Monday, August 17, 2020

வழிமொழி திருவிராகம் - பதிவு : 5

#திருமுறைகளில்_தமிழமுதம்:
#சம்பந்தர்_அமுதம்

#தமிழரின்பொக்கிஷம்:
பதிவு : ஐந்து

#வழிமொழி_திருவிராகம், பற்றிய பதிவு.
மூன்றம் திருமுறை பதிகம்: 325
பாடல்கள் 9, 10, 11 மற்றும் 12 பாடல்கள்.

🙏🙇‍♂️அன்பு வேண்டுகோள்:🙇‍♂️🙏

👣1. பக்தியும், தமிழில் ஆர்வம் உள்ளவர்கள் தொடரவும்.
🌬️2. இப்பதிவுகளில் உள்ள தேவாரப் பாடல்களை குறைந்தபட்சம் இரண்டு முறைகளாவது வாய் விட்டு உச்சரித்து படித்தல் அவசியம்.
📚3. இப்பதிவின் நோக்கம்: பழந்தமிழ் பக்தி இலக்கியப் பெருமையையும் சிறப்பையும் ஒவ்வொருவரும் உணரவேண்டும் என்பதே. 

🙇‍♂️நன்றி🙏

🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
ஞானசம்பந்தர் அருளிய அற்புத இசைத் தமிழ் பதிகங்கள் வரிசையில் இதுவும் ஒன்று.

#தமிழரின்பொக்கிஷம்:

#திருவிராகம்,# வழிமொழிதிருவிராகம்,
#வண்ணகம்,#முடுக்கியல்,#அடுக்கியல் 
இவை பற்றி முன்பதிவுகளில் சிந்தித்தோம்.
தொடர்ந்து
#வழிமொழிதிருவிராகம் பதிகப் பாடல் விளக்கங்களயும், சிறப்புகளையும்
தொடர்ந்து இப்பதிவில் பார்ப்போம்.

📕மூன்றாம் திருமுறையில் வரும்
பாடல்கள்:  714 - 725
பதிகம் 325    தலம் திருப்பிரமபுரம்.
'சுரர் உலகு நரர்கள்பயில் தரணிதல'
எனத் தொடங்கும் பதிகப் பாடல்கள்.

⚜️வழிமொழி திருவிராகம் என்னும் வகை சேர்ந்தது.

🅾️#வழிமொழிதிருவிராகம்:
⏺️இலக்கணம் :

⏏️குற்றெழுத்துப் பயின்று வரும் முடுகிய ஓசையுடையதாய் அடி முதற்சீரின் இரண்டாம் எழுத்து சீர்தோறும் ஒன்றி வழியெதுகையால் வரத் தொடுப்பது இவ்வகையாம்.
(முடுகிய என்பது வேகமாக ஓடும் தாள அமைப்பு எனக் கொள்ளலாம்)

🔸இதன் ஓசை அமைப்பில் பாடல் 

தனனதன  தனனதன  தனனதன  
              தனனதன    தனனதனனா

என அமைகிறது.

இப்பதிகத்தின் 1, 2, 3, 4 பாடல்கள் பற்றி நான்காவது முன்பதிவிலும்

இப்பதிகத்தின் 5, 6, 7, 8 பற்றி ஐந்தாவது பதிகத்திலும்  

இப்பதிவில்,
இப்பதிகத்தின் 9, 10, 11 மற்றும் 12 வது பாடல்களின் விளக்கங்களையும் சிறப்புகளையும் பற்றி தொடர்ந்து சிந்திக்கலாம்.

🔵 இதில் திருஞானசம்பந்தர் 'வழிமொழிகள் மொழி தகையவே' என்று குறிப்பிட்டு சிறப்பிப்பதாலே இந்தப் பதிகம் வழிமொழி திருவிராகம் என்னும் பெயர் சூட்டப்பட்டது.

⏺️சந்தப்பாக்களின் சீர்களில் ஒவ்வொர் உயிரும் ஓரசை என்பதால் ஓசை நயமும் தாளமும் நிறைய அமைத்துள்ளதை நாம் சிந்திக்க வேண்டும்.

🔹திருஞானசம்பந்தப்பிள்ளையாரை முருகனின் திரு அவதாரமாகக் கொண்டவர் அருணகிரிநாதர். இதைக் குறிப்பிட்டு பாடல்கள் செய்துள்ளார். 

✔️இராமலிங்கசுவாமிகளும் இக்கருத்தை ஏற்கிறார்.

🔷இது போன்ற சந்தப் பாடல்களை கற்றுணர்ந்து அருணகிரியார் தம்முடைய திருப்புகழ் பாடல்களை அமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

⏺️இந்தப் பதிகம் 12 பாடல்கள் கொண்டது.

⏹️சீர்காழிப்பதியின் 12 பெயர்கள் வந்த வழியை -  வரலாற்றிணை - விளக்கத் தக்க வகையில் அமைந்துள்ளது.

🔹சாதாரி என்ற பண் வகையினது.

🛐🙏🎪🙏🏻🎪🙏🏼🎪🙏🏽🎪🙏🏾🎪🙏🏿🎪🛐

பாடல். 9.
💠சண்பை:
சண்பை என்னும் கோரையால் உண்டான புண்கள் தீருமாறும் கண்ணபிரான் போற்றி வழிபட்டுச் சாபத்தை நீக்கியதால், சண்பை என்னும் பெயர் பெற்ற திருத்தலமாகும்.

✳️'ண' சீர் அமைப்புள்ளது.

பாடல். 722

விண்பயில  மண்பகிரி   வண்பிரமன் எண்பெரிய  பண்படைகொண்  மால்

கண்பரியும்  ஒண்பொழிய நுண்பொருள்கள் 
தண்புகழ்   கொள்  கண்டனிடமாம்

மண்பரியும்  ஒண்பொழிய   நுண்புசகர் புண்பயில    விண்படரஅச்

சண்பைமொழி  பண்பமுனி கண்பழிசெய் பண்புகளை சண்பைநகரே.
         
                                               - 3:325:9 (722)
பொருள் :

மண்பகிரி - மண்ணைப்பிளக்கும் பன்றி ( யாகி ). 
எண் பெரிய - மிக்க மதிப்புடைய. 
பண் - தகுதியான, 
படைகொள் - சக்கராயுதத்தைக் கொண்ட. மால் - திருமால் ( பூமியிற் சென்றும் )

வண் பிரமன் - சிறந்த பிரமன். விண்பயில - ஆகாயத்தில் சென்றும்,

கண்புரியும் - கண்ணாற் பற்றக்கூடிய. 
ஒண்பு - ஒளி. 
ஒழிய - நீங்க. 
நுண் பொருள்கள் - அவற்றிற்கு எட்டாததாகிய நுண்ணிய பொருள்களாக. தண்புகழ்கொள் - இனிய கீர்த்தியைக்கொண்ட. 
கண்டன் இடமாம் - அகண்டனாகிய சிவபெருமானின் இடமாகும்.  

மண்பரியும் - உலகத்தைக் காக்கின்ற, ஒண்பு ஒழிய - ஆண்மை நீங்க. 
நுண்பு - அற்பர்களாகிய. 
சகர் - யாதவர்கள். 
புண்பயில - ஒருவரோடு ஒருவர் அடித்துக் கொண்டு செத்து. 
விண்படர - விண்ணுலகை அடைய. 

பண்பமுனி தவப்பண்பையுடைய துருவாசமுனிவர். 
கண்பழி செய் - கருதத்தக்க பழியைச் செய்த. 
பண்பு - சாபத்தை. 
களை - நீக்கியதனால். 
சண்பை மொழி - சண்பையென்று மொழியப்படும் சண்பைநகர்.
🛐🙏🎪🙏🏻🎪🙏🏼🎪🙏🏽🎪🙏🏾🎪🙏🏿🎪🛐
பாடல். 10
♦️காழி: ஆடலில் தோற்ற காளிக்கும் அருளிய காழி நகர்.

✳️'ழ' கரசீர் அமைப்பு.

பாடல்: 723

பாழியுறை   வேழநிகர்    பாழமணர் 
சூழுமுடல்     ஆளர்உணரா

ஏழினிஇசை    யாழின்மொழி  ஏழையவள் வாழும்இறை   தாழுமிடமாங்

கீழிசைகொள்   மேலுலகில்   வாழரசு சூழரசு    வாழஅரனுக்கு

ஆழியசில்  காழிசெய   ஏழுலகில் ஊழிவளர்  காழிநகரே.

                                   - 3:325:10 (723)
பொருள் :

பாழி உறை - பாழியில் தங்கும், 
வேழம் நிகர் - யானையை யொத்த, 
பாழ் அமணர் - பாழ்த்த அமணர்களும். சூழும் - கூட்டமாக உள்ள, 
உடல் ஆளர் - உடலைப் பாதுகாப்போராகிய பௌத்தர்களும், உணரா - உணராத, 

ஏழின் இசை - ஏழு சுரங்களையுடைய, யாழின்மொழி - யாழ் போற் பேசுகின்ற, ஏழையவள் - பெண்ணாகிய அம்பிகையுடன், 
வாழும் இறை - வாழ்பவராகிய சிவபெருமான், 
தாழும் - தங்கும், ( இடம் ஆம் ) 

கீழ் ( உலகில் ) கீழ் உலகில், 
சூழ் - சூழ்ந்த அரசு - அரசர்களும், இசைகொள் - புகழ்கொண்ட, 
மேல் உலகில் மேல் உலகத்தில், 
வாழ் - வாழ்கின்ற, 
அரசு - அரசனாகிய இந்திரனும் ; 
வாழ - ( காளியின் துன்புறுத் தலினின்று ) வாழும் பொருட்டு ( நடனம் ஆடுதலில் ) அரனுக்கு சிவபெருமானுக்கு,

ஆழிய - ஆழ்ந்த, தோற்ற, 
சில்காழி - சிலகோவைகளையுடைய மேகலாபரணம் அணிந்தவளாகிய அக்காளி, 
செய - தன் குற்றம் நீங்கும்படி வந்துபோற்ற, அருள் பெற்ற செயல் ஏழுலகில் - சப்த லோகங்களிலும், 
ஊழி - பல ஊழி காலமாக, 
வளர் - பெருகும்
🛐🙏🎪🙏🏻🎪🙏🏼🎪🙏🏽🎪🙏🏾🎪🙏🏿🎪🛐
பாடல். 11 
💠கொச்சை: பராசர முனிவர் தனதுடல் கொச்சையான துர்நாற்றமும், பழியும் போகும் பொருட்டு பூசித்த தலம்.

✳️'ச்' என்ற சீர் அமைப்புள்ளது.

பாடல் : 11

நச்சரவு  கச்செனவ    சைச்சுமதி  உச்சியின்மி   லைச்சொருகையான்

மெய்ச்சிரம்  அணைச்சு உலகில் நிச்சமிடு பிச்சையமர்  பிச்சன் இடமாம்

மச்சமத  நச்சிமதம்  அச்சிறுமி யைச்செய்தவ   அச்சவிரதக்

கொச்சைமுர   வச்சர்பணி   யச்சுரர்கள்  நச்சிமிடை கொச்சைநகரே.

                                         - 3:325:11 (724)
பொருள் :

நஞ்சையுடைய பாம்பைக் கச்சாகக் கட்டி, சந்திரனைத் தலையிலே சூடி, ஒரு கையில் பிரமகபாலத்தைத் தாங்கி, உலகிலே நாடோறும் இடுகின்ற பிச்சையை விரும்பும் பித்தனாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், மீன் நாற்றத்தை விரும்பும் மச்சகந்தியை வசமிழந்து ஆற்றினிடையில் புணர்ந்த கொச்சைத் தன்மைக்குக் கதறி அது நீங்க பராசரமுனிவர் வணங்க, தேவர்களும் விரும்பி அணுகும் கொச்சைவயம் எனப்படும் திருத்தலமாகும்.

குறிப்புரை:

நச்சு அரவு - நஞ்சு அரவு, நஞ்சையுடைய பாம்பை : 
கச்சென - கச்சாக. 
அசைச்சு - அசைத்து - கட்டி, 
மதி - சந்திரனை, 
உச்சியில் - தலையில், 
மிலைச்சு - மிலைத்து, மிலைந்து, 
ஒரு கையான் - ஒரு கையில் 

மெய் - ( பிரமன் ) உடம்பினின்றும் ( கிள்ளிய ) 
சிரம் - தலையை, 
அணைச்சு - தாங்கி, 
உலகில் - உலகிலே, 
நிச்சம் - நாடோறும், 
இடு - இடுகின்ற, 
பிச்சை - பிச்சையை, 
அமர் - விரும்பும், 
பிச்சன் இடமாம் - பித்தனாகிய பெருமானின் இடமாகும். 

மச்சம் - மீனின். 
மதம் - நாற்றத்தை, 
நச்சி - விரும்பி. 
மதமச்சிறுமியை - வலையர் சிறுமியை, அச்சவரதம் - ( அச்சத்ததைத் தரும், விரதம் ) அச்சத்தைத் தரும் கொள்கையின் பயனாக நேர்ந்த.

கொச்சை - கொச்சைத் தன்மைக்கு. 
முரவு - கதறிய . 
அச்சர் - பராசர முனிவர். 
பணிய - வணங்க ( அதுகண்டு ) 
சுரர்கள் - தேவர்களும். 
மிடை - நெருங்குகின்ற

🛐🙏🎪🙏🏻🎪🙏🏼🎪🙏🏽🎪🙏🏾🎪🙏🏿🎪🛐
பாடல் 12.
💠கழுமலம்: உரோமச முனிவர் பூசித்து உலக உயிர்களின் மலங்களைக் கழுவும் (நீக்கும்) வரம் பெற்ற தலம்.

🎶மிக அற்புதமான பாடல். மிக மிக முக்கியமானது. இப்பாடலை திரும்பத் திரும்ப ஒதிக்கொண்டுவந்தால் நாவிற்கும் உள்ளத்திற்கும் அருமருந்து. வாய்பேச்சுக் கோளாறு இன்றி நல்ல உரையாடல், குரல் வளம் நிச்சயம் கிடைக்கும்.
👱குழந்தைகளுக்கு அவசியம் கற்றுக்கொடுக்க வேண்டிய பாடல்.

✳️தமிழின் சிறப்பு எழுத்தாகிய 'ழ' கரத்தைக் கொண்டு சீர் அமைத்துள்ளார்.

♦️இப்பாடலில் தான்  'வழிமொழிகள் மொழி தகையவே' என்று இப்பதிகத்தின் பண் இசை அமைப்புக்கு அவரே பெயர் சூட்டியருளிய பாடல்.

⏹️இதுவே வழிமொழி திருவிராகம் என்ற இசை அமைப்பு பாடல் முறைக்கு ஆதாரப் பாடல் என்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.

⚜️பிற்கால தமிழ் இலக்கியத்தின் இவ்வகைப் பாடல்களுக்கு மிக முக்கியமான அடிப்படையாக அமைத்தருளிய திருக்கடைக்காப்பு பதிகம்.

🔹மூன்றாம் திருமுறை: பதிகம்: 325 
பாடல். 725:

ஒழுகலரிது   அழிகலியில்   உழியுலகு பழிபெருகு    வழியை       நினையா

முழுதுடலில்     எழுமயிர்கள்   தழுவுமுனி குழுவினொடு  கெழுவுசிவனைத்

தொழுதுலகில்  இழுகுமலம்  அழியும்வகை 
கழுவுமுரை        கழுமலநகர்ப்

பழுதிலிறை       யெழுதுமொழி தமிழ்விரகன் 
வழிமொழிகள்   மொழி தகையவே.

பொருள்:

நல்லொழுக்கத்தில் நிற்றல் அரிதாகி அழிகின்ற கலிகாலத்தில் உலகில் பழிபெருகுதலை நினைந்து வருந்தி, உடல் முழுவதும் முடி முளைத்துள்ள உரோமச முனிவர் தம் குழுவினருடன் அங்குத் தங்கி, சிவபெருமானைத் தொழுது, உலக இச்சைக்கு இழுக்கின்ற மலங்கள் நீங்கிச் சிவஞான உபதேசம் பெற்றதால் கழுமலம் எனப் போற்றப்படும் திருத்தலத்தினை வணங்குவோரின் குற்றம் இல்லையாகச் செய்கின்ற தலைவனும், எழுதும் வேதமெனப் போற்றப்படும் தமிழ் வல்லவனுமாகிய ஞானசம்பந்தன் அருளிய இந்த வழிமொழித் திருவிராகப் பாசுரங்கள் பாடிப் பயன்பெறும் தன்மை உடையன.

அழிகலியில் - அறம் அழிகின்ற கலியுகத்தில், 
உலகு உழி - உலகினிடத்தில், 
ஒழுகல் அரிது - அறவழியில் ஒழுகுவது அரியது ( என்றும் ) 
பழிபெருகு வழியை - பாவம் பெருகுகின்ற வழியையும், 
நினையா - நினைந்து. 

முழுது உடலின் - உடல் முழுவதும், 
எழும் மயிர்கள் - முளைத்த
உரோமங்களைக்கொண்ட, 
முனி - உரோமச முனிவர், 
குழுவினொடு - தமது கூட்டத்தொடு. ( வந்து ) 
கெழுவு - அங்கே தங்கிய. 
சிவனை - சிவபெருமானை 

தொழுது - வணங்கி, 
உலகில் - உலக இச்சையில், 
இழுகும் - வழுக்கச் செய்கின்ற. 
மலம் அழியும் வகை - பாசங்கள் நீங்கும் விதம். 
கழுவும் - போக்கிய, 
உரை - வார்த்தையை ( புகழை ) யுடைய. கழுமலநகர் - கழுமலமென்னும் பதியின்,

பழுதில் இறை - வணங்குவோரின் குற்றம் இல்லையாகச் செய்கின்ற தலைவனும், எழுதும் மொழி - எழுதக்கூடிய வேதமொழியாகிய 
தமிழ் விரகன் - தமிழில் வல்லவனுமாகிய திருஞான சம்பந்தனேன். 
வழி மொழிகள் - வழிமொழித் திருவிராகப் பாசுரங்கள். 
மொழி தகையவே - பாடிப்பயன்பெறும் தன்மை உடையனவாம்.

🛐🙏🎪🙏🏻🎪🙏🏼🎪🙏🏽🎪🙏🏾🎪🙏🏿🎪🛐

💠பிற்கால தமிழ் இலக்கியத்தின் அடிப்படையாகவும்,
✳️திருப்புகழ் என்றும்அருள் நூல் தந்த அருணகிரியார் முதலிய ஞானிகள் போற்றிய 
♦️அருட் செல்வர் திருஞானசம்பந்தரின் இறையருள் பெற்ற பதிகப் பாடல்களை போற்றி பரவுதல் செய்வோம்.

🙏நன்றி
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
✍️எண்ணமும் ஆக்கமும்:

என்றும் அன்புடன்
சுப்ராம் அருணாசலம்
காரைக்கால்.🙇‍♂️🙏🙇‍♂️
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
மூன்றாம் பதிவின் #வழிமொழிதிருவிராக பாடல்கள்: 1 முதல் 4 வரை விளக்கம் காண:
https://m.facebook.com/story.php?story_fbid=4176651552410070&id=100001957991710
நான்காம் பதிவின் #வழிமொழிதிருவிராக பாடல்கள்: 5 முதல் 8வரை விளக்கம் காண:
https://m.facebook.com/story.php?story_fbid=4181360875272471&id=100001957991710

No comments:

Post a Comment

KERALAYATRA2024பகுதி - 5- வைக்கம் - (எர்னாகுளம்)பதிவு - 25 - #சுப்ராம்ஆலயதரிசனம் #சுப்ராம்ஆலயதரிசனம் 13.8.2024 #பயணஅனுபவக்குறிப்புகள்🕊️29. வைக்கம் சிவன் கோவில்(Vaikom Temple):

#KERALAYATRA2024 பகுதி - 5- வைக்கம் - (எர்னாகுளம்) பதிவு - 25 - #சுப்ராம்ஆலயதரிசனம்  #சுப்ராம்ஆலயதரிசனம் 13.8.2024  #பயணஅனுபவக்குறிப்புகள்🕊...