Sunday, September 4, 2022

UTTARAKANNT_TOUR_2022 தக்ஷேஸ்வரமகாதேவர்ஆலயம்,ஹரிதுவார் - பதிவு - 2.14.04.2022

#UTTARAKANNT_TOUR_2022
#பயணஅனுபவக்குறிப்புகள்
14.04.2022
#UTTARAKANNT_TOUR_2022
#HARIDWAR 
தக்ஷேஸ்வரமகாதேவர்ஆலயம்
#ஹரிதுவார் - பதிவு - 2.
14.04.2022

🌵இமயத்திலிருந்து வரும் கங்கை நதி முதன் முதலாக சமவெளிக்கு வரும் நகரம் ஹரிதுவார் ஆகும்.
இதனால், இங்கு நீர் தூய்மையாகவும், புனிதமாகவும் போற்றப்படுகிறது. அடர்ந்த வனப்பகுதிகளும் உள்ளன.

🌳இத்தலம் ஹர்த்வார் என்றும் ஹரித்வார் என்றும் அழைக்கப்படும். ஹர்‌ஹர் மகாதேவ் என்று அர்ச்சிக்கப்படும் ஹரன்(சிவன்) உறையும் கேதார்நாத்திற்கு நுழைவாயிலாக இருப்பதால் ஹர்த்வார் எனப்படுகிறது. ஹரி(விஷ்ணு) உறையும் பத்ரிநாத்திற்கு நுழைவாயிலாக இருப்பதால் ஹரித்வார் என்றும் அறியப்படும். த்வார் என்பது நுழைவாயில் எனப் பொருள்படும். 

🌼கி.மு. 1700 - 1200 காலத்திய மன் சிற்பங்கள் கண்டு எடுக்கப்பட்ட இடம்.

🌺மயூரா வம்சத்தினரும், கௌஷான் வம்சத்தினரும் ஆண்ட இடம்.

📝ஹூவான் சுங் என்ற சீனர் தனது குறிப்புகளில், ஹரிதுவார் அருகில், அரசர் ஹர்ஷவர்தன் (590 -647) காலத்தில் ஆலயங்கள் கட்டப்பட்ட அரன்மனை மற்றும் மாயாபூர், பற்றிய குறிப்பும் உள்ளது.

🍀முகலாயர், சீக்கியர், ஆங்கிலேயர் வரை அனைவரின் காலத்திலும், மாயபுரி என்ற ஹரிதுவார் பல்வேறு சிறப்புகளைக் கொண்டிருந்தது.

#பயணஅனுபவக்குறிப்புகள்

💜நாங்கள் 14.04.2022 தமிழ் வருடப்பிறப்பு அன்று காலையில்,
 ஹரிதுவாரில் நாங்கள் தங்கியிருந்த Hotel Trimurthy அருகில் உள்ள கணபதி காட் என்ற கங்கை நதி பாய்ந்துவரும் இடத்தில் நீராடி, அருகில் உள்ள ஆலயங்கள் தரிசனம் செய்தோம்.
💥மாலையில் 
🛕தக்ஷேஸ்வர மகாதேவ் ஆலயம், 🛖ஹரிஹர் ஆஷ்ரமம் 
சென்று வந்தோம்.

#தக்ஷேஸ்வரமகாதேவர்ஆலயம்
தட்ச பிரஜாபதி ஆலயம் என்றும் கூறுவர்.

🛕தட்ச மகாதேவர் என்ற, தக்க்ஷேஸ்வரர் மகாதேவர் ஆலயம்.

🌳ஹரிதுவார் அருகில் KANKHAL -கன்கல்- என்ற இடத்தில் உள்ள இந்த ஆலயம் தட்ஷேஸ்வர மகாதேவ் ஆலயம் என்று குறிப்பிடுகிறார்கள்.

💥புராதானமுக்கியமான இடமாகக் கருதப்படுகிறது.
KARAMBH00MI (காரம்பூமி) என்றும், தபபூமி என்றும் அழைக்கப்படுகிறது.

🍁புராணப்படி, தட்ச பிரஜாபதி என்ற பேரரசனின் மகள் தாட்சாயினி பிறந்த இடம் இதுவாகும்.

🌿சதி என்ற தாட்சாயினி சிவபெருமானை வேண்டி திருமணம் செய்துகொள்கிறார்.

🌲தட்சன், சிவனை வெறுத்து, அவரை அழைக்காமல், யாகம் செய்கிறார். 

🌴தட்சன் மகளாகிய தாட்சாயினியாகிய, பார்வதிதேவி, சிவன் கட்டளை மீறி, தட்சன் யாகத்திற்கு வருகிறார். 

🍁தட்சன் மேலும் சிவனை அவமானப்படுத்திவிடுகிறார்.
இதனால் சதி வெறுப்புற்று, தன் தவறுக்கு சிவனிடம் மன்னிப்பு வேண்டிக் கொண்டு, யாககுண்டத்தில் வீழ்ந்து தன்னை மாய்த்துக் கொள்ள முயன்று, உயிர் இழந்து விடுகிறார். 

🌵சதியின் உடலை விஷ்ணு தன்னுடை சுதர்சன சக்கரத்தால் 51 பாகங்களாக துண்டாக்கி வீசிவிடுகிறார்.

💫இந்த 51 இடங்களும் சக்தி பீடம் என்று போற்றி வணங்கப்பட்டுவருகிறது.

💥சக்தியினுடைய ஆபரணங்கள் 56 பாகங்களாக விழுந்த இடங்கள் உப-சக்தி பீடங்கள் என்று வணங்கப்பட்டு வருகின்றன.

💥இந்த இடத்தில் சதியினுடை உடல் பாக துண்டு விழுந்ததால், இந்த இடம் சக்தி பீடமாக வணங்கப்படுகிறது.

💥சிவனின் வடிவமான, வீரபத்திரர் மூலம் தக்கன் அழிக்கப்பட்டு விடுகிறார். தக்கன் தவறு உணர்ந்து தவம் செய்ததால், சிவன் அருளால், உயிர்பெற்று ஆட்டுத்தலை பெற்றார்.

💥கன்கல் என்ற, இந்த இடத்தில், உள்ள தீர்த்த கட்டம் மிக புராதனமானது, மிகமிக உயர்வானது

💥சிவன் - சதி திருமணம் (பாணிக்கிரஹம்) செய்து வைக்கப்பட்டதால், உலகத்தின் முதல் திருமணம் நடைபெற்ற இடம் இது என்று குறிப்பிடுகிறார்கள்.

💥இந்த நிகழ்வுகள் நடைபெற்றது இந்த ஆலயம் இருக்கும் இடமே என்று அடையாளப்படுத்தப்படுகிறது.

#பயணஅனுபவக்குறிப்புகள் 

தக்ஷேஸ்வர மகாதேவர் ஆலயம், ஹரித்வாரின் தென் பகுதியில் உள்ள KANKHAL என்ற பகுதியில் உள்ளதால், நாங்கள் தங்கியிருந்த TRIMURTI Hotelலிலிருந்து 14.04.2022 மாலையில் வாகனம் மூலம் சென்றுவந்தோம்.

இவ்வாலயம் முக்கியமான இடமாக இருப்பதால், நல்லக் கூட்டம் உள்ளது.

வாகனங்கள் நிறுத்த இடவசதி உண்டு.

ஆலயத்தில் எந்தவித நுழைவுக் கட்டணமும் இல்லை.

ஆலயம் முன்பகுதியில் சிவபெருமான், யாககுண்டத்தில் வீழ்ந்து விட்ட தன் மனைவியை தூக்கி வரும் சிலை உள்ளது.

சிலையின் அமைப்பு மிக அற்புதமானது. அருமையாகவும், உணர்வுபூர்வமாகவும், உயிரோட்டமாகவும் உள்ளது. 

நுழைவு வாயிலில் இரண்டு சிங்கங்கள் அமைத்துள்ளனர்.

ஆலய வளாகம் மிகப்பெரிது
3, 4 கட்டிடங்கள்.

சுவாமிக்கு ஒரு பெரிய ஆலயம், 
சதி தேவிக்கு ஒன்று,
அற்புதமான அமைப்பில் உள்ளது . 
வட்டக் கருவரையின் உயர் கோபுர அமைப்புகள்.
நீண்ட பெரிய ஹால்கள் போன்ற அமைப்பில் தனி கருவறை.

கிழக்குப்புறம் கங்கை நதியின் ஒரு பாகம் ஓடி வருகிறது. அங்கே நீராட தனியாக ஒரு சிறிய படித்துறை உள்ளது.

புராதானமானது, புன்னியமானத் துறை என்பதால், நானும், என் நண்பர்களும் நீராடினோம்.

அருகில், சுமார் 1000 ஆண்டுகள் பழமையான ஆலமரம் உள்ளது. சுற்றி சில சன்னதிகள். யாக குண்டங்கள் உள்ளன.

எதிர்புறம் கங்கா மாத ஆலயம்.

பெரிய அகலமான கருவரை மன்டபத்தில் கங்கா மாதாவை உருஅமைத்து வணங்குகிறார்கள்.

அடுத்து தட்சன் யாககுண்டம் ஒரு பெரிய தனி கருவரை ஆலய அமைப்புடன் உள்ளது. யாக குண்டம் சுமார் 4 x 3 அமைப்பில் 2 அடி ஆழம் உடையதாக தோன்றியது.

இதற்குப் பின், சுவாமி ஆலயம் சென்றோம். பெரிய முன் மண்டபம், அழகிய பளிங்குக் கல் நந்தி உள்ளது.

சில புனரமைப்பு வேலைகளும் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

பெரிய வட்ட வடிவக் கருவரையில், சுவாமி மிகச்சிறிய வடிவில் மகா தட்ஷேஸ்வரர் அமைந்துள்ளார் உள்ளார்.

தட்சன் ஆட்டுத் தலைபெற்றதும், , இங்கு வரும் பக்தர்களுக்கும் அனுகிரகம் புரிய வேண்டிக்கொண்டதால், சிவன் அவ்வாரே செய்கிறார் என்பது புராணம்.

பூசை அமர்ந்தே செய்கிறார்கள். 
அழகிய கட்டடி அமைப்புகள்.

அதன் பின், பார்வதி தேவியின் கருவரையும் பெரியதாகவும் பல தெய்வங்களையும் உள்ளடக்கி வைத்துள்ளார்கள்.

ஒரு தனி மண்டபக் கருவரையுடன்
லெட்சுமிநாராயணப்பெருமாள்.

மேலும், தனித்தனி வினாயகர், துர்க்கை, ஹனுமான், உள்ளார்கள்.

பொதுவாக அணைத்து இடங்களும் சென்று தரிசித்து வர 1 மணிநேரம் ஆகலாம்.

வருடத்தில் ஒரு முறை முக்கிய விழா மிகச்சிறப்பாக நடைபெறுகிறது.

மற்ற விழாக்கள் நாட்களிலும், பொதுவான நாட்களிலும் தரிசனம், பிரார்த்தனை, ஆன்மீக சுற்றுலா என்ற அளவில் பக்தர்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும் என்கிறார்கள்.

ஹரிதுவார் செல்பவர்கள் இந்த ஆலயம் அவசியம் தரிசியுங்கள்.

இதைத் தொடர்ந்து, சிறிய ரிக்க்ஷா மூலம் KANKHAL பகுதியில் உள்ள பிரிசித்திபெற்ற ஹரிஹரர் ஆஸ்ரமம் சென்றோம்.

பயணங்கள் தொடரும்.
நன்றி,

(14.4.2022)
🙏நன்றிகளும் வணக்கங்களும்🙇🏼‍♂️

#என்றும்அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
#UTTARAKANNT_TOUR_2022
#HARIDWAR 
#தக்ஷேஸ்வரமகாதேவர்ஆலயம்


Wednesday, August 31, 2022

UTTARAKANNT TOUR 2022 - HARIDWAR 13.04.2022

UTTARAKANNT_TOUR_2022
#பயணஅனுபவக்குறிப்புகள்
13.04.2022
#UTTARAKANNT_TOUR_2022
#HARIDWAR

ஹரிதுவார்.

💥வட இந்தியாவில், உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள இந்துக்களுக்கு மிக முக்கிய, புராதானமான இடம் ஹரிதுவார் என்ற புனித இடமாகும்.

💥இமயமலையிலிருந்து உற்பத்தியாகி, பாய்ந்து ஒடி வரும் கங்கை, இமயத்தின்  அடிவாரமாகிய இந்த இடத்தை அடைகிறது.

💥சிவா, விஷ்ணு, பிர்மா என்ற மூன்று கடவுளர்களால், புனிதப்படுத்தப்பட்ட இடம்.

💥ஹரனும், ஹரியும், சேர்ந்து இருப்பதால், Haridwar என்கிறார்கள்.,

💥இயற்கை ஆர்வலர்களின் சொர்க்கபுரியாகவும், இந்துமத கலாச்சாரத்தின் முக்கிய கேந்திரமாகவும் இந்நகர் இருந்து வருகிறது.

💥தேவபூமி எனப்படும் இந்த மாநிலத்தில் உள்ள, சார்தாம் என்னும் நான்கு புனித இடங்கள், (பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி) செல்வதற்கு இந்த இடமே நுழைவுப்பாதையாகக் கருதப்படுகிறது.
💥பகீரதன் தன் மூதாதையர்களுக்காக சிவபெருமானை நோக்கி கடும் தவம் இருந்து, அவரிடமிருந்து கங்கையை இமயத்திலிருந்து, பூமியில் இந்த இடத்திற்கு கொண்டுவந்தார்.

#பயணஅனுபவக்குறிப்புகள்

🍁12.04.2022 அன்று உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலையில் உள்ள புகழ்பெற்ற பாபா குகை பார்த்துவிட்டு மாலை, ராணி கட் என்ற நகரத்தில் தங்கியிருந்து, 13.04.2022 காலையில் புறப்பட்டு , இமயமலைப்பகுதியில் உற்பத்தியாகி வரும் சோன நதி, படுகை, காடுகளில்  உள்ள புகழ்பெற்ற ஜிம்கார்பெட் தேசிய பூங்கா பாதையில் உள்ள ராம்நகர் வழியாக, மாலை 4.00 மணி அளவில், ஹரிதுவார் வந்து அடைந்தோம்.

🌺இந்த நகரத்தில் உள்ள மிக முக்கிய இடங்களில் சிலவற்றை நாங்கள் சென்று தரிசனம் செய்வதற்காக ,ஹோட்டல் திருமூர்த்தியில் தங்கினோம்.

🌺13.04.2022 மாலையில் பாய்ந்து ஓடிவரும்  கங்கையில், அருகில் உள்ள  படித்துறையில் குறித்து விட்டு,
Auto மூலம் HARI KI PAURI GHAT என்ற முக்கிய இடத்திற்கு மாலை 'ஆர்த்தி, ' பார்க்க சென்றோம்.

ஹர்-கி-பவுரி

🍀கங்கை நதிக்கரையின் இரண்டு பக்கங்களிலும், பல்வேறு படித்துறைகள் உள்ளன.

🌼முதலாம் நூற்றாண்டின், விக்கிரமாதித்தர் தன் சகோதரர் பகீரதன், தவம் இருந்த இடத்தின் நினைவாக ஹரி - கி - பாவுரி கேட் (படித்துரை) அமைத்தார் என்பது வரலாற்றின் சான்று.

💫ஹரிதுவார், பிரயாகை, உஜ்ஜயினி, நாசிக்..இவ்விடங்களில்
கும்பமேளா சமயத்தில், சூரியன், சந்திரன், குரு முதலிய  கிரகங்களின் கால சூழல், இருப்பிடப் பெயர்ச்சியின் காரணமாக, இவ்விடங்களில் பாயும் நதிகளின் நதியின் நீரோட்டத்தில், ஒரு விதமான நல்ல- அதிர்வுகள் ஏற்பட்டு அதன் விளைவாக உயிர்களுக்கு, மக்களுக்கு மிகநல்ல பலன் ஏற்பட்டு வருகிறது என்ற நம்பிக்கை நிறுபிக்கப்பட்டுள்ளது. 

🌲ஹரிதுவாரில் 2003ல் நடைபெற்ற கும்பமேளாவில் சுமார் 10 மில்லியன் மக்கள் கலந்துகொண்டார்கள் என்று பதிவு செய்துள்ளார்கள்.

🍁இந்து மக்கள் இங்கே வந்து நீராடினால், தங்கள் பாவம் நீங்கிவிடும், புன்னிய பூமியை - சொர்க்கத்தை - அடையலாம் என்று நம்புகிறார்கள்.

🌴12 ஆண்டுகளுக்கு ஒரு முறையும், 6 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் இங்கு கும்பமேளா நடைபெறுகிறது.

🌳பிரம்மகுண்டம் என்ற, ஹர்-கி-பவுரி என்ற இடத்தில், அமிர்தத்துளி விழுந்த இடமாக கருதப்படுகிறது.
எனவே, இங்கு கும்பமேளாவில் நீராடினால், புன்னியம் என்பதால், ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள்.
குரு கும்ப ராசியில் பிரவேசிக்கும் போது, இந்த நிகழ்வு நடைபெறுகிறது.

🍁1800களில், இந்த இடம் மிகவும் புனரமைப்பு செய்யப்பட்டு மிக அழகியதாய் வளப்படுத்தப்பட்டுள்ளது.
நவராத்திரி சமயங்களில், அருகில் உள்ள அணைக்கட்டுகளால், நீர் கட்டுப்பாடு செய்தும், தீபாவளிக்கு பிறகு நீர் மீண்டும் வெளியிடப்படுகிறது.

🍀இந்தக்காலக்கட்டத்தில் கங்கா மாதா தன் தகப்பனார் வீட்டிற்கு செல்வதாகக் கருதுகிறார்கள். மிகவும்  விழாக்கோலத்துடனும் விளங்கும்.

🌺இந்த இடத்தில் தான், தினமும், மாலையில் கங்கா நதியைப் போற்றும் பிரபலமான 'கங்கா ஆர்த்தி,' நடைபெற்று வருகிறது.

🎆மாலையில் கங்கை நதியின் படித்துறைகளில் நடத்தப்படும் 'கங்கா ஆர்த்தி' மிகப் பிரசித்தம். நதிக்கு விளக்கு ஒளியால், ஆர்த்தி பூசை செய்து,  சிறுசிறு விளக்குகள் ஏற்றப்பட்டு, ஒளி விளக்குகளால் மின்னும் அந்தக் காட்சி மிகவும் அற்புதமானது.
இந்த அழகிய ரம்யமான காட்சியைக் காணவரும் பக்தர்கள் ஏராளம்.

🍁இங்கு மாலையில் கங்கா ஆர்த்தி காண பெருங்கூட்டம் வருகிறது. கங்கையின் இருகரைகளிலும் படித்துறைக்கள், இணைப்பு பாலங்கள், ஒரு மணிக்கூண்டு, மற்றும் கங்கை மாதா ஆலயம், தவிர மேலும், சில ஆலயங்களும் இருக்கின்றன.
எல்லோரும் பாய்ந்து ஓடும் கங்கையில் மூழ்கி குளித்துவிட்டு, இங்குள்ள ஆலயத்தில் வழிபாடும் செய்கிறார்கள்.

🌲இந்த படித்துறையில் கூட்டம் அலைமோதும். மாலை 5.30 மணியில் கூட்டம் அதிகம் ஆகி, அங்கங்கே தடுத்து, கரையின் ஓரத்தில் காவல் துறையினரும்,எங்கு பார்த்தாலும் மக்களை ஒழுங்குபடுத்தி கொண்டிருக்கின்றனர்.

🍀கங்கா ஆர்த்தி Committee ஒன்றும் உள்ளது. இவர்கள் இந்த நிகழ்ச்சிகளை ஆன்மீக பக்குவத்தில் ஈடுபடச்செய்யவும், மக்களை ஒழுங்குபடுத்தி, அமைதியாக உட்காரச் செய்து நிகழ்ச்சியை காண வைக்கின்றனர்.

🌿7.00 மணி அளவில் ஆர்த்தி முடிந்ததும், கரையின் அருகில் உள்ள நீண்ட பாதையில், உள்ள ஏராளமான கடைகளில், மக்கள் கூட்டம்.

🌳மலைபிரதேசத்திற்கு செல்பவர்களுக்குரிய, குளிர் உடைகள், மேலும், ஏராளமான மலைப் பொருட்கள் விற்பனைக் கடைகள் உள்ளதால், மக்கள் கூட்டம் மிக அதிகம். குளிர் உடைகள் மிக மிக மலிவு என்கிறார்கள். உணவுப் பொருட்கள் கடைகளும் ஏராளம் உண்டு. 

🌿நாங்களும், சில பொருட்கள் வாங்கிக்கொண்டு, நடந்தது Hotel வந்து அடைந்தோம்.இரவு தங்கி விட்டு 14.04.2022 அன்று, ஹரிதுவாரிலிருந்து ரிஷிகேஷ் சென்று வந்தோம்.

பயணங்கள் தொடரும்.
நன்றி,

(13.4.2022)
🙏நன்றிகளும் வணக்கங்களும்🙇🏼‍♂️

#என்றும்அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
#UTTARAKANNT_TOUR_2022
#HARIDWAR

Thursday, August 18, 2022

UTTARAKANNT TOUR 2022 - RANKHET 12, and 13.04.2022

#UTTARAKANNT_TOUR_2022
#பயணஅனுபவக்குறிப்புகள் 
12.04.2022
#ராணிகட் - #RANIKHET

#ராணிகட் - #RANIKHET

#ராணிகட் : இந்தியாவின் உத்திரகாண்ட் மாநிலத்தில், அல்மோரா மாவட்டத்தில்  உள்ள மிக முக்கிய நகர்.

💥அருமையான இமயமலைப் பிரதேசமாகும். சுமார் 6,132 அடி 
(1869 மீட்டர்)  உயரத்தில் உள்ளது.

💥பாரத ராணுவத்தின் இரண்டு முக்கிய பிரிவுகளான, குமான் மற்றும் நாகா ரெஜிமென்ட்கள்  இந்தப் பகுதியில் உள்ளது.

💥இந்த இடத்தில், பாரத ராணுவத்தின் முக்கிய மருத்துவ முகாம் உள்ளது. 

💥ராணிகட்  அல்மோராவிலிருந்து சுமார் 50 கி.மீ.தூரத்திலும், நைனிட்டாலிலிருந்து 60 கி.மீ.தூரத்திலும், புதுடெல்லியிலிருந்து சுமார் 270 கி.மீ.தூரத்திலும், உள்ளது. 
💥பைன், ஓக் மரங்கள் அடர்ந்துள்ள பகுதி.

💥மார்ச் முதல் அக்டோபர் வரை இந்தப் பகுதியில் பயணம் செய்யலாம். டிசம்பர் முதல் பிப்ரவரி வரை உறைபனி அதிகம்.

💥கட்யூரி அரச வம்சத்தின் மன்னர் சுதர்தேவ் தன் பாசத்திற்குரிய மனைவி ராணி பத்மனி வசித்ததால் இந்த ஊருக்கு ராணிகட் என்ற பெயர் அமைத்ததாக வரலாறு.  ஆனால், ஊரில் எந்த அரண்மனை கட்டிடங்களும் இல்லை.

💥மிக முக்கிய நகரான ராணிகட்,   முன்பு நேப்பாளியர்கள் ஆளுமையில் இருந்து, அதை  குமானியர்கள்,  காசிநாத் அதிகாரி என்ற தளபதியின் தலைமையில், வென்றார்கள்.  (காசிப்பூர் என்ற பெயர் இந்த வெற்றி தளபதியின் பெயரில் பின்னாளில் அமைக்கப்பட்டது)

💥பிறகு பிரிட்டன் ஆளுமையில் இருந்து வந்தது.  இந்திய- நேப்பாள் எல்லைக்கு முக்கிய இடம் என்பதால், கூர்க்கா படை இங்கேயே இருந்தது. 

💥பிரிட்டன் ஆளுமையில், இப்பகுதிகளில், தேயிலை தோட்டங்கள் அமைக்கப்பட்டன.

💥பிரிட்டன் அரசில் பெரும் ராணுவ அனுப்புக்களை இங்கேயே வைத்திருந்தார்கள். 

💥இந்தியாவின் கோடை காலத் தலைநகராக, சிம்லாவுக்கு பதிலாக, ராணிகட்டை வைக்க பிரிட்டானிய அரசில் கருத்துரு வைக்கப்பட்டது. 

💥ராணிகட் சுற்றுப் பகுதிகளில், காடுகள் அதிகம் இருந்தது. இதனால், இந்த காடுகளை பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டது. 

💥சுதந்திர பாரதத்தில், ராணிகட் பகுதிகள் விரிவடைந்து தனி மாவட்டமாக அறிவிக்கக் கோரிக்கைகள், போராட்டங்கள் நடந்து வருகின்றன, அரசாங்கங்கள் மேல் நடவடிக்கைகள் எடுத்துவருகிறது என்று தெரிய வருகிறது. 

💥ஒரு கோல்ஃப் விளையாட்டரங்கமும் உள்ளது.  இது ஆசியாவில் உள்ள மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள இடமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

#பயணஅனுபவக்குறிப்புகள்

💥காலையில் பாபாஜி குகை தரிசித்து விட்டு, 12.04.2022 மாலை ராணிகட் சென்று சேர்ந்தோம். Hotel Rajdeep என்ற Hotel லில் தங்கினோம்.
இந்த ஊரின் எல்லாப் பகுதிகளிலும், பாரத ராணுவத்தினரைப் காணமுடிந்தது.
நீண்ட ஊர் ஒரு புறம் சற்று உயரமாகவும், இன்னொருபுறம் குறுகிய பாதைகள் உள்ள மலைப் பிரதேசமாகவும் காணப்பட்டது.

💚ஊரில், சில முக்கிய இடங்களில் View Point அமைத்துள்ளார்கள்.  இங்கிருந்து பார்த்தால், இமயத்தின், பனி மலைப்பகுதிகள், சிகரங்கள், மிக ரம்ய காட்சிகளைக் காணலாம்.

❤️ஊரின் முக்கிய இடங்கள் எல்லாமே பாரத ராணுவம் சம்பந்தப்பட்ட இடங்கள் தான் அதிகம் இருக்கிறது. Trainning School, Musume முதலிய பல இடங்களும், சில ஆலயங்கள் உட்பட எல்லாம் ராணுவக் கட்டுப்பாட்டிலும், பராமரிப்பிலும் உள்ளன.

🛕நாங்கள் இங்கிருந்து 500 மீ.தூரத்தில், ஊருக்கு நடுவில், முக்கிய இடத்தில் உள்ள மன்மகேஸ்வரர் ஆலயம் சென்றோம். அங்கிருந்து ஒரு வாடகைக் கார் பிடித்து ஜூலா தேவி ஆலயம் தரிசித்துவந்தோம்.  

நாங்கள் சென்றுவந்த இடங்கள்..

மன் காமேஸ்வரர் ஆலயம்..

🛕குமான் ராணுவ ரெஜிமெண்ட் பராமரிப்பில், மன்காமேஷ்வர் என்று ஒரு ஆலயம் கட்டி, பராமரித்து வருகிறது.

🛕இது, ராணிகட் நகரின் முக்கியப்பகுதியில் பாதுகாப்புடன் உள்ளது. இந்தக் கோவில் 1978  கண்டோன்மன்ட்டால் கட்டப்பட்டது.  இதன் எதிர்புறத்தில் ஒரு குருதுவாரா என்னும் சீக்கியர் மத வழிபாட்டுக் கூடமும் அமைத்துள்ளனர். 

🛕இங்கு, விநாயகர், லெட்சுமி நாரயணர், துர்காதேவி, அழகிய சிறிய சிவலிங்கம், தனித்தனியாக உள்ளது. ஆலயம் முழுவதும் தூய்மையாகவும், அழகாகவும் உள்ளது. ராணுவத்தினரால் பராமரிக்கப்படுகிறது. இங்குள்ளோர் வந்து பிரார்த்தனை செய்ய குருக்கள் என்ற பண்டாக்கள் இவ்வாலயத்தில் உள்ளனர்.

ஜூலா தேவி ஆலயம் :

🛕மிகவும் புகழ் பெற்ற ஜூலா தேவி ஆலயம் ராணிகட் நகரத்திலிருந்து 7 கி.மீ. தூரத்தில் உள்ளது.  இங்கு வசித்து வந்த கிராம மக்களின் கால்நடைகளையும், வாழ்வாதராங்களையும்,  அருகில் உள்ள அடர்ந்த காடுகளிலிருந்த கொடிய விலங்குகள் அழித்து வந்ததால், மக்கள் தங்களைப் பாதுகாக்க வேண்டி, துர்க்கா மாதாவை வேண்டினார்கள்.  அன்னையும்,
ஒரு நாள் இடையர் ஒருவர் கனவில் வந்து தன்னுடைய சிலை இருக்கும் இடத்தை அறிவித்தார்.  இடையர், கிராம மக்கள் அனைவரையும் அழைத்து சிலை இருக்கும் இடத்தை கண்டு எடுத்து வைத்து அங்கேயே வழிபாடுகள் செய்ய ஆரம்பத்தினர்.  

🛕அந்த இடத்தில், புதிய ஆலயம்  கட்டி வழிபாடுகளை செய்து வருகின்றனர். 
மேலும், தங்களைக் காத்து வரும் கடவுளாக அன்னை துர்க்காதேவியைப் போற்றி வணங்குகிறார்கள். 
தங்களின் கோரிக்கைகளை இவ்வாலத்திற்கு வந்து மணிகட்டி வழிபாடு செய்து, பிரார்த்தனையை நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.

🛕அருகில் உள்ள ராமர் ஆலயத்தில் மாணவர்களும் இளைஞர்களும் வேதபாடம் பயின்று வருகிறார்கள் என்று கூறப்படுகிறது. 

13.04.2022  காலையில்
நாங்கள் தங்கியிருந்து ஹோட்டலுக்கு வெகு அருகில் இருந்த மற்றொரு சிவன் ஆலயம் சென்று வழிபட்டு வந்தோம்.

சிவன் ஆலயம் - ராணிகட்

இந்த ஆலயம் மிக அழகிய அமைப்பில் வடிவமைப்பில் இருக்கிறது. ஆலயத்தின் மையத்தில், சற்று உயரமான கருவரை மன்டபத்தின் உள்ளே, அழகிய 
சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
கருவறை முன்புறம். சிறிய அழகிய நந்தி..

மேலும், இரண்டு தனித்தனி கருவறைகளில் லெட்சுமிநாராயணர் துர்க்கா தேவி, ஹனுமான் உள்ளார்கள்.

ராணுவ கண்காட்சிக் கூடம்:

💒பாரத ராணுவம், ஒரு கண்காட்சிக்கூடம் அமைந்துள்ளனர்.

⚔️பாரத ராணுவத்தினரின் அருமையான கண்காட்சிக் கூடம் என்கிறார்கள். அதில் ராணுவத்தில் பயன்படும் ஆயுதங்கள் மற்ற பொருட்களையும் வைத்துள்ளர்.  மேலும், இதுவரை,ராணுவப் போரில் பங்குகொண்ட தியாகிகளைப் போற்றும் விதமாக அவர்களை நினைவுக் கூறும் விதமாக, அவர்கள் செய்த சாதனைகளை விளக்கி வைத்து உள்ளர்கள். அனைவரும் காண வேண்டிய இடம். 

எங்களுக்கு போதிய கால அவகாசம் இல்லாமல், காலதாமதமாக சென்றதால். இதைப் பார்க்கும் வாய்ப்பு இல்லாமல் போயிற்று.

13.04.2022 புதன் காலை உணவு தயார் செய்துகொண்டு, காலையில் ராணிகட்டை விட்டுப்புறப்பட்டு, புகழ்பெற்ற ஜிம்கார்பெட் தேசிய பூங்கா, மற்றும் ராம்நகர் வழியாக, ஹரிதுவார்  மாலை  வந்துசேர்ந்தோம்.

பயணங்கள் தொடரும்...

நன்றி,

(12.4.2022)
🙏நன்றிகளும் வணக்கங்களும்🙇🏼‍♂️

#என்றும்அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
#UTTARAKANNT_TOUR_2022
#Ranikhet

Tuesday, August 16, 2022

UTTARAKANNT_TOUR_2022#பயண அனுபவக்குறிப்புகள் மகாவதார் _ பாபாஜி குகை 12.04.2022

#uttarakannt_tour_2022 
#பயணஅனுபவக்குறிப்புகள் 
#மகாவதார்பாபாஜி_குகை
12.04.2022
பகுதி - 1 
#மகாஅவதார்பாபாஜி:

'திரு.ரஜினிகாந்த் அவர்கள் நடித்த “பாபா” திரைப்படத்தின் மூலம் பெரும்பாலானோர்களால் அறிந்து கொள்ளப்பட்டவர் “மஹாவதார் ஸ்ரீ பாபா”. 

தன் தவத்தால் அற்புத ஆற்றல்களைப் பெற்ற இம்மகான் தன் ஊணுடலைத் துறந்து, “ஒளிஉடம்பைப்” பெற்று “2000” ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வருவதாக இவரை வழிபடுபவர்கள் கூறுகிறார்கள்.

இம் மகா அவதார் பாபா அவர்கள் தன்னை உண்மையாக வழிபடுபவர்கள் சிலருக்கு கனவின் மூலம் காட்சி தருவதாக கூறப்படுகிறது. 

வேறு சில பக்தர்களுக்கோ அவர்களின் இல்லத்திற்கே பாபா அவர்கள் மிகப் பிரகாசமான “ஒளி உடம்புடன்” வருவதாகவும், அவர் வந்ததற்கு அடையாளமாக மிகச் சிறந்த நறுமணம் இல்லம் முழுக்க வீசுவதாகவும் அவ்வனுபவத்தைப் பெற்றவர்கள் மெய்சிலிர்க்கின்றனர். 

தன் மீது அன்புடன் இருக்கும் பக்தர்களுக்குக்காக மகான்கள் எத்தகைய அற்புதத்தையும்  நிகழ்த்துவார்கள் என்ற தகவலுக்கு வலுசேர்க்கிறது இந்த நிகழ்வு.

#மகாவதார்பாபாஜி வரலாறு :

இவரின் வரலாறு பற்றி தெளிவான வரையறைகள் ஏதுமில்லை. 

இவரைப்பற்றிய நூல்களின்படி இவரின் இயற்பெயர் நாகராஜ். 

மகாவதார பாபா என்ற பெயர் இவரது சீடரான லாகிரி மகரிஷி என்றவரால் சூட்டப்பட்டது.

மகா அவதார் பாபாஜி - பூர்வீகம்

நாகராஜ் என்கிற பாபாஜி
பாபாஜியின் சிறப்புகளை அறிந்து தேடத்தொடங்கியவர்களுக்கு பதிலாகக் கிடைத்தது அவரின் பூர்விகம்.

பாபாஜி தமிழகத்தின் ஒரு கடலோர கிராமத்தில் - பரங்கிப்பேட்டையில் - பிறந்தார். கார்த்திகை மாதம் ரோகிணி நட்சத்திர நாளில் அவரின் ஜனனம் நிகழ்ந்தது. பெற்றோர் அவருக்கு நாகராஜ் என்று பெயர் சூட்டினர். நாகராஜ் சிறுவயது முதலே இறைச் சிந்தனையோடு வாழ்ந்துவந்தார். ஒரு கட்டத்தில் சாதுக்களின் கூட்டத்தோடு சேர்ந்துகொண்டு யோகம் பயில ஆரம்பித்தார்.

தமிழக சித்தர் மரபின் ஆதி குருவான அகஸ்தியரை தரிசனம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது. அவரை தரிசிக்க இலங்கை கதிர்காமத்துக்குச் சென்று தவம் செய்தார். அங்கே அவருக்கு அகஸ்தியரின் சீடரான போகநாதரின் தரிசனம் கிடைத்தது.

போகரிடம் யோகம் பயின்று அங்கேயே தவம் செய்து கதிர்காம முருகனைக் கண்ணாறக் கண்டார் பாபா என்கிறார்கள் ஞானிகள். 

பின்பு அகஸ்தியரை தரிசனம் செய்யும் தன் ஆவலை போகரிடம் தெரிவிக்க அவர் பொதிகை மலைக்குச் சென்று தவம் செய்யச் சொன்னார். அவ்வாறே பாபாஜியும் செய்ய அகத்தியர் மனம் மகிழ்ந்து பாபாஜிக்குக் காட்சி கொடுத்து க்ரியாயோகாவினை உபதேசம் செய்தார். 

அதன்பின் பாபாஜி இமயமலை சென்று கடும் யோகப் பயிற்சிகள் செய்து சிரஞ்சிவி ஆகும் வல்லமை பெற்றார். தாம் கற்ற யோகம் இந்த உலக நன்மைக்குப் பயன்பட வேண்டும் என்று காலம்தோறும் ஞானிகளைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு அதைக் கற்றுக்கொடுத்து வருகிறார் பாபாஜி என்கின்றனர்; க்ரியா யோகா பயிலும் யோகிகள். (Source: Wikipedia)

இந்த பாபா போகர் என்ற சித்தரின் சீடர் என்று கூறப்படுகிறது. இவரே கிருஷ்ணர் என்னும் அவதாரம் எடுத்தாக சிலரால் கூறப்படுகிறது.

மகா அவதார் பாபாஜி லாஹிரி மஹாசாயருக்கு க்ரியா யோகம் கற்றுக்கொடுத்தார். லாஹிரி மகராஜ் பல்வேறு மகான்களுக்கு அதைப் பயிற்றுவித்தார். 

அவர்களில் ஒருவர் யுக்தேஸ்வர். ஸ்ரீ யுக்தேஸ்வரின் சீடர்தான் பரமஹம்ஸ யோகானந்தர்.

 யுக்தேஸ்வரின் மூலம் மகாஅவதார் பாபாஜி முதலிய க்ரியா யோகா குருமார்கள் பற்றி அறிந்து கொள்கிறார் பரமஹம்ஸர். 

அந்த நூலில் அவர் பாபாஜியைப் பற்றிக்குறிப்பிடும்போது, “பாபாஜி கிறிஸ்துவுடன் தொடர்புள்ளவர். அவர்களிருவரும் சேர்ந்து மீட்பளிக்கும் எண்ண அதிர்வுகளை அனுப்பிய வண்ணம் உள்ளனர்” என்று குறிப்பிடுகிறார்.  

#க்ரியாயோகா

பாபாஜி உபதேசித்த க்ரியா யோகாவின் 5 கிளைகள்  க்ரியா யோகம் என்பது முழு விழிப்புணர்வோடு செய்யப்படும் செயல் என்கிறார்கள். 

இது நம்மை அறியும் வழி. ஆசனங்கள், பிராணாயாமம், தியானம், மற்றும் மந்திரம் என மொத்தம் 144 வகைப் பயிற்சியின் கலவையே பாபாஜியின் க்ரியா யோகம். 

இந்தப் பயிற்சிகளை முழு விழிப்புணர்வுடன் செய்யும்போது அனைத்தும் ஒருங்கிணைக்கப் படுகின்றன. 

முறையான இந்தப் பயிற்சியின் மூலம் மனிதர்கள் விழிப்படைந்த அதாவது தம்மை உணர்ந்த விழிப்படைந்த மனிதர்களாக மாறிவிடுவர். 

க்ரியா யோகாவின் 5 விதமான பயிற்சிகளை பாபாஜி தன் சீடர்களுக்கு உபதேசித்தார். இவை உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டவை.

இந்த பயிற்சிகளை க்ரியா ஹத யோகம், க்ரியா குண்டலினி பிராணாயாமம், க்ரியா தியான யோகம், க்ரியா மந்திர யோகம், க்ரியா பக்தி யோகம் என 5 கிளைகளாகப் பிரித்துப் போதிக்கிறார்கள் யோகாசிரியர்கள்.

குருவின் மகாமந்திரம்:

க்ரியாபாபாஜியின் பக்தர்கள், ‘ஓம் க்ரியா பாபாஜி நம ஔம்’ என்னும் அவரின் மகாமந்திரத்தைச் சொல்லி தியானிக்கிறார்கள்.

 இதில் ஓம் - பிரணவம். க்ரியா என்றால் முழு விழிப்புணர்வோடு செய்யப்படும் செயல். பாபாஜி என்பது குருவின் திருநாமம், நம என்றால் வணங்குதல். ஔம் என்பது நம் அகத்தினுள் ஒலித்ததிடும் பிரணவ ஒலி.

இம்மந்திரத்தைத் தொடர்ந்து ஜபிப்பதன் மூலம் நமது சஹஸ்ர சக்கரத்தில் அமைந்துள்ள பேரறிவாற்றலைத் தொடர்பு கொள்ளலாம். 

ஆற்றல் வாய்ந்த இம்மந்திரத்தினை குரு மூலம் பெரும் சீடன் அந்த சக்தியைப் பெறுகிறான்.

 - (Source: விகடன் கட்டுரை 30.11.20) &
(Source: Wikipedia)

#பாபாஜி பெருமைகள்:

மகாவதார பாபாஜி என்ற பெயரை சூட்டியவர், யோகிராஜ் லாஹிரி மஹாசாய என்ற மிகப் பெரிய யோகியாவார்.  இவரும், இவரின், சீடர்கள், ஸ்ரீ யுத்தேஸ்வர் கிரி, பாபா நாசிப் சிங்ஜி, ராம்கோபால் முசும்தார், சுவாமி கபலனந்தா, சுவாமி பிரபானந்தா கிரி இவர்கள், 1861 முதல் 1935 ஆண்டுகளில் பாபாஜியை தரிசனம் செய்துள்ளார்கள் என்று நம்புகிறார்கள்.

1946 ல் பரமஹன்ச யோகனந்தா வெளியிட்ட சுயசரிதை நூலில் யோகி / பாபாஜி ஐ சந்தித்த விபரம் உள்ளது.

ஸ்ரீ யுக்தேஸ்வரர் 1894 ல் வெளியிட்ட  THE HOLY SCIENCE என்ற நூலிலும், காணப்படுகிறது. 

சிவபெருமானின் அவதாரம் பாபாஜி என்றும் அவர் பல்வேறு இடங்களில், பல்வேறு வடிவங்களில் காட்சி தந்திருப்பதாக,  யோகியின் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

இதை பல்வேறு யோகிகளின் சுயசரிதைகளில் காணலாம்.

 சுமார் 100 வருடங்களாக, மகா பாபாஜி, இமாலயத்தின் பல பகுதிகளில், பல்வேறு சீடர்களுக்கும், மற்றவர்களுக்கும், காட்சியளித்துள்ளார்  என்பதை 
ஸ்ரீ யோகானந்தரின், சுயசரிதையில், குறிப்பிட்டுள்ளார்கள்.

யோகி லஹரி மகாசயா அவர்களுக்கு, 1861ல் கிரியா யோக பயிற்சியை இந்த குகைகளில், இருந்து தான், கற்றுக் கொண்டனர் என்று என்று பரமஹன்ச யோகானந்தா தமது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளர்.

#பாபாஜி_குகை :

உலகத்தின் மிக முக்கிய யோகிகளில், யோகானந்தா யோகி அவர்கள்,  தன்  சுயசரிதையில், பாபாஜி பற்றிக் குறிப்பிடுகையில்,  மகா அவதார் பாபாஜி அவர்கள்,  லாஹிரி மஹாசாயருக்கு க்ரியா யோகம் கற்றுக்கொடுத்தார். 

பாபாஜியிடமிருந்து நேரடியாக கிரியா யோக முறையை 1861ல் இமாலயத்தில் உள்ள இந்த இடத்தில் தான் பெற்றதாக தன் சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார் .

மகா அவதார் பாபாஜி இமாலய பகுதிகளில் என்றும் ஜீவித்து வருகிறார் என்றும்,  ஒரு சிலரே அவரை உணரமுடிகிறது என்றும் கூறுகிறார்; பரமஹம்ச யோகானந்தர்.

பாபாஜியின் குகை என்று அடையாளம் காணப்பட்ட இந்த இடத்திற்கு  உலகின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து தரிசனம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இப்போது இந்த இடம், உலகின் மிக முக்கிய ஆன்மீக இடமாக மாறிக் கொண்டு உள்ளது. 

நன்றி 🙏
- (விகடன் கட்டுரை 30.11.20)
(Source: Wikipedia)

இந்த இடம் எங்குள்ளது?

இந்திய இமயமலைப்பகுதியில், உத்திர காண்ட் மாநிலத்தில், பாண்டுகோலி (#PANDUKHOLI) மலைப்பகுதியில் குக்குச்சினா Kukuchina) என்ற இடத்தில் உள்ளது. 

இது #DWARHHAT என்ற நகருக்கு 25 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது.

மகாவதார் பாபாஜி குகை உத்ரகாண்ட் மாநிலத்தில் உள்ள ராணிகட் (RANIKHET) என்ற நகரிலிருந்து 55 கி.மீ. தூரத்தில் பாபாஜி குகை அமைந்துள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில், த்வரஹட் (#DWARAHAT) என்ற நகரின் அருகில்,  பத்ரிநாத் முதலிய இடங்கள்  உட்பட சுமார் 1000 -2000 நூற்றாண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட நூற்றுக் கணக்கான ஆலயங்கள் அமைந்துள்ளன. 

#ராணிஹட்  (#Ranikhet )  சென்று  த்வரஹட் வழியாக, குகுசினா என்ற இடம் 20 கி.மீ. அங்கிருந்து மலைப்பாதையில் 3 - 4 கி.மீ சென்று பாபாஜி குகையை அடையலாம்.

மேலும்,  உயரமான மலைப் பகுதியான, துனகிரி என்ற புராதான அம்பாள் தலம் பாபாஜி ஆலயம் செல்லும் பாதையில் உள்ளது. மலைப்பதையில் வரும் ஒரு ஹனுமான் ஆலயம் அருகில் பாதை பிரியும். 

இமயமலையில் உள்ள இந்த குகைக்குச் செல்ல பாதை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.


#UTTARAKANNT_TOUR_2022
#பயணஅனுபவக்குறிப்புகள்
#மகாவதார் _ பாபாஜி
12.04.2022

மகாவதார் பாபாஜி குகை தரிசனம்
பகுதி - 2.
#பயணஅனுபவக்குறிப்புகள் 
12.04.2022:

மலை எங்கும் இமயக் காட்சிகள், இயற்கை காட்சிகளில் மனதை பறிகொடுக்கலாம். பனிமலையின் பரவசத்தை உணரலாம்.

குகைக்குள் சென்று தியானம் செய்ய விரும்புகிறார்கள். 

மகாவதார பாபாஜி தரிசனம் தந்த, இந்த குகைப்பகுதியை மிகுந்த மரியாதையும், புனிதமான இடமாகக் கருதி வழிபாடு செய்கிறார்கள்.

வாகனப் போக்குவரத்து, குகுசினா அடைந்ததும், நின்று விடுகிறது.

இங்கிருந்து நடந்து செல்லலாம். சுமார் 3 - 4 கி.மீ தூரம் வரை. 

அங்கிருந்து சில கி.மீ.தூரத்திற்கு மன், கல்பாதையாக உள்ளது. 
இந்த 3-4 கிமீ தூரத்திற்கு நடக்க முடியாதவர்கள்செல்ல சிறு ரக மோட்டார் கார் வண்டிகள் வசதிகளும் உள்ளன.

அதற்கு பிறகு மலை ஏற்றம் 1 கி.மீ. பின் மலைப்பாதையில், 3 கி.மீ சென்றால் 
ஆசிரம கட்டிடம் (SAMIRTI BAWAN) உள்ளது.

இது யோகா சத்சங்க சொசைட்டியால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. 
இந்தக் கட்டிடத்திற்கு சற்று மேலே சுமார் 200 மீட்டர் தூரத்தில் பாபாஜி குகை அமைந்துள்ளது.

பாபாஜி குகை ஒரு பெரிய மலைக்குன்றின் ஒரு பக்கத்தில், சுமார் 10 அடி உயரத்தில் சில படிக்கட்டுக்களுடன் அமைந்துள்ளது. 

நுழைவுப்பாதையில் 4x 3க்கு இரும்புக் கதவு போடப்பட்டுள்ளது. உட்புறம்
சுமார் 6x10 அடி அளவில் இயற்கையான அமைப்பில் உள்ளது. பாறைகளால் உருவாகி இருக்கும் இயற்கையான குகை.

குகையின் உட்புறத்தில் எந்த சிலை அல்லது படம் எதுவும் கிடையாது. 

உட்புறத்தில் தரையின் மீது சில விரிப்புகள் போடப்பட்டுள்ளது. அதில், அமர்ந்து தியானம் செய்கிறார்கள்.

நாங்கள் சென்றபோது தனியாகவே வந்த ஒருவர் பாபாவின் சிறிய படம் மற்றும் சில பழங்கள் அதன் முன் வைத்து அமைதியான முறையில் வழிபட்டு தியானம் செய்தார்.

பெண்மனி ஒருவர் டோலியில் வந்தவர், அவரும் உள்ளே சென்று வழிபட்டு சென்றர்.

நுழைவுப்படி, உட்புறங்கள், சீரமைக்கப்பட்டு, பராமரிப்பில் உள்ளது.

இரும்புக் கதவு திறந்து வைத்திருந்ததால் நாங்கள் உட்புறம் சென்று தியான குகையில் அமர்ந்து வழிபட்டோம். சிலர் தியானம் செய்து கொண்டிருந்தார்கள்.

பகல் பொழுது, நல்ல வெய்யில் சூழல் இருந்தது. வெளிச்சம் காற்றோட்டம், இருந்தது. மலைக்குகையில் அமைதியாகவும், அற்புத இடமாகவும் இருக்கிறது.

சுற்றிலும் மரங்கள், நல்ல நிழல்.

மலைக் குகைப் பகுதியை சுற்றிவர சிறிய பாதை உள்ளது. மரங்கள் அடர்ந்து காட்டு மலைப்பாதையாகவும், உள்ளது. உள்ளூர் இளைஞர்கள் மட்டும் சிலர் குகை அமைந்துள்ள மலைக்குன்றை சுற்றி வலம் வந்தார்கள்.
மலை அடிவாரத்திலிருந்து மலைக்குகைக்கு வந்த ஒரு பெண்மணி, அவர்கள் டோலி (நாற்காலியில் உட்கார வைத்து அதை 4 பேர் மூலம் தூக்கிக் கொண்டு செல்லும் முறை)
மூலம் வந்து தரிசனம் பெற்று திரும்பி சென்றார்கள். 
வேறு குதிரை முதலிய, மலையேற்ற வசதிகள் கிடையாது.
நடந்து தான் செல்லமுடியும்.
குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே குகை உட்பகுதி திறந்திருக்கும். 
யோகா Trust மூலம் பராமரிப்பில் உள்ளது.

நாங்கள் சிலர் மலைக்குகை தரிசனம் முடிந்து சற்றுக் கீழே உள்ள ஆசிரமப்பகுதிக்கு வந்துசேர்ந்தோம். 

எங்கள் சுற்றுலா Admin. அன்பு திரு பாலசுப்ரமணியன் அய்யா அவர்கள் வந்து, மலைக்குகையின் இன்னொருபுறத்தில் உள்ள குகைப் பகுதியை பார்த்தீர்களா என்றவுடன், மீண்டும் மலை சென்று, அந்த குகையும் தரிசித்தோம்.

அது சுமார் 6 அடி உயரத்தில், எந்த பாதையும், படிகளும் இல்லாமல் அமைந்துள்ளது, அதன் மேல் ஏறி உள்ளே செல்ல முயற்சி செய்தோம்.

மலைக்குகையின் இன்னொரு புறத்தில், மேலும் ஒரு குகை உள்ளது. ஒரு ஆள் உள்ளே முயன்று சென்று விடலாம். உட்புறம் சற்று அகலமாகவும், உயரமாகவும் இருந்தாலும், ஆழமான பகுதியாகவும் உள்ளே நுழைவது மிகவும் ஆபத்தானது. இதனால், இதன் வழியை முழுவதுமாக அங்கு சரிந்துள்ள மலைப்பகுதி பாறைகளை வைத்து நன்றாக அடைத்துவிட்டார்கள். யாரும் உள்ளே சென்றுவிட முடியாது. மிக ஆபத்தான பகுதி, என்பதால், அதன் வாசலில் சற்று அமர்ந்து இருந்து விட்டு வெளியேறினோம்.

குகைக்கு நாங்கள் அனைவரும் நடந்துவந்து சென்றோம்.
ஒரு சிலர், முடியாதவர்கள் வந்து செல்ல டோலி பயன்படுத்தி வருகிறார்கள்.

தனி நபர்கள் தனியாக வந்தும், குகையில் அமர்ந்து தியானம் செய்து செல்கிறார்கள்.

ஆந்திராவில் இருந்து சிலர் குழுவாக சுற்றுலா பயணிகள், இந்த குகைக்கு வருவதைப் பார்த்தோம்.

குகை தரிசனங்கள் முடிந்ததும், மலைப் பாதையில் மீண்டும் இறங்கி நடந்துவந்தோம்.

இந்த மலைப்பகுதியில் எந்தவித கடைகள், வேறு கட்டிடங்கள் கிடையாது.

எல்லாவற்றிற்கும், நாம் துவாராகண்ட் தான் செல்ல முடியும்.  

பல இடங்கள், நல்ல மலைப்பாதைகள் இருக்கின்றன. பாதையில் ஒரு இடத்தில் சுமார் 500 மீ.தூரம் செங்குத்தாக இருந்தாலும், சரிவாக பாதை அமைத்துள்ளதால், நடந்து வந்துவிடலாம்.

ஒரு இடத்தில் சிறிய அருவிப் பாதை உள்ளது. நாங்கள் சென்றபோது, நீர் இல்லாததால், அருவிப் பக்கம் செல்லவில்லை.

பாபாஜி மலையின் எதிர்புறத்தில், தூரத்தில், துனகிரி என்ற பிரசித்திப் பெற்ற மலைக் கோவில் உள்ள மலை தெரிகிறது. 

மலைப்பாதை முடிவில் அல்லது ஆரம்பத்தில், ஒரு வீட்டில் மூலிகை தேனீர் கடை உள்ளது. வயதான அம்மா ஒருவர் , தேனீர் போட்டுக் கொடுத்தார். 

திரு ரஜினிகாந் உதவியதாக கூறுகிறார்கள்...
அவர் படம் போட்ட கொடி ஒன்று அந்த இடத்தில் பறந்து கொண்டிருந்தது.

இந்த இடம் மலை அடிவாரம் என்பதால், எல்லோரும் சற்று ஓய்வு எடுத்துக் கொண்டு மலை இறங்கினோம்.

மேலும் 2 கி.மீ. மலைப்பாதையில் நடந்துவந்து, குக்குச்சினா என்ற இடத்தை வந்து அடைந்தோம்.

இந்த இடத்தில்தான், அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டுவிடுகின்றன.
நாங்கள் வரும் போதே, மலைப்பாதையில் ஓரிடத்தில் நல்ல நீர் கிடைத்ததால்,
Admin. அவர்கள், நண்பர் திரு மணி அவர்களை உணவுக்கு ஏற்பாடு செய்ய வழி செய்திருந்ததால், அவ்விடம் வந்து மதிய உணவை முடித்துக் கொண்டு அன்று மாலை, ராணிகட் வந்து சேர்ந்தோம்.

பொதுவாக, இப்படிப்பட்ட பரபரப்பு இல்லாத அமைதியான, இயற்கை சூழல் நிறைந்த இடங்களைத் தேர்வு செய்து சென்றால் /செல்ல வேண்டுமானால், 
முதலில்,
நல்ல ஆரோக்கியமான உடல்பலம், 
நல்ல கால சூழல்,
நல்ல சிந்தனைகள் நிறைந்த மனம்.
சூழல் குறித்து எவ்விதத்திலும் சலனம் இன்றி, எதையும் ரசிக்கக்கூடிய பக்குவம் உள்ள, மனவலிமை,
இவைகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
அப்போதுதான் இவ்விடங்களில் உள்ள உண்மையான, இயற்கை நமக்குத் தரும் அளவற்ற பொக்கிஷ மன உணர்வுகள் அல்லது அங்கு கிடைக்கும் Vibrations அவற்றை நுகரக்கூடிய தூய்மையான எண்ண உணர்வுகளைப் பெற முடியும்.

மனம், உடல் பக்குவம் பெறுவது நிச்சயம். 

ஆன்மீகத்தின் அடிப்படையே இதுதான்.

 உடல், மனம், அனுபவத்தால், பக்குவம் பெற இது ஒரு நல்ல முயற்சி.

முயன்று பாருங்களேன்....

பயணங்கள் தொடரும்...
12.4.2022
நன்றி,

🙏தகவல்கள் உதவி :
 Wikepedia மற்றும் பல வலைதளங்கள்
🙏நன்றிகளும் வணக்கங்களும்🙇🏼‍♂️

#என்றும்அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்

#UTTARAKANNT_TOUR_2022
#பயண அனுபவக் குறிப்புகள்
#மகாவதார் _ பாபாஜி
12.04.2022

முதல் பகுதி:
இரண்டாவது பகுதி :

திண்டல் திண்டல் வேலாயுதசாமி முருகன் கோயில் 6.09.26

திண்டல்  திண்டல் வேலாயுதசாமி முருகன் கோயில் வேலாயுதசாமி கோயில், திண்டல் என்பது ஈரோட்டில் இருந்து பெருந்துறை செல்லும் வழியில் எட்டு கி.மீ. தொ...