ஸ்ரீ விசாலாட்சியம்பாள் சமேத ஸ்ரீகாசி விஸ்வநாதர் சிவன்கோயில்
தஞ்சை மாவட்டம், பேராவூரணி வட்டம்
அமைவிடம்
நாகப்பட்டிணம் தூத்துக்குடி ECR பிரதான சாலையில் உள்ள ஊர்
பட்டுக்கோட்டையின் நேர் தெற்கில் 21 கிமி தொலைவில் கடற்கரையினை ஒட்டி இவ்வூர் உள்ளது.
தல வரலாறு :
ராஜமன்னார்குடியில் அனந்தமௌனி சுவாமி என்றொரு மகான் இருந்தார், அவரது சீடர்களில் ஒருவரான மேரு சுவாமிகளுக்கு சியாமராசர், சேது சுவாமிகள் ஆகிய இரு சீடர்கள் இருந்தனர். இந்த சேது சுவாமிகள் தான் சேதுபாவா சுவாமிகள் என்றும் அழைக்கப்படுகின்றார்.
தஞ்சையை 1739 முதல் 1763 வரை ஆட்சி செய்த பிரதாப சிம்மன் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டு, தஞ்சையில் இருந்த பீமராஜ சுவாமிகளிடம் சென்று தனக்கு துறவறம் குறித்து அருளும்படி வேண்டியபோது அவர் உனக்கான குரு மன்னார்குடியில் இருக்கும் சேதுபாவா சுவாமிகள் தான் அவரிடம் சென்று ஆசி பெறக் கூறி அனுப்பி வைக்கிறார். . அதன்படி மன்னர் சேதுபாவா சுவாமிகளிடம் சென்று ஆசி பெறுகிறார்.
பிரதாபசிம்மன் தன் குருவிற்கு தஞ்சாவூர் கீழராஜவீதியில், தன் அரண்மனைக்கு எதிரில் ஒரு மடம் கட்டிக்கொடுத்து குரு காணிக்கையாக பொன்னும், பொருளும் கொடுத்து கௌரவித்தார். சுவாமிகளின் பெயரில் மன்னார்குடியில் ஓர் அன்ன சத்திரமும், அரித்ரா நதி என்னும் பெரிய குளமும் குளக்கரையில் கோயிலும் உருவாக்குகிறார். பட்டுக்கோட்டை கிழக்கில் கடற்கரை ஒட்டி சேதுபாவா சத்திரம் என்னும் ஊரையும் உருவாக்குகிறார். இது தான் சேதுபாவாசத்திரம் உருவான கதை.
தல சிறப்புகள்:
த்ரேதா யுகத்தில் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி ராமேஸ்வரம் சென்ற போது இந்த ஊரில் தங்கி கடலில் நீராடி முன்னோர்களுக்கு வழிபாடு செய்ததால் இந்த ஊருக்கு ஸ்ரீ ராமசந்திரபுரம் என பெயர் விளங்கி வந்தது. 1676 ஆம் ஆண்டு மராட்டிய மன்னர் சிவாஜி மகராஜாவின் குரு ராமதாஸ சுவாமிகள் இங்கு தங்கி கடலில் நீராடி பின்னர் ராமேஸ்வரம் சென்றார். பிரதாப சிம்ம மகாராஜாவின் குருவாகிய சேதுபாவா சுவாமிகள் இந்த ஊரில் நித்ய அன்ன சத்திரமும் ஆஞ்சநேயருக்கு ஒரு ஆலயமும், காசியில் இருந்து கொணரப்பட்ட லிங்கத்தை வைத்து 1750ல் ஒரு சிவன்கோயில் கட்டி குடமுழுக்கு செய்தார்.
இக்கோயிலுக்கு பிரதாப சிம்மன் இருபதாயிரம் ஏக்கர் நிலங்கள் தானமாக கொடுத்து அதில் கிடைக்கும் வருவாயில் அன்னதானம் செய்ய வழிவகை செய்திருந்தார். சேதுபாவாசத்திரம், ஊமத்தநாடு, ஆண்டிக்காடு மருங்கப்பள்ளம், மன்னார்குடி, வேட்டைதிடல், கீழையூர் செட்டியமூலை கீழசாந்தான்மங்கலம் அன்னவாசல் ஆகிய கிராமங்களில் இந்த நிலங்கள் உள்ளன.
இத்தல பெருமை உணர்ந்து காஞ்சி மகா பெரியவர் இங்கு தங்கி சென்றுள்ளார்.
இங்கு வந்து வழிபடுவதன் மூலம் பித்ருசாபம் பிரேதசாபம் குருசாபம் நீங்கி முன்னோர்கள் ஆசியினை பெற்று வாழலாம்.
ஆலய அமைப்பு
கிழக்கு நோக்கிய திருக்கோயில், கோயிலின் பின்புறம் நீளவாக்கில் உள்ள ஒரு பெரிய நன்னீர் குளம் உள்ளது.
இறைவன் காசிவிஸ்வநாதர் இறைவி காசிவிசாலாட்சி
இறைவன் நடுத்தர அளவில் லிங்கமூர்த்தியாக உள்ளார். அவரது கருவறை கருங்கல் கொண்டு கட்டப்பட்டு உயர்ந்த விமானம் கொண்டுள்ளது. அதன்முன்னர் இடைநாழி அர்த்தமண்டபம் முகப்பு மண்டபம் உள்ளது. அதில் தெற்கு நோக்கிய அம்பிகை சன்னதி இணைகிறது. முகமண்டபத்தின் வெளியில் நந்தி மண்டபம் அடுத்து உயர்ந்த கொடிமரம் உள்ளது. பிரகார சுற்றில் கோஷ்டங்களில் தக்ஷ்ணமூர்த்தி உள்ளார். முகப்பில் சிம்ம தாங்கு தூண்கள் கொண்டு ஒரு முகப்பு மண்டபம் உள்ளது. வடக்கில் துர்க்கை மட்டும் உள்ளார். பிரகார சிற்றாலயத்தில் விநாயகர் முருகன் உள்ளனர். வடகிழக்கில் நவகிரக மண்டபம் உள்ளது. ஐயப்பனுக்கு ஒரு சிற்றாலயம் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது. இது சமீபத்தியதாக இருக்கலாம், மதில் சுவரை ஒட்டி, தெற்கு நோக்கி மாடத்தில் இருப்பது யாரென விளங்கவில்லை மேற்கு நோக்கிய மாடங்களில் பைரவர் சூரியன் சந்திரன் உள்ளனர்.
தலம் தீர்த்தம் மூர்த்தி சிறப்பு என்பது மட்டுமன்றி, ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி தொடங்கி பல மகான்கள், மகாராஜாக்கள் லட்சக்கணக்கான ராமேஸ்வர யாத்ரிகர்கள் பாதம் பட்ட மண். இதில் நம் காலடி பதிவதும் சிவானுக்ரஹம் தான்.
நன்றி🙏 வலைதள பதிவுகளில் இருந்து ....
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
#சுப்ராம்🔱🇮🇳
ஆலயம் நகரின் மத்தியில் புனருத்திரானம் செய்யப்பட்டு உள்ளது
இவ்வாலயம் ஒட்டி மிகப்பழமையான பெரிய வளாகத்துடன் உள்ள அன்ன சத்திரம் வேதணையான நிலையில் உள்ளது. கருவரையில் ஜெயவீர ஆஞ்சனேயருடன் ஆலயம் ஒன்றும் சிதைந்து சிர் செய்ய வேண்டிய நிலையில் காணப்படுகிறது.
இது பெரிய சத்திரமாக இருந்ததாகவும், இதன் காலத்தில் மிகச்சிறப்பாக பராமரிக்கப்பட்டு வபத்தர்கள் தங்கி செல்ல வசதியாக அன்னதான சத்திரமாக இருந்ததாகவும் வரலாறு. 20 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் தானமாக பிரதாப் சிம்ம மகராஜா கொடுத்ததாகவும், அதைக் கொண்டு ஸ்ரீ சேதுபாவா சுவாமிகள் ராமேஸ்வரம் செல்லும் பக்தர்கள் தங்கி செல்ல நித்ய அன்னதானம் செய்து வந்த வரலாறும், உள்ளது. வருமாணம் கொண்டு, அன்னதானமும், ஆலய பராமரிப்பும், ஆலய விழாக்களும் நடைபெற்று வந்ததாகவும் குறிப்புகள் உள்ளன. 1739 ம் ஆண்டு முதல் 1949 வரை சுற்றிலும் உள்ள பல்வேறு கிராமங்களிலிருந்தும் பிற இடங்களில் இருந்தும் நெல் வருவாய் பெற்று சீரோடு விளங்கியதற்கு குறிப்புகள், இதற்கான ஆவனங்கள் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் இருக்கின்றன என்ற குறிப்புகள் ஆலயத்தில் காணப்பெறுகிறது.
இந்த இடத்தில் இருந்து கொண்டு தான் அருகில் உள்ள ஸ்ரீ விசாலாட்சியம்பாள் சமே ஸ்ரீகாசி விஸ்வநாதர் சிவாலயம் எழுப்பப்பட்டிருக்கிறது என்று கூறுகிறார்கள்.
வாய்ப்பும் வசதியும் உள்ளவர்கள் பலன் வேண்டி அவசியம் தரிக்க வேண்டும்.
12.04.2026
நன்றி🙏
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#TempleWorshipisTrulyVirtuous🙆🏼🔱
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#BharatisSpiritualZenith🕉️🏔️,
ECR - தலங்கள் - பேராவூரணி அருகில்
No comments:
Post a Comment