கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் அருகே செஞ்சேரிமலையில் அமைந்துள்ள மந்திரகிரி வேலாயுத சுவாமி திருக்கோயில்திருப்புகழ் தலம். முருகப்பெருமான் அருள்புரியும் மிகச்சிறப்பான ஆன்மீகத் தலமாகும். அறுபடை வீடுகளுக்கும் முந்தைய முருகன் தலம்
🛐செஞ்சேரிமலை மந்திரகிரி வேலாயுத சுவாமி கோயிலின் சிறப்புகள் மூலவர்:
சுவாமி : மந்திரகிரி வேலாயுத சுவாமி
தீர்த்தம் : ஞான தீர்த்த சுனை.
தலவிருட்சம் : கடம்ப மரம். இங்குள்ள மூலவர் மந்திராசல வேலாயுதமூர்த்தி என்று அழைக்கப்படுகிறார்.
முருகப்பெருமானின் ஆறுமுகங்களையும் ஒரே நேரத்தில் இங்கு தரிசிக்கலாம்.
இக்கோயிலின் மற்றொரு முக்கியச் சிறப்பு, இங்குள்ள மயில் வாகனத்தின் தலை வழக்கத்திற்கு மாறாக இடதுபுறம் திரும்பியிருக்கும்.
தலவிருட்சம்: இக்கோயிலின் தலவிருட்சமாக கருநொச்சி விளங்குகிறது.
சிவபெருமான் தன் மகன் முருகனுக்கு உபதேசித்த தலம் தென் சேரி மலை. இவ்விடத்தில் முருகன் சிவனை நோக்கி தவம் இருந்து சத்ருசம்ஹார மந்திர உபதேசத்தை பெற்றார்.
முருகப்பெருமான், தன் தந்தை சிவபெருமானுக்கு பிரணவ மந்திரத்தை உபதேசம் செய்த தலம் சுவாமிமலை. ஆனால் முருகப்பெருமானுக்கு, சிவபெருமான் உபதேசித்த தலம் ஒன்று உண்டு. அத்தலம்தான் கோவை மாவட்டத்தில் அமைந்துள்ளது
சூரபத்மனை அழிப்பதற்கு முன்பே முருகப் பெருமானுக்கு சிவபெருமான் சத்ருசம்ஹார மந்திரத்தை உபதேசித்த திருத்தலம் இது என்பதால், முருகன் தலங்களில் மிகவும் பழமையானது என்னும் தனிச்சிறப்புடையது இத்தலம். அறுபடை வீடுகளுக்கும் முந்தையது.
தல வரலாறு
சூரனின் கொடுமைகளை தாங்க முடியாமல் தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். அதனை ஏற்று சிவபெருமான், தனது நெற்றிக் கண்ணில் இருந்து முருகப்பெருமானைத் தோற்றுவித்தார். சூரனை அழிக்கும் தருணம் நெருங்கியது.ஆனால் சூரர்கள் மாயையில் வல்லவர்கள் என்பதால் அவர்களை அழிக்க சத்ருசம்ஹார மந்திர உபதேசத்தை முருகப்பெருமான் பெறுவது அவசியம் என்று பார்வதிதேவி விரும்பினார். அதனால் அந்த மந்திரத்தை குமரனுக்கு உபதேசிக்கும்படி, பார்வதிதேவி சிவபெருமானிடம் வேண்டினார். சிவபெருமான், முருகப்பெருமானை அழைத்து,'குமரா! சத்ருசம்ஹார மந்திர உபதேசம் தானாக கிடைத்து விடாது. என்னை நினைத்து கடும் தவம் இருக்க வேண்டும். அப்போது தான் அந்த மந்திரம் கற்றுக் கொள்ளும் பாக்கியம் கிடைக்கும்.நான்கு வேதங்களாக இருக்கும் கடம்ப மரமும், தர்ப்பையும், கங்கை தோன்றும் இடமும், மகாவிஷ்ணுவுக்கு சிவ தீட்சை அளித்த இடமும் உள்ள இடத்தில் தவம் செய்' என்று வழி கூறினார். சிவபெருமானின் அருளாசியுடன் தவம் புரிவதற்கு ஏற்ற இடத்தை தேடி முருகப் பெருமான் பூலோகம் வந்தார்.அப்போது, இந்த திருத்தலத்தில், நான்கு வேதங்களுக்கு இணையான கடம்ப மரமும், கங்கைக்கு நிகரான ஞானதீர்த்த சுனைநீரும், அருகேயே தர்ப்பையையும், சற்று தொலைவில் சின்னமலையில் சிவதீட்சை பெற்ற மகாவிஷ்ணுவும் ஒரே நேர்க்கோட்டில் இருக்க, 'தாம் தவம் இருக்க சரியான இடம் இது' என்று முருகப்பெருமான் தீர்மானித்து அங்கேயே தவம் செய்தார். பல ஆண்டு காலம் தவம் செய்த குமரனின் தவத்தை மெச்சி, சிவபெருமான் அவர் முன் தோன்றினார். பின்னர் தன் மகனுக்கு, எதிரிகளை அழிக்க வல்ல மந்திரமான சத்ருசம்ஹார மந்திரத்தை உபதேசித்தார். மந்திரத்தை கற்று தேர்ந்ததால் மந்திர வேலாயுதசாமி என்று அழைக்கப்பட்ட முருகப்பெருமானுடன், மலை என்பதன் பதமான கிரியும் இணைந்ததால் மந்திரகிரி' வேலாயுத சுவாமி என்ற திருப்பெயர் ஏற்பட்டது.
🛕ஆலய அமைப்பு
முருகன் இருக்கும் மலை சிறிய மலைதான் , மலையைச் சுற்றிவர கிரிவீதி உள்ளது. அழகிய படிக்கட்டுகள் மலையின் கிழக்கு பகுதியில் உள்ளது. மலைக்குன்று மேல் ஏறி சென்று ஆலயம் அடைய சுமார் 200 படிகள் உண்டு. வயதானவர்களும் மலைப் படிகளில் மெல்ல ஏறி தரிசிக்கலாம் வழியில் பாதவிநாயகர் மற்றும் சில மன்டபங்களும், குழந்தை வேலாயுதனார், சப்தகன்னிகள் சன்னதியும் உண்டு.
மலை மீது உள்ள ஆலயம் கிழக்கு நோக்கியது. கொடிமரம் மற்றும் நீண்ட செவ்வக வடிவ முன் மண்டபம் உள்ளது.
வடமேற்குப் பிரகாரகத்தின் மூலையில் உள்ளே நுழையும் வழி உள்ளது. படி வழியாகச் சென்றால் சந்திதிக்கு நேரே கிழக்கு பார்த்த மூன்று நுழைவாயில்கள் உள்ளன
நுழைவாயில் மூன்றாக இருந்தாலும் அம்மன், ஸ்வாமி, முருகன் மூவரையும் ஒரே மண்டபத்தில் அடுத்து அடுத்துக் காணலாம்.
அம்மன் பெரியநாயகி அம்மன், சுவாமி கைலாசநாதர், தெற்கில் நடராஜர் சன்னதி உள்ளது.
மூலவராக முருகன் மந்திரகிரி வேலாயுத சுவாமி இருக்கும் சந்நதி பெரியது.
ஆறுமுகங்களுடன், பன்னிரு கரங்களுடனும், வள்ளி தெய்வானையுடனும், மயிலுடனும் நின்றகோலத்தில் காட்சி அளிக்கிறார்.
இடது கையில் சேவலே ஒரு கருவி போல இருக்கிறது, இது முருகன் தவம் செய்த இடம்.
முருகன் சூரசம்கார காலத்திற்கு முந்தியது என்பதால் மயில் முருகனது இடதுபுறம் நோக்கி இருக்கிறது.
முருகன் தன் கைகளில் சேவலும், பாம்பும் ஏந்தியிருக்கும் தனிச்சிறப்பு
இத்தலத்தில் வேலாயுதர் 12 கரங்களுடன் காட்சி தருகிறார். இவர் சேவல் கொடியை வைத்திருப்பதோடு, இடது கையில் சேவலையும் வைத்திருப்பது சிறப்பு.
கருவறையில் தாமரை பீடத்தில் நின்ற கோலத்துடன் ஆறுமுகங்களும், பன்னிரு திருக்கரங்களுமாக கிழக்கு நோக்கி காட்சி தருகிறார் முருகப்பெருமான். வலது கரங்களில் அங்குசம், கத்தி, கேடயம், சர்ப்பம், மணி, அபய முத்திரையுடனும், இடது கரங்களில் சேவல், பாசம், வில், அம்பு, கதை, வரத முத்திரையுடனும் அருளாசி வழங்குகிறார். வலது பக்கத்தில் இருக்கும் கடைசி கையில் பாம்பையும், இடது பக்கத்தில் இருக்கும் மேல் கையில் சேவலையும் வைத்திருக்கிறார். இடது கையில் சேவலே ஒரு போர்க் கருவி போல ஏந்தி இருப்பது நாம் வேறு எந்த தலத்திலும் காணமுடியாத தனிச்சிறப்பாகும்.
பொதுவாக மற்ற திருத்தலங்களில் ஆறுமுகங்களுடன் காட்சி தரும் முருகனை தரிசித்தால் நாம் கண் முன்னே 5 முகங்களை தரிசிக்கலாம். பின்னால் ஒரு முகம் இருக்கும். ஆனால் இந்த திருத்தலத்தில் 'எட்டு திசைக்கும் நான் காவலாக இருந்து பக்தர்களை காத்து வருகின்றேன்' என்று வேலாயுதசாமி கூறுவது போல், எட்டுதிசையை பார்க்கும் விதத்தில் ஆறுமுகங்களை கொண்டு காட்சி தருகிறார். வலது பக்கம் மயில் வாகனம் அமைந்துள்ளது.
சூரசம்காரத்திற்கு முன் இந்திரன் மயிலாக இருப்பார் முருகனுக்கு, அப்புறம் சூரசம்காரம் செய்தபின் சூரபதுமனின் உடல் , ஒரு பாதி சேவலாகவும், மற்றொரு பாதி மயிலாவும் மாறின. இறைவன் அவற்றுக்கு ஞானத்தை அளித்து சேவலைக் கொடியாகவும், மயிலை வாகனமாகவும் ஆக்கிக் கொண்டார். அதன் பின் இந்திரனாகிய மயில் மீதிருந்து இறங்கி சூரபத்மனாகிய மயில் மீது எழுந்தருளினார். பின் இதுவரை மயிலாகவும் சேவலாகவும் நின்ற இந்திரனும், அக்கினியும் முருகன் அருட்பார்வையால் பழைய வடிவை பெற்றனர். என்பது கந்தபுராணம்
தனித்தனி கோஷ்ட பிரகாரங்கள் அமைப்பும் அவற்றில் முறையான தெய்வ சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
முன்மன்டபத்தில் உற்சவர் விஷேச அலங்காரம், சுவாமி புறப்பாடு பூசைகள் செய்யப்படுகிறது.
ஒரு சுற்றுப்பிரகாரம் உள்ளது.
தங்கத்தேர் அமைக்கப்பட்டு கார்த்திகை முதலிய விஷேச நாட்களில் தேர் திருவிழா மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. பிரகாரத்தில்
இங்குள்ள திருமால் வலது கையில் சிவலிங்கத்தை வைத்து க்கொண்டு இருக்கிறார்.
படி ஏறமுடியாதவர்களுக்கு, சிறிய வாகனங்கள் மூலமாகவும் மலைக்கோவில் அடையலாம்.
வாகனங்களில் செல்ல மலையின் பின்புறம் மேற்கில் வாகனப் பாதை உள்ளது வசதியாக இருக்கிறது. வளைந்து வளைந்து செங்குத்தாய் சாலை கோவிலின் அருகில் முடிகிறது.
இந்த கோவிலை பற்றி இங்குள்ள நம்பிக்கை:
இந்த ஊரில் உள்ள வீடுகளில் குழந்தைகளுக்கு மந்திரகிரி என்று பெயர் வைப்பது வழக்கம் எந்த வீட்டில் பசு, கன்றை ஈன்றாலும் முதலில் கறந்த பாலை முருகனுக்கு கொடுத்து விடுவார்களாம். காரியங்களை தொடங்கும் போது முருகனின் பூவிழுதல் குறிபார்ப்பார்களாம் ,வலது பக்கம் பூ விழுந்தால் நல்லது, இடது பக்கம் பூ விழுந்தால் கெட்டது. இரண்டுபுறமும் விழுந்தால் பரவாயில்லை என்று அர்த்தமாம்.
தீர்த்தம் கங்கை தீர்த்தம் என்கிறார்கள். கோவிலுக்கு வடக்கில் வள்ளிசுனை உள்ளது.
பிரார்த்தனை
இங்குள்ள தலவிருட்சமான கடம்ப மரத்தை 12 முறை சுற்றி வந்து முருகப்பெருமான் சன்னதியில் தீபம் ஏற்றி வேண்டினால் மனஅமைதி, தொழிற்தடை நீங்குதல், எதிரிகள் நீங்குதல், திருமண வரம், குழந்தை பேறு முதலிய நற்பலன்களை அடையலாம். மேலும், ஜாதக ரீதியான தோஷங்கள், கிரக தோஷம், மனநோய் மற்றும் தீய சக்தி போன்றவற்றிலிருந்து நிவாரணம் பெறவும் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது
அமைவிடம்:
கோயம்புத்தூர் மாவட்டம், பல்லடத்தில் இருந்து உடுமலைப்பேட்டை செல்லும் பாதையில் மேற்கே 18 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. தென் சேரி மலைக்கு உடுமலைபேட்டை மற்றும் பொள்ளாச்சியில் இருந்து நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கோயம்பத்தூரில் இருந்து வெகு சில பேருந்துகள் இக்கோவில் வழியே உடுமலைபேட்டை செல்லுகின்றது.
நடைதிறப்பு : காலை 6.00 மணிமுதல் இரவு 8.00 மணிவரை நடைதிறந்திருக்கும்.
13.6.2026 Subbram_ தரிசனம்,🙏🛕🇮🇳
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#கொங்குத்தலங்கள் ⛳
No comments:
Post a Comment