தான்தோன்றி ஈஸ்வரர் சிவன் கோவில், பேலூர், சேலம்
அருள்மிகு அறம்வளர்த்த அம்மை உடனுறை தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில், பேளூர்,சேலம்.பேலூர், தமிழ்நாடு 636104
🍀சேலம் மாநகரில் இருந்து 30 கிலோமீட்டர் தூரத்திலும், வாழப்பாடியில் இருந்து வடக்கில் 6 கிலோமீட்டர் தூரத்திலும், அயோத்தியாப்பட்டணத்தில் இருந்து கிழக்கே 18 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ள பேளூரில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.
தனிச்சிறப்பு:
💥தேவார வைப்புத்தலம்.
💥கனம் புல்ல நாயனார் தலம்.
💥முனிவர் வசிஷ்டரால் நிறுவப்பட்ட பஞ்ச பூத ஸ்தலங்களில் இதுவும் ஒன்று .
💥வசிஷ்டர் மிகப் பழமையான மற்றும் மிகவும் மதிக்கப்படும் வேத ரிஷிகள் அல்லது முனிவர்களில் ஒருவர், மேலும் சப்தரிஷிகளில் (ஏழு பெரிய ரிஷிகள்) ஒருவர்.
💥சப்தரிஷிகள்: அத்ரி, பரத்வாஜர். கௌதம மகரிஷி, ஜமதக்னி, காஷ்யபர். வசிஷ்டர் மற்றும் விஸ்வாமித்திரர்.
💥ரிக்வேதத்தின் 7வது மண்டலத்தின் தலைமை ஆசிரியராக வசிஷ்டர் கருதப்படுகிறார் . ஆதி சங்கரரால் அவர் இந்து தத்துவப் பள்ளியின் முதல் முனிவர் என்று அழைக்கப்பட்டார். யோக வசிஷ்டர் , வசிஷ்ட சம்ஹிதை , அத்துடன் அக்னி புராணம் மற்றும் விஷ்ணு புராணத்தின் சில பதிப்புகள் அவருக்குக் காரணம்.
💥வசிஷ்டர் முனிவர் பின்வரும் பஞ்ச பூத ஸ்தலங்களை நிறுவியதாக நம்பப்படுகிறது:
1) தான்தோன்றி ஈஸ்வரர் சிவன் கோயில், பேளூர், சேலம் (நிலம்)
2) சாம்பமூர்த்திஸ்வரர் கோயில், ஏத்தாப்பூர் (தண்ணீர்)
3) கோட்டை காயநிர்மலேஸ்வரர் கோயில், ஆத்தூர் கோட்டை (அக்னி – நெருப்பு)
4) ஸ்ரீ காமநாத ஈஸ்வரர் கோவில், ஆறகளூர் ,ஸ்ரீ கர்மன் கோயில். (காற்று )
5) ஸ்ரீ ஸ்வர்ணபுரீஸ்வரர் கோவில், கூகையூர்,
(வானம்)
ஒரே நாளில் 5 ஆலயங்களையும் தரிசித்தல் சிறப்பு என்ற வகையில் தரிசித்து வந்தோம்.
💥 பேளூரில் உள்ள தான்தோன்றி ஈஸ்வரர் சிவன் கோவிலானது பஞ்சபூத தலங்களில் நிலம் குறிக்கும் தலமாக கருதப்படுகிறது.
ஆலய சிறப்பு:
🌟சேலம் வாழப்பாடி அருகே, வசிஷ்ட நதிக்கரையில் அமைந்துள்ள ஒரு பழமையான கோவில் ஆகும். பேளூரில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.
🌟இந்த ஆலயத்தில் உள்ள சிவலிங்கமானது உளி படாமல் சுயம்புவாக தானே தோன்றியதால் இவர் தான்தோன்றீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
🌟இந்தக் கோயில் 1000 ஆண்டுகளுக்கும் மேலானது. வரலாற்றுப் பெயர் வேள்வியூர். பிரம்மாண்ட புராணம் சமஸ்கிருதத்தில் உள்ள 18 புராணங்களில் ஒன்றாகும், இது பெரிய துறவி வேத வியாசரால் எழுதப்பட்டது. இந்த புராணத்தின் 130வது அத்தியாயத்தில், சுதாமுனி தனது சீடர்களுக்கும் பிற துறவிகளுக்கும் இறைவனின் மகிமையையும்
இந்த கோயிலையும் விவரித்தார்.
🛕மூலவர்: தான் தோன்றி ஈஸ்வரர்; அம்பாள் : அறம் வளர்த்த அம்மை (தர்மசம்வர்த்தினி.)
🛕தல விருட்சம்: மா, பலா, இலுப்பை அனைத்தும் ஒரே மரத்தில். கோவிலில் உள்ள சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக இருக்கிறார் (சுயரூபம்).
🔰தலபுராணம்
🍃புராணத்தின் படி, அர்ஜுனன் தனது யாத்திரையின் போது அருகிலுள்ள தீர்த்தமலைக்கு வந்து சிவனை வணங்கினார். விஷ்ணு பகவான் சிவனின் வழிபாட்டு சிந்தனையுடன் தனது அம்பைப் பயன்படுத்துமாறு அவருக்கு அறிவுறுத்தினார். அவரது வழிபாட்டிலும், அம்பு எய்தலிலும் மகிழ்ச்சியடைந்த சிவபெருமான், தனது கட்டுப்பாட்டில் உள்ள கங்கை நீரில் பத்தில் ஒரு பங்கைப் பிரித்தார். அது வெள்ளாறு - வெள்ளை நதியாகப் பாய்ந்த படிக வெள்ளை நீர்.
🍃வசிஷ்டர் முனிவர் தனது யாகத்தால் அந்த இடத்திற்கு மேலும் நற்பெயரைச் சேர்த்தார். ஐந்து பஞ்ச பூதங்களையும் சிவலிங்கமாக வடித்து நதியின் 5 இடங்களில் பிரதிஷ்ட்டை செய்து பூசித்தார்.
🍃மற்றொரு புராணத்தின் படி,
🌱பல வருடங்களுக்கு முன்பு இந்தப் பகுதியில், மிளகு வியாபாரம் செய்து கொண்டிருந்த மாணிக்கம் செட்டியார், அவரது மிளகு வியாபாரத்திற்காக தினமும் மிளகு மூட்டைகளை மாட்டு வண்டியில் ஏற்றிச் சென்று சந்தையில் விற்று வருவார். ஒரு நாள், தற்போது சன்னதி அமைந்துள்ள அடர்ந்த காட்டைக் கடந்து சென்று கொண்டிருந்தார். கலைப்பு ஏற்பட்டதன் காரணமாகவும், இருள் சூழ்ந்ததாலும், அவர் ஓய்வெடுக்க விரும்பினார். அப்போது சமையல் செய்ய சுண்டைக் காய்களை ஒரு கல்லில் நறுக்கும்போது ஒரு குரலானது அவருக்கு கேட்டது. 'எனக்கு கல்லடி பட்டு தலை வலிக்கிறது, உன் மிளகை அரைத்து பற்று போடு' என்றபடி குரல் ஒலித்தது.
🌱மனிதர்களே இல்லாத இடத்தில் குரல் மட்டும் வருவதை கேட்டு பயந்த அந்த வியாபாரி, பயத்தில் 'என்னிடம் மிளகு இல்லை உளுந்து தான் இருக்கின்றது' என்று கூறிவிட்டு ஊருக்கு திரும்பி விட்டார். வீட்டிற்கு வந்ததும் மிளகு மூட்டைகளை திறந்து பார்த்தால் அதிர்ச்சி அடைந்தார். மிளகு முழுவதும் உளுந்தாக மாறி இருந்தது. அதிர்ச்சி அடைந்த அந்த வியாபாரி மீண்டும் அந்தக் குரல் ஒலித்த இடத்திற்கே சென்று இறைவனை வேண்டினார். அப்பொழுது மறுபடியும் அந்த குரல் ஒலித்தது.
'நீ சுண்டக்காய் நறுக்கிய இடத்திலிருந்து மண்ணை எடுத்து உளுந்தின் மீது தூவு' என்று கூறியது அந்த குரல்.
🌱இதன்படி செய்ய உளுந்து மீண்டும் மிளகாக மாறியது. இதன் பிறகு தான் அந்த வியாபாரி, தான் சுண்டக்காய் நறுக்கிய கல்லை உற்று நோக்கினார். அது ஒரு சுயம்பு வடிவமான லிங்கம் என்று தெரியவந்தது. இதன் காரணமாகத் தான் அந்த மிளகு செட்டியார் இந்த கோயிலை கட்டியதாக ஒரு வரலாறு கூறுகிறது.
🌱 இன்றளவும் அந்த மலையில் உள்ள மண் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் மிளகு உளுந்தாக மாறிய இடம் உளுந்தூர்பேட்டை என்று அழைக்கப்படுகிறது. அன்றிலிருந்து அந்த இடம் அதன் பெயரைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
🌱வரலாற்றின் படி உள் கருவறை மிலாகு (மிளகு) செட்டியாரால் கட்டப்பட்டது; மீதமுள்ளவை, மன்னர் பராந்தக சோழனால் கட்டப்பட்டது.
கனம்புல்ல நாயனார் - அவதார தலம்
🌱கனம்புல்லர், ஸ்ரீ தான்தோன்றீஸ்வரரின் தீவிர பக்தர். இந்தக் கோயிலில் விளக்கு ஏற்றுவதையே தனது முதன்மையான கடமையாகக் கருதி, மிகுந்த அர்ப்பணிப்புடன் அதைச் செய்தார். அவர் ஒரு கடினமான கட்டத்தை கடந்து தனது செல்வத்தையெல்லாம் இழந்தார். வறுமை அவரைத் திருப்பூலீஸ்வரத்திற்கு அழைத்துச் சென்றது, அங்குள்ள ஒரு சிவன் கோவிலில் விளக்கு ஏற்றி வைத்தார். தனது வாழ்க்கைக்கு, கனம்புல் என்ற ஒரு வகையான புல்லை வெட்டி சந்தையில் விற்று வந்தார். தனது சொற்ப வருமானத்தை எண்ணெய் மற்றும் திரிகளுக்குச் செலவிட்டார்.
🌱சிவபெருமான் அவரது பக்தியைச் சோதிக்க முடிவு செய்தார். ஒரு நாள் அவரது புல் விற்கப்படவில்லை, மேலும் விளக்குகளை ஏற்ற எண்ணெய் மற்றும் திரி வாங்க அவரிடம் போதுமான பணம் இல்லை. அவர் தனது முடியின் சுருட்டைகளை விளக்கில் திரியாகப் பயன்படுத்தி அதை ஏற்றினார். கனம்புல்லரின் உயர்ந்த பக்தியால் மிகவும் மகிழ்ச்சியடைந்த சிவன், அவருக்கு தரிசனம் அளித்தார், அவர் கடவுளுடன் ஐக்கியமானார்.
🌱பிரதோஷ நந்திக்கு முன்னால் உள்ள இந்த கோவிலில் விளக்கை ஏந்தியிருக்கும் கனம்புல்லரின் சிலையைக் காணலாம். அவர் நாயன்மார்களில் 48வதவார்.
ஆலய அமைப்பு
🌟இந்த ஆலயத்தில் உள்ள சிவலிங்கமானது உளி படாமல் சுயம்புவாக தானே தோன்றியதால் இவர் தான்தோன்றீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
🌟அம்பாள் ‘அறம் வளர்த்த நாயகி’ என்ற பெயரில் ஈசனின் சன்னிதிக்கு இடதுபுறம் தனிச்சன்னிதியில் வீற்றிருக்கிறார்.
🌟மூலவரான தான்தோன்றீஸ்வரர் சுயம்புலிங்கமாக கிழக்குநோக்கி காட்சி தருகிறார். இவரை வணங்கினால் கல்வி, செல்வம், உத்தியோக உயர்வு கிடைக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.
🌟இந்த ஆலயம் 97 அடி உயர கோபுரத்துடன் கம்பீரமாக காட்சியளிக்கிறது. கோயிலின் முன்பகுதியில் உள்ள பதினாறு கால் மண்டபத்தில், யாழி மற்றும் குதிரைவீரன் சிற்பங்கள் கலை நுணுக்கத்துடன் அழகாக செதுக்கப்பட்டுள்ளன. மேலும் பஞ்சபூத லிங்கங்கள், அறுபத்து மூவர், குபேரலிங்கம், தட்சிணாமூர்த்தி, சகஸ்ரலிங்கம், ஆறுமுகசாமி, கஜலட்சுமி, ஜேஷ்டாதேவி, துர்க்கை, பிச்சாடனர், காலபைரவர் போன்ற சன்னிதிகளும் உள்ளன. வன்னி மரத்தடியில் நவக்கிரகங்கள் வீற்றிருக்கின்றன. சனீஸ்வரர் காக வாகனத்தில் ஒற்றைக்காலுடன் நின்றபடி காட்சி தருவது சிறப்பம்சமாகும்.
தலவிருட்சம்
🪷மா, பலா, இலுப்பை இந்த மூன்று மரமும் சேர்ந்து ஒரே மரமாக காட்சியளிக்கிறது. கோவிலின் தலவிருட்சமான இந்த மரம் கோவிலுக்கு மற்றொரு சிறப்பு.
குபேரலிங்கம்
🪷வசிட்டர் உலக நலனுக்காக தவம் செய்ய முன்வந்தார். அப்போது குபேரன், தாமரை பீடத்தில் எழுந்தருளிய சிவபெருமானை வணங்கி பொன் மாரி பொழிந்தார். இதனை நினைவுறுத்தும் வகையில், தாமரையில் எழுந்தருளியுள்ள குபேரலிங்கத்தை ஆலயத்தில் தரிசிக்கலாம்.
சூரிய பூசை
🪷சூரிய கதிர்கள்: ஆண்டுதோறும் சித்திரை 3-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை, சூரியன் தனது ஒளிக்கதிர்களால் மூலவரை வழிபடுவது சிறப்புக்குரியது; பிரசித்தி பெற்றது.
திருமண பரிகாரம்:
🪷இந்தக் கோவிலில் கல்யாண விநாயகர் என்று அழைக்கப்படும் வலம்புரி விநாயகர், இடம்புரி விநாயகர் என இரட்டை விநாயகர்கள் உள்ளனர். சங்கட சதுர்த்தி அன்று இந்த இரட்டை விநாயகரை அருகம்புல் அல்லது வெள்ளெருக்கு மாலை சூட்டி வழிபட்டு வந்தால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம். இந்த விநாயகர் சன்னதி முன்பாகவே திருமணங்கள் நடைபெறும். இந்த கோவிலில் வசிஷ்டரும், அருந்ததியும் நேரடியாக இருந்து ஆசிர்வாதம் செய்வதால், அம்மி மிதித்து அருந்ததி பார்க்கும் சடங்கு இங்கு கிடையாது.
🪷திருமண தடை நீங்க இந்த கோவிலில் சிறப்பு பரிகாரங்கள் செய்யப்படுகின்றன. இங்குள்ள கல்யாண விநாயகர் சிலைக்கு பூமாலை சாத்தினால் திருமணம் விரைவில் நடக்கும் என்பது நம்பிக்கை.
சிற்பங்கள்: ஒரே கல்லில் செய்யப்பட்ட குதிரை வாகனம், சூலாயுத சிற்பம், யாழி வாயில் உருண்டைக்கல் உருள்வது போன்ற அரிய சிற்பங்கள் இங்கு உள்ளன.
🪷இந்த கோவில் 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த நான்கு கால் கல்தூண் மண்டபம் போன்ற வரலாற்று சிறப்பு மிக்க அம்சங்களைக் கொண்டுள்ளது.
🌿தீர்த்தம் - வசிட்ட நதி.
🍁விழாக்கள்
🪴இங்கு தமிழ் புத்தாண்டு, சித்ரா பௌர்ணமி, திருவாதிரை, பங்குனி உத்திரம், ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, ஆருத்ரா தரிசனம், சிவராத்திரி, நவராத்திரி போன்ற விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
🪴இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந் திருக்கும்.
⛳#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
🍁2017ல் இந்த பஞ்சபூத தலங்கள் சென்று தரிசிக்கும் வாய்ப்புக்கிடைத்தது. மீண்டும் 9.11.2025 ல் மறுவாய்ப்பாக இந்தப் பயணம் அமைந்தது, இறையருளே.
(ஒரே நாளில் 5 ஆலயங்களையும் தரிசித்தல் சிறப்பு என்ற வகையில் தரிசித்து வந்தோம்)
🍁ஆலயம் கிழக்கு நோக்கிய முழுவதும் கற்றளி அமைப்பில் உள்ளது.
ராஜகோபுரம் கடந்து உள்ள முன்மண்டப தூண்கள் எழில்மிக்க அபூர்வ சிற்பங்கள் கொண்டவை.
🍁முன்மண்டபம் கடந்து உள்மன்டபம், நிறுத்த, அர்த்தமண்டபம், கருவரையில் சுயம்புலிங்கம் - தான்தோன்றீஸ்வரர் கிழக்கு நோக்கி அருள்தருகிறார்.
🍁காலையில் 6.00 மணி அளவில் இந்த ஆலயம் வந்து சேர்ந்தோம். ஆலயம் மீண்டும் திருப்பணிகள் வேலைகள் நடந்து கொண்டு இருக்கின்றன. சுவாமி, அம்பாள், சண்டிகேஸ்வரர் முதலிய சன்னதிகள் தவிர எல்லா சுவாமி சிலைகளிலும் துணி போட்டு மூடி திருப்பணி வேலைகள் நடைபெறுகின்றன.
ஆலயத்தின் தென்புறத்தில் 63 மூவர் மற்றும் ஒரு சிவலிங்கம், நந்தியுடன் உள்ளது.
வடகிழக்கில் கனம்புல்ல நாயனார், பிட்சாண்டவர், கால பைரவர் இவர்களுக்கு ஏகமண்டபம் அமைத்து உள்ளனர். வட கிழக்கில் நிலம் வழங்கிய நன்கொடை கல்வெட்டு ஒன்றும் காணப்படுகிறது.
🍁ஆலயம் நல்ல வழிபாடு பராமரிப்பில் உள்ளது.
🙇நன்றி🙏
🛕#சுப்ராம்ஆலயதரிசனம் 9.11.2025🛐
# என்றும்அன்புடன்💟
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று🙇🛕
#ஆன்மிகபரதம்அகிலத்தின்சிகரம்🇮🇳🗻
⛳ #பிரதோஷேக்குழுயாத்ரா -
சேலம் 8, 9 நவம்பர், 2025.
🛕 #ஆன்மீகதலயாத்திரை:
நன்றி🙏 9.11.2025
🕊️🔱🛐🙏🇮🇳🙇⛳🛕🌏🗻
No comments:
Post a Comment