Monday, June 22, 2020

திருமுறைகாட்சி #சம்பந்தர்அமுதம் காட்சி - 6

#திருமுறைகாட்சி
 #சம்பந்தர்அமுதம்
காட்சி - 6
(முதலாம் திருமுறை
பதிகம்: 78 பாடல். 3.)
🙏🛐🔱🐾🕉️👣🙇🔯🙏✡️🙇🛐🕉️🔱🙏
'அடுத்தாத்து அம்புஜத்தைப் பார்த்தேளா... ...'

என்ற ஒரு ஒரு பிரபல பாடல்

அடுத்த வீட்டு சமாச்சாரங்களை எட்டிப் பார்த்து பலவித உணர்வுகளை ஏற்படுத்தி அல்லது ஏற்படுத்திக் கொண்டு அல்லல்படுவது மனிதர்களுக்கு வழக்கம்.
காலங்காலமாய் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இது பற்றிய ஒரு கனவன் மனைவி சம்பவம் இப்பாடலில் வரும்.

நம் மனிதர்களில் தம் வீட்டு பிரச்சனைகளை விட இது போல அடுத்த வீட்டு பிரச்சனைகளில் அதிகம் ஈடுபாடு கொள்வர் பலர் உள்ளனர்

அதுவும் அடுத்த இடத்தில் நடக்கும் சண்டை என்றால்... ரொம்ப முக்கியமான வேலையைக் கூட விட்டுவிட்டு வேடிக்கைப் பார்க்க நினைக்கும்.

நம்மால் சமாதானப் படுத்த முடியாது என்று தெரிந்தும் வீனே மூக்கை நுழைப்பார்கள் சிலர்.

இப்படி ஒரு சண்டை காட்சியும் அதை வேடிக்கைப் பார்ப்பவர்கள் யார் என்றும்
திருமுறைப் பாடல் ஒன்றில் வரும் இது பற்றிய காட்சியில் பார்ப்போம்.

நம்முடைய பக்தி இலக்கியங்களில் பக்தி மட்டுமல்லாது, ஏராளமான வாழ்வியல் யதார்த்தங்கள், தமிழ் மொழியின் இலக்கண மான்புகளும் ஏராளமாகப் புதைந்துள்ளது.  அவற்றை கண்டுணர்ந்து மக்களிடம் பரவ செய்ய வேண்டும் என்ற விருப்பத்தின் காரணத்தால் இந்த சிறு முயற்சி.

🙏🛐🔱🐾🕉️👣🙇🔯🙏✡️🙇🛐🕉️🔱🙏
இது மனிதர்கள் பற்றியது அல்ல.

மீன்கள் பற்றியது.  மீன்களில் பல வகை உண்டு. சேற்றில் வளரும் கயல், வாளை, முதலிய பல்வேறு வகைகள் உண்டு.
கயல் சற்று சாது, வாளை சற்று முரட்டுத்தனம் உடையது.  சேறு பகுதியில் குதித்து விளையாடுகிறது. கயலும், வாளையும் சேர்ந்து காணப்பட்டாலும், அவை ஒன்றுக்கு ஒன்று முட்டி மோதி போர் செய்து கொண்டிருக்கிறது.

இதன் அருகில்
ஒரு ஆண் குரங்கும் ஒரு பெண் குரங்கும் கூடி உற்று நோக்கி இந்த மீன்களின் சண்டையை மிக ஆர்வத்துடன்  அதன் போக்கை வேடிக்கை பார்ப்பதற்கு அங்கே
கூடியிருந்தது.

இதோ அந்த தேவார பாடல் பற்றிய குறிப்பு.

🙏🛐🔱🐾🕉️👣🙇🔯🙏✡️🙇🛐🕉️🔱🙏
தமிழ் ஞானசம்பந்தர் திருவிடைச்சுரம் (திருவடி சூலம்) என்ற தொண்டை நாட்டுத் தலத்தை அடைந்து அவ்வூரின் சிறப்பு பற்றியும், அங்குள்ள இறைவரைப் பற்றியும் ஒரு பதிகம் பாடுகிறார். பத்துப் பாடல்களில் ஐந்து வகையான,
மருதம், முல்லை, பாலை, குறிஞ்சி, நெய்தல் நிலச் சிறப்புக்கைளயும் வடித்துள்ளார்

காலம் : 7ம் நூற்றாண்டு
இடம் : திருவிடைச்சுரம் (திருவடி சூலம்)
சுவாமி : ஞான புரீஸ்வரர்
அம்பிகை : இமய மடக்கொடியம்மை.
தேவாரம் : முதலாம் திருமுறை
பதிகம்: 78 பாடல். 3.
பாடல் :
ஆற்றையும் ஏற்றதோர்  அவிர்சடை யுடையர்
        அழகினை அருளுவர்  குழகு அலது அறியார்

கூற்றுயிர் செகுப்பதோர் கொடுமையை உடையர்
         நடுஇருள் ஆடுவர் கொன்றையந்தாரார்

சேற்றயன் மிளிர்வன கயல்இள வாளை
        செருச்செய ஓர்ப்பன செம்முக மந்தி

ஏற்றையோடு  உழிதரும் எழில்திகழ்  சாரல்       
       இடைச்சுர  மேவிய இவர்வணம்  என்னே.

பொருள் :
கங்கையை முடியில் வைத்த இளம் அழகர். கூற்றுவனை உதைத்தவர், நள்ளிருளில் ஆடுபவர், கொன்றை சூடியவர் இறைவர்.
இவர் வசிக்கும் எழில் மிக்க இடைச்சுரத்தில்

சேற்றில் கயல்களும், வாளை மீன்களும் முட்டிக்கொண்டு போர் செய்வதைப் போன்ற காட்சியை ஆண்குரங்கும் பெண் குரங்கும் கூர்ந்து நோக்கும்

 என்று விளக்கி எழில் திகழ் சாரலில் இடைச்சுரத்தில் மேவிய ஈசனார் வண்ணம்தான் என்னே! என்று வினவுகின்றார். விளக்குகிறார்.
மந்தி - பெண்குரங்கு
ஏற்றை - ஆண்குரங்கு.

இதை மருத நிலச் சிறப்பாக கூறுவர்.
🙏🛐🔱🐾🕉️👣🙇🔯🙏✡️🙇🛐🕉️🔱🙏
இந்தக் காலத்திலும் அடுத்தவர்களைப் பார்த்து, அவர்கள் செயல்களை உற்று நோக்கும் குனம் மனிதர்களிடையேயும்
பரவியுள்ளது.

இது நல்லதா தீமையானதா என்பதை அவரவர்களே தீர்மானித்துக் கொள்வதே சரியானது. இல்லையா.

யாதார்த்த வாழ்வியல் காட்சிகளை பக்தி இலக்கியத்தில் வைத்து அமைத்துள்ள ஆளுடையபிள்ளையின் சிறப்பையும் சிந்திக்க வேண்டும்.

வணக்கம்,
நன்றி.
🙏🛐🔱🐾🕉️👣🙇🔯🙏✡️🙇🛐🕉️🔱🙏
என்றும் அன்புடன்.
சுப்ராம் அருணாசலம்
காரைக்கால்.
🙏🛐🔱🐾🕉️👣🙇🔯🙏✡️🙇🛐🕉️🔱🙏

#திருமுறைக்காட்சி: #சேக்கிழார்அமுதம் பகுதி - 5.

#திருமுறைக்காட்சி:
#சேக்கிழார்அமுதம்
பகுதி - 5.
(30. காரைக்காலம்மையார் புராணம்
- பாடல் 1774.)

#அன்னையர் தினம்:

வரும்இவள் நம்மைப் பேணும் அம்மை காண்   உமையே  மற்றிப்

பெருமைசேர்  வடிவம் வேண்டிப்  பெற்றனள்  என்று   பின்றை

அருகுவந் தணைய  நோக்கி  அம்மையே
என்னுஞ் செம்மை

ஒரு மொழி உலகம்  எல்லாம்  உய்யவே 
அருளிச் செய்தார்.

(எம்பெருமான், "உமையே வரும் இவள் நம்மைப் பேணும் அம்மையே ஆவாள்.
இந்தப் பேய் வடிவத்தை நம்மை வேண்டிப் பெற்றாள்"
நெருங்கி வந்த அம்மையைப் பார்த்து,
"நம் அம்மையே" என்ற செம்மை தரும்
ஒப்பிலா ஒரு சொல்லை உலகம் எல்லாம் உய்யும் பொருட்டு அருளினார்.
- தெய்வச்சேக்கிழார்
- திருத்தொண்டர் புராணம்
- முதற் காண்டம்
- 5. திருநின்ற சருக்கம்
- 30. காரைக்காலம்மையார் புராணம்
- பாடல் 1774.
               (அன்னையர் தினம்)
நன்றியுடன்
சுப்ராம் அருணாசலம்

#திருமுறைகாட்சி: #சம்பந்தர்அமுதம் பகுதி - 4 (தேவாரம் : 3:80:07)

#திருமுறைகாட்சி:
#சம்பந்தர்அமுதம்
பகுதி - 4
(தேவாரம் : 3:80:07)

7ம் நூற்றாண்டில் ஒரு லேசர் ஒளிவிளக்கா!!!

தேவார பதிகத்தில் ஒரு காட்சி:

திருவீழிமிழலை:

7ம் நூற்றாண்டு

அந்நகர்  ஆகாயத்தின் மேலே எங்கும் கரும்புகை கவிழ்ந்து  மனம் கலந்து மிக இருள்  சூழ்ந்து அடர்ந்து பரவியிருந்தது.

அவ்விருளில் கதிர் விட்ட ஒளி போல் விளக்கு ஒன்று எரிவது போன்ற ஒளி காட்சி ஒன்றும் அற்புதமாக இருந்தது.

(இக்காலத்தில் லேசர் ஒளி போலக் கொள்வோம்)

 அந்தப்புகை எங்கிருந்து வருகிறது என்று நெருங்கி பார்க்கும் போது
வேத மந்திரங்கள் ஓதி வேதியர்கள் செய்யும் யாக வேள்வியிலிருந்து வரும் புகை என்று புரிந்தது.

சரி நீண்ட விளக்கொளி எப்படி என்று ஆராய்ந்தால்

அம்மாநகரில் உள்ள உயர்ந்த மாடமாளிகையில் பதித்து வைக்கப்பட்ட இரத்தினம் முதலிய கற்களின் மிளிரும் ஒளியானது இந்த புகை இருளைப் போக்கி வீசுகிறது.

 இந்த ஒளிக்கதிர் தான்  தழலில் ஏற்றிய விளக்குப் போன்று தோன்றுகிறது.

இந்த அரிய காட்சியைக் கண்ட அங்கு வரும் ஞானசம்பந்த பெருமான் தம் பதிகத்தில் குறித்துள்ள பாடல் இது:

மந்திர நன்  மாமறையி னோடு வளர்
வேள்விமிசை  மிக்கபுகை போய்

அந்தர விசும்பணவி   அற்புதம்
எனப்படரும்   ஆழியிருள்வாய்

மந்தரநன்    மாளிகை    நிலாவுமணி
நீடு கதிர்  விட்ட  ஒளி போய்

வெந்தழல் விளக்கு என   விரும்பினர்
திருந்து பதி   வீழிநகரே.

- தேவாரம்  பதிகம் (338)
- மூன்றாம் திருமுறை
- பதிகம்: 80 - திருவீழிமிழலை
- பாடல் - 7.

பொருள்.
இத்திருப்பாட்டு திருவீழிமிழலை நகரின் அக்கால  சிறப்பை உணர்த்தியது.
தெய்வீக அருள் நலமும் செல்வ நலமும் இணைந்து இப்பதி விளங்கிற்று என்று உணரலாம்.
திருஞானசம்பந்தர் : கி.பி. 609 - 642 வரையுள்ள காலத்தில் 16 ஆண்டுகள் நிலவுலகில் வாழ்ந்திருந்தார் என்று வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
🙏🛐🙏🛐🙏🛐🙏🛐🙏🛐🙏🛐🙏🛐

திருவீழிமிழலை - தலம் பற்றிய சில குறிப்புகள்:

நாச்சியார் கோவில் - பூந்தோட்டம் செல்லும் பாதையில் உள்ள தேவார மூவரால் பாடல் பெற்ற திருத்தலம்.

திருமால் தனது கண்ணை இடந்து  அருச்சித்துச் சக்கராயுதம் பெற்ற திருத்தலம்.
வீழிநாதர்
அம்பாள் கார்த்தியாயினியாக அவதரித்து தவமிருந்து மணம் கொண்ட கல்யாணசுந்தரர்
விண்ணிலிருந்து திருமாலால்
கொண்டுவரப்பட்ட விண்ணிழி விமானம் தாங்கிய கருவரை
திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் படிக்காசு பெற்று அமுது அளித்த பதியிது.
🙏🙏🙏🙏🙏
சிந்தனை ஆக்கம்:
என்றும் அன்புடன்
சுப்ராம் அருணாசலம்
காரைக்கால்
 🙏🛐🙏🛐🙏🛐🙏🛐🙏🛐🙏🛐🙏🛐🙏

#திருமுறைக்காட்சி: #சம்பந்தர்அமுதம் தேவாரம்:02:184:04 பகுதி: 3

#திருமுறைக்காட்சி:
#சம்பந்தர்அமுதம்
தேவாரம்:02:184:04
பகுதி: 3
திருவெண்காடு:
குளிர்ந்த முல்லை நிலம். அதில்
ஓர் அழகிய மலர்ச்சோலையில்
ஒரு சிறிய நீர் நிலை. அருகில் கடல் முத்துக்கள்.

மடல் அவிழ்த்த தாழையின் நிழல் அந்த நீர்நிலையில் மீது விழுகின்றது.
அதில் வாழும் கெண்டை மீன்
தாழையின் நிழலை தம்மைக் கொத்திச் செல்ல வந்த பறவைகள் என்று எண்ணி அஞ்சி மிக வேகமாக அருகில் உள்ள தாமரைப்பூவின் இடையில் சென்று ஒளிந்து கொள்கிறது.
அங்கு கிடக்கும் கடல் முத்துக்கள் 
மீன் செய்யும் இந்த செய்கையைக் கண்டு நகைக்கின்றது.

இவ்வரிய காட்சியைக் கண்ட அங்கு வந்த நமது ஞானப்பிள்ளையார் தமது பாடலை இவ்வாறு அமைக்கிறார்.

விட முண்ட மிடற்றண்ணல் வெண்காட்டின் தண்புறவின்

மடல் விண்ட முடத்தாழை  மலர் நிழலைக் குருகென்று

தடமண்டு துறைக்கெண்டை தாமரையின் பூ மறையக்

கடல் விண்ட கதிர் முத்த நகைகாட்டும்
காட்சியதே.

விளங்கு பொருள் :

மனதில் ஏற்படும் மன அயற்சி யன்றி உண்மையான அச்சம் ஒன்றுமில்லை என்று உணர்த்துகிறது

தன் புற = குளிர்ந்த முல்லைநிலம்
தடம் = குளம்

இயற்கையும் தமிழும் தேவாரப் பதிகத்தில் இணைந்த இந்த பாடல்

திருஞானசம்பந்தர் இயற்றியருளியது.

- தேவாரம் இரண்டாம் திருமுறை
- பதிகம் 184. திருவெண்காடு
- பாடல் - 4

சிந்தனையும் பகிர்வும்:
என்றும் அன்புடன்
சுப்ராம் அருணாசலம்

#திருமுறைக்காட்சி: #சம்பந்தர்அமுதம் பகுதி - 2

#திருமுறைக்காட்சி:
#சம்பந்தர்அமுதம்
பகுதி - 2
🙏🙏🙏🧘🛐🙏🙏🙏
அழகிய நீர் நிறைந்த சுனை ஒன்று அதில் சிறு சிறு பறவைகள் கூட்டம் கூடி  நிற்கும்.

அடுத்திருக்கும் மாஞ்சோலை அதில்
மாங்கனிகள் கொத்துக் கொத்தாய் தொங்கி நிற்கும் அதன் வழியெங்கும்
மலர் கொம்பில் மனம் வீசும் மலர்கள்

அது வழி சென்ற தவம் கொண்ட பக்தர் தம் பூசைக்கு ஏற்ற அம்மலர் கண்டார்.

நீண்ட அந்த மலர்க்கொம்பு வளைத்து அதன் தலை நிறைந்த மலர் பறித்து அம்மலர் கொம்பை விட்டுவிட அதுமீண்டு நிமிர்ந்து அங்கிருந்த மாஞ்சோலையில் கனிந்து நின்ற மாங்கனிகள் மேல் பட
அவை கவண் எறிகல் போல் அந்த சுனைக்கரையில் போய் வீழ,
அங்கிருந்த பறவைகள் அஞ்சி அகலும்.

இந்தக் காட்சியைக் கண்டு தம்தேவாரப்  பதிகத்தில் வைத்து அருளுரைத்தார்
நம் தமிழ்ஞானசம்பந்தர் :
🙏🙏🙏🧘🛐🙏🙏🙏
அப்பாடல்:
புவி முதல் ஐம் பூதமாய்ப் புலன் ஐந்தாய்
நிலன் ஐந்தாய்க்  கரண நான்காய்
அவையவை சேர் பயனுருவாய் அல்லவுரு
வாய்நின்றான் அமரும் கோயில்

தவ முயல்வோர் மலர் பறிப்பத் தாழ விடு
கொம்புதைப்பக் கொக்கின் காய்கள்
கவண் எறிகல் போல்சுனையிற் கரை சேரப்
புள்ளிரியும் கழுமலமே.
🙏🙏🙏🧘🛐🙏🙏🙏
கொக்கின் காய்கள்= மாங்காய்கள்
புள் இரியும்= பறவை அஞ்சி விலகும்

மேலும் சில பொருள் உரைகள்:
ஐம்பூதம் : நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம்
ஐம்புலன் : மெய், வாய் கண் மூக்கு செவி
ஐ நிலங்கள்: குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல், பாலை
அந்தக்கரணங்கள்: மனம், புத்தி, அகங்காரம், சித்தம்
🙏🙏🙏🧘🛐🙏🙏🙏
பொருள் குறிப்புரை :
ஐந்து பூதங்களாய், நிலங்களாய், கரணங்களாய், அவ்வவற்றின்  பயனாய் அரு உரு வாய் அல்லாதாய் நின்ற ஈசன் அமரும் கோவில்   கழுமலம் என்ற சீர்காழி தலமே.
🙏🙏🙏🧘🛐🙏🙏🙏
- தேவாரம் - முதல் திருமுறை
- பதிகம்: 129 - திருக்கழுமலம் (சீர்காழி)
- பாடல்: 7
🙏🙏🙏🧘🛐🙏🙏🙏
சிந்தனையாக்கம்:
என்றும் அன்புடன்
சுப்ராம் அருணாசலம்
காரைக்கால்
🙏🙏🙏🧘🛐🙏🙏🙏

#திருமுறைக்காட்சி: #சம்பந்தர்அமுதம் பகுதி : ஒன்று மனதில் வந்த காட்சி பதிகம் 1.118

#திருமுறைக்காட்சி:
#சம்பந்தர்அமுதம்
பகுதி : ஒன்று

மனதில் வந்த காட்சி

ஊரடங்கு வேளையிலே
வேலை ஒன்றுமில்லை வேதனையில் வெளியில் சென்றேன்.

சாலை எங்கும் சுட்டெரிக்கும்
சூரியனின் சுடு வெப்பம்
தாகமும் வேட்கையும்
தானேதான் வந்து நிற்கும்.

வேட்கையெல்லாம் தீர்த்திடுவோம்
வேதனையும் மாற்றிடுவோம்
என்று கூறி என் அருகில்
வந்து நின்றார்   அயலார் தான்.

சற்றே தான் மதி மயங்கி
பின்சென்றேன்   இருந்தாலும்
சந்தேகம் வந்ததுமே
நீர் எங்கே அது எனக்கு முதல்
காட்டிடுவீர் என்றவுடன்

சாலை நடுவினிலே அழைத்து சென்று
தூரத்தே கை காட்டி பார் அங்கே நீரதுவே
எனப் பகர்ந்தார்.

கதிரவனின் கடும் வெப்பம்
கண்டு கண்டு புவியெல்லாம்
வெந்து நிற்கும் உருகி ஓடும்
நீரோடை போல அதுநீண்டு நிற்கும்
கானல் நீர்

குடம் குடமாய்  நீர் மொண்டிடலாம் கொண்டு வந்தால் நன்றாக
 நீர் குளிர் பெறலாம் இதுவே தாகம் தீர்க்க எளிய வழிஎன்றுரைத்தார்.

அவர் குறைமதிகண்டு இவ்வாறே இவர் ஞானமுமே பெற்றுய்ய வழி உரைப்பார்
வேதனை தீர்த்திடும் வழியென்றே கூறி
போகாத பாதையும் காட்டிடுவார்.

 இவர் பின் செல்வார் எவர் அவர்
 மதியிழந்த மூடரென உணர்ந்து
அக்கணமே தெளிவு பெற்றேன் நானும்.

இது நம் திருஞானசம்பந்தர் அருளிய
தேவாரப் பாடல் ஒன்றெடுத்து சிந்தித்தப்போது என் மனதில் வந்த
காட்சியிது.

அந்தப் பாடல்:

- முதல் திருமுறை 
- பதிகம் 118 - பாடல் 10.
- தலம்: திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்)

சடம் கொண்ட சாத்திரத்தார் சாக்கியர் சமண்குண்டர்
மடம் கொண்ட விரும்பியராய் மயங்கியோர் பேய்த்தேர்ப்பின்
குடம் கொண்டு நீர்க்குச் செல்வார் போதுமின் குஞ்சரத்தின்
படம் கொண்ட போர்வையினான் பருப்பதம் பரவுதுமே.

சடம் கொண்ட சாத்திரம் - பொருளற்ற உரை
பேய்த்தேர் - கானல் நீர்
குஞ்சரம் - யானை
பொருள் :
அறிவு சார்ந்த பொருள்களைப் புகலாத சாக்கியர் சமணர் சொற் சாத்திரங்களை விரும்பி பேதையராய் மயங்கி கானல்நீர் போன்று தோன்றும் காட்சியில் பதிந்து யாரும் செல்ல மாட்டார்கள்.    பருப்பதம் பரவும் அடியவர்கள் நன்மையடைவார்.

என்றும் அன்புடன்
சுப்ராம் அருணாசலம்

திருமுறைசிந்தனைகள்: #சம்பந்தர்தூது: பகுதி - ஒன்று பதிகம் 1.60

#திருமுறைசிந்தனைகள்:
#சம்பந்தர்தூது:
பகுதி - ஒன்று
🙏🛐🙏🙏🛐🙏🙏🛐🙏🙏🛐🙏

தூது செல்ல ஒரு தோழி இல்லையென துயர் கொண்டாயோ தலைவி ...

இது ஒரு திரைப்படப் பாடல் வரிகள்.
இதில் ஒரு தலைவி, தன் தலைவனைக் நேரில் காண இயலாமல் தனிமையில் தவிக்கும் போது,  தலைவனை நினைத்து தான் வாடும் நிலையை அந்த தலைவனிடம் கூற ஒரு தோழி இல்லையே வருந்துகிறாள்.

நமக்கு விருப்பமானவர்கள் தொலைதூரத்தில் இருக்கும் நிலையில் அவர்களுடைய நினைவுகளால் வாடும் உள்ளம் நமக்கு விளக்கப்படுகிறது.

உலகம் முடங்கிக் கிடக்க, புலம் பெயர்ந்து வாழும் பலர் குடும்ப உறவுகளைப் பிரிந்து கால சூழலினால்  கருத்தை நேரில் பரிமாறிக் கொள்ளா முடியாத நிலை.  மனம் பிரிவு ஆற்றமையால் தன் எண்ணத்தை வெளிப்படுத்த முயலுகிறது.

இது ஒரு கவிதை அமைப்பு
ஒரு கலைஞன் தன் படைப்பை வெளிப்படுத்த 32 வகையான உத்திகளைக் கையாளுகிறான் என்று நற்றிணை என்னும் நூல் உரைக்கும்.
அதில் ஒன்றில்தான், அஃறிணைப் பொருள்களில் தன் எண்ணத்தை வைத்து தூது சென்று உரைக்கும் பாங்கு.

🙏🛐🙏🙏🛐🙏🙏🛐🙏🙏🛐🙏

இறைவனை தலைவனாகவும், ஆன்மாவை தலைவியாகவும் கொண்டு
தலைவனை எண்ணி தலைவி உருகி தான் காணும் பொருள்களிடம் தலைவனுக்கு தூது அமைத்து பாடுகிற அமைப்பில் உள்ள திருமுறை பாடல்களை எண்ணி சிந்திப்போம் வாருங்கள்.

பக்தி இலக்கியத்தின் முன்னோடியாக விளங்கும்  உவமையிலாக் கலைஞானம் உணர்வரிய மெய்ஞ்ஞானம்  தவமுதல்வராகிய திருஞானசம்பந்தர் தரும் பதிகங்களில் ஒன்றில் இந்தத் தூதுக் காட்சியைப் பார்க்கலாம்.
🙏🛐🙏🙏🛐🙏🙏🛐🙏🙏🛐🙏

முதலாம் திருமுறையில் வரும் 
60-வது பதிகம். தலம்: திருத்தோணிபுரம். (சீர்காழி பதியின் 12 பெயர்களில் ஒன்று)
வண் தரங்கப் புனற்கமல ... எனத் தொடங்கும் பதிக பாடல்கள் பற்றியது இது.

காழி வேந்தர், பல தலங்கள் சென்று தரிசித்து அற்புதங்கள் பல செய்து வருங்கால், பல நாட்கள் சென்றுவிட்டன.
தாம் அருள்பெற்ற தோணிப்பர் நினைவு வந்து விடுகிறது.
தம்மைத் தலைவியாகவும், தாம் வணங்கும் இறைவரை தலைவனாகவும் எண்ணுகிறர் பிரிவாற்றாமையில் வெளிப்படும் பாடல்.
🙏🛐🙏🙏🛐🙏🙏🛐🙏🙏🛐🙏

காட்சி - 1

தாம் இருக்கும் இடத்தில் ஒரு ஆண் வண்டு  தேனை உண்டு  தம் துணையுடன் மகிழ்ந்து இசைபாடி மகிழ்ந்திருக்கும் காட்சியைப் பார்த்து, அந்த வண்டுவிடம்  தான் இறைவனையே நினைத்து நினைத்து உருகி தவிக்கும் நிலையை தோனிபுரம் சென்று தம் தலைவனாகிய இறைவனிடம் பரிவோடு பகரருமாறு கூறுகிறார்.
🙏🛐🙏🙏🛐🙏🙏🛐🙏🙏🛐🙏

பாடல்-1

வண் தரங்கப் புனற் கமல
      மதுமாந்திப்  பெடையினோடும்
ஒண் தரங்க இசைபாடும்
    அளி  யரசே  ஒளிமதியத்
 துண்டர்   அங்கப் பூண்மார்பர்
      திருத் தோணி  புரத்துறையும்
பண்டரங்கர்க்கு என் நிலமை
      பரிந்து ஒரு கால் பகராயே.
      
                 - (திருமுறை 01.60.01).
தரங்கம்: அலை   அளி- வண்டு
🙏🛐🙏🙏🛐🙏🙏🛐🙏🙏🛐🙏

ஆன்மாக்கள் பெண் தன்மை உற்றதென்றும் அது கொழு கொம்பாகிய இறைவனைப் பற்றி நிற்றல் வேண்டும் என்ற உள்ளடக்கிய கருத்து இதில் உள்ளது என்பர் அறிஞர்.

முடங்கிய உலகத்தில்  உறவுகளை பிரிந்து வாடும் உள்ளங்கள்  அமைதி பெற வேண்டும் என்ற வேண்டுதலை இறைவனிடம் வைப்போம்.
இறையருள் பெறுவோம்.
நன்றி.

🙏🛐🙏🙏🛐🙏🙏🛐🙏🙏🛐🙏
சிந்தனையும் பகிர்வும்:
என்றும் அன்புடன்
சுப்ராம் அருணாசலம்
காரைக்கால்.
🙏🛐🙏🙏🛐🙏🙏🛐🙏🙏🛐🙏

Sunday, June 21, 2020

திருஎழுகூற்றிருக்கை முழு பாடல் பொருள் விளக்கப் பதிவு

திருமுறைகளில்_தமிழமுதம்
#சம்பந்தர்அமுதம்
#திருஎழுகூற்றிருக்கை
முழு பாடல்  பொருள் விளக்கப் பதிவு
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
பெரிய பதிவு
பக்தியும் தமிழ் ஆர்வமும் உள்ளவர்கள் தொடரலாம்...
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
💫கும்பகோணம் கும்பேஸ்வரர் ஆலயம், சாரங்கபாணி ஆலயம், சுவாமிமலை, மற்றும் பல ஆலயங்களில் பிரகாரத்தில் பளிங்கு கற்களில் அல்லது வண்ண ஓவியமாக ஒரு தேர் படம் அமைத்து இருப்பார்கள். அதில்  குறுக்கும் நெடுக்குமாக சிறுசிறு கட்டமாக அறைகள் வரைந்து அதில் சில வார்த்தைகளும் வரிசை வரிசையாய் எழுதி நடுவில் அம்மைப்பன் உருவம் அல்லது முருகன் உருவமும் கூட இருக்கும். (படம் இணைப்பு காண்க).

⚛️இது என்ன என்றும் இதன் விளக்கம் என்னவென்றும் அறிந்து கொள்ள முயன்ற போது, பலவித வியப்பான தகவல்கள் கிடைத்தது.

💥உலகத்தின் ஒப்பு உயர்வற்ற மொழியாகிய தமிழின் சிறப்பு விளங்கும் ஒரு அற்புத படைப்பு இது.

☸️இது ஒரு தெய்வீகப் பாடல் அமைப்பு.
#எண்ணலங்கரம் என்ற பாடல் அமைப்பை ஒட்டி அமைந்த கவி முறை. இதற்கு சித்திரக்கவி, ரத பந்தம், தேர்ப்பந்தம் என்று பெயர்.

💠உலகத்தின் வேறு எந்த மொழியிலும் இப்படிப்பட்ட சித்திர அமைப்புக் கவிதைப் பாடல்கள் இருப்பதாகத் தெரியவில்லை என்று மொழி அறிஞர்கள் மொழிகிறார்கள்.

🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
🔯இந்த அமைப்பு முறைக்கு
திருஎழுக்கூற்றிருக்கை என்று இலக்கணம் ஆய்ந்தோர் பெயர் அளித்துள்ளார்கள்.

🛐முதன்முதலாக இந்த வகைப்பாடல் அமைப்பு முறையை அருளியவர்.
மூன்று வயதில் ஞானப்பால் அருந்தி அருள் பெற்ற தமிழ் கடவுள் முருகன் அவதாரம் என்று அருணகிரிநாதரால் போற்றப்பட்ட தமிழ் ஞானசம்பந்தர் ஆவார்.

கருவிலே திரு அமையப் பெற்று, இறையருளால் ஞானப்பால் அருந்திய ஞானி, 'இவ்  வையம் வாழ யாம் வாழ'
ஏராளமான திருத்தலங்கள் சென்று தமிழ் பண்கள் அமைத்துப் பாடிய பதிகப் பாடல்கள் மிகப்பல.

அவற்றில் நமக்குக் கிடைத்தவற்றை மூன்று திருமுறைகளாகத் தொகுத்து அமைத்துள்ளர்  நம் முன்னோர்.
முதலாம் திருமுறையில் 136, இரண்டாம் திருமுறையில் 122, மூன்றாம் திருமுறையில் 125 ம் மேலும் 3 திருப்பதிகங்களும் தொகுக்கப்பட்டுள்ளது.
226 திருத்தலங்களில்  இவர் அருளிய  பதிகங்களின் எண்ணிக்கை மொத்தம் 386. இவற்றில் நமக்கு 4146 பாடல்கள் கிடைத்துள்ளன.

இசைத் தமிழால் ஈசனை வழிபட 23 தமிழ்ப் பண்களில் இப்பாடல்கள் விளங்குகிறது.

இவர் அமைத்த 23 தமிழ் பண்கள்:

நட்டபாடை,  தக்க ராகம், 
பழந்தக்க ராகம், தக்கேசி,  குறிஞ்சி,
வியாழக் குறிஞ்சி, மேகராகக் குறிஞ்சி, யாழ்மூரி, இந்தளம், சீகாமரம், காந்தாரம், பியந்தைக் காந்தாரம், நட்டராகம், செவ்வழி, காந்தார பஞ்சமம்,  கொல்லி,   கொல்லிக் கெளவாணம்,  கெளசிகம்,   பஞ்சமம்,   சாதாரி,  பழம்பஞ்சுரம், புறநீர்மை, அந்தாளிக் குறிஞ்சி ஆக 23 பண்கள்.

பாடல் வகையில்
வினாவுரை, திருவிராகம், திரு இயமகம், வெள்ளிப் பாட்டு, நாலடிமேல் வைப்பு, திருமுக்கால், திருப்பாசுரம்,
தனித்திருவிருக்குக்குறள், ஈரடிமேல்வைப்பு,  நாலடிமேல்வைப்பு, இன்னும் பிறவுமாம்.

🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
🔹திருஞானசம்பந்தப்பெருமான் தமிழில் பல புதிய இலக்கிய வடிவங்களைத் தோற்றுவித்தார்.

🔹திருஞானசம்பந்தர், பக்தி இலக்கியத்தை தமிழ்மொழியில் விளங்கச் செய்தவர்.

🔘இவரைப் பின்பற்றி திருமங்கையாழ்வர், அருணகிரிநாதர், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் முதலிய மிகச்சிலரே எழுகூற்றிருக்கையை அமைத்திருக்கின்றனர்.

🔱ஏழாம் நூற்றாண்டில், சாக்கியர்களையும், சமணர்களையும், பெளத்தர்களையும், தன்அருட்திறமையால் தமிழ்ப் பாடல்களில்வென்றவர்.

🎶திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடல்கள் பலவும் வழிபடுவதற்கும், பாடி மகிழ்வதற்கும்மட்டுமின்றி,
தமிழ்ச்சொல்லணி இயலுக்கும், இசைக்கும் மூலமாகத் திகழ்கின்றன.

🔰இவற்றை இலக்கண நூலார் மிறைக் கவிகள் சித்திரக் கவிகள் விருந்து வனப்பு என்று பலவாறு அழைக்கின்றனர்.

✳️திருஞானசம்பந்தர் இதனை விருந்தாய சொல்மாலை என்று தமது பதிகத்தில்குறித்துள்ளார்.
மொழிமாற்று, மாலைமாற்று... என இதில் பலவகை உண்டு.
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏

⚜️ நாம் திருஞான சம்பந்தரின் தேவாரத் திருமுறைப் பாடல்களில் கீழ்கண்ட தலைப்பில்

#சம்பந்தர்தூது:
🔹தூது அமைப்பில் உள்ள பாடல்

#எண்ணலங்காரம்  -

#ஏகபாதம்:
🔹நான்கு அடிகள் உள்ள பாடலில் ஒரே வரியையே மீண்டும் மீண்டும் வைத்துப் பாடுவது, ஆனால் ஒவ்வொரு அடியும் வேறு வேறு பொருள் தருவது.

#மடக்கணி:
🔹மடக்கு' என்பது வந்த சொல்லோ, சொற்றோடரோ மீண்டும் வந்து பொருள் வேறுபட்டு நிற்பதாகும். யமகம் என்றாலும் மடக்கு என்றாலும் ஒரு பொருளையே குறிக்கும். யமகம் என்பது வடசொல்.

# மொழிமாற்று:
🔹ஒரே அடியில் மாறியிருக்கின்ற சொற்களைப் பொருளுக்கேற்றவாறு மாற்றி அமைத்துக்கொள்ளுதல் மொழிமாற்று எனப்படும். இதனை இலக்கண நூலார் “மொழிமாற்றுப் பொருள்கோள்” என்பர்.

முதலிய யாப்பு வகைப் பாடல்களைப் பற்றி ஏற்கனவே சிந்தித்து வந்தோம்.*

மேலும்,

🔹திருவியமகம் ( ஒவ்வொரு இரண்டு அடிகளின் கடைசியில் ஒரே வார்த்தையை, வேறு வேறு அர்த்தம் தருமாறு பாடுவது) ,

🔼 சக்கரமாற்று (ஒருபாடலின் இறுதியில் சொன்ன பெயரை அடுத்த பாடலின் ஆரம்பத்தில் வைத்துப் பாடுவது),

🔸மாலைமாற்று (முன்னிருந்து பாடினாலும், பின்னிருந்து பாடினாலும் ஒரே வார்த்தை, ஒரே அர்த்தம் தருவது) ,

🎆இது போன்று ஏராளமான அமைப்பில் சம்பந்தர் பெருமான், பதிகங்களை அருளிச் செய்து இருக்கிறார்கள்.
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏

❇️ இந்த வகையில் நாம் இந்த பதிவுகளில் திருஎழுக்கூற்றிருக்கை என்ற அமைப்பில் உள்ள பாடல் பற்றி சிந்திப்போம்.

🎄திருஎழுக்கூற்றிருக்கை:

💥இவ்வகைப்பாடல்கள் இயற்றி அமைத்துப் பாடுவதற்குக் மிகக் கடினமானதாகும்.  ஞானம் இல்லாத கவிஞர்களால்  இயற்ற முடியாது.  மிறைகவி என்றும் கூறுவர்.

💠ஒப்பற்ற பக்தி இலக்கியங்களின் தொகுப்பான பன்னிரு திருமுறைகளில் திருக்கடைக்காப்பு என்னும் முதலாம் தேவாரத்தில்,
128 வது பதிகமாக உள்ளது.
திருப்பிரமபுரம் என்றும் சீர்காழி தலம் பற்றியது.
1382 வது பாடலாகும்.
47 அடிகளால் ஆன இதனைத்தினமும் பாராயணம் செய்து ஓதினால் திருஞானசம்பந்தர் அருளிய அனைத்தையும் ஓதிய பலனைத் தருவதாகும்.
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
🛡️ பாடல் அமைப்பு முறை, பொருள் விளக்கம், சிறப்பு பற்றி தொடர்ந்து சிந்திப்போம்.

📝 #திருஎழுக்கூற்றிருக்கை:

🛑அமைப்பு :

திரு + எழு + கூற்று + இருக்கை

பாடல்களின் உள்ள வார்த்தைகளில் உள்ள எண்களால் சுட்டப்படும்  அடுக்கில்
முதல் 7 வரை படிப்படியாக   
           ஒன்று, இரண்டு, ஒன்று,
                            1  2  1
ஒன்று, இரண்டு, மூன்று, இரண்டு, ஒன்று
                        1  2  3  2  1
என ஒன்று முதல் ஏழு வரையிலும் ஒவ்வொன்று ஏற்றியும், இறக்கியும் ஏழு கூறுகளிலும் எண்கள் இருக்க இயற்றப்படும் செய்யுள், எழு கூற்றிருக்கை ஆகும்.

கூறுகளாக அறைகளைக் கீறும்போது...

முதற்கூற்றில் மூன்று அறைகளும்
                       1  2  1
இரண்டாம் கூற்றில் ஐந்து அறைகளும்
                   1  2  3  2  1
மூன்றாம் கூற்றில் ஏழு அறைகளும்
                1  2  3  4  3  2  1
நான்காம் கூற்றில் ஒன்பது அறைகளும்
            1  2  3  4  5  4  3  2  1
ஐந்தாம் கூற்றில் பதினோரு அறைகளும் கீறி,
         1  2  3  4  5  6  5  4  3  2  1
ஆறாம் கூற்றில் பதிமூன்று அறைகள்
     1  2  3  4  5  6  7  6  5  4  3  2  1
அமைப்பர்.

🎎இவற்றை சித்திரக்கவி, ரதபந்தம் என்பர்.இது தேர் போன்ற அமைப்பும்

எண்களைக் கூட்டி பின் ஒவ்வொரு எண் அதிகமாகும்போதும் , மீண்டும் கீழிறங்கி, மேலே வந்து அடுத்த எண்ணைக் கூட்டிச் செல்லும். என ஏழு வரைச் சென்றதும் இது தேரின் மேலடுக்கு போல் ஆகிறது.

அதன் பின் ஒரு இடைத் தட்டு ,பீடம் பின்னர் மீண்டும் முன் சொன்ன வரிசையை அப்படியே திருப்பி
தேரின் கீழ் அடுக்காக அமைத்து இறுதியில் தொடங்கிய அதே எண்ணிலேயே முடிவடையும்.

✴️முடிவில் பாடல் அமைப்பு இப்படி இருக்க வேண்டும்.
           
                        o
                    1  2  1
                1  2  3  2  1
            1  2  3  4  3  2  1
        1  2  3  4  5  4  3  2  1
    1  2  3  4  5  6  5  4  3  2  1
1  2  3  4  5  6  7  6  5  4  3  2  1
             ⏫மேலடுக்கு
                    நடு பீடம்
                    கீழடுக்கு ⏬
1  2  3  4  5  6  7  6  5  4  3  2  1
    1  2  3  4  5  6  5  4  3  2  1
        1  2  3  4  5  4  3  2  1
            1  2  3  4  3  2  1
                1  2  3  2  1
                    1  2  1
                        o
       

🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
📔இனி இந்தப் பதிகப் பாடல் அமைந்துள்ள முறைமை பற்றி பார்க்கலாம்.

💠தேரின் மேல்பாகம்:

1️⃣மேல் அடுக்கு : ஒன்று:
                             1  2  1
☢️ பாடல் : (வரிகள்:1-2)

ஓர் உரு ஆயினை; மான் ஆங்காரத்து
ஈர் இயல்பு ஆய், ஒரு விண் முதல் பூதலம்


(1)ஓர் உரு வாயினை
      மான் ஆங்காரத்து

(2) ஈர் இயல்பு ஆய்

(1) ஒரு விண் முதல் பூதலம்

☣️ பொருள்:

(1) ஈசன், ஏகரூபனாய் இருந்து 5 தொழில் களுக்கும் அதிபதியாக விளங்குபவன்.

🔸ஐந்தொழில் : படைத்தல், காத்தல், அழித்தல்,  மறைத்தல், அருளுதல்
   என்ற ஐந்து தொழில்களை   
   செய்வதற்காக ஒரு உருவமாய்
   இருக்கிறார்

🔸ஆங்காரத்து= ஐந்தொழில் ஆற்ற

(2) சிவன், சக்தி எனும் இருவகை இயல்புடன் உயிர்களைப் பதியை நோக்கி சாரவும், மும்மலமும் நீங்கவும் அருள்புரிபவன்.

(1) விண்முதல் ஐம்பூதங்களையும் (படைத்தவன்)

🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏

2️⃣மேல்  அடுக்கு : இரண்டு :
                        1  2  3  2  1
☢️ பாடல்: (வரிகள்: 3 - 5)

ஒன்றிய இருசுடர் உம்பர்கள் பிறவும்
படைத்து, அளித்து, அழிப்ப, மும்மூர்த்திகள் ஆயினை;
இருவரோடு ஒருவன் ஆகி நின்றனை;

💠பாடல் அமைப்பு :
                         1  2  3  2  1
(1) ஒன்றிய

(2) இருசுடர் உம்பர்கள்,  பிறவும்
       படைத்து, அளித்து, அழிப்ப,

(3)  மும்மூர்த்திகள் ஆயினை

(2) இருவரோடு

(1) ஒருவன் ஆகி நின்றனை;

☣️ பொருள்:
(1)
ஐம்பூதங்களை அவற்றுக்குரிய செயல்பாடுகளை ஒழுங்காக செய்யுமாறு  செய்பவன் இறைவனே.

(2) இருசுடரான, சூரியன் சந்திரன், தேவர்கள்,  மற்ற உயிர்கள்
என்று அனைத்தையும் படைத்து, காத்து, அழிக்கும் முத்தொழிலும் செய்கிறார்.

🔸இருசுடர் = சூரியன் சந்திரன்
🔹உம்பர்கள்= தேவர்கள்
🔼பிறவும்= மற்ற உயிர்கள்

(3) மும்மூர்த்திகளாகிய பிரம்மா, விஷ்ணு, உருத்திரன் ஆகிய மூன்று மூர்த்திகள் ஆயினன்.

(2) பிரம்மா வும், திருமாலும் உடனாக்கியவன்.

(1) அதே நேரத்தில் ஒரே ரூபமாகவும் ஒப்பற்ற ஒருவனாய் ஆகிநின்றவன்.

🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏

3️⃣மேல் அடுக்கு : 3
                    (1-2-3-4-3-2-1)

☢️ பாடல்: (வரிகள்:6 - 9)

ஓர் ஆல் நீழல், ஒண் கழல் இரண்டும்
முப்பொழுது ஏத்திய நால்வர்க்கு ஒளிநெறி
காட்டினை; நாட்டம் மூன்றும் ஆகக் கோட்டினை;
இரு நதி அரவமோடு ஒருமதி சூடினை;

💠பாடல் அமைப்பு :
                         1  2  3  4  3  2  1

(1) ஓரால் நீழல் ஒண்கழல்
(2) இரண்டும்
(3) முப்பொழுது ஏத்திய
(4) நால்வருக்கு ஒளிநெறி காட்டினை 
            நாட்ட
(3) மூன்றாகக் கோட்டினை
(2) இருநதி  அரவமொடு
(1) ஒரு மதி சூடினை

☣️ பொருள்:

(1) இறைவன் ஆலமர நிழலில் வீற்று இருக்கிறார். திருக்கழல் - திருவடி

ஓர் + ஆல் + நிழல் = ஆலமரம் என்பதும் ஒரு குறியீடு தான். பரந்த நிழலைத்தருவது ஆலமரம். நமக்கு  நிழல் தரும் திருவடி அதுவே.

(2)இறைவனின் திருவடிகள் இரண்டையும் ஒன்றாக சொல்கிறார்.

(3) மூன்று வேளைகளிலும் தொழுத

(4) நான்கு சனகாதி முனிவர்களுக்கு, எல்லையில்லா பெருவாழ்வளித்தாய்.

(3) உயர்ந்த நெறியைச் சின்முத்திரை கொண்டு காட்டி, மும்மலங்களை அறுக்க,
உண்மைப் பொருளை உணர்த்துபவன்.

(இறைவனின் கண்கள்,எவ்வகை இருளையும் போக்குவதாய் ,  சூரியன், சந்திரன் மற்றும் நெருப்பாக இருக்கிறது.
⏺️நாட்டம் = கண்கள்   என்று பொருள் கூறுவர்)

(2) இரு நதி அரவமோடு கங்கையையும், பாம்பினையும் தலையில் வாய்த்திருக்கும் இறைவன்,

(1) தலையில் சந்திரனை சூடியவர்.

🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏

4️⃣மேல் அடுக்கு: 4
                  (1-2-3-4-5-4-3-2-1)

☢️ பாடல்: (வரிகள் - 10 -13)

ஒருதாள் ஈர் அயில் மூ இலைச் சூலம்,
நால்கால் மான்மறி, ஐந்தலை அரவம்,
ஏந்தினை; காய்ந்த நால்வாய் மும்மதத்து
இரு கோட்டு ஒருகரி ஈடுஅழித்து உரித்தனை
💠பாடல் அமைப்பு :
                  1  2  3  4  5  4  3  2  1
(1) ஒருதாள்
(2)  ஈரயின்
(3)  மூவிலைச் சூலம்,
(4)  நால்கால் மான்மறி
(5) ஐந்தலை அரவம் ஏந்திணை காய்ந்த

(4)  நால்வாய்
(3) மும்மதத்து
(2) இரு கோட்டு
(1) ஒரு கரி ஈடு அழித்து உரித்தனை.

☣️ பொருள் :

(1)  திருவடி
ஒருதாள்= தாள் (தண்டு) இறைவனின் திருவடி தாமரையை சுட்டுகிறது.

(2) வாள், மழு போன்ற கூர்மையான இரும்பு ஆயுதம் ஏந்தியவர்.

ஈராயின் = ஈர்க்கும் கூர்மையுடையவை.
ஈர் அயில்= வாள், மழு (கோடரி போன்ற) அயில்(இரும்பினால் ஆனது.

(3) திரி சூலம் ஏந்தியவர்

மூ இலைச் சூலம்= திரி சூலம்

(4)  நான்கு வேதங்களும் இறைவனின் கையில் இருக்கும் மானின் கால்களாக இருக்கின்றன.

நால்வாய்-தொங்குகின்ற வாய்.
நால்கால் மான்மறி= நான்கு வேதங்களும் இறைவனின் கையில் இருக்கும் மானின் கால்களாக இருக்கின்றன.
மறி= மான் குட்டி

(5)  பஞ்சாட்சரமாகிய ஐந்து தலைகளையும் உடைய நாகத்தை இறைவன் கழுத்தில் ஏந்தி இருக்கிறார்.

ஐந்தலை அரவம் ஏந்தினை= ஐந்து தலைகளையும் உடைய நாகத்தை இறைவன் கழுத்தில் ஏந்தி இருக்கிறார். ஐந்து தலைகளும் நமசிவாய என்னும் பஞ்சாட்சரத்தை சுட்டுகின்றன.

(4)  நீர் வற்றித் தொங்கும் வாய் உடைய
(3)  (மும்) மதம் பொருந்திய,
(2)   இரு தந்தங்களையுடைய,
(1)  ஒரு யானையை உரித்தது.

நால்வாய்-தொங்குகின்ற வாய்.

🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏

5️⃣மேல் அடுக்கு : 5
                (1-2-3-4-5-6-5-4-3-2-1)

☢️ பாடல் : (வரிகள்: 14-19...)

ஒரு தனு இருகால் வளைய வாங்கி,
முப்புரத்தோடு நானிலம் அஞ்சக்
கொன்று தலத்துறு அவுணரை அறுத்தனை;
ஐம்புலன்  நால்ஆம் அந்தக் கரணம்,
முக்குணம் இருவலி ஒருங்கிய வானோர்
ஏத்த நின்றனை; ... ... ....  ....   ....

💠பாடல் அமைப்பு :
                1-2-3-4-5-6-5-4-3-2-1
(1) ஒரு தனு
(2) இருகால் வளையவாங்கி,
(3) முப்புரத்தோடு
(4) நானிலம்
(5) அஞ்சக் கொன்று தலத்து உறு 
            அவுணரை
(6) அறுத்தனை
(5) ஐம்புலன்,
(4) நால் ஆம் அந்தக்கரணம்,
(3) முக்குணம்,
(2) இருவலி,
(1) ஒருங்கிய வானோர் ஏத்த நின்றனை

☣️ பொருள் :

(1)  மேருமலையை
(2) வில்லாகக் கொண்டு வளைய வாங்கி
(3) முப்புரங்களையும்
(4) உலகம்
(5) அஞ்சி வியக்குமாறு அழித்து
           அதிலிருந்த தீய அசுரர்களை
(6) அழித்தவர்.
(5) மெய், வாய், கண், மூக்கு, செவியாகிய 
           ஐம்புலன்களையும்,
(4) அந்தக் கரணங்கள் நான்கும்,
(3) முக்குணங்களாகிய (சாத்துவிகம்,
           ரஜோகுணம், தாமோ குணம் ஆகிய
           முக்குணங்களும்,
(2) இருவகையான (உள்/வெளி மூச்சு)
           காற்றும் ஒருங்கி
(1)  ஒன்றிய மனத்தினராய், மேவிய
           வானோர் ஏத்த நின்ற ஈசன்.

முதல் பாதி திரிபுரம் எரித்த வரலாற்றையும் (வெளிப்புறமாக), அடுத்தபாதி உட்புறமாக , எப்படி நம்மை வெற்றிகொள்ள வேண்டும் என்பதை சொல்கிறது இந்த அடிகள் .

ஐம்புலன்களை அடக்கி, மனம் , புத்தி, சித்தம், அகங்காரம்-    என்னும் நான்கு கூறுகளைக்கொண்ட அந்தக்கரணம் அடக்கி, முக்குணம்- சத்வம், தேஜஸ், தமோ குணங்கள், சுவாசத்தை ஒருங்கி ,மனதை ஒருநிலைப்படுத்திய தேவர்கள் ஏத்த நின்றனை- தேவர்கள் புகழ நின்றனை இறைவா.

🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏

6️⃣மேல் அடுக்கு : 6
             (1-2-3-4-5-6-7-6-5-4-3-2-1)

☢️ பாடல் : (வரிகள்: ...19- 31)

... ... ..... ....       ஒருங்கிய மனத்தோடு,
இரு பிறப்பு ஓர்ந்து, முப்பொழுது குறை முடித்து,
நான்மறை ஓதி, ஐவகை வேள்வி
அமைத்து, ஆரங்கம்முதல்எழுத் தோதி,
வரன்முறை பயின்றுஎழு வான்தனை வளர்க்கும்
பிரமபுரம் பேணினை;
அறுபதம் முரலும் வேணுபுரம் விரும்பினை;
இகலி அமைந்து உணர் புகலி அமர்ந்தனை;
பொங்குநால்கடல் சூழ் வெங்குரு விளங்கினை;
பாணி மூஉலகும் புதைய, மேல் மிதந்த
தோணிபுரத்து உறைந்தனை; தொலையா இருநிதி
வாய்ந்த பூந்தராய் ஏய்ந்தனை;
வரபுரம் என்றுஉணர் சிரபுரத்து உறைந்தனை;

💠பாடல் அமைப்பு :
              1  2  3  4  5  6  5  4  3  2  1

(1) ஒருங்கிய மனத்தோடு
(2) இரு பிறப்பு ஓர்ந்து
(3) முப்பொழுது குறை முடித்து
(4) நால்மறை ஓதி
(5) ஐவகை வேள்வி அமைத்து,
(6) ஆறு அங்கம் முதல் எழுத்து ஓதி, வரல்
            முறை பயின்று,
(7) எழுவான்தனை வளர்க்கும்
             பிரமபுரம் பேணினை
(6) அறுபதம் முரலும் வேணுபுரம் 
            விரும்பினை இகலிய
(5) அமைந்து உணர் புகலி அமர்ந்தனை
            பொங்கு
(4) நால்கடல் சூழ் வெங்குரு விளங்கினை
(3) மூஉலகும் புதைய, மேல் மிதந்த
            தோணிபுரத்து உறைந்தனை
(2) இருநிதி வாய்ந்த பூந்தராய்
            ஏய்ந்தனை
 (1) வரபுரம் ஒன்று உணர் சிரபுரத்து உறைந்தனை

☣️ பொருள் :

மேல் தட்டு 6: (1-2-3-4-5-6-7-6-5-4-3-2-1)
(1) மனதை ஒருநிலைப்படுத்தி ,

(2) அன்னையின் கருவில் ஒரு முறையும், பூணூல் அணியும்போது ஒரு முறையும் என அந்தணர்களுக்கு இப்பிறப்பு என்பதை சொல்கிறார் சம்பந்தர்.

 (3) மூன்று பொழுதும் முறையான கிரியைகளை செய்து (சந்தியா வந்தனம்)

(4) நான்கு வேதங்களாகிய
இருக்கு, யஜூர், சாமம், அதர்வணம் ஆகியவற்றை ஓதி,

(5) ஐவகை வேள்வியாகிய சிவபூசை, குருபூசை, மகேஸ்வர பூசை, பிராமண உபசரிப்பு, அதிதி உபசாரம், ஆகியன ஆற்றி,

(6)  ஷடங்கம் எனப்படும் வேதத்தின் ஆறு அங்கங்களாகிய  சந்தசு, கற்பம், வியாகரணம், சிட்சை, சோதிடம், நிருத்தி ஆகியவற்றின் பிரதானமான முதல் எழுத்தாகிய பிரணவத்தை ஓதியும்
எப்படி மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் என்ற சொல்முறை பயின்று

(7) அந்தனர்கள் வேள்வியில் வளர்க்கும் அக்கினி பிழம்பு எழும் சீர்காழி நகரில் விரும்பி இருப்பவர் இறைவன்.

(6) அறுபதம்(வண்டு) ரீங்காரமிடும் சீர்காழியை விரும்பினை

(5) நரகர்கள் தன்னைக் கொடியவன் என்று இகழும் பழி நீங்க யமன் வழிபட்ட சீர்காழி நகரில் அமர்ந்தவர்.

(4) பொங்கும் நால்கடல் சூழ் வெங்குரு நகரில் விளங்கும்

(3) மூஉலகும் புதைய, மேல் மிதந்த
தோணிபுரத்து உறைந்தனை-

(2) இருநிதி வாய்ந்த ந்தராய் ஏய்ந்தனை-சங்கநிதி,பதுமதி என்ற இருநிதிகளோடு பொருந்தியவராக இறைவன் இருக்கிறார்

 (1) அமுதம் பெற வந்த ஒரு அரக்கனின் சிரம் கொய்யப்பட்டு பின் வரம்பெற்ற சிரபுரம் சீர்காழியாம்.

🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏

 7️⃣ அடுக்கு : 7
              (1-2-3-4-5-6-7-6-5-4-3-2-1)

☢️ பாடல்: (வரிகள் - 32-42)

ஒருமலை யெடுத்த இருதிறல் அரக்கன்
விறல்கெடுத்து அருளினை; புறவம் புரிந்தனை;
முந்நீர்த் துயின்றோன், நான்முகன், அறியாப்
பண்பொடு நின்றனை; சண்பை அமர்ந்தனை;

ஐயுறும் அமணரும் அறுவகைத் தேரரும்
ஊழியும் உணராக் காழி அமர்ந்தனை;
எச்சன் ஏழ் இசையோன் கொச்சையை மெச்சினை;
ஆறுபதமும், ஐந்து அமர் கல்வியும்,
மறை முதல் நான்கும்,
மூன்று காலமும், தோன்ற நின்றனை;
இருமையின் ஒருமையும், ஒருமையின் பெருமையும்.

💠பாடல் அமைப்பு :
          1-2-3-4-5-6-7-6-5-4-3-2-1

(1) ஒருமலை எடுத்த

(2) இருதிறல் அரக்கன் விறல் கெடுத்து
          அருளினை புறவம் புரிந்தனை

(3)  முந்நீர்த் துயின்றோன்

(4) நான்முகன் அறியாப்பண்பொடு
           நின்றனை சண்பை அமர்ந்தனை

(5) ஐயுறும் அமணரும்

(6) அறுவகைத் தேரரும் ஊழியும்   
          உணராக் காழி அமர்ந்தனை எச்சன்

(7)  ஏழ் இசையோன் கொச்சையை
            மெச்சினை
(6) ஆறுபதமும்

(5) ஐந்து அமர் கல்வியும் மறைமுதல்

(4) நான்கும்

(3) மூன்று காலமும்தோன்ற நின்றனை

(2) இருமையின் ஒருமையும்

(1) ஒருமையின் பெருமையும்

☣️ பொருள்:

(1) இராவணன் இமய மலையை எடுத்தான்

 (2) வலிமை-பெருவலிமையுடைய அரக்கன் வெற்றியைக் கெடுத்து, நான் என்ற ஆணவத்தை அழித்து அருளினார்.
சிபி ராஜாவுக்கும், புறவுக்கும் முக்தி கிடைத்த புறவம் ஆகிய சீர்காழியில் இருப்பவர்.

(3) பாற்கடலில் உறங்கும் விஷ்ணு ,
(முந்நீர்த் துயின்றோன்- முந்நீர்(கடல்)
பாற்கடலில் உறங்கும் விஷ்ணு)பிரம்மன்
இவர்கள் அறியமுடியாத ஆற்றலைப் போற்றுகிறது.

(4) நான்கு மறைகளிலும் தோய்ந்தவன்.

(5) ஐந்து எழுத்தாகும் ஞானத்திலும் சிறப்பானவன்.

(6) சமணரும் தேரரும் உணராதவராய் காழியில் வீற்றிருப்பார்.

(7) ஏழ் இசையோன் கொச்சை என்ற காழியில் இருப்பாவர்.

(6) ஆறுபதமும்- ஆறு விதமான விழிப்புநிலைகளை இது குறிக்கிறது. ஆழ்ந்த உறக்கம், துரியம்,துரியாதீதம் முதலியன.

(5) ஐந்து அமர் கல்வியும்- அவர் காலத்தில் ஐந்து வகையான கல்வி ஞானத்தில் விளங்கியவர்.

(4) நான்கு மறைகளையும் அருளியவர்.

(3)கடந்த/நிகழ்எ/திர் காலம் என்ற முக்காலத்தையும் தோன்ற வைத்து நின்றவர்.

(2) இறைவன் வேறு, நாம் வேறு என்பது ஒரு கொள்கை.அனைத்தும் ப்ரஹ்மம் என்பது அத்வைதக்கொள்கை.

(1) எல்லாமாக, எல்லா உயிர்களுமாக பிரபஞ்சமாக நீக்கமற நிறைந்த ஒருமை இறைவனின் பெருமையும்

🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏

♦️நடு பீடம்:

☢️ பாடல் : (வரிகள்: 43-47):

மறு இலா மறையோர்
கழுமல முது பதிக் கவுணியன் கட்டுரை
கழுமல முதுபதிக்கவுணியன் அறியும்;
அனைய தன்மையை ஆதலின், நின்னை
நினைய வல்லவர் இல்லை, நீள் நிலத்தே.

☣️ பொருள்:

மறு இலா மறையோர்- தங்களுக்கு உள்ள கடமைகளை(வேதங்களை முறையாய் படிப்பது, வேள்விகளை செய்து எல்லாருக்காகவும் பிரார்த்திப்பது) என்று வாழும் குறை இல்லாத மறையவர்கள்

கழுமல முது பதிக் கவுணியன் கட்டுரை- கவுணியர் என்பது சம்பந்தரின் குலம். தன்னை சொல்லிக்கொள்கிறார். இதுபோன்ற முத்திரை அவருடைய எல்லா பதிகங்களில் இருக்கும்.கழுமல முதுபதிக்கவுணியன் அறியும்

அனைய தன்மையை ஆதலின், நின்னைநினைய வல்லவர் இல்லை, நீள் நிலத்தே இது வரை சம்பந்தர் சொன்ன கருத்துகளை அவருடைய தந்தை அறிவார்.

இந்த கருத்துகளை அறிந்தவர் யாரும் நீள்நிலத்தில் (இந்த பூமியில்), நினைய வல்லவர் இல்லை- இறைவனை,நினைக்காமல் இருக்க மாட்டார்கள்.

🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
ஒப்பற்ற பக்தி இலக்கியங்களின் தொகுப்பான பன்னிரு திருமுறைகளில்
திருக்கடைக்காப்பு என்னும் முதலாம் தேவாரத்தில்,
128 வது பதிகமாக உள்ளது.
திருப்பிரமபுரம் என்றும் சீர்காழி தலம் பற்றியது.
1382 வது பாடலாகும்.
திருஞானசம்பந்தர் அருளியது:

🛐முழு பதிகம் :

1
ஓர் உரு ஆயினை; மான் ஆங்காரத்து
ஈர் இயல்பு ஆய், ஒரு விண் முதல் பூதலம்
2
ஒன்றிய இருசுடர் உம்பர்கள் பிறவும்
படைத்து, அளித்து, அழிப்ப, மும்மூர்த்திகள் ஆயினை;
இருவரோடு ஒருவன் ஆகி நின்றனை;

3
ஓர் ஆல் நீழல், ஒண் கழல் இரண்டும்
முப்பொழுது ஏத்திய நால்வர்க்கு ஒளிநெறி
காட்டினை; நாட்டம் மூன்றும் ஆகக் கோட்டினை;
இரு நதி அரவமோடு ஒருமதி சூடினை;

4
ஒருதாள் ஈர் அயில் மூ இலைச் சூலம்,
நால்கால் மான்மறி, ஐந்தலை அரவம்,
ஏந்தினை; காய்ந்த நால் வாய் மும் மதத்து
இரு கோட்டு ஒருகரி ஈடு அழித்து உரித்தனை;

5
ஒரு தனு இருகால் வளைய வாங்கி,
முப்புரத்தோடு நானிலம் அஞ்ச,
கொன்று தலத்து உற அவுணரை அறுத்தனை;
ஐம்புலன், நால் ஆம் அந்தக்கரணம்,
முக்குணம், இருவளி, ஒருங்கிய வானோர்
ஏத்த நின்றனை;


  ... ... ..... ....       ஒருங்கிய மனத்தோடு,
இரு பிறப்பு ஓர்ந்து, முப்பொழுது குறை முடித்து,
நால்மறை ஓதி, ஐவகை வேள்வி
அமைத்து, ஆறு அங்கம் முதல் எழுத்து ஓதி,
வரல் முறை பயின்று, எழு வான்தனை வளர்க்கும்
பிரமபுரம் பேணினை;
அறுபதம் முரலும் வேணுபுரம் விரும்பினை;
இகலி அமைந்து உணர் புகலி அமர்ந்தனை;
பொங்கு நால்கடல் சூழ் வெங்குரு விளங்கினை;
பாணி மூஉலகும் புதைய, மேல் மிதந்த
தோணிபுரத்து உறைந்தனை; தொலையா இருநிதி
வாய்ந்த ந்தராய் ஏய்ந்தனை;
வர புரம் ஒன்று உணர் சிரபுரத்து உறைந்தனை;

7
ஒருமலை எடுத்த இருதிறல் அரக்கன்
விறல் கெடுத்து அருளினை; புறவம் புரிந்தனை;
முந்நீர்த் துயின்றோன், நான்முகன், அறியாப்
பண்பொடு நின்றனை; சண்பை அமர்ந்தனை;
ஐயுறும் அமணரும் அறுவகைத் தேரரும்
ஊழியும் உணராக் காழி அமர்ந்தனை;
எச்சன் ஏழ் இசையோன் கொச்சையை மெச்சினை;
ஆறுபதமும், ஐந்து அமர் கல்வியும்,
மறை முதல் நான்கும்,
மூன்று காலமும், தோன்ற நின்றனை;
இருமையின் ஒருமையும், ஒருமையின் பெருமையும்,

காப்பு பாடல் :

மறு இலா மறையோர்
கழுமல முது பதிக் கவுணியன் கட்டுரை
கழுமல முதுபதிக்கவுணியன் அறியும்;
அனைய தன்மையை ஆதலின், நின்னை
நினைய வல்லவர் இல்லை, நீள் நிலத்தே.

🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
என்றும் அன்புடன்
சுப்ராம் அருணாசலம்
காரைக்கால்.
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏

KERALAYATRA2024பகுதி - 5- வைக்கம் - (எர்னாகுளம்)பதிவு - 25 - #சுப்ராம்ஆலயதரிசனம் #சுப்ராம்ஆலயதரிசனம் 13.8.2024 #பயணஅனுபவக்குறிப்புகள்🕊️29. வைக்கம் சிவன் கோவில்(Vaikom Temple):

#KERALAYATRA2024 பகுதி - 5- வைக்கம் - (எர்னாகுளம்) பதிவு - 25 - #சுப்ராம்ஆலயதரிசனம்  #சுப்ராம்ஆலயதரிசனம் 13.8.2024  #பயணஅனுபவக்குறிப்புகள்🕊...