ஸ்ரீ காமாட்சியம்மன் ஆலயம்
காமாட்சி அம்பாள் கோயில் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஓர் அம்மன் கோயில் ஆகும்.
தந்திர சூடாமணியின்படி இது 51 சக்தி பீடங்களில் தேவியின் நாபி (தொப்புள்) விழுந்த சக்தி பீடமாகும். இக்கோவில் மகா சக்தி பீடங்களிலும் ஒன்றாகத் திகழ்கிறது.
கோயில் வரலாறு
காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து சிவன் கோயில்களையும் மையமாகக் கொண்ட ஒரே சக்தி ஆலயம் காமாட்சி அம்மன் கோயில் ஆகும், விஸ்வப்ராஹ்மணர்களுக்கு பாத்தியப்பட்ட இந்தக் கோவில் பொற்கொல்லர்களின் பாரம்பரியத்தை காக்கின்ற குலதெய்வமாக இருக்கிறது. விஸ்வகர்மா மக்களால் இந்தக் கோவில் கட்டப்பட்டது. இது போல வேறிடங்களில் அம்மனுக்கு தனி ஆலயங்கள் இல்லை.
காமாட்சி இங்கு "பரப்ரஹ்ம ஸ்வரூபினி" என்று வணங்கப்படுகிறார். ஆரம்பத்தில் மிகவும் உக்கிரமாக இருந்ததால், 'உக்ர ஸ்வரூபினி' என அழைக்கப்பட்டார். ஆதி சங்கரரால், எட்டாம் நூற்றாண்டில், இக்கோயிலில் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மிகவும் உக்கிரமாக இருந்த காளியன்னையை, சௌம்யமான காமாட்சியாக ஆதிசங்கரர் சாந்தப்படுத்தினார்.
அயோத்தியின் தசரத சக்ரவர்த்தி இத்திருக்கோயிலில் ’புத்திர காமேஷ்டி’ யாகம் செய்தார். இது மார்கண்டேய புராணத்தில் உள்ள தகவல் ஆகும். காமாட்சியின் பிரகாசமான முகத்தை தீர்கமாக தரிசிப்பவர்களுக்கு, அம்மனின் கண்கள் சிமிட்டுவது போன்றதான உணர்வினை ஏற்படுத்துமாம்.
பண்டாசுரன் எனும் கொடிய அசுரனை வதைத்து, பின் இங்கே நான்கு கரங்களோடு பத்மாசன யோக நிலையில் அமர்ந்திருக்கிறாள். முன் இருகைகளில் கரும்பு வில்லினையும், மலர்க் கணைகளையும், மேல் இருகைகளில் பாசம் மற்றும் அங்குசத்தை ஏந்தி இருக்கிறாள். ஆதிசக்தியாக விளங்கும் காமாட்சியின் இந்த வடிவம் லலிதா சஹஸ்ரநாமத்தில் குறிப்பிட்ட படி உள்ளது.
கோயில் அமைப்பு
கோயிலின் உள்ளே பிரகாரங்களும், தெப்பக்குளமும், நூறுகால் மண்டபமும் அமைந்துள்ளன. இத்திருக்கோயில் 5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
இக் கோயிலின் கருவறையில் காமாக்ஷியின் உருவம் அமர்ந்திருக்கும் கோலத்தில் உள்ளது. சிவன், விஷ்ணு மற்றும் பிரம்மா ஆகியோரின் திரித்துவத்தால் சூழப்பட்டுள்ளது. கருவறையைச் சுற்றி பங்காரு காமாட்சி, ஆதிசங்கரர் மற்றும் மகா சரஸ்வதி ஆகியோரின் சிறிய ஆலயங்கள் உள்ளன. வெளிப்பிரகாரத்திலிருந்து தங்கம் வேய்ந்த கோபுர விமானத்தினைக் கண்டு களிக்கலாம். மேலும் காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் தலவிருட்சம் (மாமரம்) ஒன்று பன்னெடுங்காலமாக இருக்கிறது.
திருக்கள்வனூர் திவ்ய தேசம் காமாட்சி அம்மனின் கருவறைக்கு அருகில், 7–10-ஆம் நூற்றாண்டின் ஆழ்வாரால் மகிமைப்படுத்தப்பட்ட விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில் இருந்தது. இக்கோயில் சிதிலமடைந்ததால் அங்குள்ள தெய்வம் இப்போது காமாட்சி அம்மன் கோவிலுக்குள் வைக்கப்பட்டுள்ளது. கோயில் விமானத்தின் மேல் சிற்பங்கள் உள்ளன.
தலவரலாறின்படி, அரூபலட்சுமியாக காட்சி தரும் மகாலட்சுமியைத் தேடி வந்த திருமாலை, அவள் ‘கள்வா’ என்று அழைத்ததால் பெருமாளுக்கு இந்த திருநாமம் ஏற்பட்டது.
உற்சவ விழாக்கள்
ஆண்டு தோறும் மாசி மாதத்தில் உற்சவ விழாக்கள் மிகச் சிறப்பாக நடந்தேறும். இவற்றில் தேர்த்திருவிழாவும், தெப்பக்குள உற்சவமும் மிகச் சிறப்புடையது. நவராத்திரி, ஆடி மற்றும் ஐப்பசி பூசம், சங்கர ஜெயந்தி மற்றும் வைகாசி மாதத்தில் நடைபெறும் வசந்த உற்சவம் ஆகியவை மிகவும் புகழ் பெற்றவை. மேலும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் சிறப்பு பூசைகள் செய்யப்படுகின்றன.
காமாட்சியம்மன் ஆலயம் சுற்றிலும் நடைதூரத்தில் வேறு சில புராதான ஆலயங்களும் உள்ளன
நன்றி🙏🏼
#மீள்தரிசனம்
#சுப்ராம்தரிசனம் 23.07.2023 மற்றும் 15.08.2026
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
No comments:
Post a Comment