திருவரங்குளம் -அருள்மிகு அரங்குளநாதர் திருக்கோயில்
#திருவரங்குளம் -அருள்மிகு அரங்குளநாதர் திருக்கோயில்
(ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் திருக்கோயில்)
- புதுக்கோட்டை மாவட்டம்
🔱பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்கள் வாழ்நாளில் அடிக்கடியோ அல்லது தங்களது பிறந்த நட்சத்திர நாளிலோ அவசியம் செல்ல வேண்டிய தலம் புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் கோயிலாகும்.
💠இருப்பிடம் : புதுக்கோட்டையில் இருந்து ஆலங்குடி /பட்டுக்கோட்டை செல்லும் டவுன் பஸ்களில் சென்றால் 7 கி.மீ., தொலைவில் இவ்வூர் உள்ளது. பஸ் ஸ்டாப்பில் இருந்து சிறிது தூரம்வரை சென்றால் கோயிலை அடையலாம். அடிக்கடி பஸ் உண்டு.
💠கோயில் காலை 7.00 மணி முதல் 12.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் மாலை 7.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
🔱சுவாமி :ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் -
.அரங்குளநாதர்
🔱அம்பாள்: பெரிய நாயகி
🛕பாண்டியர் காலத்தில் கட்டப்பட்ட ராஜகோபுர தரிசனம் கோடி புண்ணியம் தரும். சுவாமி அரங்குளநாதர் சுயம்புவாக அருள் தருகிறார்.
அம்மன் பெரியநாயகி நான்கு திருக்கரத்துடன் தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் அருளுகிறாள்.
சிவனது மூலஸ்தானத்திற்கு பின், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியரின் தனி சன்னதி உள்ளது. பிரகாரத்தில் பொற்பனை விநாயகர், அரங்குள விநாயகர், பிரகாரத்திலுள்ள தெட்சிணாமூர்த்தியின் கையில் வீணை இருக்கிறது - வீணாதர தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, சண்டிகேஸ்வரர், நந்தி, சதுர்த்தி விநாயகர், சப்த மாதர்கள், 63 நாயன்மார்கள், ஐயனார், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, சரஸ்வதி, மகாலட்சுமி, ஜேஷ்டா தேவி, பாலமுருகன், நவகிரகம், பைரவர், சூரியன், சந்திரன், நால்வர் சன்னதிகள் உள்ளன க
🛕இக்கோயில் நடராஜர் சிலை சிறப்பு வாய்ந்த ஒன்று. இதன் படிமம் டில்லியிலுள்ள தேசிய மியூசியத்தில் உள்ளது.
🛕இங்குள்ள திருச்சிற்றம்பலம் உடையாரை தரிசித்தால் காசி விஸ்வநாதரை தரிசித்த பலன் கிடைக்கும். 12 ராசிகளும் அதற்குரிய அதிதேவதைகளுடன் மூலிகை ஓவியமாக வசந்த மண்டபத்தின் உச்சியில் வரையப்பட்டுள்ளது.
🛕பிரகாரத்தை நூற்றுக்கால் மண்டபம் என்கிறார்கள். ஒரு குதிரை வீரனின் சிற்பம் கல்பலகை ஒன்றில் வடிக்கப்பட்டுள்ளது. இது இப்பகுதியில்
வாழ்ந்த வீரனாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
🪷கிரக தோஷம், நாகதோஷம், மன நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அம்மனிடம் உள்ள ஸ்ரீசக்கரத்தை நினைத்து வழிபட்டு வந்தால் பலன் கிடைக்கும்.
தல வரலாறு : ஒரு முறை சோழ மன்னனாகிய கல்மாஷபாதன் என்பவனுக்கு நீண்ட காலமாகியும் குழந்தை பாக்கியம் இல்லை. சிறந்த சிவபக்தனான இவன், தனக்கு பின் சிவ சேவை செய்ய ஆளில்லை என்பதை நினைத்து வருந்தி, அகத்திய முனிவரிடம் முறையிட்டான். மன்னனின் குறைநீங்க திருவரங்குளம் சென்று சிவனை வணங்கும்படி அகத்தியர் கூறினார்.
⚡மன்னனும் இத்தலம் வந்து சிவலிங்கத்தை தேடி அலைந்தான்.
அத்துடன் அங்கேயே தங்கி சிவன் கோயிலை கட்ட முடிவெடுத்தான்.
ஆனால் சிவலிங்கத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை, மேய்ப்பர்களின் உதவியை நாடினான். அப்போது சிவன், அப்பகுதியில் தான் இருக்கும் இடத்தை அரசனுக்கு உணர்த்த திருவுளம் கொண்டார். இடையர்கள் கொண்டுவரும் பூஜைப்பொருள்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தினமும் கீழே இடறி விழுவதை அறிந்த மன்னவாளால்ன், அந்த இடத்திற்கு சென்று தன் பூமியில் கீறிப்பார்த்தான். அப்போது பூமியிலிருந்த சிவலிங்கத்தின் தலையில் வாள்பட்டு ரத்தம் பீய்ச்சியடித்தது. இதைக்கண்டு பயந்த மன்னன், மாபெரும் தவறு செய்து விட்டேன் என புலம்பி தன் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றான். இறைவன் மன்னனை தடுத்தாட்கொண்டு பார்வதியுடன் திருமணக்கோலத்தில் தரிசனம் கொடுத்து, இந்த இடத்தில் தனக்கு கோயில் கட்டும்படி ஆணையிட்டார். ஒரு பூர நட்சத்திர நாளில் தான் இந்த நிகழ்ச்சி நடந்தது. இறைவனின் அருளால் மன்னன் கோயில் கட்டினான். அவனுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
⚡புனித நீரூற்று ஹரனின் தலையிலிருந்து வந்ததால் , இது ஹர தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. இந்த இடம் திரு ஹரன் குளம்-திருவரங்குளம் என்று அறியப்பட்டது.
🪷பூர நட்சத்திரத்தலம்: பூர தீர்த்தம் என்பது அக்னி லோகத்தில் உள்ள ஒரு புனித தீர்த்தமாகும். அம்மன் சிவனது தரிசனங்கள் அனைத்தையும் பெற பூராக்னியில் தவம் செய்தாள். இவளது தவத்தில் மகிழந்த இறைவன் இத்தலத்தில் ஆடிப்பூர நன்னாளில் சிவ தரிசனம் தந்தார். மேலும் பூர நட்சத்திர லோகத்தில் சிவ தீர்த்தம், நாக தீர்த்தம், ஞான பிரம்ம தீர்த்தம், இந்திர தீர்த்தம், ஸ்ரீ தீர்த்தம், ஸ்கந்த தீர்த்தம், குரு தீர்த்தம் என ஏழு தீர்த்தங்கள் உண்டு. இதே ஏழு தீர்த்தங்கள் இத்தலத்திலும் இருப்பதால் இத்தலம் பூரம் நட்சத்திரத்திற்குரிய கோயிலானது. எனவே தான் பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களது பிறந்த நட்சத்திர நாள், பிறந்தநாள், மாதாந்திர நட்சத்திர நாள், திருமணநாள், ஆடிப்பூரம் ஆகிய முக்கிய நாட்களிலும், அடிக்கடி சென்று வழிபாடு செய்ய வேண்டிய முக்கிய தலமானது.
🪷முக்காடு போட்டு வழிபாடு:
இவ்வூரைச் சேர்ந்த பெண்மணியான பெரியநாயகி என்பவர் இறைவன் மீது அதீத அன்பு பூண்டிருந்தார். ஒருமுறை தன் பெற்றோருடன் கோயிலுக்கு வந்தார். சற்றுநேரத்தில் மறைந்து விட்டார். பின்பு அசரீரி தோன்றி, அப்பெண்மணி சிவனுடன் ஐக்கியமாகி விட்ட தகவலை தெரிவித்தது. நகரத்தார் சமுதாயத்தினர் அவரை அம்மனாகக் கருதி, "பிரகதாம்பாள்' என பெயர் சூட்டி தனி சன்னதி எழுப்பினர். இது காலத்தால் பிற்பட்ட சன்னதி என்பது பார்த்தாலே புரியவரும்.
🪷இப்பகுதியில் வாழ்ந்த கட்டுடையான் செட்டியார் வம்சத்தில் இத்தல அம்மன் பெண்குழந்தையாக பிறந்து வளர்ந்ததாக கூறப்படுகிறது. எனவே இப்போதும் கூட இந்த வம்சத்து பெண்கள் இக்கோயிலுக்கு வந்தால், தங்கள் வம்ச பெண்ணின் மாப்பிள்ளையாக சிவனை நினைத்து முக்காடு போட்டு வழிபாடு செய்யும் பழக்கம் உள்ளது.
🪷கோயில் வெளிப்பிரகாரத்தில் பொற்பனை மரம் இருந்துள்ளது. இதிலிருந்து கிடைக்கும் பொன் பழங்கள் மூலம் பணம் பெற்று இந்த கோயிலை கட்டியதாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது அந்த இடத்தில் அதன் அடையாளமாக கல்ஸ்தூபி உள்ளது.
♻️கோயில் திருவிழாக்கள்:
ஆடிப்பூரம், அம்மன் திருக்கல்யாணம், மகா சிவராத்திரி, திருவாதிரை, திருக்கார்த்திகை, வைகாசி விசாகம், ஆடிப்பூர விழாக்கள் பத்துநாள் கொண்டாடப்படுகிறது. ஆடிப்பூரத்தின் ஒன்பதாம் நாள் நடக்கும் தேரோட்டம் விசேஷமானது
♻️இத்தலத்துக்கு வருவோர், சிவனுக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாற்றி நேர்த்திக் கடன் செய்துவர பெரும் நன்மைகள் உண்டாகும். பிரசித்தி பெற்ற தலமாக விளங்குகிறது.
♻️இத்திருத்தலத்தினை சுற்றி சுமார் 150 கி.மீ தூரம் சுற்றளவில் உள்ள பெரும்பாலான மக்கள் இத்தல இறைவனை குலதெய்வமாகக் கொண்டு வழிபட்டு வருகின்றனர்.
தியானம் செய்ய விரும்புவோர் இங்குள்ள அமைதியான சூழலை மிகவும் விரும்புவர். குரங்குகள் அதிகமாக உள்ளன.
பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
⚡மிகப் பழமையான, புராதன ஆலயம். தோஷ நிவர்த்தி தலம்.
⚡முன் ஒரு முறை சென்று தரிசித்துள்ளோம்.
⚡ஆலயம் புனரமைப்பு செய்து குடமுழுக்கு திருப்பணிகள் தொடங்கப்பட வேண்டும்.
⚡ஆலயம் முன்புள்ள பெரிய குளம்
சீரமைக்கப்பட வேண்டியதுள்ளது.
⚡பக்தர்கள் பிரார்த்தனையுடன் வந்து பரிகாரம், பூசைகள் செய்து கொள்ளுகிறார்கள்.
⚡ராகு கால மற்ற விஷேச நாட்களில் ஆலயம் பக்தர்கள் வருகையால், கூட்டமாக உள்ளது.
⚡சுவாமி அம்பாள், சுப்பிரமணியர் சோமஸ்கந்தர் வடிவ அமைப்புக் கோவில்,
⚡ வாழ்வில் அவசியம் ஒரு முறையாவது சென்று தரிசித்து பலன் பெற வேண்டிய ஆலயம்
நன்றி🙏
28.09.25 ஞாயிற்றுக்கிழமை
#சுப்ராம்தரிசனம்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#பிரதோஷக்குழுயாத்ரா 28.09.2025.