Saturday, July 3, 2021

வழிமொழிதிருவிராகம் - சம்பந்தர் இசையமுதம் - பதிவு: 8 பாடல் 8

#வழிமொழிதிருவிராகம்
பதிவு : எட்டு. பாடல் 8

🙏🙇‍♂️அன்பு வேண்டுகோள்:🙇‍♂️🙏

🗣️வாய்பேச்சுக் கோளாறு இன்றி நல்ல உரையாடல், குரல் வளம் நிச்சயம் கிடைக்க இப்பதிகம் உதவும்.
👱குழந்தைகளுக்கு அவசியம் கற்றுக்கொடுக்க வேண்டிய பாடல்
📚தமிழ் மொழி வளம் உயர்வு உணர்ந்து அறிய உதவும் அற்புத பதிகம் இது.

👣1. பக்தியும், தமிழில் ஆர்வம் உள்ளவர்கள் தொடரவும்.

🌬️2. இப்பதிவுகளில் உள்ள தேவாரப் பாடல்களை குறைந்தபட்சம் இரண்டு முறைகளாவது வாய் விட்டு உச்சரித்து படித்தல் அவசியம்.

📚3. இப்பதிவின் நோக்கம்: பழந்தமிழ் பக்தி இலக்கியப் பெருமையையும் சிறப்பையும் ஒவ்வொருவரும் உணரவேண்டும் என்பதே. 

🛐🙏
🌀ஞானசம்பந்தர் அருளிய அற்புத இசைத் தமிழ் பதிகங்கள் வரிசையில் இதுவும் ஒன்று.
இத்தகைய பாடல்கள் தமிழரின் இசை பொக்கிஷம்:
#திருவிராகம், #வழிமொழிதிருவிராகம்,
#வண்ணகம் #முடுக்கியல் #அடுக்கியல் 
இவை பற்றி முன்பதிவுகளில் சிந்தித்தோம்.
#வழிமொழிதிருவிராகம் பதிகப் பாடலையும் அதன் விளக்கங்களயும், சிறப்புகளையும் தொடர்ந்து இப்பதிவில் பார்ப்போம்.

🅾️#வழிமொழிதிருவிராகம்:
⏺️இலக்கணம் :
⏏️குற்றெழுத்துப் பயின்று வரும் முடுகிய ஓசையுடையதாய் அடி முதற்சீரின் இரண்டாம் எழுத்து சீர்தோறும் ஒன்றி வழியெதுகையால் வரத் தொடுப்பது இவ்வகையாம்.
(முடுகிய என்பது வேகமாக ஓடும் தாள அமைப்பு எனக் கொள்ளலாம்)

🔸இதன் ஓசை அமைப்பில் பாடல் 

தனனதன தனனதன தனனதன  
              தனனதன தனனதனனா

என அமைகிறது.

 🧿இப்பதிகத்தின் திருக்கடைக்காப்பில் (இறுதிப் பாடலில்) திருஞானசம்பந்தர் 'வழிமொழிகள் மொழி தகையவே' என்று குறிப்பிட்டு சிறப்பிப்பதாலே இந்தப் பதிகம் வழிமொழி திருவிராகம் என்னும் பெயர் சூட்டப்பட்டது.
🔵
🌟ஞானசம்பந்தர் அருளிய அற்புத இசைத் தமிழ் பதிகங்கள் வரிசையில் இதுவும் ஒன்று.

🔹சம்பந்தர் தேவாரம் மூன்றாம் திருமுறை: தலம்: திருப்பிரமபுரம்:
பதிகம்: 325 (67) 
பாடல்: 1-12 (714-725)
இந்தப் பதிகம் 12 பாடல்கள் கொண்டது.

🌟சீர்காழிப்பதியின் 12 பெயர்கள் வந்த வழியை - வரலாற்றிணை - விளக்கத் தக்க வகையில் அமைந்துள்ளது.

🌀சாதாரி என்ற பண் வகையினது.

பாடல் 8.
💠புறவம் : இந்திரன் பருந்தாகவும், அக்னி புறாவாகவும் சென்று சிபிச்சக்கரவர்த்தியிடம் சோதிக்க புறாவின் எடைக்காக உடல் அறுத்து ஈடு செய்தான். பாவம் நீங்க அக்னியான, புறா வழிபட்டதால் புறவம் எனப்பட்டது.

✳️ ' ற ' சீர் அமைப்புள்ளது.

பாடல் : 721.

அறமழிவு பெறவுலகு தெறுபுயவன் விறல்அழிய நிறுவிவிரல்மா

மறையின்ஒலி முறைமுரல்செய் பிறையெயிறன்   
உறஅருளும் இறைவன் இடமாம்

குறைவின்மிக நிறைதையுழி மறையமரர்    
நிறையருள முறையொடுவரும்

புறவன் எதிர் நிறைநிலவு பொறையன்உடல்    
பெறஅருளும் புறவம் அதுவே.
     
                                     - 03.325.08 (721)
பொருள் :
அறநெறிகள் அழியுமாறு உலகத்தைத் துன்புறுத்திய புயவலிமையுடைய இராவணனது ஆற்றல் அழியுமாறு, திருப்பாத விரலால் கயிலையை ஊன்றி நெரித்துச் சாமகானத்தால் ஏத்திப் போற்ற, அருள் புரிந்தவர், சிவபெருமான். அவர் வீற்றிருக்கும் இடமாவது, புறாவின் எடைக்குச் சரி நிகராகத் தனது சதையை வைத்து நிரம்பாது தன்னையே அதற்கு இணையாகக் கொள்ளுமாறு செய்த சிபிச்சக்கரவர்த்தியின் நீதியைப் புகழும் தேவர்கள் போற்றும் பெருமை உடைய புறவமே.
தலச்சிறப்பு:
புறாவின் எடைக்குச் சமமாகத் தன் சதையை அறுத்து வைத்த சிபிச்சக்கரவர்த்தி குறையில்லா உடம்பைப் பெற அருள் புரிந்ததும், தான் செய்த பழிபோக புறா உருவில் வந்த தீக்கடவுள், தவறு உணர்ந்த ராவணனுக்கு அருள்புரிந்த சிவபெருமானை, பூசித்து அருள் பெற்ற புறவம் என்னும் திருத்தலமாகும்.

பாடல் விளக்கம்:,
அறம் அழிவுபெற - தர்மம் அழியும் படியாக. 
உலகு - உலகத்தை, 
தெறு - அழித்த, 
புயவன் - தோள்களையுடைய இராவணனது. 
விறல் அழிய - வலிமை யொழியும்படி, விரல் நிறுவி - விரலை அழுத்தி ; ( பின் )

மாமறையின் ஒலி - சிறந்த சாமவேத கானத்தை, 
முறை - வரிசையாக, 
முரல் செய் - பாடிய, 
பிறை எயிறன் - பிறை போன்ற பற்களையுடைய அவ்விராவணன். 
உற - நாளும், வாளும் பெற. 
அருளும் இறைவன் இடமாம். 

மறை அமரர் - வேதங்களுக்கும் தேவர்களுக்கும் ஒத்ததாகிய, 
நிறை - நீதியை. 
அருள - வழங்கும்படி. 
முறையொடு வரும் - முறையிட்டு வந்த,

புறவன் - புறாவிற்குரியவனாகிய வேடன், எதிர் - எதிரே, 
குறைவில் - புறாவின் எடைக்குச் சரியாக இட்ட மாமிசத்தின் குறைவில். 
மிக - அதிகரிக்க, 
நிறைதை உழி - நிறைவுவேண்டியிருந்த பொழுது. 
நிறைதை - நிறைவு. 
பொறை - பாரம், எடை
நிறை நிலவு - அந்த எடையின் நிறை சரியாகப் பொருந்த இட்ட. 
பொறையன் - உடலின் அரிந்த மாமிசத்தை எடையாக்கினவனாகிய சிபி, உடல் பெற - தன் உடம்பைப்பெற, 
அருள் - அவன் வந்து பணிய அருள் புரிந்த 
புறவம் அது - புறவம் என்னும் பெயருடைய திருத்தலமாம். 
🎶மிக அற்புதமான பாடல். மிக மிக முக்கியமானது. 

🌟இப்பாடலை திரும்பத் திரும்ப ஒதிக்கொண்டுவந்தால் நாவிற்கும் உள்ளத்திற்கும் அருமருந்து. 

⏺️சந்தப்பாக்களின் சீர்களில் ஒவ்வொர் உயிரும் ஓரசை என்பதால் ஓசை நயமும் தாளமும் நிறைய அமைத்துள்ளதை நாம் சிந்திக்க வேண்டும்.
⏺️ ஒவ்வொறு பாடலிலும் சீர்காழி பதியின் பெயரில் வரும் ஒரு தமிழ் எழுத்தை பாடல் முழுதும் சிறப்புடன் சீர் அமைத்துள்ளது மிகவும் அற்புதமானது. 

🔷இது போன்ற சந்தப் பாடல்களை கற்றுணர்ந்து அருணகிரியார் தம்முடைய திருப்புகழ் பாடல்களை அமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

🔹திருஞானசம்பந்தப்பிள்ளையாரை முருகனின் திரு அவதாரமாகக் கொண்டவர் அருணகிரிநாதர். இதைக் குறிப்பிட்டு தம்பாடல்களில் சிறப்பு செய்துள்ளார். 

✔️இராமலிங்கசுவாமிகளும் இக்கருத்தை ஏற்கிறார்.

💠பிற்கால இசைத் தமிழ் இலக்கியத்தின் அடிப்படையாக அமைந்தப் பாடல்கள்

♦️அருட் செல்வர் தமிழ் விரகனார், திருஞானசம்பந்தரின் இறையருள் பெற்ற இப் பதிகப் பாடல்களை போற்றி பரவுதல் செய்வோம்.

📚பாடல்,பொருள்,விளக்கம் பல நூல், தரவுகளிலிருந்து தொகுத்துத் தரப்பட்டுள்ளது.

🛡️சிந்தனைக்கும் எட்டாத ஞானசம்பந்தரின் அற்புதத் தமிழின் இசைப்பாடல் சிறப்பை உணருவோம். இதுவே, தமிழரின்பொக்கிஷம்.

🙇‍♂️நன்றி🙏
🛐💚🕉️🧡☸️💜⚛️💙🔯💛🙏🙆🏼🙇🏼‍♂️
என்னமும் தகவல் ஆக்கமும், தொகுத்து வழங்குவது:

என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
🛐💚🕉️🧡☸️💜⚛️💙🔯💛🙏🙆🏼🙇🏼‍♂️
முன்பதிவு :
https://m.facebook.com/story.php?story_fbid=5819885151420027&id=100001957991710

No comments:

Post a Comment

KERALAYATRA2024பகுதி - 5- வைக்கம் - (எர்னாகுளம்)பதிவு - 25 - #சுப்ராம்ஆலயதரிசனம் #சுப்ராம்ஆலயதரிசனம் 13.8.2024 #பயணஅனுபவக்குறிப்புகள்🕊️29. வைக்கம் சிவன் கோவில்(Vaikom Temple):

#KERALAYATRA2024 பகுதி - 5- வைக்கம் - (எர்னாகுளம்) பதிவு - 25 - #சுப்ராம்ஆலயதரிசனம்  #சுப்ராம்ஆலயதரிசனம் 13.8.2024  #பயணஅனுபவக்குறிப்புகள்🕊...