அருள்மிகு வீரசேகரர் திருக்கோயில்,
#சாக்கோட்டை
அருள்மிகு வீரசேகரர் திருக்கோயில், சாக்கோட்டை-630 108, சிவகங்கை மாவட்டம்.
அறந்தாங்கி - காரைக்குடி பிரதான சாலையில் உள்ளது.
தல சிறப்பு: இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.
பொது தகவல்: இங்கு இறைவனுக்கு புழுங்கல் அரிசி சாதம் நைவேத்யம் செய்யப்படுகிறது. இத்தலவிநாயகர் விக்கிரம விஜய விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.
வீரசேகர சுவாமியும், அம்பாள் உமையாம்பிகையும் தனித்தனி சன்னதிகளில் அருளுகின்றனர். இங்குள்ள பைரவர் இரட்டை நாய் வாகனங்களுடன் காட்சி தருவது சிறப்பு. 9 நிலையுடன் ராஜகோபுரமும் இருக்கிறது.
பிரார்த்தனை: புத்திர தோஷம் உள்ளவர்கள், கண் நோய் உள்ளவர்கள் இங்கு வேண்டிக்கொண்டால் நிவர்த்தியாவதாக நம்பிக்கை.
நேர்த்திக்கடன்: அம்பாளுக்கு தாலிப்பொட்டு சாத்தி நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். வாய்பேச முடியாதவர்கள், திக்குவாய் உள்ளவர்கள் இங்கு வந்து சுவாமிக்கு மணி கட்டி வழிபட்டு மன ஆறுதல் பெறுகின்றனர்.
தலபெருமை:
தலவிருட்ச சிறப்பு: ஒரு சமயம், இங்கு வந்த பாண்டிய மன்னன் ஒருவர், சிவன் நிகழ்த்திய அதிசயம் குறித்து நம்பாமல் சந்தேகம் கொண்டான். அவர் சுவாமியை முதல் முறை வலம் வந்தபோது, அங்கிருந்த வீரை மரம், பலா மரமாக மாறியது. மன்னன், திகைப்புற்று சிவனை வணங்கி மன்னிப்பு கேட்டான். அம்மரத்திலிருக்கும் கனியை உண்டால், அவனது நோய்கள் தீரும் என்று கூறி சுவாமி அருளினார். மன்னர், அப்பழத்தை உண்ட பிறகு, அம்மரம் மீண்டும் வீரை மரமாகவே மாறியது. சிவனை வணங்கிவிட்டு, இம்மரத்தை வணங்கினால் எண்ணியது நிறைவேறும் என்பது நம்பிக்கை.
புழுங்கல் அரிசி நைவேத்தியம்:
மதுரையில் பாண்டிய மன்னரிடம் பணியாற்றிய மாணிக்கவாசகர் குதிரைகள் வாங்க சென்றபோது, இவ்வழியே சென்றார். அப்போது, சிவனுக்கு தன்னிடமிருந்த புழுங்கல் அரிசியை சமைத்து நைவேத்யமாக படைத்தார். அன்று முதல், இங்கு புழுங்கல் அரிசி சாதமே நைவேத்யமாக படைக்கப்படுகிறது.
ஆசைக்கு தண்டனை:
ஒருசமயம், குழந்தை இல்லாத பக்தர் ஒருவர் தன்னிடமிருந்த பசுக்களில் சிலவற்றை அந்தணர் ஒருவருக்கு தானமாக கொடுத்துவிட்டு, மீதியை மற்றொருவருக்கு விற்று விட்டார். அந்தணரின் வீட்டில் நின்ற பசுக்கள், விற்கப்பட்ட பசுக்களை தேடிச் சென்று விட்டன. பசுக்களை வாங்கியவர், அவற்றையும் தொழுவத்தில் கட்டி விட்டார். இதையறிந்த அந்தணர் அவரிடம் சென்று, தனது பசுக்களை தரும்படி கேட்டார். பசுக்களை வாங்கியவர் அதிக ஆசையால் தராமல் வாக்குவாதம் செய்தார். இவ்வழக்கு மன்னனிடம் சென்றது. மன்னன், இத்தலத்து சிவனை சாட்சியாக வைத்து, உண்மை கூறி, தீர்த்தத்தில் மூழ்கி எழும்படி கூறினார். அதன்படி, இருவரும் தீர்த்தத்தில் மூழ்கி எழுந்திட அந்தணரை ஏமாற்றியவன் தனது கண்களை இழந்தான். பின், அவன் பசுக்களை திருப்பி ஒப்படைத்து சிவனிடம் மன்னிப்பு பெற்றான். இவ்வாறு, அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட்டு அவர்களை ஏமாற்றுபவர்களை இத்தலத்து இறைவன் உடனடியாக தண்டிப்பவராக இருக்கிறார்.
தல வரலாறு: முன்னொரு காலத்தில் வனமாக இருந்த இப்பகுதிக்கு வந்த வேடுவன் ஒருவன், ஒருமரத்தின் அருகிலிருந்த வள்ளிக்கிழங்கு கொடியை கடப்பாரை கொண்டு தோண்டினான். அந்த இடத்தில் இருந்து ரத்தம் பீறிட்டது. ஆச்சர்யமடைந்த அவன், நிலத்திற்கு கீழே பார்த்தபோது, லிங்கம் ஒன்று இருந்தது.
சிவன் நிகழ்த்திய இந்த அதிசயத்தை வேடுவன் மன்னரிடம் கூறினான். இதைக்கேட்டதுமே, குஷ்டநோயால் பாதிக்கப்பட்டிருந்த மன்னர் குணமானார். சிவனின் திருவிளையாடலை அறிந்த மன்னர் இவ்விடத்தில் கோயில் கட்டினார்.
திருவிழா: ஆனி, ஆடியில் பத்து நாள் விழா, சிவராத்திரி, கந்தசஷ்டி.
#சுப்ராம் 28.09.25
28.09.25 (காலை 11.55 Locked )
No comments:
Post a Comment