Tuesday, July 21, 2020

சம்பந்தர் தூது பகுதி : ஐந்து

#திருமுறைசிந்தனைகள்:
#சம்பந்தர்தூது: 
பகுதி: ஐந்து.

பிரிவின் ஏக்கத்தில் விளைந்த பக்தி இலக்கிய பாடல்களில்
நம் இதயத்தை செலுத்தி வருகிறோம்.
🙏🛐🙏🙏🛐🙏🙏🛐🙏🙏🛐🙏

அந்த வகையில் இன்றைய சிந்தனைகள்:

காழி வேந்தர், பல நாட்கள் பிரிந்து வெவ்வேறு தலங்களுக்கு சென்றதால்,
தமக்கு அருள் தந்த தோணிப்பரை பிரிந்து இருக்கும் சூழலில், அவரை தலைவராகவும் தம்மைத் தலைவியாகவும், எண்ணி பிரிவுத் துயர் ஆற்றாமையினால், தூது அமைப்பில் ஒரு பதிகம் பாடியுள்ளார்.

(முதலாம் திருமுறை -60-வது பதிகம். 
தலம்: திருத்தோணிபுரம் 
(சீர்காழி பதியின் 12 பெயர்களில் ஒன்று)
வண் தரங்கப் புனற்கமல ... எனத் தொடங்கும் பதிகம்.  
இதில்
வண்டு (பாடல் 1), இளங்குருகு (பாடல் - 2) கோழி (பாடல் - 3), நாரை (பாடல்-4)
புறா (பாடல் 5) அன்னம் (பாடல் 6), 
அன்றில் பறவை (பாடல் 7) முதலியவற்றின் மூலம்,

தூது அனுப்பிய பாங்கையும் அதன் கவித்துவ சிறப்பையும் பக்தியின் ஆளுமை பற்றியும் எண்ணி இதுவரை சிந்தித்தோம்.****
🎎🐝🐞🐬🦈🦋🐓🐔🦆🐤🐥🦅🕊️🐦🙇

ஆளுடையப் பிள்ளை அடுத்தடுத்து  
அங்கு வசிக்கும், 
இளங்குயில் (பாடல் 8)
நாகனவாய் பறவை (பாடல் 9)
தாம் வளர்த்த கிளி (பாடல் 10)
 🎎🐝🐞🐬🦈🦋🐓🐔🦆🐤🐥🦅🕊️🐦🙇
இவற்றிடம் தாம் இறைவர் மேல் கொண்ட பக்தியையும், அவரை விட்டு பிரிந்து வாழும் ஏக்கத்தையும் தம் கவியாற்றல் சிறப்பால் வெளிப்படுத்துகிறார் என்பதைப் பற்றி மேலும் தொடர்ந்து சிந்திப்போம்.
🙏🐾🙇🐾🙇🐾🙇🐾🙇🐾🙇🐾🙇🐾🙏
காட்சி - 8:  இளங்குயில் - தூது

பிரிவுநோய் அறியாமையினாலே அன்னங்களும் பேசாமல் இருக்க, 

பால்மணம் கமழும் மலர்களைக் கொண்ட மாமரத்தின் தளிர்களைக் கோதி உண்டு, எல்லோர்க்கும் இனிதாகக் கூவும் அழகிய இளமையான குயிலைக்கண்டார்

குயில் மாந்தளிரை உண்டு மிக இனிமையாகக்கூவும் தன்மையது என்று குறிக்கின்றார். அது இறைவர் இடம் சென்று கூவினாலே போதும் அவர் மனம் மாறும் என்று எதிர்நோக்கினராக, 

திருத்தோணிபுரத்தில் எழுந்தருளிய தேவர் தலைவனாகிய சிவபிரான் என்னிடம் வருமாறு ஒருமுறையேனும் கூவுவாயாக.
என வேண்டுகின்றார். 

பாடல் : (652):
பானாறு  மலர்ச்  சூதப்
     பல்லவவங்கள் அவை கோதி
ஏனோர்க்கும்  இனிதாக
     மொழியும்எழில்   இளங்குயிலே
தேன்ஆரும்  பொழில்புடைசூழ்
      திருத்தோணி புரத்தமரர்
கோனாரை  என்னிடைக்கே
     வர  ஒருகால்   கூவாயே.

- தேவாரம் - முதல் திருமுறை - 01.60.08

வண்டு முதலியவற்றைப் பார்த்துப் பகராய், விளம்பாய் என வேண்டிய அவர் இதனைக் கூவாய் என்று மட்டும் வேண்டுகிறது கவனிக்கத்தக்கதாம்.
 🎎🐝🐞🐬🦈🦋🐓🐔🦆🐤🐥🦅🕊️🐦🙇

காட்சி - 9: நாகணவாய் பறவை - தூது.

குயிலும் வேனிற்காலத்தில் அன்றி,  தூதுசெல்லும் தரத்தன அல்ல என்பதைத்
அறிந்து கொண்டவர்,  நாகணவாய்ப் பறவை யைக் காணுகிறார். பின் அதனிடம்
வேண்டுகின்றார்.

அழகமைந்த வாயாகியஅலகினை உடைய நாகண வாய்ப் பறவையே! நான் உன்னைத் துதித்துப் போற்றுகிறேன். தலைவனிடம் முறையிடுதற்குரிய செவ்விகளை நீ மிகவும் நன்கறிவாய் ஆதலால், இம்முறையீட்டை உன்பால் தெரிவிக்கிறேன். சொற்களால் அமைந்த பதம் என்னும் இசையமைப்புடைய வேதங்களில் வல்ல மறையவர் வாழும் திருத்தோணிபுரத்தில் எழுந்தருளிய வில்லாற் பொலியும் தோளை உடைய விகிர்தனுக்கு என் உடலில் தோன்றிய பசலை நோயை உரைப்பாயாக என்று உரைத்தார்.

பாடல் - (653)

நற்பதங்கண்  மிக  அறிவாய்
     நானுன்னை  வேண்டுகின்றேன்
பொற்பமைந்த   வாய்அலகில்
      பூவைநல்லாய்   போற்றுகின்றேன்
சொற்பதம் சேர்    மறையாளர்
     திருத்தோணி   புரத்துறையும்
விற்பொலிதோள்   விகிர்தனுக்குஎன்
    மெய்பயலை   விளம்பாயே.

-தேவாரம் - முதல் திருமுறை - 01.60.09
பூவை - நாகனை வாய்ப்  பறவை
🎎🐝🐞🐬🦈🦋🐓🐔🦆🐤🐥🦅🕊️🐦🙇

காட்சி : 10 - கிளி  - தூது.

இங்ஙனம் சேய்மையிலும் அண்மையிலும் வசிக்கின்ற வண்டு, இளங்குருகு, கோழி, நாரை, புறா, அன்னம், அன்றில், இளங்குயில், நாகணவாய்ப்பறவை 
இவைகளை வேண்டிக்கொள்ள,  அவை ஒன்றும் பயன்படாதொழியவே, 

தான்வளர்த்த கிளி நினைவிற்கு வர, தான் தலைவனுடை திருநாமங்களை மொழிந்து மகிழ்ந்த நிலையில் கிளி தலைவனுடைய திருநாமத்தைச் செவி மடுத்திருக்கும் என்று நம்பி இறைவன் திருநாமத்தைத் தான் வளர்த்தத  கிளியின் வாயிலாகக் கேட்போம் என்று கருதி, கிளியை நோக்கி,`என்பால் இங்கு வருக வந்து ஒரு முறை என் இறைவர் பெயரைச் சொல்` என்று வேண்டுகின்றார். 

இதுவரை தூதுவேண்டிய அவர், இப்போது கிளியிடம் பெயரை வேண்டுவது, கிளி சென்று தூதுரைத்துத் தலைவரை உடன்படுத்தி அழைத்துவரும் வரையில் பிரிவுத்துன்பம் பொறுக்கமுடியாத அளவு பெரிதாம் என்பதை எண்ணுகிறார்.

தலைவனுடைய பெயரைக் கேட்கின்ற அளவிலாவது துன்பந் தோன்றாது என்ற குறிப்பு  உடையவராக இங்ஙனம் வேண்டுகின்றார். 
அங்ஙனம் சொல்வதற்குக் கைக்கூலியும் தருவதாக தேனொடுபால் முறையாக உண்ணத் தருவேன் என்கின்றார்.

பாடல் : (654) -

சிறையாரு  மடக்கிளியே
      இங்கேவா   தேனொடு பால்
முறையாலே   உணத் தருவன்
       மொய்பவளத்  தொடு தரளம்
துறையாரும்   கடல் தோணி
        புரத்தீசன்  துளங்கும் இளம்
பிறை   யாளன்   திருநாமம்
        எனக்கு  ஒருகால்  பேசாயே
        
-தேவாரம் - முதல் திருமுறை -  01.60.10.

அழகிய சிறகுகளை உடைய இளங்கிளியே! என் பால் வருவாயாக. நான் உனக்குத் தேனையும் பாலையும் மாறி மாறி உண்ணத்தருவேன். நீ செறிந்த பவளங்களையும் முத்துக்களையும் கரைகளில் சேர்ப்பிக்கும் கடல் அருகில் உள்ள திருத்தோணிபுரத்தில் உறையும் இளம்பிறை சூடிய பெருமானின் திருநாமத்தை `ஒரு முறை` என் செவி குளிரப் பேசுவாயாக என்கிறார்.
 🎎🐝🐞🐬🦈🦋🐓🐔🦆🐤🐥🦅🕊️🐦🙇

பின்னுரை:

நமக்கு விருப்பமானவர்கள், தொலைதூரத்தில் இருக்கும் நிலையில் அவர்களுடைய நினைவுகளால் வாடும் உள்ளம், இந்த தூதுயியல் பாடல்கள் மூலம் நாம் உணரலாம்.

ஞானப்பாலுண்டவர், பொதுவாக தம் ஒவ்வொறு பதிகத்திலும் 10 பாடல்களும், ஒரு திருக்கடைக்காப்பு பாடலையும் வைத்து இறைவனின் ஆற்றலையும், சிறப்புகளையும் போற்றுவார். 
முக்கியமாக
(1) திருமாலும்,பிரம்மனும் முயன்றும் அடிமுடிகாண முடியாத உயர்வு,
(2) கைலைமலையை கைவைத்த இராவணை அடக்கியது,
(3) சாக்கிய, சமண, மதத்தவரின் பயனற்ற பக்தி வேடம் 
முதலிய குறிப்புகளைக் கொண்டிருக்கும்.

அவை எதுவும் இப்பதிகத்தில் இல்லாமையும், தலைவன் மீது, தலைவி கொண்ட உயர்வான பக்தித்தன்மையே முழு பதிகத்திலும் வெளியிடப்பட்டுள்ளது என்பதை உணர வேண்டும்.
🙏🐾🙇🐾🙇🐾🙇🐾🙇🐾🙇🐾🙇🐾🙏
செந்தமிழ்ஞானவித்தகரின் பாடல்கள் உயர்ந்த கலைச் சொற்களும், சந்தங்களும் உடையன.

யாவற்றுக்கும் மேலக இறைவனை உணர்த்த பாடல் பெற்ற பாங்கு நம்மால் வணங்கத்தக்கதே அன்றி உரைக்கும் உரைகளுக்கு அப்பாற்பட்டதாகும்.

இந்தக் காலத்தில்பயிலும் மாந்தர்கள்
கால நிலைக்கு ஏற்ப ஓரளவாவது பொருள்படுமாறு உரை உணர துண்டலே இந்த மிகச் சிறு முயற்சி.

இறையருளால் தோன்றிய பாக்களுக்கு விளக்கமும் விளங்கும் தன்மையும் தரவும் பெறவும் அவன் தாள் வணங்கி நிற்போம்.
🙏🐾🙇🐾🙇🐾🙇🐾🙇🐾🙇🐾🙇🐾🙏

நன்றி, வணக்கம்.

🙏🛐🙏🙏🛐🙏🙏🛐🙏🙏🛐🙏
சிந்தனையும் பகிர்வும்:
என்றும் அன்புடன்
சுப்ராம் அருணாசலம்
காரைக்கால்.
🙏🛐🙏🙏🛐🙏🙏🛐🙏🙏🛐🙏
****தொடர்புடைய பதிவுகள்:

பதிவு : ஒன்று: பாடல் 1 பற்றியது.
https://m.facebook.com/story.php?story_fbid=3913167225425172&id=100001957991710

பதிவு: இரண்டு:பாடல் 2 மற்றும் 3 பற்றியது
https://m.facebook.com/story.php?story_fbid=3916498978425330&id=100001957991710

பதிவு மூன்று :பாடல் 4, மற்றும் 5 பற்றியது:
https://m.facebook.com/story.php?story_fbid=3921380691270492&id=100001957991710

பதிவு நான்கு : பாடல் 6 மற்றும் 7 பற்றியது:
https://m.facebook.com/story.php?story_fbid=3924613914280503&id=100001957991710
🙏🐾🙇🐾🙇🐾🙇🐾🙇🐾🙇🐾🙇🐾🙏

No comments:

Post a Comment

பதிவு - 13 நாள் - 7 ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total 86 Kms. 9 - 10 hrs. நாள் - 7 - 01.06.24 - சனி

பதிவு - 13 நாள் - 7  மிக முக்கிய நாள் ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total  86 Kms...