Saturday, August 23, 2025

திருப்புடைமருதூர் கோமதி அம்மன் சமேத நாறும்பூநாதர் ஆலயம். - பிரதோஷக்குழு யாத்ரா 17.8.2025

#திருப்புடைமருதூர்

17.08.25 மீள் தரிசனம்

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டத்தில் உள்ள #திருப்புடைமருதூர் மிகப்புராணத்தலம்.

கோமதி அம்மன் சமேத நாறும்பூநாதர் ஆலயம்.

தல சிறப்பு

முன்னொரு சமயம்…. ‘காசிக்கு நிகரான தலத்தைக் காட்டுமாறு சிவனாரிடம் தேவர்கள் வேண்டினர். தேவர்களின் கையில் ஒரு பிரம்ம தண்டத்தைக் கொடுத்து அதைக் கீழே போடச் சொல்ல, தேவர்களும் போட்டனர். அது, தாமிரபரணி ஆற்றில் விழுந்தது. “இந்த பிரம்ம தண்டம் எங்கு கரை ஒதுங்குகிறதோ, அதுதான் காசிக்கு நிகரானது” என சொன்னாராம். அதே போல, அத்தண்டம், தட்சிண காசியான திருப்புடைமருதூர் ஆற்றங்கரையோரம் ஒதுங்க, அங்கு பிரம்ம தண்டத்துக்குப் பூஜை செய்து சிவனருளைப் பெற்றனர்.

ஆலயத்தில் சூரியன் அருகில் பிரம்மதண்டம் பிரதிஷ்டை தனி சன்னதியில் உள்ளது.

பிற்காலத்தில் களக்காடு பகுதியை ஆட்சி செய்த வீரமார்த்தாண்டவர்ம மன்னன், மருதமரங்கள் நிறைந்த வனமாக இருந்த இப்பகுதிக்கு வேட்டையாட வந்தான். அப்போது ஒரு மானைக் கண்டு அதனை வீழ்த்த அம்பு எய்தார். அப்போது அந்த மான், ஒரு மருதமரத்தின் அடியில் சென்று மறைந்தது. மானை, மீட்க அந்த மரத்தை வெட்டும்படி உத்தரவிட்டார் மன்னர். அதன்படி கோடாரியால் மரத்தை வெட்ட ரத்தம் பீறிட்டது. அங்கு வெட்டுபட்ட நிலையில் லிங்கத்திருமேனியாய் சிவனாரைக் கண்ட மன்னர் மனமுருகி வேண்டி, அந்த இடத்திலேயே ஆலயம் எழுப்பினார்.

சிவபக்தரான கருவூர் சித்தர், பல்வேறு சிவாலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்து விட்டு வந்தவர், தாமிரபரணியில் வடக்குக்கரை வழியாக வந்த போது மறுக்கரையில் இக்கோயிலைக் கண்டார். ஆனால், ஆற்றைக் கடக்க முடியாதபடி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இங்குக் கோயில் கொண்டுள்ள இறைவனின் பெயர் அறியாத கருவூர் சித்தர், அப்பகுதியிலிருந்து வந்த மலர்களின் மணத்தை முகந்து, “நாறும்பூவின் (மணக்கும் பூக்களின்) நடுவில் வீற்றிருக்கும் இறைவனே உன்னை தரிசிக்க அருள் புரிவாயா?” என இறைவனின் திருநாமத்தைச் சத்தமாகச் சொல்லி அழைத்து, “பரம்பொருளே.. உன்னை தரிசிக்க எனக்கு பாக்கியம் கிட்டவில்லையா? ஆற்றை, கடக்க முடியாதபடி வெள்ளமாகச் செல்கிறதே.. நான் சொல்லுவது உனக்கு கேட்கவில்லையா? உன் காதுகளில் விழவில்லையா?”என இருகரம் கூப்பிக் கேட்க, இறைவன் தனது திருமேனியை இடப்பக்கம் சரித்து செவிமடுத்துக் கேட்டாராம்.

வெள்ளத்தைக் கட்டுப்படுத்தும்படி சித்தர் வேண்டிக் கேட்க, வெள்ளம் குறைந்து கருவூர் சித்தர், நாறும்பூ நாதரை தரிசனம் செய்ததாகவும், ”தன்னை நாடி வரும் பக்தர்களின் குறைகளையும் செவி மடித்துக் கேட்க வேண்டும்” எனவேண்டியதாகவும் சொல்கிறது தலபுராணம்.

இதனால் இன்றும் சாய்ந்த நிலையிலேயே பக்தர்களுக்கு ஈசன் காட்சி கொடுக்கிறார். நாறும்பூ நாதரின் தலையில் வெட்டுப்பட்ட தடம் இருக்கிறது. காயத்தை ஆற்றும் விதத்தில் தினமும் சந்தனாதி தைலம் பூசிய பின்னரே அபிஷேகம் நடைபெறுகிறது. சுவாமிக்கு முன் வலதுபுறத்தில் பிரம்ம தண்டம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

சுமார் 1500 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது இத்தலம். நீலக் கல்லில் உச்சி முதல் பாதம் வரை ருத்திராட்ச திருமேனியான கோமதி அம்பாள், அருளே வடிவாகக் காட்சியளிக்கிறார். பிரம்ம ஹத்தி தோஷத்தால் பாதிக்கப்பட்ட இந்திரன், தன் தோஷம் நீங்க இங்குள்ள தாமிரபரணி தீர்த்தக்கட்டத்தில் நீராடி நாறும்பூ நாதரை வழிபட்டதாக புராணம் கூறுகிறது. மருதபுரம், சுந்தரவனம், புடார்ச்சுனம், தட்சிணகாசி, சுரேந்திரபுரி என்ற பெயர்களும் இதற்கு உண்டு.

வசிஸ்டர், ஆதிமனுவுடன் இணைந்து இத்தல இறைவனின் திருமேனி மீது ’லேபனம்’ என்ற கஸ்தூரி மஞ்சள், புனுகு, சந்தனம் ஆகிய நறுமணக் கலவையைச் சாத்தி பூஜித்தனர். இதனால், இத்தல இறைவன் ‘லேபன சுந்தரர்’ என்றும் போற்றப்படுகிறார். இங்குள்ள நடராஜர் சிலை ஓம் வடிவ திருவாசியுடன் அமைந்துள்ளது. இங்குள்ள யோக தெட்சிணாமூர்த்தி இரு கால்களையும் மடக்கி அமர்ந்த நிலையில் காட்சி அளிக்கிறார்.

இக்கோயிலின் கோபுரம் ஐந்து நிலைகளையும், பதினோரு கலசங்களையும் கொண்டுள்ளது. கோபுரத்தின் தளங்களில் மியூரல்- டெம்பரா வகைச் சுவரோவியங்கள் காணப்படுகிறது. இந்த ஓவியங்களில் திருவிளையாடற்புராணம், கந்த புராணம், பெரிய புராணம் தொடர்பான ஓவியங்களும் சீன நாட்டு வணிகர்களின் உருவங்களும் இடம் பெற்றுள்ளன. பாண்டியர்களால் கட்டப்பட்ட கருவறை, சோழர்கள், விஜயநகரப் பேரரசர்கள், நாயக்கர்களால் செய்யப்பட்ட திருப்பணிகள் என மிகப்பெரும் கோயிலாக காட்சியளிக்கிறது. தல விருட்சமான மருதமரம், தற்போது படித்துறையில் காய்ந்த நிலையில் உள்ளது. இம்மரத்தின் கீழ் சிவலிங்கமும், லிங்கத்தைக் கைகூப்பி வணங்கிய இந்திரனும் வடிக்கப்பட்டுள்ளார்கள். இங்குள்ள தாமிரபரணியில்தான் ராமநதியும், கடனாநதியும் கலக்கிறது.

ஆந்திர மாநிலத்திலுள்ள ஸ்ரீசைலத்தை ’உத்திரகாசி’ எனவும், தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரை ‘மத்திய காசி’ எனவும், திருப்புடைமருதூரை ‘தட்சிணகாசி’ என, இந்த மூன்று தலங்களின் விருட்சங்கள் மருதமரம் என்பதால் இவற்றை காசிக்கு இணையாக ஒப்பிடுகிறார்கள் பக்தர்கள்.

தலைசாய்த்து செவி மடுத்துக் கு றைகளைக் கேட்டு வரமளிக்கும் நாறும்பூநாதருக்கு வெள்ளை வஸ்திரம், வெண் தாமரை மலர் மாலை சாற்றி சுத்த அன்னம் நைவேத்யம் செய்து வழிபட்டால், எந்த வேண்டுதலானாலும் நிறைவேறும் என்கிறார்கள்.

.... இணையத்திலிருந்து .... நன்றி🙏

பல்வேறு சிறப்புகள் பெற்ற மிகவும் பெரிய ஆலயம் சிதைந்த நிலையில் இருந்ததை, உச்சநீதிபதி திரு ரெத்தினவேல் பாண்டியன் அவர்கள் முன்முயற்சியுடன், பல்வேறு ஆன்மீக பெரியவர்கள், மற்றும் ஆன்மீக அமைப்புகளும் இணைந்து ஆலயத்தை சீர்படுத்தி குடமுழுக்கு நடத்தி, பராமரித்து வருகிறார்கள்.

மூர்த்தி, தலம், தீர்த்தம், தலவிருஷ்ட்சம் என எல்லாமே சிறப்பு வாய்ந்த ஆலயம்.

5 பிரகாரங்கள் கொண்டது. 

உள்பிரகாரத்தில், கன்னி விநாயகர், சுப்பிரமணியர், சூரியன், 63 நாயன்மார்கள், அகத்தியர், சனீஸ்வரர், சரஸ்வதி, சகஸ்ரலிங்கம், மற்றும் நடராஜர் சன்னதிகள் உள்ளன.

தலவிருட்சம் - மருதமரம் தலமரம் 1200 வருடங்கள் பழமையான பாகம் தனி சன்னதியாக ஆலயம் பின்புறம் நதி ஓரம் வணங்கப்பட்டு வருகிறது.

பிரம்மஹத்தி தோஷம் நீங்க பிரம்மன், மருதமரம் அருகில் தவம் செய்து சிவன் அருள் பெற்றார்.

பிரம்மன் புதல்வர் சுயம்புமானு , சரஸ்வதி, திருமகள் , பூமிதேவி வழிபட்ட தலம்.

தைபூசம் பிரம்மோட்சவம். மிகவும் முக்கிய நாள் கொண்டாடப்படுகிறது.

நாள்தோறும் 6 காலம்

தாமிரபரணி உத்திரவாகினியாக இணை ஆறு கலந்து பிரவாகம். நீராடல் சிறப்பு.

வாழ்வில் ஒரு முறையாவது தரிசிக்க வேண்டிய நெல்லை மாவட்டத்தலங்களின் ஒன்று.

#பிரதோஷக்குழுயாத்ரா 
17.8.25 மீள் தரிசனம்

#என்றும்_அன்புடன் 

#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 

#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 

#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#சுப்ராம்

No comments:

Post a Comment

கல்லிடைக்குறிச்சி - வம்ச விருத்திஸ்வரர் - (குலசேகரமுடையார்) - பிரதோஷக்குழு யாத்ரா 17.8.2025

#கல்லிடைக்குறிச்சி -  குலசேகரமுடையார் ஆலயம் 17.8.25 #கல்லிடைக்குறிச்சி - வம்ச விருத்திஸ்வரர் - குலசேகரமுடையார் அம்பாள் = தர்மசவர்த்தினி (அறம...