Wednesday, October 8, 2025

வேலங்குடி பெருமாள் ஆலயம் 28.9.25

வேலங்குடி பெருமாள் ஆலயம்

#வேலங்குடிபெருமாள் ஆலயம்
🛕  பெருமாள் ஆலயமும் அழகுற அமைந்துள்ளது. ராஜகோபுரம், பிரகாரம்,  உள்ளே பெரிய மண்டபம். கருடன் எதிரில்  பூமீ நீளா வரதராஜபெருமாள் கருவரை, பின்புறம் 4 தனி தனி சன்னதிகளில் மகாலெட்சுமி, சக்கரத்தாழ்வார், தன்வந்திரி, மற்றும் ஆண்டாள் சன்னதிகள் முதலிய ஆலய தெய்வங்கள். உள்ளது. பூசைகள், பராமரிப்பும் நன்றாக உள்ளது.
அருகில் உள்ள விநாயகர் ஆலயம்
சொக்கட்டான் விநாயகர் ஆலயம்
🛕இக்கோயிலுக்கு அருகிலேயே "சொக்கட்டான் விநாயகர்" என்ற கோயில் உள்ளது. அதாவது "சொல் கேட்டான் விநாயகர்" என்பதன் திரிபே சொக்கட்டான் விநாயகர் என்று மருவிவிட்டது. என்ன சொல் சொல்லி பிரார்த்தனை செய்தாலும் உடனே கேட்டு அதற்குல் பலனளித்து விடும் வரப்பிரசாதி. விநாயகரை வேண்டி பலன் கிடைத்ததும் 108 தேங்காய்கள் உடைக்கப்படுகின்றன. சிலர் அன்னதானம் செய்கின்றனர்.
அருகில் உள்ள சிவன் ஆலயம்:
வேலங்குடிகண்டீஸ்வரர்ஆலயம்
நகரத்தார் ஆலயம் ஒன்பதில் இதுவும் ஒன்று.
அ /மி. கண்டீஸ்வரர் - காமாட்சி அம்மன் ஆலயம், வேலங்குடி

⛳காரைக்குடியிலிருந்து பள்ளத்தூர் செல்லும் வழியில் 9 கி.மீ தொலைவில் வேலங்குடி உள்ளது.
⛳ பழங்காலத்தில் வேலமரங்கள் மிகுதியாக இருந்ததால் இவ்வூர் இப்பெயர் பெற்றது.

⛳கோட்டையூரின் ஒரு பகுதியில் இந்த ஊர் உள்ளது.
சுவாமியின் திருநாமம் : கண்டீசர்,
அம்பாள் :காமாட்சி

⛳இது ஒரு தேவார வைப்பு தலமாகும் , இது அப்பரின் பதிகங்களில் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது .

💠நன்றாகப் பராமரிக்கப்படும் கோவில்கள்..
பயணஅனுபவக்குறிப்புகள்🕊️

💠பள்ளத்தூர் அல்லது கோட்டையூர் வழியாக செல்வதே நல்லது
💠நன்றாக பராமரிக்கப்பட்டு வரும் சிவன் ஆலயம்.
💠கிழக்குவாசல் அடைத்து விட்டிருந்தாலும், தெற்குவாசல் வழியாக உள்ளே செல்ல வேண்டும்.
💠 ஏற்கனவே பள்ளமாக இருந்த இடத்தில் சிறிய ஆலயமாக இருந்தது, தற்போதுள்ள இடம் மேடாக்கி அதில் ஆலயம் விரிவாக்கி புனரமைப்பு செய்யப்பட்டுள்ளதாக தகவல்.
💠சிறிய கிராமப்பகுதியில் தனியாக ஆலய வளாகம் உள்ளது.
💠சொற்கேட்டான் விநாயகர் ஆலயம், மற்றும் ஒரு பெருமாள் ஆலயங்களும் பொலிவுடன் விளங்குகின்றன. பெரிய குளம் ஒன்றும் உள்ளது. அருகில் வேறு 💠கடைகள் வீடுகள் அருகில் கிடையாது.

நன்றி🙏
28.09.25 ஞாயிற்றுக்கிழமை
#சுப்ராம்தரிசனம்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#பிரதோஷக்குழுயாத்ரா 28.09.2025

புதுக்கோட்டை : புவனேஸ்வரி அம்மன் திருக்கோயில், 28.09.25

புதுக்கோட்டை : புவனேஸ்வரி அம்மன் திருக்கோயில், 
#புதுக்கோட்டை : புவனேஸ்வரி அம்மன் திருக்கோயில், 

புதுக்கோட்டை ராஜாகுளக்கரையில் புவனேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது.

முன்பு இந்த இடம் ஜட்ஜ் சுவாமிகள் அவர்களின் ஆஸ்ரமமாக இருந்த இடத்தை சாந்தானந்தா சுவாமிகள் மேற்கொண்டு அதிஷ்டானமாக்கி இருக்கிறார்.
 புவனேஸ்வரி கோவிலுக்கு அதிஷ்டானம் என்று பெயர். 1936-ஆம் ஆண்டு முதல் இந்தக்கோவில் இருக்கிறது.

நுழைந்ததும் ஜட்ஜ் சுவாமிகள் சமாதி இருக்கும். இடது பக்கத்தில் அஷ்டதச புஜ லட்சுமி எதிரே புவனேஸ்வரி. புவனேஸ்வரியின் எதிரில் ஸ்ரீ சக்கர மேரு வைத்து பூஜை நடைபெறும். கற்பூர ஆரத்தி நேரத்திலும் இருவருக்கும் ஒரே சமயத்தில் ஆரத்தி நடைபெறும். காலை மாலை மட்டும்தான் ஆரத்தி. நடுவில் தரிசனம் மட்டும்தான்.

இருவரின் திருஉருவத்தையும் பார்த்துக்கொண்டே இருக்கலாம். நேர் எதிரில் சன்னிதி இருவருக்கும். ஐயர் வகுப்பினர் புடவை கட்டும் மடிசாரில் அஷ்டதச புஜ லட்சுமிக்கு அலங்காரம் செய்திருப்பார்கள். எதிரில் பெரிய யாக குண்டம் இருக்கும். இங்கே வருடத்திற்கு ஒரு முறை செய்யப்படும் யாகம் மிக பிரசித்தம். அது முடிந்த உடன் ஊரில் மழை நிச்சயம்.

சரஸ்வதி ஞான ரூபம், லட்சுமி க்ரியா ரூபம், மஹா காளி இச்சா ரூபம் - இந்த மூன்று சக்திகளும் சேர்ந்த சாமுண்டீஸ்வரி அஷ்டதச புஜ லட்சுமியாக அன்னை இங்கே வணங்கப்படுகிறாள்.

கோவில் விதிமுறைகள்

கோவில் வாசலிலேயே தாமரை மலர்கள் விற்றுக்கொண்டிருப்பார்கள். அர்ச்சனை எல்லாம் கிடையாது. 

கோவில் சிறப்பு
கோவிலைச் சுற்றி வரும்பொழுது பஞ்சமுக பிள்ளையார், பஞ்சமுக ஆஞ்சநேயர், தன்வந்த்ரி, சாஸ்தா, நாமே அபிஷேகம் செய்யும் வகையில் லிங்கம், பொற்பனையான் ஆகிய மூர்த்திகள் இருக்கும். படு சுத்தமாக நிசப்தமாக இருப்பது சிறப்பு.

இந்த ஆலயத்தில் ஸ்ரீ பால விநாயகர், ஸ்ரீ பால முருகன் அர்த்த மண்டபத்தில் அருள் பாலிக்கிறார்கள். மூலஸ்தானத்தில் கம்பீரமாக மிகவும் அழகாக சுமார் 4.5 அடியில் அமர்ந்த கோலத்தில் புன்னகை ததும்ப ஸ்ரீ சக்கர மகா மேரு உடன் அருள்புரிகின்றாள் தேவி ஸ்ரீ புவனேஸ்வரி. ஆலயத்தின் சிறப்பாக ஸ்ரீ வெங்கடேஸ்வரர் ஆலயமும், நவகிரகங்கள், காலபைரவர் சந்நிதி, விசேஷமாக யோகம் அருளும் சனீஸ்வரர் தனி சந்நிதி மற்றும் நாக தேவதைகள் உள்ளது. மூலஸ்தானத்தை சுற்றி பஞ்ச கோஷ்ட தெய்வங்களாக காயத்திரி தேவி, வைஷ்ணவி தேவி, பிராம்மகி, துர்க்கை, லட்சுமி தேவி, அங்கு வரும் பக்தர்களுக்கு அனைத்து நலன்களையும் அன்னையிடம் இருந்து பெற்றுத் தருகிறார்கள்

இங்கே கோவில் சுத்தமான தசாங்கம் கிடைக்கும். அதைக் கோனில் வைத்து ஏற்றுவது ஒருக்கலை. சுகந்தச்ச மனோஹரமாக வாசம் தூக்கும். புவனேஸ்வரி குங்குமம் எந்தக் கலப்பும் இல்லாத மஞ்சள் குங்குமம்.

சென்னையை அடுத்த தாம்பரத்தில் ஸ்கந்தாஸ்ரமம் இருக்கிறது. அதுவும் சாந்தானந்தா சுவாமிகளால் அமைக்கப்பட்டதுதான். சேலம் ஸ்கந்தாஸ்ரமமும் இந்த அமைப்பினருடையதுதான்.

1936ஆம் ஆண்டில் கட்டப் பட்டதாக அறியப்படும் இத்தலத்தில்,ஶ்ரீ புவனேஷ்வரி அம்மன் அமர்ந்தஅருட்கோலத்திலும்,ஶ்ரீ அஷ்டதச புஜ லக்ஷ்மி துர்கா தேவி நின்ற திருக் கோலத்திலும்திருஅருட்காட்சியளிக்கின்றனர்.

நமது தமிழகத்தின் பிரசித்தி பெற்ற அம்மன் ஆலயங்களில்,புதுக்கோட்டை, ராஜாகுளக்கரையில் அமைந்துள்ள இந்த புவனேஷ்வரி அம்மன் ஆலயமும் ஒன்று என்பது தலச்சிறப்பு.

'தெய்வத்திரு' சதாசிவ பிரம்மேந்திர சரஸ்வதி சுவாமி எனும் ஜட்ஜ் சுவாமிகளின் ஆஸ்ரமமாக இருந்த இத்தலத்தினை, சாந்தானந்தா சுவாமிகள் மேற்கொண்டுஅதிஷ்டானமாக்கி இருக்கிறார்.
( புவனேஷ்வரி அம்மன் ஆலயத்திற்கு அதிஷ்டானம் எனும் பெயராம்).

ஜட்ஜ் சுவாமிகளின்அதிஷ் டானமாக (ஜீவசமாதியாக) இருந்தாலும், அன்னை புவனேஷ்வரிஅருட்குடிகொண்டிருப்பதால், இத்தலம் புவனேஷ்வரி அம்மன் ஆலயம் என்றே பக்தர் களால்அழைக்கப்படுகிறது.

25-தலை கொண்ட
ஶ்ரீ விஸ்வரூப சதாசிவர்
சுதை சிற்பம் காண பரவசம்.

உடல் திறனும், உள்ளம் ஆற்றலும் மேன்மையுற நடைபெறும்பவுர்ணமி வழிபாடும், இல்லம் வளம் பெற நடைபெறும்
நவராத்திரி விழாவும்
இத்தலத்தின் சிறப்புமிகு விசேஷ காலங்களாகும்.

பயணஅனுபவக்குறிப்புகள்🕊️

⚡ நாங்கள் 2020ல் வந்த போது பழைய ஆலயம் புனரமைப்பில் இருந்தது.
(20.02.2020) 

⚡தற்போது, புதிய ஆலயம் மிக பிரமாதமாகக் கட்டப்பட்டுள்ளது. இன்று 28.9.25 மீள் தரிசனம். அம்பாள் சரஸ்வதி அலங்காரம் ஹோமம். துர்க்கா பூசை இரவு 8.00 மணி அளவில் நடந்தது.

⚡ஊரின் நடுவில் உள்ளது. ⚡வாகனங்களில் வருவோர் மிகவும் கவனம்.
நெருக்கடியான பிரதான கடைத்தெருவில் உள்ளது. வாகனங்கள் நிறுத்த ஆலயம் எதிரில் இடம் உள்ளது.
⚡பக்தர்கள் பிரார்த்தனையுடன் வந்து பரிகாரம், பூசைகள் செய்து கொள்ளுகிறார்கள்.

நன்றி🙏
28.09.25 ஞாயிற்றுக்கிழமை
#சுப்ராம்தரிசனம்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#பிரதோஷக்குழுயாத்ரா 28.09.2025

புதுக்கோட்டை : அருள்மிகு சாந்தநாதர் உடனுறை வேதநாயகி ஆலயம் , 28.9.25

புதுக்கோட்டை : அருள்மிகு சாந்தநாதர் உடனுறை வேதநாயகி ஆலயம்
#புதுக்கோட்டை : அருள்மிகு சாந்தநாதர் உடனுறை வேதநாயகி ஆலயம்

⛳புதுக்கோட்டையின் வரலாறு தென்னகத்தின் வரலாற்றின் ஓர் அம்சமாக இருக்கிறது. மிகப் பழமையான வரலாற்றுப் பதிவுகள் கொண்ட பூமி இது ★ அதிக எண்ணிக்கையில் குகைக்கோயில்கள்,ஆயிரத்திற்க்கு மேற்பட்ட கல்வெட்டுகள், அதிகமான தொல்லியல் பழமைச் சின்னங்கள், அதிகமான ரோம பொன்நானயங்கள் கிடைத்துள்ள இடமென பல்வேறு சிறப்புகளை கொண்ட மாவட்டம் புதுக்கோட்டை ★

🛕புதுக்கோட்டை நகரில் உள்ள சிவனாலயம்.
மூலவர்: சாந்தநாதர் அம்மன் : வேதநாயகி
தீர்த்தம்:பல்லவன் குளம்

💠திறந்திருக்கும் நேரம்: காலை 6:00 – மதியம் 12:00 மணி, மாலை 4:30– இரவு 8:30 மணி

💠புதுக்கோட்டை பஸ் ஸ்டாண்டில் இருந்து 1 கி.மீ.,.

💠கோயில் பெருமைகள்:
பதினோராம் நுாற்றாண்டில் இப்பகுதியை ஆட்சி புரிந்த முதலாம் குலோத்துங்க சோழன் கட்டிய சிவன் கோயில் இது. ‘குலோத்துங்க சோழீஸ்வரம்’ என பெயர் பெற்ற இக்கோயில், பிற்காலத்தில் ‘சார்ந்தாரைக் காத்த நாயனார் கோயில்’ என மாறியது. இப்போது ‘சாந்தநாத சுவாமி’ என வழங்கப்படுகிறது. 
💠ஆலய ஆமைப்பு:
இக்கோவில் ஊரின் மத்தியில் பல்லவன் குளக்கரையில் கிழக்கு நோக்கி கருவறை, இடைநாழி, அர்த்தமண்டபம் மற்றும் முக மண்டபத்துடன் தென்னிந்திய கட்டிடக்கலையின் திராவிட விமான அமைப்பில் பாதபந்த அதிட்டானத்தின் மீது கட்டப்பட்டு உள்ளது. இருதள திராவிட விமானம் கருவறை மீது காணப்படுகின்றது. இறைவன் "சார்ந்தாரைக் காத்த நாயனார்" என்று அழைக்கப்பட்டு மறுவி தற்போது சாந்தநாதசுவாமி என்று அழைக்கப்படுகின்றார். இக்கோயிலின் சிறப்பாக சரபேஸ்வரர் முகமண்டபத்தில் அருள்புரிகின்றார். 

⚡இந்த கோயிலில் இருக்கக்கூடிய சுவாமிக்கு எதிரே ருத்திராட்சப்பந்தல் அமைக்கப்பட்டுள்ளது அதன் கீழ் நந்தீஸ்வரர் காட்சி கொடுத்து வருகிறார்.

கிழக்கு நோக்கி வீற்றிருக்கும் இந்த சிவனை வழிபட்டால் குடும்பத்தில் அமைதி நிறைந்திருக்கும் என்பது ஐதீகம் சுவாமிக்கு எதிரில் ருத்ராட்ச பந்தலின் கீழ் நந்தீஸ்வரர் வீற்றிருக்கிறார். 

⚡நான்கு வேதங்களுக்கும் தலைவியாக விளங்கும் அம்பிகை ‘வேதநாயகி’ என்னும் பெயரில் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறாள். கல்விக்கடவுளாக திகழும் இந்த அம்மனை மாணவர்கள் வியாழக்கிழமை வழிபடுவது சிறப்பு.

⚡காசி ராமேஸ்வரம்: காசி விஸ்வநாதர் – விசாலாட்சி, ராமேஸ்வரம் ராமநாதர்– பர்வதவர்த்தினிக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன.

⚡ இங்குள்ள பல்லவன் குளக்கரையில் அமாவாசையன்று முன்னோருக்கு தர்ப்பணம் செய்து தீபமேற்றி வழிபட்டால் பிதுர் தோஷம், முன்வினை பாவம் தீரும். கோயிலை அடுத்துள்ள பல்லவன் குளம் காசியில் பாயும் கங்கை தீர்த்தமாக கருதப்படுகிறது. இதனடிப்படையில் இங்கு வழிபடுவோருக்கு ஒருசேர காசி, ராமேஸ்வர யாத்திரை செய்த புண்ணியபலன் கிடைக்கும்.

⚡ராகுகால துர்க்கை: பிரகாரத்திலுள்ள துர்க்கை சன்னதியில் செவ்வாய், வெள்ளிக்கிழமையில் ராகு காலத்தில் விளக்கேற்றி குங்கும அர்ச்சனை செய்ய திருமணத்தடை நீங்கும். இங்குள்ள சர்க்கரை விநாயகருக்கு பக்தர்கள் தங்களின் கைகளால் சர்க்கரை அபிேஷகம் செய்ய கடன் பிரச்னை தீரும். தேய்பிறை அஷ்டமியன்று பைரவருக்கு பூசணி தீபம் ஏற்ற கிரக தோஷம் நீங்கும். 

⚡அறுபத்து மூவர் சன்னதியில் சிவன் ‘காட்சி கொடுத்த நாயனார்’ என்னும் பெயரில் ரிஷபத்தின் மீது காட்சியளிக்கிறார்.

⚡திருச்சுற்றில் தட்சிணாமூர்த்தி, அண்ணாமலையார், பிரம்மா, சூரியன், சந்திரன், லட்சுமி, சரஸ்வதி, கன்னி மூல கணபதி, வள்ளி தெய்வானையுடன் முருகர், சரபேஸ்வரர், ஸ்வர்ன ஆகர்ஷண பைரவர் ஆகியோரின் சன்னதிகள் உள்ளன. கோயிலின் தீர்த்தம் பல்லவன் குளம் ஆகும்.

💠சிறப்பு
இக்கோயில் கி.பி.1071-1123இல் ஆண்ட முதலாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. மூலவர் சன்னதியின் மேல் விதானத்தில் காணப்படுகின்ற கல்வெட்டில் இக்கோயில் குலோத்துங்க சோழீச்சரம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பிற்காலத்தில் இக்கோயில் சார்ந்தாரைக் காத்த நாயனார் கோயில் என்றழைக்கப்பட்டது.

💠விழாக்கள்
ஆனி மாதம் பத்து நாள்கள், மாசி மகம், தெப்பத் திருவிழா ஆகியவை இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
ஆனி பிரம்மோற்ஸவம், ஆடிப்பூரம், சம்பக சஷ்டி, தைப்பூசம், மாசிமகத்தன்று தெப்பம், மாசி வளர்பிறை திரயோதசி திதியன்று மகா பிரதோஷ விழா சிறப்பாக நடைபெறுகிறது.
ஐப்பசி பௌர்ணமியில் அன்னாபிசேகம், சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

💠 இக்கோயில் வழிபாட்டிற்காக காலை 6.00 முதல் நண்பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் 9.00 மணி வரையிலும் வழிபாட்டிற்காகத் திறந்துவைக்கப்பட்டிருக்கும்.

💠கோயிலை ஒட்டியுள்ள பல்லவன் குளத்தின் தென்கரையில் ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது. பெரிய ஆஞ்சநேயர், சிறிய ஆஞ்சநேயர் என இரண்டு விக்ரஹங்கள் உள்ளன. தொடர்ந்து 12 சனிக்கிழமைகளில் துளசி மாலை சாத்தினால் நினைத்தது நிறைவேறும். வடைமாலை சாத்தி வழிபடுவோருக்கு சனி தோஷம் விலகும். 

பயணஅனுபவக்குறிப்புகள்🕊️

⚡மிகப் பழமையான ஆலயம். 
ஊரின் நடுவில் உள்ளது. வாகனங்களில் வருவோர் மிகவும் கவனம்.
நெருக்கடியான பிரதான கடைத்தெருவில்  உள்ளது.
⚡ஆலயம் அருகில் குளம் உள்ளது.
 சீரமைக்கப்பட வேண்டியதுள்ளது. 
⚡பக்தர்கள் பிரார்த்தனையுடன் வந்து பரிகாரம், பூசைகள் செய்து கொள்ளுகிறார்கள்.
⚡ராகு கால மற்ற விஷேச நாட்களில் ஆலயம் பக்தர்கள் வருகையால், கூட்டமாக உள்ளது.

நன்றி🙏
28.09.25 ஞாயிற்றுக்கிழமை
#சுப்ராம்தரிசனம்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#பிரதோஷக்குழுயாத்ரா 28.09.2025

திருவரங்குளம் -அருள்மிகு அரங்குளநாதர் திருக்கோயில் (ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் திருக்கோயில்) - புதுக்கோட்டை மாவட்டம் 28.9.25

திருவரங்குளம் -அருள்மிகு அரங்குளநாதர் திருக்கோயில் 
#திருவரங்குளம் -அருள்மிகு அரங்குளநாதர் திருக்கோயில் 
 (ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் திருக்கோயில்)
 - புதுக்கோட்டை மாவட்டம்

🔱பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்கள் வாழ்நாளில் அடிக்கடியோ அல்லது தங்களது பிறந்த நட்சத்திர நாளிலோ அவசியம் செல்ல வேண்டிய தலம் புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் கோயிலாகும்.

💠இருப்பிடம் : புதுக்கோட்டையில் இருந்து ஆலங்குடி /பட்டுக்கோட்டை செல்லும் டவுன் பஸ்களில் சென்றால் 7 கி.மீ., தொலைவில் இவ்வூர் உள்ளது. பஸ் ஸ்டாப்பில் இருந்து சிறிது தூரம்வரை  சென்றால் கோயிலை அடையலாம். அடிக்கடி பஸ் உண்டு.

💠கோயில் காலை 7.00 மணி முதல்  12.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் மாலை 7.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

🔱சுவாமி :ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் - 
                    .அரங்குளநாதர்
🔱அம்பாள்: பெரிய நாயகி

🛕பாண்டியர் காலத்தில் கட்டப்பட்ட ராஜகோபுர தரிசனம் கோடி புண்ணியம் தரும். சுவாமி அரங்குளநாதர் சுயம்புவாக அருள் தருகிறார்.
அம்மன் பெரியநாயகி நான்கு திருக்கரத்துடன் தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் அருளுகிறாள்.

 சிவனது மூலஸ்தானத்திற்கு பின், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியரின் தனி சன்னதி உள்ளது. பிரகாரத்தில் பொற்பனை விநாயகர், அரங்குள விநாயகர், பிரகாரத்திலுள்ள தெட்சிணாமூர்த்தியின் கையில் வீணை இருக்கிறது - வீணாதர தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, சண்டிகேஸ்வரர், நந்தி, சதுர்த்தி விநாயகர், சப்த மாதர்கள், 63 நாயன்மார்கள், ஐயனார், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, சரஸ்வதி, மகாலட்சுமி, ஜேஷ்டா தேவி, பாலமுருகன், நவகிரகம், பைரவர், சூரியன், சந்திரன், நால்வர் சன்னதிகள் உள்ளன க

🛕இக்கோயில் நடராஜர் சிலை சிறப்பு வாய்ந்த ஒன்று. இதன் படிமம் டில்லியிலுள்ள தேசிய மியூசியத்தில் உள்ளது.
🛕இங்குள்ள திருச்சிற்றம்பலம் உடையாரை தரிசித்தால் காசி விஸ்வநாதரை தரிசித்த பலன் கிடைக்கும். 12 ராசிகளும் அதற்குரிய அதிதேவதைகளுடன் மூலிகை ஓவியமாக வசந்த மண்டபத்தின் உச்சியில் வரையப்பட்டுள்ளது.

🛕பிரகாரத்தை நூற்றுக்கால் மண்டபம் என்கிறார்கள். ஒரு குதிரை வீரனின் சிற்பம் கல்பலகை ஒன்றில் வடிக்கப்பட்டுள்ளது. இது இப்பகுதியில்
வாழ்ந்த வீரனாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

🪷கிரக தோஷம், நாகதோஷம், மன நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அம்மனிடம் உள்ள ஸ்ரீசக்கரத்தை நினைத்து வழிபட்டு வந்தால் பலன் கிடைக்கும்.

தல வரலாறு : ஒரு முறை சோழ மன்னனாகிய கல்மாஷபாதன் என்பவனுக்கு நீண்ட காலமாகியும் குழந்தை பாக்கியம் இல்லை. சிறந்த சிவபக்தனான இவன், தனக்கு பின் சிவ சேவை செய்ய ஆளில்லை என்பதை நினைத்து வருந்தி, அகத்திய முனிவரிடம் முறையிட்டான். மன்னனின் குறைநீங்க திருவரங்குளம் சென்று சிவனை வணங்கும்படி அகத்தியர் கூறினார்.

⚡மன்னனும் இத்தலம் வந்து சிவலிங்கத்தை தேடி அலைந்தான்.
அத்துடன் அங்கேயே தங்கி சிவன் கோயிலை கட்ட முடிவெடுத்தான். 
ஆனால் சிவலிங்கத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை, மேய்ப்பர்களின் உதவியை நாடினான். அப்போது சிவன், அப்பகுதியில் தான் இருக்கும் இடத்தை அரசனுக்கு உணர்த்த திருவுளம் கொண்டார். இடையர்கள் கொண்டுவரும் பூஜைப்பொருள்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தினமும் கீழே இடறி விழுவதை அறிந்த மன்னவாளால்ன், அந்த இடத்திற்கு சென்று தன்  பூமியில் கீறிப்பார்த்தான். அப்போது பூமியிலிருந்த சிவலிங்கத்தின் தலையில் வாள்பட்டு ரத்தம் பீய்ச்சியடித்தது. இதைக்கண்டு பயந்த மன்னன், மாபெரும் தவறு செய்து விட்டேன் என புலம்பி தன் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றான். இறைவன் மன்னனை தடுத்தாட்கொண்டு பார்வதியுடன் திருமணக்கோலத்தில் தரிசனம் கொடுத்து, இந்த இடத்தில் தனக்கு கோயில் கட்டும்படி ஆணையிட்டார்.  ஒரு பூர நட்சத்திர நாளில் தான் இந்த நிகழ்ச்சி நடந்தது. இறைவனின் அருளால் மன்னன் கோயில் கட்டினான். அவனுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

⚡புனித நீரூற்று ஹரனின் தலையிலிருந்து வந்ததால் , இது ஹர தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. இந்த இடம் திரு ஹரன் குளம்-திருவரங்குளம் என்று அறியப்பட்டது.

🪷பூர நட்சத்திரத்தலம்: பூர தீர்த்தம் என்பது அக்னி லோகத்தில் உள்ள ஒரு புனித தீர்த்தமாகும்.  அம்மன் சிவனது தரிசனங்கள் அனைத்தையும் பெற பூராக்னியில் தவம் செய்தாள். இவளது தவத்தில் மகிழந்த இறைவன் இத்தலத்தில் ஆடிப்பூர நன்னாளில் சிவ தரிசனம் தந்தார். மேலும் பூர நட்சத்திர லோகத்தில் சிவ தீர்த்தம், நாக தீர்த்தம், ஞான பிரம்ம தீர்த்தம், இந்திர தீர்த்தம், ஸ்ரீ தீர்த்தம், ஸ்கந்த தீர்த்தம், குரு தீர்த்தம் என ஏழு தீர்த்தங்கள் உண்டு. இதே ஏழு தீர்த்தங்கள் இத்தலத்திலும் இருப்பதால் இத்தலம் பூரம் நட்சத்திரத்திற்குரிய கோயிலானது. எனவே தான் பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களது பிறந்த நட்சத்திர நாள், பிறந்தநாள், மாதாந்திர நட்சத்திர நாள், திருமணநாள், ஆடிப்பூரம் ஆகிய முக்கிய நாட்களிலும், அடிக்கடி  சென்று வழிபாடு செய்ய வேண்டிய முக்கிய தலமானது.

🪷முக்காடு போட்டு வழிபாடு: 
இவ்வூரைச் சேர்ந்த பெண்மணியான பெரியநாயகி என்பவர் இறைவன் மீது அதீத அன்பு பூண்டிருந்தார். ஒருமுறை தன் பெற்றோருடன் கோயிலுக்கு வந்தார். சற்றுநேரத்தில் மறைந்து விட்டார். பின்பு அசரீரி தோன்றி, அப்பெண்மணி சிவனுடன் ஐக்கியமாகி விட்ட தகவலை தெரிவித்தது. நகரத்தார் சமுதாயத்தினர் அவரை அம்மனாகக் கருதி, "பிரகதாம்பாள்' என பெயர் சூட்டி தனி சன்னதி எழுப்பினர். இது காலத்தால் பிற்பட்ட சன்னதி என்பது பார்த்தாலே புரியவரும்.

🪷இப்பகுதியில் வாழ்ந்த கட்டுடையான் செட்டியார் வம்சத்தில் இத்தல அம்மன் பெண்குழந்தையாக பிறந்து வளர்ந்ததாக கூறப்படுகிறது. எனவே இப்போதும் கூட இந்த வம்சத்து பெண்கள் இக்கோயிலுக்கு வந்தால், தங்கள் வம்ச பெண்ணின் மாப்பிள்ளையாக சிவனை நினைத்து முக்காடு போட்டு வழிபாடு செய்யும் பழக்கம் உள்ளது.

🪷கோயில் வெளிப்பிரகாரத்தில் பொற்பனை மரம் இருந்துள்ளது. இதிலிருந்து கிடைக்கும் பொன் பழங்கள் மூலம் பணம் பெற்று இந்த கோயிலை கட்டியதாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது அந்த இடத்தில் அதன் அடையாளமாக கல்ஸ்தூபி உள்ளது.

♻️கோயில் திருவிழாக்கள்:
ஆடிப்பூரம், அம்மன் திருக்கல்யாணம், மகா சிவராத்திரி, திருவாதிரை, திருக்கார்த்திகை, வைகாசி விசாகம், ஆடிப்பூர விழாக்கள் பத்துநாள் கொண்டாடப்படுகிறது. ஆடிப்பூரத்தின் ஒன்பதாம் நாள் நடக்கும் தேரோட்டம் விசேஷமானது 

♻️இத்தலத்துக்கு வருவோர், சிவனுக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து, புது  வஸ்திரம் சாற்றி நேர்த்திக் கடன் செய்துவர பெரும் நன்மைகள் உண்டாகும். பிரசித்தி பெற்ற தலமாக விளங்குகிறது.

♻️இத்திருத்தலத்தினை சுற்றி சுமார் 150 கி.மீ தூரம் சுற்றளவில் உள்ள பெரும்பாலான மக்கள் இத்தல இறைவனை குலதெய்வமாகக் கொண்டு வழிபட்டு வருகின்றனர்.

தியானம் செய்ய விரும்புவோர் இங்குள்ள அமைதியான சூழலை மிகவும் விரும்புவர். குரங்குகள் அதிகமாக உள்ளன.

பயணஅனுபவக்குறிப்புகள்🕊️

⚡மிகப் பழமையான, புராதன ஆலயம். தோஷ நிவர்த்தி தலம்.
⚡முன் ஒரு முறை சென்று தரிசித்துள்ளோம்.
⚡ஆலயம் புனரமைப்பு செய்து குடமுழுக்கு திருப்பணிகள் தொடங்கப்பட வேண்டும்.
⚡ஆலயம் முன்புள்ள பெரிய குளம்
 சீரமைக்கப்பட வேண்டியதுள்ளது. 
⚡பக்தர்கள் பிரார்த்தனையுடன் வந்து பரிகாரம், பூசைகள் செய்து கொள்ளுகிறார்கள்.
⚡ராகு கால மற்ற விஷேச நாட்களில் ஆலயம் பக்தர்கள் வருகையால், கூட்டமாக உள்ளது.  
⚡சுவாமி அம்பாள், சுப்பிரமணியர் சோமஸ்கந்தர் வடிவ அமைப்புக் கோவில்,
⚡ வாழ்வில் அவசியம் ஒரு முறையாவது சென்று தரிசித்து பலன் பெற வேண்டிய ஆலயம்

நன்றி🙏
28.09.25 ஞாயிற்றுக்கிழமை
#சுப்ராம்தரிசனம்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#பிரதோஷக்குழுயாத்ரா 28.09.2025.

பேரையூர் -அருள்மிகு நாகநாதர் திருக்கோயில் , 28.09.25

பேரையூர் -அருள்மிகு நாகநாதர் திருக்கோயில் 
#பயணஅனுபவக்குறிப்புகள் பேரையூர் -அருள்மிகு நாகநாதர் திருக்கோயில் 

🔱தமிழகத்தில் உள்ள நாகர் கோயில்களில் குறிப்பிடத்தக்க கோயிலாகும்.

🔱பேரையூரில் உள்ள நாகநாத-சுவாமி பாம்பின் தலைவன் என்ற அம்சத்தில் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

🔱இந்த கோயிலின் ஸ்தல புராணத்தின் அடிப்படையில், இந்த இடம் மிகவும் பழமையானது என்று கூறப்படுகிறது

இங்கு கோயில் கொண்டுள்ள இறைவன் நாகநாதசுவாமி, இறைவி பிரகதாம்பாள்

புராண பெயர்:செண்பகவனம், கிரிஷேத்திரம்

⛳திறந்திருக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்

⛳செல்லும் வழி :இந்தத்தலம் புதுக்கோட்டையிலிருந்து 10 மைல் தொலைவில் பொன்னமராவதி வழித்தடத்தில் பேரையூர் என்ற இடத்தில் அமைந்துள்ளது. புதுக்கோட்டையிலிருந்து பொன்னமராவதி செல்லும் பேருந்தில் ஏறினால் 13 கி.மீ. தொலைவில் பேரையூர் விலக்கு என்ற ஊரில் இறங்க வேண்டும். அங்கிருந்து வடதிசையில், கோயிலுக்கான சாலை வளைவு காணப்படும். உள்ளே 2 கி.மீ. தொலைவு. நடந்தும் செல்லலாம். ஆட்டோவும் உள்ளது. உள்ளூர் பேருந்தும் இயக்கப்படுகிறது.

🪷கோயில் பெருமைகள்:

⚡சிவபெருமான் நாகநாத சுவாமியாக எழுந்தருளியுள்ள இந்தக் கோயிலின் அம்மன் பிரகதாம்பாள். நடுவே வள்ளி, தெய்வானையுடன் ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி காட்சி தருகிறார்.

⚡பேரையம்பதி, பேரைமாநகர், பேரீச்சுரம், பூகிரி, பூச்சந்தகிரி, செண்பகரணியம் ஆகியவை இந்த இடத்தின் பல்வேறு பழங்காலப் பெயர்களில் அடங்கும்.

💠பிரார்த்தனைகள்

⚡இங்குள்ள நாகநாதரை வழிபட்டால் எண்ணியவை எண்ணியபடி நடக்கும். பேரையூர் நாகநாதரைத் தரிசித்தால் 2 கிரகங்களின் தோஷங்களும் நீங்கும். திருமணம் தடைபட்டுவந்தால் அது நீங்கி திருமணம் நடக்கும். குழந்தைப்பேறு உண்டாகும். மாங்கல்ய தோஷம் அகலும். செய்த தவறுகளுக்கு பரிகாரம் கிடைக்கும் திருத்தலம். பிரார்த்தனை நிறைவேறியவர்கள் கல்லில் ஆன நாகர் சிலை நேர்த்திக்கடனாக செலுத்தலாம்.

⚡இத்தலம், காலசர்ப்ப தோஷம் மற்றும் மாங்கல்ய தோஷத்திற்கும் நிவர்த்தி தலமாக விளங்குகின்றது.

⚡குழந்தைப் பேறு இல்லாதவர்கள் இக்கோயிலுக்கு வந்து ஐந்து தலை கொண்ட நாகர் சிலை வாங்கிவந்து வைத்து வழிபட்டால் குழந்தைப் பேறு நிச்சயம் என்பது நம்பிக்கை. கோயில் வளாகத்திலுள்ள ஆயிரக்கணக்கான சிலைகள் இதற்கு சாட்சி. 

⚡நாகதோஷம் உள்ளோர் இந்தக் கோயிலுக்கு ஐந்து தலைகள் கொண்ட நாகர் சிலையுடன் வந்து ராகுகாலத்தில் பூஜை செய்ய வேண்டும். தொடர்ந்து தினமும் 'ஓம் நமசிவாய நமஹ' என்ற மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும். அப்போது தோஷத்தின் உக்கிரம் குறையும் என்பது நம்பிக்கை.

⚡கோயில் வளாகத்தில் பக்தர்களால் காணிக்கையாக தரப்பட்ட 6 அங்குலம் முதல் 2 அடி வரையிலான கருங்கல்லால் ஆன நாகங்களைக் காணலாம். அவ்வாறு வழங்கப்பட்ட காணிக்கைகளில் பலவற்றை கோயில்களின் சுற்றுச்சுவர்களில் அமைத்துள்ளனர்.

💠விழாக்கள்

⚡ஆடிப்பூரத்தில் அம்பாளுக்கு கொடியேற்றி விழா நடக் கும். பங்குனி சித்திரையில் நாகநாதருக்கு கொடியேற்றுவிழா நடைபெறுகிறது.

💠புதுக்கோட்டைத் திருக்கோயில்கள் நிர்வாகத்துக்கு உள்பட்ட இந்தக் கோயில், கிபி 12-13ஆம் நூற்றாண்டில் பாண்டியர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டிருக்க வேண்டும். பாண்டிய மன்னர் சுவேதகேது இக்கோயிலை நிர்மாணித்தாகக் கூறப்படுகிறது. 

🛕இத்தலத்தின் அமைப்புகள் : 

 ⚡இயற்கை வழிபாட்டின் ஆரம்ப கால நிலையில் நாக வழிபாடும் அமையும். இக்கோயிலில் 1865, 1977 மற்றும் 1989இல் குடமுழுக்குகள் நடைபெற்றுள்ளன.

⚡கோயில் விமானம் பிற்காலத்தில் செங்கற்களால் கட்டப்பட்டு புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. கருவறையின் முன்புள்ள அர்த்த மண்டபத்தில் சுரங்கப்பாதை உள்ளதாகவும், போர்க் காலங்களில் சிலைகளையும் சொத்துகளையும் மறைத்துவைப்பதற்காக இது அமைக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

⚡பல்லவராயர்களின் ஆட்சிக் காலத்தில் இந்தப் பகுதி 'பேரையூர் நாடு' என்றழைக்கப்பட்டிருக்கிறது. பேரையம்பதி, பேரைமாநகர், பேரீச்சரம் போன்ற பெயர்களிலும் இந்த ஊர் அழைக்கப்படுகிறது. சிவந்தெழுந்த பல்லவராயர் இக்கோயில் இறைவனிடம் மிகுந்த பக்தி கொண்டவராக இருந்துள்ளார். 

⚡இந்தக் கோயிலில் 1878 ஆம் ஆண்டு குரோதன ஆண்டு ஆவணி மாதம் திருவோண நட்சத்திரத்தில் ராமச்சந்திர தொண்டைமானின் ஏற்பாட்டில் மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டிருக்கிறது.

⚡99 ஆண்டுகளுக்குப் பிறகு 1977-ஆம் ஆண்டு நவம்பர் 3-ஆம் தேதி ராஜகோபுரம், சுவாமி அம்பாள் விமானங்கள் பழுதுபார்க்கப்பட்டு, கஜலட்சுமி, தண்டாயுதபாணி விமானங்கள் மற்றும் பின்கோபுரம் ஆகியன புதிதாக அமைக்கப்பட்டு திருக்குடமுழுக்கு பெருஞ்சாந்தி விழா நடத்தப்பட்டிருக்கிறது. அதனைத் தொடர்ந்து 1989-ஆம் ஆண்டு செப்டம்பர் 7-ஆம் நாள் அய்யாக்கண்ணு என்னும் செல்வந்தர் இக்கோயிலுக்கு குடமுழுக்குத் திருவிழா நடத்தியுள்ளார்

⚡கிழக்கிலும், மேற்கிலும் இருவாசல்கள் உள்ளன. இரு வாசல்களிலும் கோபுரங்கள் காணப்படுகின்றன.

முன்பு, கோயிலின் நுழைவாயில் மேற்கிலிருந்து இருந்தது, எனவே அந்தப் பக்கத்தில் உள்ள கோபுரம் (இது மூடப்பட்டுள்ளது), கோயிலின் பழைய கோபுரம் ஆகும்.

⚡இங்குள்ள மேலக்கோபுரம், கிபி 11-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது. ராஜேந்திர சோழன் காலத்தைய கல்வெட்டு ஒன்றும் இங்குள்ளது. எனவே, அதே காலத்தில்கூட இந்தக் கோபுரம் கட்டப்பட்டிருக்கலாம்.

⚡கிழக்கு பிரதான கோபுரம் பாண்டியர்களின் அமைப்பாகும், ஆனால் மேலே உள்ள செங்கல் வேலைப்பாடு நவீனமானது. பிரகாரத்தில் உள்ள மற்ற மண்டபங்கள் நவீனமானவை. கோயிலில் புதுப்பித்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன, அவற்றில் கடைசியாக ராமச்சந்திர தொண்டைமான் ஆட்சிக் காலத்தில் (1834–1886) நடந்தது.

⚡கம்பீரமான பெரிய மதிற்சுவர்கள். அதன்மீது வரிசையாகக் கல்நாகர்கள் வைக்கப்பட்டுள்ளன. கோயில் எதிரே அமைந்துள்ளது திருக்குளம். உள்ளே பெரிய மண்டபம் காணப்படுகிறது. 

⚡கோயிலுக்குள் நுழையும் போது, ​​சிவபெருமானுக்கு முன்னால் துவஜஸ்தம்பம் (அம்மனுக்கு தனி ஸ்தம்பம் உள்ளது) 

⚡பெரிய மண்டபத்தைக் கடந்து சென்றால் துவாரபாலகர்கள் காணப்படுகிறார்கள். உள்ளே கொடிரம், பலிபீடம், நந்திவிக்ரகம் ஆகியவை காணப்படுகின்றன. அங்கே சென்றால் முதலில் காணப்படுவது "ஓம்' என்னும் வடிவில் அமைந்துள்ள புஷ்கரணி. இந்த புஷ்கரணி புண்ணிய புஷ்கரணியாகும். இது ஒரு சுனைநீர் ஆகும். இதிலிருந்து சுவாமிக்கு அபிஷேகத்திற்கு தீர்த்தம் எடுக்கப்படுகிறது..

⚡பிரம்மா உருவாக்கிய கோயில் குளம் மிகவும் தெய்வீகமாகக் கருதப்படுகிறது, ஒருவர் அதைப் பற்றி நினைத்தாலும், கேட்டாலும், பார்த்தாலும், அதில் குளித்தாலும், சிவபெருமானே அவர்களுக்கு அருள்புரிவார் என்பது நம்பிக்கை.

⚡பிரதான சன்னதியின் நுழைவாயிலில் ஒரு உயரமான கல் நடராஜர் நடனமாடுகிறார். 

⚡மூலஸ்தானத்தில் இறைவன் சுயம்புவாக அமைந்திருக்கிறார். மூலஸ்தானம், அர்த்தமண்டபம், மகாமண்டபம் என்ற அமைப்புகளுடன் கூடியது.

⚡நாகநாத சுவாமியின் தற்போதைய கர்ப்பகிரகம் 12-13 ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த பாண்டியர் காலத்தைச் சேர்ந்த அமைப்பாகும். இது ஒரு வார்ப்பட பீடத்தின் மீது அமைந்துள்ளது, அதன் மேல் ஒரு வயலவாரியும், நடுவில் ஒரு வளைந்த குமுதமும் உள்ளது. தூண்கள் எண்கோண வடிவிலும், செவ்வக அடித்தளத்துடனும் உள்ளன, ஆனால் நாகபாதம் இல்லாமல் உள்ளன. பாலகைகள் பெரியதாகவும் சதுரமாகவும் உள்ளன, மேலும் பத்மங்கள் நன்கு வரையறுக்கப்பட்ட இதழ்களைக் கொண்டுள்ளன. சுவரில் சில இடங்கள் உள்ளன, மேலும் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர் மற்றும் பிரம்மாவின் உருவங்கள் உள்ளன. விமானம் ஒரு நவீன செங்கல் அமைப்பாகும்.

 ⚡மூலஸ்தானத்தைவிட்டு வெளியே வந்தால் நடராஜரும் சிவகாமியும் தென்முகமாக எழுந்தருளி இருக்கிறார்கள். ,அடுத்து சுனையை பார்த்தவாறு விநாயகர் விக்ரகங்கள். இக்கோயிலின் பிரகாரத்தில் பிரார்த்தனையாகச் செலுத்தப்பட்ட கல்லில் ஆன நாகர் சிற்பங்கள் உள்ளன. நாகர் சிற்பங்களை அடுத்து சமயக்குரவர்கள் நால்வரும் சேக்கிழார் பெருமானும் காட்சி தருகின்றனர். அவர்களுக்கு எதிரே சின்முத்திரை காட்டி தட்சிணாமூர்த்தி தென்முகமாக அமர்ந்துள்ளார். மேற்கு பிரகாரத்தில் காசி விஸ்வநாதரும், விசாலாட்சியும் காட்சிதருகின்றனர். பிரகாரத்தை வலம்வந்து வலப்புறம் திரும்பினால் அம்பிகையின் சன்னிதானம் அபயவரதஹஸ்தங்கள் இவைகளுடன் கருணை தாங்கும் பார்வையும் அன்பு தவழும் முகமாக கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார் அன்னை பிரகதாம்பாள்.

⚡இந்த வளாகத்தில் 15 ஆம் நூற்றாண்டின் இறுதியில் அல்லது 16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்ததாகக் கூறப்படும் பிரஹதாம்பாள் தேவிக்கு ஒரு துணை சன்னதி உள்ளது, மேலும் இது விஜயநகர கட்டிடக்கலை பாணியில் உள்ளது.

⚡நவக்கிரக மண்டலத்தில் இறைவன், இறைவி இருவருக்கும் தனித்தனியே கொடிமரம் உள்ளது. இரண்டு இடங்களிலும் நந்தி உள்ளது.

⚡அமைப்பு சிறப்புகள்:

இங்குள்ள கோயில் கூட சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததாக நம்பப்படுகிறது. இங்குள்ள கட்டமைப்பு கோயில் 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலத்தைச் சேர்ந்தது , அதைத் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டது, அதே நேரத்தில் கர்ப்பக்கிரகம் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் காலத்தைச் சேர்ந்தது .

⚡தனிச்சிறப்பு கொண்ட நவக்கிரகம்

வழக்கமாகக் கோயில்களில் உள்ள நவக்கிரகங்கள், வெவ்வேறு திசை பார்த்து நிற்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். இங்கு, 8 கிரகங்களும் சூரியனைப் பார்த்தே அமைக்கப்பட்டிருப்பது இக்கோயிலின் தனிச்சிறப்பு. 

⚡சிவன் மற்றும் பார்வதி தங்கள் காளையின் மீது அமர்ந்திருக்கும் சிற்பம் அற்புதமான படைப்புகள்.

⚡கோயிலின் மிகப் பழமையான பகுதி கருவறைக்குப் பின்னால் உள்ள மேற்கு கோபுரம் ஆகும். இது 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது மற்றும் சோழ பாணியில் செய்யப்பட்டுள்ளது. இந்த கட்டமைப்பின் குறிப்பிட்ட சோழ கட்டிடக்கலை அம்சங்கள், ஒரே கல்லில் சப்த-மாத்ரிகா குழு அடித்தளச் செதுக்கல் மற்றும் களங்கத்திற்கு அருகிலுள்ள பாறையில் ராஜேந்திர-சோழன் I (1012-44) கல்வெட்டு இருப்பதுடன் இணைந்து, இந்தக் கோயில் முதலில் 10 ஆம் நூற்றாண்டின் சோழ அமைப்பாக இருந்தது, ஆனால் பின்னர் 12 அல்லது 13 ஆம் நூற்றாண்டில் புதுப்பிக்கப்பட்டது என்பதைக் காட்டுகிறது. 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிற சோழ மற்றும் பாண்டிய கல்வெட்டுகள் உள்ளன.

💠கல்வெட்டுகள்

பிற சோழ மன்னர்கள், பாண்டியர்கள், விஜயநகர மன்னர்கள், அறந்தாங்கி மற்றும் புதுக்கோட்டைத் தொண்டைமான்கள் உள்ளிட்ட பலருடைய கல்வெட்டுக்கள் இக்கோயிலில் உள்ளன.

⚡பாண்டியர்களின் ஈடுபாட்டிற்கான சான்றாக, கோயிலின் முன் சுவரின் வலது பக்கத்தில், பாண்டியர்களின் மையக்கருவான மீனின் அடிப்படை நிவாரணம் உள்ளது. ராஜேந்திர சோழன் (11 ஆம் நூற்றாண்டு) தொடர்பான கல்வெட்டுகள் இங்கே காணப்படுகின்றன, மற்றவை சோழர்கள் , பாண்டியர்கள் மற்றும் விஜயநகர வம்சத்தைக் குறிக்கின்றன

💠சிறப்புகள்:

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

⚡இயற்கையாக அமைந்த இந்த சுனை, 'புண்ணிய புஷ்கரணி' என்றழைக்கப்படும் இந்தச் சுனையில், பங்குனி மாத இறுதியில் அல்லது சித்திரை தொடக்கத்தில் 'நாகலோக நடனஒலி' (மிருதங்க இசை) கேட்கும் என்கிறார்கள்.

பிரம்மாவும் விஷ்ணுவும் இச்சுனையில் நீராடியதாகவும் கூறப்படுகிறது.

🔰 கௌதமரின் சாபத்தால் அகலிகை கல்லாகி, இந்திரன் உடல் முழுவதும் கண்களானபோது, இந்திரன் தனது வஜ்ராயுதத்தை இழந்ததாகவும், பேரையூர் வந்து இச்சுனையில் நீராடி பெருமானை வேண்டியதால் வஜ்ராயுதம் திரும்பக் கிடைத்ததாகவும் கூறப்படுகிறது. 

🔰குளத்திலிருந்து இசை ஒலி:

பங்குனி மாதம் மீன லக்னத்தில் இங்கு அமைந்துள்ள சுனையிலிருந்து பேர நாதம் (மிருதங்க முழக்கம்) எழுவதால் பேரேஸ்வரம் என்று வழங்கப்படுகிறது. இதுவே பேரையூர் என்று மருவியுள்ளது.

 🔰இங்குள்ள சுனையில் நீர்மட்டம் குறையும்பொழுது பக்கச்சுவரில் திரிசூலக்குறியொன்று காணப்படுகிறது. சூலத்திற்கு சரிமட்டத்தில் நீர் அமைந்திருக்கும் வேளையில் பங்குனி மாதம் மீன லக்னத்தில் சப்தம் எழுகிறது. மற்ற நேரங்களில் நீர்மட்டம் சூலத்திற்கு சரிமட்டமாக இருந்தாலும் அந்த முழக்கம் கேட்பதில்லை. 

புராணங்கள்:

🔰குளத்தில் ஒரு திகைப்பூட்டும் நிகழ்வு காணப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்ட வர்த்தமானி இவ்வாறு கூறுகிறது: 'கழிவிலிருந்து அவ்வப்போது இசை ஒலி எழுவதாகக் கூறப்படுகிறது. கம்பி மற்றும் தாள வாத்தியங்களின் ஒலியை ஒத்ததாகக் கூறப்படும் இந்த இசைக்குழு, பாம்பு ராஜாவான ஆதிசேஷனால் சிவனை கண்ணுக்குத் தெரியாத முறையில் வழிபடுவதன் துணையாக விசுவாசிகளால் நம்பப்படுகிறது. குளத்தின் நீர் ஒரு குறிப்பிட்ட அளவைத் தொடும்போது இசை வெளிப்பாடுகள் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் கேட்கும். அதன் அதிகபட்ச சத்தத்தில், கோயில் சுவர்களுக்கு வெளியே கூட இசை கேட்கும் என்று கூறப்படுகிறது

🔰பிரம்மாவால் நிறுவப்பட்டதாகக் கூறப்படும் குளம் உள்ளது. நிச்சயமாக, இந்த நாட்களில் அது மழைநீரால் நிரப்பப்படுகிறது. இங்கு அசாதாரண நிகழ்வு என்னவென்றால், மீன லக்னத்தின் போது, ​​தமிழ் மாதமான பங்குனி (மார்ச்-ஏப்ரல்) இறுதியில் அல்லது சித்திரை (ஏப்ரல்-மார்ச்) தொடக்கத்தில், தாள வாத்தியங்கள் மற்றும் கம்பி வாத்தியங்களின் ஒலி கேட்க முடியும், இது வேறு எந்த நாட்களிலும் கேட்காது. இவை கைலாசத்திலிருந்து வரும் வான வாத்தியங்களின் ஒலிகள் என்று நம்பப்படுகிறது , மேலும் இதற்குப் பின்னால் ஒரு தனி புராணம் உள்ளது.

தொடரும் பதிவு.....
பதிவு - 2 
https://www.facebook.com/share/p/17S1uJYFTz/
பேரையூர் நாகநாதர்....
முன்பதிவு...தொடர்ச்சி...
முன் பதிவு..
https://www.facebook.com/share/p/1BAtfeYWna/

🔰சிவதீட்சை பெற்ற மன்னன் சலேந்திரன், தினமும் சிவபூஜை செய்து வந்தான். ஒரு முறை, அவன் வழிபாட்டின் போது, ​​ஒரு நாகப் பெண்ணைக் கண்டு அவளிடம் காதல் கொண்டான். திசைதிருப்பப்பட்டு, தேனீ உறிஞ்சிய ஒரு பூவை சிவனுக்கு அளித்தான், அது அசுத்தமாக்கப்பட்டது. அவனது இதயத்தின் தூய்மையை அறிந்த சிவன், நாகலோகத்திற்குச் சென்று நாகப் பெண்ணுடன் இருக்கவும், சரியான நேரத்தில் சலேந்திரனைத் திரும்ப அழைப்பதாகவும் கூறினான். சலேந்திரன் அதற்கு சம்மதித்து, நாகலோகத்திற்குச் சென்றான், அங்கு அவன் தன் சிவபூஜையைத் தொடர்ந்தான். இதற்காக, ஏழு நாகப் பெண்களிடம் இந்தக் கோயிலுக்கு அருகிலுள்ள செண்பகம் காட்டில் இருந்து பூக்களை எடுத்து வரச் சொல்வான், அவர்கள் கோயில் குளத்தில் உள்ள ஒரு திறப்பு (பிலத்-துவாரம்) வழியாக அதை அணுகுவார்கள். இது பல வருடங்கள் தொடர்ந்தது. பின்னர் ஒரு நாள், நாகப் பெண்கள் பூக்களுக்காக வந்தபோது, ​​சிவன் அவர்களிடம் சலேந்திரனை அழைத்து வரச் சொன்னான். அவர்கள் தங்களுடன் வர யாரையாவது கேட்டார்கள், நந்தி அனுப்பப்பட்டார். சாலேந்திரன் பூலோகத்திற்குத் திரும்பி வந்தான், சிவன் தன் பக்தனால் மகிழ்ந்து ஒரு வரம் அளித்தான். சாலேந்திரன் ஒவ்வொரு நாளும் சிவபூஜை செய்யும்போது, ​​சிவனின் மேளமான துந்துபியின் தாளங்களுக்கு - மற்ற இசைக்கருவிகளின் இசையுடன் - நடனமாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். இது முறையாக வழங்கப்பட்டது, மேலும் இது தமிழ் மாதமான பங்குனியில் மீன லக்னத்தின் போது நடந்ததாக நம்பப்படுகிறது. அந்த குறிப்பிட்ட நாளில், சிவன் நாகலோகத்திற்குச் சென்று சாலேந்திரனுக்காக நடனமாடுவார், அதன் ஒலிகள் கோயில் குளத்திலிருந்து கேட்கும் இசையுடன். இவை அனைத்தும் ஒரு நாகப் பெண்ணால் ஆனதால், சிவன் இங்கே நாகநாதராக தங்கினார்.

🔰தமிழ்நாட்டில் வெள்ளாறு என்ற பெயரில் இரண்டு ஆறுகள் உள்ளன . ஒன்று வடக்குப் பகுதியில் பாய்ந்து, சேலம் அருகே உள்ள மலைகளில் தோன்றி பரங்கிப்பேட்டை அருகே கடலில் கலக்கிறது. மற்றொன்று பாண்டிய நாட்டின் மையப்பகுதியில், இந்த கோயிலுக்கு சற்று வடக்கே பாய்கிறது. இந்த நதியின் தோற்றம் குறித்து ஒரு சுவாரஸ்யமான புராணம் உள்ளது. சுயம்பு மனுவின் வழித்தோன்றலான ஸ்வேதகேது - சில சமயங்களில் பாண்டியர்களின் மூதாதையராகக் கருதப்படுபவர் - இந்த பகுதியை ஆட்சி செய்து வந்தார். அவர் வடக்கு நோக்கிச் சென்று சிவாலயங்களைப் பார்வையிட்டு, காசியில் உள்ள கங்கை நதியில் நீராடி வந்தார். அவரது பக்தியை உணர்ந்த நதி தெய்வம் அவருக்கு ஒரு வரம் அளித்தது, மேலும் அவர் எங்கும் சிவபூஜை செய்ய முடியும் வகையில், எப்போதும் தன்னுடன் இருக்கும்படி கேட்டார். அவள் ஒப்புக்கொண்டு, ஒரு இளம் பெண்ணின் வடிவத்தில் அவரது தோள்களில் அமர்ந்தாள். தனது சொந்த நிலத்திற்குத் திரும்பும் வழியில், கங்கை காவிரி நதியைக் கவனித்து , உற்சாகத்தில் ஸ்வேதகேதுவின் தோள்களில் இருந்து குதித்தாள். ஏமாற்றமடைந்த மன்னர் பேரையூருக்கு வந்து சிவனை வணங்கினார், அவர் தனது நிலத்தில் ஸ்வேத-நாடி என்ற நதியாக கங்கை பாயும் என்று உறுதியளித்தார். இந்த ஸ்வேத-நாடி தமிழில் வெள்ளை-ஆறு என்று அழைக்கப்படுகிறது, தற்போது வெள்ளாளர் என்று குறிப்பிடப்படுகிறது. ஸ்வேதகேது இங்கு அசல் கோயிலைக் கட்டியதாகக் கூறப்படுகிறது.

🔰ஒரு வேடன், இரை இல்லாததால் திருடத் தொடங்கினான். ஒரு நாள், அவன் ஒரு முனிவரை அணுகி, தன் உடைமைகள் அனைத்தையும் ஒப்படைக்கச் சொன்னான். பேரையூரில் நாகநாதரை வழிபடப் போவதால், தான் எதையும் சுமக்கவில்லை என்று முனிவர் பதிலளித்தார். இதைக் கேட்டவுடன், வேடனின் மனம் தெளிவடைந்து, உடனடியாக அவருக்கு அபரிமிதமான அறிவு அருளப்பட்டது, அவர் தனது தவறான வழிகளை நிறுத்தினார். இந்தப் புராணத்தின் காரணமாக, சிந்தனையின் தெளிவைப் பெறுவதற்கும், சிக்கலில் இருக்கும்போது சரியான முடிவுகளை எடுப்பதற்கும், அல்லது எதிர்மறை சக்திகளை வெறுமனே சுமப்பதற்கும் இது ஒரு பிரார்த்தனைத் தலமாகக் கருதப்படுகிறது. வேடன் சாம்பிராணி (தூபம் அல்லது பென்சாயின் பிசின்) பயன்படுத்தி சிவனை வழிபட்டான், எனவே இங்குள்ள நடைமுறை இறைவனுக்கு சாம்பிராணியை வழங்குவதாகும்.

🔰கிருத யுகத்தின் போது , ​​பிரம்மனுக்கு நாக தோஷம் ஏற்பட்டது. அவர் அனைத்து புனித நதிகளிலிருந்தும் தண்ணீரை சேகரித்து, இந்த இடத்திற்கு கொண்டு வந்தார். பின்னர் அவர் புனித நதிகளின் நீர் இணைந்த ஒரு குளத்தை உருவாக்கி, குளத்தில் நீராடிய பிறகு, சாபத்திலிருந்து விடுபட, இங்கே சிவனை நாகநாதர் என்று வணங்கினார். ஏனெனில், முன்பு, நாகராஜர் இங்கு சிவனை வழிபட்ட பிறகு, நாகர்களின் தலைவராக ஆனார் .

🔰மற்றொரு சமயம், ஒரு பாம்பின் சாபத்தால் சூரியன் தனது பிரகாசத்தை இழந்தார் (இது சமுத்திரக் கலப்பின் போது தேவர்களின் குழுவில் அசுரனை சுட்டிக்காட்டியதற்காக சூரியனும் சந்திரனும் தங்கள் பிரகாசத்தை இழக்கச் சபிக்கப்பட்ட புராணத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் ). அவர் இங்கு வந்து சிவனை வழிபட்டதாகவும், அதன் பிறகு இழந்த மகிமையையும் பிரகாசத்தையும் மீண்டும் பெற்றதாகவும் கூறப்படுகிறது.

🔰இந்திரன் தனது மனைவியான கௌதமரின் மீது காமம் கொண்டதற்காக கௌதம முனிவரால் சபிக்கப்பட்டபோது , ​​தனது சாபத்திலிருந்து விடுபட இங்கே சிவனை வழிபட்டார்.

 #பயணஅனுபவக்குறிப்புகள்🕊️

⚡மிகப் பழமையான, புராதன ஆலயம். நாகதோஷ நிவர்த்தி தலம்.

⚡முன் ஒரு முறை சென்று தரிசித்துள்ளோம்.

⚡ஆலயம் புனரமைப்பு செய்து குடமுழுக்கு திருப்பணிகள் தொடங்கப்பட வேண்டும்.

⚡ஆலயம் முன்புள்ளபெரியகுளம் சீரமைக்கப்பட வேண்டியதுள்ளது. மேலும், ஆலய முன் பக்க சுவர் இடிந்தும் பழுது நீக்கப்பட வேண்டியும் உள்ளது.

⚡ஏராளமான பக்தர்கள் பிரார்த்தனையுடன் வந்து பரிகாரம், பூசைகள் செய்து கொள்ளுகிறார்கள்.

⚡ராகு கால மற்ற விஷேச நாட்களில் ஆலயம் பக்தர்கள் வருகையால், கூட்டமாக உள்ளது.  

⚡ராகு சன்னதி தரிசனம் செய்ய பெரிய வரிசை உள்ளது.

⚡சுவாமி அம்பாள், சுப்பிரமணியர் சோமஸ்கந்தர் வடிவ அமைப்புக் கோவில்,

⚡ வாழ்வில் அவசியம் ஒரு முறையாவது சென்று தரிசித்து பலன் பெற வேண்டிய ஆலயம்

நன்றி🙏

28.09.25 ஞாயிற்றுக்கிழமை
#சுப்ராம்தரிசனம்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#பிரதோஷக்குழுயாத்ரா 28.09.2025

மலையக்கோயில் -குலமங்கலம், நற்சாந்துப்பட்டி - திருவருள் காளீஸ்வரர் (மற்றும்) சுப்பிரமணிய சுவாமிக்கோவில். 28.09.25

#மலையக்கோயில் -குலமங்கலம், நற்சாந்துப்பட்டி - திருவருள் காளீஸ்வரர் (மற்றும்) சுப்பிரமணிய சுவாமி
மலையக்கோயில் -குலமங்கலம், நற்சாந்துப்பட்டி - திருவருள் காளீஸ்வரர் (மற்றும்) சுப்பிரமணிய சுவாமிக்கோவில்.

🗻மலையக்கோவில். ‘மலையில் கோவில்’ என்ற பெயரே தற்போது ‘மலையக்கோவில்’ என மருவி வழங்கப்படுகிறது.

அமைவிடம்:
💠நற்சாந்துப்பட்டி வடமேற்கில் உள்ளது.
நல்ல பாதை வசதியும் உள்ளது.

💠தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில், திருமயம் தாலுகாவில், புதுக்கோட்டை-பொன்னமராவதி சாலையில், நற்சாந்துபட்டி கிராமத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் மலையக்கோயில் என்னுமிடத்தில் மலையில் அமைந்துள்ளது.

💠பொன்னமராவதி செல்லும் பேருந்தில் ஏறி மலையக்கோவில் விலக்கில் இறங்கி, 1 கிலோமீட்டர் தூரம் நடந்தும் ஆலயத்தை அடையலாம். 

💠திருச்சியில் இருந்து 69 கிமீ தொலைவில் உள்ளது. புதுக்கோட்டையில் இருந்து மலையக்கோவிலுக்கு நேரடியாக நகரப் பேருந்து வசதி உள்ளது.

🔰மலையக்கோயில் முன்னர் ‘ஒருக்கொம்பு மலை’, ‘குறிஞ்சி கொத்த நாவல் குறிச்சி’, ‘திருநாவலங்கிரி’, ‘திருவோதிக்கால்’ என்ற பெயர்களால் அழைக்கப்பட்டது. 

🔰பல்லவர் ஆட்சி காலங்களில் கோயில்கள் மலைகளுக்குள்ளே செதுக்கப்பட்டன.
 இத்தகைய கோயில்களில் சிவன் கடவுள் உள்ள திருவருள் காளீசுவரர் சுப்பிரமணிய சுவாமி கோயில், மலையக்கோயில் மிகச்சிறப்பு வாய்ந்தது.

விஷேசமான தனித்துவமுடைய, சிவன் மற்றும் முருகன் கோவில்களின் குழு ஆகும். மலையின் மீதுள்ள கோவில் ‘மேற்கோவில்’ என்றும், மலையின் அடிவார கீழுள்ள கோவில் ‘கீழ்க்கோவில்’ என்றும் என இரண்டு கோவில் குழுக்களை கொண்டுள்ளது.

💠மலைக்கோயில் முருகனுக்காகவும், கீழக்கோயில் சிவனுக்காகவும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. 

இது கி.பி.2ஆம் நூற்றாண்டில் கட்டப்பெற்ற குடவரைக்கோயில் ஆகும்.

🔱கீழ்க்கோவில்கள் / அடிவாரக்கோவில்கள்:

🔱மலையின் அடிவாரத்தில் கிழக்கில் ஒரு குடவரைக் கோயிலும், 
தெற்கில் ஒரு குடவரைக் கோயில்களும், ஆக இரண்டு குடவரைக் கோயில்கள் உள்ளன. 

🔰புராண முக்கியத்துவம்
மலையக்கோவில் சோழர் மற்றும் பாண்டிய இராஜ்ஜியத்திற்கு இடையே உள்ள நிலையான எல்லையாக கருதப்படுகிறது.

🔰தெற்கு குகைக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டதால் சோழ நாட்டை (மேற்கு) நோக்கியதாகவும், கிழக்கு குகைக்கோயில் பாண்டியர்களால் கட்டப்பட்டதால் பாண்டிய நாட்டை (கிழக்கு) நோக்கியதாகவும் கூறப்படுகிறது. 

🔰மலையடிவாரத்தில் பாறை வெட்டப்பட்ட இரண்டு குகைக் கோயில்கள் உள்ளன.

⛳தெற்கு குடவரைக் கோவில் கருவறையையும், கருவறைக்கு முன்பாக முன் மண்டபத்தையும், அதை ஒட்டி மகா மண்டபத்தையும் கொண்டிருக்கிறது.

⛳தெற்குப் பாறை வெட்டப்பட்ட குகையிலும் அதைச் சுற்றியும் மற்ற நான்கு கட்டமைப்பு ஆலயங்களும் உள்ளன, இவை அனைத்தும் பிற்காலத்தில் தோன்றியவை.

⛳தெற்கு குகைக்கோயில் காளீஸ்வரர் சன்னதி, மலையின் தெற்குப் பாறையில் தோண்டப்பட்ட பாறையால் வெட்டப்பட்ட குகைக் கோயில் ஆகும். 

⛳தெற்கு குகைக்கோயில் 
கருவறை, அர்த்த மண்டபம், முகப்பு, மகா மண்டபம் மற்றும் முக மண்டபம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. 

⛳திறந்த தூண் முக மண்டபம் மகா மண்டபத்தை சூழ்ந்துள்ளது. இது தெற்கிலும் மேற்கிலும் நுழையலாம்.

 ⛳இம்மண்டபத்தின் தென்கிழக்கில் ஒரு மூடிய பிராகாரம் உள்ளது. மலைக்கொழுந்தீஸ்வரர் என்ற பாறையில் வெட்டப்பட்ட லிங்கம், 

⛳தாய்ப்பாறையில் செதுக்கப்பட்ட ஒரு சிறிய இடத்தில் உள்ளது. நவகிரகங்கள், சனீஸ்வரர் மற்றும் பைரவர் ஆகியோரின் சன்னதிகள் மற்றும் சிலைகளை இந்த பிராகாரத்தில் காணலாம்.

 ⛳தாய்ப்பாறையை ஒட்டி மேற்குப் பகுதியில் தட்சிணாமூர்த்தியும், சண்டிகேஸ்வரரும் காட்சியளிக்கின்றனர்.

⛳மகா மண்டபம் மூன்று பக்கங்களிலும் சுவர்களைக் கொண்டுள்ளது, தெற்குப் பக்கத்தில் நுழைவாயில் உள்ளது.

⛳ மண்டபம் இரண்டு வரிசை தூண்களால் தாங்கப்பட்டு இருபுறமும் மூன்று தூண்கள் உள்ளன. முகப்பில் நடுவில் இரண்டு தூண்களும், ஒவ்வொன்றின் முனைகளிலும் சதுரதூண்களும் உள்ளன.

 ⛳முகப்பில் அர்த்த மண்டபம் உள்ளது. 
மண்டபத்தின் மேற்குச் சுவரில் வலம்புரி விநாயகரையும், வடக்குச் சுவரில் ஜட முனிவரையும் காணமுடிகிறது. 

⛳அர்த்த மண்டபத்தின் மையத்தில் கருவறையை நோக்கியவாறு நந்தியைக் காணலாம். அர்த்த மண்டபத்தின் கிழக்குச் சுவரில் கருவறை தோண்டப்பட்டுள்ளது. கருவறை அர்த்த மண்டபத்திலிருந்து சற்று உயரத்தில் அமைந்துள்ளது மற்றும் பாறை வெட்டப்பட்ட இரண்டு படிகளின் விமானம் வழியாக அணுகலாம்.

 ⛳கருவறை வட்ட வடிவ ஆவுடையார் மீது வீற்றிருக்கும் லிங்க வடிவில் மூலவராக விளங்குகிறார். மேற்கு நோக்கிய மூலவர் காளீஸ்வரர் / திருவேங்கை கனலீசுபவர் / மலைய லிங்கம் / திருவருட் காலேஸ்வரர் / திருவோக்கலீஸ்வரமுடைய நாயனார் என்று அழைக்கப்படுகிறார். 

🪷அம்மன் சன்னதி :
தெற்குக் குடவரை கோவிலுக்கு எதிரில் ஆடவல்லானான சிவபெருமானின் தேவியாகிய உமையவளுக்கு - தர்சவர்த்தினி (அறம் வளர்த்த நாயகி) என்னும் பெயரால், வடக்கு நோக்கி அமைக்கப்பட்ட சன்னதியாக ஒரு கற்கோவிலும் அமைந்திருக்கிறது.

இந்த சன்னதி, (இடைக்கால சோழர்) பிற்காலச்சோழர்களது கலைப்பாணியில் அமைந்துள்ளது.

இக்கோயில் பாணியில் கட்டப்பட்டுள்ளது. 

♻️கிழக்குக் குடவரைக் கோயில் 

♻️மலை அடிவாரத்தில் உள்ள கிழக்கு குடவரைக் கோவிலின் வாயிற்படிக்கு தென்புறத்தில் பல்லவ கிரந்த எழுத்தமையில் ஒரு கல்வெட்டும் வாயிற்படிக்கு வடக்கில் எம்மண்டலமும் கொண்டருளிய குலசேகர பாண்டியனின் ஒரு கல்வெட்டும் காணப்படுகிறது.

♻️கிழக்கு குகைக் கோயில்: கிழக்குக் குகைக் கோயில் கருவறை மற்றும் நுழைவு மண்டபத்தைக் கொண்டுள்ளது.
கருவறையில் ஆவுடையாரில் ஒரு சிவலிங்கம் உள்ளது. தாய்ப்பாறையில் இருந்து லிங்கம் தோண்டி எடுக்கப்பட்டது.
லிங்கத்திற்கு எதிரே உள்ள பாறையின் மேற்பரப்பில் வலம்புரி விநாயகரின் சிற்பம் காணப்படுகிறது. இது கிழக்கு நோக்கியதாகவும், பிள்ளையார்பட்டி விநாயகரைப் போன்றே உருவச் சின்னமாகவும் உள்ளது. 

♻️கிழக்கு குடவரைக் கோவில் ஒரே கருவறையையும், கருவறையின் நடுவில் ஆவுடையாருடன் கூடிய லிங்கத்தையும் கொண்டதாகும். இக்கோவிலுள்ள சிவலிங்கம் மலைப்பாறையிலேயே செதுக்கப்பட்டிருக்கிறது. 

♻️குகையின் தெற்குப் பகுதியில் கிரந்த எழுத்தில் எழுதப்பட்ட கல்வெட்டு உள்ளது. இதில் பரிவதினி என்ற இசைக்கருவி வீணை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

♻️குகைக்கோயிலின் வாசல் படிகளில் குலசேகர பாண்டியரின் கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது. சிவபெருமான் கல்வெட்டில் ஸ்ரீவரமுடைய நாயனார் என்று அழைக்கப்படுகிறார்.

🔱மலை மீது முருகன்

🔱மலைக் கோயில் மீது நகரத்தாரால் முருகன் கோயில் கட்டப்பட்டது.

🔱மேற்கோவிலுக்கு ஏறுவதற்கும் இறங்குவதற்கும் சாரப்பாதை, படிவெட்டுப்பாதை என்ற இருவேறு பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

🔱மலையின் மேற்குச் சரிவில் நடைபாதைச் சாய்வு மற்றும் தெற்கே ஒரு குறுகிய படிகள் மூலம் கோயிலை அடையலாம். 

🔱படிக்கட்டுகளுக்கு அருகில் உள்ள கல்வெட்டின்படி, 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் நச்சாந்துபட்டியைச் சேர்ந்த ஒருவரால் இந்த மலைக்கோயில் கட்டப்பட்டது. 

🔱இக்கோயில் வளாகத்தில் மலை உச்சியில் முருகன் மற்றும் இடும்பன் கோயில்கள் உள்ளன. இந்த இரண்டு கோயில்களும் ஒரே வளாகத்திற்குள் இணைக்கப்பட்டுள்ளன. 

🔱இக்கோயில் வளாகம் மலை உச்சியில் அமைந்துள்ளதால் மேல கோவில் என்று அழைக்கப்படுகிறது. 

🔱மலையின் மீதுள்ள கோவில் ‘மேற்கோவில்’ என்றும் கூறுகிறார்கள்.

🔱மலையின் மீது ஒரே சுற்று மதிலுக்குள் முருகப்பெருமானுக்கும், முருகனது இணையடி பற்றி நின்ற இடும்பனுக்கும் எழுப்பப்பட்ட கோவில்கள், ஒரு குறுக்குச்சுவரால் தனித்தனிக் கோவில்களாகக் காட்சியளிக்கின்றன.

🔱இடும்பன் கோயில் முருகன் கோயிலின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது. 

🔱முருகன் கோயில் கிழக்கு நோக்கி உள்ளது. கருவறையை நோக்கிய முக மண்டபத்தின் முன் மயில், முருகன், பலிபீடம் மற்றும் துவஜ ஸ்தம்பம் ஆகியவற்றைக் காணலாம்.

 🔱கோயில் கருவறை, அர்த்த மண்டபம் மற்றும் திறந்த தூண் முக மண்டபம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

🔱அர்த்த மண்டபத்தில் விநாயகர் மற்றும் உற்சவர் சிலைகள் உள்ளன. கருவறையில் சுப்பிரமணியசுவாமி அவரது துணைவிகளான வள்ளி மற்றும் தெய்வானையுடன் கிழக்கு நோக்கியவாறு வீற்றிருந்து அருள்புரிகிறார். 

🔱பிரகாரத்தில் ஜடாமுனீஸ்வரருக்கு தெற்கு நோக்கிய சன்னதி உள்ளது. இந்த சிலை பிற்காலத்தில் இக்கோயிலில் இணைக்கப்பட்ட சமண சிலையாக இருக்கலாம்.

🔱இப்படி ஒவ்வொரு தெய்வங்களும் திசைமாறிய தெய்வங்களாக இக்கோவிலில் இருப்பது வியக்கத்தக்கதாக அமைந்துள்ளது.

🔱மலையேறியதும் அங்கு அர்த்தமண்டபத்தில் விநாயகர், உற்சவராக முருகப்பெருமான் ஆகியோர் உள்ளனர். கருவறையில் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமியாக முருகன் உள்ளார். தென் புறத்தில் இடும்பர் சன்னதி உள்ளது.

🔱முருகன் கோயிலுக்கு அருகில் உள்ள நீர்நிலை - சுனையை சரவணப்பொய்கை என்றழைக்கின்றனர்.

🔱கோவில் தொட்டி: இரண்டு பாறைகள் வெட்டப்பட்ட சன்னதிகளுக்கு இடையில் ஒரு கோயில் குளம் உள்ளது. இந்த தொட்டி அதன் நான்கு பக்கங்களிலும் படிகளுடன் மிகப்பெரியது

💟திருவிழாக்கள்
தை பூசம் ,திருப்பதி பூஜை, பங்குனி உத்திரம், கார்த்திகை தீபம் ஆகியவையும் இங்கு கொண்டாடப்படுகிறது.

💟காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத்துறை - நிர்வாகம்.

🔰திறந்திருக்கும் நேரம் *
காலசந்தி (காலை 9.00 மணி), உச்சிக்காலம் (நடுப்பகல் 12.00 மணி), சாயரட்சை (மாலை 6.00 மணி), அர்த்தசாமம் (இரவு 8.00 மணி) என்ற வகையில் நான்கு கால பூசைகள் இங்கு நடத்தப்பெறுகின்றன.

⚡ஆலயம் தனியாக உள்ளதால், சாதாரண நாட்களில், ஆலயம் குருக்கள் இருக்கும் போதுதான் தரிசிக்க இயலும். பூசை கால நேரம் மாறுகிறது.

🧘🏼‍♀️நம்பிக்கைகள்
 பௌர்ணமியின்போது பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர். தைப்பூசத் திருவிழா இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

🧘🏼‍♀️தெற்கு குகைக்கோயிலில் மேற்கு நோக்கிய சிவனை வழிபட்டால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. பிரதோஷ நாட்களில் சிவபெருமானை வலம்புரி விநாயகரை வழிபட்டால் காரியங்களில் இருந்த தடைகள் நீங்கும். குழந்தை பிறக்க முருகப் பெருமானிடம் பக்தர்கள் பிரார்த்தனை செய்கின்றனர்.

🧘🏼‍♀️மேற்கு திசையில் இருக்கும் சிவனை வேண்டினால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். அதைவிட ஒவ்வொரு பிரதோஷம் நாளில் அந்த சிவனையும் அதற்கு எதிரே உள்ள வலம்புரி விநாயகரையும் வேண்டினால், தடைபடும் காரியங்கள் சுமுகமாக முடியும் என்பது நம்பிக்கை.
நன்றி🙏வலை தளங்கள்

#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
மலைக்கோவில் என மலைக்க வேண்டாம். சாய்தளம் உள்ளது.
மிக அமைதியான இடம். சிறிய குன்று பாறைகளே உள்ளன. அழகிய குளம் ஒன்றும் உள்ளது. பெரிய வளாகம் .

சிறிய ஊர். எந்தத் கடைகளும் இல்லை. அருகில் உள்ள நற்சாந்துப்பட்டி என்ற ஊருக்கு வர வேண்டும்.

ஆலயப் பகுதியிலிருந்து 500 மீட்டர் தள்ளி கிழக்கில் சில வீடுகள் உள்ளன.

ஆலயம் தனியான மலைப்பகுதியில் இருக்கிறது. சாதாரண நாட்களில் யாரும் அங்கு இருப்பதில்லை. 

தகவல் தந்து சென்று தரிசிப்பதே நல்லது.

நன்றி🙏
28.09.25 ஞாயிற்றுக்கிழமை
#சுப்ராம்தரிசனம்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#பிரதோஷக்குழுயாத்ரா 28.09.2025

கல்வெட்டு செய்திகள்:

தெற்குக் கல்வெட்டு பரிவாதினி என்ற வீணையைப்பற்றிய சிறு குறிப்பை காட்டுகிறது. இது போன்று கல்வெட்டு குறிப்பு குடுமியான்மலை, திருமயம் ஆகிய இடங்களில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. குடவரையின் அமைப்பு, லிங்கத்தின் வடிவமைப்பு, குடவரை மண்டபத்தூணின் அமைவு, பல்லவ கிரந்த எழுத்தமையில் கல்வெட்டு முதலியவைகளை பார்க்கும்போது இக்குடவரை கி.பி. 7 அல்லது 8-ம் நூற்றாண்டிற்குரியனவாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இக்குடவரையை பற்றி ஆராய்ச்சியாளர்களிடத்தில் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.

இவ்விரு குடவரையிலுள்ள குலசேகரபாண்டியன், இரண்டாம் குலோத்துங்கன் கல்வெட்டுக்களில் இருந்து மலையக்கோவில் கானாட்டிற்கும் கோனாட்டிற்கும் பொது எல்லையில் அமைந்திருந்தது என்பதை அறியமுடிகிறது. இக்காரணத்தால் தான், கிழக்கு குடவரை கானாட்டை நோக்கியவாறு கிழக்கு நோக்கியும், 
தெற்குக் குடவரை கோனாட்டை நோக்கியவாறு, மேற்கு நோக்கியும், லிங்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

 சிவன், ஐயனார் போன்ற சைவக்கோவில்களுக்கு நிலத்தை தானமாக அளிக்கும்போது அந்நிலம் கோவில் நிலம் என்பதற்கு அடையாளமாக சூலக்கல் நடுவது மரபாகும். மலையக்கோவிலுக்கு அருகாமையில் இளங்கண்மாய் என்ற ஏந்தலின் உள்வாசல் மேட்டில், ‘முக்குடை, குத்துவிளக்கு, பூரணக்கும்பம்’ ஆகிய மங்கலச் சின்னங்கள் வரைகோட்டு உருவங்களாக பொறிக்கப்பட்டு, 
தரையில் ஊன்றப்பட்ட இரண்டு பலகைக் கற்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. 
இதன் மூலம் மலையக்கோவிலில் சமணப்பள்ளி ஒன்று இருந்திருக்க வேண்டும் என்பதை அறியமுடிகிறது. 

சமணப்பள்ளி இருந்ததற்கு ஆதாமலையக்கோவிலில் சடாமுனி, செம்முனி என்ற ஒரு தெய்வம் மக்களால் வணங்கப்படுவது ஆதாரமாக உள்ளது.

தெற்கு பாறை வெட்டப்பட்ட குகைக் கோயிலில் சுமார் மூன்று கல்வெட்டுகள் உள்ளன. ஆரம்பகால கல்வெட்டு இரண்டாம் குலோத்துங்க சோழனின் 10 ஆம் ஆண்டு (கிபி 1143) விற்பனை பத்திரத்தை பதிவு செய்கிறது. கல்வெட்டில் இக்கிராமம் குலமங்கலம் என்றும், மூலவர் திருவோகலீஸ்வரமுடைய நாயனார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மகா மண்டபத்தின் மேற்குச் சுவரில் உள்ள கல்வெட்டு கிபி 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது, தெய்வத்திற்கு செய்யப்பட்ட கொடையைப் பதிவு செய்கிறது. கல்வெட்டில் கிராமம் நாவலூர் என்றும், அதிபதி காளீஸ்வரமுதிய நாயனார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்குத் தூணில் உள்ள மற்ற கல்வெட்டு படிக்க முடியவில்லை. 

கிழக்குக் குகைக் கோயிலின் தெற்குப் பகுதியில் கிரந்த எழுத்தில் எழுதப்பட்ட கல்வெட்டு உள்ளது. இதில் பரிவதினி என்ற இசைக்கருவி வீணை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. கிழக்குக் குகைக் கோயிலின் வாசல் படிகளில் குலசேகர பாண்டியரின் கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது.
சிவபெருமான் கல்வெட்டில் ஸ்ரீவரமுடைய நாயனார் என்று அழைக்கப்படுகிறார்.
- நன்றி🙏
வலை தளங்கள்

நச்சாந்துப்பட்டி சிதம்பரேஸ்வரர்ஆலயம் , 28.09.25

நச்சாந்துப்பட்டி சிதம்பரேஸ்வரர்ஆலயம்
#நச்சாந்துப்பட்டி சிதம்பரேஸ்வரர்ஆலயம்

💠#நற்சாந்துபட்டி (Nachandupatti) என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள சிற்றூர் ஆகும்.
புதுக்கோட்டை - பொன்னமராவதி சாலையில் உள்ள ஊர்.

💠சென்னைக்கு நேரடி பேருந்து வசதி உள்ளது. புதுக்கோட்டை மற்றும் பொன்னமராவதி ஊர்களிலிருந்து பேருந்து சேவை அரசு மற்றும் தனியாரால் இயக்கப்படுகிறது. 

 ⛳இங்கு அதிகமாக நகரத்தார் இனமக்கள் வசிக்கின்றனர். பலவித திருவிழாக்களும், சமய சடங்குகள் பலவும் அவ்வப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும்.

⛳இந்த ஊரினைச் சுற்றி புதூர், கோட்டூர் போன்ற கிராமங்கள் உள்ளன.

⛳பல பிரபலமான வழிபாட்டு இடங்கள், கோயில்கள் நச்சாந்துபட்டியைச் சுற்றி உள்ளன. 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த கருப்பர் கோவில் பிரசித்தி பெற்றது. மலைக் கோவில் குமரன் கோவில் பிரசித்தம்.

⛳நற்சாந்துபட்டியின் உண்மையான பெயர் திருமலை சாம் உத்திரம் என்பதாகும். ஊமத்துரை (கட்டபொம்மனின் இளைய சகோதரர்) குடியிருக்க திருமயத்தில் ஒரு கோட்டை கட்டினார். அக்கோட்டையினைக் கட்டுவதற்கு தேவையான சாந்து, நச்சாந்துபட்டியிலிருந்தே கொண்டு வரப்பட்டது. ஆதலால் நல்ல சாந்து பட்டி என்ற அழைக்கப்பட்டது. பின்னர் நற்சாந்துபட்டி என்று மருவியது.

⛳இங்குள்ள பிரபலமான பெரிய சிவன் ஆலயம் சிவகாமி உடனுறை சிதம்பரேஸ்வரர் ஆலயமாகும்.

🛕ஆலய அமைப்பு :
முழுவதும் கற்றளி அமைப்பு. கிழக்குப் பார்த்து கம்பீரமாக இருக்கும் 7 நிலை ராஜகோபுரம், இருபுறமும், கனபதி, முருகன் தனி தனி சிறு சன்னதிகளுடன் உள்ளன. தென்புறம் அழகிய பெரிய குளம் அமைக்கப்பட்டுள்ளது.

🛕ராஜகோபுரம், அடுத்து வரும் பிரகாரம் தாண்டினால், முன்மண்டபத்துடன் உள்ள 5 நிலை உடைய கோபுரம். ஆலயம் உள்ளே நுழைந்தால் பலிபீடம், கொடிமரம், நந்தி உண்டு. கிழக்குப் பார்த்து சுவாமியும், தெற்குப் பார்த்து அம்பாளும் அருள் தருகிறார்கள்.

🛕தெற்குப் பிரகாரத்தில் 63 நாயன்மார்களின் விக்ரஹங்கள் உள்ளன
அருட்பத்து மூவர் எதிரே உள்ள கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா மற்றும் துர்க்கை உள்ளனர். இங்குள்ள தட்சிணாமூர்த்தி மிகஅழகாக வடிவமைக்கப்பட்டுள்ளார்.

🛕பிரகாரத்தை சுற்றி வரும்போது விநாயகர், சோமாஸ்கந்தர், முருகன், வள்ளி, தெய்வானையுடன் மற்றும் சரஸ்வதி, கஜலட்சுமி, சண்டிகேஸ்வரர், ஆகிய சன்னதிகள் உள்ளன.

🔰ஆலயம் உருவான வரலாறு :

♻️தனவணிகர்களான நாட்டுக்கோட்டை நகரத்தார்கள், சோழப்பேரரசின் வணிகத் துறைமுக நகரமான காவிரி பூம்பட்டினத்தில் இருந்து கிபி 13 ஆம் நூற்றாண்டு வாக்கில் பாண்டிய நாட்டிற்கு புலம்பெயர்ந்தவர்கள். 

💐இந்த நகரத்தார்கள் சமூகம் தங்களுக்கென ஒரு தனி பாரம்பரியத்தைக் கொண்டது. சைவத்தை தழுவிய நகரத்தார்கள் ஆதியும் அந்தமும் இல்லாத சிவபெருமானை தலைவராக ஏற்று வணங்குபவர்கள். ஊன், உடம்பு, அநித்தியம் என்ற கருத்தில் வேரூன்றியவர்கள். தாங்கள் அறவழியில் ஈட்டிய பொருளை தெய்வத்தொண்டின் மூலம் மக்களின் மனங்களை செம்மைப்படுத்தும் நோக்குடன் சிவ ஆலயங்களை உருவாக்குவதிலும், நலிந்த ஆலயங்களை புனரமைப்பு செய்வதிலும், அதை நிர்வகிப்பதிலும் முழு மனதுடன் ஈடுபடுபவர்கள்.

🪷புலம் பெயர்ந்த நகரத்தார்களுக்கு பாண்டிய மன்னனால் 9 சிவன் கோயில்கள் நகரத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. நகரத்தார்கள் அந்த 9 கோயில், அதன்உட்பிரிவுகளை சார்ந்து அறப்பணிகளை செய்து வருகிறார்கள்.

🪷இதில் ஐந்து கோயிலைச் சார்ந்த நகரத்தார்கள் (இலுப்பக்குடி, வைரவன் கோயில், இளையாத்தாகுடி, பிள்ளையார்பட்டி மற்றும் மாத்தூர்) திருமலை சமுத்திரம் என்னும் நச்சாந்துபட்டியில் சுமார் 17 ஆம் நூற்றாண்டில் இருந்து வசித்து வருகிறார்கள்.

🪷நகரத்தார்கள் நச்சாந்துபட்டிக்கு புலம்பெயர்ந்து வந்த போது இங்கு அரச மரத்தடியில் அமர்ந்திருந்த பிள்ளையார் ஒன்றே வழிபாட்டு தெய்வமாக இருந்து வந்தது. இது இன்று சின்ன ஊரணி பிள்ளையார் என்று அனைத்து ஜாதி மக்களின் வழிபாட்டில் இருந்து வருகிறது.

🪷கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற முதுமொழிக்கு இணங்க திருமலை சமுத்திரம் என்ற நச்சாந்துபட்டி நகரத்தார்கள் 1903 ஆம் ஆண்டு வாகில் தாங்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு சிவன் கோயிலை கட்ட புதுக்கோட்டை மன்னரிடம் இருந்து இட ஒதுக்கீடு பெற்றார்கள். பின் அனைத்து நகரத்தார்களின் பங்களிப்புடன் பெரிய கற்கோயிலாக சிவகாமி அம்மாள் உடனுறை சிதம்பரேசுவரர் திருக்கோயிலை 1928 ஆம் வாக்கில் உருவாக்கி நகரத்தாரின் வழிபாட்டுக்கு கொண்டு வந்தார்கள்.

🪷நச்சாந்துபட்டியில் வசித்து வந்த இந்த 5 கோயில் நகரத்தார்கள், மேற்படி கோயிலை உருவாக்கி, தங்கள்
வாழ்வாதாரம் மேம்பட ஆரம்பித்த உடன், பெருகிவரும் பொது சொத்துகளை பாதுகாத்து, ஆக்கப்பூர்வமான வழியில் பெருக்கி, நிலையான தர்மங்களை தொடர்ந்து செய்ய, நகரத்தார் சங்கம் என்ற புது அமைப்பு 1978 ஆம் ஆண்டு வாகில் உருவாக்கம் செய்தும், கோயில் பூசைகள், விழாக்களைத் தொய்வின்றி நடத்த ஏற்பாடு செய்தார்கள்.

🪷இதன் மூலம் சிவன் கோயிலில் ஐந்து கால நித்திய பூஜை தங்கு தடை இன்றி நடத்திக் கொண்டும், ஆலயத்தை 12 வருடத்திற்கு ஒரு முறை திருக்குட நன்னீராட்டு செய்தும், ஆகம விதிகளை பாதுகாத்து வருகிறார்கள்.

🪷இதில் மேலும் ஒரு மகுடமாக நகரத்தாரின் சீரிய முயற்சியோடும், பங்களிப்போடும், சிவகாமி அம்மை உடனுறை சிதம்பரேசுவரருக்கு, எழில் மிகு கல் மண்டபத்துடன் கூடிய ராஜகோபுரம் எழுப்பி அத்துடன் திருக்குட நன்னீராட்டு (2021ஆம் ஆண்டு) செய்துள்ளனர்.
சிவன் கோயில் விழாக்கள் அனைத்தும் உள்ளுர் பெரியோர்களாலும் நகரத்தார் சங்கத்தின் வழிகாட்டுதலோடு மிகச் சிறப்பாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது . 

🪷அரசர்கள் காலத்திற்குப்பின்பு ஆலயத் திருப்பணி செய்தவர்களில் முதன்மையானவர்கள் நகரத்தார்கள் என்று காஞ்சி மாமுனிவரால் பாராட்டப்பட்டவர்கள்.  
💐நகரத்தார்கள் உலகில் எல்லா இடங்களுக்கும் சென்று தொழில் செய்து சிறப்புற்று வாழ்வதோடு மட்டுமல்லாது, சென்ற இடமெல்லாம் சிறப்பு சேர்த்து, சமய உணர்ச்சியை பரப்பி, புராதனக் கலைச்செல்வத்தைப் போற்றி தேசத்தின் பண்டையப் பெருமை, பண்பாடுகளை பாதுகாத்து மொழி, தேச அமைப்புகளை
வளர்ப்பவர்கள்; மனதில் கொண்ட காரியங்களை அற்புதமாக, சாமர்த்தியமாக சாதித்துக்காட்டிவரும் நகரத்தார்கள் சமூகம் போற்றத்தக்கது🙏

#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️

சிறிய ஊர். பெரிய கடைகள் ஏதும் இல்லை. நிறைய வீடுகள் உள்ளன.

ஆலயம் 12 மணிக்குள் நடை சாத்தி 4. மணிக்கு திறக்கிறார்கள். 

ஆலயம் மிகவும் தூய்மையான பராமரிப்பில் உள்ளது.

நன்றி🙏
28.09.25 ஞாயிற்றுக்கிழமை
#சுப்ராம்தரிசனம்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#பிரதோஷக்குழுயாத்ரா 28.09.2025

திருமயம் கோட்டை பைரவர் ஆலயம், திருமயம் 28.9.25

திருமயம் கோட்டை பைரவர்
திருமயம் கோட்டை பைரவர்
கோட்டை பைரவர், திருமயம் 28.9.25
காவல் தெய்வம்
எப்போதும் திறந்து இருக்கும்.

கோட்டை கால பைரவர் கோவில் திருமயம் மறவன் கோட்டை அடிவாரத்தில் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.

பைரவர் இங்கு வடக்கு நோக்கி நின்று தரிசனம் தருவது மிகவும் சிறப்பானது.

ஊரின் காவல் தெய்வம் மட்டும் அல்ல. சாலையில் வாகனங்களில் செல்லும் பயணிகளின் காவல் தெய்வமாக உள்ளார்.

இந்த பைரவரை இஷ்ட தெய்வமாக வழிபடும் பக்தர்கள் மிகவும் அதிகமாக உள்ளனர்.

வழிபடும் பக்தர்கள் அனைவரையும் பாதுகாக்கும் தெய்வமாக உள்ளார்.

நன்றி🙏
28.09.25 ஞாயிற்றுக்கிழமை
#சுப்ராம்தரிசனம்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#பிரதோஷக்குழுயாத்ரா 28.09.2025

சாக்கோட்டைஅருள்மிகு வீரசேகரர் திருக்கோயில், 28.09.25

சாக்கோட்டை
அருள்மிகு வீரசேகரர் திருக்கோயில்,
#சாக்கோட்டை
அருள்மிகு வீரசேகரர் திருக்கோயில், சாக்கோட்டை-630 108, சிவகங்கை மாவட்டம்.
அறந்தாங்கி - காரைக்குடி பிரதான சாலையில் உள்ளது.
தல சிறப்பு: இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.

பொது தகவல்: இங்கு இறைவனுக்கு புழுங்கல் அரிசி சாதம் நைவேத்யம் செய்யப்படுகிறது. இத்தலவிநாயகர் விக்கிரம விஜய விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

வீரசேகர சுவாமியும், அம்பாள் உமையாம்பிகையும் தனித்தனி சன்னதிகளில் அருளுகின்றனர். இங்குள்ள பைரவர் இரட்டை நாய் வாகனங்களுடன் காட்சி தருவது சிறப்பு. 9 நிலையுடன் ராஜகோபுரமும் இருக்கிறது.

பிரார்த்தனை: புத்திர தோஷம் உள்ளவர்கள், கண் நோய் உள்ளவர்கள் இங்கு வேண்டிக்கொண்டால் நிவர்த்தியாவதாக நம்பிக்கை.

நேர்த்திக்கடன்: அம்பாளுக்கு தாலிப்பொட்டு சாத்தி நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். வாய்பேச முடியாதவர்கள், திக்குவாய் உள்ளவர்கள் இங்கு வந்து சுவாமிக்கு மணி கட்டி வழிபட்டு மன ஆறுதல் பெறுகின்றனர்.

தலபெருமை:  
தலவிருட்ச சிறப்பு: ஒரு சமயம், இங்கு வந்த பாண்டிய மன்னன் ஒருவர், சிவன் நிகழ்த்திய அதிசயம் குறித்து நம்பாமல் சந்தேகம் கொண்டான். அவர் சுவாமியை முதல் முறை வலம் வந்தபோது, அங்கிருந்த வீரை மரம், பலா மரமாக மாறியது. மன்னன், திகைப்புற்று சிவனை வணங்கி மன்னிப்பு கேட்டான். அம்மரத்திலிருக்கும் கனியை உண்டால், அவனது நோய்கள் தீரும் என்று கூறி சுவாமி அருளினார். மன்னர், அப்பழத்தை உண்ட பிறகு, அம்மரம் மீண்டும் வீரை மரமாகவே மாறியது. சிவனை வணங்கிவிட்டு, இம்மரத்தை வணங்கினால் எண்ணியது நிறைவேறும் என்பது நம்பிக்கை.

புழுங்கல் அரிசி நைவேத்தியம்:

 மதுரையில் பாண்டிய மன்னரிடம் பணியாற்றிய மாணிக்கவாசகர் குதிரைகள் வாங்க சென்றபோது, இவ்வழியே சென்றார். அப்போது, சிவனுக்கு தன்னிடமிருந்த புழுங்கல் அரிசியை சமைத்து நைவேத்யமாக படைத்தார். அன்று முதல், இங்கு புழுங்கல் அரிசி சாதமே நைவேத்யமாக படைக்கப்படுகிறது.

ஆசைக்கு தண்டனை: 
ஒருசமயம், குழந்தை இல்லாத பக்தர் ஒருவர் தன்னிடமிருந்த பசுக்களில் சிலவற்றை அந்தணர் ஒருவருக்கு தானமாக கொடுத்துவிட்டு, மீதியை மற்றொருவருக்கு விற்று விட்டார். அந்தணரின் வீட்டில் நின்ற பசுக்கள், விற்கப்பட்ட பசுக்களை தேடிச் சென்று விட்டன. பசுக்களை வாங்கியவர், அவற்றையும் தொழுவத்தில் கட்டி விட்டார். இதையறிந்த அந்தணர் அவரிடம் சென்று, தனது பசுக்களை தரும்படி கேட்டார். பசுக்களை வாங்கியவர் அதிக ஆசையால் தராமல் வாக்குவாதம் செய்தார். இவ்வழக்கு மன்னனிடம் சென்றது. மன்னன், இத்தலத்து சிவனை சாட்சியாக வைத்து, உண்மை கூறி, தீர்த்தத்தில் மூழ்கி எழும்படி கூறினார். அதன்படி, இருவரும் தீர்த்தத்தில் மூழ்கி எழுந்திட அந்தணரை ஏமாற்றியவன் தனது கண்களை இழந்தான். பின், அவன் பசுக்களை திருப்பி ஒப்படைத்து சிவனிடம் மன்னிப்பு பெற்றான். இவ்வாறு, அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட்டு அவர்களை ஏமாற்றுபவர்களை இத்தலத்து இறைவன் உடனடியாக தண்டிப்பவராக இருக்கிறார்.

தல வரலாறு: முன்னொரு காலத்தில் வனமாக இருந்த இப்பகுதிக்கு வந்த வேடுவன் ஒருவன், ஒருமரத்தின் அருகிலிருந்த வள்ளிக்கிழங்கு கொடியை கடப்பாரை கொண்டு தோண்டினான். அந்த இடத்தில் இருந்து ரத்தம் பீறிட்டது. ஆச்சர்யமடைந்த அவன், நிலத்திற்கு கீழே பார்த்தபோது, லிங்கம் ஒன்று இருந்தது.

சிவன் நிகழ்த்திய இந்த அதிசயத்தை வேடுவன் மன்னரிடம் கூறினான். இதைக்கேட்டதுமே, குஷ்டநோயால் பாதிக்கப்பட்டிருந்த மன்னர் குணமானார். சிவனின் திருவிளையாடலை அறிந்த மன்னர் இவ்விடத்தில் கோயில் கட்டினார்.

திருவிழா: ஆனி, ஆடியில் பத்து நாள் விழா, சிவராத்திரி, கந்தசஷ்டி.

#சுப்ராம் 28.09.25 
28.09.25 (காலை 11.55 Locked )

கண்டனூர்சிவன்கோவில் ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் , 28.09.25

கண்டனூர்சிவன்கோவில் 
ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம்
#கண்டனூர்சிவன்கோவில்

🔰தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில், காரைக்குடி தாலுக்காவில் உள்ள கண்டனூர் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலாகும்.

🛕இந்த கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் பிரதி போல, நகரத்தார் சமூகத்தினரால் கட்டப்பட்டது.

🔱சிவன் சுந்தரேஸ்வரராகவும், பார்வதி அம்மன் மீனாட்சி அம்மனாகவும் இருக்கும் இக்கோயில் காரைக்குடிக்கு வடகிழக்கே சுமார் 9 கிமீ தொலைவில் உள்ள கண்டனூரில் அமைந்துள்ளது.

🛕இந்தக் கோயில் மிகவும் பழமையானது அல்ல, சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு உள்ளூர் நகரத்தார் சமூகத்தினரால் கட்டப்பட்டது , அவர்கள் இன்றுவரை கோயிலைப் பராமரித்து நிர்வகித்து வருகின்றனர். இந்தக் கோயிலுடன் தொடர்புடைய புராண ஸ்தல புராணம் எதுவும் இல்லை.

🛕இந்தக் கோயில் கண்டனூரில் அமைந்திருப்பதால், இங்குள்ள சிவன் கண்டீஸ்வரர் மற்றும் கண்டனீசுவரர் என்றும் அழைக்கப்படுகிறார். 

அமைப்பு :
🛕கிழக்கு நோக்கிய கோயிலின் கிழக்கே ஒரு பெரிய குளமும், தீர்த்தத்திற்கும் கோயிலின் ராஜ கோபுரத்திற்கும் இடையில் ஒரு மூடப்பட்ட பாதையும் உள்ளது. நுழைவாயிலில் அழகிய மரவேலைப்பாடுகளுடன் கூடிய பிரமாண்டமான கதவுகள் உள்ளன, அதைத் தொடர்ந்து வெளிப்புற பிரகாரம், பின்னர் மகா மண்டபம்.

🛕மகா மண்டபத்தின் உள்ளே மற்றொரு பிரகாரம் உள்ளது, அதில் துவஜஸ்தம்பம், பலி பீடம், நந்தி மண்டபம் மற்றும் மூலவர் மற்றும் அம்மன் சன்னதிகள் எழுப்பப்பட்ட மண்டபத்தில் அமைந்துள்ளன. இந்த மண்டபத்தில் வழக்கமான நகரத்தார் / செட்டிநாடு பாணி கட்டிடக்கலையில் கட்டப்பட்ட பல தூண்கள் உள்ளன .

🛕இதற்கு அப்பால் பிரதோஷ நந்தி உள்ளது, அதைத் தொடர்ந்து முன்னால் அர்த்த மண்டபம் மற்றும் கர்ப்பக்கிரகம் மற்றும் வலதுபுறத்தில் அம்மன் சன்னதி உள்ளது. அர்த்த மண்டபத்தின் உள்ளே நடராஜர் சபை மற்றும் சோமாஸ்கந்தர் சன்னதியும் உள்ளன. மூலவரை நோக்கி ஒரு பித்தளை நந்தி மற்றும் தர்ப்பணம் உள்ளன.

🛕தெற்குப் பிரகாரத்தில் 63 நாயன்மார்களின் விக்ரஹங்கள் உள்ளன
அருட்பத்து மூவர். எதிரே உள்ள கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா மற்றும் துர்க்கை உள்ளனர். இங்குள்ள தட்சிணாமூர்த்தி அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளார், குறிப்பாக அவர் அமர்ந்திருக்கும் ஆலமரத்தின் கீழ்.
பிரகாரத்தை சுற்றி வரும்போது விநாயகர், காசி விஸ்வநாதர், விசாலாக்ஷி அம்மன், சோமாஸ்கந்தர், சந்தான கோபால கிருஷ்ணன், முருகன், வள்ளி, தெய்வானையுடன் சரஸ்வதி, கஜலட்சுமி, சண்டிகேஸ்வரர், சரபேஸ்வரர் ஆகிய சன்னதிகள் உள்ளன. தனி நவக்கிரகம் சன்னதி உள்ளது.

🛕நீண்ட தாழ்வாரங்களில் உள்ள கட்டிடக்கலை பிரமிக்க வைக்கும் மற்றும் பிரமிக்க வைக்கும் வகையில் உள்ளது! அவை மிகவும் அற்புதமாகவும் சரியாகவும் சீரமைக்கப்பட்டிருப்பது மட்டுமல்லாமல், அவை ஒவ்வொன்றும் ஒரு புராணத்திலிருந்து ஒரு வித்தியாசமான தெய்வம் அல்லது காட்சியைக் கொண்டுள்ளன, அவை கல்லில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன .
அதன் பெரிய அளவு இருந்தபோதிலும், கோயில் சுத்தமாகவும் நன்றாகவும் பராமரிக்கப்படுகிறது, பெரும்பாலான  நகரத்தார் கோயில்களைப் போலவே இதுவும் ஒன்று.

🛕இக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. நகரத்தாரால் இக்கோயில் கட்டப்பட்ட வரலாறு உண்டு.

🛕இக்கோயிலில் ஏழு நிலை கொண்ட ராஜகோபுரம் உட்பட மொத்தம் ஏழு கோபுரங்கள் உள்ளன.
இக்கோயிலில் சுந்தரேஸ்வரர், மீனாட்சி சன்னதிகளும், கணபதி, முருகன், மகாலெட்சுமி, பைரவர், அறுபத்துமூவர், காசிவிஸ்வநாதர், சந்தானகோபாலன், சரஸ்வதி உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் தேர் உள்ளது.

 🔰இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.

💠பூசைகள்
இக்கோயிலில் காரணாகம முறைப்படி வழிபாடு நடக்கிறது. ஆனி மாதம் பிரம்மோச்சவம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. ஆடி மாதம் ஆடிப்பூரம் திருவிழாவாக நடைபெறுகிறது.

#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️

♻️கண்டனூர் ஆலயம் முன்புறம் பெரிய குளம் மற்றும் ஆலய தோற்றம் மிகவும் அற்புதமானது. கிழக்கு நோக்கிய கம்பீரமான ராஜகோபுரம் முன் மண்டபம் ஓவியம் மற்றும் இடது வலது புறங்களில் தண்டபாணி விநாயகர் தெய்வ தனி சன்னதிகள் அருமையாக உள்ளது.

♻️பெரிய ஆலயம். இரண்டு பிரகார அமைப்புடன் ஒவ்வொரு சன்னதியிலும் அதன் விசேட நாள் குறித்த விபரம் தனித்தனியாக எழுதி வைத்துள்ளது சிறப்பு.

♻️தூய்மையாகவும், பக்திபூர்வமாகவும் பராமரித்து வருகிறார்கள்.

♻️ஆலயம் அருகில் வாகனங்கள் நிறுத்த இடவசதிகள் உண்டு.

நன்றி🙏
28.09.25 ஞாயிற்றுக்கிழமை
#சுப்ராம்தரிசனம்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#பிரதோஷக்குழுயாத்ரா 28.09.2025

அழகாபுரி மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் 28.9.25

அழகாபுரி மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம்

#அழகாபுரிமீனாட்சிசுந்தரேஸ்வரர்ஆலயம்.

⛳காரைக்குடி - அறந்தாங்கி பிரதான சாலையில், கோட்டையூரிலிருந்து கிழக்கில் 2 கி.மீ தூரத்தில் உள்ளது. சாலையில் உள்ள அழகிய நாச்சியம்மன் ஆலயம் பின்புறம் சிவன் ஆலயம் உள்ளது.

🛕ஆலயம் கிழக்கு நோக்கியது. 3 நிலை ராஜகோபுரம் அடுத்து, ஆலயம் உள்ளே
பலிபீடம், நந்தி அடுத்து பைரவர், அம்பாள் தெற்கு நோக்கியும், சுவாமி கிழக்கு நோக்கியும் தனித்தனி சன்னதிகளில் அமைக்கப்பட்டுள்ளது.

🛕ஒரே பிரகாரத்தில், அழகிய தெட்சினாமூர்த்தி, சேக்கிழாருடன் நால்வர், லிங்கோத்பவர், வள்ளி தெய்வானையுடன் ஆறுமுகனார் மயில்வாகனத்துடன், மகாலெட்சுமி, சண்டிகேஸ்வரர் உள்ளனர்.

🛕இவ்வாலயம், 1954 ல் அழகாபுரி பிள்ளையார்பட்டி கோவில், ராம. பி. அரு. அழகப்ப செட்டியார் அவர்களால், தமது சொந்தமாகத் தொடங்கப் பெற்று, அவரது மனைவி அழ. தெய்வானை ஆச்சியால் பூர்த்தி செய்யப்பட்டு, 7.5.1954 அன்று மகா கும்பாபிஷேகம் செய்யப்பெற்றது. மீண்டும் 2.07.2014 ல் அழ .தெய்வானை ஆச்சியின் பேரன் அவர்களாலும் கும்பாபிஷேகம் செய்யப்பட்டுள்ளது.

🪷ஆலயம் தூய்மையாகவும், முறையான பூசைகளுடனும் பராமரிக்கப்பட்டு வருகிறது.

#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️

♻️பிரதானசாலையில் உள்ள அழகிய நாச்சியம்மன் ஆலயம் அருகில்
வாகனங்களை பிரதான சாலை ஒட்டி நிறுத்திவிட்டு நடந்து சென்று தரிசிக்கலாம்.

♻️அருகில் சில வீடுகள் மட்டுமே உள்ளன.
கடைகள் ஒன்றும் இல்லை

நன்றி🙏
28.09.25 ஞாயிற்றுக்கிழமை
#சுப்ராம்தரிசனம்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#பிரதோஷக்குழுயாத்ரா 28.09.2025

கோட்டையூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் 28.9.25

கோட்டையூர்
மீனாட்சிசுந்தரேஸ்வரர் ஆலயம்
#கோட்டையூர்
மீனாட்சிசுந்தரேஸ்வரர் ஆலயம்
🔰காரைக்குடி - அறந்தாங்கி பிரதான சாலையில் கோட்டையூரில் உள்ளது.

🛕கிழக்குப் பார்த்த ஆலயம்.
தெற்குவாசல் கோபுரம் வழியில் நுழைவு தென்புறம் பெரிய குளம் உள்ளது. படித்துறையில் ஒரு பிள்ளையார் ஆலயம்.
தரிசித்து கோபுரம் நுழைந்தால் ஆலய பிரகாரம். 
🛕சுவாமி சுந்தரேஸ்வரர் கிழக்குப் பார்த்தும், அம்பாள் மீனாட்சி தெற்குப் பார்த்தும் அமைப்பு

🛕கொடிமரம் , நந்தி வணங்கி சுவாமி கருவரை உள் மண்டபத்தில் நடராஜர் சன்னதி  நடராஜர், அம்பாள், மாணிக்கவாசகர் உள்ளனர்.

🛕கருவரை சுற்றுப் பிரகாரத்தில், சோமஸ்கந்தமூர்த்தி, லிங்கோத்பவர் எதிரில் வள்ளிதெய்வானையுடன் முருகர், மகாலெட்சுமி அடுத்து சரஸ்வதி சன்னதிகள். அலங்கரமண்டபம். முழுவதும் கற்றளி ஆலயம்.  ♻️தூய்மையாகவும், பத்தி உணர்வுடனும் அமைந்துள்ளது.

♻️பொதுவாக நகரத்தார் வசிக்கும் அல்லது, அவர்கள் அமைத்துப் பராமரிக்கும் 
எல்லாக் கோயில்களிலும் ஊருணி சுத்தமாக இருக்கும்.குளம் என்பதனை செட்டிநாட்டு வழக்கில் ஊருணி என்கிறார்கள். இதன் பொருள் ஊருக்கு உண்பதற்காக உள்ள நீர் தான் ஊருணி. அதில்யாரும் குளித்தோ, துவைத்தோ, கைகால் சுத்தம் செய்யவோ கூடாது. அதில் எல்லாரும் கட்டுப்படுகிறார்கள். அதனாலேயே அது சுத்தமாக உள்ளது ஒவ்வொரு கோவிலிலும், இதனை மற்ற எல்லா ஊர்களும் கடைப்பிடித்தால் எவ்வளவு நல்லது

♻️அடுத்து உற்சவ சிற்பங்கள் எல்லாமே புதுசு போல் பளபள என்று இருக்கும். ஊருணி மண் எடுத்து காயவைத்து சலித்து தேய்த்து பின் புளி கொண்டு தேய்த்து ஊருணி நீரில் அலம்பிவிடுவார்கள்.

♻️எல்லாக் கோயில்களிலும் கொடுங்கைகள், சிற்பங்கள் அன்றுதான் செதுக்கியது போல் புதுப் பொலிவுடன் இருக்கும்,  நல்ல பராமரிப்பு. விளக்குக் கூட கண்ட கண்ட இடங்களில் ஏற்றி எண்ணெய்ப்பிசுக்கு இல்லாமல் ஒரு பெரிய அலுமினிய டிரேயில் மண்நிரப்பி அதில் தீபம் ஏற்றுகின்றனர்.

♻️இவ்வூரானது கோட்டை போன்ற வீடுகள் நகரத்தார்களால் பாரம்பரியமான முறையில் கட்டப்பட்டுள்ளதால் இவ்வூர் கோட்டையூர் என்று அழைக்கப்படுகிறது. இவ்வூரில் அமைந்துள்ள பெண் தெய்வமான கோட்டை நாச்சியம்மன் ஆலயம், மற்றும் ஒரு பைரவர் ஆலயமும்  சிவன் ஆலயம் அருகில் உள்ளது.

♻️கோட்டை நாச்சியம்மன் பெயரில் இவ்வூர் கோட்டையூர் என்று அழைக்கப்படுகிறது.

♻️கோட்டையூர் அருகில்
கல்லாங்குடியில் அமைந்துள்ள திருபாகதீஸ்வரர் திருகோவில் பிற்கால பாண்டியர்களால் கட்டப்பட்டதாகும், கோட்டையூர் பகுதியில் அமைந்துள்ள வயல்நாச்சியம்மன் கோவில் ஏழூர் செவ்வாய் திருவிழா இப்பகுதியில் நடைபெறும் முக்கிய திருவிழாவாகும் சித்திரை மாதம் நடைபெறும் இத்திருவிழாவிற்கு ஏழு கிராமங்களை உள்ளடங்கிய மக்கள் வழிபடுவர். 

♻️கல்வி தந்தை டாக்டர். ராம. அழகப்பச் செட்டியார் கோட்டையூரில் பிறந்தவர். அழகப்பா பல்கலைக்கழகம் மற்றும் அழகப்பா கல்விநிலையங்கள் கோட்டையூர் அருகாமையில் அமைந்துள்ளது. 

♻️கோட்டை போன்ற வீடுகள் இங்கு மிக அதிகம்.  பாரம்பரிய செட்டிநாடு அரண்மனை வீடுகள் கோட்டையூர் அருகாமையில் அமைந்துள்ளது.

#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️

💠பிரதான சாலை ஓரத்தில் ஆலயம் அமைந்துள்ளது. அருகே , கோட்டை நாச்சியம்மன் ஆலயமும் அதன் உள்ளே தனியாக  கற்பக விநாயகர் சன்னதியும் உள்ளது. இரண்டும் கிழக்கு நோக்கிய சன்னதிகள்.

💠அடுத்து ஒரு பைரவர் ஆலயம் ஒன்றும் அருகில் உள்ளது. கேரள ஆலயம் அமைப்பில் பெரிய உள் முற்றம் கொண்டது.  அதன் நடுவில் மண்டபமும், கருவரையுடன் கூடிய பைரவரும் உள்ளார்.

♻️நாங்கள் அனைத்து ஆலயங்களையும் தரிசித்தோம்.
♻️வாகனங்கள் சாலை அருகில் உள்ள திடலில் நிறுத்தலாம்.
♻️பெரிய கடைகள் எதுவும் அருகில் இல்லை.

நன்றி🙏
28.09.25 ஞாயிற்றுக்கிழமை
#சுப்ராம்தரிசனம்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#பிரதோஷக்குழுயாத்ரா 28.09.2025


வேலங்குடி கண்டீஸ்வரர்ஆலயம் நகரத்தார் ஆலயம் ஒன்பதில் இதுவும் ஒன்று அ /மி. கண்டீஸ்வரர் - காமாட்சி அம்மன் ஆலயம், வேலங்குடி

வேலங்குடிகண்டீஸ்வரர்ஆலயம்

#வேலங்குடி கண்டீஸ்வரர்ஆலயம்
நகரத்தார் ஆலயம் ஒன்பதில் இதுவும் ஒன்று.
அ /மி. கண்டீஸ்வரர் - காமாட்சி அம்மன் ஆலயம், வேலங்குடி

⛳காரைக்குடியிலிருந்து பள்ளத்தூர் செல்லும் வழியில் 9 கி.மீ தொலைவில் வேலங்குடி உள்ளது. 
⛳ பழங்காலத்தில் வேலமரங்கள் மிகுதியாக இருந்ததால் இவ்வூர் இப்பெயர் பெற்றது. 

⛳கோட்டையூரின் ஒரு பகுதியில் இந்த ஊர் உள்ளது.
சுவாமியின் திருநாமம் : கண்டீசர், 
அம்பாள் :காமாட்சி

⛳இது ஒரு தேவார வைப்பு தலமாகும் , இது அப்பரின் பதிகங்களில் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது . 

🛕ஆலய அமைப்பு :
செட்டிநாடு பகுதியில் அமைந்துள்ள 9 நகரத்தார் கோயில்களில் இதுவே மிகச் சிறியதாக இருக்கலாம். சிறிய அளவிலான கோயில் தூண்கள் சிறந்த நகரத்தார் பாணி கட்டிடக்கலையைக் கொண்டிருக்கிறது. இந்தக் கோயில், அதன் உட்புறங்கள் மற்றும் கட்டிடக்கலை ஆகியவை தெளிவாக நகரத்தார் பாணியில் உள்ளன, மேலும் செட்டிநாடு பகுதியில் உள்ள பெரிய மற்றும் மிகவும் பிரபலமான கோயில்களுடன் ஒத்துப்போகின்றன .

🛕வேலங்குடி கோவில் முன் புறம் மூன்று நிலைகள் கொண்ட சிறிய ராஜ கோபுரத்துடன் உள்ளது. எதிரே அழகிய ஊருணி. கோயில் கிழக்கு நோக்கி உள்ளது, அங்கு பல படிகள் நம்மை ராஜ கோபுரத்திற்கு அழைத்துச் செல்கின்றன.

🛕இது, கோயிலின் மற்ற பகுதிகளுடன் சேர்ந்து, அருகிலுள்ள தரை மட்டத்திலிருந்து குறிப்பிடத்தக்க உயரத்தில் உள்ளது. இருப்பினும், இந்த பாதை பொதுவாக சிறப்பு நிகழ்வுகளுக்கு மட்டுமே திறக்கப்படும் வாயில்களால் தடுக்கப்படுகிறது. மற்ற நாட்களில், கோயிலுக்குள் நுழைவது தெற்குப் பக்கத்தில் உள்ள ஒரு தனி நுழைவாயிலிலிருந்துதான்.

🛕தெற்கு நுழைவாயிலைப் பயன்படுத்துவதன் மூலம், நாம் நேரடியாக உள் பிரகாரத்திற்குள் சென்று, அம்மன் சன்னதியை நோக்கிச் செல்கிறோம். இது கர்ப்பக்கிரகத்துடன் சேர்ந்து, 3 அல்லது 4 படிகள் உயரத்தில், யானைச் சிற்பங்கள் கைப்பிடிச் சிற்பங்களாகக் காணப்படுகின்றன. 

🛕கொடிமரம் (துவஜஸ்தம்பம்), பலிபீடம் மற்றும் பிரதோஷ நந்தி ஆகியவற்றைக் கொண்ட மண்டபத்தில், அடிப்படை நிவாரண வேலைப்பாடுகளைக் கொண்ட பல தூண்கள் உள்ளன. கோஷ்டம் மற்றும் பிரகாரத்தில் வழக்கமான தெய்வங்கள் உள்ளன. கோயிலில் விரிவான கட்டிடக்கலை மற்றும் சிற்ப வேலைப்பாடுகளும் உள்ளன. படிக்கட்டுகளும் கோவிலினுள்ளே , நந்தி, உள்ளே சுவாமி சண்டீசர் அற்புத தரிசனம்,

🛕உள் மண்டபமேடையில் தில்லையம்பலவனும் சிவகாமி அம்மையும் செப்புத் திருமேனி. அருகில் மாணிக்கவாசகர். அவருடன் அருகில் யோக தண்டமும் இருக்கிறது. 

🔰இந்த தண்டத்தின் வரலாறு மிகச் சிறப்பு வாய்ந்தது. நகரத்தார்களுக்கு உபதேசம் கொடுக்கும் குருவுடையதாம், இந்த தண்டம். 

🛕அம்பாள் காமாக்ஷிக்கு தனிச் சந்நிதி. கோஷ்டங்களில் தக்ஷிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரும்மா ஆகியோர் அருள்பாலிக்கிறார்கள். சமயக் குரவர் நால்வருடன் “ஐவராக சேக்கிழாரும் இருக்கிறார். பைரவருக்குத் தனிச் சந்நிதி.
 
🛕தலபுராணம்:
இங்குள்ள ஸ்தல புராணம் பாரி என்ற பாண்டிய மன்னனைப் பற்றியது . ஒரு நாள், மன்னர் வேட்டையாடச் சென்றிருந்தபோது, ​​முயல் ஒரு குழிக்குள் ஓடுவதைக் கண்டார். இது மிகவும் விசித்திரமாக இருப்பதைக் கண்டறிந்த மன்னர், அந்த குழியின் கீழ் என்ன இருக்கிறது என்பதைத் தேடுமாறு தனது வீரர்களுக்கு உத்தரவிட்டார். ஆண்கள் கம்பிகளால் தரையில் அடித்தபோது, ​​ஒரு உலோக சத்தம் கேட்டது. வீரர்கள் கவனமாக அந்த இடத்தைத் தோண்டி, உள்ளே அம்மனின் சிலையைக் கண்டனர். இந்த மூர்த்தி முதலில் பள்ளத்தூரில் நிறுவப்பட்டது, பின்னர் வேலங்குடிக்கு கொண்டு வரப்பட்டு இந்த கோவிலில் நிறுவப்பட்டது.

கிளாமடம் சுவாமிகள்:

🧘🏼கிளாமடம் சுவாமிகள் என்பவர், ஆண்களுக்கும், பெண்களுக்கு துலா ஊர் சுவாமிகள் உபதேசம் தருவாராம். ஒரு சமயம் இரு குரு மார்களும் தீர்த்த யாத்திரையாக காசிக்குப் போனபோது அங்கு பல கோயில்களைத் தரிசித்து விட்டு, துலா ஊர் சுவாமிகள் திரும்பிவிட்டார். ஆனால் கிளாமடம் சுவாமிகள் பல வருடங்களாகியும் திரும்பாமல் இருந்ததால் அவர் இயற்கை எய்தி விட்டார் என்ற புரளியும் கிளம்பி விட்டதாம். இதனால் ஆண்களுக்கு யார் உபதேசம் தருவார்கள் எனக் கவலையுற்றனர். பிறகு எல்லாரும் கூடி ஏகமனதாக திருப்புனவாசல் சுவாமியை குருவாக ஏற்று உபதேசம் பெற்றுக் கொண்டனர். கிட்டத்தட்ட பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து கிளாமடம் சுவாமி ஊருக்குத் திரும்ப எல்லாருக்கும் வாய்ப்பு. அவரிடம் நடந்ததைக் கூறுகிறார்கள். இதனால் அவர் மனம் வேதனை அடைந்தது பிறகு “நடந்தது நடந்து விட்டது உபதேசம் கேட்டவர்கள் அப்படியே தொடரட்டும். என்னிடம் கேட்க விரும்பினால் என்னிடம் வரட்டும்” எனக் கூறினாராம். அதனால் தான் இக்கோவில் புள்ளிகள் குறைவு. ஆனால் யோக தண்டத்தை இன்றும் பூசை செய்து வணங்குகிறார்கள்.

சொக்கட்டான் விநாயகர் ஆலயம்
🛕இக்கோயிலுக்கு அருகிலேயே "சொக்கட்டான் விநாயகர்" என்ற கோயில் உள்ளது. அதாவது "சொல் கேட்டான் விநாயகர்" என்பதன் திரிபே சொக்கட்டான் விநாயகர் என்று மருவிவிட்டது. என்ன சொல் சொல்லி பிரார்த்தனை செய்தாலும் உடனே கேட்டு அதற்குல் பலனளித்து விடும் வரப்பிரசாதி. விநாயகரை வேண்டி பலன் கிடைத்ததும் 108 தேங்காய்கள் உடைக்கப்படுகின்றன. சிலர் அன்னதானம் செய்கின்றனர்.

பெருமாள் ஆலயம்
🛕அருகில் ஒரு பெருமாள் ஆலயமும் அழகுற அமைந்துள்ளது. ராஜகோபுரம், பிரகாரம், உள்ளே பெரிய மண்டபம். கருடன் எதிரில் பூமீ நீளா வரதராஜபெருமாள் கருவரை, பின்புறம் 4 தனி தனி சன்னதிகளில் மகாலெட்சுமி, சக்கரத்தாழ்வார், தன்வந்திரி, மற்றும் ஆண்டாள் சன்னதிகள் முதலிய ஆலய தெய்வங்கள். உள்ளது. பூசைகள், பராமரிப்பும் நன்றாக உள்ளது.

💠நன்றாகப் பராமரிக்கப்படும் கோவில்கள்..

மேலும் சில செய்திகள்: 
(நன்றி: வலை தளம்)
🔰நகரக் கோவில்கள் பற்றி ....

🔰கோவில் சார்ந்த குடிகள், குடிகளை தழுவிய கோவில்கள் என தமிழ் சமுதாய மரபில் வந்த சமூகம் நகரத்தார் சமூகம் . நகரத்தாருக்குரிய அடையாளமாக விளங்குவது இந்த ஒன்பது நகரக்கோயில்களே.

🔰நகரத்தார்கள் பல்வேறு இடங்களிலிருந்து செட்டிநாடு பகுதிக்கு இடம் பெயர்ந்தபோது, ​​ஆட்சி செய்த பாண்டிய மன்னர் சௌந்தர பாண்டியன் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் குடியேறியவர்களுக்கு ஒன்பது கிராமங்களை வழங்கினார். இவை இறுதியில் இன்று 9 நகரத்தார் கோயில்களின் மையப் புள்ளிகளாக மாறியது. 

🔰அரசனும் ஏழு வழி நகரத்தார்களின் வேண்டுகோளை நிறைவேற்றி கி.பி.718 இல் பாண்டிய மன்னனால் இக்கோவில் நகரத்தார்களுக்கு கொடுக்கப்பட்டது. அதன்படி ஏழு கோவில்கள் ஆயிற்று .

🔰பாண்டியநாட்டில் இளையாற்றங்குடியில் வசித்த "ஏழு வழி வைசியர்" என்கின்ற நகரத்தார்கள் தங்களிடையே தோன்றிய கருத்து வேற்றுமை காரணமாக தங்களுக்கு தனித்தனி கோவிலும் , ஊரும் வேண்டுமென எண்ணினார்.  
பின்னர் இளையாற்றங்குடி கோவிலை சேர்ந்த திருவேட்புடையார் பிரிவினர் இரு பிரிவாக பிரிந்ததால் ஒன்பது கோவில் ஆயிற்று.

🔰நகரத்தார் கோவில்களில் புள்ளிகளில் மிகக் குறைவாய் உள்ள கோவில் இது.
இதன் மேற்கொண்டு பாண்டிய அரசன் சௌந்திர பாண்டியனை சந்தித்து தங்கள் விருப்பத்தை தெரிவித்தனர் .

🔰இந்த இடம் - வேலங்குடி - வழங்கப்பட்ட கிராமங்களில் கடைசி. இரண்டு காலக்கெடுக்கள் உள்ளன - ஒன்று, இவை கி.பி 8 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வழங்கப்பட்டன , அதே நேரத்தில் மற்றொரு சிந்தனைத் தடயம் இது மிகவும் பிற்காலத்தில் இருந்திருக்கலாம் என்பதைக் குறிக்கிறது (குறிப்பாக கி.பி 1302 ஆம் ஆண்டில், பதிவு கலியுகம் 3819 ஆண்டைக் குறிக்கிறது.

🔰நகரத்தார்கள் யாவரும் இந்த ஒன்பது கோவிலைச் சார்ந்தவர்கள் .
இக்கோயில் சார்ந்த நகரத்தார் கருங்குளம், காரைக்குடி, தேவகோட்டை, பட்டமங்களம் ஆகிய ஊர்களில் வசிக்கின்றனர்.

🔰இந்தக் கோயிலைப் பற்றி இரண்டு உள்ளூர் புராணக்கதைகளும் உள்ளன. ஒன்று, இந்தக் கோயிலுக்கு அருகில் யாராவது பொய் சொன்னால், அம்மானால் அவர்களின் வீடு மற்றும் குடும்பம் அழிக்கப்படும் என்பது!

🔰மற்றொன்று, பழங்காலத்திலிருந்தே இந்தக் கிராமம் மற்றும் அதன் மக்கள் மீது ஒரு சாபம் உள்ளது, இதன் காரணமாக இந்தக் கிராமத்தின் மக்கள் தொகை எப்போதும் மிகக் குறைவாகவே உள்ளது, மக்கள் பொதுவாக இப்பகுதியின் பிற பகுதிகளுக்கு அல்லது வெளியே கூட இடம்பெயர்கின்றனர்.

#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️

💠பள்ளத்தூர் அல்லது கோட்டையூர் வழியாக செல்வதே நல்லது
💠நன்றாக பராமரிக்கப்பட்டு வரும் சிவன் ஆலயம்.
💠கிழக்குவாசல் அடைத்து விட்டிருந்தாலும், தெற்குவாசல் வழியாக உள்ளே செல்ல வேண்டும்.
💠 ஏற்கனவே பள்ளமாக இருந்த இடத்தில் சிறிய ஆலயமாக இருந்தது, தற்போதுள்ள இடம் மேடாக்கி அதில் ஆலயம் விரிவாக்கி புனரமைப்பு செய்யப்பட்டுள்ளதாக தகவல்.
💠சிறிய கிராமப்பகுதியில் தனியாக ஆலய வளாகம் உள்ளது.
💠சொற்கேட்டான் விநாயகர் ஆலயம், மற்றும் ஒரு பெருமாள் ஆலயங்களும் பொலிவுடன் விளங்குகின்றன. பெரிய குளம் ஒன்றும் உள்ளது. அருகில் வேறு 💠கடைகள் வீடுகள் அருகில் கிடையாது.

நன்றி🙏
28.09.25 ஞாயிற்றுக்கிழமை
#சுப்ராம்தரிசனம்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#பிரதோஷக்குழுயாத்ரா 28.09.2025

குன்றக்குடி சண்முகநாதர் ஆலயம்குன்றக்குடி குன்றவர் முருகன் கோயில் - 28.9.25

குன்றக்குடி  சண்முகநாதர்ஆலயம்

#குன்றக்குடி சண்முகநாதர் ஆலயம்
குன்றக்குடி குன்றவர் முருகன் கோயில்.

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி எனும் ஊரின் குன்றின் உச்சியில் சண்முகநாதர், வள்ளி – தெய்வானையுடன், ஆறுமுகங்களும் பன்னிரு திருக்கரங்களுடன் காட்சி தருகிறார். இக்கோயிலில் குடிகொண்ட முருகனை குறித்து அருணகிரிநாதர் தம் திருப்புகழில் பாடியுள்ளார்.

அமைவிடம்
மதுரையிலிருந்து எண்பது கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. குன்றக்குடியிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் பிள்ளையார்பட்டி கோயில் உள்ளது. காரைக்குடியில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்கிருந்து மதுரை செல்லும் பேருந்தில் சென்று குன்றக்குடி கோவிலுக்கு செல்லலாம்.
புதுக்கோட்டையிலிருந்து 40 கிமீ தொலைவிலும்,திருச்சிராப்பள்ளியிலிருந்து 89 கிமீ தொலைவிலும், குன்றக்குடியின் மையப் பகுதியில் இந்த முருகன் கோயில் உள்ளது. காரைக்குடி, திருப்பத்தூர், மதுரை, திருச்சியிலிருந்து ஏராளமான பேருந்துகள் உள்ளன.
 இது பிரார்த்தனை ஸ்தலங்களில் முதன்மையானது.

பெருமை:
முருகப்பெருமானின் சாபத்தால் மயிலே, மலையாகிப்போனதாகவும், அந்த மலை மீதுதான் முருகப்பெருமான் வீற்றிருப்பதாகவும் ஸ்தலபுராணம் கூறுகிறது. இந்த மலை மயிலின் வடிவத்தை ஒத்திருப்பதால், மயூரகிரி, மயில்மலை, அரசவரம், கிருஷ்ணநகரம் போன்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது.  செட்டிமுருகன், குன்றையூருடையான், மயூரகிரிநாதன், மயில்கலைக்கந்தன். குன்றைமுருகன், தேனாறுடையான்” என்று பலபெயர்கள் மூலவருக்கு உண்டு.

சூரியன், நாரதர், விஸ்வாமித்திரர், வசிஷ்டர், கருடன், இந்திரன், மன்மதன் முதலானோர் இங்கு வந்து தவமிருந்து வரம் பெற்றனர் என்கிறது ஸ்தல புராணம். மேலும் அகத்தியர் மற்றும் பாண்டவர்கள் வழிபட்ட சிறப்பும் இந்த கோயிலுக்கு உண்டு.
இக்கோயில் முருகனை போற்றி அருணகிரிநாதர் தம் திருப்புகழிலும், பாம்பன் சுவாமிகள் தன் பாடலிலும் சிறப்பித்து பாடியுள்ளார்கள்.
மற்றும் ஏராளமான புலவர்களும், முருகனருள் பெற்ற ஞானிகளும், பல்வேறு வகை புராணம், பாடல்கள், இலக்கியங்கள் செய்துள்ளார்கள்.

 புராண காலத்திலிருந்து தற்காலம் வரை 
இத்தலமுருகன் அருள் பெற்றோர், உண்மை வரலாறுகள் பலவும் ஆதாரம் செய்துள்ளார்கள்.

ஸ்தல புராணம்:
ஒருசமயம், அசுரர்கள் தேவர்களைப் பழிவாங்கும் நோக்கில்
அசுரர்கள் ஒன்று திரண்டு மயிலிடம் சென்று, பிரம்மதேவரின் அன்னம், திருமாலின் கருடன் ஆகியவை தாங்கள்தான் மயிலைவிட வேகமாகப் பறக்கக் கூடியவர்கள் என்று சொன்னதாக உண்மைக்குப் புறம்பான செய்தியைக் கூறினர். அசுரர்களின் சூழ்ச்சி அறியாத மயில் கோபம் அடைந்து,
பிரம்மாண்ட உருவம் எடுத்து அன்னத்தையும், கருடனையும் விழுங்கி விட்டது. இதனை அறிந்த இந்திரனும் திருமாலும் முருகனிடம் முறையிட அன்னத்தையும், கருடனையும் மீட்டுத் தந்தார். தனது தவற்றுக்கு வருந்திய மயில், அரசவனத்துக்கு (குன்றக்குடி) வந்து முருகப் பெருமானை நோக்கி தவம் மேற்கொண்டது. முருகப் பெருமானும் மயிலை மன்னித்து சாப விமோசனம் அளித்தார். பின்னர் மயிலின் வேண்டுகோளுக்கிணங்க, இந்தத் தலத்திலேயே இருந்து அருளாட்சி செய்து வருகிறார் என்கிறது ஸ்தல புராணம்.

ஸ்தல வரலாறு:
இக்கோயில் சுமார் 1200 ஆண்டுகளுக்கு முந்தையது. இக்கோயில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டு, பின்னர் மருது சகோதரர்களால் பல திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன.
மருதுபாண்டியருள் மூத்தவரான பெரிய மருதுவுக்கு முதுகில் ஏற்பட்டிருந்த ராஜ பிளவை என்னும் கட்டியை, குன்றக்குடி முருகப்பெருமானின் அருட்பிரசாதமான திருநீறு குணப்படுத்தியதாக வரலாற்றுச் செய்தி. 

ஆலய அமைப்பு:
குன்றக்குடி மலையின் மேலே முருகனுக்கும், கீழே சிவபெருமானுக்கு குடைவரைக் கோயிலாக (தேனாற்று நாதர் - அழகம்மை) அமைந்துள்ளது.
 குன்றக்குடி மலையானது ஒரு மயில் படுத்து அடைகாக்கும் வடிவில் இருக்கின்றது. மலையின் நுழைவாயில் மயில் தோகை போல் இருப்பதால் அங்கிருக்கும் ‘தோகையடி விநாயகரை’ பக்தர்கள் முதலில் வழிபட்ட பின்னரே மேலேறிச் செல்ல வேண்டும் என்பது ஐதீகம். பின் குன்றக்குடி முருகனைத் தரிசிப்பதற்காக 149 படிகள் ஏற வேண்டும். வழியில் கார்த்திகை விநாயகர், இடும்பன் மற்றும் வீரபாகுவின் சந்நிதிகளையும் காணலாம். குன்றின் மீதேறிச் செல்லும் வழிகளில் பக்தர்கள் இளைப்பாறும் விதத்தில் பல மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளது மலைக்கோயிலின் முகப்பில் ஐந்து நிலை இராஜகோபுரம் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. கோயில் சிறிய மண்டபங்களுடனும் ஒரே திருச்சுற்றுடனும் விளங்குகிறது. மகாமண்டபத்தின் இடப்பக்கம் கணபதி காசிவிஸ்வநாதர் விசாலாட்சி சந்நிதிகள் உள்ளன. மற்றும் தட்சிணாமூர்த்தி, ஸ்வர்ண விநாயகர், குழந்தை வடிவேலர், இடும்பன், நடராஜர், நவகிரகங்கள், வல்லப கணபதி, நால்வர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் உள்ளனர். அலங்கார மண்டபத்தில் மருது சகோதரர்களின் உருவச் சிலைகள் உள்ளன. ஆறுமுகப் பெருமாளின் உற்சவர் சந்நிதி இங்கு உள்ளது. இதனை அடுத்துள்ள மயில் மண்டபத்தில் த்வஜஸ்தம்பம், பலிபீடம் மற்றும் மயில் வாகனம் அமைந்துள்ளது.
கர்ப்பக் கிரகத்தில் மூலவர் ஷண்முகநாதர் கிழக்குத் திசையைப் பார்த்தபடி ஆறு முகங்களுடன் பன்னிரு திருக்கரங்களுடன் மயிலின் மீது வலது காலை மடித்தும் இடது காலைத் தொங்க விட்டவாறு அருள்பாலிக்கின்றார். இடப்பக்கம் தெய்வானை, வலப்பக்கம் வள்ளி என இருவரும் தனித்தனி மயில்களில் அமர்ந்துள்ளனர்.

ஸ்தல விருட்சம் : அரசமரம்
ஸ்தலத் தீர்த்தம் : தேனாறு

ஸ்தலச் சிறப்பு:
இந்த மலையின் மேற்பகுதியில் ஞானிகள் வாழ்ந்ததற்கான கற்படுக்கைகளும் பிராமிக் கல்வெட்டுகளும் உள்ளது. 

திருவிழாக்கள்:
இக்கோயிலில் ஆண்டு முழுவதும் பல திருவிழாக்கள் கொண்டாடப்பட்டு, பல பக்தர்களை ஈர்க்கிறது.பங்குனி உத்திரத்திலும், தைப்பூசத்திலும் பக்தர்கள் குறிப்பாக செட்டி மக்கள் சேவடி தேய காவடியும், பால் போல் பெருகிவாழப் பாற்குடமும் எடுத்து தேனாற்றுடையானை வணங்கி வருகின்றனர். மேலும், சித்திரையில் பால் பெருக்கு விழா, வைகாசி விசாகம், ஆனி மகாபிஷேகம், ஆடியில் திருப்படி பூஜை, ஆவணி மூலப்பிட்டுத் திருவிழா, புரட்டாசி மாதம் அம்பு போடும் திருவிழா, ஐப்பசியில் சூரனை வேலால் சம்கரிக்கும் கந்தர் சஷ்டி விழாவும்கார்த்திகையில் திருக்கார்த்திகையும் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன.
சண்முகார்ச்சனை மற்றும் சண்முக வேள்வியும் நடக்கும்.

  இக்கோவிலில் நடைபெறும் விழாக்களின் போதெல்லாம், பக்தர்கள் பால்காவடி, பன்னீர் காவடி, பறவை காவடி போன்ற காவடிகள் எடுத்து முருகனுக்கு பாலாபிஷேகம் செய்து வணங்கி வருகின்றனர்.

பிரார்த்தனை, நேர்த்திக்கடன்:

குன்றக்குடி மலையில் சண்முகநாதப் பெருமான் வள்ளி தெய்வானையோடு இணைந்து காட்சி அளிப்பதால்

இங்குத் திருமணம் செய்து கொள்ளும் தம்பதியினர் மகிழ்ச்சியுடன் பல்லாண்டு வாழ்வார்கள் என்பது நம்பிக்கை என்பதால் இந்த இம்மலைக் கோயில் திருமணத் திருத்தலமாக விளங்குகிறது.

குன்றக்குடி முருகனின் அருளாசியால் 
விவசாயிகள் இக்கோவிலில் வீற்றிருக்கும் முருகனின் அருளால் தங்கள் முதல் விளைச்சலை. வைக்கோல் விரித்து அதில் நெல்லைக் கொட்டி பொதிந்து பின்னர் அதனை திரித்துக் கட்டிக் கொண்டு வந்து கோட்டை காவடி என்ற பெயரோடு தலையில் சுமந்து வந்து கோவிலுக்குக் காணிக்கை செலுத்தி வருகின்றனர்

ஆயுள் தோஷம் மற்றும் பெற்றோருக்கு தோஷம் உள்ள தங்கள் குழந்தைகளை இக்கோவிலில் குழந்தையை முருகனுக்குத் தத்தாகக் கொடுத்து விடும் வழக்கம் இன்று வரை நீடித்து வருகிறது.

தோல் நோய் நீங்க கோயில் தீர்த்தத்திலும்
இடும்பன் சன்னதியிலும் பக்தர்கள் உப்பும் மிளகும் வாங்கிக் காணிக்கையாக செலுத்தும்போது உப்பு கரைவது போல பக்தர்களின் தோல் நோய் காணாமல் போய்விடுதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

நோய் நீக்கம், துன்ப நீக்கம், குழந்தை வரம், ஆயுள் பலம், கல்வி, அறிவு, செல்வம், விவசாயம் செழிப்பு ஆகியவற்றைப்பெற இத்தலத்தில் முருகனிடம் வேண்டுகிறார்கள்.
மருது பாண்டியரின் நோய் குணமானதோடு, கலிங்க நாட்டு இடும்பன் காவடி எடுத்து வந்து இத்தல முருகனை வழிபட்டு வயிற்று வலி நீங்கியதால் இது நோய்கள் தீர்க்கும் மருத்துவ தலமாகவும் விளங்குகிறது

குன்றக்குடி காவடி என்பது புகழ்பெற்றது. குன்றக்குடிக்குக் காவடி எடுத்தால் நினைத்‌த‌வை கை கூடியே தீரும் என்பது ஐதீகம்.  

இந்த குன்றக்குடி முருகன் கோவிலில் சில வித்தியாசமான நேர்த்திக்கடன்கள் செய்து வரும் பக்தர்கள் கும்பிடு தண்டம் எனும் கோயிலைச் சுற்றிதொடர்ந்து கும்பிட்டு விழுந்து கொண்டே வரும் பிரார்த்தனை செய்து பலனடைந்து வருகின்றனர்

நேர்த்திக்கடனாகக் காவடி எடுத்தல், பால்குடம் எடுத்தல், சஷ்டி விரதம் இருத்தல், உடற்பிணி தீர ஆண்கள் அங்கப்பிரதட்சணம், பெண்கள் கும்பிடுதண்டமும், அடிப்பிரதட்சணமும் நிறைவேற்றுகின்றனர். 

வெள்ளியிலான அந்தந்த உறுப்பு வடிவங்களைக் காணிக்கை செலுத்துகின்றனர். ‌தோல் வியாதிகள் தீர, சொறிபடை நீங்கச் சரவணப்பொய்கையிலும் இடும்பன் சந்நிதியிலும் உப்பும் மிளகும் போடுகின்றனர். விவசாய விளைச்சல் பெற்றவர்கள் தானியங்களைக் காணிக்கை செலுத்துகின்றனர். 

அரிசி கொண்டு வந்து மலைப்படிகளில் தூவுகின்றனர். கோழி, ஆடு மாடு ஆகியவற்றை நேர்த்திக்கடனாகச் செலுத்துகின்றனர். தவிரச் சண்முகார்ச்சனை, சண்முக வேள்வி ஆகியவை செய்கிறார்கள். கார்த்திகை விரதம் இருத்தல், இதைத்தவிர ஏழைகளுக்கு அன்னதானம், திருப்பணிக்குப் பொருளுதவி செய்கின்றனர்.

தினசரி காலை 6.00 மணி முதல் மதியம் 12.30 வரை மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையில் கோவில் திறந்திருக்கும். கோயில் நேரங்கள் திருவிழாவிற்கு ஏற்ப மாறுபடும்.

2. குன்றக்குடி குடைவரை கோயில்கள்:

குன்றின் கீழ் அடிவாரத்தில் உள்ள குடவரை கோவில்,
குன்றக்குடி மலையின் மேலே முருகனுக்கும், கீழே சிவபெருமானுக்கு குடைவரைக் கோயிலாக (தேனாற்று நாதர் - அழகம்மை) அமைந்துள்ளது.

குன்றக்குடியில் அமைந்துள்ள மூன்று குடைவரை கோயில் ஆகும். பொ.ஊ. 7 ஆம் நூற்றாண்டில் தொடக்ககாலப் பாண்டியர்களால் அமைக்கப்பட்டவை ஆகும். பாறையில் வெட்டப்பட்டவையாக மூன்று குகைகள் காணப்படுகின்றன. பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமான இக்கோயில்கள் குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்தின் கீழ் உள்ளன.

அமைப்பு
இம்மூன்று குடைவரைகளும் இவை குடையப்பட்டுள்ள குன்றின் தெற்குப் பகுதிச் சரிவில் உள்ளன. இவை ஒன்றுக்குப் பக்கத்தில் மற்றதாக அடுத்தடுத்து வரிசையாகக் குடையப்பட்டுள்ளன. அடுத்தடுத்த குடைவரைகளுக்கு இடையில் உள்ள பகுதியில் கோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு கோட்டத்தில் சிவலிங்கமும், மற்றதில் வலம்புரி விநாயகர் சிற்பமும் உள்ளன. இம்மூன்று குடைவரைகளுக்கும் முன்னால், அவற்றை முழுவதுமாக மறைக்கக்கூடிய வகையில் மண்டபம் ஒன்று உள்ளது. இது பிற்காலத்தைச் சேர்ந்தது.

சிற்பங்கள்
இக்குடைவரை கோயிலில் புராணக் கதைகளை விளக்கும் சிற்பங்கள் உள்ளன. இவை அக்காலத்துச் சிற்ப மரபையொட்டிய புடைப்புச் சிற்பங்களாகும். 
திருமால் தன் கண் மலரால் அர்ச்சித்து, சக்கராயுதத்தைப் பெற்றது;  புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது. இச்சிற்பத்தில், சிவபெருமான் நடனமாடுவதைத் திருமால் கருடன்மீது சாய்ந்தபடி பார்ப்பதையும், பிடுங்கி எடுத்த ஒரு கண் திருமாலின் கையில் இருப்பதையும் காண முடிகிறது.

கல்வெட்டுக்கள்
இங்குள்ள குடைவரைகளின் சுவர்களிலும், தூண்களிலும், முன் மண்டபத்திலுமாக மொத்தம் 45 கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. இவற்றுட் பெரும்பாலானவை பாண்டிய மன்னர் காலத்தவை. 

இவற்றுள் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் கல்வெட்டுக்கள் மட்டும் 12 உள்ளன. இவற்றுடன், சடையவர்மன் சிறீவல்லபதேவன், விக்கிரம பாண்டியன், மாறவர்மன் குலசேகர பாண்டியன் ஆகிய பாண்டிய மன்னர்களின் கல்வெட்டுக்களும் இங்கு உள்ளன. சோழ மன்னர்களில் முதலாம் இராசராசன், முதலாம் இராசேந்திரன், முதலாம் குலோத்துங்கன் ஆகியோர் காலக் கல்வெட்டுக்களும் உண்டு.

#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️

⛳இந்த தலம் ஒரு குன்றை முதன்மையாகக் கொண்டுள்ளது. பிரதான சாலை ஒட்டியே வாகனங்கள் நிறுத்துமிடம், மற்றும் கடைகள் உள்ளன. குளியல், கழிப்பறை வசதிகளும் உண்டு. சாலையின் அடுத்து,
ஆலயக்குளம் ஒன்றும் உள்ளது.

⛳பிரதான சாலையில், சன்னதி தெருவில் ஒரு வளைவு உள்ளது. அதன் வழி சென்று முதலில், தோகை விநாயகர் வணங்கி, வடபுறம் உள்ள  149 படிகள் கொண்ட மலை மீது ஏறினால், கிழக்கு நோக்கிய ஆலயம் உள்ளது. முன் மண்டம், மயில் மண்டபம், கருவரையில் மூலவர் தரிசிக்கலாம்.
⛳ Rs.10/- சிறப்பு தரிசனம் மயில் மண்டபத்தின் வழியில் சென்று தரிசிக்கலாம்.
⛳ஒரே பிரகாரம் சுற்றி படிகள் இறங்க வேண்டும்.
⛳மலைப் படிகள் முழுவதும் மேல் கல் கூறைகள், மண்டபங்கள் உள்ளன. படிகள் எளிதாகவும், சரிவாகவும் உள்ளதால், முதியோர்களும் எளிதாக மலைக்கோவில் சென்று தரிசிக்கின்றார்கள்.
படிகூரைகளில், தலவரலாறு, புராணங்கள், தலப்பாடல்கள் சித்திரங்கள் வரையப்பட்டுள்ளன.

⛳அடிவாரத்தில், 
குகைக் கோவிலில், தேனாற்று நாதர் - அழகம்மை அமைந்துள்ளது. மேலும்,
கிழக்கு நோக்கிய பெரிய மண்டபத்தில் நடுப்பகுதியில் ஊஞ்சல் அமைத்து உள்ளனர். அதில் ஆறுமுகனார் வள்ளிதெய்வாணையுடன் காட்சி அளிக்கிறார். மண்டபக்கூரையில் வண்ண ஓவியங்கள் பிரமிக்க வைக்கிறது.
♻️ ஏற்கனவே சிலமுறைகள் இவ்வாலயம் தரிசித்து இருந்தாலும், ஒவ்வொரு முறையும் புது அனுபவங்கள் கிட்டுகிறது மகிழ்ச்சி

🙏இந்த மயில் வாகனனின் திருக்கோவிலுக்கு வாழ்வில் ஒரு முறையேனும் சென்று முருகனை தரிசனம் செய்து அருள் பெறுவோம் ஆனந்தம் அடைவோம்

நன்றி🙏
28.09.25 ஞாயிற்றுக்கிழமை
#சுப்ராம்தரிசனம்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#பிரதோஷக்குழுயாத்ரா 28.09.2025

மயிலாடும்பாறைகுன்றக்குடி#ஞானசரஸ்வதி ஆலயம் மயிலாடும்பாறை குன்றக்குடி #ஞானசரஸ்வதி ஆலயம் 28.09.25

மயிலாடும்பாறைகுன்றக்குடி
#ஞானசரஸ்வதிஆலயம் 
மயிலாடும்பாறைகுன்றக்குடி
#ஞானசரஸ்வதிஆலயம் 

💠இது தென்னிந்தியாவிலேயே சரஸ்வதி தேவிக்கென தனியாக அமைக்கப்பட்ட கோயில்களில் ஒன்றாகும். 

💠ஞானசரஸ்வதிஆலயம் சிவகங்கை மாவட்டத்தில் குன்றக்குடி மற்றும் பிள்ளையார்பட்டிக்கு இடையில் அமைந்துள்ளது. 

💠வெகுஅருகிலேயே   குன்றக்குடி ஷண்முகநாதன் ஆலயம், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் ஆலயம் மற்றும் குபேரர் ஆலயம் ஆகியன அமைந்துள்ளன. 

💠குன்றக்குடியில்இருந்தோ,பிள்ளையார்பட்டியில் இருந்தோ ஆட்டோவில் இங்கு வரலாம்.

💠 மயிலாடும்பாறை பகுதியில் உள்ள மயிலாடும்பாறை ஞான சரஸ்வதி ஆலயம் என்று அறியப்படுகிறது.
 
💠இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில், அமைதியான சூழலில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.  

💠பிரதான சாலையை ஒட்டி
முழுதும்  கற்களால் கட்டப்பட்ட ஶ்ரீ ஞான சரஸ்வதி மற்றும் ஶ்ரீ ஜோதி சக்தி சொரூப வேல் கோவில்கள்.

💠நியூயார்க் வல்லப விநாயகர் ஆலயம், பிட்ஸ்பர்க் வெங்கடேஸ்வரா ஆலயம், ஹூஸ்டன் மீனாட்சி ஆலயம், சென்னை அறுபடை முருகன் ஆலயம் போன்ற ஆலயங்களை எழுப்பியவர் அமெரிக்காவில் வசிக்கும் டாக்டர் அழகப்பா அழகப்பன்.

💠 இவருக்கு முருகனுக்கு ஓர் ஆலயம் அமைக்குமாறு மீனாட்சி நாடியில் உத்தரவு வந்தது. அந்த ஆலயம் முருகனின் ஏழாம் படை வீடாக புகழ்பெற்று விளங்கும் என்றும் நாடி சொன்னது. அதன்படி ஆலயம் அமைக்க பிள்ளையார்பட்டி – குன்றக்குடி சாலையில் உள்ள மயிலாடும் பாறையைத் தேர்ந்தெடுத்தார் டாக்டர் அழகப்பா அழகப்பன். மயில்கள் அதிகம் வசித்ததாலும், அங்குள்ள ஓர் குன்றில் மயில்கள் வந்து ஆடுவதாலும் அப்பகுதிக்கு மயிலாடும் பாறை என்பது பெயர். 

⛳காரைக்குடி மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள பக்தர்கள், குன்றக்குடி வழியாக பழநிக்கு காவடி எடுத்து செல்லும்போது, மயிலாடும்பாறையில் காவடி ஆடிவிட்டு, ஓய்வெடுத்து செல்வது வழக்கம். 

💠ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் மண்டகப்படி விழாவில் பங்குனி உத்திரத்தன்று குன்றக்குடி ஸ்ரீ ஷண்முகநாதப் பெருமான் இந்தக் குன்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அப்படிப்பட்ட பெருமை மிக்க அந்தக் குன்றின் எதிரே உள்ள இடத்தை வாங்கிய அழகப்பன், அதற்கு ”விசாலாட்சி அழகப்பன் தோட்டம்” என்று பெயரிட்டதுடன் அங்கேயே நாடியில் வந்த உத்தரவுப்படி ”ஜோதி சக்தி சொரூப வேல் சன்னதி”யை நிர்மாணித்தார்.

💠அறுபடை வீடுகளும் நம் உடலில் உள்ள ஆறு சக்கரங்களைக் குறிக்கிறதாம். திருப்பரங்குன்றம் : மூலாதாரம், திருச்செந்தூர் : சுவாதிட்டானம், பழனி : மணிபூரகம், சுவாமிமலை : அநாகதம், திருத்தணி : விசுத்தி, ஆக்ஞை : பழமுதிர்ச்சோலை. ஏழாவதாக இருக்கும் சஹஸ்ராரத்தின் அமைவிடமே மயிலாடு ம்பாறை என நாடியில் வந்துள்ளது. ஆக, இங்கு வந்து வழிபட ஞானம் பெருகும் என்பது நாடியில் வந்திருக்கும் நல்வாக்கு. இங்கே முருகனின் ஆயுதமான வேல் தான் முருகனாக வழிபடப்படுகிறது. முருகனுக்கு ஆலயம் அமைத்தது போக எஞ்சியுள்ள இடத்தில் ஞான சரஸ்வதி க்கு ஆலயம் அமைக்க நாடியில் உத்தரவு வரவே அங்கு “ஞான சரஸ்வதி” எழுந்தருளினாள். (நன்றி: வளைதளம்)

🛕ஸ்ரீ ஞான சரஸ்வதி அறக்கட்டளை ஏற்படுத்தி காரைக்குடியை கல்வி நகரமாக்கிய வள்ளல் Dr. R.M. அழகப்பசெட்டியார் அவர்களைப் போற்றும் விதமாக இந்த ஆலயம் எழுப்பப்பட்டுள்ளதாக கல்வெட்டு ஒன்றில் காணப்படுகின்றது.

🛕 பத்மஸ்ரீ M முத்தையாஸ்தபதி அவர்கள் இந்த ஆலயத்தை நிர்மானித்துள்ளார்.

🛕ஞான சரஸ்வதி மற்றும் சக்தி சொரூப ஞான வேல் சன்னதிகள் தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளன.

🛕சுமார் 15 அடி உயரத்தில், முழுவதும் கருங்கற்கள் கொண்டு சுற்றுப்பிரகாரத்துடன்  கூடிய ஒரு கருவரையும் அதில் வடக்கு நோக்கி மூலவராக ஸ்ரீ ஞானசரஸ்வதி உள்ளார்.
கருவரை 3 அடுக்கு கோபுரத்துடன் 5 கலசம் கொண்டு கம்பீரமாக தோற்றம் அளிக்கிறது.

🛕 கற்பகிரகத்தில் பெரிய உருவம் கொண்டு,  "ஞான சரஸ்வதி” இங்கே ஞான சொருபீணியாக, ஒரு கையில் ஞான கங்கையுடனும் மற்றொரு கையில் ஜபமாலையுடனும், கீழ்க்கரங்களில் சுவடியுடனும், ஞான முத்திரையும் காட்டி அருள்பாலிக்கிறாள். 

🔱வளாகத்தின் முன்புறம் மேற்கு பக்கம் 
'ஜோதி சக்தி சொரூப ஞான வேல்" தனி சன்னதி ஒன்றும் உள்ளது.

🔱 சுமார் 7 அடி உயரத்தில் சுற்றுப் பிரகாரத்துடன்கூடிய மண்டபத்துள் தனி கருவரையும் அதில் முழுவதும் கருங்கற்கள் கொண்டும் அமைக்கப்பட்டுள்ளது. 

💠இந்த ஆலயம் கல்வி, ஞானம் மற்றும் வளத்திற்காக வழிபடப்படுகிறது.

🧘அன்னை சரஸ்வதி இவளைப் போற்றி வணங்குவதால் கல்வி, வியாபாரத்தில் தடை, திக்குவாய் நீங்குதல், அறிவு மந்த நிலை மாறி பிரகாசித்தல் போன்ற பலன்கள் கிடைக்கின்றன. அதுமட்டுமல்ல; ஞானத்தை அள்ளித் தரும் ஞானாம்பிகையாகவும் இவள் விளங்குகிறாள். இவளை வணங்குவதன் மூலம் ஆன்மீக எண்ணங்கள் வலுப்பெறுவதுடன், நல்லுயர்வும் கிடைக்கிறது.

 🧘🏼இங்கு வந்து வழிபடும் குழந்தைகளுக்கு “அக்ஷராப்யாசம்” செய்யப்படுவதுடன் தேன் கொண்டு நாவில் சரஸ்வதி மந்திரமும் எழுதப்படுகிறது.

#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️

💠பார்க்கப் பார்க்க பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் பேரழகுடன்  விளக்குகிறாள். பிரம்ம சொரூபிணியாக, சிவ ஞானத்தை அருளும் அம்பிகையாக இங்கு விளங்குகிறாள்.

💠இந்த பெரிய வளாகத்தில் ஒரு புறம் இந்த ஞான சரஸ்வதி ஆலயம் உள்ளது.

💠இந்த ஆலயத்தின் பின் பகுதியில் ஒரு மண்டபமும், அதில் நவராத்திரி கொலுவும் வைத்து பூசை செய்கிறார்கள்.

💠வளாகம் முழுவதும் ஏராளமான மரங்கள் அடர்ந்து நல்ல இயற்கையான சூழல் அமைத்துள்ளனர். 

🔰திறந்திருக்கும் நேரம் : காலை 7.00 மணி முதல் 12.00 வரை. மதியம் 4.30 முதல் 7.30 வரை.

🔰அருகில் வேறு எந்தவித கடைகள், கட்டிடங்கள் எதுவும் கிடையாது.

💠குருக்களுக்கு தகவல் தந்து ஆலயம் தரிசிக்கலாம்.

💠ஆலயம் நல்ல பராமரிப்பில் உள்ளது. 
💠பிரதான சாலையிலிருந்து ஆலயம் உள்ளே செல்ல இரண்டு நுழைவு வழிகள் உள்ளன. வாகனங்கள்  உள்ளே செல்லலாம்.

💠குன்றக்குடி பைபாஸ் சாலை துவக்கத்தில் இருப்பதால், சாலையில் கவனமாக சென்று ஆலயம் தரிசித்து பின் குன்றக்குடி செல்லும் பாதையில் நாங்கள் சென்றோம்.

🙏 அமைதியான இயற்கை சூழலில் ஆலய வளாகம் அமைக்கப்பட்டு உள்ளது. ஒரு முறையாவது  சென்று தரிசனம் செய்யுங்கள். ஞானம், அறிவு கிட்டும். வாழ்க்கையில் உயர்வு உண்டாகும்.

நன்றி🙏
28.09.25 ஞாயிற்றுக்கிழமை
#சுப்ராம்தரிசனம்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#பிரதோஷக்குழுயாத்ரா 28.09.2025

வேலங்குடி பெருமாள் ஆலயம் 28.9.25

வேலங்குடி பெருமாள் ஆலயம் #வேலங்குடிபெருமாள் ஆலயம் 🛕  பெருமாள் ஆலயமும் அழகுற அமைந்துள்ளது. ராஜகோபுரம், பிரகாரம்,  உள்ளே பெரிய மண்டபம். கருடன...