Monday, November 24, 2025

கோட்டை காயநிர்மலேஸ்வரர் கோவில், ஆத்தூர் கோட்டை (அக்னி - தீ) - சேலம் - பஞ்சபூத தலங்கள் - பிரதோஷக்குழு யாத்ரா .9.11.2025

கோட்டை காயநிர்மலேஸ்வரர் கோவில், ஆத்தூர் கோட்டை (அக்னி - தீ)
கோட்டை காயநிர்மலேஸ்வரர் கோவில், ஆத்தூர் கோட்டை, ஆத்தூர், தமிழ்நாடு

🛕ஆத்தூர் காய நிர்மலேசுவரர் கோயில் தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.

💥அமைவிடம்
சேலத்தில் இருந்து 52 கிலோமீட்டர் தூரத்தில் ஆத்தூர் உள்ளது. ஆத்தூர் பஸ்நிலையத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் கோட்டை என்னும் பகுதியில் காயநிர்மலேஸ்வரர் ஆலயம் இருக்கிறது

🛕மூலவர் : காயநிர்மலேஸ்வரர் (கறையற்ற உடல்) / வசிஷ்டேஸ்வரர் (ஒரு சுயம்பு லிங்கம்)
அம்பாள் : அகிலாண்டேஸ்வரி ; 
ஸ்தல விருட்சம் : வில்வம் மரம் ; 
தீர்த்தம் : வசிஷ்ட நதி. 

தல சிறப்புகள்:

💥இது வசிஷ்ட முனிவரால் நிறுவப்பட்ட பஞ்ச பூத ஸ்தலங்களில் மூன்றாவதாகும்.  நெருப்பு (அக்னி) தலம் ஆகும் . 

💥வசிஷ்டருக்கு ஜோதி வடிவாக இறைவன் காட்சியளித்ததால் இத்தலத்தினை அக்னித் தலம் என்று கூறுகின்றனர். 

💥தீபாராதனையின்போது தீபத்தின் ஒளி லிங்கத்திருமேனியின் மேல் அழகாகக் காட்சியளிக்கிறது.

💥வசிட்டரால் ஸ்தாபிக்கப்பட்ட பஞ்சபூத ஆலயங்கள் :
1) தான்தோன்றீஸ்வரர் சிவன் கோவில், பேலூர், 
2) சாம்பமூர்த்திஸ்வரர் கோவில், ஏத்தாப்பூர்.
3) கோட்டை காயநிர்மலேஸ்வரர் கோவில், ஆத்தூர் கோட்டை 
4) ஸ்ரீ காமநாத ஈஸ்வரர் கோவில், ஆறகளூர்
5) ஸ்ரீஸ்வர்ணபுரீஸ்வரர் கோவில், கூகையூர்

💥சுவேதநதி, மலையாறு, சிற்றாறு என பல நதிகள் இருந்தன. இதனால் இந்த ஊர் ‘ஆற்றூர்’ என்றழைக்கப்பட்டது. இதுவே நாளடைவில் ‘ஆத்தூர்’ என மருவியது. மகரிஷியான வசிஷ்டர் இந்தத் திருத்தலத்தில் யாகங்கள் நடத்தியதால், இங்குள்ள இறைவனுக்கு ‘வசிஷ்டேஸ்வரர்’ என்ற பெயரும் உண்டு. அதேபோல இந்த ஊரை அனந்தன் என்னும் அரசன் ஆண்டு வந்ததால் இத்தல இறைவன் ‘அனந்தேஸ்வரர்’ என்றும் அழைக்கப்படுகிறார். இந்த ஊருக்கும் அனந்தகிரி, வசிஷ்டபுரம் என பெயர்கள் உண்டு

தலபுராணம் - 1.

🌟புராணத்தின்படி, ராமரின் குல குருவான வசிஷ்ட முனிவர் சிவபெருமானுக்கு தவம் மற்றும் பூஜைகள் செய்ய இங்கு வந்தார். 

🌟அவரது தவத்திற்கு அசுரர்களால் பல இடையூறுகள் வந்தன அவர் பல தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. நல்ல தண்ணீர் மற்றும் பூக்களால்  சிவனை வணங்க சோதனைகளைக் கடக்கலாம் என 
மகரிஷி நாரதர் முனிவர் கூறியதன் அடிப்படையில், வசிட்டர், தமது தவவலிமையால் ‘வசிஷ்டநதி’ என்ற தீர்த்தத்தை உருவாக்கினார். 

💥பின்னர் பூஜை செய்ய தகுந்த இடம் தேடினார்;
அப்போது, மேடான ஓரிடத்தில் அவரது கால் பட்டு இடறியது. இதனால் அதிர்ச்சி அடைந்த வசிஷ்டர் அந்த இடத்தைப் பார்த்தபோது, சுயம்பு லிங்கம் ஒன்று இருப்பதைக் கண்டார். அவரது கால் பட்டு லிங்கத்தின் ஒருபகுதி சேதமடைந்து இருப்பதை கண்டு கலங்கினார். பழுதுபட்ட லிங்கத்தை சிவபூஜைக்கு பயன்படுத்தலாமா? எனத் தயங்கினார். அந்த நேரத்தில் இறைவன் அசரீரியாக, ‘வசிஷ்டரே! நீர் தயங்காமல் பூஜை செய்யும். நிறைவாக தீபம் காட்டுகையில் ஓர் அதிசயம் நிகழும்’ என்று கூறினார்.

💥 இதனால் மகிழ்ந்த வசிஷ்டர், அந்த சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து அர்ச்சனை, ஆராதனைகள் செய்தார். நிறைவாக சிவலிங்கத்துக்கு அவர் தீபாராதனை காட்டியபோது ஜோதி சொரூபமாய் பிரகாசமான ஒளி தோன்றியது. அதன் பிரகாசத்தை தாங்கமுடியாமல் வசிஷ்டர் கண்களை ஒரு விநாடி மூடித் திறந்தார். அப்போது பழுதடைந்து இருந்த லிங்கமேனி, குறை ஏதும் இல்லாத பளபளப்பான லிங்கமாக மாறி இருந்தது. வசிஷ்டர் தாம் ஏற்றி வைத்த தீபஒளியே லிங்கத்தின் மீது பட்டு பேரொளியாய் திகழ்வதை கண்டு பிரமித்தார். அவர் பார்த்துக்கொண்டிருந்த போதே அந்த ஒளி வசிஷ்டரின் தவத்திற்கு இடையூறு செய்த அசுரர்களை அழித்தது.

💥முனிவர் இறைவனை அங்கேயே தங்கி மக்களின் மனதில் உள்ள மாயை இருளை விரட்டும்படி கெஞ்சினார்

💥காயம்’ என்றால் ‘உடல்’ என்று பொருள். ‘நிர்மலம்’ என்றால் ‘பழுது இல்லாதது’ என்று அர்த்தம். லிங்கத் திருமேனியில் இருந்த குறையை நீக்கி வசிஷ்டருக்கு காட்சி தந்ததால், இங்குள்ள இறைவன் ‘காயநிர்மலேஸ்வரர்’ என்று அழைக்கப்பட்டார். 

💥மேலும் இறைவன் வசிஷ்டருக்கு ஜோதி சொரூபமாய் அருள்பாலித்ததால் இந்த திருத்தலத்தை ‘அக்னி ஸ்தலம்’ என்றும், லிங்கத்தை ‘தேயுலிங்கம்’ (நெருப்பு) என்றும் அழைக்கிறார்கள்.

🌟மன்னர்கள், பிரபுக்கள் மற்றும் பக்தர்களின் புனிதமான சேவைகளால் கோயில் வளரத் தொடங்கியது. இன்று அது அளவிலும் புகழிலும் கம்பீரமாக நிற்கிறது.

தலவரலாறு

🍃கி.பி.905-945 வரை தஞ்சையை ஆண்ட முதல் பராந்தக சோழன், இந்தக் கோவிலில் கர்ப்பக்கிரகம், அர்த்த மண்டபம், மகாமண்டபம் ஆகியவற்றை கட்டியதாக கூறுகிறார்கள். 

🍁அதன் பிறகு இந்த பிரதேசத்தை ஆனந்தர் என்ற மன்னர் ஆட்சி செய்தபோது, ​​அந்த நகரமும் அதன் தலைமை தெய்வமும் அவரது பெயரால் முன்னாள் ஆனந்தகிரி என்றும், பிந்தைய ஆனந்தேஸ்வரர் என்றும் பெயரிடப்பட்டன. 

🛐கனவில் வந்த இறைவன் : 

🌻பல ஆண்டுகளுக்கு பின் கெட்டி முதலி என்ற குறுநில மன்னன் இந்தப் பகுதியை ஆட்சி செய்தான். அவன் தினமும் எம்பெருமானை வணங்கிய பிறகே எந்தச் செயலையும் செய்வான். அப்போது, கோயிலும் நகரமும் இடிந்து விழுந்த நிலையில் இருந்ததாகத் தோன்றியது. ஒருநாள் அவனது கனவில் இறைவன் காட்சி தந்ததாகவும், இறைவனது திருமேனி அழகை கண்டு வியப்புற்று கோயிலைப் புதுப்பிப்பதற்கும் கோட்டை நகரத்தை மீண்டும் நிறுவுவதற்கும் ஏற்பாடுகள் செய்யும் போது, கோயிலில் புதையல் கண்டுபிடிக்கப்பட்டது.  புதுப்பித்தலுக்குப் பிறகு, மூலவரை காயநிர்மலேஸ்வரர் மற்றும் அவரது துணைவியார் அகிலாண்டேஸ்வரி என்று அழைக்கப்பட்டது.

🌟கெட்டி முதலி காலத்தில் ஆத்தூர் கோட்டை, மதிற்சுவர், அகழி, மூன்று நெற்களஞ்சியங்கள், அரண்மனை நீராழிமண்டபம் ஆகியவை அமைக்கப்பட்டது.

ஆலய அமைப்பு

🏵️ஆத்தூர் கோட்டையில் கிழக்கு நோக்கியவாறு ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் இந்தக் கோவில் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. ஒரு முகப்பு மண்டபமும் உள்ளது.

🌼கருவறைக்கு முன்னால் செவ்வக வடிவில் அர்த்தமண்டபம் அமைந்துள்ளது. எட்டு தூண்களால் தாங்கப்பட்ட அர்த்தமண்டபத்திற்கு முன்னால் மகாமண்டபம் அமைந்துள்ளது.

ஒளிரும் சிவலிங்கம் :
🍁கருவறையில் மூலவர் காயநிர்மலேஸ்வரர் பிரகாசமாக அருள்பாலிக்கிறார். .

🌟 திருவண்ணாமலைக்கு இணையாக கருதப்படும் இந்தக் கோவிலில், வெளியே எவ்வளவுதான் பனி, மழை இருந்தாலும் கருவறை எப்போதும் வெப்பமாகவே இருப்பதை உணரலாம். மூலவரான காயநிர்மலேஸ்வரருக்கு அபிஷேகம் முடிந்து தீபாராதனை காட்டும் போது, அந்த தீபத்தின் ஒளி பல மடங்காக பிரகாசித்து ஒளிர்வது அதிசயமான ஒன்றாகும். 

🌻சுவாமிக்கு வலது பின்புறத்தில் முதல் பிரகாரத்தில், கிழக்கு நோக்கியபடி அம்பாள் அகிலாண்டேஸ்வரி தனி சன்னிதியில், நான்கு திருக்கரங்களுடன் உலக உயிர்களை காக்கும் வகையில் கருணை மிளிர காட்சி தருகிறார்.
இதில் தெய்வம் ஐந்தரை அடி நிற்கும் கோலத்தில், பக்தர்களை ஆசீர்வதிக்கும் வலது கையை உயர்த்தி, இடது கையை கீழே வைத்துள்ளது. விமானம் சதுர வடிவில் மாடி வரை உள்ளது, 

🌟கர்ப்பிணி பெண்கள் இத்தல அம்மனை வழிபட்டு, குங்குமத்தை நெற்றில் இட்டுக் கொண்டால் சுகப்பிரசவம் ஆகும் என்பது நம்பிக்கையாக உள்ளது. 

🌟காயநிர்மலேஸ்வரரை வணங்குவோர் வாழ்க்கை ஒளி விட்டு பிரகாசிக்கும் என்பது ஐதீகம். மேலும் இந்த ஒளியால்தான் அன்னை அகிலாண்டேஸ்வரியே பிரகாசிப்பதாக கூறப்படுகிறது. இதனால் அன்னையின் சிலையில் ஒருவித ஈர்ப்பு உள்ளதை இன்றும் காணலாம். அம்பிகை இன்முகத்தோடு, கருணை ததும்ப காட்சி அளிப்பது தத்ரூபமாக இருக்கும்.

தரிசனபலன்கள்
காயநிர்மலேஸ்வரரையும், அகிலாண்டேஸ்வரியையும் வழிபட்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு மணமாலையும், திருமணம் ஆனவர்களுக்கு குழந்தை வரமும் தேடி வரும். நாள்பட்ட நோய்கள் தீரும். 

அதிசய தட்சிணாமூர்த்தி சன்னிதி : 

இந்தக் கோவில் வளாகத்தில் தட்சிணாமூர்த்தி தனி சன்னிதியில் எழுந்தருளியுள்ளார். பொதுவாக எல்லா சிவாலயங்களிலும் தட்சிணாமூர்த்தி மரத்தின் அடியில் அமர்ந்து சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாரர் ஆகிய நான்கு பேருக்கு வேத ஞானத்தை அருளும் வகையில் காட்சி அளிப்பார். ஆனால் ஆத்தூர் காயநிர்மலேஸ்வரர் கோவிலில், குரு தட்சிணாமூர்த்தி ரிஷப வாகனத்தில் அமர்ந்து சப்தரிஷிகள் 6 பேருக்கு வேதத்தை அருள்வது போன்று காட்சி தருகிறார். இவர்களில் 3 பேர் அமைதியாகவும், 3 பேர் தங்களது சந்தேகங்களை கேட்டு அதற்கு விளக்கம் பெறும் விதமாகவும் இந்த சிலை வடிக்கப்பட்டுள்ளது. தட்சிணாமூர்த்தியின் இந்த கோலம் மிகவும் அதிசயமான ஒன்றாக கருதப்படுகிறது.

 🏵️இரண்டு அடி உயர வெண்கல நடராஜர் சிலையும், ஒரு அடி உயர சிவகாமி அம்மன் சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. மகாமண்டபத்தின் வடகிழக்கு மற்றும் தென்கிழக்கு மூலையில் முறையே காலபைரவர் மற்றும் சூரிய சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. 

🏵️மகாமண்டபத்தின் நடுவில் மூன்று அடி உயர அமர்ந்த நிலையில் நந்தி  அமைந்துள்ளது
மகா மண்டபத்திற்கு முன்பாக முன் மண்டபம் அமைந்துள்ளது. வலம்புரி விநாயகர் மற்றும் முருகனின் கருங்கல் சிலை அமைந்துள்ளது. 

 🌻கருவறை பிரகாரத்தில் விநாயகர் அநேக வடிவங்களில் விதவிதமான பெயர்களுடன் அருள்பாலிக்கிறார்கள்.  

🌟பஞ்சபூதத் தலங்களில் அருளும் இறைவன், இறைவி, வள்ளி தெய்வானையுடன் முருகன், சதுர்புஜ பைரவர், அஷ்டபுஜ பைரவர், சுவர்ண ஆகார்ஷன பைரவர், மகாலட்சுமி,  மஹா 
சரஸ்வதி, லிங்கோத்பவா, பிரம்மா,  ஐயப்பன், கிரகங்களான சூரியன்,  மற்றும் நாகர்கள் மற்றும் நாக கன்னிகைகள் ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளன. 

🌟தனியாக நவக்கிரக சன்னிதியும் உள்ளது. 
🌼சோழர் காலத்தைச் சேர்ந்த பைரவர், மற்றும் துர்க்கை சிற்பங்கள் உள்ளன.
🏵️சனிஸ்வரர் தனி சன்னதியில் மேற்கு பார்த்து உள்ளார்
 🌼மேலும்,ஸ்ரீஆஞ்சநேயர் சன்னதியில் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பது போல் காட்சியளிக்கிறார்.

விழாக்கள்:
இந்த தலத்தில் தமிழ் புத்தாண்டு, மாதாந்திர கிருத்திகை, ஆனி திருவாதிரை, ஆடிப்பூரம், நவராத்திரி, கந்தசஷ்டி, கார்த்திகை தீபம், வைகுண்ட ஏகாதசி, ஆருத்ராதரிசனம், தைப் பூசம், மாசி சிவராத்திரி, பங்குனி உத்திரம் ஆகியவை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
பிரதோஷம், சிவராத்திரி, சோம வார விரதங்கள் உள்ளிட்ட பல விழாக்கள் நடத்தப்படுகின்றன.

🌻கோயில் காலை 7.00 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.

தலையாட்டி பிள்ளையார் : 

🛐ஆத்தூர் காயநிர்மலேஸ்வரர் கோவிலுக்கு வெளியே  கிழக்கில், சற்று தூரத்தில், ‘தலையாட்டி பிள்ளையார்’ சன்னிதி உள்ளது. முன் காலத்தில் சோழ அரசுக்கு கட்டுப்பட்ட சிற்றரசன் வானவராயன் இந்தப் பகுதியை ஆண்டுள்ளான். இந்தக் கோவிலை அவன் புனரமைத்து கட்டிய போது, இந்த விநாயகரிடம் உத்தரவு கேட்டு விட்டுத்தான் பணியைத் தொடங்கினான். இந்த விநாயகரே இத்தலத்தின் பாதுகாவலர். கோவில் வேலைகள் முடிந்தபிறகு இந்த விநாயகரிடம் வந்த மன்னன், ‘பணிகளை சிறப்பாக முடித்திருக்கிறேனா?’ என்று கேட்டானாம். அதற்கு பிள்ளையார் ‘நன்றாக கட்டியிருக்கிறாய்’ என்று சொல்லும்விதமாக தனது தலையை ஆட்டினாராம். எனவே இவருக்கு ‘தலையாட்டி பிள்ளையார்’ என்று பெயர் வந்தது. இந்த விநாயகர் தனது தலையை இடப்புறமாக சற்றே சாய்த்தபடி இருப்பதைக் காணலாம்.

🛐காயநிர்மலேஸ்வரர் கோவில் அருகில், ஆத்தூர் கோட்டை பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலும் அமைந்துள்ளது.

தகவல்: வலைதளங்கள்
நன்றி🛕

⛳#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️

🛐2017 ல் ஏற்கனவே தரிசித்துள்ளோம். இறையருளால் 9.11.2025 மீள் தரிசனம்

🛕பஞ்சபூத தலத்தில் மூன்றாவது தலம், பிரதான சாலையில் இருந்து இவ்வாலயம் ஆத்தூர் கோட்டைப் பகுதியில் உள்ளது. சாலை வசதிகள் உண்டு தலமாகிய பேளூர், ஏத்தப்பூர் தரிசித்துவிட்டு  இங்கு நேரடியாக வரலாம்.

🛕ஆலயம் உள்ள சன்னதி தெருவில் தலையாட்டி பிள்ளையார் ஆலயம் தரிசித்து வரலாம். ஆலயம் முன்புறம் வாகனம் நிறுத்தலாம்.

🛕வீடுகள் நிறைய உள்ளன. பெரிய வனிக வளாகம் எதுவும் அருகில் இல்லை.
🛕சிவன் ஆலயம் பின்புறம் சற்று தொலைவில்
பெருமாள் ஆலயம் செல்லலாம்.
🛕மற்றொரு சிவன் ஸ்ரீ கைலாசநாதர் ஆலயம் பிரதான சாலையில், திரும்பி ஆற்றுப் பாலத்தை ஒட்டி உள்ளது. 2017 ல் வந்தபோது எல்லா ஆலயங்களும் தரிசிக்க வாய்ப்புக் கிட்டியது.

🍁ஆலயம் வழிபாடு / பராமரிப்பில் உள்ளது.

🙇நன்றி🙏
🛕#சுப்ராம்ஆலயதரிசனம் 9.11.2025🛐
# என்றும்அன்புடன்💟
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று🙇🛕
#ஆன்மிகபரதம்அகிலத்தின்சிகரம்🇮🇳🗻

⛳ #பிரதோஷேக்குழுயாத்ரா 
🛕#ஆன்மீகதலயாத்திரை: 
சேலம் 8, 9 நவம்பர், 2025.
நன்றி🙏 9.11.2025
🕊️🔱🛐🙏🇮🇳🙇⛳🛕🌏🗻

No comments:

Post a Comment

உலகியநல்லூர் -அர்த்தநாரீஸ்வரர் கோயில் - சேலம் - பஞ்சபூத தலங்கள் அருகில் - பிரதோஷக் குழு யாத்ரா - 9.11.2025

உலகியநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயில்  🛕தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டம், உலகியநல்லூர் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயில் ஆகும். 🛕அ...