Friday, December 30, 2022

பயண_அனுபவக்_குறிப்புகள்🕊️#மகாராஷ்ட்ரா#திரயம்பகேஸ்வரர் ஜோதிர்லிங்கம்14/15/10.2022. பதிவு....1

#பயண_அனுபவக்_குறிப்புகள்🕊️
#மகாராஷ்ட்ரா
#திரயம்பகேஸ்வரர் ஜோதிர்லிங்கம்
14/15/10.2022. 
பதிவு....1
🛕திரியம்பகேசுவரம் என்னும் திரியம்பகேசுவரர் திருக்கோயில், (Trimbakeshwar Shiva Temple) 

🛕திரயம்பகேஸ்வரர் சிவன் ஆலயம், பாரதத்தில் உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில், நாசிக் மாவட்டத்தில், திரியம்பக் என்னும் நகரில் உள்ளது. இது தொன்மையான சிவன் கோயில் ஆகும். 

🛕இது பன்னிரண்டு ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்று. 

🏵️ அமைவிடம்: 

🕉️நாசிக் நகரில் இருந்து 28 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. மற்றும் தானேவிலிருந்து 157 கி.மீ தூரம் உள்ளது. நாசிக் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து 39 கி.மீ. தூரத்தில் உள்ளது. 

🕉️🏔️ கோதாவரியின் மூன்று மூலங்கள் பிரம்மகிரி மலையிலிருந்து தோன்றின.

🕉️பிரமகிரி மலை சுமார் 3000 அடி உயரமுள்ளது. இதன் அடிவாரத்தில்தான் திரியம்பகேஷ்வர் ஆலயம் உள்ளது. 

🕉️இந்த ஆலயம், பிரம்மகிரி, நீலகிரி, மற்றும் காலகிரி என்ற மூன்று மலைகளுக்கு இடையில் அமைந்துள்ளது. 

🕉️கோதாவிரி நதிக் கரையில் உள்ளது. 
சிறப்புகள்: 

🛐வழிபட்டவர்கள் : பிரம்மன் விஷ்ணு ருத்திரன் ஆகிய மும்மூர்த்திகள், கௌதம முனிவர் மற்றும் பலர்.       

🛐படைக்கும் தெய்வம் பிரம்மன், காக்கும் தெய்வம் திருமால், அழிக்கும் தெய்வம் ருத்திரன் ஆகிய மூன்று மூர்த்திகளும் படைத்து காத்து அழித்து மூன்று தொழிலும் புரியும் கடவுளான பரமேசுவரனை ஒன்றாக வந்து பூசை செய்து வழிபட்டதால் திரியம்பகேசுவரம் எனப்பட்டது. 

🛐மும்மூர்த்திகளுக்கு அருள் புரிந்த ஈசனுக்கு திரியம்பகேசுவரர் என்று அருள் நாமம். 

🛐கோடி லிங்கார்ச்சனை செய்து பூஜித்த கௌதம முனிவருக்கு அருள் புரிந்த கங்காதரர் திருமுடியிலுள்ள கங்கை நீரைத் தெளித்துக் கோதாவிரியை உற்பத்தி செய்து அருளியதால் திரியம்பகேசுவரருக்கு கௌதமேசுவரர் என்று திருநாமம். 

🛐பகீரதன், கௌதமர் முதலியவர்களின் வாழ்க்கை அவர்கள் வாழ்ந்த காலத்தில் மட்டும் அல்லாமல் தொடர்ந்து யுகம் யுகமாக மக்கள் எல்லோருக்கும் பயன்படும் மகத்தான தொண்டினால் பொது நலம் காத்து சமுதாயம் முழுவதையும் சிறப்பாக்கும் சீரிய வாழ்க்கையாக விளங்கியது. 

🛐ஸ்கந்தபுராணம், பத்மபுராணம் மற்றும் ஜோதிர்லிங்க ஸ்லோகம் இவற்றில், இத்தலத்தின் பெருமைகள் கூறப்பட்டுள்ளது. 

🛐கெளதம முனிவர், கோரக்கநாதர், மற்றும் தியானேஷ்வர் முதலிய முனிவர்கள் இத்தலத்தில் வாழ்ந்து பல அற்புதங்கள் செய்துள்ளனர்.

ஆலய அமைப்பு : 

🛕தற்போதுள்ள ஆலயம், மூன்றாவது பெஷாவ் பாலாஜி பைஜிராவ் (1740 - 1761) என்பவரால் கட்டப்பட்டுள்ளது. இதன் பிறகு அகல்யாபாய் ஹோல்கர் 1789 ல் புனரமைப்பு செய்தார்கள். ஆலயம் கிழக்கு நோக்கிய கருவரை அமைப்பு. 

🛕ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. வடக்குப் புறத்தில் ஆலயம் உள்ள சாலையில் பொதுக்கடைகள் உள்ள கடைத்தெரு இருக்கிறது. 

🛕கிழக்கு புறம் வாசல் வழியில் பொது தரிசனம் வழி உள்ளது. வழியில் காலனிகள், மற்றும் பொருள்கள் வைக்கத் தனி இடம் உள்ளது.

🛕ஆலயம் உள்ளே செல்ல வடக்கு பக்கம் வாசல் பகுதியும் உள்ளது. இதை வெளியேறும் வழியாகவும், ஆலய சிப்பந்திகள் உள்ளே செல்லும் தனி வழியாகவும், பாதுகாவலர்கள் அலுவலக அறையுடன் உள்ளது. 

🛕ஆலயம் தென்புறம் ஒரு பெரிய ஏரி (குளம்) ஒன்றும் உள்ளது. 

🛕ஆலயம் வட மேற்கு பகுதியில் 500 மீட்டர் தூரத்தில் புராதானமான, Kushavarta Kund மற்றும், Shri Ganga Godawari Temple ம் அமைந்துள்ளன. 

🛕அர்ச்சகர்கள் தவிர வேறு யாரும் கர்பகிருகத்திற்குள் நுழைய முடியாது. பெரும்பாலான வட நாட்டுக் கோயில்கள் வேத விதிப்படி பிராணப் பிரதிஷ்டை மட்டுமே செய்யப்பட்ட காரணத்தால் காலையில் பக்தர்கள் எல்லோரும் பூ, நீர், மற்றும் பிற பூசைப் பொருட்களுடன் சென்று தாங்களே தொட்டு வழிபட முடியும். ஆனால் திரியம்பகேசுவரமும் குஜராத்தில் உள்ள சோமநாதர் திருக்கோயிலும் ஆகம விதிப்படி அமைந்த கோயில்கள், ஆதலால் சுத்தமாக தூய்மையாக மடியாக உள்ள, பூசை முறை தெரிந்த அர்ச்சகர்கள் மட்டுமே இறைவனைத் தீண்டிப் பூஜிக்க முடியும். ஒரிசா உட்பட வடநாட்டுக் கோயில்களுக்குத் தென்னாட்டுக் கோயில்கள் போன்று இராஜ கோபுரங்கள் இல்லை. 

🛕பல வடநாட்டுக் கோயில்கள் எல்லாமே தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில் போன்ற அமைப்பு உள்ளவையே. 

🛕தற்போது கிழக்குப் பகுதியில், ஆலயம் உள்ளே, புதியதாக, பக்தர்கள் தரிசிக்க q வரிசை Hall 3 அமைக்கப்பட்டு, அவைகளில், பக்தர்களுக்கு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. 

🛕கிழக்குப் புறத்தில், ஆலயம் முன்பு நுழைவு மண்டபம் பழமையான கல்வேலைப்பாடுகளுடன் அமைந்துள்ளது. மண்டப வாயில் கருங்கல் நிலையால் செய்யப்பட்டு மிக அழகாக உள்ளது. 

🛕முழு கருங்கல் கோயிலும் அதன் அழகிய கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலைக்கு பெயர் பெற்றது. 

🛕சிற்ப வேலைப் பாடுகள் உடைய தூண்களும் மண்டபங்களும் கொண்டு கருங்கல்லால் ஆன திரியம்பகேசுவரர் திருக் கோயில் தென்னாட்டு ஆகம விதிப்படி அமைந்த கோயில். 

🛕ஆலயக் கருவறை முன்மண்டபத்தில் அழகிய உயரமான கற்சிற்பங்கள் அமைந்துள்ளது. 

🛕நந்தி மண்டபம் : கருவரையின் கிழக்குப் புறத்தில் உள்ள நந்தி மண்டபத்தில், அழகிய உயரமான மிக அழகிய வெள்ளை நிற பளிங்குக்கல் நந்தி அருமையான கலை நயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. நந்தியின் மேல் சிற்ப அற்புதங்கள் வியக்கவைக்கும். 

🛕கருவறையின் கூரையே விமானம் கோபுரம் போன்று மேலே உயர்ந்து செல்கின்றது. 

🛕இராஜகோபுரம் கிடையாது. கருவரை மேல் நீண்ட உயரமான கோபுரம் முழுவதும் கற்றளியால் (கருப்பு வண்ணத்தில்) மிக நேர்த்தியாகவும், அற்புதமாகவும், அமைக்கப்பட்டுள்ளது. கிழக்கு, தெற்கு மற்றும் வடக்கு நோக்கிய 3 முகமண்டபங்கள், ஒரு பெரிய மகாமண்டபம், மற்றும் கருவரையுடன் இணைந்து அமைந்துள்ளது. 

கருவரை.. 
♻️லிங்கம் இருக்கவேண்டிய இடத்தில் உரல் போன்று பள்ளமாக உள்ளது. இந்தப் பள்ளத்தில் மும்மூர்த்திகளைக் குறிக்கும் மூன்று சிறு லிங்கங்கள் உள்ளன. 
♻️ இவற்றை பிரம்மா, விஷ்ணு, உருத்திரனாக கருதுகின்றனர். 
♻️மூவருக்கும் அருள் புரிந்த மும்மூர்த்தி நாயகன் எழுந்தருளியுள்ள கருவறை தாழ்வாக உள்ளது. 
♻️மேலேயுள்ள மண்டபத்திலிருந்து தரிசனம் செய்ய வேண்டும். 
♻️மும்மூர்த்தி பிரதிஷ்டை செய்து வழிபட்ட ஆவுடையார் உரல் போல் நடுவே பள்ளமாக உள்ளது. 
♻️மூவரும் குளம் உண்டாக்கித் தாமரை மலர்களால் சிவ பரம்பொருளை அர்ச்சித்து வழிபட்டனர். 
♻️மும்மூர்த்திகள் அர்ச்சனை செய்த தாமரை மொட்டுகளின் அடையாளம் இதில் அமைந்துள்ளது.   

♻️நாள்தோறும் இந்த ஆவுடையார் குழிமேல் ஒருமுகம் கொண்ட வெள்ளிக்கவசமோ அல்லது மூன்றுமுகம் கொண்ட கவசமோ சாத்தப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது. சிறப்பு நாட்களில் ஐந்து முகத் தங்கக் கவசம் அணிவிக்கப்படுகிறது.
♻️மேலும், வைரம் மரகதம் மற்றும் பல விலையுயர்ந்த கற்களை கொண்ட பாண்டவர் காலத்தில் செய்யப்பட்ட கிரீடம் ஒவ்வொரு திங்கள்கிழமைகளிலும், மாலையில் (4-5 PM) காணலாம்.

🛕கருவரை உட்புறம் சதுரமாக இருந்தாலும், வெளிப்புறம் பல கோணங்களைக் கொண்டுள்ளது. 

🛕ஆலயம் முழுதும் பல்வேறு அழகிய அற்புத சிற்ப வேலைகள் கொண்டுள்ளது. 

🛕ஆலய கருவரைச் சுற்று சுவரில் உள்ள பைரவர், விஷ்ணு, மகிஷாசுரமர்த்தினி சிலைகள் மிகவும் அற்புதம். பல்வேறு மிருகங்கள், குறிப்பாக யானைகள் சிலைகள் சிறிய அமைப்பாக இருந்தாலும் மிகவும் கலை நயத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. 

🛕கோமுகம், அருகில் கல்வேலைப்பாடுகள் மிகச் சிறப்பாக உள்ளது. 

🛕ஆலயத்தின் உள் பகுதியில் தென்மேற்கு மூலையில் தீர்த்தக்குளம் ஒன்று கருங்கற்கள் கட்டுமானத்தில் பாதுகாப்புடன் பராமரிக்கப்பட்டு வருகிறது. 

🛕இந்த தீர்த்தம் அமிர்தவர்ஷினி என்று அழைக்கப்படுகிறது. பில்வ தீர்த்தம், விசுவநாதர் தீர்த்தம், முகுந்ததீர்த்தம் என்று 3 வித தீர்த்தங்கள் அடங்கியது. 

🛕இந்த திரயம்பகேஷ்வர் ஆலயம் திரயம்பகேஷ்வர் ஆலய டிரஷ்ட்டால் நிர்வாகம் செய்யப்படுகிறது. 

#பயனஅனுபவக்குறிப்புகள்🕊️ 

🌸நாங்கள் 14.10.2022 அன்று காலையில், மகாராஷ்ட்ராவில் மும்பை அருகில் உள்ள, மும்பை செம்பூர் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயம், தரிசித்துவிட்டு வழியில் எங்கள் சுற்றுலா ஏற்பாட்டாளர்களால், தயாரிக்கப்பட்ட மதிய உணவு எடுத்துக் கொண்டோம். மாலை 5 மணி அளவில் திரிம்பாக் வந்து சேர்ந்தோம். 

🌸நாங்கள் தங்குவதற்கு ஸ்ரீ கஜானன் மகாராஜ் நிறுவனம், என்ற பொது அறக்கட்டளை சார்ந்த விடுதியில் அறைகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. தனியாக சமையல் கூடம் மற்றும் உணவு உண்ணும் கூடம் உள்ளது. அறைகள் சுத்தமாகவும், கட்டுப்பாடுகளுடனும் இருந்தன. 

🌸மிகப்பெரிய வளாகம். மிகத் தூய்மையாகவும், புனிதமாகவும் பராமரிக்கப்பட்டு வருகிறது.

🌸தனித்தனிக் கட்டிடங்கள். ஒரு பெரிய ஆலயம் ஸ்ரீ கஜானன் மகாராஜ் சுவாமிக்கு கட்டப்பட்டுள்ளது. 

🌸தூய்மையும், பக்தியும், கட்டுப்பாட்டுடன் பின்பற்ற வைக்கப்பட்டுள்ளது. சிறந்த பராமரிப்புடன் அமைந்துள்ளன. 

🌸இங்கு வந்து பொருட்களை வைத்து விட்டு, இங்கிருந்து, 1 கி.மீ. தூரத்தில் உள்ள திரயம்பகேஸ்வரர் ஆலயம், மற்றும் கெளதம முனிவரால் அமைக்கப்பட்ட கோதாவரி நதிநீர் தீர்த்தக்கட்டம் சென்றோம். இந்த வளாகத்தின் வாசலில் Auto பிடித்தும் செல்லலாம். நாங்கள் நடந்து சென்றோம். 

🌸சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் ஒரு முறையும், 15.03.2021 ல் ஒரு முறையும் திரயம்பகேஸ்வரர் ஆலயம் சென்று, தரிசனம் செய்த பாக்கியம் பெற்றிருக்கிறேன். 

🌸இது எமக்கு மூன்றாவது முறையாக சந்தர்ப்பம் இறையருளால் வாய்ந்துள்ளது. 

🌸ஜோதிர்லிங்க ஆலயத்திற்கு வட மேற்கு பகுதியில் 500 மீட்டர் தூரத்தில் புராதானமான, Kushavarta Kund மற்றும், Shri Ganga Godawari Temple ம் அமைந்துள்ள, குஷாவர்த்தா தீர்த்த குண்டம்..(Kushavarta Kund) மற்றும் ஸ்ரீ கங்கா கெளரி ஆலயமும், அருகில் உள்ள சிவாலயமும் சென்றோம். 

🌸நாங்கள் 14.10.2022 அன்று மாலை 5.30 மணி அளவில் இந்த தீர்த்த குண்டம் சென்றோம். 

🌸நாங்கள் ஏற்கனவே வந்த போது, இங்கு நீராடி பின் திரயம்பகேஸ்வரரை தரிசித்தோம். 

🌸14.10.2022 அன்று தீர்த்த குண்டம் முழு நீரையும் வெளியேற்றி, குளம் முழுவதையும் தூய்மை பணிசெய்து கொண்டிருந்தார்கள். எனவே, குளத்தை ஒரு முறை சுற்றிவிட்டு அருகில் உள்ள ஆலயங்களை தரிசித்து விட்டு, திரயம்பகேஸ்வரர் ஜோதிர் லிங்கம் ஆலயம் சென்று தரிசனம் செய்தோம். 

🌸நாங்கள் சென்றிருந்த நாளில் ஊரிலும், ஆலயங்களிலும், மக்கள் கூட்டம் மிகக் குறைவு. இதனால், எந்தவித பரபரப்புமின்றி ஆலயம், தரிசனம் செய்ய முடிந்தது. 

🌸இதன் பிறகு, வடக்கு பிரகாரத்தை ஒட்டியுள்ள கடைத்தெரு பகுதியில் சிலர் பொருட்கள் வாங்கினார்கள். இந்த சாலையில், ஒரு அழகான சிவாஜி மகராஜ் சிலை அமைத்துள்ளனர்.

🌸பொதுவாகவே, மகாராஷ்ட்ரா பகுதி முழுவதும், எல்லாமுக்கிய இடங்களிலும், பாரதத்தின் ஒப்பற்ற வீரரான சிவாஜி மகாராஜா அவர்களின் சிலையை வைத்து, அவரைப் போற்றும் வகையில் நன்றியும், மரியாதையும் தருவது, நமக்கும் பெருமையாகவும், இம்மக்களின் அளவற்ற தேச உணர்வும் பிரமிக்கவைக்கிறது. 

🌸பிறகு, நாங்கள் தங்கியிருந்த, ஸ்ரீ கஜானன் மகாராஜ் கட்டிட வளாகம் சென்றோம். அருகில் Auto கிடைக்கிறது. நாங்கள் நடந்தே இருப்பிட வளாகம் வந்து அடைந்தோம்.

🌸வளாகத்தில் உள்ள ஸ்ரீ கஜானன் மகாராஜ் ஆலயம் உட்பட அனைத்து இடங்களையும் பார்த்து விட்டு, எங்களுக்காக சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் சமைத்து வைத்திருந்த உணவுகளை உண்டு, எங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த அறைகளில் தங்கிக்கொண்டோம். 

🌸14.10.2022 அன்று இரவே குஷாவர்த்தா தீர்த்த குண்டம் முழுதும், தூய்மை செய்யப்பட்டு, பூசை செய்து புதிய நீர் விட்டிருந்தார்கள். 

🌸எனவே,15.10.2022 அன்று விடியற்காலையில் எழுந்து, மீண்டும் இந்த தீர்த்தக்குளத்தில் நீராடி, மீண்டும் ஒரு முறை ஜோதிர்லிங்க ஆலயம் சென்று தரிசித்தோம். 

🚍15.10.2022 காலை உணவு முடித்துக் கொண்டு நாசிக் புறப்பட்டோம். 

கோதாவரி / குஷாவர்த்தா தீர்த்த குண்டம்..
(Kushavarta Kund) 

🏞️ஜோதிர்லிங்க ஆலயத்தின் அருகில் வடமேற்கில், இந்தப் புனிதநீர்தீர்த்த குளம் உள்ளது; இது, அன்னியர்கள் படையெடுப்பால், சிதலமடைந்துவிட்டிருந்தது. இதை இந்தூர் ராஜா (Shrimant Sardar Raosaheb Parnerkar who was the Fadnavis of Indore State) புனரமைப்பு செய்துள்ளார். தற்போதுள்ள ஆலயம் பேஷ்வா பாலாதி பாஜிராவ் என்பவர் புணரமைத்ததாக குறிப்புகள் உள்ளது.

🏞️இந்த ஆலயத்தின், புனித குளம் 92 அடி அகலமும் 98 அடி நீளம் உள்ளதாக அமைந்துள்ளது. 

🏞️குளத்தில் அழகிய நீண்ட கருங்கல் படிகள். முழு சுற்றில் நீண்ட பிரகார மண்டபம். 

🏞️குளத்தின் கிழக்குப் பகுதியில் புனித ஸ்தல விருட்சம். தென்புறம் ஒரு சிறிய நேர்த்தியாக வடிவமைப்புடன், முழுவதும் கற்றளியான ஒரு ஆலயம். கருவரையின் உட்புறம் சற்று ஆழத்தில் ஒரு சிறிய சிவலிங்கம் அமைந்துள்ளது. வழிபாட்டில் உள்ளது. 

🏞️வடக்குப்புறத்தில் கங்கா கோதாவரி ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்திலேயே, டிரஸ்ட் அலுவலகம் இணைந்துள்ளது. நடுவில், கிழக்குப் பார்த்து கங்கா மாதா, கோதாவரி மாதா சிறிய சிலைகள் உள்ளது. இந்த ஆலயம், மண்டப அமைப்பு. 

🏞️குளக்கரை பிரகாரம் முழுவதும், கங்காதேவி, ஜலேஸ்வரர், ராமேஸ்வரர், கெளதமேஸ்வரர், கேதாரநாதர், ராமர், கிருஷ்னர், பரசுராமர், மற்றும் லெட்சுமிநாராயணர் கடவுளர்கள் சிற்பங்கள். 

🏞️குளக்கரை பிரகாரம் முழுவதும் பிரார்த்தனை வழிபாடுகள் செய்யப்படுகின்றன. மேலும் சில மகான்கள், புனிதர்கள் சமாதிகளும் அருகில் உள்ளது. 

🏞️நீராடிய பின், பிரகார மண்டபத்தில் உடைமாற்றிக் கொள்கிறார்கள். பூசைகளும் செய்து வழிபடுகிறார்கள். தர்பனம், முதலிய சடங்குகள், பிரார்த்தனைகளும் இந்த வளாகத்தில் செய்கிறார்கள்.

⚛️கோதாவரி /குஷாவர்த்தா தீர்த்த குண்டம்..(Kushavarta Kund) தீர்த்த புராண வரலாறு : 

🌼முந்தைய ஊழிக் காலத்திய மும்மூர்த்திகள் போன்றே இந்த ஊழிக் காலத்து மும்மூர்த்திகள் பரபிரும்மத்தை வழிபட்டு வரம் பெற்ற திரியம்பகேசுவரத்தில் கௌதம முனிவர் நாள்தோறும் புனிதக் குளத்தில் நீராடித் திரியம்பகேசுவரரை வழிபட்டும் வேள்விகள் புரிந்தும் தவம் செய்தும் தூய வாழ்வு வாழ்ந்தார். 

🌼கௌத்தம் (கோ+உத்தம்) என்றால் பசுவே சிறந்தது என்று பொருள். கன்று ஈனும் தாய்ப் பசுவை வலம் வந்து அகல்யையைத் திருமணம் செய்து கொண்ட முனிவர் கௌத்தமர் ஆனார். இது தமிழில் கௌதமர் என்று ஆயிற்று.  

🌼நாட்டில் மழையின்றி வறட்சி உண்டாகி நீர் நிலைகள் வறண்ட போதும் கௌதம முனிவரின் ஆசிரமத்திலும் திரியம்பகேஸ்வரத்திலும் நீர் வற்றாமல் இருந்ததால் முனிவர்கள் பலரும் அங்கு குடியேறினர். 

🌼ஆசிரமத்தில் மட்டும், நீர் நிறைந்திருந்தது. அனைத்து மகரிஷிகளும் தீர்த்தம் எடுத்து அனுஷ்டானம் செய்தது மட்டுமல்லாமல் அனைவருக்கும் அன்ன ஆகாரமும் கிடைத்தது.  

🏵️இவர் பக்தியை சோதிக்க எண்ணிய தேவர்கள் எல்லாம் சேர்ந்து, ஒரு பசு மாட்டை இவர் தோட்டத்தில் மேயவிடுகிறார்கள். ஸ்வாமியின் நிவேதனத்திற்காக போடப்பட்டிருக்கிற அந்த விசேஷமான தானியங்களை பசுமாடு சாப்பிடுகிறது. கௌதம மகரிஷி, கீழே இருக்கும் ஒரு குஷஸ் (தர்பை) எறிந்து விரட்டினார். மேலே பட்டதும் பசுமாடு கீழே விழுந்து இறந்தது. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். இதனால் ஏற்பட்ட கோஹத்தி தோஷத்தினால், அனைத்து கலைகளையும் இழந்தார். ரிஷிகள் இவர் ஆசிரமத்தில் உணவருந்த மறுத்தனர். 

🌼கௌதமர், மற்ற ரிஷிகளிடம் பாவத்திலிருந்து மீள வழியை காட்டுமாறு வேண்ட, பிரம்மகிரியை 11 முறை பிரதக்ஷணம் பண்ணி, கங்கையைக் கொண்டு வந்து ஏழு கோடி பார்த்திபலிங்கத்தை பூஜை செய்ய வேண்டும் என்றனர். 

🌼அவ்வாறே, கெளதம முனிவரும் பிரம்மகிரி மலையில் பல ஆண்டுகள் கடும் தவம் செய்தார். 11 முறை பிரம்மகிரியை பிரதக்ஷணம் செய்தார். 7 கோடி பார்த்திபலிங்கம் (மண்ணினால் செய்யப்பட்ட லிங்கம்) பிடித்து, மஹாமந்திரங்களால் சிவலிங்கங்களை பிரதிஷ்டை பண்ணுகிறார். ஸ்வாமி அனுக்கிரஹம் செய்கிறார். கோஹத்தி நிவர்த்தி ஆனது. 

🌼இருப்பினும், கங்காஸ்நானம் செய்யணுமே. ஆனால் கங்கை சிவனை விட்டுப் பிரிய தயாரில்லை. சிவன் பிரம்மகிரியின் உச்சியில் "தாண்டவநிருத்யா" ஆடி தன் ஜடாவை தட்டினார். அஞ்சிய கங்கை, பிரம்மகிரியில் தோன்றினாள். கௌதமர் அவளை புகழ்ந்தாலும், மலையின் பல்வேறு இடங்களில் தோன்றித் தோன்றி மறைந்தாள். கௌதமரால் நீரில் குளிக்க முடியவில்லை. அவை கங்காதுவார், வராஹ தீர்த்தம், ராம லக்ஷ்மண தீர்த்தம், கங்கா சாகர் தீர்த்தம் என்று பல வேறு தீர்த்தங்களை உருவாக்கி கொண்டிருந்ததால், 'கௌதமர் ஒரு மந்திரித்த தர்பையால் (குஷஸ்) நதியை சூழ கட்டளையிட்டார். அந்த ஓட்டம் அங்கேயே நின்றதால் "குஷாவர்த்தா" என்று அழைக்கப்படுகிறது. 

🌼இப்படித்தான் கங்காதேவி பிரம்மகிரியிலிருந்து உத்பவமாகி, கௌதம தீர்த்தத்தில் விழுந்து, கர்ப்ப கிரகத்தில் போய் பிரசன்னமாகி ஸ்வாமியை பூஜை பண்ணி வெளியே வருகிறாள். அதனால் இவளுக்கு கோதாவரி என்கிற திருநாமம். கெளதமர் தீர்த்தமாடி ஈஸ்வரரை வழிபட்டு சாபம் நீங்கி அருள் பெற்றார். 

🌼கௌதமரின் பெயராலே கௌதமி என்றும், கோதாவரி எனும் திருநாமத்தோடு நதி உற்பத்தியாகி, பாரத தேசத்தின் 2வது நீளமான பெரு நதியாக உருவாயிற்று. 
🌼இங்கு, 12 வருடங்களுக்கு ஒரு முறை, குருபகவான் சிம்ம ராசியில் பிரவேசிக்கக்கூடிய காலத்தில், கும்பமேளா சிறப்பாக நடைபெறுகிறது. 

🛕அருகில் உள்ள ஆலயங்கள்:🛕

🏔️நிலாம்பிகா / தத்தாத்ரதேயர் / மதம்பா ஆலயம் : 

நீல்மலை என்ற மலையின் மேல் உள்ள ஆலயத்தில் பரசுராமரர் தவம் இருந்த இடம். இந்த இடத்தில் ஸ்ரீ நீலாம்பிகை, தத்தாத்ரேயர், மதம்பா முனிவர்கள் உள்ள ஆலயம் உள்ளது. 

🏔️அஞ்சனகிரி:
திரயம்பகேஷ்வரரிலிருந்து சுமார் 7 கி.மீ.தூரத்தில் உள்ள மலையில் தான் ஸ்ரீஅனுமார் பிறந்ததாக நம்புகிறார்கள்.
அந்த மலை அஞ்சனகிரி என்று அழைக்கிறார்கள். தனிப்பாதை உள்ளது. மலையின் மீது சிறிய ஆலயம் உள்ளது. 

- தகவல்கள்..சில ... வலைதளங்களிலிருந்தும்....  
நன்றி🙏 

🛐பயணங்கள் தொடரும்.... 
நன்றி🙇🏼‍♂️🙏 

#என்றும்அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
14/15.10.2022
#பயண_அனுபவக்_குறிப்புகள் 🕊️
#ஜோதிர்லிங்கதரிசனம்2022
#ஜோதிர்லிங்கதரிசனம்
#மகாராஷ்ட்ரா
#திரயம்பகேஷ்வரர் #திரயம்பகேஸ்வரர்.
மேலும் படங்கள்
திரயம்பகேஸ்வரர் 15.10.2022

பதிவு:3 மேலும் படங்கள்
https://m.facebook.com/story.php?story_fbid=8641205009288013&id=100001957991710

பதிவு ..2. படங்கள்

https://m.facebook.com/story.php?story_fbid=8641098475965333&id=100001957991710

No comments:

Post a Comment

KERALAYATRA2024பகுதி - 5- வைக்கம் - (எர்னாகுளம்)பதிவு - 25 - #சுப்ராம்ஆலயதரிசனம் #சுப்ராம்ஆலயதரிசனம் 13.8.2024 #பயணஅனுபவக்குறிப்புகள்🕊️29. வைக்கம் சிவன் கோவில்(Vaikom Temple):

#KERALAYATRA2024 பகுதி - 5- வைக்கம் - (எர்னாகுளம்) பதிவு - 25 - #சுப்ராம்ஆலயதரிசனம்  #சுப்ராம்ஆலயதரிசனம் 13.8.2024  #பயணஅனுபவக்குறிப்புகள்🕊...