#UTTARAKANNT_TOUR_2022
#பயண_அனுபவக்_குறிப்புகள்
#பாகேஸ்வர்:
#பாதாள்_புவனேஷ்வர் குகைக் கோவில் தரிசனம் செய்து, அங்கிருந்து #சௌக்கோரி என்ற ஊரில் உள்ள HIMSHIKAR என்ற Hotel லில் தங்கினோம். இந்த ஊர் திபெத் எல்லையில் இருக்கிறது. இங்கிருந்து இமாலய மலைத்தொடர்களின் அற்புத இயற்கை காட்சிகளை காணலாம்.
இங்கு 10.04.2022 இரவு தங்கிவிட்டு, அடுத்த நாள் 11.04.2022 காலை உணவு முடித்துக்கொண்டு #பாகேஷ்வர் என்ற முக்கிய ஊருக்குச் சென்றோம்.
#பாகேஸ்வர்:
உத்தரகாண்ட் மாநிலத்தில், ஒரு மாவட்டத்தின் தலைநகர், புதுடெல்லியிலிருந்து 470 கி.மீ.யும், மாநில தலைநகரான டேராடூன் இருந்து 332 கி.மீ., நயினிட்டாலிலிருந்து 153 கி.மீ.யும் தூரத்திலும், மத்திய இமயமலைப்பகுதியில், 934 metres (3,064 feet) உயரத்தில் சராயு மற்றும் கோமதி ஆறுகளின் சங்கமத்தில் அமைந்துள்ளது.
மிகப் புராதானமான பாக்நாதர் என்ற பாகேஸ்வர் ஆலயம் அமைந்துள்ளதாலேயே இந்நகருக்கு பெருமை. மிக அழகிய இமாலய மலைத் தொடரின் தோற்றங்கள், இயற்கையான வனம் மற்றும் மலைபிரதேசமாகும்.
மேலும், இந்நகர் சுற்றி நிறைய மிகப் புராதானமான ஆலய ஊர்களும் மலை நகரங்களும் உள்ளன.
திபெத்திற்கும், பாரத தேசத்திற்கும் முக்கிய வானிபத்தலமாக அமைந்திருந்தது. 1962 முதல் இந்தோ- சீனாவின் போருக்குப் பிறகு இந்த வழி மூடப்பட்டுள்ளது.
பாக்காத் ஆலய வருடாந்திர உத்திராயாயனி விழா கொண்டாட்டங்களின் போது, சுமார் 15000 பேர் பங்கு பெறுகிறார்கள். இது உத்தரகாண்டின் குமான் பிரதேசத்தின் மிகப்பெரிய விழாவாகும். ஹந்தியும், சமஸ்கிருதமும் இங்கு பேசும் மொழிகள்.
புராண வரலாற்றின்படி, சண்டிஸ்வரரால் உருவாக்கப்பட்டது இந்நகரம்.
மார்க்கண்டேய முனிவர் சிவபெருமானை வழிபட்ட இடம். இறைவர் முனிவருக்கு புலி உருவத்தில் காட்சி தந்ததால், வியாக்ரேஸ்வரர் மற்றும் பாகேஸ்வரர் என்று வணங்கப்படுகிறார். (பாக் =புலி)
புராண வரலாறு:
பிரும்மரிஷி வசிஸ்ட்டமுனிவர், கைலாசத்தில் உள்ள மானசரோவரிலிருந்து சராயு என்ற நதியுடன் அயோத்திக்கு செல்லுகிறார்.
இந்தப் பகுதிக்கு வரும் போது, மார்க்கண்ட முனிவர், கடும்தவம் செய்யும் காட்சியைக் காணுகிறார்.
தானும், சராயும் செல்லும் சப்தத்தில், முனிவரின் கடும்தவம் கலைந்து விடும் ஆபத்தை உணருகிறார்.
உடனடியாக, சராயுவுடன் அங்கேயே சற்று நிதானித்து, பயணத்தை நிறுத்தினார்கள். இதனால், நீரின் அளவு அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. உடனே, பிர்மரிஷியும், சராயும், எப்படியாவது இந்த இக்கட்டிலிருந்து விடுவித்துக் கொள்ள, சிவபெருமானை வேண்டுகின்றனர்.
இவர்களின் வேண்டுதலை ஏற்று, சிவபெருமான், புலி வேடத்திலும், பார்வதி அம்மனை பசு வேடத்திலும் இவ்விடத்திற்கு வந்துவிடுகிறார்கள்.
புலி, பசுவை துரத்துகிறது, இந்த சப்தத்தினால், தவம் கலைந்த மார்க்கண்ட முனிவருக்கு, சிவனே புலி உருவத்திலும், அன்னை பார்வதி தேவி பசு உருவத்திலும் காட்சி கொடுத்து அருள் தருகிறார்கள்.
இதன் பிறகு, பிரும்மரிஷியும் சராயும் தங்கள் பயணத்தைத் தொடருகிறார்கள்.
இந்த நிகழ்வு முதல் இவ்விடத்தில், சிவன் புலியாகவும், பார்வதி பசுவாகவும் பக்தர்கள் அனைவருக்கும் தரிசனம் தருகிறார்கள்.
ஆலயம் :
பாகேஸ்வரர் ஆலயம் கருவறை உயரமான கூம்பு வடிவமானது. கலசப் பகுதி தாமரை மலர் அமைப்பு. உச்சிப் பகுதி மர வேலைப்பாடுகள் செய்து பாதுகாக்கப்பட்டு வருகிறது
ஆலயம் முழுவதும் கற்றளியால் ஆனது. கோமதி - சராயு நதியின் சங்கமத்தில் அமைந்துள்ளது. சதுர்முகலிங்க வடிவத்தில் அமைந்த சிவபெருமான் கருவரையின் உட்பகுதியில் உள்ளது.
இந்தப் பெருநகர், மலை, ஆறுகள் சங்கமத்தில் அமைந்துள்ளதால், முக்கிய போக்குவரத்து சாலைகள் மிகவும் நெருக்கடியாகவே உள்ளது. பிரதான சாலையிலிருந்து, நதியின் கரையோரம் உள்ள இந்த ஆலயத்திற்கு செல்ல ஒரு அழகிய வளைவு சிவன் உருவத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. பிரதான சாலையிலேயே சற்று தூரத்தில் பேருந்து நிறுத்தம், கடைத்தெரு உள்ளது.
நாம் பயணம் செய்யும் வாகனத்திலிருந்து இறங்கி, இந்த சாலையில் உள்ள ஆலய வளவு அமைத்துள்ளனர். சிறிய அளவில், சூலத்துடன் கூடிய சிவன், மற்றும், இருபுறமும் பசுகள் அவரை நோக்கியவாறும் அழகிய முறையில் அமைந்துள்ளார்கள்.
இதன் வழியே நுழைந்து, அங்கிருந்து சுமார் 200 மீட்டர் சிறு கடைகள் நிறைந்த பாதையில் சென்றால், ஆலயதல விருட்சம் !? மிகப்பெரிய புராதான மரத்தை அழகாக கட்டிட அமைப்பு செய்து பராமரிப்பில் வைத்துள்ளார்கள். இதைக் கடந்து ஆலயம் அடையலாம்.
முதலில், வடக்கிலிருந்து தெற்கு நோக்கி அகன்று பாய்ந்துவரும் சராயு நதியும், மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி பாய்ந்து வரும் கோமதி ஆறும் இணையும் சங்கமத்தில் சென்று நீராடவும்,
கரையில், தர்ப்பணம் கிரியைகள் செய்து கொள்ளவும் பல இடங்கள் உள்ளன.
சங்கம இடத்தில் கங்கை கரைகளில் செய்வதுபோல இறந்தவர்கள் உடல்கள் பூசைக்கு பிறகு எரியூட்டுகிறார்கள்.
இதற்கான ஏற்பாடுகள் செய்து தர பாகேஸ்வரர் ஆலயம் பின் பகுதியில் நதிகள் கலக்கும் இடத்தில், கட்டிடங்களும், பல்வேறு வசதிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தினம் தினம் வரும் உடல்கள் எரியூட்டப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. ஏதாவது நாட்களில் இறந்த உடல்கள் எரியூட்டக் கிடைக்கப் பெறவில்லை என்றால், கருப்பு துணியை எரியூட்டுவார்கள் என்றும் கூறுகின்றனர்.
ஆலயம் முன் பகுதியில் சிறிய கல்லால் ஆன வளைவுப் பகுதியும், இரும்பு வளைவும், நுழைவுப் பகுதியில் உள்ளது. கருவரை சுற்றி ஏக பிரகாரமாக உள்ளது.
நுழைவு பகுதியில், பிரகாரத்தில் ஒரு பகுதியில், பெரிய புலி உருவம் அமைத்துள்ளது, ஆலய வரலாற்றை நினைவுபடுத்தும்.
தெற்கு நோக்கிய கருவறை முன் பகுதியில் இரண்டு சிறிய நந்திகள் இருக்கின்றன. கருவரை நுழைவுப் பகுதியில், இரண்டு பகுதிகளிலும் சிறிய, சிறிய விநாயகர் சிலைகள் உள்ளன.
ஆலய கருவறை முன் மண்டபம் உயரமாக, சற்று அகலமாக உள்ளது. உள் நுழைந்தால்,நீள் சதுர முன்மண்டபம் நல்ல உயரம் அடிப்பகுதியில் கருவரை நுழைவுவாயில் சிறிய அளவில், விநாயகர், தட்சினாமூர்த்தி, பெருமாள், சிவன் - பார்வதி கருங்கல் சிலைகள் அழகுற அமைந்திருக்கின்றன.
கருவறை நுழைவு முன் மண்டத்தின் மேல் பகுதியில், ஆலய புரான வரலாற்றை விளக்கும் வகையில் அழகிய பெரிய படம் வரைந்து கண்ணாடி FRAME உடன் மாட்டப்பட்டுள்ளது.
கருவறை நீள் சதுர வடிவம். நான்குபுறமும், சிறிய மாடத்தில் ஜோதிர்லிங்கங்களில் உள்ள அமைப்பில், தத்தாத்தேரயர், விநாயகர், சிவன் நான்கு முகத்துடன், மேலும் பல்வேறு சுவாமிகளும் உள்ளன.
ஆவுடை சுமார் ஒரு அடி உயரத்தில் மிக பெரிதாக வட்டவடிவ அமைப்பில் உள்ளது. நடுவில், இயற்கையான ஸ்படிக உருவம் லிங்கம் மிகமிக சிறிய அளவில் உள்ளது. சுற்றிலும் பாதுகாப்பிற்காக துருபிடிக்காத இரும்பு குழாய் அமைப்பில் அமைத்துள்ளார்கள்.
இவற்றையெல்லாம் உள்ளே சென்று மிக அருகில் நின்று சுற்றி பார்த்து வணங்கி வரலாம். பூசைகள் செய்யலாம்.
முமுகருவரை அமைப்பே இந்த ஆலயம். இதைச் சுற்றி சிறிய சிறிய கற்றளியாக சில சன்னதிகளும் உண்டு.
ஆலயத்தை ஒட்டி, நதியின் பக்கம்
சனிஸ்வரர் காகத்தின் மீது அமர்ந்து, தனி சன்னதியிலும், மேலும், சில தனி தனி சன்னதிகளில் சிவலிங்கங்களும் பல்வேறு தெய்வங்களும் வைக்கப்பட்டுள்ளது.
புனரமைப்பு பணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. ஆலயத்திலிருந்து கோமதி ஆற்றிற்கு நேரடியாக செல்லவும் படிகள் பராமரிப்பு செய்யப்பட்டு வருகிறது.
கருவரை/ ஆலயத்தின் கீழ்புறம் நீண்ட கட்டிடம் உள்ளது. அதில் தனிதனியாக பல்வேறு தெய்வங்களின் உருவங்கள் சிலைகள் வைத்து பூசைகள் செய்யப்படுகின்றன. சாதுக்களும், பூசாரிகளும் ஆங்காங்கே இருக்கிறார்கள்.
Toilet வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது.
முக்கிய பாகேஸ்வர் ஆலயம் செல்லுமுன் கிழக்கு நோக்கிய குறுகிய வழியில் சென்றால், சராயு நதிக்கு செல்லலாம். ஒரு புறம் புராதான அமைப்புடன் சிறிய மற்றொரு சிவன் ஆலயமும் உள்ளது. இது மேற்கு பார்த்து கருவரை அமைந்துள்ளது.
கரையில் பெரிய சூலத்துடன் புலியின் மீது நின்ற கோலத்துடன் அமைந்த சிவன் சிலை அனைவரின் கவனத்தையும் கவருவது போல அமைத்துள்ளமை மிகவும் சிறப்பு.
கிடைத்த நேரத்தில், சராயு நதியில் நீராடி வழிபட்டோம்.
நதிக்கரையில் தொங்கு பாலங்கள் இருபுறமும் கரை கடக்க அமைத்துள்ளார்கள்.
நீராட்டுத் துறையில், விஷேச நாட்களில் மட்டுமல்லாமல், எல்லா நாட்களிலும் நீராடி, வழிபடவும், நீத்தார் கடன், முதலிய பூசைகள் செய்யவும், நீண்ட படித்துறைகளும், மண்டபங்களும் அமைத்துள்ளார்கள். சிறப்பாக நடந்தும் வருகிறது.
இந்த ஆலயம் வணங்கி, பின் கெளசானி என்ற ஊருக்கு செல்லும் வழியில், கோமதிக்கரையியில் உள்ள
வைத்திநாத் என்ற பாயித்திநாத் என்ற ஊருக்கு சென்று மதிய உணவு முடித்துக் கொண்டு இங்குள்ள புராதான ஆலயத்தை தரிசித்தோம்.
பயணங்கள் தொடரும்......
🙏தகவல்கள் உதவி :
wikepedia மற்றும் பல வலைதளங்கள்
(11.4.2022)
🙏நன்றிகளும் வணக்கங்களும்🙇🏼♂️
#ஆலயதரிசனம்
#UTTRAKANT_TOUR_2022
#பாகேஸ்வர்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
No comments:
Post a Comment