அமைவிடம்
கோயம்புத்தூர் நகரத்திலிருந்து திருச்சி சாலையில் கிழக்கே சுமார் 21 கி.மீ. சூலூர் பகுதியில் அமைந்துள்ளது
ஆர்.வி.எஸ் குழுமம் என்ற கல்வி நிறுவனம் இந்த ஊரில் மூன்று கோயில்களைக் கட்டியுள்ளது . அவற்றில் முதலாவது அறுபடை வீடு முருகன் கோயில். இந்தக் கோயிலின் தனிச்சிறப்பு என்னவென்றால், இங்கு தரிசித்து வழிபடுபவர்களுக்கு ஆறு அறுபடை வீடு கோயில்களையும் தரிசித்த பலனும் கிடைக்கும்
மூலவர்:சுவாமி நாதர்
பழமை:500 வருடங்களுக்குள்
இங்குள்ள சுவாமி நாத சுவாமி திருக்கோயிலில் தான் ஆறுபடை வீடு முருகனும் ஒரே இடத்தில் தனிதனி சன்னதிகளில் அருள்பாலிக்கிறார்கள்.
மூர்த்திகளும் ஒவ்வொரு வடிவத்தையும் பிரதிபலிக்கும் வகையில் ஒரே மாதிரியாக உருவாக்கப்பட்டுள்ளன.
மூல சன்னதி சுவாமிமலை பாணியில் (மயிலுக்குப் பதிலாக யானை) அமைக்கப்பட்டுள்ளதால், இக்கோயில் ஸ்ரீ சுவாமிநாதன் கோயில் என்று அழைக்கப்படுகிறது. இது கோவை குமார கோட்டம் என்றும் அழைக்கப்படுகிறது.
இதில் மிகப்பெரும் விசேஷம் என்னவென்றால் திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, திருத்தணி, சுவாமிமலை, பழமுதிர்சோலை ஆகிய ஆறுபடைவீடுகளில் முருகப்பெருமான் எந்த பெயரில் எந்த திசை நோக்கி வீற்றிருந்து அருள்பாலிக்கிறாரோ, அதே பெயரில் அதே திசையில் இங்கும் அருள்பாலிக்கிறார். இந்த சுவாமிநாத சுவாமி திருக்கோயிலுக்கு வந்து இங்குள்ள ஆறு முருகப்பெருமானை தரிசித்தால் ஆறுபடைவீடும் சென்று தரிசித்த திருப்தி ஏற்படும்.
ஆலய அமைப்பு
ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரத்தின் வலதுபக்கத்தில் வினைதீர்க்கும் விநாயகன் அடுத்ததாக குன்றிருக்கும் இடமெல்லாம் இருக்க கூடிய குமரன் சரவணப் பொய்கையில் அவதரித்ததை நினைவுகூறும் வகையில் பிரம்மாண்டமான தீர்த்த தொட்டியின் நடுவிலே தாமரை இதழ்களில் குழந்தை முருகனின் அவதார நிலை. இந்த சரவண பொய்கையை அஷ்டதிக் பாலகர்கள் காவல் காத்து வருகிறார்கள்.
பலிபீடம் அமைக்கப்பட்டுள்ளது. கொடிமரத்தையும் மயில் வாகனத்தையும் தாண்டி சென்றால் சுவாமிநாத சுவாமி சந்தனக்காப்புடன் ராஜ அலங்காரத்தில் "நானே அழகு' என்பது போல் மூலஸ்தானத்தில் வீற்றிருக்கிறார்.
முருகப்பெருமானின் ஆறுபடைவீடுகளில் நான்காம் படைவீடு சுவாமிமலை. தந்தையாகிய சிவ பெருமானுக்கு குருவாக இருந்து, "ஒம்' என்னும் பிரணவ மந்திரத்திற்கு பொருளை உபதேசித்தவர் முருகன். இந்த சுவாமிநாத சுவாமியை வணங்கினால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவதோடு ஞானமும் கிடைக்கும். ஒரு மனிதனுக்கு மிகவும் முக்கியமானது கல்விச்செல்வம். இத்தகைய கல்வி செல்வம் வற்றாமல் கிடைப்பதற்காகத்தான் குமரன் கோட்டத்தில் சுவாமிநாதசுவாமி கோயில் எழுந்தருளியிருக்கிறது.
சுவாமி மலையில் இருப்பது போலவே யானை வாகனமாக உள்ளது.
மூலஸ்தான சுவாமிநாதனை தரிசித்து விட்டு வலம் வந்தால் திருத்தணிகை வேலன், வள்ளி- தெய்வானையுடன் தனி சன்னதியில் அருள்புரிவதை தரிசிக்கலாம். அவரை தரிசித்து விட்டு நகர்ந்தால் சூரனை வதம் செய்த திருச்செந்தூர் செந்திலாண்டவர் வேலுடன் தனி சன்னதியில் காட்சிதருகிறார். அடுத்து சென்றால் தெய்வானையுடன் திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கேட்டதையெல்லாம் கொடுக்கும் வள்ளலாக வீற்றிருக்கிறார். தனக்கு வேண்டிய மாம்பழத்தை தன் அண்ணனுக்கு கொடுத்ததற்காக கோபித்து சென்ற பழநி தண்டாயுதபாணி, கையில் தண்டம் தனி சன்னதி, அடுத்து இல்வாழ்க்கை இனிமையாக அமைய என்னை வணங்கு என்பதைப் போல், வள்ளி தெய்வானையுடன் கல்யாண சுப்பிரமணியர் தனி சன்னதியில் அருளாசி அள்ளி வழங்குகிறார்.
இப்படி ஆறுபடை வீடு திருமுருகனும் ஒரே இடத்தில் தனித்தனி சன்னதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறர்கள்
மேலும், விசாலாட்சியுடன் கூடிய காசி விஸ்வநாதருக்கு ஒரு சன்னதி உள்ளது, மேலும் பிரகாரத்தில் 63 நாயன்மார்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். விநாயகர் சன்னதியும் கலைநயத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. அனுமன், தட்சிணாமூர்த்தி மற்றும் தன்வந்திரி ஆகியோரும் பிரகாரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். நவகிரக சன்னதியின் தனிச்சிறப்பு என்னவென்றால், ஒன்பது கிரகங்களும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளன. கோபுரம் உட்பட, இக்கோயிலில் கட்டப்பட்ட அனைத்தும் பளிங்கு போன்ற வெண் கல்லால் ஆனவை. பக்தர்கள் தூய உள்ளத்துடன் இங்கு வந்து பிரார்த்தனை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காகவே இது இவ்வாறு செய்யப்பட்டிருக்கலாம்.
காலை5 மணி முதல்1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
13.6.2026 Subbram_ தரிசனம்,🙏🛕🇮🇳
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#கொங்குத்தலங்கள் ⛳
No comments:
Post a Comment