அமைந்த பாடல்களில்.

முதல் பதிவில், வண்டு (பாடல் 1)  மூலமும்
இரண்டாம் பதிவில் 
இளங்குருகு (பாடல் - 2) கோழி (பாடல் - 3)
மற்றும் மூன்றாம் பதிவில் நாரை (பாடல்-4) மற்றும் புறா (பாடல் 5) மூலம் தூது அனுப்பியத் திறன் பற்றியும் சிந்தித்தோம்.

இதன் தொடர்ச்சியாக... ... 

ஆளுடையப் பிள்ளை அடுத்தடுத்து  
அங்கு வசிக்கும், 
       அன்னம் (பாடல் 6)
       அன்றில் பறவை (பாடல் 7) 
மூலம் தூது அனுப்பும் கவித்திறன் பற்றி மேலும் சிந்திக்கலாம். 
வாருங்கள்...

🙏🐾🙇🐾🙇🐾🙇🐾🙇🐾🙇🐾🙇🐾🙏

காட்சி - 6: அன்னம்:

இதற்கு முன்பு தூது அனுப்பிய புறாக்களும் இன்பத்தில் மூழ்கி அசையாதிருக்க, 

நெற்கதிர்கள் சூழ தாமரை மலரில் வீற்றிருக்கும் அன்னம் இவர் கண்ணில்பட்டது.

இரங்கும் பெருந்தன்மை அற்ற அவைகள் கிடக்கட்டும்; இந்த அரச அன்னமாவது என் குறையை நிறைவேற்றும் என்று எண்ணி அதனை அழைத்தார்.

விண்ணுலகம் மண்ணுலகம் ஆகியவற்றையும் நான்கு வேதங்களையும் தோற்றுவித்த திருத்தோணிபுரத்தில் உறையும் சிவபிரானாருடைய யாராலும் அசைத்தற்கு இயலாத இயமனை உதைத்தழித்த திருவடிகளை யாம் அடையும் வழிகளைக் கூறுவீர்களா, என்றமைத்தார்.

(இப்பாடலின் இலக்கிய நயம், தரம் உணரத்தக்கது.
தாமரை மலர் அரசர் ஆசனம் போன்றும், அதில் அரச போகத்துடன் அன்னம் வீற்றிருப்பது போன்றும், அதன் இருபுறமும் செந்நெற்கதிர்கள் காற்றில் வீசிக் கொண்டிருப்பது அரசருக்கு கவரி வீசுவது போலவும், காட்சிமைப்படுத்தப்பட்டுள்ள கவித்துவமும்,  கற்பனை வளமும் உய்த்துணரத்தக்கது.)

பாடல் : (650)
சேற்றெழுந்த   மலர்க் கமலச்
     செஞ்சாலிக்   கதிர் வீச
வீற்றிருந்த   அன்னங்காள்
     விண்ணொடு  மண்மறைகள்
தோற்றுவித்த  திருத்தோணி
      புரத்தீசன்   துளங்காத
கூற்று   தைத்த  திருவடியே
      கூடுமா   கூறீரே.
      
- தேவாரம் - முதல் திருமுறை - 01.60.06

🙏🐾🙇🐾🙇🐾🙇🐾🙇🐾🙇🐾🙇🐾🙏

காட்சி - 7:  அன்றில் பறவை - தூது.

அன்னங்களாலும் பயன்பெறாது மயங்கியவர்
 
வீடுகளின் வாயிற்பகுதியில் மடல்களை உடைய பனைமரங்களில் கட்டிய கூடுகளில்  வாழும் அன்றிலைப் பார்த்துக்கூறுகிறார். அவர் பார்த்த காலம் பகல் ஆதலின் அன்றில்கள் கூடிக்குலாவிக் கொண்டிருந்தன. 

 நீவிர் பிரிவுத்துன்பத்தை அறியமாட்டீர் ஆயினும் நேசிப்பதில் மிக வல்லவர்களாயுள்ளீர்கள். தென்றல் காற்று தவழ்ந்து வரும் திருவீதிகளை உடைய திருத்தோணிபுரத்தில் எழுந்தருளிய கொன்றை மாலை அணிந்த சடை முடியினை உடைய சிவபிரானுக்கு என்பால் மிகுந்துள்ள பசலை நோயின் இயல்பை எடுத்துரைப்பீர்களாக என்கிறார்.
 
பாடல் - 651:
முன்றில்  வாய்  மடல்  பெண்ணைக்
     குரம்பை வாழ்   முயங்கு  சிறை
அன்றில் காள்  பிரிவுறுநோய்
     அறியாதீர்   மிகவல்லீர்
தென்றலார்   புகுந்துலவும்
     திருத் தோணி  புரத்துறையும்
கொன்றை   வார்  சடையார்க்கு  என்
     கூர்பயலை   கூறீரே.

-தேவாரம் - முதல் திருமுறை - 01.60:07

என்நோயைக் கூறுகின்ற நீங்கள், இறைவரின் சடைக்கண்ணதாகிய கொன்றை மாலையைப் பெற்றுக் கொண்டு வந்து கொடுத்தால், அது பெற்றாயினும் உய்வேன் என்று, உபாயம் அறிவித்தல் குறிப்பு.
🙏🐾🙇🐾🙇🐾🙇🐾🙇🐾🙇🐾🙇🐾🙏

உலகம் முடங்கிக் கிடக்க, புலம் பெயர்ந்து வாழும் பலர் குடும்ப உறவுகளைப் பிரிந்து கால சூழலலினால்  கருத்தை நேரில் பரிமாறிக் கொள்ளா முடியாத நிலை.  மனம் பிரிவு ஆற்றமையால் தன் எண்ணத்தை வெளிப்படுத்த முயலுகிறது.

இந்த சூழலில், பிரிவின் ஏக்கத்தில் விளைந்த பக்தி இலக்கிய பாடல்களில்
நம் இதயத்தை செலுத்தி இறையருள் பெறுவோமாக. 
🙏🛐🙏🙏🛐🙏🙏🛐🙏🙏🛐🙏
சிந்தனையும் பகிர்வும்:
என்றும் அன்புடன்
சுப்ராம் அருணாசலம்
காரைக்கால்.
🙏🛐🙏🙏🛐🙏🙏🛐🙏🙏🛐🙏
தொடர்புடைய பதிவுகள்:

பதிவு : ஒன்று: பாடல் 1 பற்றியது.
https://m.facebook.com/story.php?story_fbid=3913167225425172&id=100001957991710

பதிவு: இரண்டு:பாடல் 2 மற்றும் 3 பற்றியது
https://m.facebook.com/story.php?story_fbid=3916498978425330&id=100001957991710

பதிவு மூன்று :பாடல் 4, மற்றும் 5 பற்றியது:
https://m.facebook.com/story.php?story_fbid=3921380691270492&id=100001957991710
🙏🐾🙇🐾🙇🐾🙇🐾🙇🐾🙇🐾🙇🐾🙏

No comments:

Post a Comment

பதிவு - 13 நாள் - 7 ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total 86 Kms. 9 - 10 hrs. நாள் - 7 - 01.06.24 - சனி

பதிவு - 13 நாள் - 7  மிக முக்கிய நாள் ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total  86 Kms...