அருள்மிகு கல்யாண சுந்தரேஸ்வரர் - பரிமளசுகந்தநாயகி - திருக்கோயில்.
திருவேள்விக்குடி - 609 801, குத்தாலம்
மயிலாடுதுறை-கும்பகோணம் சாலை குத்தாலம் சந்திப்பில் இருந்து வடகிழக்கு 3 கி.மி தொலைவில் அமைந்துள்ளது.
மயிலாடுதுறை - கும்பகோணம் கல்லணை சாலையில் உள்ளது.
மிகவும் பழமையான தொன்மையான கோயில்.
இத்தலத்திலுள்ள இறைவன் கல்யாணசுந்தரேஸ்வரர், இறைவி பரிமளசுகந்தநாயகி. இறைவன் மணவாளேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார்.
பார்வதியின் துயரத்தை போக்கிட்ட சிவன், இங்கு வந்து வழிபடும் கல்யாணம் ஆகாத ஆண்கள், பெண்களின் துயரத்தை போக்கி திருமணத்தை சிறப்பாக நடத்தி வைக்கிறார்.
சிவன் - பார்வதி திருமணத்துக்கான வேள்வி வளர்த்து யாகம் முதலிய ஏற்பாடுகள் நடைபெற்ற தலமாதலால் திருவேள்விக்குடி என்ற பெயர் ஏற்பட்டது. திருமணத் தடை நீக்கும் ஒரு பிரார்த்தனைத் தலமாக திருவேள்விக்குடி விளங்குகிறது.
இறைவனின் திருமணத் தலம் என்பதால் இங்கு நவக்கிரகங்கள் கிடையாது. அதற்கு பதில் ஈசனே ஈசான்ய மூலையில் அமர்ந்துள்ளார்.
பிரார்த்தனை: நவக்கிரகதோஷத்தால் திருமண தடை உள்ளவர்கள் இவருக்கு 48 அகல் விளக்கு ஏற்றி வழிபட்டால் தோஷம் நீங்கும்.
இத்தலத்தின் தீர்த்தம் கௌதுகா பந்தன தீர்த்தம்.
நேர்த்திக்கடன்: பவுர்ணமி தினத்தில் காலை 10 முதல் மாலை 4 மணிவரை திருமண தடை நீங்க யாகம் நடக்கிறது. இந்த யாகத்தில் திருமணத் தடை உள்ள ஆண்கள், பெண்கள் இருபாலரும் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து வழிபடலாம். திருமணம் முடிந்தவுடன் தம்பதிகள் இத்தலத்திற்கு வந்து சுவாமி அம்பாளுக்கு அர்ச்சனை செய்து நன்றி சொல்லிவிட்டால் போதும்.
திருவிழா: மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம்.
தல வரலாறு - 1
1. திருவேள்விக்குடியின் அருகிலுள்ள குத்தாலத்தில் பரத மகரிஷியின் மகளாக பார்வதி அவதாரம் செய்தாள். அவள் தன்னை திருமணம் செய்ய வேண்டி பரமேஸ்வரனை நினைத்து 16 திங்கள்கிழமை விரதம் இருந்து மண்ணில் லிங்கம் பிடித்து பூஜை செய்தாள். 17வது திங்களில் ஈசன் "மணவாளேஸ்வரர்' ஆக தோன்றி, அவளைத் திருமணம் செய்து கொள்வதாக வாக்களித்தார்.
சிவன் தன்னில் ஒரு பகுதி பாகத்தை சக்திக்கு அளித்த தலம் இதுதான்.
அதன்படி அம்மனுக்கு கங்கணம் கட்டி, வேள்விகள் செய்து, பிரம்மா நடத்தி வைக்க மணம் புரிந்து கொண்டார். எனவே தான் இத்தலம் "திருவேள்விக்குடி' என அழைக்கப்பட்டது. இத்தலத்தில் அருள்பாலிக்கும் அன்னையின் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.. அவ்வளவு அழகு. தவத்தின் ஆரம்பத்தில் துயரத்துடன் இருந்த அன்னை, சிவன் தன்னை மணந்து கொள்கிறார் என்றவுடன் ஏற்பட்ட ஆனந்தத்தில் புன்னகை பூக்க அருள்பாலிக்கிறாள்.
தல புராணம் - 2.
சிவனை மதிக்காமல் பார்வதி ஒருமுறை நடக்க, சிவன் பார்வதியை பசுவாக பூலோகத்தில் வாழும்படி சாபமிட பார்வதி இத்தலத்தில் பசுவாக மாறி, சாப விமோசனம் பெற்ற தலம். பார்வதியுடன் கலைமகள் மலைமகள் இந்திராணி அனைவரும் பசுவாக மாறி இங்கே வாழ திருமால் இப்பசுக்களை மேய்த்துக் கொண்டு இருந்தார். பசுக்களின் பாலை இங்குள்ள சிவலிங்கத்திற்கு பூஜை செய்ய சிவன் எழுந்தருளியிருந்து பார்வதியின் சாபம் போக்கி, திருமண ஏற்பாடு செய்து இங்கேயே சடங்குகள் கங்கனதாரணம் நடைபெற்ற தலம்.
இங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவிலுள்ள திருமணஞ்சேரியில் சிவன் பார்வதி திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் பிரம்மா தானே முன்னின்று வேள்வி செய்ததால் திருவேள்விக்குடி என பெயர் பெற்ற தலம்.
3. அகத்தியர் வாதாபியைக் கொன்றதால் ஏற்பட்ட சாபம் நீங்கப்பெற்ற தலம்.
4. அரச குமாரன் ஒருவனுக்கு நிச்சயித்திருந்த பெண்ணின் தாய் தந்தையர் திருமணத்திற்கு முன் இறந்து விட்டனர். பின் பெண் வீட்டார் இத்திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை.
அரசகுமாரன் இத்தலம் வந்து இறைவனை வணங்கி, நின்ற திருமணத்தை நடத்தி வைக்கக் கேட்டான். சிவன் ஒரு பூதத்தை அனுப்பி அந்த பெண்ணை அழைத்து வந்து, திருமணம் செய்து வைத்தார்.
தல சிறப்பு:
இத்தல இறைவன் கிழக்கு நோக்கிய சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.
இறைவனின் திருமணத் தலம் என்பதால் இங்கு நவக்கிரகங்கள் கிடையாது. அதற்கு பதில் ஈசனே ஈசான்ய மூலையில் அமர்ந்துள்ளார்.
தலபெருமை: சிவனின் தோழரான சுந்தரர் இங்கு வந்து அக்னி தீர்த்தத்தில் நீராடி சிவனை வழிபட்டு, தனது குஷ்டத்தை போக்கிகொண்டார்.
திருஞானசம்பந்தர் சுந்தரமூர்த்தி நாயனார் இருவராலும் பதிகம் பாடிப் பரவிய 276 சிவாலயங்களில் இது காவிரி வடகரைத் தலங்களில் 23வது தலம்.
இத்தல பதிகங்கள் இரண்டும், திருத்தருத்தி தலத்தோடு இணைந்து பாடப்பெற்றுள்ளன. இத்தல இறைவன் திருத்துருத்தியில் பகல் காலத்திலும், திருவேள்விக்குடியில் இரவிலும் வீற்றிருந்து அருள்பவர் என்று திருஞானசம்பந்தர் தனது பதிகத்தில் குறிப்பிடுகிறார்.
மழைவள ரிளமதி மலரொடு தலைபுல்கு வார்சடைமேல்
கழைவளர் புனல்புகக் கண்டவெங் கண்ணுதற் கபாலியார்தாம்
இழைவளர் துகிலல்கு லரிவையோ டொருபக லமர்ந்தபிரான்
விழைவளர் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே - திருஞானசம்பந்தர்
இவ்வாலயம் காலை 7 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.
#மீள்தரிசனம் - #ரதசப்தமி
25.01.2026 #சுப்ராம்தரிசனம்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
No comments:
Post a Comment