Tuesday, July 21, 2020

மொழிமாற்று பகுதி : நான்கு

#திருமுறைகளில்_தமிழமுதம்
#சம்பந்தர்அமுதம்
#மொழிமாற்று
பதிவு : நான்கு  (பாடல் 6, 7)
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇🙏🏻
⚜️ நாம் திருஞான சம்பந்தரின் தேவாரத் திருமுறைப் பாடல்களில்

#சம்பந்தர்தூது  
#எண்ணலங்காரம்  
#ஏகபாதம் 
#மடக்கணி

என்ற தலைப்பின் கீழ் தூது பாடல்களும், எண்ணலங்காரம், ஏகபாதம் மற்றும் மடக்கணி என்னும் இயமகம் முதலிய யாப்பு வகைப் பாடல்களைப் பற்றி ஏற்கனவே சிந்தித்து வந்தோம்.

தற்போது #மொழிமாற்று  என்ற வகை யாப்பு அமைப்பு பாடல்கள் பற்றி தொடர்ந்து சிந்திக்கலாம்.
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏

👂மொழிமாற்று என்றால் என்ன?  அதன் அமைப்பை பற்றியும் கூறவும்.

👄தமிழ் இலக்கியத்தில் 20 க்கும் மேற்பட்ட அமைப்பில் பாடல்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன.  இவை
யாப்பு வகைகள் என்று அறியப்படும்.
இவற்றின் ஒரு வகையே மொழிமாற்று எனப்படுகிறது. ஒரு பாடலில்

💠ஒரே அடியில் மாறியிருக்கின்ற சொற்களைப் பொருளுக்கேற்றவாறு மாற்றி அமைத்துக்கொள்ளுதல் மொழிமாற்று எனப்படும். இதனை இலக்கண நூலார் “மொழிமாற்றுப் பொருள்கோள்” என்பர்.
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
👂இந்த வகை அமைப்பில் சம்பந்தர் அருளிய பதிகம் எது? இதன் சிறப்பு யாது?

👄 தேவாரம் - முதல் திருமுறையில் வரும் ஞானசம்பந்தர் பதிகம் - 117 
தலம் திருப்பிரமபுரம்
பாடல் - 1259 முதல் 1270 வரையில் உள்ளது. 12 பாடல்கள் அடங்கியுள்ளது.

❇️பதிகத்தின் சிறப்பு:

☸️சிறு குழந்தையாகிய அருள் ஞானசம்பந்தர் சொற்களை மாற்றி மாற்றி வைத்து விளயாட்டுப் போல அமைந்த பாடல்கள்.
🔯அப்படியே படித்தால் பொருள் விளங்காது.
✡️முதலில் முழு பாடலையும் உணர்ந்து படித்து பின்பு பொருளுக்கு ஏற்ப முன் பின்னாக வார்த்தைகளை மாற்றிக் கூட்டிப் பொருள் கொள்ள வேண்டும்.

💠இதை மிறை கவி என்றும் கூறுவர்.
மிறைக்கவி என்பது எளிதில் பொருள் புரியாமல் மூளையைக் கசக்கி, சிந்தித்து சொற்களை மாற்றி அமைத்து தான்
பொருள் உணர வேண்டும்

🛡️அத்தகைய சிறப்பு பாடல்கள் கொண்டது இப்பதிகம்.

🏔️மொத்தம் 12 பாடல்கள். சீர்காழிப் பதியின் 12 பெயர்கள் சிறப்பும் ஒவ்வொரு பாடல்களிலும்  வருவது போல அமைத்துள்ளது மேலும் சிறப்பு.
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
பாடல் - 6

சாத்துவர்  பாசம்   தடக்கையில்
      ஏந்துவர்   கோவணம்தம்

கூத்தவர்  கச்சுக்குலவி  நின்று
       ஆடுவர்   கொக்கிறகும்

பேர்த்தவர்   பல்படை   பேயவை
        சூடுவர்    பேரெழிலார்

பூத்தவர்    கைதொழு   பூந்தராய்
         மேவிய   புண்ணியரே.

1264.             திருமுறை 01.117.06
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏

🔰இதை இப்படி பொருளுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக் கொண்டு பொருள் காண வேண்டும்

பாசம் தடக்கையில் ஏந்துவர்; 
கோவணம் சாத்துவர்; 
தம்கூத்தவர்; 
கச்சு குலவி நின்று ஆடுவர்; கொக்கிறகும் சூடுவர்;
பல்படைபேய் பேர்த்தவர்; 
பேர் எழிலார் 
தவர் பூ கைதொழுபூந்தராய் மேவிய புண்ணியர்

✳️✍️பொருள் குறிப்பு:

🔹கச்சு குலவி நின்று ஆடுவர் - அரையில்   
      கச்சு விளங்க நின்றாடுவர். 
🔹குலவி: குலவ எனத்திரிக்க. 
🔹பேர்த்தவர் - அடி பெயர்த்தாடல் 
      செய்தவர்  (காரணமாதல்)

💠📝பாடல் விளக்கம்:

மாதவ  முனிவர்கள் பூக்களைத் தூவி, கைகளால் தொழும் பூந்தராய் என்ற தலத்தில் எழுந்தருளிய புண்ணிய வடிவினராகிய பரமன்;

கோவணம் உடுத்தவர். 
நீண்ட கையில் பாசத்தை ஏந்தியவர். தமக்கே உரித்தான கூத்தினை உடையவர். 
கச்சணிந்து ஆடுபவர். 
கொக்கிறகு சூடுபவர். 
பல்வகைப் படைகளாகிய பேய்க் கணங்களை அடி பெயர்த்து ஆடல் செய்தவர். 
மிக்க அழகுடையவர்.

அவரைத் துதிப்பீராக.

🏔️தலக்குறிப்பு: பூந்தராய்: சங்கநிதி, பதுமநிதி என்னும் இரு நிதிகளின் அதிதேவதைகள் பூந்தாராய் இருந்து
 (தார் = மாலை) இத்தலத்தை வழிபட்டுப் பேறு பெற்றதால் சீர்காழிக்கு இப்பெயர்.

🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
பாடல் : 7
 
காலது   கங்கை  கற்றைச்
          சடையுள்ளார்  கழல்சிலம்பு

மாவது   ஏந்தல்    மழுவது
          பாகம்  வளர்கொழுங்  கோட்டு

ஆலது   ஊர்வர்   அடலேற்று
          இருப்பர்   அணிமணி  நீர்ச்

சேலது  கண்ணியோர்  பங்கர்
           சிரபுர   மேயவரே.

1265:      திருமுறை   01.117.07

🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏

🔰இதை இப்படி பொருளுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக் கொண்டு பொருள் காண வேண்டும்

காலது  கழல் சிலம்பு, 
கற்றைச்சடை உள்ளாற் கங்கை, 
மாலது   பாகம், 
ஏந்தல் மழுவது, 
வளர் கொழுங்கோட்டு ஆலது இருப்பர், 
அடல் ஏறு  ஊர்வர்
அணிமணி நீர்ச் 
சேலது கண்ணி  ஓர் பங்கர்
சிரபுரம் மேயவர்

✳️✍️பொருள் குறிப்பு:

🔹அணிமணி நீர்ச் சேலது கண்ணி =
     அழகிய நீலமணியின் நிறத்தையும்     
     சேல்மீன் போன்ற கண்களை உடைய       
      உமையம்மையை.
🔹ஓர் பங்கர் = ஒரு பாகம்
🔹மாலது பாகம் = திருமாலை ஒரு
      பாகமாகக் கொண்டவர்.
🔹வளர் கொழுங்கோட்டு ஆல்= வளர்ந்த 
     செழுமையான (கல்லால) கல்+ ஆல 
     மரம்
🔹அடல் ஏறு= இடபம்
🔹கோடு - மேருமலைத் தென் சிகரம். 
🔹ஆலது, சேலது, என்பனவற்றுள் அது
      பகுதிப்பொருள் விகுதி.

💠📝பாடல் விளக்கம்:

அழகிய நீலமணியின் நிறத்தையும் சேல்மீன் போன்ற கண்களை உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவரும் சிரபுரத்தில் எழுந்தருளியவரும் ஆகிய சிவபிரான்;

கழலையும் சிலம்பையும் காலில் சூடியவர். 
கற்றைச் சடையில் கங்கையை உடையவர். 
திருமாலைப் பாகமாகக் கொண்டவர். மழுவை ஏந்தியவர். 
வளர்ந்த செழுமையான கிளைகளைக் கொண்ட ஆலமரத்தின் கீழ் இருப்பவர். 
இடபத்தில் ஏறுபவர்

அவரை வணங்கி மகிழ்க.

🏔️தலக்குறிப்பு:   சிரபுரம் :  சிலம்பன் என்னும் அசுரன் வேற்று உருவுடன் அமுதம் பெற வந்தபொழுது திருமால் அவனது தலையை வெட்டினார்.  அவனது தலை (சிரம்) இராகுவாக நின்று பூசித்ததால் சீர்காழிப் பதிக்கு இப்பெயர்.

🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
3 வயதில் இறைவன் அருள் பெற்று ஞானப்பால் உண்டு பாலகனாய் இருந்து தமிழ்ப் பாடல்களினால் இறைவனை அருச்சித்து, பத்தி இலக்கியத்தில் தமிழின் பெருமையை உலகறியச் செய்த ஆளுடைய பிள்ளையாரின் அமுத பாடல்களின் ஒரு துளி பருகினோம்.

🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
நம் பக்தி இலக்கியத்தில்
ஒப்பற்ற நம் தமிழ் மொழியின்
அற்புத யாப்பமைந்த சிறப்பான ஒரு பதிகப் பாடல் அமைப்புக் குறித்து 
ஒரு துளியேனும் நாம் சிந்திக்க முயலலாமே என்ற வகையில் பதிவிடப்படுகிறது.

🌟இறையருளால்.
இதன் பெருமையை எண்ணிப் போற்றுவோம். 

வணக்கம்
நன்றி
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
என்றும் அன்புடன்
சுப்ராம் அருணாசலம்
காரைக்கால்
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
பதிவு: ஒன்று    பாடல் 1 விளக்கம்:
https://m.facebook.com/story.php?story_fbid=4018811291527431&id=100001957991710
பதிவு : இரண்டு பாடல் 2, 3 விளக்கம்:
https://m.facebook.com/story.php?story_fbid=4022950417780185&id=100001957991710
பதிவு : மூன்று, பாடல் 4, 5 விளக்கம்:
https://m.facebook.com/story.php?story_fbid=4027196434022250&id=100001957991710

No comments:

Post a Comment

பதிவு - 13 நாள் - 7 ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total 86 Kms. 9 - 10 hrs. நாள் - 7 - 01.06.24 - சனி

பதிவு - 13 நாள் - 7  மிக முக்கிய நாள் ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total  86 Kms...