பண்டரிபுரம்: பகுதி- 1.
18.10.22
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
பண்டரிபுரம் பெரிய நகரம், புராதான நகர். எப்போதும் மக்கள் கூட்டம் உள்ள இடம்.
பொதுவாக, பண்டரிபுரம் செல்பவர்கள், இங்குள்ள புகழ் பெற்ற புராதாண முக்கியம் உள்ள சந்திரபாகா என்ற நதியில் நீராடி , விஷ்ணு பாதம் தரிசித்து, விட்டல் ருக்கு மனிஆலயம் சென்று தரிசித்து வருவார்கள்.
18.10.22 இன்று காலை பரலி வைத்திநாதர் ஜோதிர்லிங்கம் தரிசனம் செய்துவிட்டு, அங்கிருந்து காலை 10.00 அளவில் புறப்பட்டு மாலை பண்டரிபுரம் வந்து சேர்ந்தோம். நாங்கள் மாலை போய்,
Lodge Pandharpur Raul Maharaj Trust என்ற இடத்தில் உள்ள இடத்தில், தங்கவைக்கப்பட்டோம்.
நாங்கள் இந்த முறை சென்றபோது
மாலை ஆகிவிட்டதாலும், இரவே ஆலயம் தரிசனம் முடித்து விட வேண்டும் என்பதாலும், நாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து
மாலை 6.30 மணி அளவில் ஒரு Auto பிடித்து சந்திரபாகநதி அருகில் உள்ள விஷ்ணு பாதம் என்ற இடத்திற்கு முதலில் சென்றோம்.
சற்று இருள் இருந்ததால், நதிநீரைத் தெளித்துக் கொண்டோம்.
ஏற்கனவே, ஒரு முறை பண்டரிபுரம் ஆலயம் சென்று தரிசனம் செய்துள்ளமையால், முதலில், 'சக்குபாய் ஆலயம்,' என்று வணங்கப்படும், ஆலயம் முதலில் சென்று விட்டு பிறகு விட்டல் ஆலயம் செல்லலாம் என்று முடிவு செய்து, அவ்வாறே முதலில் சக்குபாய் ஆலயம் செல்ல உத்திரவு கிட்டியது.
சக்குபாய் ஆலயம்:
(Shri Gopalkrishna Mandir Gopalpur, Govardhan Parvat, PANDARPUR)
🌼இந்த இடம், பண்டரிபுரம் விட்டல் ஆலயத்திற்கு சுமார் 5-6 கி.மீ.தூரத்தில் இருக்கிறது.
🌼இங்குதான் பக்தை சக்குபாய் அமையாருக்காக, ஸ்ரீ கிருஷ்ணர் வீட்டுவேலைகளை செய்து தந்தார் என்றும், இந்த இடம் புராண வரலாறுகள் நடந்த இடம் என்றும் கூறுகிறார்கள்.
வரலாறு
🌟சக்குபாய் என்ற ஜனாபாய் (Janābāi) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள பண்டரிபுரம் எனும் ஊரில் ருக்மணியுடன் கோயில் கொண்டுள்ள விட்டலரின் பரம பக்தையும், நாமதேவரின் சீடரும் ஆவார்.
🌼மகாராட்டிரா மாநிலத்தின் பர்பணி மாவட்டத்தில் உள்ள கங்காகேத் எனும் ஊரில் பண்டரிபுரம் அருகே சிஞ்சுருணிபுரம் எனும் கிராமத்தில், கங்காதர ராவ் - கமலாபாய் தம்பதியருக்கு சக்குபாய் பிறந்தார்.
⚡ சிறுவயது முதலே கிருட்டிணராகிய பாண்டுரங்க விட்டலரின் மீது அதிக பக்தி கொண்டிருந்தார். மணந்தால் பகவான் பாண்டுரெங்கனை மட்டுமே மணப்பேன் என உறுதி பூண்டிருந்த சக்குபாய்க்கு, அவரின் 10-வது வயதில் மித்துரு ராவ் என்பவருக்கு, அவரது பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்தனர்.
⚡மித்துரு ராவுடன் வெளியூரில் வாழ்ந்த சக்குபாய், ஒரு நாள் பண்டரிபுரம் யாத்திரை செல்லும் அடியார்களுடன் பண்டரிபுரம் செல்ல கணவரிடம் அனுமதி கேட்டார். அதனை மறுத்த கணவர் மித்ரு ராவ், சக்குபாயை ஒரு தூணில் கயிற்றால் கட்டிப் போட்டார். இதனை அறிந்த பகவான் விட்டலர் சக்குபாயை கட்டப்பட்ட கயிற்றிலிருந்து விடுவித்தார். சக்குபாய் உடனே அடியவர்களுடன் பண்டரிபுரம் யாத்திரையில் கலந்து கொண்டு, பண்டரிநாதனை வழிபட பண்டரிபுரம் சென்றார்.
⚡பண்டரிபுரத்தில் விட்டலரை வழிப்பட்டு ஊருக்கு திரும்பிய சக்குபாய், அங்கு வீட்டில் தனக்கு பதிலாக பகவான் பாண்டுரங்க விட்டலர் தனது வேடத்தில் வீட்டு வேலைகளை செய்வதை அறிந்து திகைத்தார். சக்குபாயின் மாமியார் மற்றும் கணவருக்கு பகவான் நேரில் காட்சியளித்து, சக்குபாயின் பக்தியை பாராட்டும் விதமாக தான் சக்குபாய் வேடத்தில் வீட்டு வேலைகளை செய்ததாக அருளினார்.
⚡ஜனாபாய் என்கிற சக்குபாய், கிபி 13-ஆம் நூற்றான்டில் பிறந்து, 1350-இல் சமாதி அடைந்தார்.
⚡ பாண்டுரங்க விட்டலரின் பரம பக்தையான ஜனாபாய், விட்டலர் மீது இயற்றி பாடியுள்ள பக்திப் பாடல்களை அபங்கம் என்பர்.
🌟அபங்க் அல்லது அபங்கம் (மராத்தி: अभंग) என்பது இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் பண்டரிபுரம் நகரத்தில் விட்டலர் கோயிலில் குடிகொண்டுள்ள பகவான் கிருஷ்ணர் என்ற விட்டலரைப் போற்றி ஞானேஷ்வர், ஏகநாதர், நாமதேவர், ஜனாபாய், சோகாமேளர், துக்காராம், புரந்தரதாசர் போன்ற வைணவ சமய வர்க்காரி நெறியில் வாழ்ந்த சாதுக்கள் மராத்தி மொழியில் பாடிய பஜனைப் பாடல்கள் ஆகும்.
⚡அபங்கம் என்ற மராத்திய மொழிச் சொல்லிற்கு இடையீடு அற்ற பஜனைப் பாடல்கள் என்று பொருளாகும்.
⚡ஜனாபாய் நாமதேவரை விட வயதில் சில ஆண்டுகளே மூத்தவர். நாமதேவரைப் போன்றே ஜனாபாயும், பகவான் விட்டலர் மீது பெரும் பக்தி கொண்டு பதிகங்கங்கள் இயற்றினார்.
⚡இந்த அபங்கங்கள் ஐயாயிரத்திற்கும் மேற்பட்டுள்ளது.
⚡ஒவ்வொரு ஆண்டும் ஆடி மற்றும் கார்த்திகை மாத ஏகாதசி அன்று, மகாராட்டிரா, வட கர்நாடகா மற்றும் தெலுங்கானா போன்ற மாநில வர்க்காரி நெறியைப் பின்பற்றும் விட்டலரின் பக்தர்கள் பண்டரிபுரம் விட்டலர் கோயிலிலுக்கு புனித யாத்திரையின் போது தம்புராவை இசைத்துக் கொண்டே, அபங்கம் எனும் பஜனைப் பாடல்களை பாடிக் கொண்டுச் செல்வது வழக்கம்.
ஆலயம் அமைப்பு.
✨ஆலயம் சற்று உயரமான பகுதி.
Auto வில் ஆலயம் அருகில் சென்று இறங்கினோம். மாலை நேரம் கடந்து இரவாகிவிட்டதால், மக்கள் கூட்டம் இல்லை.
✨கிழக்குப் பார்த்த ஆலயம்.
வாசல் தான்டி. உள்ளே சென்றோம்.
பெரிய வளாகமாக இருந்தது.
நடுவில் ஸ்ரீ கிருஷ்ணர் கருவரை. வடக்குப் புறம் ஒரு சிவலிங்க கருவறை. உயர அமைப்பில் இருக்கிறது.
✨முதலில், சக்குபாய் அம்மையாருக்காக, ஸ்ரீகிருஷ்ணர் வீட்டு வேலை செய்த இடங்கள். உரலில் கட்டிய இடம், முதலிய இடங்கள் தனித்தனியாக வைத்துள்ளனர்.
✨இந்த இடங்களைத் தரிசித்து விட்டு, நேராக விட்டல் ஆலயம் சென்றோம்.
🌹பண்டரிபுரம் பாண்டுரங்க விட்டலர் கோயில் (Vithoba Temple), என்னும்
ஸ்ரீ விட்டலர்-ருக்மணி கோயில் (Shri Vitthal-Rukmini Mandir)
அமைவிடம்:
💥இக்கோயில் புனேவிற்கு தென்கிழக்கே 211 கிலோ மீட்டர் தொலைவிலும், சோலாப்பூருக்கும் மேற்கே 74 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. அருகில் உள்ள தொடருந்து நிலையம் சோலாப்பூரில் உள்ளது.
🌹இது இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள பண்டரிபுரம் நகரத்தில் பாயும் சந்திரபாகா ஆற்றின் கரையில் உள்ளது
✨ஆலயம் மிகப்பெரிய வளாகம். ஆலயம் கிழக்கு நோக்கியது, பெரிய கடைத்தெரு உள்ளது. பல வணிக வளாகங்கள், தங்குமிடங்கள் ஏராளமாக உள்ளது.
🌟ஆலயம் உள்ளே சென்று தரிசனம் செய்ய, ஆலயம் முன்புறம் உள்ள தனி கட்டிடம் சென்று அதன் வழியாக q வரிசையில் சென்று தரிசிக்க வேண்டும். பல மணிநேரம் ஆகலாம்.
🌟கைப்பேசி முதலிய மின்சாதனப் பொருட்கள், பெரிய உடமைகள், பைகள் அனுமதி கிடையாது. அருகில், Locker வசதிகள் உண்டு.
🌟 இந்தக் கட்டிடத்தின் வழியே சென்று, பிரதான ஆலயம் மேல்புறம், கருவரை கோபுரம், கண்டு தரிசித்து பின் ஆலயம் உள்நுழைந்து, முன்மண்டபம், உள் மண்டபம், கருவரையில் நுழைந்து சென்று, தெய்வங்களின் அருகில் நின்று தரிசித்து, பாதங்களைத் தொட்டு வணங்கி வரலாம்.
💥மிகவும் அவசரமாக தரிசித்து திரும்ப வேண்டும் என்றால், கிழக்குப் புற ஆலய நுழைவு வாயிலில் ' முகதரிசனம்' என்ற
இடத்தில் சென்று பார்த்தால், ஆலயத்தின் கருவறையில் உள்ள ஸ்ரீபாண்டுரெங்கரின் முகம் மட்டும் தரிசனம் கிடைக்கும்.
🌹இது ஸ்ரீ கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்துக் கோயில் ஆகும். இக்கோயிலின் மூலவர் விட்டலர் ஆவார். தாயார் ருக்மணி ஆவார்.
🌹இது பக்தர்களின் முழு அர்ப்பணிப்பு உள்ள ஆலயம். வைணவ சமயத்தின் வர்க்காரி நெறியைப் பின்பற்றும் மகாராட்டிரா வடக்கு கர்நாடகா, தெற்கு தெலுங்கானா மற்றும் தமிழ்நாட்டவர்களுக்கு இக்கோயில் மிகவும் புனிதத் தலம் ஆகும்.
வழிபட்டு பேறு அடைந்தவர்கள் :
🌟வைணவ அடியார்களான, நாமதேவர், துக்காராம், ஞானேஷ்வர், புரந்தரதாசர், சோகாமேளர். முதலியவர்கள் பாண்டுரங்கரின் பரம அடியார்களில் முக்கியமானோர்கள்.
🌹இக்கோயிலின் முக்கிய கிழக்கு நுழைவாயில் விட்டல் பக்தரான சோகாமேளரின் சிறு சமாதிக் கோயில் உள்ளது.
சோகாமேளர்.
பண்டரிபுர எல்லையில், பஞ்சம மரபினர் எனும் எளிய குடிசைவாழ் மக்களின் மரபில் தோன்றிய அருளாளர் ஸ்ரீசோகாமேளர். நாயன்மார்கள் வரலாற்றில் இடம்பெறும் நம் நந்தனார் சரித்திரத்தைப் போன்றே, எவ்வித சுய ஒழுக்கமுமின்றி மது; மாமிசம்; வாயிலாப் பிராணிகளைப் பலியிடுவது என்று வாழ்ந்து வரும் அப்பகுதி குடிசை வாசிகளைத் தம்முடைய தொடர் போதனைகளால் பாண்டுரங்க பக்திக்கும் நல்லொழுக்கத்திற்கும் ஆட்படுத்தி வந்தார் சோகாமேளர்.
🌟மற்றும் ஜனாபாய் போன்ற வைணவ அடியவர்களால் பகவான் விட்டலரின் குறித்து அபங்கம் எனும் பதிகங்கள் பாடப்பட்டுள்ளது.
🌹இந்தியாவில் முதன்முறையாக, 2014-ஆம் ஆண்டிலிருந்து, இந்து சமூகத்தின் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த வைணவர்கள் இக்கோயிலில் பூசாரிகளாக பணியாற்றுகிறார்கள்.
திருவிழாக்கள்
✨ஆடி மாத ஏகாதசி மற்றும் கார்த்திகை மாத ஏகாதசி அன்றும் தென்னிந்தியா முழுவதும் வர்க்காரி நெறி முறைப்படி பக்தர்கள் விட்டலர் மீது அபங்கம் எனும் பதிகங்களைப் பாடிக் கொண்ட கால்நடையாக யாத்திரை செய்து பண்டரிபுரத்தில் உள்ள விட்டலரை தரிசனம் செய்வது சிறப்பாகும்.
🌟கோயில் அமைப்பு:
பிரதான வாயில்:
🏵️ஆலயத்துக்கு நான்கு வாசல்கள். கோயிலின் கிழக்கு வாயிலுக்கு 'நாமதேவ் வாயில்’ என்று பெயர். கையில் தம்புராவுடன் இறைவனின் இசையில் மூழ்கியிருக்கும் நாமதேவரின் பித்தளைச் சிலை இங்கு உள்ளது.
மண்டபங்கள் :
🏵️இந்தப் பிரதான வாயிலின் வழியே உள்ளே நுழைந்தால் கருவறையை நோக்கி அழைத்துச் செல்லும் ஒரு மகாமண்டபம். இங்கே எழுந்தருளி யிருக்கும் தத்ராத்ரேயரையும், கணபதியையும் தரிசித்துவிட்டுச் சென்றால், அடுத்து விளங்குவது அழகியதொரு மண்டபம்.
🌟வழவழப்பான 16 கருந்தூண்கள் தாங்கும் இந்த மண்டபத்தில் ஆங்காங்கே மாடங்கள்.
⚡ஒரு மாடத்தில், பளிங்கில் செதுக்கப்பட்ட நரசிம்மர் எழுந்தருளியிருக்கிறார்.
⚡அவதாரங்களான நரசிம்மர், வெங்கடாஜலபதி ஆகியோர்களுக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளது.
⚡ராதை மற்றும் கோபியர்களுடன், பால கிருஷ்ணர் ராசலீலை ஆடுவது போன்று, பக்தர்கள் ஆடிப்பாடி விளையாடுவதற்கு, கோயிலில் தனியொரு மண்டபம் உள்ளது
⚡இன்னொரு மாடத்தில் சிருங்கார ராதாவும், அவளது மையலில் மயங்கியிருக்கும் கிருஷ்ணனும் காட்சி தந்து, அந்த மண்டபத்துக்கு அழகு சேர்க்கிறார்கள்.
⚡மற்றும் ஒரு மாடத்தில், செந்தூரத்தில் மூழ்கிய கோலத்துடன் கணபதி தரிசனம் தருகிறார்.
🌼மேலும், இந்த மண்டபத்தில் இருக்கும் கருந்தூண்களில் 64 மகாபாரதக் காட்சிகள் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. மட்டுமின்றி, மஹாவிஷ்ணுவின் தசாவதாரங்களும் சிற்பங்களாக இந்தத் தூண்களில் இடம் பெற்றுள்ளன.
💥புரந்தரதாசர் தூண்
⚡இந்த மண்டபத்தில், ஒரு தூணுக்கு முழுக்க முழுக்க வெள்ளிப் பூண் போடப்பட்டிருக்கிறது.
⚡இந்தத் தூணுக்குக் கருட கம்பம் என்று பெயர். புரந்தரதாசர் கம்பம் என்ற காரணப்பெயரும் இதற்கு உண்டு.
⚡பாண்டுரங்கனின் பரம பக்தரான புரந்தரதாசர் ஒருமுறை அவனை தரிசிப்பதற்காக நீண்ட பயணத்துக்குப் பின், பண்டரிபுரம் வந்து சேர்ந்தார். சத்திரம் ஒன்றில் தங்கினார். காலையில் கண்ணனை தரிசிக்கலாம் என்று எண்ணம் கொண்டு உறங்கப் போனார்.
⚡நடுநிசியில் புரந்தரதாசர் கண்விழித்தார். கால் வலி தாங்காமல், 'அப்பண்ணா! ஒத்தடம் கொடுக்க வெந்நீர் கொண்டு வா!' என்று சீடனை அழைத்தார். பலமுறை கூவியழைத்த பிறகே சீடன் அப்பண்ணா ஒரு பாத்திரத்தில் சுடச்சுட வெந்நீர் கொண்டு வந்தான்.
⚡தாமதமாக வந்த சீடன் மீது கோபம் கொண்டு, வெந்நீர்ப் பாத்திரத்தை வாங்கிய புரந்தரதாசர், வெந்நீரை அப்படியே அப்பண்ணாவின் முகத்தில் வீசிவிட்டார்.
⚡பின்பு தமது செயலைக் குறித்து வருந்தி, நிம்மதியாகத் தூங்க முடியாமல், புரண்டு புரண்டு படுத்தார். பொழுது விடிந்தது. அப்பண்ணாவைத் தேடிப் போய், நள்ளிரவில் தான் நடந்து கொண்ட விதத்துக்காக வருத்தம் தெரிவித்தார்.
⚡அப்பண்ணா ஆச்சரியமாகி, 'நான் இரவு முழுவதும் கண்விழிக்கவே இல்லையே?' என்றார். புரந்தரதாசர் குழம்பினார்.
⚡நீராடிவிட்டுப் பாண்டுரங்கனைத் தரிசிக்கப் போனார். அங்கே பரபரப்பும் சலசலப்புமாக இருந்தது. விசாரித்ததில், கொதிக்கும் வெந்நீரை முகத்தில் கொட்டியது போல, பாண்டுரங்க விக்கிரகத்தின் முகம் முழுதும் கொப்புளங்களாக இருப்பது தெரியவந்தது.
⚡கண்ணனே தனக்கு வெந்நீர் ஒத்தடம் கொடுக்க இரவு வந்திருந்தான் என்று
உணர்ந்ததும், புரந்தர தாசர் நெகிழ்ந்து போனார். 'அப்பண்ணா வடிவில் வெந்நீர் கொண்டு வந்தது நீதான் என்று அறியாத பாவியாகிவிட்டேனே! நான் கோபத்தை விட்டொழிக்க வேண்டுமென்பதற்காக நீ செய்த விளையாட்டா இது? உன் அழகுத் திருமுகத்தை நான் மறுபடி காண வேண்டும்' என்று கண்ணீர் சிந்தினார்.
⚡கண்ணனின் முகம் முன்பு போல் அழகானது. அந்த அழகில் மயங்கிய அவர் பாண்டுரங்கனின் மீது ஏகப்பட்ட துதிப்பாடல்களை எழுதி, இசையமைத்துப் பாடினார்.
⚡புரந்தரதாசர் இந்தத் தூணின் அடியில் அமர்ந்துதான் பாண்டுரங்கனின் மீது பாடல்கள் இயற்றினார் என்பதால் இதற்குப் புரந்தரதாசர் தூண் என்றும் பெயர்.
⭐ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் அனைவரும் பாண்டுரங்கனைத் தரிசிக்கும் முன், இந்தத் தூணை ஆரத்தழுவி வணங்குகிறார்கள். அவ்வாறு செய்தால் தங்களது பாவங்கள் தொலையும் என்பது ஐதீகம்.
துக்காராம் பாதுகைகள்:
🌼கருவறைக்கு வெளியே ஜய, விஜய துவார பாலகர்கள். ஒரு கண்ணாடிப் பேழையில் திறந்த நிலையில் காட்சியளிக்கும் வேதநூல். அருகில், துக்காராமின் பாதுகைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. மக்கள் துக்காராம் பாதுகைகளைக் கண்ணில் ஒற்றிக் களிப்பெய்திய பின்பு, கருவறை நாடி நடக்கிறார்கள்.
கருவறை
🌹இங்கு இன, மொழி, சாதி வேறுபாடின்றி, இந்துக்கள் யாராக இருந்தாலும் கர்ப்பக்கிரகத்துக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
🌹இடுப்பில் கைகளை ஊன்றியவாறு, ஒரு செங்கல்லின் மீது நின்று அருள்புரிகிறான் பண்டரிநாதன். இந்தப் பண்டரிநாதர் சுயம்பு மூர்த்தி. மணற் கல்லால் உருவான மூர்த்தி. செங்கல் மீது நிற்பதாக ஐதீகம். சுவாமியின் பீடமும் மணற்கல்லே. காதுகளில் மகர குண்டலங்கள். தலையில் சிவ லிங்க வடிவ கிரீடம் தரித்திருக்கிறார்.
🌹'ஜெய ஜெய விட்டலா, பாண்டுரங்க விட்டலா’ என்னும் கோஷம் கருவறையை நிறைக்கிறது. பண்டரிநாதனுக்குத்தான் விட்டலன் என்று இன்னொரு பெயர். விட் என்ற மராத்தி மொழிச் சொல்லிற்கு செங்கல் என்பது பொருள். 'வா’வென்று அழைத்தால், நம்மோடே வந்துவிடுவதற்குத் தயாராக உள்ளது போல் ஒரு தோற்றம். கிருஷ்ணன் நம் வீட்டுப் பிள்ளைபோல் வெகு அந்நியோன்யமாக அங்கே எழுந்தருளியிருக்கிறார்.
🌹பக்தர்கள் மூலவரின் திருவடிகளில் தலையை வைத்து வணங்கலாம். இதற்கு பாத ஸ்பரிச தரிசனம் என்று பெயர்.
🌹மூலநாதனைத் தரிசித்த மன நிறைவோடு கருவறையை வலம் வந்தால், பின்னால் ஒரு தனிக் கோயில். இங்கே, அன்னை ருக்மணிக்குத் தனிச் சந்நிதி உள்ளது. அன்னை ருக்மணி தேவி இடுப்பில் இரு கரங்களையும் ஊன்றியபடி, ஆனந்தம் தவழும் வதனத்துடன் தரிசனம் தருகிறாள். அன்னைக்குக் குங்குமத்தால் அர்ச்சனை நடைபெறுகிறது.
🌹ருக்மணி சந்நிதியை அடுத்து சத்தியபாமா மற்றும் ராதையான ராதிகாவுக்கும் தனித் தனிச் சந்நிதிகள் உள்ளன.
இவையெல்லாம், தரிசனம் கண்டு, ஆலயத்தின் மேற்கு புற வாசல் வழியில் வெளியேற வேண்டும்.
ஒரு முறை ஆலயம் உள்ளே நுழைந்தால், வரிசையில்தான் செல்ல வேண்டியிருக்கும். ஆலயம் தரிசனம் முடிந்தே வெளியில் வர இயலும்.
வெளியில் உள்ள கேட் No. தெரிந்துகொண்டால், நாம் எங்கு உள்ளோம் என்று பிறருக்கு தெரிவித்துவிடலாம். நம்முடன் இருப்பவர்களுக்கு அது உதவும்.
நாங்கள் சென்று இருந்த போது, பக்தர்கள் கூட்டம் அதிகம் இல்லை. எங்கள் Auto ஒட்டுனர் சரியான முறையில் வழிகாட்டி, மிகவும் உதவிகரமாக இருந்தார்.
பண்டரிபுரம் பற்றி அறிய வேண்டிய சில சிறப்பு குறிப்புகள் அடுத்த பதிவில்.......
(வலைதளத்தில் கண்டது).
பண்டரிபுரம் - பகுதி - 2.
#பயணஅனுபவக்குறிப்புகள்
பண்டரிபுரம் பற்றி அறிய வேண்டிய சில சிறப்பு குறிப்புகள்
(வலைதளத்தில் கண்டது)
#சந்த்ரபாகாநதி
🌼பீமா நதி என்றழைக்கப்படும் இந்நதி மஹாராஷ்ட்ரம், கர்நாடகம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களை வளப்படுத்திக்கொண்டு க்ருஷ்ணா நதியுடன் கலக்கிறது.
🌼பண்டரிபுரத்தில் இந்நதி சந்த்ரபாகா என்றழைக்கப்படுகிறது.
🌼புண்டலீகன் என்னும் பக்தனுக்காக பகவான் கண்ணன் நதியை வளைந்து ஓடப் பணித்ததால் நதியின் போக்கு பிறைச் சந்திரன்போல் இருக்கிறது.
🍁🍁🍁🍁🍁
புராண வரலாறு
🌹ஜானுதேவர், சத்யவதி தம்பதிக்குப் பிறந்த மகன் புண்டரீகன். பெற்றோரிடம் மிகுந்த மரியாதையும் பக்தியுமாக இருந்தவன். தென்னாட்டிலிருந்து காசி யாத்திரையாக பெற்றோருடன் கிளம்பிய புண்டலீகன், ஆங்காங்கு தங்கி மாதக் கணக்கில் பயணம் செய்து மகாராட்டிரா புண்டரீகபுரம் வந்தார்.
🌷இங்கு குக்குட மஹரிஷி என்பவர் வசித்து வந்தார். அவர் குக்கூடாசனத்தில் அமர்ந்து சாதனைகள் செய்து சித்தி பெற்றவர். (மிகவும் கஷ்டமான இந்த ஆசனத்தை காஞ்சி மஹா பெரியவர் ஸர்வசாதாரணமாகப் போட்டு மணிக்கணக்கில் அமர்ந்திருப்பார்).
🌹மிகவும் வயதான தாய் தந்தையரை வைத்துக்கொண்டு,புண்டலீகன் கஷ்டப்பட்டு யாத்திரை செல்வதைப் பார்த்த மஹரிஷி,
🌷இதற்கு மேல் வயதானவர்களை அழைத்துக்கொண்டு அலையவேண்டாம். பெற்றோருக்கு சேவை செய்வது கங்கையில் ஸ்நானம் செய்த பலனைத் தரும். நதி தீரமாய் இருப்பதால், பெரியவர்களுடன் வசிப்பதற்கும், அவர்களின் சேவைக்கும் வசதியாக இருக்கும். இங்கேயே தங்கி பெற்றோர் சேவை செய் எனப் பணித்தார்.
🌹ப்ரும்மதேஜஸுடன் விளங்கிய மஹரிஷியின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு புண்டலீகன் அங்கேயே குடிசை போட்டுக்கொண்டு பெற்றோருடன் வசிக்கலானான்.
🌷தினமும் பெற்றோர்க்கு உணவு ஏற்பாடு செய்வதும், அவர்களின் ஸ்நானம் போன்ற அன்றாட வேலைகளுக்கு உதவி செய்வதும், அவ்வப்போது கைகால்கள் பிடித்து விடுவதும், இரவு உறங்கும்போது விசிறிவதும், பல புராணங்களைப் பார்வை மங்கிய பெற்றோருக்குப் படித்துக் காட்டுவதும், தனக்குத் தெரிந்த இறைப் பாடல்களை பாடி அவர்களை மகிழ்விப்பதுமாய் இனிதாகப் பொழுது போயிற்று.
🌹அவ்வமயம் துவாரகையில் கண்ணபெருமான் வசித்துவந்தான். ஒருநாள் அவன் நீண்ட சிந்தனையில் இருப்பதைக் கண்ட நாரதர் என்ன சிந்தனை என்று விசாரிக்க,
🌷நாரதரே! என் பெற்றோருக்கு சேவை செய்யும் பேறு எனக்குக் கிட்டவில்லை. சுமந்து பெற்ற அன்னைக்கு மழலையின்பம் கூடத் தரவில்லை. எனக்கு அது பெரும் குறையாய் இருக்கிறது. பெற்றோருக்கு சிறப்பாக சேவை செய்பவர் யாரேனும் இருக்கிறார்களா? அவர்களைப் பார்த்தாவது நான் மகிழ்ச்சி அடைவேன் என்றான்.
🌹நாரதர் இருக்கிறார் கண்ணா.. என்றதுதான் தாமதம். உடனே பார்க்கலாம் வாருங்கள் என்று கிளம்பி வந்துவிட்டான் கண்ணன்.
🌷துவாரகாதீசன் கிளம்பியதும், தாயார் ருக்மிணியும் கிளம்ப, ஒரு பரிவாரமே கிளம்பியது.
🌹நாரதர் கண்ணனை நேராக நமது புண்டலீகன் வீட்டு வாயிலில் கொண்டு வந்து நிறுத்தினார்.
🌷அரசன் வந்திருப்பதாக கட்டிய வசனங்கள் வானைப் பிளக்க, புண்டலீகனோ உறங்க முயற்சி செய்து கொண்டிருந்த தந்தைக்கு கால் பிடித்துக் கொண்டிருந்தான்.
🌹குடிசைக்குள் எட்டிப் பார்த்த கண்ணன்,
அமைதியாய் இருக்கும்படி பரிவாரங்களுக்கு சைகை காட்டிவிட்டு,
அங்கு, மழை பெய்து, சேறும் சகதியுமாக இருந்தது. புண்டரீகனின் குடில் வாயிலில் நின்று, மெதுவாக அழைக்க, புண்டலீகனோ, அங்கு உள்ளேயிருந்து ஒரு செங்கல்லைத் தூக்கிப் போட்டார்.
🌷'அரசே! சற்று பொறுங்கள். வயதான என் தந்தை உறங்குகிறார். வயதானவர்களுக்கு உறக்கம் வருவதே அரிது. 'என் பெற்றோருக்கான பணிவிடைகளை முடித்துவிட்டு,சற்று நேரத்தில் வந்து, உங்களைக் கவனிக்கிறேன். அதுவரை இந்த செங்கல்லை ஆசனமாக ஏற்றுக் கொள்ளுங்கள்'' என்றார்.
🌷அன்பே உருவான கண்ணனும் ருக்மிணியும் புண்டலீகன் வீசிய செங்கலின்மீது ஏறி நின்று கீழே விழாமல் சமன் செய்வதற்காக இடுப்பில் கையை வைத்துக் கொண்டனர்.
🌹தந்தை உறங்கியதும், தனது பெற்றோர் சேவையை முடித்துக்கொண்டு, வெளியில் வந்த புண்டலீகன் இறைவனிடம் காக்க வைத்ததற்காக மன்னிப்பு வேண்ட, அதன்பிறகு, வந்தவர்களை வரவேற்றார்.
🌹கண்ணனோ, புண்டலீகனின் பெற்றோர் சேவையில் நெகிழ்ந்துபோயிருந்தான்.
அதற்கு மேலும் பொறுக்கமுடியாத ருக்மிணி, வந்திருப்பது கிருஷ்ணர் என்பதைப் போட்டு உடைத்தார்.
🌹புண்டரீகன் பதறினார். மண்ணில் வீழ்ந்து மன்னிப்பு கேட்டார். கிருஷ்ணர் புன்னகைத் தார். 'உன் மாதா, பிதா சேவையில் மனம் மகிழ்ந்தேன். 'வேண்டும் வரம் கேள்' என்றான்.
🌹'பாண்டுரங்கனே! நீங்கள் எழுந்தருளியுள்ள இத்தலம் புண்ணியத் தலமாக விளங்கவேண்டும். பக்தர்கள் அனைவரும் தரிசித்து அருள் பெறும்படியாக நீங்கள் இங்கே விட்டலனாக சாந்நித்தியம் கொள்ள வேண்டும்' என்று வேண்டினார், புண்டரீகர்.
🌷பெற்றோர் சேவைக்கு மனம் மகிழ்ந்து இறைவனே நேரில் காண வந்து வாசலில் நின்றான் என்பதன் சாட்சியாக நீ இங்கேயே இருக்கவேண்டும்' என்று கேட்டுவிட்டான்.
🌹தங்கள் திவ்ய மங்களரூபத்திலிருந்து இரண்டு விக்ரஹங்களை எடுத்துக் கொடுத்தனர் கண்ணனும் ருக்மிணியும்.
🌹கிருஷ்ணர் மனமுவந்து, 'இங்கே ஓடும் பீமா நதியில் நீராடி என்னை தரிசிப்பவர்கள், இடர் எல்லாம் நீங்கி, சர்வ மங்கலங்களையும் பெற்று வாழ்வார்கள்' என்று அருளினார்.
🌷ஆம், விட்டலனின் விக்ரஹம் ஒரு உளி கொண்டு சிற்பியால் செதுக்கப்பட்டதல்ல. இறைவனின் திருமேனியிலிருந்தே வெளிவந்தது.
🌹இருபத்தெட்டு சதுர்யுகங்களாக புண்டலீகனுக்குக் கொடுத்த வரத்தைக் காப்பாற்ற அங்கேயே நிற்கின்றான் பாண்டுரங்கன்.
🌹புண்டரீகபுரம் என்னும் அப்புண்ணிய இடத்தில், அற்புதமான ஆலயம் ஒன்று நதிக்கரையில் எழுப்பப்பட்டது. பின்னாளில் புண்டரீகபுரம் என்பது மருவி, பண்டரீபுரம் ஆகிவிட்டது
⭐இந்த ஆலயம் தரிசனம் செய்து விட்டு, நாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு சென்று இரவு உணவு எடுத்துக்கொண்டோம்.
இரவு தூக்கம் முடிந்து, அடுத்த நாள் அஷ்ட்ட வினாயகர் ஆலயங்கள் தரிசனம்.
தகவல்கள் .....வலைதளத்திலிருந்து ....
நன்றி🙏🏻
பதிவு.. 1. https://m.facebook.com/story.php?story_fbid=9357466317661875&id=100001957991710&mibextid=Nif5oz
18.10.22
#ஆலயதரிசனம் #மகாராஷ்ட்ரா
#பண்டரிபுரம்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
#ஜோதிர்லிங்கம்
18.10.2022
நன்றி.
https://m.facebook.com/story.php?story_fbid=9357475740994266&id=100001957991710&mibextid=Nif5oz
18.10.22
#ஆலயதரிசனம்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
#ஜோதிர்லிங்கம்
#மகாராஷ்ட்ரா
No comments:
Post a Comment