Saturday, June 27, 2026

மருதமலை முருகன் கோவில் 14.06.26

மருதமலை முருகன் கோவில் 
மருதமலை முருகன் கோயில், அல்லது மருதாசலமூர்த்தி கோவில் (Maruthamalai Marudhachalamurthy Temple)
 கோவையின் மிகப்பிரசித்தி பெற்ற குன்றக் கோவில். மேற்கு தொடர்ச்சி மலையின் இயற்கை எழில் கொஞ்சும் மூலிகை காற்று நிறைந்த சூழலில்
அமைந்துள்ள மருதமலை, முருகப் பெருமானின் அறுபடை வீடு கோவில்களுக்கு அடுத்தபடியாக அதிகமான பக்தர்கள் வந்து செல்லும் கோவிலாக உள்ளது.
சிறப்பு:
அருணகிரியாரால் பாடப்பெற்றவர் இவர். இத்தலம் “ஏழாம்படை வீடாக’ கருதப்படுகிறது. 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது இத்தலம், இங்குள்ள முருகன் மட்டுமல்ல, விநாயகரும் சுயம்புவாக தோன்றியவர் ஆவார். மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் கோயம்புத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அமைந்துள்ள புகழ்பெற்ற முருகன் கோவில்களில் முதன்மையானது
அமைவிடம்
கோயம்புத்தூரிலிருந்து 15 கி.மீ. தொலைவிலுள்ள மருதமலை மேல் அமைந்துள்ளது. இக்கோவிலின் முதன்மைக் கடவுளான முருகன், இங்கு சுப்பிரமணிய சுவாமி என்றும் தண்டாயுதபாணி என்றும் மருதாசலமூர்த்தி (மருதன்) என்றும் அழைக்கப்படுகிறார்.
ஆலயம் செல்ல பாதைகள் அமைப்பு:
இத்திருக்கோயில் மலைக் கோயிலாகும். அடிவாரத்திலிருந்து மலைக்கு செல்ல சுமார் 646 படிக்கட்டுகள் கொண்ட படிப்பாதை மற்றும் வாகனங்கள் மூலம் செல்ல 2.5 கி.மீ நீளத்திற்கு தார்சாலை வசதியும் உள்ளது.

மலை அடிவாரத்தில் இருந்து கோவில் நிர்வாகத்தின் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கட்டனம் ரூ 10/- ஒரு நபருக்கு. மலை மீது வாகனங்கள் நிறுத்தும் இடத்திலிருந்து இராஜகோபுர வழியில் ஆலயம் செல்லலாம்.
மலைப்பாதை
தான்தோன்றி விநாயகர்
மலையின் அடிவாரத்திலிருந்து நடைப்பயணமாகச் செல்லும் போது, பாதையின் தொடக்கத்தில் தான்தோன்றி விநாயகர் சன்னிதியும், சற்று மேலே சென்றால் இடும்பன் சன்னிதியும் அமைந்துள்ளன.
அடிவாரத்திலிருந்து இப்பாதை ஆதிமூலஸ்தானத்தில் முடிவடைகிறது.
இப்பாதையில் செல்வோர் கவனிக்கக்கூடிய முக்கிய இடங்கள்: பதினெட்டாம் படி எனப்படும் முதல் பதினெட்டுப் படிகள்; காவடி சுமந்த வடிவிலுள்ள இடும்பன் கோயில்; குதிரைக் குளம்புச் சுவடு காணப்படும் பாறை. படிப்பாதை வழியே சென்றால் ஆதிமூலஸ்தான சன்னதியை அடையலாம்.
மருதமலைக்கோயில் அமைப்பு🛕
வாகனங்கள் மூலம் மலையின் மீது சென்றதும் அங்கிருந்து சுமார் 50 படிக்கட்டுகள் மூலம் மேல ஏறி சென்று அல்லது மின் தூக்கி மூலம் ஆலய வளாகம் அடையலாம்.  
கிழக்குப்பார்த்த ஏழு நிலை கொண்ட இராஜகோபுரத்துடன் அமையப்பெற்றுள்ள இத்திருக்கோயில் கருங்கற்களால் கட்டப்பட்டுள்ளது.
இராஜகோபுர கல்ஹாரம், ஏழுநிலை கோபுரம், தங்கமுலாம் பூசிய ஏழு கலசங்கள், மேல்மண்டபம், இராஜகோபுரத்திற்குச் செல்லும் படிக்கட்டுகள் மற்றும் இராஜ கோபுரத்திலிருந்து மேல் மண்டபத்திற்குச் செல்லும் படிக்கட்டுகள் புதியதாய் அமைக்கப்பட்ட பாதை, இராஜகோபுரத்தின் வழியே நேராக தண்டாயுதபாணி சன்னிதிக்குச் செல்கிறது.

ஆதிமூலஸ்தானம்  
இது தண்டபானி ஆலயத்தை ஒட்டித்தென்புறமாக உள்ளது
ஆதிமூலஸ்தானம் கருங்கல் கட்டிடங்கள் ஆகும் ஆதிமூலஸ்தானத்திற்கு முன்புறம் உள்ள திருக்கல்யாண மண்டபம் செங்கற்களால் கட்டப்பட்டுள்ளது.

மருதமலைக் கோயிலின் ஆதி மூலஸ்தானத்தில் சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானையுடன் மூவரும் சுயம்புலிங்க வடிவில் உள்ளனர். இங்கு வள்ளியின் சுயம்பு உருவம், தெய்வானையை விட சற்று உயரமாகக் காணப்படுகிறது. ஆதிமூலஸ்தான கருவறை விமானமும், முன்புறம் தைப்பூசக் கல்யாண உற்சவ மண்டபமும் புதிதாகக் கட்டப்பட்டுள்ளன

இப்பாதைவழிச் செல்பவர்கள் ஆதி மூலஸ்தானத்தில் சுயம்புவாக உள்ள சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானையையும் அதற்கடுத்து, பஞ்சமுக விநாயகரையும் வழிபட்டபின் தண்டாயுதபாணி சன்னிதிக்குச் செல்லலாம்.

பஞ்ச விருட்ச விநாயகர்
ஆதிமூலஸ்தானத்திற்கும் முன்மண்டபத்திற்கும் தண்டாயுதபாணி சன்னிதி மண்டபத்திற்கும் இடையே பஞ்ச விருட்ச விநாயகர் சன்னிதி உள்ளது. பொதுவாக அரசமரத்தடியில் காணப்படும் விநாயகர் இங்கு அரசு, அத்தி, வேம்பு, வன்னி, கொரக்கட்டை என ஐந்து மரங்களுக்கடியில் ஐந்து முகங்களுடன் அமைந்துள்ளார். இந்த விநாயகரைத் தாண்டிதான் தண்டாயுதபாணி சன்னிதிக்குச் செல்ல வேண்டும்

 தண்டபாணி ஆலயம் அமைப்பு :

இராஜகோபுர நுழைவாயிலைத் தாண்டினால் கல்லாலான கொடிமரத்துக்கு முன் வலம்புரி விநாயகர். அவர்முன் வைக்கப்பட்டுள்ள பெரிய மயில்முக விளக்கின் அடிப்புற ஆமைவடிவமும் அதனைத் தொடர்ந்த மேற்தண்டிலுள்ள பாம்பு உருவங்களும் குறிப்பிடத்தக்கவை.
செங்கற்களால் கட்டப்பட்டுள்ள
மகாமண்டபம். அதன் முன்புறம் உள்ள அலங்கார மண்டபம் முன்புறம் மயில்வாகனம், பலிபீடம், கொடிமரம், தீப ஸ்தம்பம் ஆகியவை உள்ளன.

அடுத்து உலோகக் கொடிமரம், மயில்வாகனம், முன்மண்டபத்தில் வரதராஜ பெருமாள் சன்னிதி,

அர்த்தமண்டபத்தில் கருவறையின் நுழைவாயிலின் இருபுறத்திலும் விநாயகரும் (இடப்புறம்) வீரபத்திரரும் (வலப்புறம்), கருவறையில் தண்டத்துடன் காட்சிதரும் தண்டாயுதபாணி என இக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது.

திருக்கோயிலின் கருவறை, அர்த்த மண்டபம், மகாமண்டபம் ஆகியவை கருங்கற்களால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது, தண்டபானி கருவரை தென்புறத்தில் அருள்மிகு பட்டீஸ்வரர் சன்னதி, வட புறத்தில் அருள்மிகு மரகதாம்பிகை சன்னதி, அமைக்கப்பட்டுள்ளன.

தண்டாயுதபாணி சன்னதி
முருகனின் அருள்பெற்ற பாம்பாட்டிச் சித்தர், முருகனுக்கு புதிய சிலை வடித்தார் என்றும், இந்த சிலையே மூலஸ்தானத்தில் இருக்கிறது, இரண்டு கரங்களுடன் உள்ள இவர், பழநி முருகனைப் போலவே, கையில் தண்டத்துடன், இடதுகையை இடுப்பில் வைத்தபடி தண்டபாணியாக காட்சி தருகிறார். தலைக்கு பின்புறம் குடுமி உள்ளது. காலில் தண்டை அணிந்திருக்கிறார் என்றும் சொல்கிறார்கள். தினமும் ராஜ அலங்காரம், விபூதிக்காப்பு, சந்தனக்காப்பு என மூன்றுவித அலங்காரங்களுடன் காட்சி தருவார். விசேஷ நாட்களில் வெள்ளிக்காப்பும், கிருத்திகை, தைப்பூசம் நாட்களில் தங்க கவசமும் அணிகிறார். அர்த்தஜாம பூஜையில் மட்டுமே இவரை தண்டாயுதபாணியாக சுய ரூபத்தில் தரிசிக்க முடியும். அப்போது ஆபரணம், கிரீடம் என எதுவும் இல்லாமல், வேட்டி மட்டும் அணிவிக்கின்றனர்.

இது தனிப்பட்ட முருகன் கோயிலாக இருந்தாலும் இங்கு முருகன், சோமாஸ்கந்தனாக வெளிமண்டபத்தில் வலப்புறம் பட்டீசுவரர், இடப்புறம் மரகதாம்பிகை சன்னிதிகளுடன் உள்ளார். மரகதாம்பிகை சன்னிதிக்கு எதிராக வெளி மண்டபத்தில் நவகிரகங்கள் சன்னிதி அமைந்துள்ளது. மற்றும் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை, சண்டிகேசுவரர் ஆகியோருக்கும் வெளிமண்டபச் சுவற்றில் தனித்தனி சன்னிதிகள் உள்ளன.

பாம்பாட்டி சித்தர் குகை (தனி பதிவு)

பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
மலைவாழ் விலங்குகள் அச்சுறுத்தல் உள்ளதால் மலைக்கோவிலுக்கு செல்ல.
மலைப் பாதை மற்றும் வாகனப்பாதைகள் காலை 6.00 மணிக்கு திறப்பு மற்றும் மாலையில் பூட்டி விடுவார்கள். 
அடிவார ஊரில் ஏராளமான கடைகள் ஹோட்டல்கள் தங்குமிடங்கள் உண்டு. வாகணங்களில் வருபவர்கள் பொருட்கள் வைத்துவிட்டு, குளியல் கழிவறைகள் பயன்படுத்தி தங்கி செல்ல நபர் கட்டணம் வசூல் செய்கிறார்கள். வாகனங்களும் அங்கேயே நிறுத்திக் கொள்ளலாம்.
மலையில் மீது வாகன நிறுத்தம் இடத்திலிருந்து ஆலயம் அடைய சுமார் 50 படிகள் மேல ஏறி சென்று தரிசிக்கவும் இப்போது மின்தூக்கி ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
மலைமீதும் கழிவரைகள் முதலிய வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன.
ஆலயம் தூய்மையாகவும் சிறப்பாகவும் பராமரிப்பு செய்யப்படுகிறது. ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.
இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
சில முறைகள் தரிசனம் செய்து உள்ளோம். 14.06.2026 மீள் தரிசனம்
நன்றி🙏
14.6.2026 Subbram🙏🛕🇮🇳
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#கொங்குத்தலங்கள்

No comments:

Post a Comment

தாராபுரம் அகத்தீஸ்வரர் ஆலயம் - தாராபுரம் அகத்தீஸ்வரர் ஆலயம்விடாராபுரம் - தாராபுரம் - வைப்புத்தலம்தாராபுரம் அகஸ்தீஸ்வர சுவாமி கோயில் 5.06 9

தாராபுரம்  அகத்தீஸ்வரர் ஆலயம் விடாராபுரம் - தாராபுரம் - வைப்புத்தலம் தாராபுரம் அகஸ்தீஸ்வர சுவாமி கோயில் என்பது தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட...