#காஞ்சிபுரம்நவக்கிரகத்தலம்
காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள பழமையான நவகிரக தலங்களில் குரு பரிகார தலமாக விளங்குவது, அருள்மிகு கமலாம்பிகை உடனுறை ஸ்ரீ காயாரோகணேசுவரர்
கும்பகோணம், நாகப்பட்டிணம் அடுத்து இங்கு காஞ்சியில் மட்டுமே காயாரோகணர் உள்ளார் என்பது சிறப்பு.
மேலும் வியாழ(குரு)பகவான் இங்கு இறைவனை வழிபட்டு, சிவபெருமானின் திருவடியில் மாறாத அன்பு வாய்க்கப் பெற்ற இக்கோயில் பற்றிய குறிப்புகள், காஞ்சிப் புராணத்தில் தனிப்படலமாகச் சொல்லப்பட்டு காணப்படுகிறது.
இது ஒரு தேவார வைப்புத்தலமாகும்
அமைவிடம்
காஞ்சிபுரத்தின் தென்மேற்கு பகுதியில் பிள்ளையார்பாளையத்தில் தாயார் குளம் தெருவில் வேகவதி ஆற்றங்கரையில் இக்கோயில் அமைந்துள்ளது.
மேலும், காஞ்சிபுரம் மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பின்புலத்தில் இத்தலம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
தல விளக்கம்
காயாரோகணம்: காஞ்சியில் மிகப் பெருஞ் சிறப்பினவாய இடங்கள் மூன்றென்று போற்றப்பெறும். அவை திருவேகம்பம், கச்சபேசம், காயாரோகணம் எனப் பெற்று முறையே உமையம்மையார், சரசுவதி, இலக்குமி என்னும் முச்சத்திகளால் வழிபடப்படுவன. காஞ்சிக்கு உயிராய் விளங்கும் இத்தலத்தில் சிவபிரானார் திருமால் பிரமர் இறக்கவரும் காலத்தில் அவர்களை ஒடுக்கி அவர்கள் சரீரத்தைத் தன் தோள்மேல் தாங்கி நடனம் புரிவர், ஆகலின், அவ்விடம் காயாரோகணம் எனப் பெற்றது.
இலக்குமி வில்வத்தால் காயாரோகணேசுவரரை அருச்சித்துத் திருமாலைத் தனக்குக் கணவனாகப் பெற்றனள். வியாழபகவான் அங்கு வழிபாடு செய்து ‘எமது பெருமானே, தேவரீரே தேவர்களுள் பிராமணராவீர்! ஏனையோர்களுள் பிராமணன் அடியேன். பிராமணனுக்குப் பிராமணனே புகலிடம். பிராமணன் பிராமணராகிய தங்களைத் தொழாது பிறரை வணங்கில் நலமுமுறான்; நரகமும் புகுவன் என்றிங்ஙனம் மறைகள் விரித்துரைக்கும். பிராமணனாகிய எனக்குத் தங்கள் திருவடிகளே கதி’ என்று கூறிய பிருகற்பதிக்கு பெருமான் முன்னின்று ‘வேண்டுவகேள் அருளுதும்’ என்றனர். ‘திருவடியில் இடையறா அன்பும் எனக்குரிய வியாழக் கிழமையில் காயாரோகண (தாயார்குளம்) தீர்த்தத்தில் மூழ்கி இங்கு வழிபடுவார்க்கு விரும்பியவும், வழங்கி மேலும் முத்தியையும் அளித்தருள வேண்டுமென வேண்டினர். ‘என்றென்றும் இவ்விலிங்கத்தே அம்மையொடும் விளங்கி அவரவர் விரும்பிய அனைத்தும் அருளுவோம்’ என வாய்மலர்ந்து தேவர்களுக்குக் குருவாகும் வரத்தை வழங்கி இலிங்கத்தே மறைந்தருளினார்.
இயமன் அங்கு வந்து பூசனை புரியத் ‘தென் திசைக்குத் தலைவனாக்கி நம்மை வணங்குவோரைத் தண்டம் செய்யின் அன்று இப்பதவி உனக்கு நீங்கும்’ என்றருளி விடுத்தனர். இயமனும் பூசித்த இங்குப் பிதிரர்க்கு நீர்க்கடனைச் செய்வோர் வீடு பெறுவர். வேகவதி நதிக்கரையில் உள்ள இத்தலம் அறிவு பெறவும் செல்வம் பெறவும் ஒருங்கு சிறப்புடைய தலமாகும்.
தல வரலாறு
பிரம்மனுக்கும், திருமாலுக்கும் தத்தம் காலப்பதம் முடிவுற்றதும் நிலையின்றிப்போக, சிவபெருமான் தோன்றி அவர்களின் திருமேனிகளைத் தம் தோளில் தாங்கி இவ்விடத்து நடனமாடி அருள்செய்தார். அவர்களின் காயத்தை (காயம் - உடம்பு) தம்முள் ஆரோகணித்துக் கொண்டமையால் இத்தலம் "காயாரோகணம்" எனப் பெயர்பெற்றது. மேலும் மகாலட்சுமி இத்தலத்து இவ்விறைவனை வில்வத்தால் அருச்சித்துத் திருமாலைத் தன் கணவனாகப் பெற்றதும். மற்றும் குரு, மகாலட்சுமி வழிபாடுகளால் வழிபடுவோருக்கு முறையே ஞானமும், செல்வமும் காயாரோகணப் பெருமானின் அருளால் வாய்க்கப்பெறும் என்பது தல வரலாறாக விளங்குகிறது.
இறைவர், வழிபட்டோர்
இறைவர்: காயாரோகணேசுவரர்.
வழிபட்டோர்: குரு பகவான் (வியாழன்), மகாலட்சுமி.
ஆலய அமைப்பு
முதல் பிரகாரம்
கட்டமைப்பு பெயர் - பிற்கால பல்லவர் மற்றும் சோழன் காலம் வரஅரசன் பெயர் - பிற்கால பல்லவர் மற்றும் சோழன் காலம்
நூற்றாண்டு - 5th நூற்றாண்டு
கட்டமைப்பு விவரம் - இத்திருக்கோயில் மாடக்கோயில் எனவும் தூங்கானை மாடம் எனவும் வழங்கப்படும் அமைப்பில் உள்ளது கஜபிருஷ்ட்ட கருவரை அமைப்பு உடையது.
தேவகுரு, பிரகஸ்பதி, வியாழன் என்று கூறப்படுபவரும்,. நவக்கிரகங்களில் ஒருவருமான குருபகவான் தனிச்சன்னதியில் கைகளை கூப்பி யிறைவனை வழிபடும் நிலையில் அமர்த்த திருக்கோலத்தில் இங்கு எழுந்தருளி உள்ளார்
கிழக்கு நோக்கிய ஆலயம் மூன்று நிலை ராஜகோபுரம் கொண்டது.
முன்புறம் மிகப்பெரிய சுதை நந்தி மண்டபத்துடன் உள்ளது
ராஜகோபுரம் முன்னாக ஒரு நுழைவு வளைவு அமைக்கப்பட்டு அதில் தல குறிப்பு சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது.
அடுத்துள்ள ராஜகோபுரம் கடந்தால், பிரகாரத்தில் பலிபீடம் அடுத்து,
கல்நந்தி மண்டபத்துடன் உள்ளார்.
நந்தி மண்டபம் அடுத்து வடபுறம் தனி சன்னதியில் குரு உள்ளார்.
தென்புறம் வழியாக ஈசன் சன்னதிக்கு உள்ளே செல்ல முடியும்
உள்ள உள்ள முன் மண்டபத்தில் நடராஜர் மற்றும் ஒரு சிறிய நந்தி கிழக்குப்புறத்தில்
நிருதி மண்டபம் அர்த்த மண்டபம் தாண்டி கருவறையில் கிழக்கு நோக்கி ஈசனார் காயாரோகணா ஸ்வாமி அருள் தருகிறார்.
சுவாமி ஆலயம் அடுத்துள்ள தென்புறத்தில் தனி சோமஸ்கந்தர் கமலாம்பாள் சன்னதியும் உண்டு.
பிரகாரத்தில் நால்வர் மற்றும் வழிபட்ட நாகங்கள், மாவிரத லிங்கங்கள், பாலமுருகன், கஜபிருஷ்ட அமைப்பில் கருவரை இதன் கோஷ்ட்டத்தில் நர்த்தன விநாயகர் அமைப்புடன் தனி தட்சினாமூர்த்தி, பிரகாரத்தில் தென்மேற்கில் நாகத்துடன் விநாயகர் தனி சன்னதி கோஷ்ட்ட மேல் பகுதியில் ஸ்ரீவிஷ்ணு உள்ளார். வடக்கில் பிரும்மா அடுத்து துர்க்கை மற்றும் சண்டிகேஸ்வரர்
மேல் பிரகாரத்தில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், மற்றும் மகாலட்சுமி தனி சன்னதிகள்,
வடக்கில் பைரவர், நவகிரகங்கள், கிழக்கில் சூரியன் மற்றும் தனி சுதை அமைப்பில் குரு சன்னதிகள் உள்ளன.
ஆலயம் அடுத்து வடபுறத்தில் சித்தர் வழிபட்ட லிங்கபேஸ்வர் தனி சன்னதி ஆலயத்தில் உள்ளார்.
மேலும், காயாரோகணேஸ்வரர் கோவிலின் தீர்த்த குளம் முற்றிலும் வித்தியாசமாக ஐந்து மூலைகளுடன் ஐங்கோண வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
ஆலயத்தின் பிற பகுதிகள் பெரிய இடமாகக் காணப்படுகிறது. ஆலயம் மீண்டும் புனரமைப்பு செய்யப்பட்டு 2013ல் கும்பாபிஷேகம் செய்யப்பட்டு ஆலயம் நல்ல பராமரிப்பில் தூய்மையாக உள்ளது சிறப்பு
நன்றி🙏
#சுப்ராம்தரிசனம் 16.08.2026
#என்றும்அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
No comments:
Post a Comment