Wednesday, September 2, 2020

சம்பந்தர் அமுதம் - கோமூத்திரி_அந்தாதி பாடல் பொருள் விளக்கம்.

#சம்பந்தர் அமுதம்
#கோமூத்திரி _ அந்தாதி

பாடல் பொருள் விளக்கம்.

#திருக்கோமூத்திரி -அந்தாதி:

தேவாரம் இரண்டாம் திருமுறை
பதிகம்: 74
தலம்: திருப்பிரமபுரம் :

#ஆதிவிகற்பங்கள் என்று சேக்கிழார் கருதும் பதிகங்களில் இத்திருப்பதிகம் அடங்கியவை என்று அறிஞர்கள் கூறுகின்றனர். 

இந்த பதிகமும் பன்னிரண்டு திருப் பாடல்களை உடையது. 

சீர்காழி தலத்தின் பன்னிரு பெயர்களையும் எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது.

'இந்த பாடலில் சீர்காழியின் பன்னிரண்டு பெயர்களும் சொல்லப்பட்டுள்ள வரிசை, 
'விளங்கிய சீர்' என்று தொடங்கும் பதிகத்தின் முதல் பாடல் (2.73.1)
 'பிரமனூர்' என்று தொடங்கும் பதிகத்தின் முதல் பாடல் (2.70.1) 
மற்றும் 'எரியார் மழு' என்று தொடங்கும் பதிகத்தின் பாடல்கள் (1.63)   உள்ள வரிசையில் அமைந்திருப்பதை நாம் காணலாம். 
இதே பதிகத்தின் மற்ற பாடல்களில் அந்த வரிசை பின்பற்றப்படவில்லை'. 

தேவாரப் பதிகங்களில் அந்தாதி வகையைச் சார்ந்த பாடல் தொகுப்பு ஏதும் இல்லை.  ஞானசம்பந்தர் அருளிய இந்த பதிகம், கோமூத்திரி அந்தாதி வகையில் அமைந்துள்ளது. 

இந்த பதிகம் #கோமூத்திரி என்ற சித்திரக்கவி வகையைச் சார்ந்தது என்று கூறுவார்கள். 

'பசுமாடு ஒன்று     சாலையில் நடந்து செல்வதைப்
பார்த்திருக்கிறீர்களா; இனிமேல் அதனைக் கூர்ந்து கவனியுங்கள்.
அப்பசுமாடு நடந்து போகும் போது கோமயம் விடுவதாக,
அதாவது இயற்கைக் கழிவான சிறுநீர் கழிப்பதாக இருந்தால்
அந்நீர் வளைவு வளைவாக தரையில் பட்டிருக்கும். அதாவது
மேல் மேடு ஒன்று - கீழ்ப்பள்ளம் ஒன்று என அவ்வளைவு
அமையும். அதுவே இரண்டு மாடுகள் கழிப்பதாக இருந்தால் இரு
எதிர் எதிர் வளைவுகள் கிடைக்கும். அவ்வமைப்பைச் செய்யுளில்
அமைப்பது #கோமூத்திரி என்னும் #சித்திரகவியாகும். (கோ =
பசுமாடு ; மூத்ரி = மூத்திரம்)

'ஒரு செய்யுளின் முதலடியில் உள்ள
எழுத்துகளும், இரண்டாம் அடியில்
உள்ள எழுத்துகளும் ஒன்று இடையிட்டு
ஒன்று நேர் எதிர் இணைப்பினவாக
அமையும் முறை கோமூத்திரி என்னும்
சித்திர கவியாகும்'

#வழிமுடக்கு_மாவின்_பாய்ச்சல்:

மேலே குறிப்பிட்ட வகையில் ஞானசம்பந்தர் அருளிய இந்த பதிகத்தின் பாடல்கள் #கோமூத்திரி_அந்தாதி என்ற அமைப்பில் அமையவில்லை. எனினும் இந்த பாடலை #கோமூத்திரி_அந்தாதி என்று அறிஞர்கள் அழைக்கின்றனர்.  ஆனால் ஞானசம்பந்தர் இந்த பாடலுக்கு #வழிமுடக்கு_மாவின்_பாய்ச்சல் என்ற பெயரினையே அளித்துள்ளார்.

ஒரு பாடலின் இறுதியில் வைத்தெண்ணப்பெற்ற பெயர் அடுத்த பாடற்கு முதலாக மீண்டும் மடித்தெண்னப் பெறும் நிலையில் அமைந்த இப்பதிகம், முடக்காக வளைந்த வழியிலே சென்ற மாடானது மீண்டும் வந்த வழியே மடங்கிச் சென்றாற்போலும் நடை அமைப்பினை உடையது ஆகும் .

'அதாவது அந்தாதி போன்று முந்திய பாடலின் கடைச் சொல்லினை அடுத்த பாடலின் முதற் சொல்லாக கொள்ளாது, முந்திய பாடலில் கடைச் சொல்லுக்கு முன்னர் அமைந்துள்ள சொல்லினை அடுத்த பாடலின் முதற் சொல்லாக கொண்டு அமைந்துள்ள தொகுப்பு.   இப்படி ஒரு வித்தியாசமான தொகுப்பினை ஞானசம்பந்தர் அருளியிருப்பது அவரது தமிழ்ப் புலமையை நமக்கு உணர்த்துகின்றது'. 

'#வழிமுடக்கு_மாவின்_பாய்ச்சல் என்று பெயரிட்டு இந்த பதிகத்தின் தன்மையை மிகவும் அழகாக உணர்த்துகின்றார்.  ஒரு மாடு பாய்ந்து செல்லும் போது அதன் காற்தடங்கள் வளைந்து செல்லும் பாதையைத் தானே காட்டும்.  அந்த தன்மையே இங்கே கூறப்படுகின்றது'. 

'#கோமூத்திரி என்ற சொல்லினை விடவும் #வழிமுடக்கு_மாவின்_பாய்ச்சல் என்ற தொடர் சொல்வதற்கும் கேட்பதற்கும் இனிமையாக உள்ளது அல்லவா.'*

'விளக்கம்:இப்பதிகப் பாடல் ஒவ்வொன்றிலும் பிரமபுரத்திற்குரிய பன்னிரு திருப்பெயர்களும் எண்ணப்பெற்றுள்ளன. ஒரு பாடலின் இறுதியில் வைத்தெண்ணப்பெற்ற பெயர் அடுத்த பாடற்கு முதலாக மீண்டும் மடித்தெண்னப் பெறும் நிலையில் அமைந்த இப்பதிகம்,

முடக்காக வளைந்த வழியிலே சென்ற மாவானது மீண்டும் வந்த வழியே மடங்கிச் சென்ருற்போலும் நடை அமைப்பினேயுடையதாதல் இங்கு நோக்கத் தகுவதாகும்.'

இனி பாடல் பொருள் விளக்கம் காண்போம்.
தேவராம் :இரண்டாம் திருமுறை
பதிகம்: 74 திருக்கோமூத்திரி அந்தாதி
தலம்: திருப்பிரமபுரம் பண் : காந்தாரம் :

பாடல் 1:
பூமகனூர் புத்தேளுக் கிறைவனூர் குறைவிலாப் புகலிபூமேன்
மாமகளூர் வெங்குருநற் றோணிபுரம் பூந்தராய் வாய்ந்தவிஞ்சிச்
சேமமிகு சிரபுரஞ்சீர்ப் புறவநிறை புகழ்ச்சண்பை காழிகொச்சை
காமனைமுன் காய்ந்தநுதற் கண்ணவனூர் கழுமலநாங் கருதுமூரே.

பாடல் - 2
கருத்துடைய மறையவர்சேர் கழுமலமெய்த் தோணிபுரங் கனகமாட
உருத்திகழ்வெங் குருப்புகலி யோங்குதரா யுலகாருங் கொச்சைகாழி
திருத்திகழுஞ் சிரபுரந்தே வேந்திரனூர் செங்கமலத் தயனூர்தெய்வத்
தருத்திகழும் பொழிற்புறவஞ் சண்பைசடை முடியண்ணல் தங்குமூரே.

பாடல் 3
ஊர்மதியைக் கதுவவுயர் மதிற்சண்பை யொளிமருவு காழிகொச்சை
கார்மலியும் பொழில்புடைசூழ் கழுமலமெய்த் தோணிபுரங் கற்றோரேத்துஞ்
சீர்மருவு பூந்தராய் சிரபுரமெய்ப் புறவமய னூர்பூங்கற்பத்
தார்மருவு மிந்திரனூர் புகலிவெங் குருக்கங்கை தரித்தோனூரே

பாடல் 4.
தரித்தமறை யாளர்மிகு வெங்குருச்சீர்த் தோணிபுரந் தரியாரிஞ்சி
எரித்தவன்சேர் கழுமலமே கொச்சைபூந் தராய்புகலி யிமையோர்கோனூர்
தெரித்தபுகழ்ச் சிரபுரஞ்சீர் திகழ்காழி சண்பைசெழு மறைகளெல்லாம்
விரித்தபுகழ்ப் புறவம்விரைக் கமலத்தோ னூருலகில் விளங்குமூரே

பாடல் 5

விளங்கயனூர் பூந்தராய் மிகுசண்பை வேணுபுர மேகமேய்க்கும்
இளங்கமுகம் பொழிற்றோணி புரங்காழி யெழிற்புகலி புறவமேரார்
வளங்கவரும் வயற்கொச்சை வெங்குருமாச் சிரபுரம்வன் னஞ்சமுண்டு
களங்கமலி களத்தவன்சீர்க் கழுமலங்கா மன்னுடலங் காய்ந்தோனூரே.

பாடல் 6

காய்ந்துவரு காலனையன் றுதைத்தவனூர் கழுமலமாத் தோணிபுரஞ்சீர்
ஏய்ந்தவெங் குருப்புகலி யிந்திரனூ ரிருங்கமலத் தயனூரின்பம்
வாய்ந்தபுற வந்திகழுஞ் சிரபுரம்பூந் தராய்கொச்சை காழிசண்பை
சேந்தனைமுன் பயந்துலகிற் றேவர்கடம் பகைகெடுத்தோன் றிகழுமூரே.

பாடல் 7

திகழ்மாட மலிசண்பை பூந்தராய் பிரமனூர் காழிதேசார்
மிகுதோணி புரந்திகழும் வேணுபுரம் வயங்கொச்சை புறவம்விண்ணோர்
புகழ்புகலி கழுமலஞ்சீர்ச் சிரபுரம்வெங் குருவெம்போர் மகிடற்செற்று
நிகழ்நீலி நின்மலன்றன் னடியிணைகள் பணிந்துலகி னின்றவூரே.

பாடல் 8
நின்றமதில் சூழ்தருவெங் குருத்தோணி புரநிகழும் வேணுமன்றில்
ஒன்றுகழு மலங்கொச்சை யுயர்காழி சண்பைவளர் புறவமோடி
சென்றுபுறங் காக்குமூர் சிரபுரம்பூந் தராய்புகலி தேவர்கோனூர்
வென்றிமலி பிரமபுரம் பூதங்க டாங்காக்க மிக்கவூரே.

பாடல் 9

மிக்ககம லத்தயனூர் விளங்குபுற வஞ்சண்பை காழிகொச்சை
தொக்கபொழிற் கழுமலந்தூத் தோணிபுரம் பூந்தராய் சிலம்பன்சேரூர்
மைக்கொள்பொழில் வேணுபுர மதிற்புகலி வெங்குருவல் லரக்கன் றிண்டோள்
ஒக்கவிரு பதுமுடிக ளொருபதுமீ டழித்துகந்த வெம்மானூரே.

பாடல் 10.

எம்மான்சேர் வெங்குருச்சீர்ச் சிலம்பனூர் கழுமலநற் புகலியென்றும்
பொய்ம்மாண்பி லோர்புறவங் கொச்சைபுரந் தரனூர்நற் றோணிபுரம்போர்க்
கைம்மாவை யுரிசெய்தோன் காழியய னூர்தராய் சண்பைகாரின்
மெய்ம்மால்பூ மகனுணரா வகைதழலாய் விளங்கியவெம் மிறைவனூரே.

பாடல் 11

இறைவனமர் சண்பையெழிற் புறவமய னூரிமையோர்க் கதிபன்சேரூர்
குறைவில்புகழ்ப் புகலிவெங் குருத்தோணி புரங்குணமார் பூந்தராய்நீர்ச்
சிறைமலிநற் சிரபுரஞ்சீர்க் காழிவளர் கொச்சைகழு மலந்தேசின்றிப்
பறிதலையோ டமண்கையர் சாக்கியர்கள் பரிசறியா வம்மானூரே.

பாடல் 12
அம்மான்சேர் கழுமலமாச் சிரபுரம்வெங் குருக்கொச்சை புறவமஞ்சீர்
மெய்ம்மானத் தொண்புகலி மிகுகாழி தோணிபுரந் தேவர்கோனூர்
அம்மான்மன் னுயர்சண்பை தராயயனூர் வழிமுடக்கு மாவின்பாச்சல்
தம்மானொன் றியஞான சம்பந்தன் றமிழ்கற்போர் தக்கோர்தாமே.

பொருள் விளக்கம்:
பாடல் 1.
பூமகனூர் புத்தேளுக்கு இறைவன் ஊர் குறைவிலாப் புகலிபூமேல்

மாமகளூர் வெங்குரு நல் தோணிபுரம் பூந்தராய் வாய்ந்தஇஞ்சிச்

சேமம் மிகு சிரபுரம் சீர்ப் புறவ நிறை புகழ்ச் சண்பை காழி கொச்சை

காமனை முன் காய்ந்த நுதல் கண்ணவன் ஊர் கழுமலம் நாம்கருதும் ஊரே

விளக்கம்:

பூமகன்=தாமரை மலரினைத் தனது இருப்பிடமாகக் கொண்ட பிரமன்; பிரமனூர் என்ற பெயர் பூமகனூர் என்று மாற்றப்பட்டுள்ளது. 

தான் மேற்கொண்டுள்ள படைத்தல் தொழில் ஒழுங்காக நடைபெற வேண்டும் என்ற நோக்கத்துடன் உபநிடதங்களை முறையாக ஓதி பிரமன் வரம் பெற்றதால் இந்த தலத்திற்கு பிரமபுரம் என்ற பெயர் வந்தது என்று தலபுராணம் கூறுகின்றது. 

புத்தேள்=தேவர்கள்; 

சூரபதுமனுக்கு பயந்து இந்திரன் இங்குள்ள மூங்கிலில் மறைந்து கொண்டமையால் வேணுபுரம் என்ற பெயர் சீர்காழி தலத்திற்கு வந்தது. அப்போது இந்திரனுடன் வந்த தேவர்கள் இறைவனை வணங்கிய செய்தி இங்கே புத்தேளுக்கு இறைவனூர் என்ற தொடரால் குறிப்பிடப்படுகின்றது. 

மாமகள்=செல்வத்தை தரும் இலக்குமி தேவி; 
இஞ்சி=மதில்; 
சேமம்=பாதுகாப்புடன், க்ஷேமம் என்ற வடமொழியின் தமிழாக்கம்:

பாடல் 1.
பொழிப்புரை:

தாமரை மலரினில் உறையும் பிரமனால் வழிபடப்பட்டதால் பிரமபுரம் என்றும், சூரபதுமனுக்கு பயந்துகொண்டு மூங்கில் காட்டினில் இந்திரன் ஒளிந்துகொண்ட போது தேவர்களும் இந்திரனுடன் சேர்ந்து இறைவனை வழிபட்டதால் வேணுபுரம் என்றும், குறைவில்லாத வளம் கொண்ட புகலி நகரம் என்றும், உலகில் உள்ள மற்ற நகரங்களினும் செல்வச் சிறப்பினை அதிகமாக உடைத்ததாக இலக்குமி தேவி உறையும் வெங்குரு என்றும், நல்ல தோணிபுரம் என்றும், பூந்தராய் என்றும், வலிமையான மதில் சுவர்களைக் கொண்டு பாதுகாப்பாக விளங்கும் சிரபுரம் என்றும், சிறப்பினை உடைய புறவம் என்றும், நிறைந்த புகழினை உடைய சண்பை நகரம் என்றும், காழி என்றும், கொச்சைவயம் என்றும், தனது நெற்றிக் கண்ணினைத் திறந்து காமனை அழித்த இறைவனின் ஊர் கழுமலம் என்றும் பன்னிரண்டு பெயர்களை உடைய சீர்காழி தலமே, அடியேன் எப்போதும் கருத்தினில் கொள்ளும் தலமாகும்.

பாடல் 2:

கருத்து உடைய மறையவர் சேர் கழுமலம் மெய்த் தோணிபுரம் கனக மாட

உருத் திகழ் வெங்குருப் புகலி ஓங்கு தராய் உலகாரும் கொச்சை காழி

திருத் திகழும் சிரபுரம் தேவேந்திரனூர் செங்கமலத்து அயன் ஊர் தெய்வத்

தருத் திகழும் பொழில் புறவம் சண்பை சடைமுடி அண்ணல்தங்கும் ஊரே

விளக்கம்:

கனகம்=பொன்; திரு=இலக்குமி தேவி; தரு=மரம்; 
தெய்வத்தரு=தெய்வத்தன்மை வாய்ந்த கற்பக மரம்; 
மெய்=பிரளயத்திலும் அழியாது நிலைத்து நிற்கும்;

பொழிப்புரை:

சிவஞானக் கருத்துகள் உடையவர்களாக விளங்கும் மறையவர் சேர்ந்து வாழும் கழுமலம் என்றும், பிரளய வெள்ளத்திலும் அழியாது நிலைத்து நிற்கும் தோணிபுரம் என்றும், பொன் போன்று அழகிய மாடங்கள் கொண்ட மாளிகைகள் கொண்டு வெங்குரு என்றும், புகலி என்றும், ஓங்கிய புகழினை உடைய பூந்தராய் என்றும், பரந்த உலகினில் சிறப்புடன் திகழும் கொச்சைவயம் என்றும், காழி என்றும், செல்வ வளத்துடன் விளங்கும் சிரபுரம் என்றும், தேவேந்திரனின் ஊர் என்பதை உணர்த்தும் வேணுபுரம் என்றும் சிவந்த தாமரை மலரில் உறையும் பிரமன் வழிபட்ட பிரமனூர் என்றும், தெய்வத்தன்மை பொருந்திய கற்பகம் முதலான மரங்கள் நிறைந்த சோலைகள் உடைய புறவம் என்றும் சண்பை என்றும் அழைக்கப்படும் சீர்காழி தலம் நமது தலைவனும் சடைமுடி உடையவனும் ஆகிய சிவபெருமான் வீற்றிருக்கும் இடமாகும்.

பாடல் 3:

ஊர் மதியைக் கதுவ உயர் மதில் சண்பை ஒளி மருவு காழிகொச்சை

கார் மலியும் பொழில் புடை சூழ் கழுமலம் மெய்த் தோணிபுரம்கற்றோர் ஏத்தும்

சீர் மருவு பூந்தராய் சிரபுரம் மெய்ப் புறவம் அயனூர் பூங்கற்பகத்

தார் மருவும் இந்திரன் ஊர் புகலி வெங்குருக் கங்கை தரித்தோன்ஊரே

விளக்கம்:

கதுவ=பற்ற; ஊர்மதி=விண்ணில் ஊர்ந்து செலும் சந்திரன், கார்=மேகங்கள்;

பொழிப்புரை:

வானில் ஊர்ந்து செல்லும் சந்திரனைப் பற்றும் வண்ணம் உயர்ந்த மதில்களை உடைய சண்பை என்றும், ஒளியுடன் திகழும் காழி என்றும், கொச்சை வயம் என்றும், மேகங்கள் தவழும் அழகிய சோலைகளால் சூழப்பட்ட கழுமலம் என்றும், பிரளய வெள்ளத்தில் மூழ்கி அழியாமல் மிதந்து நிலையாக நின்ற தோணிபுரம் என்றும், கற்றோர்கள் புகழும் சிறப்பினை உடைய பூந்தராய் என்றும், சிரபுரம் என்றும், என்றும் அழியாமல் நிலைத்து நிற்கும் புறவம் என்றும், அயன் என்று அழைக்கப்படும் பிரமனின் ஊர் என்பதை உணர்த்தும் பிரமனூர் என்றும், அழகிய கற்பக மரங்களை உடைய இந்திரன் வழிபட்ட வேணுபுரம் என்றும், புகலி என்றும், வெங்குரு என்றும் அழைக்கப்படும் சீர்காழி நகரம், கங்கை நதியினைத் தனது சடையினில் மறைத்த சிவபெருமானின் ஊர் ஆகும்.

பாடல் 4:

தரித்த மறையாளர் மிகு வெங்குருச் சீர் தோணிபுரம் தரியார் இஞ்சி

எரித்தவன் சேர் கழுமலமே கொச்சை பூந்தராய் புகலி இமையோர்கோன் ஊர்

தெரித்த புகழ்ச் சிரபுரம் சீர் திகழ் காழி சண்பை செழுமறைகள்எல்லாம்

விரித்த புகழ்ப் தொகுக்கப்பட்டவிரைக் கமலத்தோன் ஊர் உலகில் விளங்கும்ஊரே

விளக்கம்:

தரித்த=வேதங்களை நாவில் தரித்த; தரியார்=பொறுக்க முடியாதவர்கள், தேவர்களும் மனிதர்களும் நிம்மதியாக வாழ்வதைக் கண்டு பொறுக்க முடியாமல் அவர்களுக்கு தொடர்ந்து துன்பம் இழைத்த திரிபுரத்து அரக்கர்கள்; 
இஞ்சி=கோட்டை, மதில்; 
விரை=நறுமணம்; தெரித்த=விளங்கிய; 
கமலத்தோன் ஊர் என்று பிரமபுரம் எனப்படும் தலத்தின் பெயரை சற்று மாற்றி, சம்பந்தர் இந்த பாடலில் கையாண்டுள்ளார். பிரமபுரம் என்ற பெயர் வந்ததன் காரணத்தை நாம் முதல் பாடலின் விளக்கத்தில் கண்டோம்.

பொழிப்புரை:

இடைவிடாது வேதங்கள் ஓதுவதால், தங்களது நாவினில் வேதங்களை தரித்தவர்களாக விளங்கும் அந்தணர்கள் மிகுந்த வெங்குரு என்றும், சிறப்பு வாய்ந்த தோணிபுரம் என்றும், தேவர்களும் மனிதர்களும் நிம்மதியாக வாழ்வதைக் கண்டு பொறுக்க முடியாமல் அவர்களுக்கு தொடர்ந்து துன்பம் இழைத்து அனைவர்க்கும் பகைவர்களாக திகழ்ந்த திரிபுரத்து அரக்கர்களின் வலிமை வாய்ந்த மூன்று பறக்கும் கோட்டைகளையும் ஒருங்கே எரித்த இறைவனாகிய சிவபெருமான் சேரும் இடமாகிய கழுமலம் என்றும், கொச்சைவயம் என்றும், பூந்தராய் என்றும், புகலி என்றும், வானவர்களின் தலைவனாகிய இந்திரன் ஒளிந்து கொண்டதால் வேணுபுரம் என்று பெயரினை பெற்ற தலம் என்றும் விளங்கிய புகழினை உடைய சிரபுரம் என்றும், சிறப்புகள் பொருந்தி திகழும் காழி என்றும், சண்பை என்றும், செழுமை வாய்ந்த வேதங்களால் புகழ் விரித்து சொல்லப்படும் புறவம் என்றும், நறுமணம் வாய்ந்த தாமரை மலரில் உறையும் பிரமன் வழிபட்டதால் பிரமபுரம் என்றும், அழைக்கப்படும் சீர்காழி நகரம் உலகினில் சிறந்து விளங்குகின்றது.

பாடல் 5:

விளங்கு அயனூர் பூந்தராய் மிகு சண்பை வேணுபுரம் மேகம்ஏய்க்கும்

இளம் கமுகம் பொழில் தோணிபுரம் காழி எழில் புகலி புறவம்ஏரார்/

வளம் கவரும் வயல் கொச்சை வெங்குரு மாச் சிரபுரம் வன் நஞ்சம்உண்டு

களங்கம் மலி களத்தவன் சீர்க் கழுமலம் காமன் உடலம்காய்ந்தோன் ஊரே

விளக்கம்:

ஏய்க்கும்=ஒன்றி நிற்கும்; ஏற=அழகு; 
ஏரார்=அழகுநிறைந்த; 
காய்ந்தோன்=கோபம் கொண்டு; தனது தவத்தினைக் கலைக்க முயற்சி செய்த மன்மதன் பால் கோபம் கொண்டு, நெற்றிக் கண் திறந்து மன்மதனை எரித்த செயல் இங்கே குறிப்பிடப்படுகின்றது.
கமுக மரம்=பாக்கு மரம்; வன்னஞ்சம்=வலிமை வாய்ந்த கொடிய ஆலகால விடம்; 
களங்கம்=குற்றம், இங்கே கறை என்று பொருள் கொள்ள வேண்டும். களம்=கழுத்து; 
அயனூர்=பிரமபுரம்;

பொழிப்புரை:

சிறப்புடன் விளங்கும் பிரமபுரம் என்றும், பூந்தராய் என்றும், புகழ் மிகுந்த சண்பை என்றும், வேணுபுரம் என்றும், மேகங்களுடன் ஒன்றி நிற்கும் வண்ணம் உயர்ந்த பாக்கு மரங்கள் நிறைந்த சோலைகள் உடைய தோணிபுரம் என்றும், காழி என்றும், எழிலுடன் விளங்கும் புகலி என்றும், புறவம் என்றும், செழுமையும் அழகும் கலந்து தோன்றும் வயல்கள் நிறைந்த கொச்சைவயம் என்றும், வெங்குரு என்றும், பெருமை வாய்ந்த சிரபுரம் என்றும், கொடிய ஆலகால விடத்தினைத் தனது கழுத்தினில் தேக்கியதால் கருமை கறை படிந்த கழுத்தினை உடையவனாக விளங்கும் சிவபெருமான் உறையும் சிறந்த தலமாகிய கழுமலம் என்றும் அழைக்கப்படும் இந்த தலம், தனது தவத்தினைக் கலைக்க முயற்சி செய்த மன்மதன் பால் கோபம் கொண்டு, நெற்றிக்கண்ணை விழித்து மன்மதனின் உடலை பொடியாக்கிய பெருமான் உறையும் தலம் ஆகும்.

பாடல் 6:

காய்ந்து வரும் காலனை அன்று உதைத்தவன் ஊர் கழுமலம் மாத்தோணிபுரம் சீர்

ஏய்ந்த வெங்குருப் புகலி இந்திரனூர் இருங்கமலத்து அயனூர்இன்பம்

வாய்ந்த புறவம் திகழும் சிரபுரம் பூந்தராய் கொச்சை காழி சண்பை

சேந்தனை முன் பயந்து உலகில் தேவர்கள் தம் பகை கெடுத்தோன்
திகழும் ஊரே

விளக்கம்:

காய்ந்து=கோபத்துடன்; முன்னமே குறிப்பிடப்பட்ட நேரத்தில் சிறுவன் மார்க்கண்டேயனின் உயிரை எடுக்க வந்த காலன், சிறுவன் சிவபூஜை செய்து கொண்டிருந்ததைப் பார்த்து மேலும் கோபம் கொண்டு அவனது கழுத்தினில் பாசக் கயிறு வீசிய நிகழ்ச்சி இங்கே, காய்ந்து வரும் காலன் என்ற தொடர் மூலம் குறிப்பிடப்படுகின்றது. 
சீர்=சிறப்பு; ஏய்ந்த=பொருந்திய; 
இந்திரனூர்= வேணுபுரம்; 
இரும்=பெரிய; 
சேந்தன்=முருகப்பெருமான்;
பயந்து=பெற்றெடுத்து; முருகப்பெருமான்சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய நெருப்புப் பொறிகளால் உருவானவன் என்பதால், ஒரு தாயின் கருவிலிருந்து உருவாகாதவன் என்பதை குறிப்பிடும் வண்ணம், முருகனைப் பெற்றவன் சிவபெருமான் என்று இங்கே ஞானசம்பந்தர் கூறுகின்றார். தேவர்களுக்கு பகைவனாக விளங்கிய சூரபதுமனை கொல்வதற்காக முருகப்பெருமானை தோற்றுவித்தார் என்ற கருத்து உணரப்படும் வண்ணம், முருகனை தோற்றுவித்து தேவர்கள் பகையினை கெடுத்த சிவபெருமான் என்றும் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார்.

பொழிப்புரை:

பண்டைய நாளில், மிகுந்த கோபத்துடன் சிறுவன் மார்க்கண்டேயனின் உயிரினைப் பறிக்க வந்த காலனை உதைத்து வீழ்த்திய சிவபெருமானின் ஊர் கழுமலம் என்றும், சிறப்பு வாய்ந்த தோணிபுரம் என்றும், சிறப்புகள் பொருந்திய வெங்குரு என்றும், புகலி என்றும், இந்திரனின் ஊர் எனப்படும் வேணுபுரம் என்றும், சிறந்த தாமரைப் பூவினில் அமர்ந்துள்ள பிரமனின் ஊர் எனப்படும் பிரமபுரம் என்றும் இறையுணர்வு மற்றும் செல்வச் செழிப்பு காரணமாக அனைவரும் இன்பமுடன் வாழும் புறவம் என்றும், வளமையுடன் திகழும் சிரபுரம் என்றும், பூந்தராய் என்றும் கொச்சைவயம் என்றும் காழி என்றும் சண்பை என்றும், தேவர்களின் பகையாகிய சூரபதுமனை அழிக்கும் ஆற்றல் வாய்ந்த முருகப்பெருமானைப் பெற்றெடுத்த சிவபெருமான் திகழும் சீர்காழி தலம் அழைக்கப் படுகின்றது.

பாடல் 7:

திகழ் மாட மலி சண்பை பூந்தராய் பிரமனூர் காழி தேசார்

மிகு தோணிபுரம் திகழும் வேணுபுரம் வயம்கொச்சை புறவம்விண்ணோர்

புகழ் புகலி கழுமலம் சீர்ச் சிரபுரம் வெங்குரு வெம்போர் மகிடற்செற்று

நிகழ் நீலி நின்மலன் தன் அடியிணைகள் பணிந்து உலகில்நின்ற ஊரே

விளக்கம்:

மலி=மலிந்த; தேசு=ஒளி; 
தேசார்=ஒளி பொருந்திய; 
சூரபதுமனுக்கு அஞ்சிய தேவர்கள் சிவபெருமானிடம் சரணடைந்த இடம் என்பதால் புகலி என்று பெயர் வந்ததாக கூறுவார்கள். 

பொழிப்புரை:

பொலிவுடன் திகழும் மாடங்கள் நிறைந்த சண்பை என்றும், பூந்தராய் என்றும், பிரமனூர் என்றும், காழி என்றும், மிகவும் அதிகமான ஒளி பொருந்திய தோணிபுரம் என்றும், சிறப்புடன் திகழும் வேணுபுரம் என்றும், கொச்சைவயம் என்றும், புறவம் என்றும், விண்ணோர்களால் புகழப்படும் புகலி என்றும், கழுமலம் என்றும், சிறப்பு வாய்ந்த சிரபுரம் என்றும், வெங்குரு என்றும், அழைக்கப்படுவது, கடுமையான போரின் முடிவினில் மகிடாசுரனை வெற்றி கொண்ட நீலி என்று அழைக்கப்படும் காளி,

மகிடனைக் கொன்றதால் ஏற்பட்ட பழியினை நீக்கிக் கொள்ளும் பொருட்டு, பணிந்து வணங்கும் திருவடிகளை உடைய நின்மலனாகிய சிவபெருமான் உறையும் ஊராகிய சீர்காழி ஆகும்.

பாடல் 8:

நின்ற மதில் சூழ்தரு வெங்குரு தோணிபுரம் நிகழும் வேணுமன்றில்

ஒன்று கழுமலம் கொச்சை உயர் காழி சண்பை வளர் புறவம்மோடி

சென்று புறம் காக்கும் ஊர் சிரபுரம் பூந்தராய் புகலிதேவர்கோனூர்

வென்றி மலி பிரமபுரம் பூதங்கள் தாம் காக்க மிக்க ஊரே

விளக்கம்:

பூதங்கள்=ஐந்து பூதங்கள்; பஞ்ச பூதங்களில் ஒன்றாக குறிப்பிடப்படும் நீரினை உணர்த்தும் பிரளய வெள்ளத்திலும் அழியாமல் மிதந்த நிலையினை பூதங்கள் காக்க நின்ற ஊர் என்று இங்கே குறிப்பிடுகின்றார். 
மோடி=துர்க்கை, காளி; 

பொழிப்புரை:

மதில்கள் சூழ்ந்து விளங்கும் வெங்குரு என்றும், தோணிபுரம் என்றும், பொலிவுடன் விளங்கும் மன்றில் கொண்ட வேணுபுரம் என்றும், ஒப்பற்ற கழுமலம் என்றும், கொச்சைவயம் என்றும், உயர்ந்த காழி என்றும், வளர்ந்த புகழ் உடைய புறவம் என்றும், காளிதேவி ஊர் எல்லையில் கோயில் கொண்டு காக்கும் சிரபுரம் என்றும், பூந்தராய் என்றும், புகலி என்றும், தேவர்களின் தலைவனாகிய இந்திரனின் ஊர் வேணுபுரம் என்றும், வெற்றிகள் வழங்கும் பிரமபுரம் என்றும் அழைக்கப்படும் சீர்காழி நகரம், ஐந்து பூதங்களும் சேர்ந்து எப்போதும் அழியாமல் நிலையாக இருக்கும் வண்ணம் காக்கும் நகரமாகும்.

பெருமானிடம் நடனப் போட்டியில் தோற்ற காளி, ஊர் எல்லையில் சென்று அமர்ந்ததாக சீர்காழி தலபுராணம் கூறுகின்றது. 
அரக்கன் தாரகனை வென்ற பின்னரும் தனது கோபம் அடங்காமல், கோபத்தினால் அனைத்து உயிர்களையும் துன்புறுத்தியது தனது தவறு என்பதை உணர்ந்த காளி, தனது குற்றம் நீங்கும் பொருட்டு சிவபெருமானை வழிபட்டதை குறிப்பிடும் வகையில் காழி என்ற பெயர் அமைந்தது

பாடல் 9:

மிக்க கமலத்து அயனூர் விளங்கு
சண்பை புறவம் காழி கொச்சை

தொக்க பொழில் கழுமலம் தூத் தோணிபுரம் பூந்தராய் சிலம்பன்சேர் ஊர்

மைக்கொள் பொழில் வேணுபுரம் மதில் புகலி வெங்குரு வல்லரக்கன்திண்தோள்

ஒக்க இருபது முடிகள் ஒருபதும் ஈடழித்து உகந்த எம்மான் ஊரே

விளக்கம்:

மிக்க=சிறப்பு மிக்க; அயனூர்=பிரமபுரம்; 
தொக்க=இணைந்த; 
ஈடு=வலிமை;

சிலம்பன்- = சுவர்பானு அரக்கன் - ராகு
சிலம்பனூர் - சிரபுரம் : நாகநாதர்

 இந்த பாடலில் சிலம்பன் சேர் ஊர் என்று ஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். இந்த பதிகத்தின் பாடல் தோறும் சீர்காழி நகரின் பன்னிரண்டு பெயர்களை குறிப்பிட்டு வருவதால், இந்த பாடலிலும் பன்னிரண்டு பெயர்கள் இருக்க வேண்டும் என்பதை உணரலாம்.
சிரபுரம் என்ற பெயர் மேற்கண்ட பாடலில் இல்லாமல் இருப்பதால், சிலம்பன் சேர் ஊர் என்பது சிரபுரம் என்ற பெயரை குறிப்பதாகவே நாம் பொருள் கொள்ள வேண்டும். இதே போன்று, பன்னிரண்டு பெயர்களையும் குறிக்கும் பல பாடல்களில் (1.70.5, 1.73.2, 1073.3, 1.73.4, 1.73.5, 1.73.8, 1.73.9, 1.73.10. 1.74.10) சிரபுரம் என்ற பெயருக்கு பதிலாக சிலம்பனூர் என்ற பெயர் காணப்படுகின்றது. சிலம்பன் என்ற சொல்லுக்கு அபிதான சிந்தாமணி, குறிஞ்சி நிலத் தலைவன் என்றும் முருகப் பெருமான் என்று பொருள் உரைத்தாலும், அந்த பொருள்கள் சிரபுரம் என்ற பெயரின் காரணத்திற்கு பொருத்தமாக படவில்லை. சில அறிஞர்கள் சிலம்பன் என்பதற்கு நாகநாதன் என்று பொருள் கொண்டு, நாகனாதனாகிய இறைவன் உறையும் இடம் என்று பொருள் கூறுகின்றனர். இராகு வழிபட்டதால் சிரபுரம் என்று பெயர் வந்ததாக தலபுராணம் குறிப்பிடுகின்றது. இராகுவை பாம்பின் அம்சமாக கொண்டு, இராகு வழிபட்டதால் இராகுக்கு நாதனாக, தலைவனாக, திகழ்ந்த பெருமான் என்று பொருள் கொள்வது பொருத்தமாக உள்ளது.

மேலும் சிலம்பன் என்ற சொல் அரக்கன் ஒருவனை குறிப்பதாக சிவக்கவிமணியார் விளக்கம் அளிக்கின்றார். எனவே இராகு கிரகமாக மாறுவதற்கு முன்னர், சுவர்பானுவாக இருந்த அரக்கனே சிலம்பன் என்று ஞானசம்பந்தரால் குறிப்பிடப்படுகின்றது என்ற சிவக்கவிமணியாரின் விளக்கம் பொருத்தமாக உள்ளது. சுவர்பானு என்ற அரக்கன், பாற்கடலிலிருந்து பொங்கி வந்த அமுதத்தை, மோகினியாக வந்த திருமால், வஞ்சகமாக தேவர்களுக்கு மட்டும் அளித்து வந்ததைக் கண்டு, தானும் தேவர்களின் நடுவே அமர்ந்து அமுதம் பெறுவதற்கு முயற்சி செய்தான். தங்களின் இடையே அமர்ந்து அவன் அமுதம் பெற்றதை உணர்ந்து, சூரியனும் சந்திரனும், திருமாலிடம் அவன் வரிசை மாறி அமர்ந்ததை சுட்டிக் காட்டி உணர்த்தியதால், மோகினி வடிவத்தில் இருந்த திருமால், தான் வைத்திருந்த கரண்டியால் அவனது தலையினை வெட்டினார். ஆனால் அமுதம் உள்ளே சென்றதால் சுவர்பானு உடனே இறக்கவில்லை. அவனது தலை சீர்காழி சென்று இறைவனிடம் இறைஞ்சி முறையிட, அரக்கனது உடலுடன் பாம்பின் தலையை பொருத்தியும், அரக்கனது தலையுடன் பாம்பின் உடலை பொருத்தியும் பெருமான் வாழ்வளித்தார். அவர்கள் இருவரும் முறையே இராகு என்றும் கேது என்று அழைக்கப்பட்டனர். இந்த சுவர்பானு எனப்படும் அரக்கனே சிலம்பன் என்று தேவாரப் பாடல்களில் அழைக்கப்படுகின்றான். சுவர்பானுவின் தலை சென்று இறைவனை வழிபட்டமையால் சிரபுரம் என்ற பெயரும் தலத்திற்கு வந்தது. இராகு என்ற பாம்பு வழிபட்டமையால், நாகநாதன் என்று பெருமானும் அழைக்கப் படுகின்றார். எனவே சிலம்பன் என்ற சொல் பெருமானை வழிபாட்டு அருள் பெற்ற சுவர்பானுவை குறிப்பதாகவும், நாகநாத சுவாமி என்ற பெயரினை பெற்ற பெருமானை குறிப்பதாகவும் இரண்டு விதமாக விளக்கம் அளிக்கப்படுகின்றது. இந்த பாடலில் சிரபுரம் என்ற சொல் இல்லாமல் இருப்பதன் பின்னணியில், சிலம்பனூர் என்ற சொல்லுக்கு சிரபுரம் என்று பொருள் கொள்வது மிகவும் பொருத்தமாக உள்ளது. 
- ==

தெய்வத்தரு=கற்பக மரம். கற்பக மரம் தனது நிழலில் அமர்வோர் நினைத்ததை அளிக்கும் என்று கூறுவார்கள். சீர்காழி தலத்தில் உள்ள மரங்கள் செழிப்புடன் வளர்ந்து மக்களின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்வதால், கற்பக மரங்களுக்கு ஒப்பாக இங்கே குறிப்பிடப்படுகின்றன. 

வேணுபுரம் என்ற பெயர் இந்திரன் வந்து பெருமானை வழிபட்டதால் வந்த பெயர். எனவே தேவேந்திரன் ஊர் என்று வரும் இடங்களில் வேணுபுரம் என்று பொருள் கொள்வது பொருத்தம். ஒண்பா=சிறந்த பாடல்கள்; உருவளர்=புகழ் வளரும்; சான்றோர்கள் மேலும் மேலும் இறைவனைப் புகழ்ந்து பாடுவதால், பெருமானின் சிறப்பும் தலத்தின் சிறப்பும் மேலும் மேலும் வளர்கின்றது என்று சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். உயர்ந்த தேவர்=பிரமன் திருமால் இந்திரன் உள்ளிட்ட உயர்ந்த தேவர்கள்; வெருவளர்=அச்சம் வளரும் நிலை; மேற்கண்ட விளக்கத்திற்கு பொருத்தமான பாடல் ஒன்றினை (2.73.2) நாம் இங்கே காண்போம்.

திரு வளரும் கழுமலமே கொச்சை தேவேந்திரன் ஊர் அயனூர்தெய்வத்

தரு வளரும் பொழில் புறவம் சிலம்பனூர் காழி தரு சண்பைஒண்பா

உரு வளர் வெங்குருப் புகலி ஓங்கு தராய் தோணிபுரம் உயர்ந்ததேவர்

வெருவ வளர் கடல் விடம் அது உண்டு அணி கொள் கண்டத்தோன் விரும்பும் ஊரே

பொழிப்புரை:

சிறப்பு மிகுந்த தாமரை மலரைத் தனது இருப்பிடமாகக் கொண்ட பிரமனின் பெயரால் அழைக்கப் படும் பிரமபுரம் என்றும், சிறந்த புகழுடன் விளங்கும் புறவம் என்றும், சண்பை என்றும், காழி என்றும், கொச்சை வயம் என்றும், சோலைகள் இணைந்த கழுமலம் என்றும், தூய்மை நிறைந்த தோணிபுரம் என்றும், பூந்தராய் என்றும், சிலம்பன் சேர்ந்த சிரபுரம் என்றும், இருள் படரும் வண்ணம் அடர்ந்து காணப்படும் சோலைகள் நிறைந்த வேணுபுரம் என்றும், மதில்கள் உடைய வெங்குரு என்றும் அழைக்கப்படும் ஊர், வலிமை வாய்ந்த அரக்கன் இராவணனின் திண்மையான இருபது தோள்களும் பத்து தலைகளும் ஒன்று சேர்ந்து வலிமை இழக்கும் வண்ணம் கயிலை மலையின் கீழே அழுத்திய எமது பெருமானாகிய சிவபெருமானின் ஊர்.

பாடல் 10:

எம்மான் சேர் வெங்குருச் சீர்ச் சிலம்பனூர் கழுமலம் நல் புகலி
என்றும்

பொய்ம் மாண்பிலோர் புறவம் கொச்சை புரந்தரனூர் நல்தோணிபுரம் போர்க்

கைம்மாவை உரி செய்தோன் காழி அயனூர் தராய் சண்பைகாரின்

மெய்ம் மால் பூமகன் உணரா வகை தழலாய் விளங்கிய எம்இறைவன் ஊரே

விளக்கம்:

மாண்பு=புகழ்; பொய்ம்மாண்பு=நிலையற்ற புகழ்; கைம்மா=கை உடைய விலங்கு, யானை; கார்=மேகம்; காரின் மெய்ம் மால்=மேகம் போன்ற மேனியை உடைய திருமால்; சிலம்பனூர்= சிரபுரம் (விளக்கம் சென்ற பாடலில் அளிக்கப்பட்டது); புரந்தரன்=இந்திரன்; அயனூர்=பிரமபுரம்;

பொழிப்புரை:

எமது பெருமான் சென்று சேர்ந்து உறையும் வெங்குரு என்றும், சிறப்புகள் வாய்ந்த சிரபுரம் என்றும், கழுமலம் என்றும், அடியார்களுக்கு பல நன்மைகள் பயக்கும் புகலி என்றும், நிலையான புகழினை உடைய சான்றோர்கள் போற்றும் புறவம் என்றும், கொச்சைவயம் என்றும், தேவேந்திரனின் ஊர் என்று சொல்லப்படும் வேணுபுரம் என்றும், நன்மைகள் நல்கும் தோணிபுரம் என்றும், போர்க்குணம் கொண்டதும் துதிக்கை உடையதும் ஆகிய யானையினை அடக்கி அதன் தோலை போர்வையாக போர்த்துக் கொண்ட இறைவனது ஊராகிய காழி என்றும், பிரமபுரம் என்றும், பூந்தராய் என்றும், சண்பை என்றும் அழைக்கப்படும் சீர்காழி நகரம், கருமேகத்தைப் போன்று கருமையான மேனி கொண்ட திருமாலும் பூமகன் என்று அழைக்கப்படும் பிரமனும் காண்பதற்கு அரியவனாக நெடிய தீப்பிழம்பாக நின்ற எமது இறைவனாகிய சிவபெருமானின் ஊராகும்

பாடல் 11

இறைவன் அமர் சண்பை எழில் புறவம் அயனூர் இமையோர்க்குஅதிபன் சேரூர்

குறைவில் புகழ்ப் புகலி வெங்குருத் தோணிபுரம் குணமார் பூந்தராய்நீர்ச்

சிறை மலி நல் சிரபுரம் சீர்க்காழி வளர் கொச்சை கழுமலம் தேசுஇன்றிப்

பறிதலையோடு அமண் கையர் சாக்கியர்கள் பரிசு அறியாஅம்மானூரே

விளக்கம்:

அம்மான்=தாய் போன்று கருணை உள்ளம் கொண்டவன்; இமையோர்க்கு அதிபன், தேவர்களின் தலைவன், இந்திரன்; சிறை=அணை; தேசு=ஒளி; கையர்=கீழ்த்தன்மை உடைய சமணர்கள்; அணிகள் மிகுந்து காணப்படும் ஆறு என்று குறிப்பிட்டு, காவிரி நதியின் நீர் வளத்தினை சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார்.

பொழிப்புரை:

இறைவனாகிய சிவபெருமான் அமர்ந்து உறையும் சண்பை என்றும், அழகு வாய்ந்த புறவம் என்றும், பிரமனூர் என்றும், தேவர்களின் தலைவனாகிய இந்திரன் வந்து சேர்ந்து இறைவனை வழிபட்ட வேணுபுரம் என்றும், குறைவற்ற புகழினை உடைய புகலி என்றும், வெங்குரு என்றும், தோணிபுரம் என்றும், நற்குணங்கள் நிறைந்த மாந்தர்கள் உறையும் பூந்தராய் என்றும், ஆற்றில் அணைகள் மிகுந்த நல்ல சிரபுரம் என்றும், சிறப்புகள் வாய்ந்தகாழி என்றும், என்றும் வளரும் புகழினை உடைய கொச்சைவயம் என்றும், கழுமலம் என்றும் அழைக்கப்படும் சீர்காழி ஊரானது, உடலில் ஒளியேதும் இன்றி முடிகள் பறிக்கப்பட்டு மொட்டைத் தலையோடு திரியும் கீழ்த்தன்மை வாய்ந்த சமணர்களும் புத்தர்களும் தனது (சிவபெருமானது) தன்மையை அறியமுடியாமல் இருக்கும் சிவபெருமான் உறையும் ஊராகும்.

பாடல் 12

அம்மான் சேர் கழுமலம் மாச் சிரபுரம் வெங்குருக் கொச்சைபுறவம் அஞ்சீர்

மெய்ம்மானத்து ஒண் புகலி மிகு காழி தோணிபுரம் தேவர்கோனூர்

அம்மான் மன்னுயர் சண்பை தராய் அயனூர் வழிமுடக்கு மாவின்பாச்சல்

தம்மான் என்று ஒன்றிய ஞான சம்பந்தன் தமிழ் கற்போர் தக்கோர்"தாமே

விளக்கம்:

பெருமான் உறையும் தலங்களின் பெயர்களும் பெருமானின் திருநாமங்கள் போன்று புனிதமான மந்திரங்கள் என்று கருதப்படுவதால், தலத்தின் பெயர்களை பலமுறை திரும்பத் திரும்பச் சொல்வது மந்திர ஜெபம் செய்வதற்கு ஒப்பாகும். அதனால் தான் திருஞான சம்பந்தரும் இந்த பதிகத்தை ஓதுவோர் தவம் செய்தவராவர் என்று பதிகத்தின் கடைக்காப்புப் பாடலில் குறிப்பால் உணர்த்துகின்றார். இறைவனைக் குறித்து தவம் செய்வோர் தாமே அவனது அருளினை பெறுவதற்கு தகுதியானவர்கள். மா=பெருமை, செல்வம்; அஞ்சீர்=அம்+சீர், அழகும் சிறப்பும் வாய்ந்த; மானம்= பெருமை; மெய்ம்மானம்=உண்மையான பெருமை; முடக்கு=மாறி மாறிப் பாயும்;

பொழிப்புரை:

தாய் போன்று கருணை உள்ளத்துடன் அருள் புரியும் தலைவனாகிய பெருமான் சென்று சேர்ந்து உறையும் கழுமலம் என்றும், செல்வமும் பெருமையும் உடைய சிரபுரம் என்றும், வெங்குரு என்றும், கொச்சைவயம் என்றும், அழகும் சிறப்பும் சேர்ந்ததால் நிலையான பெருமையுடன் மிளிரும் புகலி என்றும், சிறப்புகள் மிகுந்த காழி என்றும், தோணிபுரம் என்றும், தேவர்களின் தலைவனாகிய இந்திரன் வழிபட்ட வேணுபுரம் என்றும், இறைவனாகிய பெருமான் நிலையாக தங்குவதால் உயர்ந்த புகழினை உடைய சண்பை என்றும், பூந்தராய் என்றும், பிரமபுரம் என்றும், சீர்காழி தலத்தின் பன்னிரண்டு பெயர்களையும் குறிப்பிட்டு, மாறி மாறி குதித்து பாய்ந்து ஓடும் பசுவின் பாய்ச்சல் வழி போன்ற அமைப்பினில், கோமூத்திரி அமைப்பில் அந்தாதியாக, தனது இறைவன் சிவபெருமான் என்ற உணர்வுடன் ஒன்றி ஞானசம்பந்தன் பாடிய இந்த தமிழ் மாலையை ஓதும் அடியார்கள், புகழுக்கும் இறைவனின் கருணைக்கும் தகுந்தவர்களாக விளங்குவார்கள். 

முடிவுரை:

சீர்காழி நகரின் பன்னிரண்டு பெயர்களையே திரும்ப திரும்ப உணர்த்தும் பாடல்கள் கொண்ட பதிகமாக இருப்பினும், பெருமானின் சிறப்பையும், தல வரலாற்றையும், தலத்தின் சிறப்பையும் இடையிடையே புகுத்தி அழகிய தமிழில், கோமூத்திரி அந்தாதி எனப்படும் புதிய வகையில், ஞானசம்பந்தர் அமைத்துள்ள இந்த பதிகத்தினை, மந்திரமாக பாவித்து ஓதி இறைவனின் கருணைக்கு தகுதி படைத்தவர்களாக நாமும் மாறுவோமாக.🙏🙇‍♂️🙏

இப்பதிவிற்கு உதவிய நூல்கள்:

1. நால்வர் வரலாறு : பேராசிரியர் கா.சுப்ரமணியம் பிள்ளை.
2. பன்னிரு திருமுறைகள்: பேராசிரியர் வ.த.இராமசுப்பிரமணியம்.
3. வித்வான் முத்து. ச. மாணிக்கவாசக முதலியார், வி.ச.குருசாமி தேசிகன்.
http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?Song_idField=20740&limitPerPage=1&padhi=074&sortBy=&sortOrder=DESC&startLimit=0&thiru=2
4. தமிழ் விந்தை கோமுத்திரி: சா.நாகராஜன்.
5. என். வெங்கடேஸ்வரன்
(damalvenkateswaran@gmail.com
https://vaaramorupathigam.wordpress.com/vaaramorupathigam/2nd-thirumurai/2-074-poomaganoor-puththelukku/)
6.http://www.tamilvu.org/courses/diploma/a021/a0214/html/a02146l3.htm
7..  மேலும், ஒரே கருத்துக்களை கொண்டு
பல்வேறு வலைதளங்களில் பல்வேறு ஆசிரியர்கள் தொகுத்த இலக்கிய கட்டுரைகளில் காணப்பெற்றவைகளின் சுருக்கம் இப்பதிவு.

8. இது ஒரு அறிமுகப் பதிவே.  மூலநூல்களையும், கட்டுரைகளையும் கற்றுணர்ந்து கொள்வதும் அவசியம்.

நன்றி.

என்றும் அன்புடன்

சுப்ராம் அருணாசலம்

காரைக்கால்.

🔱🕉️🙏🙇‍♂️🙏🙇‍♂️🙏🙇‍♂️🙏🙇‍♂️🙏🙇‍♂️🙏🕉️🔱

No comments:

Post a Comment

KERALAYATRA2024பகுதி - 5- வைக்கம் - (எர்னாகுளம்)பதிவு - 25 - #சுப்ராம்ஆலயதரிசனம் #சுப்ராம்ஆலயதரிசனம் 13.8.2024 #பயணஅனுபவக்குறிப்புகள்🕊️29. வைக்கம் சிவன் கோவில்(Vaikom Temple):

#KERALAYATRA2024 பகுதி - 5- வைக்கம் - (எர்னாகுளம்) பதிவு - 25 - #சுப்ராம்ஆலயதரிசனம்  #சுப்ராம்ஆலயதரிசனம் 13.8.2024  #பயணஅனுபவக்குறிப்புகள்🕊...