ஸ்ரீ காமநாத ஈஸ்வரர் கோவில், அரகளூர் - தலைவாசல் சாலை, அரகளூர், தமிழ்நாடு
🛕சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ளது ஆறகளூர் காமநாதீஸ்வரர் கோவில்.
🛕 இந்த ஆலயம் சிவத்தலமாக மட்டுமின்றி, அஷ்ட பைரவர்கள் வீற்றிருப்பதால், பைரவத் தலமாகவும் திகழ்கிறது
சிறப்புகள்
🛕வசிஷ்ட நதிக்கரையில் அமைந்துள்ள நான்காவது திருத்தலமான இது, வசிஷ்ட முனிவரால் நிறுவப்பட்ட பஞ்ச பூத ஸ்தலங்களில் வாயுலிங்க தலமாகும்.
🛕பஞ்சபூத தலங்கள் பட்டியல் : 1) தான்தோன்றே ஈஸ்வரர் சிவன் கோவில், பேலூர், சேலம்
2) சாம்பமூர்த்திஸ்வரர் கோவில், ஏத்தாப்பூர்
3) கோட்டை காயநிர்மலேஸ்வரர் கோவில், ஆத்தூர் கோட்டை
4) ஸ்ரீ காமநாத ஈஸ்வரர் கோவில், ஆறகளூர்
5) ஸ்ரீ ஸ்வர்ணபுரீஸ்வரர் கோவில், கூகையூர்
மூலவர்: ஸ்ரீ காமநாத ஈஸ்வரர், அம்பாள்: ஸ்ரீ பெரியநாயகி.
“அசிதாங்க பைரவர், குரு பைரவர், சண்ட பைரவர், குரோதன பைரவர், உன்மத்த பைரவர், கபால பைரவர், பீஷண பைரவர் மற்றும் கால பைரவர்” என எட்டு என பொருள்படும் அஷ்ட பைரவர்கள் இக்கோயிலில் இருப்பது சிறப்பம்சமாகும்.
தல சிறப்பு
ஆறு அகழிகளால் சூழப்பட்டிருப்பதால், இந்த ஊர் ‘ஆறகளூர்’ எனப்பெயர் பெற்றது. ஆறும்(நதியும்), அகழியும் உள்ள ஊர் என்பதாலும் ‘ஆறகளூர்’ எனப் பெயர் வந்ததாகவும் கூறுகின்றனர். இந்த தலம் ‘ஆறை நகர்’ என்றும் அழைக்கப்படுகிறது.
தலபுராணம்
🌟இக்கோயிலில் இருக்கும் சிவபெருமானை வசிஷ்டர் பூஜித்ததால் இந்த சிவனுக்கு வசிஸ்டேஸ்வரர் என்கிற ஒரு பெயரும் உண்டு
🌟இந்த கோயில் தல புராணங்களின் படி அசுரனான “அந்தகன்” மற்றும் அவனது அசுர படைகளால் துன்புறுத்தப்பட்ட தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட வந்த போது, அவர் தியானத்தில் இருப்பதை கண்டு அவர் தியானத்தை கலைப்பதற்கு அனைவரும் அஞ்சினர். சிறிது ஆலோசனைக்கு பிறகு தேவர்கள் அனைவரும் மன்மதனிடம் சென்று தங்களுக்காக சிவபெருமானின் தியானத்தை கலைக்குமாறு தேவர்கள் கூற, அவர்களுக்காக மன்மதன் சிவபெருமானின் மீது மலர் அம்புகளை தொடுத்து அவரின் தியானத்தை கலைத்தார். தியானம் கலைந்ததால் கோபம் கொண்ட சிவன் தனது நெற்றிக்கண் திறந்து, அதிலிருந்து வெளிப்பட்ட நெருப்பால் காமத்திற்கு நாயகனாகிய மன்மதனை அழித்ததால், இக்கோயிலின் இறைவனுக்கு “காமநாத ஈஸ்வரர்” என்கிற பெயர் ஏற்பட்டது.
மன்மதன் வழிபட்ட தலம் :
🌟இந்த ஆலயத்தின் தல விருட்சமாக மகிழ மரம் உள்ளது. இந்த மரத்தடியில் அமர்ந்துதான் இத்தல இறைவனை மன்மதன் வழிபட்டதாக தல புராணம் எடுத்துரைக்கிறது.
🌟 முருகப்பெருமானின் அவதாரத்திற்கு முன்பாக, அதாவது மன்மதனை சிவபெருமான் தனது நெற்றிக்கண்ணால் தகனம் செய்வதற்கு முன்பாகவே, மன்மதன் தனது மனைவி ரதியுடன் இத்தலத்திற்கு வந்து இறைவனை வழிபட்டுச் சென்றுள்ளான் என்று கூறப்படுகிறது. மன்மதன் வழிபட்டதன் காரணமாகவே இத்தல இறைவனுக்கு ‘காமநாதீஸ்வரர்’ என்ற பெயர் வந்தது. காமம் என்றால் விருப்பம், ஆசை என்ற பொருளும் உண்டு. தமது பக்தர்களின் விருப்பத்தை அறிந்து நிறைவேற்றி தரும் பெருமான் என்பதாலும் ‘காமநாதர்’ என்று அழைக்கப்படுகிறார்.
ஆலய அமைப்பு :
🍁 கிழக்கு நோக்கிய ஒரு நுழைவாயில் வளைவுடன் 3 அடுக்கு ராஜகோபுரத்துடன் இருபுறமும் மண்டபங்களும் கொண்டு உள்ள ஆலயம். அம்பாள் சன்னதிக்கு ஒரு தனி நுழைவாயிலும் உள்ளன.
🍀3 நிலை ராஜகோபுரத்திற்கு முன்னால் துவஜஸ்தம்பம், பலிபீடம் மற்றும் ரிஷபம் ஆகியவை உள்ளன,
🍀இது கோயிலில் ஒரு குளம் உள்ளது.
இந்த கோயிலில் இருபுறமும் இரண்டு யானைகளுடன் கஜலட்சுமி - லட்சுமிக்கு ஒரு சன்னதி உள்ளது. தனி விநாயகர் சன்னதி உள்ளது.
🍀முதல் சுற்றில் உற்சவ மண்டபம், தலவிருட்சம், பலிபீடம், நந்தி உள்ளன. கருவறை, அந்தரளம், அர்த்த மண்டபம், முக மண்டபம், 16 தூண் மண்டபம் மற்றும் 100 தூண்கள் கொண்ட மண்டபம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
🍀கருவறையில் ஆனந்த விமானம் அமைக்கப்பட்டுள்ளது. கோவில் கருவறை சதுரவடிவமானது. இறைவனின் கருவறைக்கு வடபுறம் தனிச் சன்னிதியில் பெரியநாயகி அம்பாள் அருள்பாலிக்கிறார். அம்பிகை முன்பும் ஒரு தனி ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.
🍀அம்பாளுக்கு பிரஹன்நாயகி என்ற பெயரும் உண்டு.
🍀2-ம் சுற்றின் தாழ்வறையில் சந்திர, சூரியன், பைரவர், சமயக்குரவர்கள் காட்சி தருகின்றனர். கருவறை சுற்று பிரகாரத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, அண்ணாமலையார், விஷ்ணு துர்க்கை ஆகியோர் வீற்றிருக்கின்றனர். சண்டிகேஸ்வரர், முருகன், நவக்கிரக சன்னிதிகளும் உள்ளன. இங்கு பிரம்மாவிற்கும், நடராஜருக்கும் தனித்தனி சன்னிதி இருக்கிறது.
🍀கோவிலின் வடபக்கம் அறுபத்துமூன்று நாயன்மார்களின் திருமேனிகள் காணப்படுகின்றன.
🍀இத்தலத்தில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட வள்ளி- தெய்வானை சமேத சுப்பிர மணிய சுவாமி மயில் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார்.
🍀8 பைரவர்கள் (வெவ்வேறு இடங்களில்) உள்ளது. அசிதங்கம், கால, கபால, க்ரோத, ருத்ர, ருரு, சம்ஹார மற்றும் உன்மத்த பைரவர்கள்.
சூரிய பூசை
இந்த கோயிலின் ஸ்ரீ சிவனை சூரியனும் வழிபடுவதாக நம்பப்படுகிறது. பங்குனி
உத்திரத்திற்கு முந்தைய நாள், பூர நட்சத்திர நாளில் காலையில் மூலவர் மீது சூரியனின் கதிர்கள் விழும்.
வரலாறு
🌼அரசன் வானகோவராயர் தன் மனைவி புண்ணியவாட்டி நாச்சியாருடன் வழிபட்டது.
இந்த மண்டலத்தை ஆறகளூரை தலைநகராகக் கொண்டு வானகோவராயர் ஆட்சி செய்தார். சோழ, பாண்டிய மற்றும் வானகோவராயர் காலங்களின் கருவறைச் சுவரைச் சுற்றி பல கல்வெட்டுகள் உள்ளன, அவை முக்கியமாக தினசரி பூஜைகளுக்கு வழங்கப்பட்ட நன்கொடைகளைப் பற்றிப் பேசுகின்றன. ஒரு கல்வெட்டு கிருஷ்ணதேவராயர் பற்றிப் பேசுகிறது, அவர் அர்ச்சகர்களுக்கு வரி விலக்கு அளித்தார்.
கட்டிடக்கலை
🏵️கருவறை, அந்தரளம், அர்த்த மண்டபம், ஒரு முக மண்டபம், 16 தூண் மண்டபம், 100 தூண் மண்டபம் ஆகியவற்றைக் கொண்டது இக்கோயில். கருவறை, ஜகதி, குமுதம், பட்டிக்கையுடன் கூடிய பாத பந்த அதிஷ்டானத்தில் உள்ளது. பிட்டி வேதிகாவில் தொடங்குகிறது. கலசம், குடம், பலகை, பொத்தியல் ஆகியவற்றைக் கொண்ட விஷ்ணுகாந்த பைலஸ்டர்கள். பிரஸ்தாரம் நாசிகுடுகளுடன் வாலாபி மற்றும் கபோதம் கொண்டது. கருவறையில் மூன்று அடுக்கு திராவிட செங்கல் விமானம் உள்ளது.
பைரவர்:
🔱தேவர்களின் துன்பத்தை தீர்க்க தனது அம்சமான பைரவரை அசுரர்களை அழிக்க அனுப்பினார் சிவபெருமான். திசைக்கு எட்டு பைரவர் வீதம் 64 பைரவர்கள் தோன்றி அந்தகன் மற்றும் அவனது அசுரர் சேனைகளை அழித்தனர். வட இந்தியாவில் காசியில் அஷ்ட பைரவர் கோயில் இருக்கிறது. அதற்கடுத்து தென்னிந்தியாவில் அஷ்டபைரவர்களுக்கென்று இருக்கும் பழமையான கோயிலாக ஆறகளூர் அஷ்ட பைரவர் கோயில் கருதப்படுகிறது.
🔱காசிக்கு சென்று பைரவரை தரிசிக்க முடியாதவர்கள் இங்கு வந்து வழிபடுவதால் காசி அஷ்ட பைரவரை வணங்கியதற்கு ஈடானது என்பது அனுபவம் வாய்ந்த பக்தர்களின் கருத்தாக உள்ளது.
🔱ஆரகளூரில் நிறுவப்பட்ட அஷ்ட பைரவர் சின்னங்கள்:
கால பைரவர், அசிடங்க பைரவர், சம்ஹார பைரவர், ருரு பைரவர், க்ரோதன பைரவர், கபால பைரவர், ருத்ர பைரவர், உன்மத்த பைரவர் ஆகிய அஷ்ட பைரவர்களுக்காக அறியப்படும் கோயில் இது. ஏழாவது பீஷ்ம பைரவர் ராஜகோபுரத்தின் இடது பக்கத்தில் ஒரு சிறிய மண்டபத்தின் கீழ் பலிபீடம் வடிவில் இருக்கிறார்.
மேலும் ராஜகோபுரத்தின் மேல் அடுக்கில் எட்டாவது பைரவர் கபால பைரவர் தெற்கு நோக்கி இருக்கிறார். கபால பைரவர் கோபுரத்தில் அமைந்துள்ளது
🔱1500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோவிலாக சேலம் ஆறகழூர் அஷ்டபைரவர் கோவில் கருதப்படுகிறது.
🔱ஆரகளூரில் பௌர்ணமிக்குப் பிறகு வரும்
தேய்பிறை அஷ்டமி திதி தினத்தில் இங்குள்ள அஷ்டபைரவர்களுக்கும் நள்ளிரவில் சிறப்பு யாக பூஜை நள்ளிரவு 12.00 மணிக்கு நடக்கிறது.
🔱பூஜையின்போது காலபைரவருக்கு தேன், பழம், பன்னீர், மஞ்சள் ஆகியவற்றால் அபிஷேகம் செய்வார்கள்.
🔱இப்பூஜையின் போது சந்தனக்காப்பு மற்றும் புஷ்ப அலங்காரத்துடன் பைரவர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பின்னர் வெள்ளிக்கவசம், சந்தனகாப்பு, உள்ளிட்ட சர்வ சிறப்பு அலங்காரங்களுடன் காலபைரவர் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். நள்ளிரவு 12 மணி அளவில் காலபைரவர் உள்ளிட்ட எட்டு பைரவர்களுக்கும் பூஜைகள் நடக்கும்.
🔱பைரவர் அவதரித்த கார்த்திகை அஷ்டமி அன்று பைரவாஷ்டமி விழா இக்கோயிலில் கடைபிடிக்கப்படுகிறது. அன்று மாலை நடைபெறும் மகா யாகத்தில் தேனில் தோய்த்த 1008 வடைகளை யாகத்தில் இட்டு பைரவரை பூஜிக்கின்றனர். இந்த யாகத்தில் கலந்து கொண்டு அஷ்டபைரவர்களை வழிபடுபவர்களுக்கு அனைத்து நன்மைகளும் உண்டாகும் என இங்கு வழிபடும் மக்கள் கூறுகின்றனர்.
🔱பௌர்ணமிக்குப் பிறகு 8 வது நாளில் (அஷ்டமி நாள்) நடைபெறும் நள்ளிரவு பூஜைக்காக மக்கள் இந்த கோயிலில் அதிக அளவில் கூடுகிறார்கள்.
🔱இந்த பூஜையில் கலந்துகொண்டு பைரவரை வழிபாடு செய்தால் திருமணத்தடை, நவக்கிரக தோஷம் உள்ளிட்ட பிரச்சினைகள் நீங்கும் என்பது ஐதீகம்
🔱இப்பூஜையில் கலந்து கொண்டு வழிபாடும் பக்தர்களின் கிரக தோஷங்கள், வறுமை நிலை, துஷ்ட சக்திகள் பாதிப்பு, குழந்தை பேறின்மை போன்ற அனைத்து பிரச்சனைகளும் நீங்கும் என்பது பக்தர்களின் கருத்தாகும். திருமண தடை மற்றும் தோஷங்கள் நீங்க இங்குள்ள கால பைரவருக்கு செவ்வரளி பூக்கள் சமர்ப்பித்து, வடைமாலை சாற்றி வழிபடுகின்றனர்.
தேய்பிறை அஷ்டமி நாட்களில் பல்வேறு இடங்களில் இருந்து ஆறகளூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
திருவிழாக்கள்:
🌻ஸ்ரீ காமநாத ஈஸ்வரர் கோவிலில் நள்ளிரவில் பைரவர் பூஜை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
🏵️ஆறகளூர் காமநாதீஸ்வரர் கோவிலில் மாதந்தோறும் உற்சவங்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், ஆனித் திருவாதிரை, ஆடிப்பூரம், விநாயகர் சதுர்த்தி, கந்தசஷ்டி, கிருத்திகை, கார்த்திகை தேய்பிறை, பைரவாஷ்டமி, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் (மார்கழி மாதம் திருவாதிரை அன்று) ஆருத்ரா தரிசனம் கொண்டாடப்படுகிறது. தைப்பூசம், மாசி சிவராத்திரி, நவராத்திரி, பங்குனி உத்திரம் ஆகியவை முக்கியமான விழாக்கள் ஆகும்.
தரிசன பலன்
💦ஆறகளூர் காமநாதீஸ்வரரை வழிபட்டால் எடுத்த காரியத்தில் வெற்றி கிட்டும். கல்வி, வியாபாரம், தொழில் செழிக்கும். அரசு சம்பந்தப்பட்ட வாய்ப்புகள், வேலைகள் கிட்டும். இந்த கோவிலின் தலவிருட்சமான மகிழமரத்தின் இலையை அரைத்து தண்ணீரில் கலக்கி குடித்தால் சர்க்கரை நோய் குணமாகும்.
💦அஷ்டபைரவர்கள் : காமநாதீஸ்வரர் கோவிலில் இவர்களை வழிபட்டால் நம்முடைய பயம் நீங்கும், நமது எதிரிகள் பயந்து விலகுவர் என்பது நம்பிக்கை.
💦அனைத்து பிரச்சனைகளுக்கும் எளிதில் தீர்வு காண மக்கள் இங்கு அஷ்டபைரவரை வழிபடுகிறார்கள்.
💦இந்த திருத்தலம் மன்மதனுக்கு உகந்த இடம் என்பதால், திருமணமான இளம் தம்பதியினர் இங்கு வந்து இறைவனை தரிசித்தால் இல்லறம் இன்பமாக இருக்கும். விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதேபோல பிரிந்த தம்பதியர் இங்கு வந்து மனமுருக இறைவனை தரிசித்தால் ஒன்று படுவார்கள் என்பதும் பக்தர்களது நம்பிக்கை
கோயில் நேரங்கள்
கோயில் காலை 07.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் திறந்திருக்கும். முக்கியமான விழா நாட்கள், அஷ்டமி நாட்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நேரம் மாறும்.
கோயில் சிறப்பு நேரம் காலை 5 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரையும். மாலை 4 மணி முதல் இரவு 9.30 மணி வரையிலும் கோயிலின் நடை திறந்திருக்கும்.
அமைவிடம் :
🌻சேலம்-கடலூர் நெடுஞ்சாலையில் தலைவாசலில் இருந்து 6 கிலோமீட்டர் தூரத்தில் தென்கிழக்கில் காமநாதீஸ்வரர் கோவில் உள்ளது.
🍀சேலம், ஆத்தூர், தலைவாசல், கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.
🍀ஆத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து வழித்தட பேருந்து எண்கள் 6 மற்றும் 31 உள்ளன.
🍀ஆத்தூரில் இருந்து ஆறகளூருக்கு சாரதா என்ற தனியார் பேருந்தும் இயக்கப்படுகிறது.
🍀தலைவாசல் மற்றும் வி. கூட் சாலையில் இருந்து மினிபஸ் வசதி உள்ளது.
தகவல்: வலைதளங்கள்
நன்றி🛕
⛳#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
🛐2017 ல் ஏற்கனவே தரிசித்துள்ளோம். இறையருளால் 9.11.2025 மீள் தரிசனம்
🛕பஞ்சபூத தலம், பிரதான சாலையில் இருந்து இவ்வாலயம் தெற்கில் 3 கி.மீ. தூரத்தில் உள்ளது.
🛕ஆலயம் உள்ள சன்னதி தெருவில் எதிரில் ஒரு பெருமாள் ஆலயம் உள்ளது.
🍁ஆலயம் வழிபாடு / பராமரிப்பில் உள்ளது.
🙇நன்றி🙏
🛕#சுப்ராம்ஆலயதரிசனம் 9.11.2025🛐
# என்றும்அன்புடன்💟
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று🙇🛕
#ஆன்மிகபரதம்அகிலத்தின்சிகரம்🇮🇳🗻
⛳ #பிரதோஷேக்குழுயாத்ரா
🛕#ஆன்மீகதலயாத்திரை:
சேலம் 8, 9 நவம்பர், 2025.
நன்றி🙏 9.11.2025
🕊️🔱🛐🙏🇮🇳🙇⛳🛕🌏🗻
No comments:
Post a Comment