Thursday, September 17, 2026

பவானி சங்கமேஸ்வரர் ஆலயம் 6.09.26

பவானி
 சங்கமேஸ்வரர் ஆலயம்
பவானி சங்கமேசுவரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் கொங்கு நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். ’திருநாணா’ என்றும் அழைக்கப்படுகின்ற இத்தலம் தமிழ்நாடு, (பவானி) என்னும் ஊரில், சேலத்தில் இருந்து 56 கி.மீ. தொலைவிலும், ஈரோட்டில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
கோயில் அமைப்பு
தென் திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படுகின்ற இத்தலம் நான்கு மலைகளுக்கு இடையில் அமைந்துள்ளது. பவானி, காவேரி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமிர்த நதி என்ற மூன்று நதிகளும் கூடும் இடமான கூடுதுறையில் உள்ளது. மூன்று ஆறுகளும் கூடுமிடத்தில் உள்ளதால் இக்கோயிலில் சிவன் சங்கமேஸ்வரர் எனப் பெயர் கொண்டுள்ளார். பவானியும் காவிரியும் கூடும் இடத்தில் வடகரையில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்தக் கோயிலுக்கு இரண்டு வாயில்கள் உள்ளன. கோயிலின் முதன்மை கோபுரம் வடக்கு திசையில் 5 நிலைகளையும் 7 கலசங்களையும் கொண்டு அமைந்துள்ளது.
மூலவர், பிற சன்னதிகள்
சுயம்புலிங்க மூலவர் சங்கமேஸ்வரர் ஆவார். இறைவி வேதநாயகி அல்லது வேதாம்பிகை என்றழைக்கப்படுகிறார். இக் கோயிலில் ஆதிகேசவப் பெருமாளுக்கும், நரசிம்மர் மற்றும் சௌந்திரவல்லி தாயாருக்கும் சந்நிதிகள் அமைந்து சைவ, வைணவ ஒற்றுமைக்கு ஒரு எடுத்துக்கட்டாக விளங்குகிறது. இறைவியின் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. அதன் வலப்பக்கம் அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ள சுப்பிரமணியர் சந்நிதி உள்ளது. அதற்கடுத்து மூலவர் சன்னதி உள்ளது. அருகில் ஜ்வரஹரேஸ்வரர் திரு உருவம் மூன்று கால்கள், மூன்று கைகள், மூன்று தலைகளுடன் காணப்படுகிறது. திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வருகை தந்தபோது அவருடைய அடியார்களை சுரநோய் பீடிக்க, இங்குள்ள ஜ்வரஹரேஸ்வரரை வழிபட்டு அவர்கள் நோய் நீங்கப் பெற்றனர் என கூறப்படுகிறது. கோயிலின் தெற்குப் பக்கம் 63 நாயன்மார்கள் திரு உருவங்கள் உள்ளன.
இலந்தை மரம் இக்கோயிலின் தலவிருட்சமாகும். வேதமே மரவடிவெடுத்து வந்திருப்பதாக மரபு. இக்கோயிலில் உள்ள சனீஸ்வர பகவான் சந்நிதி மிகவும் சக்தி வாய்ந்தவர் என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது. மேலும் இக்கோயிலில் உள்ள அமுதலிங்கம் சிறப்புடையதாகும். லிங்கத்தின் பாணப் பகுதியை எடுத்து இடையில் வைத்துக் கொண்டு ஆவுடையாரை வலம் வர குழந்தை இல்லாதவர்களுக்கு மகப்பேறு ஏற்படும் என்பதும் மக்களின் நம்பிக்கையாகும்.
எல்லா முக்கிய சன்னதிகளும் கிழக்கு நோக்கியே அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
திருவிழாக்கள்
இங்கு ஆடிப்பதினெட்டில் நீராடுவதை சிறப்பாகக் கருதுகின்றனர். சித்ரா பௌர்ணமி, ரத சப்தமி, சித்திரையில் 13 நாள்கள் திருவிழா போன்ற விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.
சிறப்புகள்
1804 ஆம் ஆண்டில் கோயம்புத்தூர் ஆட்சியராக இருந்த வில்லியம் காரோ ஆபத்து வேளையில் தன்னுயிரைக் காப்பாற்றியதற்காக, இக்கோயில் அம்மனுக்குக் காணிக்கையாக அளித்த தந்தக் கட்டில் ஒன்று இங்கு உள்ளது. அதில் அவரது கையொப்பமும் உள்ளது. இச்சம்பவம் நடந்தது 1804ம் வருடம் ஜனவரி மாதம் 11ம் நாள் ஆகும்.
முன்னோர் வழிபாடு பிரார்த்தனை தலமாக விளங்குவதால் கூடுதுறையில் கூட்டம் எப்போதும் உண்டு.
6.09.2026
6.9.26 #சுப்ராம்தரிசனம் மீள்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

Check out this review of Arulmigu Sri Sangameshwarar Temple on Google Maps
https://goo.gl/maps/TPoZbjeeTQUw77q96

No comments:

Post a Comment

திண்டல் திண்டல் வேலாயுதசாமி முருகன் கோயில் 6.09.26

திண்டல்  திண்டல் வேலாயுதசாமி முருகன் கோயில் வேலாயுதசாமி கோயில், திண்டல் என்பது ஈரோட்டில் இருந்து பெருந்துறை செல்லும் வழியில் எட்டு கி.மீ. தொ...