Monday, June 22, 2020

#திருமுறைக்காட்சி: #சம்பந்தர்அமுதம் பகுதி : ஒன்று மனதில் வந்த காட்சி பதிகம் 1.118

#திருமுறைக்காட்சி:
#சம்பந்தர்அமுதம்
பகுதி : ஒன்று

மனதில் வந்த காட்சி

ஊரடங்கு வேளையிலே
வேலை ஒன்றுமில்லை வேதனையில் வெளியில் சென்றேன்.

சாலை எங்கும் சுட்டெரிக்கும்
சூரியனின் சுடு வெப்பம்
தாகமும் வேட்கையும்
தானேதான் வந்து நிற்கும்.

வேட்கையெல்லாம் தீர்த்திடுவோம்
வேதனையும் மாற்றிடுவோம்
என்று கூறி என் அருகில்
வந்து நின்றார்   அயலார் தான்.

சற்றே தான் மதி மயங்கி
பின்சென்றேன்   இருந்தாலும்
சந்தேகம் வந்ததுமே
நீர் எங்கே அது எனக்கு முதல்
காட்டிடுவீர் என்றவுடன்

சாலை நடுவினிலே அழைத்து சென்று
தூரத்தே கை காட்டி பார் அங்கே நீரதுவே
எனப் பகர்ந்தார்.

கதிரவனின் கடும் வெப்பம்
கண்டு கண்டு புவியெல்லாம்
வெந்து நிற்கும் உருகி ஓடும்
நீரோடை போல அதுநீண்டு நிற்கும்
கானல் நீர்

குடம் குடமாய்  நீர் மொண்டிடலாம் கொண்டு வந்தால் நன்றாக
 நீர் குளிர் பெறலாம் இதுவே தாகம் தீர்க்க எளிய வழிஎன்றுரைத்தார்.

அவர் குறைமதிகண்டு இவ்வாறே இவர் ஞானமுமே பெற்றுய்ய வழி உரைப்பார்
வேதனை தீர்த்திடும் வழியென்றே கூறி
போகாத பாதையும் காட்டிடுவார்.

 இவர் பின் செல்வார் எவர் அவர்
 மதியிழந்த மூடரென உணர்ந்து
அக்கணமே தெளிவு பெற்றேன் நானும்.

இது நம் திருஞானசம்பந்தர் அருளிய
தேவாரப் பாடல் ஒன்றெடுத்து சிந்தித்தப்போது என் மனதில் வந்த
காட்சியிது.

அந்தப் பாடல்:

- முதல் திருமுறை 
- பதிகம் 118 - பாடல் 10.
- தலம்: திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்)

சடம் கொண்ட சாத்திரத்தார் சாக்கியர் சமண்குண்டர்
மடம் கொண்ட விரும்பியராய் மயங்கியோர் பேய்த்தேர்ப்பின்
குடம் கொண்டு நீர்க்குச் செல்வார் போதுமின் குஞ்சரத்தின்
படம் கொண்ட போர்வையினான் பருப்பதம் பரவுதுமே.

சடம் கொண்ட சாத்திரம் - பொருளற்ற உரை
பேய்த்தேர் - கானல் நீர்
குஞ்சரம் - யானை
பொருள் :
அறிவு சார்ந்த பொருள்களைப் புகலாத சாக்கியர் சமணர் சொற் சாத்திரங்களை விரும்பி பேதையராய் மயங்கி கானல்நீர் போன்று தோன்றும் காட்சியில் பதிந்து யாரும் செல்ல மாட்டார்கள்.    பருப்பதம் பரவும் அடியவர்கள் நன்மையடைவார்.

என்றும் அன்புடன்
சுப்ராம் அருணாசலம்

No comments:

Post a Comment

KERALAYATRA2024பகுதி - 3 - திருவஞ்சைக்களம் அருகில் உள்ள ஆலயங்கள்பதிவு - 15.#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️11.08.2024 /குலசேகரபுரம்.18திருகுலசேகரபுரம் ஸ்ரீ கிருஷ்ண சுவாமி கோவில்,

#KERALAYATRA2024 பகுதி - 3 - திருவஞ்சைக்களம் அருகில் உள்ள ஆலயங்கள் பதிவு - 15. #பயணஅனுபவக்குறிப்புகள்🕊️ 11.08.2024 / குலசேகரபுரம். 18 திருக...