#திருமுறைகளில்தமிழமுதம்:
#சம்பந்தர்அமுதம்
#கோமூத்திரி_அந்தாதி
🙏🙇♂️அன்பு வேண்டுகோள்:🙇♂️🙏
👣1. பக்தியும், தமிழில் ஆர்வம் உள்ளவர்கள் தொடரவும்.
🌬️2. இப்பதிவுகளில் உள்ள தேவாரப் பாடல்களை குறைந்தபட்சம் இரண்டு முறைகளாவது வாய் விட்டு உச்சரித்து படித்தல் அவசியம்.
📚3. இப்பதிவின் நோக்கம்: பழந்தமிழ் பக்தி இலக்கியப் பெருமையையும் சிறப்பையும் ஒவ்வொருவரும் உணரவேண்டும் என்பதே.
🙏நன்றி🙇♂️
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
1. #திருஞானசம்பந்தர்.
பிற மதங்களின் பொய்யுரைகளும், போலி வாதங்களையும் கேட்டு அதற்கு கட்டுண்டு கிடந்த மன்னர்களின் அறிவற்ற அரச நெறிகளையும் நமது பாரம்பரிய தமிழரின் கலாச்சாரங்களும் பண்பாடுகளும் சிதைந்து இருந்ததை மீட்டு சீர்திருத்தியவர்,
இவர் நம் ஒப்பற்ற தெய்வத் தமிழ்ப் பதிகங்கள் பல இயற்றி, பிறமத ஆதிக்கங்களை வெளிப்படையாக எதிர்த்து, அற்புதங்கள் பல நிகழ்த்தி சைவத் திருவருட் செயலாக்கத்தின் மேன்மையை, உலகத்தாருக்கு அழகு தமிழில் புதிய பண், பாடல் வகையில், இசை அமைப்பில் பதிகங்கள் இயற்றி பாடிஉணர்த்தி சைவை சமயத்தை அமுதத் தமிழால் போற்றியவர்.
பல பக்தி இலக்கிய பாடல்களில் தமிழின் இலக்கிய சிறப்பை வெளிப்படுத்தி புதுமைகளைப் புகுத்தியவர். திருஞானசம்பந்தப் பெருமான், தமிழில் புதுமையான பாவகைகள் பல உருவாக்கம் செய்து, தமிழ் இலக்கியங்களுக்கும், பல புதிய பண்கள் அமைத்து, இசைத் தமிழ் பாடல்களை இயற்றியவர், இவரே. தமிழ் இலக்கியத்திற்கு பல சிறப்பு செய்தவர். இவரின் பாடல்கள்தான் ஆதாரமாக இருந்து வருகிறது.
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
2. #ஆதிவிகற்பம்
தனது நான்காவது மற்றும் ஐந்தாவது தல யாத்திரைகளுக்கு இடையே பல நாட்கள் சீர்காழி நகரில் தங்கிய திருஞானசம்பந்தர், சீர்காழி தலத்தின் மீது பல வகையான பாடல்களை பாடுகின்றார்.
அத்தகைய பதிகங்களில் பல தமிழ் இலக்கியத்திற்கு முன்னோடியாக விளங்கின என்று சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகின்றார். இந்த பதிகத்தினை மற்ற #மிறைக்கவி களுடன் சேர்த்து #ஆதிவிகற்பம் என்று சேக்கிழார் கூறுகின்றார். விகற்பம் என்றால் மாறுபட்டது என்று பொருள். பெரும்பான்மையான பதிகங்களின் அமைப்பிலிருந்து மாறுபட்டதால் சேக்கிழார் இவ்வாறு அழைத்தார் போலும்.
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
3.#திருக்கோமூத்திரி -அந்தாதி:
தேவாரம் இரண்டாம் திருமுறை
பதிகம்: 74
தலம்: திருப்பிரமபுரம் :
#ஆதிவிகற்பங்கள் என்று சேக்கிழார் கருதும் பதிகங்களில் இத்திருப்பதிகம் அடங்கியவை என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.
இந்த பதிகமும் பன்னிரண்டு திருப் பாடல்களை உடையது.
சீர்காழி தலத்தின் பன்னிரு பெயர்களையும் எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது.
'இந்த பாடலில் சீர்காழியின் பன்னிரண்டு பெயர்களும் சொல்லப்பட்டுள்ள வரிசை,
'விளங்கிய சீர்' என்று தொடங்கும் பதிகத்தின் முதல் பாடல் (2.73.1)
'பிரமனூர்' என்று தொடங்கும் பதிகத்தின் முதல் பாடல் (2.70.1)
மற்றும் 'எரியார் மழு' என்று தொடங்கும் பதிகத்தின் பாடல்கள் (1.63) உள்ள வரிசையில் அமைந்திருப்பதை நாம் காணலாம்.
இதே பதிகத்தின் மற்ற பாடல்களில் அந்த வரிசை பின்பற்றப்படவில்லை'.
தேவாரப் பதிகங்களில் அந்தாதி வகையைச் சார்ந்த பாடல் தொகுப்பு ஏதும் இல்லை. ஞானசம்பந்தர் அருளிய இந்த பதிகம், கோமூத்திரி அந்தாதி வகையில் அமைந்துள்ளது.
இந்த பதிகம் #கோமூத்திரி என்ற சித்திரக்கவி வகையைச் சார்ந்தது என்று கூறுவார்கள்.
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
4.#கோமூத்திரி:
இலக்கண ஆசிரியர்களின் விளக்கம்- 1
'நடந்து செல்லும் பசு, சிறுநீர் கழித்தால், வளைந்து வளைந்து பாம்பு ஊர்ந்து செல்வது போன்ற அடையாளத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் பாடலின் அடிகளை ஒன்று ஒன்று விட்டு ஒன்று சேர்த்து பொருள் காணும் வகையில் அமைந்திருப்பது கோமூத்திரி வகையைச் சார்ந்தது' என்று கூறுவார்கள்.
அதாவது நான்கு அடிகள் கொண்ட பாடலாக இருந்தால், முதல் அடியையும் மூன்றாம் அடியையும் சேர்த்து பொருள் கொண்டபின்னர், இரண்டாவதுஅடியையும் நான்காவது அடியையும் சேர்த்து பொருள் கொள்ள வேண்டும்.
விளக்கம் - 2
'#கோமூத்திரி எனப்படும் #சித்திரக்கவி வகைக்கு வேறு விதமாகவும் விளக்கம் அளிக்கப் படுகின்றது. முதல் அடியினை மேல் வரியாகவும் அதற்கு அடுத்த அடியினை கீழ் வரியாகவும் வரைந்து, அவ்விரண்டு அடிகளில் உள்ள எழுத்துக்களை மேலும் கீழுமாக ஒன்றிடையிட்டு வாசித்தாலும் அதே செய்யுளாக அமையும் #சித்திரக்கவி பாடல்கள் என்று விளக்கம் அளிக்கப்படுகின்றது'.
விளக்கம்: 3.
'#கோமூத்திரியாவது , ஒரு செய்யுளின் முன்னிரண்டடிகளை மேல்வரியாகவும், பின்னிரண்டடி களைக் கீழ்வரியாகவும் வரைந்து அவ்விரண்டு வரிகளின் எழுத்துகளை மேலும் கீழுமாக ஒன்றிடையிட்டுப் படித் தாலும் அதே செய்யுளால் அமையும் சித்திர கவியாகும்.
இதன்கண் மேலும் கீழும் உள்ள அடிகளில் அமைந்த எழுத்துகள் #கோமூத்திரி ரேகைபோல் ஒன்றிடையிட்டுப் படிக்கப் பெறுதலின் #கோமூத்திரி எனப்பட்டது.'
விளக்கம்:3:
'#சித்திரகவிகளில் இன்னொரு விதம் #கோமூத்திரி ஆகும். இதை பரிதிமால் கலைஞர் விளக்குகிறார் இப்படி:-
பசு மாடு நடந்து கொண்டே மூத்திரம் பெய்ய உண்டாகும் சுவட்டின் வடிவாக அமைக்கப்பட்ட ரேகையிலே எழுத்துக்கள் அமையப் பாடிய பாட்டு கோமூத்திரியாகும்.'
விளக்கம் 4:
'பசுமாடு ஒன்று சாலையில் நடந்து செல்வதைப்
பார்த்திருக்கிறீர்களா; இனிமேல் அதனைக் கூர்ந்து கவனியுங்கள்.
அப்பசுமாடு நடந்து போகும் போது கோமயம் விடுவதாக,
அதாவது இயற்கைக் கழிவான சிறுநீர் கழிப்பதாக இருந்தால்
அந்நீர் வளைவு வளைவாக தரையில் பட்டிருக்கும். அதாவது
மேல் மேடு ஒன்று - கீழ்ப்பள்ளம் ஒன்று என அவ்வளைவு
அமையும். அதுவே இரண்டு மாடுகள் கழிப்பதாக இருந்தால் இரு
எதிர் எதிர் வளைவுகள் கிடைக்கும். அவ்வமைப்பைச் செய்யுளில்
அமைப்பது #கோமூத்திரி என்னும் #சித்திரகவியாகும். (கோ =
பசுமாடு ; மூத்ரி = மூத்திரம்)
'ஒரு செய்யுளின் முதலடியில் உள்ள
எழுத்துகளும், இரண்டாம் அடியில்
உள்ள எழுத்துகளும் ஒன்று இடையிட்டு
ஒன்று நேர் எதிர் இணைப்பினவாக
அமையும் முறை கோமூத்திரி என்னும்
சித்திர கவியாகும்'
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
5.#வழிமுடக்கு_மாவின்_பாய்ச்சல்:
மேலே குறிப்பிட்ட வகையில் ஞானசம்பந்தர் அருளிய இந்த பதிகத்தின் பாடல்கள் #கோமூத்திரி_அந்தாதி என்ற அமைப்பில் அமையவில்லை. எனினும் இந்த பாடலை #கோமூத்திரி_அந்தாதி என்று அறிஞர்கள் அழைக்கின்றனர். ஆனால் ஞானசம்பந்தர் இந்த பாடலுக்கு #வழிமுடக்கு_மாவின்_பாய்ச்சல் என்ற பெயரினையே அளித்துள்ளார்.
ஒரு பாடலின் இறுதியில் வைத்தெண்ணப்பெற்ற பெயர் அடுத்த பாடற்கு முதலாக மீண்டும் மடித்தெண்னப் பெறும் நிலையில் அமைந்த இப்பதிகம், முடக்காக வளைந்த வழியிலே சென்ற மாடானது மீண்டும் வந்த வழியே மடங்கிச் சென்றாற்போலும் நடை அமைப்பினை உடையது ஆகும் .
'அதாவது அந்தாதி போன்று முந்திய பாடலின் கடைச் சொல்லினை அடுத்த பாடலின் முதற் சொல்லாக கொள்ளாது, முந்திய பாடலில் கடைச் சொல்லுக்கு முன்னர் அமைந்துள்ள சொல்லினை அடுத்த பாடலின் முதற் சொல்லாக கொண்டு அமைந்துள்ள தொகுப்பு. இப்படி ஒரு வித்தியாசமான தொகுப்பினை ஞானசம்பந்தர் அருளியிருப்பது அவரது தமிழ்ப் புலமையை நமக்கு உணர்த்துகின்றது'.
'#வழிமுடக்கு_மாவின்_பாய்ச்சல் என்று பெயரிட்டு இந்த பதிகத்தின் தன்மையை மிகவும் அழகாக உணர்த்துகின்றார். ஒரு மாடு பாய்ந்து செல்லும் போது அதன் காற்தடங்கள் வளைந்து செல்லும் பாதையைத் தானே காட்டும். அந்த தன்மையே இங்கே கூறப்படுகின்றது'.
'#கோமூத்திரி என்ற சொல்லினை விடவும் #வழிமுடக்கு_மாவின்_பாய்ச்சல் என்ற தொடர் சொல்வதற்கும் கேட்பதற்கும் இனிமையாக உள்ளது அல்லவா.'*
'விளக்கம்:
இப்பதிகப் பாடல் ஒவ்வொன்றிலும் பிரமபுரத்திற்குரிய பன்னிரு திருப்பெயர்களும் எண்ணப்பெற்றுள்ளன. ஒரு பாடலின் இறுதியில் வைத்தெண்ணப்பெற்ற பெயர் அடுத்த பாடற்கு முதலாக மீண்டும் மடித்தெண்னப் பெறும் நிலையில் அமைந்த இப்பதிகம்,
முடக்காக வளைந்த வழியிலே சென்ற மாவானது மீண்டும் வந்த வழியே மடங்கிச் சென்ருற்போலும் நடை அமைப்பினேயுடையதாதல் இங்கு நோக்கத் தகுவதாகும்.'
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
6.இனி பதிகப் பாடல் காண்போம்.
தேவராம் :இரண்டாம் திருமுறை
பதிகம்: 74 திருக்கோமூத்திரி அந்தாதி
தலம்: திருப்பிரமபுரம் பண் : காந்தாரம் :
பாடல் 1:
பூமகனூர் புத்தேளுக் கிறைவனூர் குறைவிலாப் புகலிபூமேன்
மாமகளூர் வெங்குருநற் றோணிபுரம் பூந்தராய் வாய்ந்தவிஞ்சிச்
சேமமிகு சிரபுரஞ்சீர்ப் புறவநிறை புகழ்ச்சண்பை காழிகொச்சை
காமனைமுன் காய்ந்தநுதற் கண்ணவனூர் கழுமலநாங் கருதுமூரே.
பாடல் - 2
கருத்துடைய மறையவர்சேர் கழுமலமெய்த் தோணிபுரங் கனகமாட
உருத்திகழ்வெங் குருப்புகலி யோங்குதரா யுலகாருங் கொச்சைகாழி
திருத்திகழுஞ் சிரபுரந்தே வேந்திரனூர் செங்கமலத் தயனூர்தெய்வத்
தருத்திகழும் பொழிற்புறவஞ் சண்பைசடை முடியண்ணல் தங்குமூரே.
பாடல் 3
ஊர்மதியைக் கதுவவுயர் மதிற்சண்பை யொளிமருவு காழிகொச்சை
கார்மலியும் பொழில்புடைசூழ் கழுமலமெய்த் தோணிபுரங் கற்றோரேத்துஞ்
சீர்மருவு பூந்தராய் சிரபுரமெய்ப் புறவமய னூர்பூங்கற்பத்
தார்மருவு மிந்திரனூர் புகலிவெங் குருக்கங்கை தரித்தோனூரே
பாடல் 4.
தரித்தமறை யாளர்மிகு வெங்குருச்சீர்த் தோணிபுரந் தரியாரிஞ்சி
எரித்தவன்சேர் கழுமலமே கொச்சைபூந் தராய்புகலி யிமையோர்கோனூர்
தெரித்தபுகழ்ச் சிரபுரஞ்சீர் திகழ்காழி சண்பைசெழு மறைகளெல்லாம்
விரித்தபுகழ்ப் புறவம்விரைக் கமலத்தோ னூருலகில் விளங்குமூரே
பாடல் 5
விளங்கயனூர் பூந்தராய் மிகுசண்பை வேணுபுர மேகமேய்க்கும்
இளங்கமுகம் பொழிற்றோணி புரங்காழி யெழிற்புகலி புறவமேரார்
வளங்கவரும் வயற்கொச்சை வெங்குருமாச் சிரபுரம்வன் னஞ்சமுண்டு
களங்கமலி களத்தவன்சீர்க் கழுமலங்கா மன்னுடலங் காய்ந்தோனூரே.
பாடல் 6
காய்ந்துவரு காலனையன் றுதைத்தவனூர் கழுமலமாத் தோணிபுரஞ்சீர்
ஏய்ந்தவெங் குருப்புகலி யிந்திரனூ ரிருங்கமலத் தயனூரின்பம்
வாய்ந்தபுற வந்திகழுஞ் சிரபுரம்பூந் தராய்கொச்சை காழிசண்பை
சேந்தனைமுன் பயந்துலகிற் றேவர்கடம் பகைகெடுத்தோன் றிகழுமூரே.
பாடல் 7
திகழ்மாட மலிசண்பை பூந்தராய் பிரமனூர் காழிதேசார்
மிகுதோணி புரந்திகழும் வேணுபுரம் வயங்கொச்சை புறவம்விண்ணோர்
புகழ்புகலி கழுமலஞ்சீர்ச் சிரபுரம்வெங் குருவெம்போர் மகிடற்செற்று
நிகழ்நீலி நின்மலன்றன் னடியிணைகள் பணிந்துலகி னின்றவூரே.
பாடல் 8
நின்றமதில் சூழ்தருவெங் குருத்தோணி புரநிகழும் வேணுமன்றில்
ஒன்றுகழு மலங்கொச்சை யுயர்காழி சண்பைவளர் புறவமோடி
சென்றுபுறங் காக்குமூர் சிரபுரம்பூந் தராய்புகலி தேவர்கோனூர்
வென்றிமலி பிரமபுரம் பூதங்க டாங்காக்க மிக்கவூரே.
பாடல் 9
மிக்ககம லத்தயனூர் விளங்குபுற வஞ்சண்பை காழிகொச்சை
தொக்கபொழிற் கழுமலந்தூத் தோணிபுரம் பூந்தராய் சிலம்பன்சேரூர்
மைக்கொள்பொழில் வேணுபுர மதிற்புகலி வெங்குருவல் லரக்கன் றிண்டோள்
ஒக்கவிரு பதுமுடிக ளொருபதுமீ டழித்துகந்த வெம்மானூரே.
பாடல் 10.
எம்மான்சேர் வெங்குருச்சீர்ச் சிலம்பனூர் கழுமலநற் புகலியென்றும்
பொய்ம்மாண்பி லோர்புறவங் கொச்சைபுரந் தரனூர்நற் றோணிபுரம்போர்க்
கைம்மாவை யுரிசெய்தோன் காழியய னூர்தராய் சண்பைகாரின்
மெய்ம்மால்பூ மகனுணரா வகைதழலாய் விளங்கியவெம் மிறைவனூரே.
பாடல் 11
இறைவனமர் சண்பையெழிற் புறவமய னூரிமையோர்க் கதிபன்சேரூர்
குறைவில்புகழ்ப் புகலிவெங் குருத்தோணி புரங்குணமார் பூந்தராய்நீர்ச்
சிறைமலிநற் சிரபுரஞ்சீர்க் காழிவளர் கொச்சைகழு மலந்தேசின்றிப்
பறிதலையோ டமண்கையர் சாக்கியர்கள் பரிசறியா வம்மானூரே.
பாடல் 12
அம்மான்சேர் கழுமலமாச் சிரபுரம்வெங் குருக்கொச்சை புறவமஞ்சீர்
மெய்ம்மானத் தொண்புகலி மிகுகாழி தோணிபுரந் தேவர்கோனூர்
அம்மான்மன் னுயர்சண்பை தராயயனூர் வழிமுடக்கு மாவின்பாச்சல்
தம்மானொன் றியஞான சம்பந்தன் றமிழ்கற்போர் தக்கோர்தாமே.
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
7. முடிவுரை:
✳️திருப்புகழ் என்றும்அருள் நூல் தந்த அருணகிரியார், அருட்பிரகாச வள்ளலார் முதலிய ஞானிகள் முருகனின் அவதாரமாய் போற்றிய அருட் செல்வர் திருஞானசம்பந்தரின் இறையருள் பெற்ற பதிகப் பாடல்களை போற்றி பரவுதல் செய்வோம்.
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
8.🙏இப்பதிவிற்கு உதவிய நூல்கள்:
1. நால்வர் வரலாறு : பேராசிரியர் கா.சுப்ரமணியம் பிள்ளை.
2. பன்னிரு திருமுறைகள்: பேராசிரியர் வ.த.இராமசுப்பிரமணியம்.
3. வித்வான் முத்து. ச. மாணிக்கவாசக முதலியார், வி.ச.குருசாமி தேசிகன்.
http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?Song_idField=20740&limitPerPage=1&padhi=074&sortBy=&sortOrder=DESC&startLimit=0&thiru=2
http://thevaaram.org/ta/index.php
4. தமிழ் விந்தை கோமுத்திரி: சா.நாகராஜன்.
5. என். வெங்கடேஸ்வரன்
(damalvenkateswaran@gmail.com
https://vaaramorupathigam.wordpress.com/vaaramorupathigam/2nd-thirumurai/2-074-poomaganoor-puththelukku/)
6.http://www.tamilvu.org/courses/diploma/a021/a0214/html/a02146l3.htm
7. ஒரே கருத்துக்களை கொண்டு
பல்வேறு வலைதளங்களில், இணைப்பில் உள்ள செயலிகள் பல்வேறு இலக்கிய ஆசிரியர்கள் தொகுத்த இலக்கிய நூல்கள், கட்டுரைகளில் காணப்பெற்றவைகளின் தகவல் சுருக்கம் இப்பதிவு.
🙏 இது ஒரு அறிமுக பதிவே மேற்படி நூல்களையும் தொடர் கட்டுரைகளையும் தயவு செய்து மேலும் கற்றறிந்து தமிழின் சுவையை பக்தியோடு முழுமையாக உணர்வோம்.
🙏நன்றி🙇♂️
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
✍️எண்ணமும் ஆக்கமும்:
என்றும் அன்புடன்
சுப்ராம் அருணாசலம்
காரைக்கால்🙇♂️🙏🙇♂️
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
No comments:
Post a Comment