Saturday, August 23, 2025

சிவசைலம் - சிவசைலநாதர் கோவில்ஸ்ரீ சிவசைலநாதர் - ஸ்ரீ பரமகல்யாணி ஆலயம் பிரதோஷக்குழு யாத்ரா 17.8.25

#சிவசைலம்
17.8.25 ல் மீள் தரிசனம்:
சிவசைலம் - சிவசைலநாதர் கோவில்
ஸ்ரீ சிவசைலநாதர் - ஸ்ரீ பரமகல்யாணி மிகவும் புகழ்வாய்ந்த புராதான ஆலயம்.

சுவாமி அம்பாள் தனித்தனி சன்னதிகளில் மேற்கு நோக்கிய அருட்பார்வைகள்

🛕திருநெல்வேலியிலிருந்து அம்பாசமுத்திரம் வழியாகத் தென்காசி செல்லும் சாலையில் ஆழ்வார்குறிச்சியின் மேற்கே ஆறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது.
 (நெல்லைக்கு மேற்கே சுமார் 57 கி.மீ)
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், கடனா நதிக்கரையில் அமைந்துள்ளது.

தேவார வைப்புத்தலம்.

🔱சடைமுடியோடு காட்சியளிக்கும் சிவபெருமான்

 இக்கோவிலின் புராணப் பெயர் 'அத்தீச்சுவரம்' ஆகும்.இறைவன் திருநாமம் சிவசைலநாதர். இறைவியின் திருநாமம் பரமகல்யாணி. இத்தலம் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் கடனை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

 இத்தலத்தில் உறையும் மூலவர் சிவசைலநாதரை நான்கு திசைகளில் இருந்தும் வழிபடலாம். மேற்கு திசையில் கருவறை வாயில் வழியாகவும், மற்ற மூன்று திசைகளில் சுற்றுச்சுவரில் உள்ள சாளரங்களின் வழியாகவும் சுவாமியை தரிசிக்கலாம். இப்படி கருவறையின் மூன்று சுற்று சுவர்களிலும் சாளரம் உள்ள சிவாவயத்தை காண்பது அரிது.

சிவசைலம் திருக்கோவிலை கட்டியவன் சுதர்சன பாண்டிய மன்னன். ஒர் நாள் சிவசைலநாதரை தரிசிக்க சுதர்சன பாண்டிய மன்னன் கோவிலுக்கு வர, அப்போது கடனை ஆற்றில் வெள்ளம் பெருக்கு எடுத்து ஓடியது.

 இதனால் மன்னன் ஆற்றை கடந்து கோவிலுக்கு செல்ல முடியவில்லை. அதற்குள் இருட்டி விடவே அர்த்தசாம வழிபாடு முடிந்து கோவில் நடை சாத்தப்படுகிறது. எனவே மன்னனுக்கு, சுவாமிக்கு சாற்றிய பூ மாலை மற்றும் பிரசாதங்களை அர்ச்சகர் கொண்டு வந்து தருகிறார். அதனை பெற்று மகிழ்ந்த மன்னன் மாலையை கண்களில் ஒற்றிக் கொள்ள முற்பட்ட போது அதில் பெண்ணின் நீள தலை முடி ஒன்று இருப்பதை கண்டு சினம் கொள்கிறார். சுவாமிக்கு சாற்றிய மாலையில் கூந்தல் முடி எப்படி வந்தது என ஆவேசமாக கேட்க, செய்வதறியாத அர்ச்சகர் அது சிவசைலநாதரின் தலையில் உள்ள சடைமுடியே என கூறிவிடுகிறார். என்ன சுவாமியின் தலையில் சடைமுடியா? அந்த அதிசயத்தை நாளை எனக்கும் காட்ட வேண்டும் எனக் கூறி சென்று விடுகிறார்.

 மறுநாள் கோவில் திறக்கப்பட மீண்டும் மன்னன் தன் படைகளுடன் திருக்கோவிலுக்கு வருகிறார். தான் கூறிய பொய்யை நினைத்து பயந்து சிவசைலநாதரிடம் மன்னிப்பு கேட்டு தன்னை காத்து அருளும் படி அர்ச்சகர் மனதினுள் வேண்டிக் கொண்டே, மன்னன் முன்னிலையில் சுவாமி மீது சாத்தப்பட்டிருந்த நாகாபரணத்தை விலக்கி காட்டிட, சிவசைலநாத லிங்கத் திருமேனி சடை முடியோடு காட்சியளித்ததாம்

இதனைக் கண்டு அதிசயித்த மன்னன் சிவபெருமானை போற்றி துதித்து, அர்ச்சகருக்கும் வெகுமதி வழங்கி சிறப்பு செய்தான்.

எமனை நடுங்க வைத்து நமக்கெல்லாம் நல்ல அருள்பாலிக்கும் நாயகனை நாம் நான்கு திசைகளிலிருந்தும் தரிசிக்கக் கூடியதும் இத்தலத்தின் பெருமைகளில் குறிப்பிடத்தக்கது

 சிவசைலநாதர் சுயம்பு மூர்த்தி ஆவார். இவர் கருவறையில் சற்றே சாய்ந்த லிங்கத் திருமேனியாய் மேற்கு திசை நோக்கி காட்சியளிக்கிறார். இவர் அர்ச்சகரை காக்க சடைமுடியோடு காட்சியளித்ததால், இன்றும் இந்த லிங்கத் திருமேனியின் பின்புறம் சடைமுடிகளின் ரேகைகள் உள்ளன. இதனை நாம் பிரகார சுற்றுச்சுவரில் உள்ள சாளரம் வழியாக தரிசிக்கலாம்

🔱வீதி உலாவிற்கு தங்க கைக்கடிகாரம் அணிந்து வரும் அம்பிகை

இத்தலத்தில் அம்பிகைக்கு தனி சன்னதி கட்ட ஏற்பாடாகி கொண்டிருந்த வேளையில், சிவசைலத்திற்கு அருகே ஆழ்வார்குறிச்சிக்கு அருகில் உள்ள சிநேகபுரி (தற்போதைய ஆம்பூர்) என்னும் ஊரில் வாழ்ந்த அந்தணர் ஒருவரின் கனவில் தோன்றி அந்த ஊரில் உள்ள கிணறு ஒன்றில் அம்மையின் திருமேனி ஒன்று நான்கு கரங்களுடன் ஜலவாசமாக இருந்து வருவதாகவும், அந்த அம்பாள் திருமேனியை எடுத்து சிவசைலத்தில் கட்டப்படும் கோவிலுக்குள் பரமகல்யாணி என்ற பெயர் சூட்டி பிரதிஷ்டிக்கும் படி கூறியருள்கிறார் சிவபெருமான். 

அந்த அந்தணரும் தான் கண்ட கனவை ஊர் மக்களுக்கும், மன்னனுக்கும் தெரியப்படுத்தி, அந்த குறிப்பிட்ட கிணற்றில் தேடிட சிவபெருமான் கூறியது போலவே ஒரு நான்கு கரங்கள் கொண்ட அழகிய அம்மையின் திருவுருவ சிலை கிடைக்க பெற்றது. அந்த அம்மையின் திருவுருவை மங்கள வாத்தியங்கள் முழங்க அங்கிருந்து எடுத்து வந்து சிவசைலம் கோவிலில் பிரதிஷ்டை செய்ததாகவும் வரலாறு கூறுகிறது.

இங்குள்ள அம்பிகை நான்கு கரங்கள் கொண்டு அழகே உருவாக புன்முறுவல் பூத்த முகத்தவளாய் அளவில் சற்றே பெரிய உருவில் காட்சித் தருகிறாள். பாண்டிய நாட்டில் பிரசித்தி பெற்ற அநேக கோவிலின் அம்பிகைகள் இருகரம் கொண்டவர்களாக காட்சியளிக்க, இங்கு அம்பிகை பரமகல்யாணி, நான்கு கரங்கள் கொண்டு மேற்கு நோக்கி காட்சியளிப்பது சிறப்பம்சம் ஆகும்.

 இங்குள்ள உற்சவர் பரமகல்யாணி அம்பிகையும் நான்கு கரங்கள் கொண்டு காட்சியளிக்கிறாள்.

உற்சவர் பரமகல்யாணி அம்பிகைக்கு தங்கக் கை கடிகாரம் ஆபரணமாக அணிவிக்கப்படுவது சிறப்பம்சம்.

இக்கோயிலில் திருக்கல்யாணம் விழா சிறப்பாகக் கொண்டாடப்படும். இங்கு அருள்பாலிக்கும் கல்யாணி அம்மன் ஆழ்வார்குறிச்சி அடுத்துள்ள ஆம்பூரில் உள்ள கிணற்றில் பிறந்ததால் திருக்கல்யாணத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்பே ஆம்பூர் சென்று விடுவார்.

பின்பு கைலாசநாதர் ஆம்பூர் சென்று அங்குள்ள ஸ்ரீனிவாசன் பெருமாள் கோயில் வைத்து சீர்வரிசையுடன் திருக்கல்யாண வைபோகம் நடைபெறும். பின்பு அம்பாள் சுவாமியுடன் ஊர்வலமாக சிவசைலம் செல்வது பக்தர்களால் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்று சிறப்பம்சங்களைக் கொண்டிருக்கிறது இக்கோயில்.

🔱இந்த கோயிலின் மற்றொரு சிறப்பம்சம் எழுந்து நிற்கும் நிலையில் உள்ள நந்திகேஸ்வரர். இந்த நந்திகேஸ்வரர் இந்திர சபையின் தலைமை சிற்பி மயனால் உருவாக்கப்பட்டதாக ஐதீகம்.

🛕தலபுராணம்:
புராணப்பெயர் அத்தீஸ்வரம்
திருமறைக்காலத்தில் திருக்கைலாயத்தில் அன்னை பார்வதிக்கும் பரமேஷ்வரனுக்கும் நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தைப் பார்ப்பதற்காக முனிவர்களும், ரிஷிகளும், ஞானிகளும் வடக்கே சென்றதால் பூ உலகம் வடக்கே தாழ்ந்து தெற்கே உயர்ந்தது.

அதனால் உலகத்தில் சமன் செய்வதற்காக அகத்தியர் மற்றும் அத்திரி போற்ற முனிவர்களை தெற்கு அனுப்பினார் சிவபெருமான். அவ்வாறு அனுப்பப்பட்ட அத்திரி முனிவர் சுயம்புலிங்க தரிசனம் காண விரும்பினார். அவருடைய ஆசையை நிறைவேற்றும் வகையில் அகத்திய முனிவர், மேற்குத் தொடர்ச்சி மலையில் திரிகூட பர்வதம் சென்று தவம் செய்தால் சுயம்புலிங்க தரிசனம் கிடைக்கும் என்று கூறினார்.

அகத்திய முனிவரின் ஆலோசனையின்படி அத்திரி முனிவர், தன் துணைவியார் அனுசியா தேவி மற்றும் சீடர்கள் கோரற்றகள், தாந்த்ரீகர் முதலாளோடு திரிகூட பருவதம் வந்து தவம் செய்யத் தொடங்கினார்.

ஒருமுறை பௌர்ணமி தினத்தன்று பூஜை செய்வதற்குக் கடம்ப மலர்களைப் பறிப்பதற்காகக் கடம்பவனம் சென்று முனிவரின் சீடர்கள், அப்போது ஒரு பாறையின் மீது பசுக்கள் தாமாகவே பால் சொரிந்து செல்வதைக் கண்டு சீடர்கள் அந்தப் பாறையின் அருகில் சென்று பார்த்தனர்.

அப்போது ஒரு சிறிய சுயம்பு லிங்கத்தை அவர்கள் பார்த்து அத்திரி முனிவரிடம் தங்கள் கண்டதைத் தெரிவித்தனர். இதனை அடுத்து அத்திரி முனிவர் தனது துணைவியாருடன் வந்து சுயம்பு லிங்கத்தைக் கண்டு தரிசித்த தலம் இந்த சிவசைல நாதர் கோயில் என்று புராணங்கள் கூறுகின்றன.சிவசைலத்தில் அமைந்திருக்கும் சிவபெருமான் பூமிக்கு மேலே ஒரு பாகமும், பூமிக்குக் கீழே 15 பாகமும் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்தக்கோயில் செந்தமிழ் பாண்டியனால் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது.

( தகவல்கள்:இணையத்திலிருந்து.... நன்றி🙏)

ஆலயம் நல்ல பராமரிப்பில் உள்ளது.

ஆலயம் அருகில் உள்ள மேற்கு மலைத்தொடர் - பொதிகை மலை) காட்சி மிகவும் அற்புதமாக இருக்கும்.

ஆலயம் பெரிய மரங்கள், சோலைகளில் அமைதியாக இருக்கும். அருமையான சூழல் கொண்டது.
#பிரதோஷக்குழுயாத்ரா 

17.8.25 மீள் தரிசனம்
#என்றும்_அன்புடன் 
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம் 
#சுப்ராம்

No comments:

Post a Comment

கல்லிடைக்குறிச்சி - வம்ச விருத்திஸ்வரர் - (குலசேகரமுடையார்) - பிரதோஷக்குழு யாத்ரா 17.8.2025

#கல்லிடைக்குறிச்சி -  குலசேகரமுடையார் ஆலயம் 17.8.25 #கல்லிடைக்குறிச்சி - வம்ச விருத்திஸ்வரர் - குலசேகரமுடையார் அம்பாள் = தர்மசவர்த்தினி (அறம...