Wednesday, September 24, 2025

திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோயில் -பிரதோஷக்குழுயாத்ரா 14.9.25 - கொங்குநாட்டுத்தலங்கள்

திருமூர்த்திமலை - அமணலிங்கேஸ்வரர்
திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் திருமூர்த்திமலை என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.

இ்த்திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற திருக்கோயிலாகும் இத்திருக்கோயில் ஆற்றங்கரையின் ஓரத்தில் அமைந்த திருக்கோயிலாகும்

 திருப்பூர் மாவட்டம் முழுவதும் பரவலாக உடுமலைப்பேட்டை வட்டத்தில் அதிக அளவில் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு திருமூர்த்தி, கஞ்சிமலையப்பன் என்று பெயரிட்டு அழைக்கப்படுவதிலிருந்து இத்தலத்தின் பெருமையை அறியலாம்.

 இத்தகைய சீரும் சிறப்பும் மிக்க இத்திருக்கோயில் உடுமலைப்பேட்டைக்குத் தெற்கே 21 கிலோ மீட்டர் தொலைவிலும், ஆறுபடை வீடுகளில் சிறந்து விளங்கும் பழனி என்னும் திருவாவினன்குடி திருத்தலத்திலிருந்து தென்மேற்கு 45 கிலோ மீட்டர் தொலைவிலும் ஆனைமலைத் தொடர்ச்சியில் அழகுற அமைந்துள்ளது. 

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்கிறார்கள். இக்கோயிலுக்குத் தலவரலாறு உண்டு.

இயற்கை அன்னை எழில் நடனம் புரியும் மேற்குத்தொடர்ச்சி மலைச் சாரலில் தோன்றி சலசலத்து ஓடிவரும் தோணிநதி என்னும் பாலாற்றங்கரையில் சிவலிங்கத் தோற்றத்தில் அமைந்துள்ள ஒரு குன்றில் அருங்காட்சியளிக்கிறார்கள்.

 திருமூர்த்திகளான அயன்,அரன்,அரி ஆகியோர் இங்கு எழுந்தருளியுள்ள கடவுளர்கள் மும்மூர்த்திகளாகும். ஆனாலும் பெரிதும் பேசப்படுவது அமணலிங்கேஸ்வரர் தான்..இங்கு பிரம்மா சிவன் விஷ்னு ஒருங்கிணைந்து அருள்பாலித்து வருகிறார்கள் இத்திருக்கோயில் சுற்றுலா இணைந்த வழிபாட்டுத்தலமாக திகழ்கிறது.

 நதித்தீரங்களையே தமது அருள்பாலிக்கும் இடமாகக் கொண்டவன் பரமேஸ்வரன். ஆகவே இங்கு பாய்ந்தோடிவரும் தோணி நதிக்கரையில் கோவில் கொண்டதால் அந்த சர்வேஸ்வரன் நாமமே மேலோங்கி விட்டதென கொள்ளலாம்.

 இங்கு எழுந்தருளியிருக்கும் கடவுள் அமலலிங்கம் என்று முன்னர் வழங்கப்பட்டு வந்தது . பின்னர் அமணலிங்கம் என்று திரிந்து பட்டதாகக் கூறுகின்றனர். அமணலிங்கம் என்றால் அழகிய லிங்கம் என்று பொருள்படும் . அமணன் என்றால் குற்றமற்றவன் என்பது பொருள். இயல்பாகவே குற்றங்களிலிருந்து நீங்கிய இறைவனே அமணலிங்கமாகும். எனவே ஆன்மாவினின்றும் ஆணவம், கன்மம் மாயை என்னும் மும்மலங்களையும் விட்டொழித்து வெற்றி பெற விழைவோர் அனைவரும் அருள்மிகு அமணலிங்கேஸ்வரரைத் தொழுதால் மும்மலங்கள் நீங்கி முக்தி பேரடையலாம்.
 இத்தகு சிறப்புடைய மூர்த்தி இங்கு குன்றமே லிங்கமாக காட்சி வழங்கி அருளுவது கண்கூடு. 

தற்போது தளி என்றழைக்கப்படும் சிற்றூர் அக்காலத்தில் தளி பாளயப்பட்டாக விளங்கியது. அப்பாளையப் பட்டினை நிர்வகித்து வந்த அரண்மனைக்கு தெற்கே திருமூர்த்தி மலையில் எழுந்தருளி உள்ளதால் இவ்விறைவனை பாமர மக்கள் தெற்கு சாமி என்றும் போற்றி வழிபடுகின்றனர்.

 திருமூர்த்தம் என்றால் ஆக்குதல், காத்தல், அழித்தல் என்ற முத்தெய்வங்களையும் குறிக்கும். இம்முத்தொழில் புரிய மூவரும் எழுந்தருளி அருளாட்சி புரியும் ஒப்பற்ற திருத்தலமே திருமூர்த்திமலையாகும்.

கோயில் அமைப்பு
இக்கோயிலில் அமணலிங்கேஸ்வரர் சன்னதியும், விநாயகர், முருகர் உபசன்னதிகளும் உள்ளன. மேலும் ஆலய பின்புறம் சப்தகன்னியர் உள்ளனர்.

 இக்கோயிலில் மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.

இக்கோயிலில் சிவாகம முறைப்படி மூன்று காலப் பூசைகள் நடக்கின்றன. மாசி மாதம் மகா சிவராத்திரி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. 
ஆடி , தை- அம்மாவாசை திருவிழாவாக நடைபெறுகிறது.

பயண அனுபவக் குறிப்புகள் :
பிரதான கருவரையில், 
அ/மி. அமணலிங்கேஸ்வரர் மற்றும், பிர்மா, விஷ்ணு குடவரைக் குன்றில் வடிக்கப்பட்டுள்ளது. மூவருக்கும் முன்னால், அழகிய உற்சவர்கள் . அதற்கு
அபிஷேகம். பூசைகள் செய்கிறார்கள்.
சுப்ரமணியர், விநாயகர், தனி சன்னதிகள் மற்றும் நவகிரகம் அமைக்கப்பட்டுள்ளது.
நீண்ட முன் மண்டபம் உள்ளது.

ஆலயம் ஒட்டி 8 கால் மண்டபம் ஒன்று தனியே உள்ளது.

கல் விளக்குத்தூன் ஒரு வட்ட மண்டப அமைப்பில் பல்வேறு தெய்வ சிலைகள் அற்புதமாக வடிக்கப்பட்டு, பாதுகாப்புக்காக இரும்பு கம்பி வேலியும் போடப்பட்டு இருக்கிறது.

மேல் பகுதியில் அன்னதானக்கூடம், தியான மண்டபம் ஒன்றும், அலுவலகத்திற்கு என்று ஒரு கட்டிடமும் உள்ளது.
இந்த வளாகம் முழுதுமே கற்பாறைகள் கொண்டதும், சரிவாகவும் உள்ளது.

ஆலய பின்புறத்திலிருந்து வரும் நதியின் நீரோட்டம் ஆலயம் ஒரு பகுதி முழுவதும் தவழ்ந்து பெருகி ஓடுகிறது நதியில் குளித்து ஆலயம் சென்று வணங்கலாம். 

நதியை கடந்து செல்ல சிறிய பாலம் உள்ளது; அதன் வழியே சென்று 1 கி.மீ தூரத்தில் மலை அடிவாரத்தில் உள்ள திருமூர்த்தி அருவியில் குளித்து வரலாம்.

மொத்த வளாகத்தையும் ஒரு சிறிய சாலையின் வழியே அடைய வேண்டியது உள்ளது. வழியெங்கும் ஆலய மற்றும் பல்வேறு சிறு கடைகள்.

இவை அனைத்தும் மலைகளின் பின்னனியில் இருப்பதால், மிக ரம்மியமான சூழல் உருவாகியுள்ளது.
எங்கும் ஏராளமான குரங்குகள் இருப்பதால், உடமைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு சிறந்த ஆன்மீக சுற்றுலா தலமாக விளங்குகிறது 
14.9.2025 ஞாயிற்றுக்கிழமை
#சுப்ராம்தரிசனம்
#பிரதோஷக்குழுயாத்ரா 14.9.25
#என்றும்அன்புடன் 
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

No comments:

Post a Comment

சுவாமிமலை முருகன் கோவில் (Arulmigu Swaminatha Swamy Temple) அறுபடை வீடுகளில் நான்காவது படைவீடு.

சுவாமிமலை முருகன் கோவில் (Arulmigu Swaminatha Swamy Temple) அறுபடை வீடுகளில் நான்காவது படைவீடு. ⛳தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே காவிரி ...