Sunday, August 30, 2026

காஞ்சிபுரம்பரிதீஸ்வரர் கோயில்(#காஞ்சிபுரம்நவகிரகஆலயம் )சூரியன் வழிபட்ட தலம் 16.8.26

#காஞ்சிபுரம்
பரிதீஸ்வரர் கோயில்
(#காஞ்சிபுரம்நவகிரகஆலயம் )
சூரியன் வழிபட்ட தலம்

காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள நவகிரக பரிகார தலங்களில் சூரியன் பரிகார தலமாக கருதப்படுவது பரிதீஸ்வரர் திருக்கோவில்.

காஞ்சிபுரம் பரிதீசுவரர் கோயில்
சூரிய பகவான் சாபம் நீங்க வேண்டி தீர்த்தக்குளம் அமைத்து ஈசனை பூஜித்து ராஜயோகம் பெற்ற தலம் இது. இத்தலத்தில் சூரிய பகவான் தனி சன்னிதியில் அருள்பாலிக்கிறார்
மேலும், சூரியன் (ஞாயிறு) பரிகார தலமாக உள்ள இக்கோயில் பற்றிய குறிப்புகள் காஞ்சி புராண படலத்துள் உட்கோயில்களாகச் சொல்லப்பட்டுள்ளது.
இறைவர்: பரிதீசர், பருத்தீசர்.
வழிபட்டோர்: சூரியன் (ஞாயிறு)
தல வரலாறு
சூரியன் வழிபட்ட சிவலிங்க மூர்த்தமாகும். மேலும், இப்பகுதி பரிதிக்குளம் ( என்பது மருவி தற்போது 
முற்காலத்தில் 'பரிதிக்குளம்' (பரிதி என்றால் ஞாயிறு, (சூரியன்) என்பதாகும்.)
என்றும், 'பருத்தீசம்' என்றும் அழைக்கப்பட்ட இப்பகுதி, தற்போது மருவி 'பருத்திக்குளம்' எனப்படுவதால் இவ்விரைவர்க்கு பருத்தீசுவரர் எனும் பெயருமுண்டு.

தல பதிகம்
பாடல்: (பரிதிக் குளம்)
மருத்தேத்துஞ் செவ்வந்தீச் சரமால் வரைப்பின் வடகுடக்காந்
திருத்தேத்துக் கதிர்ப்பரிதிச் செல்வன் பரிதிக் குளந்தொட்டுக்
கருத்தேய்த்து வீடளிக்கும் அந்நீ ராட்டிக் கருதார்ஊர்
உருத்தேத்துஞ் சுரர்க்கருளும் ஒளியைத் தொழுதுவரம்பெற்றான்.
பொழிப்புரை:
வாயு வழிபாடு செய்த செவ்வந்தீச்சரமாம் பெருமை பொருந்திய
சூழலின் வடமேற்காகும் அழகிய இடத்தில் கதிர்களையுடைய சூரியன் தன்
பெயரால் சூரிய தீர்த்தம் வகுத்துப் பிறவி நோயைப் போக்கி வீடு பேற்றினை
வழங்கும் அந்நீரால் திருமுழுக்காட்டிப் பகைவருடைய முப்புரங்களை
வெகுண்டழித்துப் போற்றுந் தேவர்க்கருள் செய்யும் பரஞ்சுடரைத் தொழுது
வேண்டும் வரங்களைப் பெற்றனன்.

கோவில் அமைப்பு
 சுமார் 1600 ஆண்டுகளுக்கு முன்பு பல்லவ மன்னர்களால் அமைக்கப்பட்டதாக கருதப்படும் இத்தலம், தற்போது சிறிய அளவில் காட்சி தருகிறது.
கிழக்கு நோக்கிய இத்தலத்தில் சூரிய பகவான் தனி சன்னிதியில் அருள்பாலிக்கிறார். இங்கு சூரிய பகவான் தனது கதிர்களால் சிவலிங்கத்தை வணங்குவதாக கூறப்படுகிறது. 
இக்கோவில் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. ராஜகோபுரம் இன்றி ஒரு நுழைவு வாசலோடு காட்சி தருகிறது. கோவிலுக்குள் நுழைந்ததும் இடது புறத்தில் ஒரு சிறிய பீடத்தில் அக்னி விநாயகர் அருள்புரிகிறார். எதிரில் ஒரு தனி சன்னிதியில் சூரிய பகவான் புன்னகை தவழும் திருமுகத்தோடு நான்கு திருக்கரங்களுடன் பத்மபீடத்தின் மீது நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.
சூரிய பகவானின் சன்னிதிக்கு பின்புறத்தில் ஒரு சன்னிதியில் வல்லப கணபதி காட்சி தருகிறார். கருவறையின் வலது புறத்தில் சண்டிகேஸ்வரர் சன்னிதி உள்ளது. இத்தலத்தில் நவகிரகங்களுக்கு சன்னிதி இல்லை. கருவறைக்குள் ஈசன், பரிதீஸ்வரர் என்ற திருநாமம் தாங்கி லிங்க சொரூபமாய் அருள்கிறார். கருவறையின் வெளியே துவார பாலகர்கள் அமைந்துள்ளனர். எதிரில் நந்தியம்பெருமான் உள்ளார். அருகில் பலிபீடம் அமைந்துள்ளது.

பொதுவாக காஞ்சியில் அனைத்து சிவத்தலங்களுக்கும் காமாட்சி அம்மனே அம்பாளாக அமைந்து அருள்வதால் இத்தலத்தில் அம்பாளுக்கு தனி சன்னிதி இல்லை. இத்தலத்தின் தல விருட்சமாக வில்வ மரம் உள்ளது. 'பரிதி தீர்த்தம்' என்கிற சூரிய தீர்த்தம் இத்தலத்தின் தீர்த்தமாகும்.

பிரார்த்தனை

சூரிய பகவானுக்கு ஏழு நெய் தீபம், ஈசனுக்கு ஐந்து நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் அவர்களின் பிரார்த்தனைகள் நிறைவேறுவதாக ஐதீகம். அரசு பதவி மற்றும் திருமண வரம் வேண்டுபவர்கள் சூரிய பகவான் சன்னிதியை ஏழு முறை வலம் வந்து வழிபட்டால் நல்ல பலன் கிடைப்பதாக கூறப்படுகிறது.

மாதப்பிறப்பு, மாத சப்தமி, ரத சப்தமி, தை மாத மகர சங்கராந்தி, பிரதோஷம், ஐப்பசி அன்னாபிஷேகம், மகாசிவராத்திரி முதலான உற்சவங்கள் இத்தலத்தில் சிறப்பாக நடைபெறுகின்றன.

இக்கோவில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 6 மணி முதல் 8 மணி வரையும், ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும் பக்தர்களின் வழிபாட்டிற்காகத் திறந்திருக்கும்.

அமைவிடம்
காஞ்சிபுரம் பஞ்சுப்பேட்டை பெரிய தெருவில் உள்ள தமிழ்நாடு அரசின் விதைப்பண்ணை வளாகத்தில் அமைந்துள்ளது செவ்வந்தீஸ்வரர் கோவில். அதை கடந்து சென்றால் இடதுபுறம் பிரியும் சாலைக்கு அருகில் உள்ள பருத்திக்குளத்தின் கரையில் இத்தலம் அமைந்துள்ளது. பெரிய காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் இத்தலம் உள்ளது.
நன்றி🙏
#சுப்ராம்தரிசனம் 16.08.2026
#என்றும்அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று


No comments:

Post a Comment

திருவோத்தூர்வேதபுரீசுவரர் கோயில் 16.8.26

#திருவோத்தூர் வேதபுரீசுவரர் கோயில் தேவாரப்பாடல் பெற்ற 276 சிவாலயங்களில் இது 240 வது தேவாரத்தலம் ஆகும். தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். ...